சனி, நவம்பர் 03, 2012

வேறென்ன கேட்பேன்?


  
உத்திஉத்தி கம்மங்கட்டு வூட்டப் பிரிச்சி கட்டு
காசுக்கு ரெண்டுகட்டு  கருணைக் கிழங்குடா
தோல உரியடா தொண்டையில வையடா
வையடா வையடா வையடா....

சிவபாதம் பல்லைக் கடிச்சிக்கிட்டு உத்திஉத்தின்னு இறங்கினாப் போதும்..
நாலு பேரையாவது ஏறக் கட்டிட்டுத் தான் லைனையே தாண்டுவான். சடுகுடு ஆட்டந்தான்னு இல்லை, வாலிபால்,  கோக்கோ எதுவானாலும் அதில் அவன் சூரன் தான் சந்தேகமேயில்லை.
ஆனாலும் அவன் சகவாசம் கூடாது என ரொம்பவே ஆராமுது வீட்டில் கண்டிப்பு காண்பிப்பார்கள் .அவனும் அவன் மூஞ்சியும்..

மேலக் கவரைத் தெருவில் இன்று ஆராமுதுக்கு தெரிந்தவன் அவன் ஒருவன் தான். தெரிந்த மீதி பேரெல்லாம் எங்கெங்கோ.. அந்த விவரமெல்லாம் இன்னும் ரெண்டு மணி நேரத்தில் தெரியத்தானே போகிறது? சிவபாதத்தையே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது தான்.

முப்பது வருஷம் தெரிஞ்சுக்காம இருந்தது ரெண்டு மணி நேரத்திலயா குடிமுழுகிப் போகும்.? ஏதோ கண்ணை மூடுமுன் தான் திரிந்த மண்ணை ஒரு தரம் பார்த்துடணும்னு ஒரு வெறி. அதுக்காக அதைப் பார்த்தப்பபின்னே ஆராமுது கண்ணை மூடிடுவான்னு நினைக்க வேண்டாம். ‘கிழட்டுப் பொணத்துக்கு பாம்பு காது,பானை வயிறு’ன்னு பங்கஜமே சர்டிபிகேட் இல்லே குடுத்திருக்கா? நோக்காடெல்லாம் இந்த குரங்கு மனசுக்குத்தான். உடம்பு துவஜஸ்தம்பம்தான் இன்னமும்.

ஆச்சு அணைக்கரை தாண்டியாச்சு.. பல்லாங்குழியாய் ரோடு. எல்லாபுறமுமாய் பஸ்ஸோ ஆட்டி எடுத்தது.. செய்யறதையெல்லாம் செஞ்சி போட்டு தெகிரியமாய் இந்த ஊருக்கே வரையா படவான்னு உலுக்கிஉலுக்கிப் போட்டது ஆராமுதை..

என்னைப் பார்த்தா யாருக்கும் அடையாளம் தெரியுமா? ஆராமுதுக்கு  வழியெங்கும் இந்தக் கேள்வி  மாளாத யோசனையாய் நீண்டபடி வந்தது. இருபத்தினாலு வயசிருக்குமா அப்போ? தன் வயசுக்காரர்கள் ஆறேழு பேர் இருப்பமா? மீதியெல்லாம் இப்போ அமாவாசையானா எள்ளுஜலம் வாங்கிண்டு மாட்டின போட்டோலயோ, பேரபிள்ளையளோட பேருலயோ ஒட்டிண்டிருப்பா. அவாளுக்கெல்லாம் எள்ளுஜலம் ஒரு கேடு. ஒதிய மரத்துல தலைகீழா தொங்கட்டும்!

அப்படி யாரும் தன்னை தெரிஞ்சிண்டா தான் என்ன? அவமானப் படும்படி ஏதும் சொன்னாத்தான் என்ன? ஆம்படையாளும்,பிள்ளையும்,சொச்சத்துக்கு மருமகளும் செய்யாத அவமானமா? செத்திருக்கணும் அப்பவே செத்திருக்கணும்.. உசிரில்லே வெல்லக் கட்டி?

பஸ் ஸ்டாண்டு வந்தாச்சு. புழுதி பறக்க இருந்த பழைய பொட்டவெளியா? கட்டடமும், கடைகளும்,ஏ.டி.எம்முமா எல்லாமே மாறிப் போச்சு.. இன்னமும் அந்த மூத்திர நாத்தம் மட்டும் இல்லையின்னா அந்த இடம் பஸ் ஸ்டாண்டுன்னு  தெரியாம போயிருக்கும். ஆராமுது ஆட்டோவைப் பிடித்துக் கொண்டார்.

“மேலக் கவரைத் தெருவுக்கு விடப்பா”.

ஏற இறங்க பார்த்த ஆட்டோக்காரன். ~அது என்னாதுங்க எனக்கு தெரியாத தெருவு. இந்த வெளங்காத ஊருல?

“பண்டாபீஸ் பக்கத்துல”.

“பண்டாபீஸா. அப்படின்னா?”

அங்கே போய்க் கொண்டிருந்த இன்னொரு பாம்புக் காதுக்கு இந்த சம்பாஷணம் விழுந்தது. “நம்ப மந்திரி தெருவத்தான் அப்போ மேலக் கவரைத் தெருன்னு சொல்லுவாங்க. சாரு அங்க யாரைப் பார்க்கணும்?” அருகில் வந்து நெற்றியில் உள்ளங்கையை சார்பாக்கி ஆட்டோவினுள் பார்த்தார்.

இவரண்டை சொல்லலாமா?..  ”சிவபாதம் சிவபாதம்னு’

"அவருக்கு நீங்க என்னவாகணும்?..

“கிட்டின சொந்தம்”

“நீங்க பார்த்தா பிராம்மணா போலிருக்கேளே?”

“அயல்லே கொண்டாங்கொடுத்தான்னு இருக்க முடியாதா?”

“அது சரி! நீ போப்பா” என்றவர் முனகிக்கொண்டே போனார்..’நல்ல கொண்டான் கொடுத்தான்’

தெருமுக்கிலேயே ஆராமுது இறங்கிக் கொண்டார். எல்லாமும் மாறிப் போச்சு.. எல்லாமுமே.. என் அவமானம் ஒன்றைத் தவிர.
ஓட்டு வீடுகள், தாயம்மாவின் குடிசை, தெருவின் ரெண்டு பக்கமும் இருந்த முனிகிபாலிட்டி தண்ணீர் குழாய்கள், வீடுகளை ஒட்டிக் கறுத்து தேங்கி நின்ற சாக்கடைகள் எதையும் காணோம். பிளாட்டுகள் வந்திருந்தன. சோடா பவுண்டன்.. நிலா பியூட்டி பார்லர்...

வந்தாச்சு . ரெண்டு மாடி வீடு . இதுவாய்த்தான் இருக்கணும். “சிவபாதம்!”

“யாருங்க அது.?” அவன் மனைவியாகத்தான் இருக்க வேணும்..

உள்ளே பேச்சுக் குரல்.. மீண்டும் பால்கனிக்கு அவள் வந்தாள். “மேல வாங்க. தைரியமா வாங்க.. இது கடிக்காது” என்றாள் நாயை வாஞ்சையோடு பார்த்தபடி.

கடிச்சாத்தான் கடிக்கட்டுமே என்று நினைத்துக் கொண்டார் ஆராமுது.
படுக்கையில் சாய்ந்திருந்த  சிவபாதம் கண்களை சுருக்கிக் கொண்டார்.

“தெரியுதா?”

“வா ஆராமுது..” குரல் கம்மி கண்கள் கலங்கின சிவபாதத்துக்கு.

“எப்படி இவ்வளவு தூரம்?”

“அடடா! இவ்வளவு வருஷத்துக்கப்புறமும் என்னை அடையாளம் தெரிஞ்சுதா?”

“தெரியாம பின்னே? ஆறுமாசமா ரெண்டு பேருக்காய்த்தான் காத்திருக்கேன்.. அதுல நீ ஒண்ணு.. நீ வருவே நீ வருவேன்னுதாண்டா அந்தராத்மா அலறிக்கிட்டு கிடந்தது..” இருமலும் இரைப்புமாய் திணறியது சிவபாதத்தின் குரல். “இனிமே கவலை இல்லே. இன்னொருவன் தன்னால வந்துடுவான்”

“இன்னொருத்தானா? யாரது?” இளைத்த அவர் கரம்தொட நீண்டது ஆராமுதின் வலக்கை.

“தர்மராஜன்.. யம தர்மராஜன்..”     
                                                         (தொடரும்)


பின் குறிப்பு:

என் இனிய சொந்தங்களே! 
இந்தக் கதையின் அடுத்த பதிவை நம் அன்பிற்குரிய திரு. ரிஷபன் தொடர்கிறார். இப்படியொரு சுழல் தொடர் எழுதுவோமா என்று நான் கேட்டவுடன், ஆர்வமோடு ஏற்றுக் கொண்ட ரிஷபன் சாரின் ஈடுபாடு போற்றுதலுக்குரியது.  அது மட்டுமல்ல ரிஷபனை அடுத்து தொடரப் போவது யார் தெரியுமா ? முத்தமிழ் வித்தகர் மூவார் முத்து என்று நாம் போற்றும் ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்கள். நான் புள்ளிகளை வைத்திருக்கிறேன்.மேற்கொண்டு வனைந்து கோலம் போடும் என் இரு சகோதரர்களுக்கும் நன்றி. இருவருக்கும் நான் சொன்னது ஒருவரி கதையோட்டம் மட்டுமே.  இப்போதைக்கு இது போதுமே!  இதன் அடுத்த தொடர்வு  புதன்கிழமை (07.11.2012) ரிஷபன் சாரின் கைவண்ணத்தில்.. நன்றி!.

ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

கிளிக் காதல்


இதென்னடி சிறுக்கி உனக்கு மனித வெட்கம்?
இப்படியா சிறகுள் முகம் புதைப்பாய்?

கூண்டடைந்து நெல்மணிக்காய் சோசியமா?
மீண்டுவந்தேன் கண்மணியே    நீ சுகமா?
சிறகடிக்க ஏங்கியுள்ளம் சோர வந்தேன்.
இறகுதிர யுனைத்தேடி கண்டு கொண்டேன்

அஞ்சுகமே   கீசுகீசெனும்  ஆகாத்தியம் மறந்தாயா?
அஞ்சிநிதம்  எனையெண்ணி ஆசைமுற்றி தகித்தாயா?
கொஞ்சுவதும் பேடுன்னை காலமழிய சிலிர்த்தே
மிஞ்சுவதும்   ஏதிங்கினி  நம்மிருவர் தவிர்த்தே?

கோதை கைக்கொண்ட முப்பாட்டக்கிளி
காதில்  சொன்னவுயர்  காமமெல்லாம்,
பேதை உரைத்தனளோ  அரங்கனிடம் !
காதல்  உறைந்ததென்  பெருவம்சமடி!


கிளிக்காதல் அலுக்காத களிக்காதல்
ஒளிக்காத நேசமிகும் கிளைக்காதல்.
சலிக்காத மூக்குரசல்  சுகமாதல்
ஒலிக்காத சங்குடலே  நீயாதல்.

இதென்னடி சிறுக்கி உனக்கு மனித வெட்கம்?
இப்படியா சிறகுள் முகம் புதைப்பாய்?


நிழற்பட உதவி : ஹரிஹரன் சங்கர் 

செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

விட்ட குறை தொட்ட குறை


வேகம் பிடித்து விட்ட ரயிலின் தடதடப்பு ஒரு தாளகதியோடு என்னுள்ளே முழுமையாய் இறங்கி உடம்பு மனசெல்லாம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
‘தட் தடக் தட் தடக். தடக் தடக்’

அன்று போல் தான் இன்றும் ரயிலின் கதவருகே  நின்றபடி நான்.

அன்று மார்கோ சோப் மணக்க அருகே அவளும் நின்றிருந்தாள்
இன்று நான் மட்டும் தனியாய் கதவருகில்...

அவள்...  அருகே தான்..  பெட்டியின் இரண்டாவது வரிசையில்...
ஆனாலும் வெகு தொலைவில்.

“சார்! இங்கே ஸ்மோக் பண்ணக் கூடாது”.

“சாரிங்க.” சிகரட்டை பற்ற வைக்குமுன்னரே வெளியே எறிந்தேன்.

முப்பது நிமிடங்களுக்கு முன்வரை, அவளின் நினைவுகள், பிரிவின் ரணங்கள் எல்லாமே புதையுண்டு புல்முளைத்து போய் விட்டதென்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன் ? உறங்கிக் கிடந்த எரிமலை பொங்கிக் கக்கும் என்று கண்டேனா?

இதற்காகவா இந்தியா வந்தேன்? கூல் கூல்... இதென்ன இப்படி படபடக்கிறது எனக்கு? இதென்ன பைத்தியக்காரத்தனம்..நோ.. நோ.. கூல்.. கூல்..

இது விந்தையாகக் கூட இருக்கிறது.. நேற்று இரவு தானே ராகவன் சார் கேட்டார்...

“என்ன ஸ்ரீராம்! உங்க எழுத்தின் அடியாழத்தில் ஒரு காதலின் ஏக்கம்.. ஒரு பிரிவின் ஆராட்டம் நீரோட்டமாய் சலனித்தபடியே இருக்கிறதாய் எனக்கு தோணும்.. தப்பா கேட்கிறேனா?”. 

என்ன உரிமை கேள்வியில்?! இது பிறர் விவகாரத்தில் மூக்கு நுழைக்கும் வக்கிரம் அல்ல.. ராத்திரி என்ன சாப்ட்டீங்க என்று ஒரு டாக்டர் கேட்கும் கேள்வியாய்..  ‘கோத்திரம் நட்சத்திரம் சொல்லுங்கோ’ என வினவும் அர்ச்சகரின் கடமைக் குரலாய்..

ராகவன் சாரோடு எனக்கு ஒரு வருடப் பழக்கம் தான். ஒருவருக்கொருவர் வலைப்பூக்களில் கருத்துகள் பரிமாறியும் அவரின் தமிழில் வசமிழந்தும், கேள்வி கேட்காமல் அவரை என் இலக்கிய நண்பனாய் ஒரு வழிகாட்டியாய் ஏற்றுக் கொண்டிருந்தேன். இருபது வருட லண்டன் வாழ்க்கையின் அன்னியத்தை  சமன்செய்து வரும் இணையத் தொடர்புகளில் ராகவன் சார் ஒரு முக்கிய கண்ணி.

என் தங்கை மகளின் திருமணதிற்கான கோயமுத்தூர் பயணத்தின் போது  ராகவன் சாரை சந்திக்கும் விருப்பம் தெரிவித்தேன். அவரும் மறுக்காமல் சென்னையிலிருந்து வந்திருந்தார்.. இருவரும் தனியே அளவளாவ உதகைக்கு நேற்று சென்றிருந்தோம். அவரை முழுதுமாய்  பேசவிட்டு கேட்டுக் கொண்டல்லவா இருந்தேன்? அவர் எழுத்தில் ததும்பும் மேதாவிலாசமும் , மனிதாபிமானமும் அவர் பேச்சில் கூட விகசித்து என்னை திக்குமுக்காட வைத்தபடி இருந்தது. என்னவோர் அனுபவம்?. அதிக நேரம் அவருடன் இருக்க வேண்டியே சென்னை திரும்ப ரயில் பயணம் தேர்வு செய்தேன். விடுமுறை சீசன். ஒருவாறாய் வெவ்வேறு பெட்டிகளில் இடம் கிடைத்த ஏமாற்றதுடன் இந்தப் பயணம். .. இந்த ஏமாற்றத்தை விழுங்கி விட ஒரு அதிர்ச்சி என் எதிர் சீட்டில் காத்திருந்தது. இருபது வருடங்களுக்கு முன் என் கவிதைகளுக்கு ஊற்றுக் கண்ணாக இருந்தவள் ...  சாவதை யோசிக்க வைத்து என்னை உதறிவிட்டு சென்ற அபி அமர்ந்திருந்தாள்.

இந்த நேரத்து அதிர்ச்சிக்கு முன்னோடியாகத்தான் நேற்று இரண்டுமூன்று தரம் இவள் நினைப்பு எழுந்ததா?

நேற்று ரோஜா தோட்டத்தை பார்த்துவிட்டு ராகவன் சாருடன் நடந்து கொண்டிருந்தேன். ஒரு நெடிய மரத்தினருகே அதைத் தொட்டபடி ராகவன் சார் நின்றார்.

“ஸ்ரீராம்! இந்த இடத்துல எத்தனை சினிமாக்காதல் அரங்கேறியிருக்கும்?” சாருக்கு பழைய பாடல்களில் நுண்ணிய ரசனை.

“சார்! நான் வேணும்னா உங்களை கதாநாயகனாய் வைத்து ஒரு சினிமா எடுக்கவா?” சிரித்தபடி கேட்டேன்.

“ஏன்? நான் நடிக்க மாட்டேனா? முப்பது வருஷமா நல்ல கணவனாய் நடிச்சுக்கிட்டிருக்கேன் தெரியுமா?”

“சரி! சொல்லுங்க யாரை கதாநாயகியாய்ப் போடட்டும்?"

"அப்ப முதல்லேருந்து வருவோம். வைஜயந்திமாலாவை முதல் படத்துல போடேன்?”

“அப்போ ரெண்டாவது மூணாவது படம்கூட இருக்கா? கதாநாயகிகள் லிஸ்ட் நீளமா இருக்கும் போலிருக்கே?”

ராகவன் புன்னகையுடன்  மறுப்பாய் தலையாட்டினார். “நடிகை லிஸ்ட் இல்ல ஸ்ரீராம்... என் மனசில்.பாட்டு லிஸ்ட் தான் இருக்கு”

“வைஜயந்தி மாலா பட பாட்டு ஒண்ணு பாடுங்களேன்...”

“ஒய் நாட்.”. ராகவன் பாட ஆரம்பித்தார்.

“தில் தடப் தடப் கெ கெஹரஹா ஹை ஹஹா பி ஜா...”

பன்னீர் பூக்கள் என் மேல் சொரிந்தது போலிருந்தது அவர் பாடிய பாடலும், பாடிய விதமும்...  ஒரு கண்ணிறுக்கம், ஒரு வாய்க் கோணல் உண்டா.?. என்ன இந்த மனிதன்  என்னுள்ளே விஸ்வரூபமாய் எடுத்துக் கொண்டே போகிறார்?

அந்தப்பாட்டு எங்கேயோ என்னுள்ளிருந்து குடைந்ததே..

ஆம். நினைவுக்கு வந்தது. கல்லூரிக்கு செல்லும் வழக்கமான ரயில் பயணத்தில் இந்தப் பாட்டை ரயிலின் தடதடப்பை பின்னிசையாய்க் கொண்டு அபி பாடினாள் ஒரு முறை. அவளுக்கு இது பிடித்த பாட்டு.

“என்ன ஸ்ரீராம்? ஏதும் பிளேஷ்பாக்கா?”

 “இல்ல சார்.. பாட்டுல சொக்கிட்டேன். பியூட்டிபுல் சார்.,
முகமத் ரபியும் லதாவும் தானே பாடினது?”. பேச்சை மாற்றினேன்.

“இல்லை.. முகேஷும் லதாவும். மதுமதின்னு அழகான படம் திலீப் குமாரும் வைஜயந்தியும்.. இளமையும் இயற்கையும் கொஞ்சும் பாட்டு”


எவ்வளவு நேரம் தான் ரயில் கதவருகே நிற்பது? இருக்கைக்கு திரும்பினேன் .

அபியின் பக்கத்திலிருந்த பெண் பன்னிரண்டு வயதிருக்கலாம். அவளுடைய மகளாயிருக்க வேண்டும்.. அபியின் தோளில் சாய்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள்.

“நீங்க அப்படியே இறங்கிப் போய்ட்டீங்களோன்னு பார்த்தேன்.” இது அபியின் குரலா?

நான் ஏதும் பதில் சொல்லவில்லை.

“எப்படி இருக்கீங்க. எங்க இருக்கீங்க?”

“பைன்.. லண்டன்ல இருக்கேன்.”

“உங்க வைஃப் வரல்லையா?”

“அவங்க இப்போ இல்ல..”

“ஐ ஆம் சாரி. அவங்களுக்கு என்னாச்சு?”

“ஒண்ணும் ஆகல்லே. இட் வாஸ் அ டிவோர்ஸ்.”

அபி ஒன்றும் சொல்லவில்லை. மேலும் என்ன பேசுவது என்று இருவருக்கும் புரியாது அங்கு மௌனம் கவிந்ததுபோல் இருந்தது. என் குறைந்த ஆங்கில அறிவு, உத்தியோக வாய்ப்புகள் குறித்த ஐயம், வசதியான அவள் பெற்றோரின் மறுப்பு, ஏதோவொன்று அபியை  என்னை ஒதுக்கும்படி செய்திருக்கவேண்டும். இவற்றை ஏதேதோ விதங்களில் அவள் வெளிப்படுத்திக் கொண்டிருந்த சமயங்களில் என் காதல் மும்முரம் கண்களை மறைத்து விட்டிருந்ததை பின்னாட்களில் உணர்ந்து கொண்டேன்.

இவன் எப்படி லண்டன்,.. வியாபாரம் என்று போயிருக்க முடியும் என்று அவளுக்குள் ஏதோ ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.
சட்டென்று பாதாதிகேசம் கசப்பு தட்டியது. நெஞ்சில் அசூயை மண்டியது. நான்கு வருடக் காதலை மறுதலித்து, ‘என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று என் வீட்டு படியேறி விடைத்துக் கொண்டு சொல்லி அகன்றவள்.

ஆனாலும், என் இன்றைய முன்னேற்றத்திற்கு இவளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். உடைந்து நொறுங்கி விட்ட எனக்கு இந்த உதாசீனம் புரிபட்ட போது உண்டான வெறியில் என்னைப் பட்டைத் தீட்டிக் கொண்டேன். அபி குடியிருந்த என் மனதை பார்க்க மறுத்தேன். முகம் பார்க்கும் கண்ணாடியைக்  கூட பார்க்காத தவம்... என்னிலிருந்து நானே பெற்றுக் கொண்ட விடுதலை... திரும்பிப் பார்க்காத ஓட்டம். என்னை நானே ஜெயித்து விட்டது போலத் தான் தோன்றுகிறது. என்ன.....வாழ்க்கை ஒன்று தான் இந்த ஓட்டத்தில் எங்கோ வழியில் நழுவி விட்டது.

எதிரில் அபி கண்ணை மூடிய நிலையில் இருந்தாள். ஏதும் யோசிக்கிறாளா? பழைய நினைவுகள் அவள் உள்ளுக்குள்ளே அலைக்கழிக்கின்றதா?

சட்டென்று அவள் தலை முன்னோக்கித் துவண்ட அதிர்ச்சியில் கண் விழித்தாள். சை! நல்ல தூக்கம் தான் அவளுக்கு. கொஞ்சம் சிரிப்பு கூட வந்தது எனக்கு.

காலையில் ராகவன் சாருக்கு என் தொலைந்து போன காதலை சொல்ல வேண்டும். இன்றைய அசந்தர்ப்பமான சந்திப்பைப் பற்றி சொல்ல வேண்டும்.

காதலையும் அன்பையும் உருகிஉருகி எழுதும் அவரிடம் இதைப் பற்றியும் எழுதச் சொல்ல வேண்டும். ஏதும் மிஞ்சாத இந்த காதல் விபத்தில், ஒரு கதையேனும் மிஞ்சுகிறதா என அவரைப் பார்க்கச் சொல்ல வேண்டும். உணர்வுகளின் நுணுக்கங்களை துல்லியமாய்ச் சொல்லும் ராகவன் சார், இந்தக் காதல் சிலுவையை என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும்.

மனதினுள் ஒரு சன்னல் திறந்து, தூசுகளின் நடனத்துடன் உள்ளே வெளிச்சம் பரவியது..

தூக்கம் எனக்கும் வரும் போலத்தான் இருக்கிறது.

திங்கள், ஜூன் 11, 2012

காதல் பலூன்






என் காதல் பலூன்களை
கொத்தாய்ப் பறித்துப் போகிறான்
வாழ்க்கை வியாபாரி.

குழந்தையாய்க் கேவி அழத் தோன்றுகிறது.

காற்றுவெளியெங்கும் நிரம்பிய
என் அன்பின் சிறுகூறேயன்றோ
பறிகொடுத்த பலூன்தொறும்
காதலாய்
நிரப்பப் பட்டிருந்தது?

பலூன்களும் ஒவ்வொன்றாய் உடையும்

தடையற்ற வெளியில் கலக்கும்
அடைபட்ட காற்றின் சொச்சம்.

இடைப்பெற்ற அனுபவமோ
உடைந்ததன் கிழிசல் மிச்சம்.

புகைப்படம்: திரு ஹரிஹரன் சங்கர்

சனி, ஜூன் 09, 2012

துங்கா


“யாரப்பா நீங்களெல்லோரும்?” கணக்கப்பிள்ளையின் வினவலுக்கு பதில் கூற முன்னகர்ந்தான் இருளன்.

வந்தவர்கள் பத்து பேர். இருளனுக்குப் பின்னால் சுடர்விளக்காய் நின்றிருந்தாள் துங்கா. யொவனம் பூரிக்கும் பதினாறு வயது பைங்கிளி. அவள் இருளன் மகள்.

“கணக்கையா! நாங்க கழைக் கூத்தாடிங்க சாமி! உங்க புழல் கோட்டம் பார்த்திராத வித்தையெல்லாம் செய்து காட்ட வந்திருக்கோமுங்க. வள்ளலைய்யாவை ஒரு முறை பார்த்து விட்டால் எங்களுக்கு விமோசனம் கிட்டும் சாமி!”


“ஐயாவை இந்நேரம்.....” என்று மறுப்பை கணக்கர் விடுக்குமுன், தந்த வேலைப்பாடு செய்யப்பெற்ற பெரும் கதவு திறந்தது.
வெளியே வந்தவரோ வள்ளலே தான். ‘அயன்றை சடையநாதர்’ எனும் அவர்பெயரை யாரும் வாய்விட்டு உரைத்ததில்லை. கர்ண மகா பிரபு கலியுகத்தில் அவதரித்தது போல் அள்ளி வழங்கும் கொடைவள்ளல். புலவரும் கலைஞரும் தொண்டை நாட்டுக்கு தொடர்ந்து வந்து வள்ளலின் ஆதரவு பெற்றார்கள்.

“யாரப்பா இவர்கள்?”  

நிலம்பட வணங்கி எழுந்தனர் அனைவரும். இருளனே தொடர்ந்தான். 

“ஐயா! நாங்கள் கழைக்கூத்தாடிகள்.. இந்தக் கலையின் அருகி வரும் சில கரணங்களை என் மகள் துங்கா மிக அநாசயமாய் செய்வாள் பிரபு! உங்கள் சன்னிதானத்தில் ஒரு முறை எங்கள் திறம் காட்ட கருணை செய்யுங்கள் பிரபு !”

அப்போதே துங்காவைக் கண்ணுற்றார்.'இந்த சிறுபெண்ணா?'

“உம்ம்... அப்படி என்ன வித்தைதான் தெரியும் இவளுக்கு?”

“கழைக்கூத்தில் மிகக் கடினமான ‘விச்சுளிப் பாய்ச்சல்’ எனும் வித்தையை இவளுக்கு கற்பித்திருக்கிறேன். சிறு பிராயத்திலேயே சூட்டிகையாய்க் கற்றுக் கொண்டாள் ஐயா!” ஒரு கலைஞனின் கம்பீரமும்,ஒரு தகப்பனின் பெருமிதமும் இருளனின் குரலில் ஒலித்தது.

“விச்சுளிப் பாய்ச்சலா? அது என்னய்யா பெரிய வித்தை?” வள்ளலின் குரலில் ஆர்வம் மேலிட்டது.

“பிரபு! விச்சுளிப் பாய்ச்சல் மிகவும் நுண்ணிய,ஆபத்து நிறைந்த வித்தை. ஒரு நெடிய மூங்கிலின் உச்சிக்கு இவள் ஏறி அந்தரத்தில் நிற்பாள். அங்கிருந்தபடி தன் காதணியைக் கழட்டி நிலத்தில் எறிவாள்.”

“அப்புறம்?”

“எறியப்பட்டக் காதணி நிலத்தில் விழுமுன்னர் மின்னலாய்க் கீழே பாய்ந்து, அதைக் கைக்கொண்டு ஒரு நொடிக்குள் மீண்டும் மூங்கிலின் உச்சிக்கு பழையபடி சென்று விடுவாள்.

“அதெப்படி சாத்தியம்?“

“உச்சியில் ஏறியபின் ஒரு யோகப் பிரயோகத்தினால் மூச்சை அடக்கி தன் உடலை ஒரு இறகைப் போல் லேசாக்கிக் கொள்வாள்.”

“ஆச்சரியம்...கொஞ்சம் ஆபத்தான வித்தை தான்!”

“ஆபத்து கொஞ்சமல்ல ஐயா! உயிரையே பறித்து விடக் கூடியது.
ஒரு முறை செய்வதற்கு ஆறு மாத காலம் மூச்சடக்கும் யோகப் பயிற்சியை கடுமையாய்ச் செய்ய வேண்டும். ஒரு முறை இப்பாய்ச்சலை செய்து விட்டால், மீண்டும் இந்த வித்தையை ஆறுமாதத்திற்குப் பிறகு தான் செய்ய வேண்டும். அதுவன்றி உடனேயே செய்யத் துணிந்தால் மரணம் அந்தக் கணமே...”

“போதும்.. இந்த விச்சுளிப் பாய்ச்சலுக்காக மட்டுமே இவளைத் தயார் செய்து அவளை வேறொன்றுக்கும் லாயக்கில்லாமல் அடித்து விட்டாயோ?”

“இல்லைப் பிரபு.. அவள் வயதுப் பெண்கள் கற்க முடிந்தவை அத்தனையும் கூடவே கற்று வந்திருக்கிறாள். அது மட்டுமல்ல பிரபு! பாக்கள் புனைவதிலும் முறையாக தமிழாசான்களிடம் பாடம் கேட்டிருக்கிறாள்”.

“பாப்புனையவும் வருமோ.? அதைச்சொல்லு.. அதைச்சொல்லு...
நீங்களனைவரும் இன்று முதல் எம் விருந்தினர்.. விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள். நாளை முதல் காலை வேளையில் கொஞ்ச நேரம் தூங்காவின் தமிழைக் கேட்போம்..”

“பிரபு! விச்சுளிப் பாய்ச்சல் எப்போது வைத்துக் கொள்ளலாம்?”

“சொல்கிறேன்... கொஞ்சம் போகட்டும்.”

அடுத்த ஒரு வாரகாலம் துங்காவின் செய்யுளியற்றும் வேகத்திலும், செறிவான கருத்துக்களிலும் வள்ளல் தன்னை மறந்தார். துங்காவின் மேல் அவருக்கு அபிமானமும், வாஞ்சையும் தோன்றி மகளாகவே நடத்தலுற்றார். அடுத்த வெள்ளிக் கிழமை துங்கா விச்சுளிப் பாய்ச்சல் வித்தை நிகழ்த்த முடிவாயிற்று. பறையறிவித்து ஊரெல்லாம் கூடியது.

இருளன் கணீர்க் குரலில் பாய்ச்சல் நிகழும் விதம் குறித்து அறிவித்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே பாய்ந்து ,ஒரு நொடியில் காதணியைக் கைக்கொண்டு மீண்டும் மூங்கிலின் உச்சிக்கு துங்கா சென்று விடுவாள் ஆதலின் தக்கையில் வைத்த கண் போல் பாய்ச்சலைக் காணுமாறு வேண்டினான்.

கரகரவென துங்கா மூங்கிலின் உச்சிக்கு சென்று விட்டாள்.
வள்ளல் மூச்சைப் பிடித்துக் கொண்டார். இந்திர ஜாலம்...
காதணியை எறிந்ததென்ன? பாய்ந்த வேகமென்ன? அது தரையைத் தொடுமுன்னர் கைக்கொண்டதென்ன? மீண்டும் மூங்கில்முனை சேர்ந்ததென்ன??

ஜனங்கள் கையொலி எழுப்ப மறந்து வாய்ப் பிளந்து நின்றார்கள்.

சடையநாத வள்ளல் மனம் மகிழ்ந்து பலப்பல பரிசுகள் நல்கிக் கொண்டாடினார். இருளன் கூட்டம் விடைப் பெற்றபோது வள்ளல் நெகிழ்ந்து போனார். “துங்கா! கவனமாய் இரு தாயே! கவிபுனையும் ஆற்றலை பெருக்கிக் கொள். கூடிய விரைவில் இங்கு மீண்டும் வா! வரும் போது கவிதையோலைகள் ஒரு வண்டி கூட வர வேண்டும் புரிந்ததா?”

துங்கா கண்ணீரோடு விடை பெற்றாள். வள்ளலின் அன்பும் தமிழ் போற்றும் அருங்குணமும் அவளுடைய உள்ளமெல்லாம் நிறைந்து நின்றது.

அடுத்து இருளன் கூட்டம் பாண்டிய நாடு சென்றது. மதுரையில் வழுதிப் பாண்டியனிடம் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்த்தி பரிசில் பெறல் இருளனின் நீண்ட நாள் கனவன்றோ.?

மதுரை வந்த பின் மன்னன் முன்னர் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்ச்சியும் முடிவானது.

எள்போட்டால் எள்விழாத கூட்டம். மன்னன் பரிவாரங்களுடனும், குறிப்பாக, தன் புதிய ஆசைக்கிழத்தியுடனும் வந்தமர்ந்தான்.

வழுதிக்கு கட்டியம் கூறி முடித்தவுடன் இருளன் விச்சுளிப் பாய்ச்சல் நிகழும் விதம் பற்றி சொல்லி, கண்ணிமைக்காமல் காண வேண்டினான்.

மூங்கிலேறிய துங்கா பாய்ச்சலை வெற்றிகரமாய் முடித்தும் விட்டாள். அவள் பாயத்தொடங்குமுன் தானா வழுதியின்
ஆசைநாயகி அவனை அவள்பால் திருப்ப வேண்டும்?! 
பாய்ச்சலில் ஆனந்தித்து மக்கள் எழுப்பிய ஆரவாரம் வழுதியை திடுக்குறச் செய்தது.
‘என்ன?நான் பார்க்கு முன்னரே பாய்ச்சல் நிகழ்ந்து விட்டதா?’

மீண்டும் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்த்த துங்காவுக்கு ஆணையிட்டான்.

மறுபடியும் ஆறுமாதம் கழித்தே நிகழ்த்தமுடியும் இல்லையெனில் தான் மாள்வது உறுதியென்ற துங்காவின் இரைஞ்சல்களுக்கு அந்தக் கல்நெஞ்சன் செவி சாய்க்கவில்லை.

“இது என் ஆணை! செய்.” என்று உருமினான் வழுதி.

வேறு வழியில்லை. செய் அல்லது செத்து மடி என்பது மன்னன் உறுதி. செய்தாலோ செத்து மடிவதும் உறுதியன்றோ.

துங்கா சுற்றுமுற்றும் பார்த்தாள்.இருளனும் கூட்டமும் அரற்றிக் கொண்டிருந்தார்கள். ஜனங்களோ திகிலோடு நின்றார்கள். வான் நோக்கி பிரார்த்தித்தாள். மரணத்தின் மடியில் சாய்ந்து விட்ட அந்தத் தருணத்தில் கூட,தன் மீது அன்பு பொழிந்த சடைய நாத வள்ளலை நினைவு கூர்ந்தாள். அவள் பாப்புனையும் திறன் மீது அவர் கொண்ட மதிப்பை எண்ணினாள். வானத்தில் அப்போது ஒரு நாரைக் கூட்டம் பறந்து கொண்டு இருந்தது. புள் வீடு தூதாய் அக்கணமே செய்யுள் புனைந்து உரத்துக் கூவினாள்.

மாகுன் றனையபொற் தோளான் வழுதிமன்
                   வான்க ரும்பின்
      பாகொன்று சொல்லியைப் பார்த்தெனைப் பார்த்திலன்
                          பையப்பையப்
போகின்ற புள்ளினங் காள் புழற் கோட்டம்
                      புகுவ துண்டேல்
சாகின்றனள் என்று சொல்லீர் அயன்றைச்
                        சடையனுக்கே

விண்தொடு கழைமீ மிசையோர் விச்சுளிப்பாயும் வித்தை
கண்கொடு காணான் வேற்றுக் கணிகைபால் கருத்தைப் போக்கி  
எண்கெட இருகால் ஈண்டே இயற்றுமோர் ஏவல் ஏற்றே
பெண்விடும் ஆவி அன்னோன்  பெருங்கழல் வாழ்த்திற் றென்னீர்


கூட்டம் திகைத்தது.

மூங்கிலேறினாள். மூச்சை அடக்கினாள். காதணியை எறிந்தாள். சரிந்தாள். சடலமாய் வீழ்ந்தாள். திரும்பிப் போன வழுதியின் செவிகளில் மக்கள் இட்ட சாபம் விழுந்திருக்காது தான்.

விச்சுளிப் பாய்ச்சல் பெண் குறித்து ஒரு கழைக்கூத்தைத் தாண்டி செல்லும் போது என் தமிழையா சொன்னதுவும், அப்பாடல்கள் தேடிப் படித்த தருணம் கண் கசிந்ததுவும் நெஞ்சில் நீங்கா நினைவுகள்.

சாகும் அந்தக் கணத்திலும் ஒரு வள்ளல் பெருமை சொல்கிறாள் எனில் அவன் எத்துணை உயர்ந்தோனாய் இருக்கவேண்டுமெனக் கருதி, பாண்டியன் தன் புலவர்களை வள்ளல் சடையனை சந்தித்து வரப் பணிக்கிறான். அவர்கள் மீண்டு, சடையன் பெருமை சொல்லும் தனிப் பாடலும் மூன்றுண்டு. பிறிதொரு சமயம் அவற்றைப் பார்ப்போம்.



ஞாயிறு, ஜூன் 03, 2012

பிள்ளைக் கனியமுதே!


‘மா..ர்ட்டீனா... நவரத்தி...லோவா’

கருப்புவெள்ளை டயனோரா டீ.வி யில் பிரென்ச் உச்சரிப்புக் காமெண்டரியுடன் க்ரீஸ் எவர்ட்டும் மார்டீனாவும் ‘ஆத்தாடி பாவாட காத்தாட’ என்று டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஞாயிற்றுக் கிழமை காலை சுகமாகத்தான் துவங்கியது. ஹாலில் தரையில் அமர்ந்து கண்கள் டீ.வியிலும், கையில் பீலரும் இருக்க, உருளைக்கிழங்கின் தோலைநீக்கிக் கொண்டிருந்தேன். கர்ப்பிணியான மனைவிக்கு ஒத்தாசை செய்கிறேனாக்கும்.!

ஹாலுக்கும் இடைக்கழிக்கும் மத்தியிலான தளத்தின் படிக்கட்டு தான் என் மூத்த வாரிசின் சிம்மாசனம். மூணு வயசு இன்ஜினீயர். கையிலிருந்த கார் பொம்மையை எப்படி உடைக்கலாம் என்ற யோசனையுடன் கால்களை ‘M’ எழுத்தைப் போல் பரப்பிக் கொண்டு அதை உருட்டியவாறு இருந்தான்.



“என்ன.. ஆச்சா” என்று ஹாலுக்கு கையில் காப்பியுடனும், வயிற்றில் இரண்டாம் வாரிசை சுமந்தபடியும் வந்தாள் என் தர்ம பத்தினி.. ‘இந்த முறை கண்டிப்பா உனக்கு பொண்ணு தான்டீ.. வயறு நல்லா சரிஞ்சிருக்கு பாரு’ என்று கீழ்வீட்டு ஜம்பகா மாமி நேற்று அவளுக்கு சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. மகளுக்கு நல்ல பேரா வைக்கணும்.... ‘கண்ணம்மா, நிவேதிதா,மதுமதி,ஓவியா,கவிதா, தாக்ஷாயினி,திரிபுரா....

“காலங்காத்தால டென்னிஸ்... விவேக்குக்கு பல்லு தேய்க்க சொல்லிக் குடுங்கன்னு தினம் உங்களுக்கு சொல்றேன். அதைக் கேக்காதீங்க. இந்த டீ.வியை முதல்ல நிறுத்துங்களேன்”.

அவன் பெயர் பிரஸ்தாபிக்கப் படுவதைக் கேட்டு நிமிர்ந்த விவேக் அவளைப் பார்த்து கண்ணடித்தான்.

“முழியத் தோண்டிடுவேன் கம்மனாட்டி. கண்ணா அடிக்கிறே?”

மீண்டும் கண் சிமிட்டும் குறும்பனைப் பார்த்து சிரித்தாள். “உங்கப்பா கிட்ட இதெல்லாம் தான் கத்துக்கலாம். நல்லா கண்ணடி..”  “ஏங்க இந்த சனியனை நிப்பாட்டுங்களேன்.”

“இருடி! உலகமே இதைப் பார்த்துகிட்டிருக்கு. அயனான மேட்சு.. படுத்தாத”

“போறும் உங்க ரசனை. நீங்க ஆம்பளைங்க விளையாடுற டென்னிஸ் பாக்கறதை நான் கண்டதே இல்லையே!”

கிராதகி!

“மோகன் சார்!” கீழ் வீட்டு ஜக்கு சார் குரல். “விவேக்கு! அப்பா என்னடா பண்றா.”.

உள்ளே கைகாட்டி ‘ஆலூக்கு சேவீங் பண்றா’ என்றான் சின்னக் கள்ளன்.
“ஆலூக்கு ஷேவிங்கா?!” வியப்புடன் கேட்டபடி உள்ளே வந்தார்.

“வாங்க சார்!”

‘அடடே! இதத்தான் சொன்னியா’ என்று என் கையில் தோலுரிந்து
வெளுத்திருந்த உருளைக் கிழங்கைப் பார்த்து பெரிதாக சிரித்தார்.

“தூக்கினியூண்டு இருந்துகிட்டு என்னமா யோசிக்கிறான் பாருங்க படவா! சரியானப் பயடா நீ!”

என் மனைவி பூரிப்புடன் கேட்டாள்” கொஞ்சம் காபி தரவா மாமா?”

“மகராசியா குடும்மா.”

“சார் ! உங்கப் பயலுக்கு நேத்து நான் முத்தம் கொடுத்தேன். சட்டையால கன்னத்த தொடச்சிக்கிட்டான். ஆனா பாருங்கோ.. மாமியைத் தேடிப் போயி முத்தம் கொடுக்கிறான். பொல்லாதப் பய!”.

அடியே நான் என்ன பண்ணுவேன். என்னைப் பார்த்து முழிய உருட்டுறே?

“சொல்லுங்க சார். என்ன சமாச்சாரம்?”

“ஏன் ஓய்? சங்கரா ஹால்ல வருஷப் பிறப்பு கவியரங்கத்துலே போன வாரம் கவிதை சொல்லி பின்னியெடுத்துட்டீங்களாம்? நேத்து லேக் மார்க்கெட்ல மூ.நா. சொல்லி சொல்லி மாய்ஞ்சி போயிட்டார். எனக்கு ஒரு வார்த்த சொல்லக் கூடாதோ? நான் ரசனைகெட்ட அசடுன்னு இருந்துட்டீங்களா? சண்டை போடலாம்னு தான் வந்தேன். உங்கபிள்ளை போட்ட போடுலயும், ஜெயந்தி கொடுத்த காபிக்காகவும் தான் உம்மை விடுறேன். பொழைச்சு போம்”.

“சாரி சார்! இது ஒரு பெரிய விஷயமான்னு உங்க கிட்டே சொல்லத் தோணலே. உங்களுக்கு இதெல்லாம் பிடிக்கும்னு தெரிஞ்சிருந்தா கூப்பிடாம இருந்திருப்பேனா?”

“போகட்டும் இந்த சின்ன வயசுல சபைலே கௌரவம் கிடைக்கிறதுன்னா லேசு பட்டதா? மூ.நா உங்களைப் பத்தி சொன்னப்போ எனக்கே அந்த கௌரவம் கிடைச்சா மாதிரி இருந்தது. எங்க தான் உங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்கோ. பெரிய விஷயம்.. பெரிய விஷயம்..."

“தேடி வந்து பாராட்ட உங்களுக்கு தான் சார் பெரிய மனசு.”.

இந்திரா காந்தி, எம் ஜீ ஆர், துர்கா பூஜை, மாமியின் முட்டிவலி என்று அலசிவிட்டு கிளம்பினார். “அடேய் குட்டிப் பயலே! என்னோட வர்றியா? “

விவேக் அவரைப் பார்த்து கண் சிமிட்டினான்...’பாலுக்கு கோபம் வந்துச்சு’ என்றான்.

“என்னடா சொல்றே?”

எனக்கும் புரியவில்லை.

அவனுடைய ஆஸ்தான மொழிபெயர்ப்பாளினியான என் மனைவி சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“அதுவா! காலைலே இவனை இடுப்புல வச்சுக்கிட்டு பால் காய்ச்சிக் கொண்டிருந்தேன்.பால் பொங்கி வர்றதைப் பார்த்து பாலுக்கு கோவம் வந்துடிச்சிங்கறான். அதைத்தான் உங்களுக்கு சேதியா சொல்லியாறது”

“பலே பலே! கவிஞன் பிள்ளையில்லையா? என்னமா யோசிக்கிறான்? வரேன் சார்!”  

பெருமையாய்த் தான் இருந்தது.

......................

இப்போது யோசித்துப் பார்க்கிறேன்...

என் பிள்ளை கவிதை எழுதுவதில்லை... கண்ணடிப்பதில்லை...

அதுக்கெல்லாம் தான் நானிருக்கின்றேனே!

வியாழன், மே 31, 2012

நிழல் யுத்தம்





“நீ வேலைக்கு வீ.ஆர்.எஸ் குடுத்துட்டு கும்பகோணத்துல எப்படித்தான் மூணு மாசமா இருக்கியோ?நீ வேகவேகமா வயசாளியாக ஆசை படறாப்பல தோணுதுப்பா”.

என்னுடைய பேச்சு என் அம்மாவின் மொழி.. தீர்மானமான முடிபுகள் தொக்கி நிற்கும் வார்த்தைகள் என் அம்மா எனக்களித்த சீதனம்.

ஊரிலிருந்து மும்பைக்கு வந்திருக்கும் அப்பாவுடன் காலை வாக்கிங் இந்த மூன்று நாட்களாய் மனசுக்கு குதுகுலம்.

“அப்படி இல்லே அஜிதா. மனசுக்கு ஏத்த வேலையா செய்யாம வயத்துப் பாட்டுக்கென ஒரு உத்தியோகத்தை முப்பது வருஷம் செஞ்சுட்டேன். வேலைத் தேடின நாட்கள்ள என்ன மாதிரி பி.காம் படிச்சவனுக்கு பெரிசா சாய்ஸும் இல்லப்பா. அடிமை சாசனமா என்னையே எழுதிக் குடுத்துட்டு வேலை, பிரமோஷன்னு குதிரை ஓட்டம் ஓடினேன். ஜுரம் வந்து ரெண்டு நாள் படுத்திருந்த போது சட்டுன்னு தோணுச்சு. நாம என்ன பண்ணிட்டிருக்கோம்னு. எனக்குன்னு நான் எப்பவுமே இல்லாம ... இன்னமும் நாம வாழவே ஆரம்பிக்கல்லியேன்னு ஒரு திகில் வந்தது. இனியும் பணம்கிறது ஒரு பொருட்டா வேணாம்னு தோணிடிச்சு. நீயும் பெரியவனும் தான் தலையெடுத்தாச்சே? லீவுமுடிஞ்சு ஆபீஸ் சேர்ந்த ஐஞ்சாவது நிமிஷம் விருப்ப ஓய்வுன்னு கடுதாசி கொடுத்துட்டேன்.”

“வேலையை விடுறதைப் பற்றி அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்பா நீ!”

“அப்படி சொல்லியிருந்தா வேலையை விட சம்மதிச்சிருக்க மாட்டா. அவளை கேட்டுட்டா இந்த உத்யோகத்துல சேர்ந்தேன்? அவங்கப்பா என் உத்தியோகத்துக்குத் தானே அவளை எனக்கு கட்டி வச்சார்?”

“என்னத்தையாவது சொல்லாதப்பா! நீ வேலை மாற்றல்ன்னு ஊர் ஊரா மூணு வருசத்துக்கு ஒருக்கா கிளம்புறப்போல்லாம் அம்மா தானே மூட்டமுடிச்சை கட்டியிழுத்துகிட்டு உன்னோட வந்தா. ஒரு லைப் பார்ட்னரை மதிக்க தோணுச்சா உனக்கு?”

“அம்மாடியோவ்... இதுல இவ்வளவு உள்வயணம் இருக்கா? சரிதான்.”

“இதுதான் எனக்கு பதிலாப்பா?”

“அஜீ! இருடா.. அவளை மாதிரியே குதிக்காதே. இப்ப நீ சொன்னியே லைப் பார்ட்னரை மதிக்கணும்.. அது இதுன்னு.. என் தலைமுறை ஒரு ரெண்டாம் கெட்டான். எங்கம்மா என்னைக்கும் அப்பா மனசுக்கு மாறா ஒரு முடிவும் எடுத்ததில்லே. ஏன்? அவள் எந்த முடிவுமே எடுத்ததில்லே. ஆனாலும் சந்தோஷமா தான் இருந்தா. முடிவெடுக்காம இருக்கிறதே அவளோட சுதந்திரம் போல தோணும். என் கூட்டு புருஷன் பொண்டாட்டி கதையே வேற. தானும் முடிவு எடுக்க மாட்டோம்.. தன் துணையையும் முடிவெடுக்க விட மாட்டோம்.”

“இர்ரெஸ்ப்பான்சிபல் எவேசிவ் ஆன்சர்”

“நிஜம் அதுதான். நேத்து நீ சொன்னியே, அவங்கவங்க தன் வாழ்க்கையை யோசிச்சு ஒரு அண்டர்ஸ்டாண்டிங்ல சேர்ந்து போறது தான் இன்னைய பேமிலின்னு? இந்த வழி கூட பரவாயில்லை. எப்படி இருக்கிறதுன்னு தெரியாம ஒருத்தருக்கு இன்னொருத்தர் கழுத்தில் கட்டிவிட்ட பாறாங்கல்லாய் தான் நிறைய பேர் வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு”.

நான் மேற்கொண்டு பேசவில்லை. என்னாச்சு அப்பாவுக்கு? கடுமையான வேலைக்குப் பிறகு எவ்வளவு நேரம்கழித்து வீட்டுக்கு வந்தாலும் சற்றும் கடுகடுப்போ அலுப்போ இன்றி எங்களுடன் சிரிக்க சிரிக்க பேசின அப்பாவா? என் நண்பர்களுக்கெல்லாம் தானும் ஒரு நண்பனாய் அவர்கள் பொறாமைப்படும் விதத்தில் தலைமுறை தாண்டி நின்ற அப்பாவா? என்னாச்சு இவருக்கு?

“அப்பா! ஆர் யு ஆல்ரைட்?”

பதிலாய் அப்பாவின் வசீகரமான ஒரு தோள் குலுக்கல்..
.
“அஜிதா!”. அப்பாவின் குரல் இளகி மென்மையாய் ஒலித்தது. அதுவே என்னை மெல்ல தழுவிக் கொண்டது போல் இருந்தது .

“அம்மாவோட ஏதும் சண்டையாப்பா?”

அடிபட்டது போலஅப்பாவின் பார்வை. இப்போ பெரியவனாகி விட்டதாலேயே இப்படி கேக்க தோணுச்சா என்பதாய் ஒரு கேள்வி அந்த பார்வையில் இருந்தது.

“ஏன்? அப்படி ஏதும் உன்கிட்ட அம்மா சொன்னாளா?”

“இல்லப்பா. நானாத்தான் கேட்டேன்”.

“எப்பவுமே நம்ம வீட்டில் நடக்கிறது தான். சண்டைன்னு ஒண்ணும் இல்லடா. சொல்லாம நான் வேலையை விட்டது அவளுக்கு ரொம்ப வருத்தம். அதனால நிறைய வாக்குவாதம். கோவம். ஒரு கூரைக்கு கீழயே திசைக்கொருத்தாரா பார்த்தபடி கொஞ்ச நாளாய் “  

எனக்குத் தெரியும்.. அம்மாவுக்கு அப்பா மேல் கோபம் வந்தால் அவரை முதன்முதலாய் பார்த்த நாள்தொட்டு அவளுக்குள் மண்டின அத்தனை கசப்பையும் ஒன்று விடாமல் பட்டியலிடுவாள். அந்தந்த சமயத்து பிரச்னை தொட்டு அந்தக் குற்றப் பட்டியல் மாறுபடும். எந்த சமாதானமும், தன்னிலை விளக்கமும் அப்பாவை காப்பாற்றியதில்லை. வாங்கிக் கட்டிக் கொண்டு ‘கக்கி முடிச்சாச்சா?’ என்று சிரித்தபடி ஏதோ ஒரு புத்தகத்துக்குள் தன்னை புதைத்துக் கொள்வார். பாவம் அப்பா.. அவருக்குத்தான் எத்தனைக் கனவுகள் இருந்தன? ஒரு நல்ல சினிமா எடுக்கணும்.. இரண்டு நாவல் எழுதணும்... ஊர் ஊராய்ப் போகணும்.. இடுப்புல காசை முடிஞ்சுக்காம இமயமலையில் திரியணும். அள்ளி அள்ளி பசிச்சவங்களுக்கு பரிமாறணும். .இன்னும் என்னென்னவோ/
.
“விடுப்பா. இனி உனக்கு பிடிச்சதை உன் மனம் போனபடி செய். பணம் ஒரு பிரச்சினை இல்லை.நானும் அண்ணாவும் இருக்கோம். சந்தோஷமா இருப்பா.. ரொம்ப சந்தோஷமா......”எனக்கேதோ தொண்டையை அடைத்தது

“வாயேன்பா. இந்த இரானி ஹோட்டல் டீ சூப்பரா இருக்கும்”.

அப்பாவை பேசவிட்டுக் கேட்போம் என்று எனக்கு தோன்றியது.
அப்பாவுடனான சம்பாஷணை என்றுமே அழகு தான். ஒரு நல்ல சினிமா துவங்குமுன் தியேட்டரில் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருப்பது போல் உணர்ந்தேன் .

மேஜையில் வைக்கப்பட்ட பிஸ்கட்டுகள் பரப்பியிருந்த தட்டைப்பார்த்தபடி அப்பா சிரித்தார்.

“என்னப்பா சிரிக்கிற?”

“நான் முதல்முறையா மெட்றாசைப் பார்த்தது பி.யூ.சி படிக்க அங்கு போன போது தான். எங்க அண்ணா புகாரி ஹோட்டலுக்கு கூட்டிக்கிட்டு போனார். இப்படித்தான் ஒரு தட்டு பூரா பிஸ்கட்டை வகைக்கு ரெண்டாய் கொண்டு வச்சான். நானும் திணறத்திணற வாய்க்குள் அடைச்சுக்கிட்டேன். உன் பெரியப்பா அவ்வளவு பசியா உனக்குன்னு கேட்க, குடுத்த காசு வீணாக்க மனசில்லாமத்தான் எல்லாத்தையும் சாப்பிட்டேன்னு சொன்னேன்... சாப்பிட்ட பிஸ்கட்டுக்கு மட்டும் தான் பி‌ல் போடுவான் என்று தெரியாமல்”.

சிரித்தேன்.. அப்பாவுக்கு எந்த சூழலிலும் சொல்லவொரு நிகழ்ச்சி இருக்கும். ஜோடனையோடு அவர் சொல்லும் அழகே தனி. அப்பா இதையே அம்மாவுக்கு சொல்லியிருந்தால் ‘பட்டிக்காடு’ன்னு சொல்லி தலையில் அடித்துக் கொண்டு அவரைக் குறுக்கியிருப்பாள். இல்லையெனில் ’இந்தக் கதையைக் கேட்டு கேட்டு காது புளிச்சிபோச்சு’ என்று வெட்டியிருப்பாள்.. அப்பா! தோழமையே இல்லாமலா நீ இருந்திருக்கிறாய் ?

“டீ ரொம்ப நல்லா இருக்குடா செல்லம்.”

அடுத்தமுறை இந்த ஹோட்டலுக்கு வந்தால் நீ அமர்ந்திருக்கும் இந்த நாற்காலியில் தான் அமர்வேன் அப்பா...

“அடுத்து என்னப்பா பண்ண போறே?”

“வேலையை விட்ட முதல் மாதம் ஆபீசிலிருந்து வர வேண்டிய பணம் வாங்க வேண்டி அலைஞ்சேன். நங்கநல்லூரில் உன் அண்ணன் வீடு கட்டி முடிக்கிற அலைச்சலில் ரெண்டு மாசம் ஓடிப் போச்சு. இப்போ நாலு நாளா மும்பைல உன்னோட டேரா. இனிமேதான் என்ன செய்யிறதுன்னு யோசிக்கணும் அஜீ”

“உனக்கு சமையல் தான் சூப்பரா வருமில்ல?”

“ஆமா ஜோரா சமைப்பேனே! ஏன் கண்ணு கேக்குற?”

“கும்பகோணத்துக்கு போனப்புறம் கொஞ்ச நாள் நீ தனியா தான் இருக்கணும்”

“ஏண்டா?”

“கொஞ்ச நாள் அம்மா என்னோட இருக்கட்டும்பா. ஹோட்டல் சாப்பாடு போரடிக்குது.”

உடனே அப்பா ஒன்றும் சொல்ல வில்லை. “அம்மா கிட்ட பேசினியா?”

“கேட்டேன். இருந்துட்டா போச்சுன்னா. எதுக்கும் உன் கிட்டயும் பேசச் சொன்னா”.

“சரி. அவ கொஞ்ச நாள் உன்னோட தான் இருக்கட்டுமே.”

வீடு வந்து சேர்ந்தோம். வேகும் வெஞ்சனம் வீடெல்லாம் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. அம்மா சமையல். அடிச்சிக்க முடியாது. நோ சான்ஸ் !

“அப்பாவும் பிள்ளையும் நடந்தே கும்மாணத்துக்கு போயிட்டீங்களோன்னு பார்த்தேன்” அம்மா தொடர்ந்தாள்...‘அப்பாவுக்கு நேத்தெல்லாம் முழங்கால் வலின்னு கால் முட்டில கஞ்சீரா இல்லே வாசிச்சிகிட்டிருந்தார்?”.

அம்மாவுக்கு அப்பா மேல் உள்ள கரிசனமா இல்லை நையாண்டி செய்கிறாளா என்று எனக்கு புரியவில்லை.

“கால் முட்டில கஞ்சீரா! உங்கம்மா தஞ்சாவூர் இல்லே?!. கால் முட்டி கஞ்சீரா வாசிக்கும் தோள்பட்டை தோடி ராகம் வாசிக்கும்’

“அவுட் ஆப் காண்டெக்ஸ்ட் அப்பா. கால் முட்டி கஞ்சீரா வாசிக்கும்கறதுக்கு தோள்பட்டை ஏதாவது வாத்தியம் வாசிச்சா தான் சரியா வரும்.. தோடி ராகம் பொருத்தமா இல்லை.”

“தோள்பட்டை ‘தோ’வுக்கு தோடின்னு அடுத்தாப்புல போட்டேன். நீ தான் வேற சொல்லேன்.”

“நமக்கு வராதுப்பா”
.
“என்ன தஞ்சாவூர் பார்ட்டி வாயை திறக்கக் காணோம்? சரக்கு இல்லையா ? தீர்ந்து போச்சா?” என்று குழந்தையாய் சிரித்தார் அப்பா

“பெரிய கம்ப சூத்திரம்! கால் முட்டி கஞ்சீரா வாசிக்கும். தோள்பட்டை துந்தனா வாசிக்கும்.... இவரு நாவல் வேற எழுதப் போறாராம்!” கழுத்து நொடிப்பில் காதுத்தோடு ஒருமுறை மின்னி ஓய்ந்தது.

“சபாஷ்மா”

அப்பா மௌனமாய் என்னைப் பார்த்தார். சின்ன அசட்டு சிரிப்பு தேயாது இதழ்களில் தொங்கிக் கொண்டிருந்தது.

“உம் பிள்ளை உன்னை இங்க இருக்க சொல்றான் கேட்டியா?”.

“யாருக்கு நான் தேவையோ அங்க இருக்கிறது தானே சரி.”

“ஏன் வம்புக்கிழுக்கிறே? நீ கும்பகோணத்துல தேவையில்லைன்னு நான் சொன்னேனா?”

“சொன்னால் தானா? வேலைவாணாம்னு ஒதுங்கியாச்சு. ஆம்படையாளும் வேணாம்னு ஒதுக்கிட்டா கும்பகோணத்துல வானப்பிரஸ்தம் அனுபவிக்கலாமே.”

“லூசு. வானப்ரஸ்தத்துக்கு பொண்டாட்டியையும் கூட்டிண்டு தான் போவா. சன்யாசத்துக்குத்தான் ஓதறிட்டுப் போறது.... மேதாவி.”

“பேச்சுல கூட சேர்ந்திருப்போம்னு வர்றதா? விட்டுட்டு ஓடற மனசுக்கு வேறெப்படி பேச வரும்?”

“ஏன். நீ கூட அஜிதனுக்கு சொல்லியிருக்கலாமே.. அப்பாவும் கொஞ்ச நாள் இங்கயே இருக்கட்டுமேன்னு?”

“நான் சொல்லி எடுபடுமா? நீங்க தான் உங்க பிள்ளை மனசுலே எதெதையோ சொல்லி நைச்சியமா இந்த ஏற்பாட்டைப் பண்ணியிருப்பேள். தனியா சந்தோஷமா இருங்கோளேன். இதெல்லாம் புதுசா எனக்கு ? இவனை பிள்ளையாண்டிருந்த போது, இந்த சமயத்துல அம்மா துணை அவசியம்னு அரிச்சு புக்காத்துக்கு என்னை அனுப்பிட்டு, எதுத்தாத்து கோமளாங்கி கௌசல்யாகிட்ட புரை குத்த மோர் இருக்கான்னு வழிஞ்ச ஆளு தானே நீங்க.”

“அம்மா ப்ளீஸ். இப்பிடி எதுக்கு மேல மேல பேசறே. உன்னை இங்க இருக்கச் சொல்லி ஒரு ஆசையில் கேட்டேன். சண்டை போடாதயேன்”

அம்மா அப்பாவுடன் போவதாய் சொல்லிவிட்டாள்.

மும்பை ரயில் நிலையத்தில் அம்மாவை ரயில் பெட்டியில் அமர வைத்துவிட்டு, போகும் வழிக்கு பழங்களும் மினரல் வாட்டரும் வாங்க இறங்கினேன். கூடவே அப்பாவும் இறங்கி வந்தார்,

“அம்மா கிளம்பிட்டாளேன்னு நீ வருத்தப் படாதே. அவ ஒரு டைப்பு. கொஞ்ச நாள் கழிச்சு நான் அனுப்பி வைக்கிறேன்.இவ்ளோ சொல்றாளே.. நான் தனியா இருப்பேன்கிற தவிப்பு தான் அவளுக்கு” அப்பாவின் சமாதானம் தொடர்ந்தது.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா”. அப்பா கையை பிடித்துக் கொண்டேன். பெட்டிக்கு திரும்பினோம்.
இன்னும் ஐந்து நிமிஷத்தில் வண்டி புறப்பட்டு விடும்.

“இறங்கி ஜன்னலண்டை வந்துடு” என்றாள் அம்மா.

பிளாட்பாரம் இறங்கிவந்து ஜன்னல் கம்பியை பிடித்தபடி அப்பாவைப் பார்த்த வண்ணம் நின்றேன்.

“அஜிதன் நீ இருப்பேன்னு ஆசையா கேட்டான். மாட்டேன்னு திரும்பரதுல மனசு கஷ்டம் பாரு அவனுக்கு”.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா”

அப்பா! நீ கொஞ்ச நாளாவது தனியா,முழுசா இருக்கணும் புழுக்கம் இல்லாம.. அமைதியா உன்னை நீயே மீட்டெடுக்க, உன் சந்தோஷ தருணங்களை ஏதும் தடையின்றி நீயே உருவாக்கிக்கொள்ள அல்லவா அம்மாவை இங்கேயே இருத்திக் கொள்ள நினைத்தேன்? நினைத்தது நடக்கிறதா? அல்லது இந்த நினைப்பே சரியா?

“என்னடா ஒண்ணும் பேசாமல் யோசனைல இருக்கே?” என்ற அம்மாவின் குரல் சிந்தனையை அறுத்து என்னை மீட்டு வந்தது.

“அஜீ! அம்மா போறேனேன்னு தப்பா எடுத்துக்காதே! உங்கப்பாவுக்கு பசி தாங்காது. ஷூகர் வேற படுத்துது. நான் இல்லைன்னா சாப்பிடாம கொள்ளாம ஏதும் புஸ்தகம் வாசிச்சின்டேயிறுப்பார். குழந்தை திருட்டுத் தனமா மண்ணு தின்கிற மாதிரி தானே காபி வச்சு சக்கரைய அள்ளி போட்டுப்பார். நான் இருக்கிற வரையில பார்த்துப்பேன். போயிட்டா அவர்பாடு உன்பாடு.. ஊர் போய் சேர்ந்தப்புறம் முதல் வேலை உனக்குப்பொண்ணு பாக்குறதுதான். இந்த மாசி வந்தா உனக்கு இருபத்தியாறு வயசு முடிஞ்சுடும்.”

“ஆரம்பிச்சுட்டியாம்மா. கல்யாணம்னாலே எனக்கு கால்முட்டி கஞ்சீரா வாசிக்கிறது, தோள்பட்டை துந்தனா வாசிக்கிறது” என்றேன்.

அம்மா பெரிதாக சிரித்தாள். நகர ஆரம்பித்து விட்ட ரயிலின் ஜன்னலூடே அப்பாவின் முகம் மங்கலாய்த் தெரிந்தது. அப்பாவுக்கும் கண்கள் கசிந்து நான்கூட மங்கலாய்த் தான் தெரிந்திருப்பேன்.
     



    




.