‘சார், நான் தற்சமயம் மும்பை வந்திருக்கிறேன்.
நாம் இன்று சந்திக்க முடியுமா?’ என்ற குறுஞ்செய்தியை ஜெயமோகன் அவர்களுக்கு கடந்த
ஞாயிற்றுக் கிழமை(21.02.2016)நண்பகல் அனுப்பி வைத்தேன். Gateway Litfest 2016 எனும் கருத்தரங்கில் கலந்து கொள்ள அவரும் மும்பை வந்ததை அவர் தளத்தில்
வெளியிட்டிருந்த அறிவிப்பினால் அறிய வந்தது.
சிலநிமிடங்களிலேயே அவரிடமிருந்து
அலைபேசியில் அழைப்பு வந்தது.
“மோகன்! நேராக அரங்கத்துக்கே வந்து
விடுங்கள். அவசியம் சந்திப்போம்”.
மதியம் ஒரு மணிக்கு அரங்கை
அடைந்திருந்தேன். ஆறு ஆண்டுகளுக்கு மேலாக அவரோடு மின்னஞ்சல்களிலும், அலைபேசி
உரையாடல்கள் வழியாகவும் நல்ல தொடர்பு இருந்தாலும் இப்போதே முதலில் அவரை சந்திக்கிறேன்.
அரபிக் கடலோரம் அமைதியான சூழலில் டாடா
அரங்கங்கள் பல இருக்கும் பெரிய வளாகம். ‘பிராந்திய இலக்கிய ஓடைகளின் சங்கமம்’ என்ற
இலக்கோடு, இந்திய மொழிகளின் நிலைகள் பற்றியும், அவை எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும்
மொழிவாரியாக இலக்கிய அமர்வுகள் இரண்டு நாட்களாய் நடந்தபடி இருக்கின்றன. இண்டாம் நாள்
மாலையில் இரண்டு அமர்வுகளில் ஜெயமோகன் பங்கேற்று பேச இருந்தார்.
1.”இந்திய இதிகாச புராணங்கள் பற்றிய தற்கால
படைப்புகள் இந்தியமொழிகளின் எழுத்தாளர்களை விடவும் நவீன ஆங்கிலேய எழுத்தாளர்களாலேயேஅதிகம்
எழுதப்படுவது குறித்தும்....
2.பிராந்திய மொழி எழுத்துக்களின் வருங்கால போக்கு
பற்றியும் ஆன இந்த இரண்டு அமர்வுகளைக் கையாள ஜெயமோகன் சாரை விட தகுதியானவர் உண்டா
என்ன?
நான் உள்ளே நுழைந்தபோது வாயிலின் அருகிலேயே ஒரு மலையாள எழுத்தாளரிடம்
சம்சாரித்துக் கொண்டிருந்தார். வெளிர்நீல ஜீன்ஸ்,கருநீல முழுக்கை சட்டை, வெள்ளை பிரேம் போட்ட கண்ணாடி. என் பக்கம்
திரும்பிய போது,”வணக்கம். நான் வானவில் மனிதன் மோகன்” என்றேன்.
குலுக்கிய அவர் கைகளின் இறுக்கமும்
வெம்மையும் தோழமையை வெளிப்படுத்தின. கண்ணைப்பார்த்து பேசும் சாந்தமான முகம்.
மீசையை எடுத்திருப்பது பாந்தமாகவே இருந்தது. மிக மென்மையான குரல்.
சம்பிரதாய விசாரிப்புகள் ஏதுமின்றி,
சிலகாலம் கழித்து சந்திக்கும் உற்ற நண்பனின் உரையாடல் போன்ற சகஜத்தை கைகுலுக்கிய
கணமே ஏற்படுத்தி விட்டார். மராத்தி இலக்கியசூழல் குறித்த அமர்விலும், மலையாள புத்தகங்களை
சந்தைப்படுத்துதலிலுள்ள பிரச்னைகள் குறித்ததுமான அமர்விலும் பார்வையாளர்களாய் அருகருகே
நான்குமணி நேரத்துக்கு மேல் இருந்தோம்.
க.நா.சு., லா.சா.ரா. உ.வெ.சா, நாஞ்சில்
நாடன், ஜெயகாந்தன் என பல ஆளுமைகள் பற்றி பல செய்திகள் சொல்லி வந்தார். அவருடைய மனைவி அருண்மொழிநங்கை பற்றி சொல்லும்போதும்,
மகன் அஜிதன் எடுத்த ஆவணப்படம் பற்றியும் சொல்லும்போதும் ஒரு பாசமிகுந்த
குடும்பத்தலைவனின் வாத்ஸல்யமும் நெகிழ்வும் குரலில் ஒலித்தது. சினிமாவில் அவருடைய பங்களிப்பை ஒரு காட்சிசித்திரமாய் நகைச்சுவைப்பட கூறினார்.
பேச்சினூடே,படைப்பாளிக்கென இருக்கவேண்டிய
நேர மேலாண்மை குறித்து மிக அழகாகக் குறிப்பிட்டார். “நேரத்தை விரயம் செய்யாமல்,
தனக்கு அவசியமில்லாத விஷயங்களை முற்றிலுமாய் தவிர்த்தாலே அனைத்துக்கும் நேரம்
இருக்கும் என்றும், தான் டிவி
பார்ப்பதில்லை என்றும் சொன்னார். அதொன்று போதுமே!
என்னதான் நேரத்தை வீணாக்காமல்
சேமித்திருந்தாலும், படைப்பூக்கம் சற்றும் குறையாமல் எழுத்தை ஒரு வேள்வியாகவே மேற்கொள்ளும்
பேறு அனைவருக்கும் வாய்க்குமா என்ன? இவை தெய்வ சங்கல்பம் அல்லவா?.ஒன்றை ஒன்று விஞ்சும்
பலபடைப்புகள். காடும், கொற்றவையும், விஷ்ணுபுரமும் தமிழ் நாவல்களின் முக்கியமான
எழுத்தோவியங்கள் அல்லவா?
ஜெயமோகனின் படைப்புகளின் உச்சம் ‘வெண்முரசு’.
அசுர வேகத்தில் அவர் எழுதிவரும் அமரகாவியம். அந்தத் தமிழ்நடையின் இதமும், ஆழமும்
தமிழுக்குப் புதியது. அதில் அவர் பயன்படுத்தும் பல வழக்கொழிந்த, மறக்கப்பட்ட தமிழ்
வார்த்தைகளின் பட்டியல் மிக நீளம். அதன் கட்டமைப்பும் நுணுக்கமானது. ஒரு பல்கலை
ஆராய்ச்சிக்கான விஷயமிது. ஜெயமோகனின் ஒரு திவீர வாசகி அவருடைய முதற்கனல் நாவலொன்றைக் கொண்டுவந்து அவருடைய கையொப்பம் வாங்கிக் கொண்டார். இடைவேளையின் போது மலையாள வாசகர்களோடு அவர் பேசிக்கொண்டிருந்த போது 'பாண்டியாய்' பார்த்தபடி இருந்தேன்.
அண்மையில் அவருக்கு வழங்கப்பட இருந்த பத்மஸ்ரீ விருதை அவர் மறுதலித்தது மிகவும்
பரபரப்பான விவாதத்திற்கு உள்ளானது. அவர் அதை மறுத்தது எனக்கு உடன்பாடாய்த்
தோன்றவில்லை. மறுதலித்த காரணங்களை அவர் தளத்தில் விளக்கியிருப்பதை
புரிந்துகொண்டாலும் அந்த ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால்,மத்திய
அரசின் அங்கீகாரத்தை ஒரு தன்னறம் சார்ந்த தார்மீக
மதிப்பினை கைவிடாதிருக்க செய்த ஒரு தியாகமாகவே உணர்கிறேன்.
ஆனாலும், அந்த மறுதலிப்புக்குப் பின் அவருடைய
தேர் பூமிக்குமேல் இரண்டடி உயர்ந்து ஜெயக்கொடி வீசி பறக்கதான் செய்கிறது. இந்த
சந்திப்பின் போது பத்மஸ்ரீ குறித்தும் பேச்சு வந்தது. என்னை சமாதானப் படுத்துவது
போல காரணங்களை நிதானமாய் சொல்லச் செய்தார்.
மலையாள புத்தக சந்தைபடுத்ததுலுக்கான விவாத
முடிவில் கேள்விநேரத்தின் போது ஒருவர் விடாக்கண்டனாய் பேசிக் கொண்டேபோனார்.
விவாதத்திற்கு வெளியே ஏதேதோ சொல்லியபடி அனைவரையும் நெளிய வைத்தபடி இருந்தார். “இந்த தற்பேத்திகளை கேட்கவென இத்தனைபேரும்
இங்கு கூடியிருக்கவில்லை. உட்காருங்கள் “ என்ற திடமான குரல் எழுந்தது. அது
ஜெயமோகன் குரல். அந்த குரலின் தீட்சண்யம் எதிர்வாதம் அற்று அவரை உட்கார வைத்தது.
தேர் இப்போது தரையிலிருந்து மூன்றடி மேலேறி
விட்டது.
அந்த அமர்வுகளில் கலந்துரையாடிய
படைப்பாளிகளையும், அருகிருந்த ஜெயமோகனையும் மாறிமாறி பார்த்தபடி இருந்தேன்.
சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நான்குகால்களையும் ஒன்றுக்குப்பின் ஒன்றாக ஒரு
ஸ்டூலில் நெருக்கிவைத்து அமரும் சர்க்கஸ்யானை நினைவுக்கு வந்தது. தன்னை ஒடுக்கிக் கொண்டு அங்கு அவர் அமர்ந்திருப்பதாகவே தோன்றியது. 'இவர்
எழுதியவற்றின் பெயர் பட்டியலாவது தெரியுமா உங்களுக்கு?' என்று கூவவேண்டும் போல் இருந்தது.
அடுத்த அமர்வில் ஜெயமோகன் பேசுமுன்,
தவிர்க்கமுடியாத சொந்த வேலைக்கான அவசர
அலைபேசி அழைப்பின் காரணமாய், அவர் உரையை கேட்க இயலாமல் திரும்பநேர்ந்தது. அவர்
என்ன பேசியிருப்பார் என்று சிந்தித்துக் கொண்டே வந்தேன். ஜெயமோகன் கருத்துக்களாய்,
இந்த வெறும்மோகனின் கருத்துக்கள் அலைஅலையாக எழுந்தன.
விடைபெறும் போதும் சிலநிமிடங்கள் பேசிவிட்டே அரங்குக்குள் போனார்.
அவருடைய கலந்துரையாடலை கேட்க இயலாதது வருத்தமாக இருந்தது. ஆனாலும்
தினம்தோறும் படைப்புகள் வழியே அவருடன் உரையாடியபடிதான் இருக்கிறேனே என்றுஆறுதல் சொல்லிக் கொண்டேன்.



