“நான் பஞ்சகுட்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசறேன். இன்றைக்கு அவகாசம் இருந்தால் ஒரு முறை ஸ்டேஷனுக்கு வந்து விட்டு போக முடியுமா?" தெலுங்கில் வந்த தொலைப்பேசி அழைப்பு..
“ஏதும் தகவல் தெரிஞ்சுதா இன்ஸ்பெக்டர்?”
“முயற்சி பண்ணிகிட்டிருக்கிறோம் கோர்ட்க்கு ஒரு பாரம் கொடுக்கணும்.”
“சரிங்க..”
நடந்தது இது தான்...
ஹைதராபாதில் நான் வசித்த வீட்டின் கீழ்ப் பகுதியில் நாங்களும், முதல் மாடியில் வீட்டு ஓனருமாய் இருந்தோம் .
சில மாதங்களுக்கு முன், வீட்டைப் பூட்டிக் கொண்டு மும்பை சென்றிருந்தோம். அங்கு போன இரண்டாம் நாளே,
என் வீட்டு ஓனரின் அலைபேசி அழைப்பு.
“மோகன்காரு! ஒரு சின்ன ப்ராப்ளம் ! இன்று காலை வாக்கிங் செல்ல கீழே வந்தபோது உங்கள் வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு, வீட்டினுள்ளே அனைத்தும் அலங்கோலமாய் இரைந்து கிடப்பதைப் பார்த்து போலீசில் புகார் செய்தேன். இப்போது வீடெங்கும் பவுடர் அடித்து தடயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வந்தால் தான் என்னென்ன திருட்டுப் போனது என்று கணக்கிட முடியும். வரும் விவரம் சொல்லுங்கள். ஐ’யாம் ஸாரி!!”
என்ன சொல்வது என்று தெரியவில்லை. “நான் திரும்பவும் உங்களைக் கூப்பிடுகிறேன்”.
மனைவிக்கு விஷயத்தை சொன்னவுடனே பதறினாள்..
“நகைகள் லாக்கரில் தான் இருக்குங்க! ,சின்னச் சின்ன உருப்படிகளே அலமாரியில் இருக்கு , வெள்ளிப் பாத்திரங்கள் பூஜை அறையில் வெளியிலேயே இருக்குங்க. அதெல்லாம் போயிருக்கும்.கடவுளே !” .
“சரி. பதட்டப் படாதே! பார்ப்போம்”அவளை மும்பையிலேயே விட்டு விட்டு விமானத்தில் ஹைதராபாத் விரைந்தேன்.
வீட்டுக்குள் நுழைந்த போது, ஏதோ சுனாமி தாக்கிய சென்னை கடற்கரை போல அது இருந்தது. காட்ரெஜ் அலமாரிகள் நெம்பித் திறக்கப் பட்டு அதிலிருந்த சாமான்களும், மேலே லாப்ட்டில் இருந்த பெட்டிகள் எல்லாம்
பிரித்தெறியப் பட்டு, துணிமணிகளும் புத்தகங்களும் வீடெங்கும் சிதறிக் கிடக்க, மெத்தைகள் கிழிக்கப் பட்டு... கலைந்த கூடாய் என் வீடு.....
தலை சுற்றியது.
வெள்ளி பூஜைப் பாத்திரங்கள், ஐ பாட் , கேமரா,சின்ன தங்க உருப்படிகள், சில புடவைகள்.. இத்யாதிகள் திருடப் பட்டிருந்தன. ரூபாய் எண்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை அவற்றின் மதிப்பு இருக்கலாம்.
இரவெல்லாம் வீட்டுக்குள்ளிருந்தே 20-20 மேட்ச் ஆடியிருக்கிறார்கள். திருடர்கள் மூவராய் இருக்கலாம் என்று போலீசில் சொன்னார்கள். மனைவிக்கு நிலவரம் சொல்லி,போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் F.I.R
எழுதி , பட்டியல் கொடுத்து...
மீண்டும் வீட்டுக்குள் நுழைந்த போது,வீடேஅன்னியமாய்ப் பட்டது.
புடவைகள், பெட்டிகளின் நடுவே நகைகளை வைத்து இருக்கலாம் என்று தான் அவற்றை உதறித் தேடியிருக்கிறான் திருடன்.
இரைந்து கிடந்த புத்தகங்களிலும் துணிமணிகளிலும் போலீசின் பூட்ஸ் தடங்கள்.... போகட்டும்.
களவு போன வீடு எங்கோ ஊர்கோடியில் இல்லை... நகரின் பரபரப்பான பகுதியில், நெருக்கமான குடியிருப்புகளுக்கிடையே இருந்தது. போலீஸ் ஸ்டேஷனிலேருந்து ‘மோகி’ன்னு கூப்பிட்டால் ‘உள்ளேன் ஐயா’ என்று என் பதில் கேட்கும் அருகாமை.
இந்த எதிர்பாராத நிகழ்வில் புன்னகை,வேதனை, சந்தோஷம், படிப்பினைகள் எனக்கு வாய்த்தன.....
புன்னகை ஒன்று...
பூஜை அறையில் சாளக்கிராமங்களுக்கு நடுவே இரண்டு பெரிய லக்ஷ்மி டாலர் வெள்ளியில் இருந்தது . அவற்றையும் எடுத்துக் கொண்ட களவாணி., இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை பதிலுக்கு வைத்து விட்டு
போயிருந்தான். உம்மாச்சிக்கு பயந்தவன் போலும்.!!
வேதனை இரண்டு.
-என் குருசாமி எனக்களித்த வெள்ளிக் காசு போனது.
-‘ஐ பாட்’ வந்தபுதிதில், யாரிடமோ அதைக் கண்டு நான் ரசித்ததும், அதை அரைமணி நேரத்தில், தன் சேமிப்பிலிருந்து என் மகன் வாங்கி வந்து எனக்கு பரிசளித்த ஐ பாட் களவு போனது.. அத்துடன்,என் பிரியமான ‘காற்றினிலே வரும் கீத’மும் ,’முத்துக்களோ கண்கள்’ பாடலும்......
சந்தோஷம் மூன்று..
-பல நாளாய் நான் தேடிக் கொண்டிருந்த என் மகனின் குழந்தை போட்டோ, புத்தகக் குவியலின் நடுவே கிடைத்தது.
-என் மனைவி அவ்வப்போது அணியும், எனக்குப் பிடிக்காத, துணுக்கு ஜிமிக்கியை திருடன் எடுத்துப் போனது.
-தொலைந்தே போய் விட்டது என்று நான் எண்ணிக கொண்டிருந்த இன்னொரு புகைப்படம் புதையல் போல் கிடைத்தது.- .
மறைந்த நடிகர் நாகேஷுடன் நானிருக்கும் போட்டோ : ஒரு நாடக விழாவில் எடுக்கப் பட்டது.... ஒரு பழைய மீனாக்ஷி அம்மாள் சமையல் கலைப் புத்தகத்தினுள் வாசம் பிடித்துக் கொண்டிருந்து. மூக்கை வெளியே
நீட்டியிருந்தது...
படிப்பினை
கலைந்து கிடந்த என் மனைவியின் புடவைகளை ஒன்று விடாமல், நீவி,மடித்து,பீரோவில் நான் அடுக்கி வைக்க,
வீட்டு ஓனர் மனைவி, சன்னலின் வழியே அதைக் கண்ணுற்று அவருக்கு கன்னத்தில் இடியாம்!...”நீங்களும் இருக்கீங்களே!”
அடுத்த நாள் மும்பையிலிருந்து திரும்பிய என் மனைவி, அடுக்கப் பட்ட புடவைகளைக் கண்டு, குரல் கம்ம, காதலுடன்,”நீங்களா இத்தனையும் மடித்து வைத்தீர்கள்?’’ என்று நெகிழ்ந்த வேளை, சின்ன சிரிப்போடு அந்த பாராட்டை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.. விதி யாரை விட்டது?
உன்கிட்ட இவ்ளோ புடவையா இருக்கு என நான் ஆச்சரியப் பட்டு,
அவள் அதற்கு கோபப் பட்டு...
மீண்டும் நான் வாங்க நேர்ந்தது ஒரு பிரிண்டட் பட்டு...
கொஞ்ச நாள் போலீஸ் ஸ்டேஷன் நடந்து பார்த்தேன்.
பல்லைக் குத்திக் கொண்டு ‘ஒன்றும் கிடைக்கவில்லை’ என்று அவர்கள் திருப்பிவிட..
நாகேஷ் மாதிரி அலுத்துக் கொண்டு விட்டுவிட்டேன்...
“போங்கோடா.”
31 comments:
இடுக்கண் வருங்கால் நகுக .....என்றெடுத்து கவலைகளையும் நகைச்சுவையாக கூறியுள்ளீர்கள்....பொருள் போனது ஒரு புறம் கவலை இருந்தாலும் மறுபுறம் ``இவ்வளவு பாதுகாப்பற்ற உலகத்திலேயா இருக்கிறோம் எனும் கவலை படுத்திஎடுக்கும்.
காவல் கவலைகளுக்கு வடிகால் தருகிறதோ இல்லையோ,காலம் கவலைகளுக்கு வடிகால் தந்திருக்கும் என நம்புகிறேன்....
நாகேஷ் அவர்களோடு புகைப்படம் எடுத்துள்ளீர்களா....பழகியிருக்கிறிர்களா..அது தான் கஷ்டங்களையும் இயல்பாக அதன் போக்கில் எடுத்துள்ளீர்கள்.
வாங்க பத்மநாபன்! அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, அந்த வீட்டை மாற்றிவிட நேர்ந்தது. அந்த வீட்டின் வாசலில் இருந்த சரக்கொன்றை மரத்தில்,தினமும் காலையில் இரண்டு வலியன் குருவிகள் வந்து தலைப்புச் செய்திகள் படித்துக் கொண்டிருக்கும். அவ்வப்போது அவற்றை நினைத்துக் கொள்வேன்.
பல வருடங்களுக்கு முன்னால்,காலை பத்து மணிமுதல் மாலை நான்கு மணி வரை,நாகேஷுடன்
சேர்ந்திருக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த மேதையின் அண்மை தந்த சில மறக்க முடியாத கணங்களை ஒரு நாள் எழுதுவேன்.பணியின் நிமித்தம், அந்த சந்திப்பிற்குப் பின் சென்னையை விட்டு கல்கத்தா சென்றுவிட்டதால்,மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை நான் ஏற்படுத்திக்கொள்ள இயலவில்லை. வாழ்வில், அவர் சந்திக்காத பிரச்னைகளா?
இந்தப் பதிவைக் கூட அதில் தொக்கிநின்ற நகைச்சுவையின் பொருட்டே எழுதினேன்.
'தமிழே என் தமிழே' பதிவில்,அப்பாதுரை சார் அழகான கருத்தை எழுதியிருக்கிறார் பத்மநாபன்.பாருங்கள். வேலை பளு குறைந்திருக்கிறதா?
பிரச்சினையையும் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். நண்பர் சொன்னதுபோல் காலம் கவலைகளுக்கு வடிகால் தரும்.!
'பட்டு'ம் படாமல் இருக்கக் கற்றுக் கொண்டீர்களே? அதைச் சொல்லுங்கள்.
மோகன்ஜி...சில விஷயங்கள் நடக்கிறதுகூட நன்மைக்கேன்னு சொல்லுவாங்க.பாருங்க உங்க நடந்த நன்மை தீமைகளைவிட படிக்கும் எங்களுக்கு ஒரு படிப்பினைபோல பதிவும் கிடைச்சிருக்கு.
நல்லவேளை தப்பிய வரைக்கும் நன்றி சொல்லிக்கொள்வோம் கடவுளுக்கு !
உண்மை எஸ்.கே. கால வெள்ளம் எல்லா கவலைகளையும்,காயங்களையும்,ஏன், கனவுகளையும் கூட அடித்துச் சென்று விடும். வாழ்வின் போக்கில் எஞ்சி நிற்பது அனுபவம் எனும் உணர்நிலை மட்டுமே.
அப்பாதுரை சார்! அழகாக சொல்லி விட்டீர்கள்...
'பட்டு'ம் படாமல் இருப்பது என்பதை... உங்களுக்கு ஒரு சின்ன சம்பவம் பற்றி சொல்லவா?
இப்ராஹீம் ஆதாம் எனும் சுபீ குரு இருந்தார். அவர் பெரும் செல்வந்தர் கூட. அவர் இருந்த கூடாரம் கூட படாடோபமாய் இருந்தது. அந்த கூடாரத்தை மண்ணில் பதித்து நின்ற முளைச் சட்டங்கள் கூட தங்கத்தால் ஆனது.. அவரைக் காண வந்த மற்றோர்
துறவி,ஆதாமிடம் அந்த ஆடம்பரம் பற்றி தன் அதிருப்தியை தெரிவித்தார். பதில் ஏதும் சொல்லாத ஆதாம்,அவரை தன்னோடு மெக்கா பயணத்தில் உடன் வர முடியுமா எனக் கேட்டார். உடன் வந்த துறவி போகும் வழியெங்கும்,கூடாரத்தில் தான் விட்டு விட்டு வந்த தன் திருவோடு மற்றும் சொற்ப உடைமைகளின் பாதுகாப்பு குறித்து ஆதாமிடம் கேட்டபடி வந்தார்.
ஆதாம் சிரித்தபடி சொன்னார்,"சகோதரா! மெக்கா செல்லும் புனிதப் பயணத்தில் கூட உன் மனம் திருவோட்டிலேயே இருக்கிறது.. நீ முன்னர் கடிந்து கொண்ட ஆடம்பர செல்வங்களை அப்படியே விட்டுவிட்டு சிறிதும் கவலையின்றி நான் வருகிறேன்.. நீ ஆச்சரியப்பட்ட ,என் கூடாரத்தின் தங்க முளைகள் மண்ணில் தான் பதிக்கப் பட்டிருக்கிறது.. என் மனத்தில் அல்ல!" என்றாராம்.
வாங்க ஹேமா!நடப்பவை எல்லாம் தரும் பாதிப்பில் குமைவதை விட இறைவன் நமக்கு தந்திருக்கும் வரண்டலை எண்ணி மகிழ்வோம். count your blessings!
திருட்டு போதல் கொடுமை (அது இதயமாய் இல்லாத போது) எனக்கு கூட இந்த பயம் உண்டு அடிக்கடி திருட்டு கனவு வரும்.
இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் முக்கியமானது ..பெண்களின் புடவைகளை எண்ணவே கூடாது.நாங்களே எண்ண மாட்டோம். எண்ணினால் வாங்குவது தடை படும் .பின் வாழ்வின் சுவாரசியமே போய்விடுமே ...
முத்துக்களோ கண்கள் காலத்தை வென்று நிற்கும் பாடல் ..மீண்டும் அது சிறை பட்டிருக்கும் என நினைக்கிறேன்
வாங்க பத்மா!
//திருட்டு போதல் கொடுமை(அது இதயமாய் இல்லாத போது)//
என்னுடைய "மறதி" எனும் கவிதையை சொல்லவா?
போகுமிடமெல்லாம்
மறந்துபோய் தொலைத்துவிடுகிறேன்
குடையையும்.....
மனத்தையும்......
திருட்டு போதல் போல் கனவு வந்தால்,நல்லது என்பார்கள்.
//பெண்களின் புடவைகளை எண்ணவே கூடாது.// எண்ணவே கூடாதுன்னா எண்ணிக்கை வைக்காதே என்று சொல்கிறீர்களா? இல்லை 'நினைக்காதே" எனும் பொருளில் சொல்கிறீர்களா?!எப்படி இருந்தாலும்,உங்கள் சொல்லை ஏற்றுக் கொண்டு போட்டுக்குறேன் புத்தி!!எண்ண மாட்டேன்..எண்ண மாட்டேன்.. போதுமா பத்மா?!
நாகேஷ் ஐயா கூட படம் பிடிச்சுக்கிட்டவரா நீங்க? இப்ப கூட மை.ம.கா.ராஜன் ஜெயால பார்த்துக்கிட்டு இருந்தேன். நான் அவினாசி நா ஒரு விசுவாசி... டயலாக் சொல்லும்போது அடா..டா.டா.. பெரும்பாலான பிற்கால கமல் படங்கள்ல நடித்திருந்தார்.
போலீஸ் கிட்ட லட்ச ரூபாய்க்கு ஒரு பர்சென்டேஜ் பேசி இருந்தீங்கனா கொஞ்சமாவது கிடைச்சுருக்கும். நேக்கு போக்கு தெரியாம விட்டுடீங்கன்னு நினைக்கறேன். "உம்மாச்சி கண்ணை குத்தும்" அப்படின்னு சொல்றா மாதிரி பர்க்ளர் அலாரம் பூஜை ரூம்ல வச்சிருந்தா எல்லாத்தையும் வச்சுட்டு தோப்புக்கரணம் போட்டு ஸ்வாமிக்கு உண்டியல்ல காசு போட்டுட்டு போயிருப்பானோ... திருட்டுபோனதை இவ்வளவு ஜோக்கா எழுதியிருக்கீங்களே... வீட்ல மேடம் ஒரு இடி இடிக்கலை... (இதைப் பார்த்தப்புறமாவாவது இடி கிடைக்குமோ என்ற ஏக்கத்தில்....) சப்பாத்தி கட்டை.. தோசைக் கல்லு இதெல்லாம் எறியத் தெரியுமான்னு தெரியலை.. ஐடியா கொடுத்துட்டேனோ..
புடவை சமாசாரம்... சம்சார ஸாகரத்தில் மூழ்கி முத்து எடுத்தவர்களுக்கு கூட விளங்காத மர்மம். "கல்யாணத்துக்கு அப்புறம் முதமுதல்ல உங்க ஃபிரண்டு ஜகதீசனா... யாரோ...உங்களை மாதிர்யே அச்சுபிச்சுன்னு ... கே கேகே சிரிச்சுண்டே இருப்பாரே.. அவர் ஆத்துக்கு சாப்பிட போனப்ப வச்சு கொடுத்தாளே.. ஸெல்ப் டிசைன் ... நீல கலர்ல... ரவுண்ட் ரவுண்ட ஆ போட்ருக்குமே.....அந்தப் புடவைன்னா... " என்று மொஹஞ்சதாரோ ஹரப்பா காலத்து நாட்களை நினைவுபடுத்தி... அதிலையும் ஃபிரண்டு பேர் ஞாபகம் இருக்காது.. அப்பப்பா... எல்லோரையும் வியக்க வைக்கும் ஞாபக சக்தி.
லேபிள் நகைச்சுவை அப்படின்னு போட்டதாலே.. இந்த மாதிரி... ஏதாவது ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரி...
வாங்க ஆர் .வீ.எஸ் , நாகேஷ் ஒரு சகாப்தம்.எத்தனை படங்கள் ? எத்தனை பாத்திரங்கள்? அவர் டைமிங் அலாதியானது.தருமியும்,சவடால் வைத்தியும் என்றும் நம்மனதில் இருப்பார்கள். ஒரு பதிவு அவர் பற்றி போட்டுவிடலாம்.
களவு போனதைப் பற்றி கவலைப் பட்டு என்ன ஆகப போகிறது? ஆரம்ப அதிர்ச்சிக்கு மேல் அது ஓர் விரும்பத் தகாத நிகழ்வு என்றே துணிய வேண்டும். இந்த சம்பவத்தை என்னால் இப்படித்தான் பார்க்க முடிந்தது.உங்கள் புடவை மேட்டர் ரொம்ப ரசித்தேன். வீட்டுக்கு நீங்க கொடுத்த ஐடியாவெல்லாம்
அவங்க கடைபிடிச்சா என்பாடு கஷ்டம் தான்!
சார் ஒரு திருட்டக்கூட இவ்வளவு நகைச்சுவையா எழுதி இருக்கீங்க...
ரொம்ப ரசிச்சேன் :)
தொலைச்சதை நகைச்சுவையால மீட்டுட்டீங்க.. ஹப்பா.. சிரிச்சு மாளல.. கையக் கொடுங்க..
நன்றி பாலாஜி,நகைச்சுவையை நாம் களவு கொடுக்காத வரையில் எதையும் சந்திக்கலாம் இல்லையா?
ரொம்பவே சரியாகச் சொன்னீர்கள் ரிஷபன்!நன்றிங்க !!
ரைட்டு!! அப்புறம் ஜிமிக்கி வேற வாங்கி
கொடுத்தீங்களா பாஸ்??
// நாகேஷுடன் சேர்ந்திருக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த மேதையின் அண்மை தந்த சில மறக்க முடியாத கணங்களை ஒரு நாள் எழுதுவேன்//
அந்த நாள் எப்ப?? காத்திருக்கிறோம்.
அதையேன் கேக்குறீங்க பிரதர்! ஜிமிக்கி கொஞ்சம் பெரிசாகி 'ஜீ'மிக்கியா இல்லை வாங்க வேண்டி
வந்தது!
மேலே ஒரு பின்னூட்டத்தில் 'இப்ராஹீம் ஆதாம்'கதை ஒன்று எழுதியிருக்கிறேன்.படித்தீர்களா?
நாகேஷ் விரைவில் வருவார்...
நிஜமாகவே நடந்ததா? ஹ்ம்ம்.. :(
உங்கள் ஜிமிக்கி புன்னகை, வீட்டுக்காரம்மா கன்னத்தில் இடி, மற்றும் திருடன் விட்டுப் போன இரண்டு ரூபாய் காயின் சிரிக்க வைத்தது. குறிப்பாக ஜிமிக்கிக்கு வாய் விட்டு சிரித்தேன்.
//மீண்டும் வீட்டுக்குள் நுழைந்த போது,வீடேஅன்னியமாய்ப் பட்டது. இரைந்து கிடந்த புத்தகங்களிலும் துணிமணிகளிலும் போலீசின் பூட்ஸ் தடங்கள்.... போகட்டும். //
கண்முன் காட்சி விரிந்தது ...
////கொஞ்ச நாள் போலீஸ் ஸ்டேஷன் நடந்து பார்த்தேன்.
பல்லைக் குத்திக் கொண்டு ‘ஒன்றும் கிடைக்கவில்லை’ என்று அவர்கள் திருப்பிவிட..
நாகேஷ் மாதிரி அலுத்துக் கொண்டு விட்டுவிட்டேன்...
“போங்கோடா.”///
புன்னகைப்பதா வேதனைப்படுவதா தெரியவில்லை.
ஷக்திப்ரபா,இந்தப் பதிவை நான் இட்ட நோக்கமே 'துன்பம் வரும் வேளையிலே சிரிங்க' என்று
வலியுறுத்தத்தான். மேற்கண்ட பின்னூட்டங்களில் இதையே பதித்திருக்கிறேன்.
என் துன்பத்தில் நான் சிரிப்பது மனப்பாங்கின் வெளிப்பாடு.
உங்களை சிரிக்கத் தூண்டினாலும்,நீங்கள்
புன்னகைக்க யோசிப்பது,இந்த மண்ணின் பண்பாடு.
நன்றி சகோதரி!
//உன்கிட்ட இவ்ளோ புடவையா இருக்கு என நான் ஆச்சரியப் பட்டு,
அவள் அதற்கு கோபப் பட்டு...
மீண்டும் நான் வாங்க நேர்ந்தது ஒரு பிரிண்டட் பட்டு...
//
தொலைச்சதை நகைச்சுவையால மீட்டுட்டீங்க.
வாங்க குமார்.. நன்றி பாஸ்!
இடுக்கண் வருங்கால் நகுக..இல்லாவிட்டால் எல்லாவற்றையும் விட மதிப்புள்ள நம் உடம்பு போய் விடும்!
சத்தியமான வார்த்தைகள் நண்பரே!
சுபி மேற்கோள் அருமை.
சூபி,ஜென் வகைத் தத்துவங்கள் சொல்லும் கதை வழி
உணர்த்தல்கள் என்றைக்குமே ஏற்றவை. என் உங்க போட்டோவை மாற்றி விட்டீர்கள்.அந்த சிந்தனை வயப் பட்ட முகம் நன்றாகத்தானே இருந்தது?
களவு கொடுத்ததையும்கூட இவ்ளோ நகைச்சுவையா எழுதமுடியுமா!!!!!!.. அருமை.. அருமை.
களவு கொடுத்ததையும்கூட இவ்ளோ நகைச்சுவையா எழுதமுடியுமா!!!!!!.. அருமை.. அருமை.
நகைச்சுவையை நாம் களவு கொடுக்காத வரையில் எதையும் சந்திக்கலாம் இல்லையா?//
பொங்கிவரவில்லை சிரிப்பு.
நகைச்சுவை இழக்காத நல்லாள்ளத்திற்கு வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக