‘சம்பேஸ்த்தா!’ என்ற கடுமையான குரல் கேட்டு நின்றுவிட்டேன்.
இரவு எட்டரை மணி இருக்கும். மனைவியுடன் காலாற நடக்கலாமென்று என் வீட்டிலிருந்து அமீர்பெட் மார்க்கெட் போய்க்கொண்டிருந்த போதுதான் இந்த ‘சம்பேஸ்த்தா!’
நான் ஒருத்தன்...... மொட்டையா சொன்னா உங்களுக்கு எப்படி புரியும்?
நான் ஹைதராபாதில் தானே குப்பைக் கொட்டிக் கொண்டு இருக்கிறேன்? என் இல்லம் இருக்கும் ஏரியா சென்னையின் தி.நகர் போன்று நகரின் மையப்பகுதி. இங்கே பலவீடுகளில் பத்துபதினைந்து பெண்களுக்கான லேடீஸ்ஹாஸ்டல் ஏற்பாடுகள். இந்நகரத்தில் தனியாகத் தங்கி சிறிதும் பெரிதுமாய் வேலைகளைப் பார்க்கும் இளம் பெண்களுக்காய்..
கரெக்டு! நீங்க நினைச்சது தான்!. இரவு ஏழுமணிக்குமேல் இந்தக் குமரிகளில் சிலர்..ஏன்... பலர்... தத்தம் மனங்கவர்ந்த தொத்தல்,வத்தல்,குண்டு,குட்டை வாலிபர்களுடன்
தெருவோரங்களில்,நிறுத்தப்பட்டிருக்கும் கார்களின் இடுக்கில், இருட்டில் நின்றபடி தன்னை மறந்து சுந்தரத் தெலுங்கினில் ‘வேர்சனிகாய்’(அதாங்க .. தெலுங்கில் ‘கடலை’)போட்டுக் கொண்டு இருப்பார்கள்.
என் சகதர்மினியுடன் சேர்ந்து போகும் போதெல்லாம் இந்த ஜோடிகளைக் கண்டு எரிச்சலை நான் வெளிபடுத்துவதும், ‘அவங்களை நீங்க ஏன் பாக்குறீங்க?’ என்று என்னையவள் மட்டுறுத்துவதும் அவ்வப்போது நடக்கும் விஷயம் தான்.
இன்று அந்த ‘சம்பேஸ்த்தா’வை உதிர்த்தவன் ஒரு உதிரிஜோடியின் ஒற்றைநாடிக் காதலன்.
‘சம்பேஸ்த்தா, என்றால் கொன்னுடுவேன்.. கொன்டே புடுவேன்னு அர்த்தம்.
அந்தக் குரலில் இருந்த கடுமை என்னை கட்டிநிறுத்தியது .அந்த மங்கலான வெளிச்சத்தில் அந்தப் பெண் குலுங்கிக்குலுங்கி அழுது கொண்டிருந்தாள்.
நான் நின்றுவிட்டதை உணராமல், தான் விவரித்துக் கொண்டு வந்த தெலுங்கானா பந்த பற்றிய அப்டேட்டை சொல்லிய வண்ணம் கடந்த என் மனைவி திரும்பி வந்தாள் .
“வாங்க!” அழுத்தமானக் கீழ்த்தொண்டைக் கட்டளையில் இழுத்தபடி முன்னேறினாள்.
“அக்கிரமம் பாரு. அந்தப் பொண்ணை தொரத்தி தொரத்தி காதலித்து விட்டு இப்போ கைவிடரதுக்கு மிரட்டுறான்.”
”ஆமாம். அவங்க விவகாரம் உங்களுக்கு ரொம்பத் தெரியும், உங்க வேலையைப் பார்க்காமல் எல்லாத்திலேயும் மூக்கை நுழைக்குறதை எப்பத்தான் நிறுத்தப் போறீங்களோ?”
“கைப்புண்ணுக்கு கண்ணாடி வேணுமா? அந்தப் பொண்ணைப் பாரு. எப்படி அழுறா?.. கம்மனாட்டி! ஜோலியயெல்லாம் முடிச்சிட்டு வெட்டிவிடறான் பாரு.”
“வில் யூ மைன்ட் யுவர் லாங்குவேஜ்?” என்மனைவி ஆங்கிலத்துக்கு மாறினால், என்னை ரெண்டில் ஒன்று பார்க்க தயாராகிட்டாள்னு அர்த்தம்.
“இந்த சின்னப்பெண்கள் தான் யோசிக்கிறாங்களா? எத்தையாவது சினிமா பாக்க வேண்டியது.. தான் தமன்னா... தனக்கு ஜோடியா ஒரு அஜித் வேணும்.. ரொம்ப முடையா..”
“இவ்வளவு இலக்கியம் பேசுறீங்க.. அலமாரி.. பொட்டி...எதைத் தொட்டாலும் கவிதை கொட்டுது. நீங்க இதே வேலையாத்தானே அந்த நாள்ல...”
“கொச்சைப்படுத்தாதே.. நானெல்லாம் இப்படியா இருந்தேன்? இப்படியா நடுரோட்டுல..”
“உங்களுக்கு திருவாங்கூர் மகாராஜா பார்க் இருந்தது..” சாதாரணமாய் சொல்வதுபோல் எப்படி பெண்களால் ஊசியேற்ற முடிகிறது ?
பாரீஸ்கார்னரின் அண்ணாமலை மன்றத்துக்கு எதிரே இருந்த பார்க்.. பத்தே நிமிஷம்... இவளுடன் மகாராஜா சிலையின் கீழே அமர்ந்து பேசிவிட்டு, போர்ட்ஸ்டேஷனில் இவளை விட்டுவிட்டு கவிதை யோசித்தபடி நடந்தக் காதல் மோகன் ..
இப்போ இதுவா முக்கியம். அந்தப் பரிதாபத்துக்குரிய பொண்ணை பத்தியில்ல சொல்லிகிட்டிருந்தேன்?
“என் பேச்சு இப்ப எதுக்கு? நம்மக் காதல் முடிஞ்சதும்தான் மகாராஜா மனசொடிஞ்சுபோய் பார்க்கை காலி பண்ணிட்டு எங்கயோ இல்லை போயிட்டாரு.(அந்த பூங்கா இப்போது அங்கில்லை)
“இப்படி ஒரு ஜோடியப்பார்த்த கண்ணால வேற காதலர்களைக் பார்க்கவேணாம்னுதான் போய்ட்டாரோ என்னமோ?”
“ரொம்பதான் நீ புத்திசாலி..போ! இப்போஎன்ன அவங்க பண்றது தப்பிலைன்னு சொல்ல வரியா?”
“இல்லீங்க.. அது தப்பு ரைட்டுன்னு சொல்ல நம்ம யாருங்க..”
“என்னத்த சொல்றே? பல நாட்கள் லோவ்வோ லவ்வுன்னு சுத்திட்டு அந்த ராஸ்கல் இப்படி அவளை பிழியப்பிழிய இல்லே அழவிடுறான். நீ வேணா நாளைக்குப் பாரு. காதல் தோல்வியினால் பெண் அமீர்பெட்டில் தற்கொலை.கைவிட்ட வாலிபன் தலைமறைவுன்னு பேப்பர்ல வரப் போகுது பாரு..”
”அந்த திருவாங்கூர் ராஜா பார்க் அங்கிருந்தா யாருக்கு அசௌகரியம்? அதப் போய் மூடிட்டாங்களே?”
“உம்....நாளைக்கு கலைஞரைக் கேட்டு சொல்றேன்.
அந்தப் பையனை நாலு மொத்துமொத்தணும் போல இருக்கு. அயோக்கியன்.. அந்தப் பொண்ணு இனிமே அவ்ளோ தான்!”
குமைந்து கொண்டே நடந்தேன்.
போனவழியே திரும்பி வந்தோம். அந்த ஜோடி நின்றிருந்த இடத்தைப் பார்த்தேன்..அவர்கள் இல்லை. பக்கென்றிருந்தது.
“அவங்களைக் காணோம்” என்றேன் ஈனஸ்வரமாய்.
“இன்னும் அவங்களை விடல்லையா?”
மௌனமானேன். யார் பெற்ற பெண்ணோ?
அட என்ன அது?
இடப்பக்கம் இருந்த ஐஸ் கிரீம் பார்லரில் அதே ஜோடி.
ரோடு பார்த்தக் கண்ணாடிசுவர் அருகே நெருக்கமாய் அமர்ந்த படி.. அந்த தெலுங்கு தனுஷுக்கு அவள் ஐஸ்கிரீம் ஊட்டிக் கொண்டிருந்தாள். அவன் வாயெல்லாம் பல்லாக இளித்தபடி...
இவளிடம் அந்தக் காட்சியை காட்டவேண்டி திரும்பினேன்.
தனக்குள் சிரித்தபடி பின்னால் வந்து கொண்டிருந்தாள் . திருவாங்கூர் மகாராஜா மேட்டராய்த்தான் இருக்க வேண்டும். அவளைக் கலைக்க மனசில்லை.
வேண்டாம். என்னை முட்டாளாய் அடித்த இவர்களை அவள் பார்க்க வேண்டாம்.
இத்தனை நேரம் நான் செய்த அமளிதுமளிக்கு, இந்த சல்லாபத்தை மட்டும் இவள் பார்த்தால்,என்னைக் கொன்டேயில்லே போட்டுடுவா ?
75 comments:
Dear Mohanji. One Thing is clear!........................என்னாவா?? உங்க வயசு!
நான் எண்பதுகளில் சென்னை வந்தபோது கும்பகோணம் செல்லும் பொருட்டு பாரீஸ்சில் இருந்த திருவள்ளுவர் பஸ் ஸ்டான்ட் க்கு வரவேண்டியிருக்கும். அப்போதெல்லாம் அந்த திருவாங்கூர் மகராஜா சிலை நின்ற அந்த பார்க் எனக்கு அறிமுகம். இல்லை பரிதாபம். ஐயோ பாவம் என்ற நிலையில் தான் இருக்கும். ( உண்மையை சொல்லி உங்களை வருத்த விரும்ப வில்லை) அதை விடுங்க.
உங்க பெட்டர் ஹால்ப் உங்களை விட புத்திசாலி என்பதை இதன் மூலம் தெரிய வைத்தீர்கள். :)))
just kidding! carry on!!
கடைசியிலே புரைதிர்ந்த நன்மையாக ஒரு கள்ளத்தனம் பண்ணிங்களே அங்கதான் நாம் மிசையை முறுக்கிட்டே நிக்கிறோம் ..அவசர அவசரமா ஒட்டிய மண்ணை தொடைத்தபடி...
பெண்புத்தி பின் புத்தி சொல்றது ரொம்ப தப்புன்னு நம் வாழ்க்கையில நிறைய பார்க்கிறோம்... நாம ரொம்ப அலட்டிகிற விஷயம் அவங்க பார்வையில் ஒன்னுமில்லாத விஷயமாகி அது ஒன்னுமில்லாமல் போய்விடுகிறது...
ஆர்.வி.எஸ்...பீச் ரிப்போர்ட்டிங் மாதிரி நீங்க பார்க்கிங் ரிப்போர்ட்டிங்.ஜாமயுங்க... நான் இங்க வசமா ஒட்டகத்தை மேய்ச்சுட்டிருக்கேன்...
வாங்க கக்கு சார்! ஒரு புத்திசாலிக் கணவன், மனைவி தன்னைவிட புத்திசாலி என்ற நினைப்பை அவளுக்கு தரவேணும்னு சொல்வாங்க! உங்கள் குறும்பை ரசித்தேன்.
AGE IS AN ISSUE OF MIND OVER MATTER.
IF YOU DON'T MIND,IT DOES'NT MATTER.
s sweet love story....
//அங்கதான் நாம் மிசையை முறுக்கிட்டே நிக்கிறோம் ..அவசர அவசரமா ஒட்டிய மண்ணை தொடைத்தபடி...//
ரசிகமணியே! அழகாய்ச் சொன்னீர்! ஆணின் பரபரப்பு பெரும்பாலும் ஆரவாரமே.
உங்களை எப்போது சந்திப்பேன் என்று தெரியவில்லை பத்மநாபன்! அந்த நாள் நம்மிருவருக்கும் மறக்கமுடியாத நாளாயிருக்கும்.
நன்றி சித்ரா! உங்கள் பதிவை எண்ணி இப்போது தான் சிரித்துக் கொண்டிருந்தேன்!
//AGE IS AN ISSUE OF MIND OVER MATTER.
IF YOU DON'T MIND,IT DOES'NT MATTER.//
Certainly, Mohanji, I never mind it as you wish1!
:))))))
எதிர்பார்த்த முடிவு, மோகன்ஜி.
ஹைதராபாக்கத்துல 'டைம்பாஸ்'னு சொல்லி வேர்கடலை விப்பாங்களே? இப்ப அசல் தெலுகுலோ விக்கறாங்களா?
ரசமாச் சொன்னாரு... பத்மநாபனை நானும் சந்திக்கணும்.
ஆமாம்.. சென்னைல திருவாங்கூர் மகாராஜா பூங்காவா? கேள்விப்பட்டதே இல்லையே? அதெல்லாம் RVS காலத்துப் பூங்காவோ என்னவோ?!
சமாதானமானாலும் சம்பேஸ்தா கொஞ்சம் சரிகாதண்டி.
// “வில் யூ மைன்ட் யுவர் லாங்குவேஜ்?” என்மனைவி ஆங்கிலத்துக்கு மாறினால், என்னை ரெண்டில் ஒன்று பார்க்க தயாராகிட்டாள்னு அர்த்தம். //
நீங்க ரொம்ப பாவம்...
ஃஃஃஃஃஃ“இவ்வளவு இலக்கியம் பேசுறீங்க.. அலமாரி.. பொட்டி...எதைத் தொட்டாலும் கவிதை கொட்டுது. நீங்க இதே வேலையாத்தானே அந்த நாள்ல...”ஃஃஃஃஃ
தமிழை மட்டும் தான் காதலிச்சிங்களா ?
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)
//'டைம்பாஸ்'னு சொல்லி வேர்கடலை விப்பாங்களே?//
காலம் மாறித்தான் போச்சு அப்பாஜி! இப்பல்லாம் டைம்பாஸ் என்றால் .....
குழந்தைகளுக்கு டீ.வீ!
சிறுவர்களுக்கு கம்பியூட்டர் கேம்ஸ், இளைஞர்களுக்கு காதல்,
நடுவயசுக்கு பாலிடிக்ஸ்,
மாமிகளுக்கு சீரியல்,
சாமிகளுக்கு சல்லாபம்,
அப்புறம் அப்புறம்
வயசானவங்களுக்கு ப்ளாக்!
சரிதானே!(நான் கம்பியூட்டர் கேம்ஸ் கட்சியாக்கும்!)
அப்பாஜி!காதல் என்றாலே ஒருவரை ஒருவர் அன்பாலோ,இல்லை ஆளுமையாலோ "சம்புவது" தானே!
பிரபா! என்ன செய்யுறது..அப்பல்லாம் நான் பாட்டுக்கு செவேனேன்னு கவிதைத்தானே எழுதிகிட்டிருந்தேன்! என்னய பாத்து,துரத்தி துரத்தி..
சரி விடுங்க!
தம்பி ம.தி.சுதா!
//தமிழை மட்டும் தான் காதலிச்சிங்களா ?//
அழகாக் கேட்டீங்க!
இந்த ஒருகாதல் தான் தீராக்காதல்..
தமிழைக் கேட்கும்தொரும் களிகொள்ளும் மனசு..
ஒரு நாள் தவிர்த்தாலும் வியர்த்துப் போகும் உசுரு !
'ழ'கரத் தோகைசுற்றி முத்தமிடும் தருணம்...
இதர பிணைப்புகள் பின்னேறும்..
தமிழோன்றே வாழ்வு! தமிழோன்றே மூச்சு!
ரெண்டு நாளா ரொம்ப வேலை.. இப்பக்கூட வேர்த்து ஊத்துது..
இப்ப வந்து ஒரு எட்டு எட்டிப்பார்த்தா ஒரு 2011 - எ லவ் ஸ்டோரி ஓடிக்கிட்டு இருக்கு. நான் அந்த தெலுங்கு தனுஷை சொல்லலை.. ஆங்கிலத்தில் தாவி ரவுண்டு கட்டிய மாமியையும் அடங்கின மாமாவையும் பற்றிச் சொன்னேன்.
உங்களுக்கானும் உங்க மனைவி மட்டும் தான் எனக்கு என்னோட ரெண்டு பொண்ணுங்களும் சேர்ந்து இங்கிலிபீச்சுல ஆரம்பிச்சு பிலுபிலுன்னு ஒரு பிடி பிச்சுடறாங்க.. நானோ ஒரு கிராமத்தான்... வீட்டுக்கு அடங்கின பிள்ளை.. கொஞ்சமா சிரிச்சு அக்னாலெட்ஜ் பண்ணிடுவேன்.. இல்லைனா காதுல ப்ளட் வரும்...
பத்துஜி... நானும் அண்ணாவும் பாலைவனத்தில் இருக்கும் உங்களை பார்க் பீச்சுன்னு கூட்டிகிட்டு போறோம்.. ;-)
அப்பாஜி! என்கூட பார்க்குக்கு வரதுக்கு யார் இருக்கா? எனக்கு தெல்லேது... ;-)
சின்னப் புள்ளைங்க அடிச்சுக்கும். சேர்ந்துக்கும்.சமரசத்துக்குப் போன நம்மை இளிச்சவாயர்களாக்கிவிடும்.என் பசங்களுக்குள் நடக்கிற அதேதான் அங்கேயும்.
உங்க வைஃப் சொன்னாப்ல அப்டி ஈஸியா விட்டுட்டுப் போறதாயிருந்தா எப்பிடி இப்பிடிக் கதை-கவிதையெல்லாம் எழுதமுடியுமாம்?
இல்லையா மோஹன்ஜி?
நல்ல கதை... உங்கள் காதலையும் கலந்து ரசிக்க வச்சிட்டீங்க.
அட, 'நாளைக்கு சினிமா போக முடியாது, அந்த க்ரீன் சுடிதார் உனக்கு நல்லா இல்லை' என்று சொல்லும் அற்ப காரணத்துக்கே பெண்கள் பிழிய பிழிய அழுதுவிடுவார்கள். அதுக்குப் போய் நீங்க கற்பனைக் குதிரையைக் கோவமாகத் தட்டிவிடறீங்களே. ரொம்ப இளகிய மனசு உங்களுக்கு.
பதிவு படிக்க மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது.
முதலிலேயே அந்தப் பொண்ணு ஐஸ் கிரீம் (ஐஸ் ஃபுரூட்) வாங்கித்தான்னு தான் அடம் பிடித்து அழுதிருக்குமோ என்னவோ !
நீயே ஐஸ் க்ரீம் போல ஜில்லுன்னு இருக்கும் போது, ஐஸ் கிரீம் எதுக்கு தனியாக வேறு வாங்கணும்; ஜலதோஷம் பிடிக்கும் - உனக்கு உடம்புக்கு ஆகாதுன்னு அவன் ஏதேதோ சொல்லி தட்டிக் கழிக்கப் பார்த்திருப்பான்.
பிறகு அவள் அழுது அடம்பிடிக்க, ஒரு வழியாக வாங்கித் தந்ததும், மகிழ்ச்சியில் (அவன் செலவில்) அவனுக்கே ஊட்டி விட்டுக் கொண்டிருப்பாள் போலிருக்கு !
அதற்குள் நீங்க அவனைக் குற்றவாளியாக்கி, அவள் மேல் மட்டும் அப்படியே ஐஸ் போல உருகி, அகத்துக்காரியிடம் வேறு பாட்டு வாங்கி, அதையே எங்களுக்கு ஒரு பதிவாக்கிக் கொடுத்து விட்டீர்கள்.
மொத்தத்தில் எல்லோருக்குமே அல்வா கொடுத்துவிட்டாள் பாருங்கள் அந்தப் பெண் !.
நானும் ஒரு பதினைந்து நாட்கள் உங்கள் ஹைதராபாத்தில் தங்கி நண்பர்களுடன் எங்கெல்லாமோ சுற்றி வந்தேன். இது மாதிரி கடலை போடும் ஜோடிகள் என் கண்களில் படவில்லையே !
எல்லாவற்றிற்கும் ஒரு கொடுப்பினையும், கூரிய தொலை நோக்குப் பார்வையும் வேண்டுமோ?
நல்ல வேளை, நீங்கள் அவர்கள் பிரச்சனையில் தலையிடவில்லை, அப்படி செய்திருந்தால், “இதி மன Problem [இதுக்கு தெலுகு மறந்து போச்சு!] மீரு எந்துக்கு ஒஸ்தாரு?” என்று கேட்டு அந்தப் பெண்ணே உங்களை “சம்பேஸ்தானு” என்று திட்டி இருக்கும்!!!
காதலில் ஊடலும் பின் கூடலும் சகஜம்தானே.. பெண்களுக்கு இது நல்லாத் தெரியும் (சண்டை போட்ரதுலா பெரிய ஆளுங்க) . நமக்குதான் தெரியாம பல்ப் வாங்குவோம்
ரொம்ப சுவாரசியமா இருந்தது..
வாங்க ஆர்.வீ.எஸ்! சேம் ப்ளட் ! கவலைப்படாதீங்க!
சம்சாரத்துல இதெல்லாம் சகஜமப்பா ! நம்ம மக்கள் தானே? நல்லா திட்டட்டும். எவ புருஷனோ பாஸ் என்கிறா ஹோதாவில் பேரேட் எடுக்கிறப்போ புத்தர் கணக்கா நிக்கல்லியா?
ஏன் தங்கச்சி.... மாப்பிளைய ரெண்டு கண்ணமட்டும் விட்டுட்டு தோலை உரிம்மா. அந்த ரெண்டுக் கண்ணுதானே அலையுதுங்கிறயாம்மா? என்ன செய்யுறது.. தலைய குடுத்துட்டமே!
சரி மாப்பிள்ள! அடுத்தமுறை பத்மநாபன் இந்தியா வரும் போது ஊரைச் சுத்திக் காட்டுவோம். வண்டலூர் ஜூவுக்கு கூட்டிகிட்டு போய் ஒட்டகமெல்லாம் பாக்கச்செய்வோம் .
சுந்தர்ஜி! ஏங்க நம்ப மட்டும் இப்படி இருக்கோம்? எதையும் அதீதமா யோசிக்கிறோம்.. இந்த மிகை இலக்கியத்துக்கு அழகு.. ஆனால் வாழ்க்கையில்?
ஓ!அதை சமன்படுத்தத்தான் குடும்பம் இருக்கிறதே.. தலை மேகம்தாண்டி நீண்டாலும்,கால்கள் தரையில் பதியக் காரணம் ஒரு நல்துணையே அல்லவா?
போகட்டும் சுந்தர்ஜி! இப்படியே இருப்போம் ! இதுதான் நமக்கு சௌகரியம்..
நன்றி குமார்.நன்றி!
ஹைதராபாக்க நாட்களில் வேர்க்கடலை வாங்க வேண்டுமென்றால் 'எட்டணாவுக்கு டைம்பாஸ் கொடுப்பா' என்று கேட்டு வாங்க வேண்டும். பல்லி என்று சில இடங்களில் விற்றாலும், பஸ் ஸ்டேன்ட், டேங்க்பன்ட், சார்மினார், ட்ரெயின் ஸ்டேசன்களில் எல்லாம் டைம்பாஸ் என்று தான் விற்பார்கள். முதல் முறை ஹை வந்த நண்பன் நேன்சி 'இவன் என்னடா? கூடையை எடுத்துட்டு டைம்பாஸ்னு சொல்லிட்டுப் போறானே?' என்று நிர்மல் போகும் பேருந்தில் ஆடு கோழியுடன் உட்கார்ந்து புலம்பிய நாட்கள் நினைவுக்கு வந்தது - வேர்க்கடலை பற்றிப் படித்ததும். அந்த டொக்கு பஸ்சில் நிறைய பார்த்திருக்கிறோம். ஒரு முறை சார்மினாரில் நல்ல வெயில் நாள் மதியம்
வாங்க கீதா மேடம்! கொன்னுடுவேன்னு அவன்சொல்ல, கண்ணீரும் கம்பலையுமா அந்தப் பெண் நின்னபோது,விபரீதமாத்தான் நினைக்கத் தோணினது.
என் தாய் அழுது பார்த்ததில்லை.எனக்கொரு பெண் குழந்தை இருந்து அப்பப்ப அழுதிருந்தாலும் எனக்கு விளங்கியிருக்கும். என் மனைவிக்கோ சிரிக்கவே நேரம் போதவில்லை...
"அழுகாச்சிக்கு ஆயிரம் அர்த்தங்கள்".. நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா!
வை.கோ சார்! எப்பிடி சார் இப்படி பிரிச்சு மேயறீங்க? அருமையா சொன்னீர்கள். ஹைதராபாத் வந்து ஜோடிங்களைப் பாக்கலியேன்னு வருத்தப்படுறீங்க. அடுத்த முறை வாங்க.. காதல் கரைபுரண்டு ஓடுறத காட்டுறேன்.
ஒரு காதலன் உன்னைக் கைப்பிடிக்க நரகத்தில்கூட உழலுவேன் என்று காதலியிடம் சத்தியம் செய்தான்.
கடவுள் சிரித்தார்.
அவனுக்கு அவளோடு கல்யாணம் நடந்தது.....
வாங்க வெ.நா! நல்லவேளை... நடுவுல நான் மத்தியஸ்தத்துக்கு போகவில்லையோ பொழச்செனோ!
எல்.கே!
/(சண்டை போட்ரதுல பெரிய ஆளுங்க)/அடடா என் தங்கை இதைப் பார்க்க மாட்டாள் என்ற தைரியத்தில் தான் எழுதினீர்களா?
'நம்மத்தான் பல்பு வாங்குவோம்'.. இதை நாங்க ரொம்ப ரசித்தோம்!
உங்கள் ரசிப்புக்கு நன்றி ரிஷபன் சார்!
அப்பாதுரை சார்! டைம்பாஸ் இன்னும் இங்கே புழக்கத்தில் இருக்கு. அடடா..சார்மினார்லயா பாத்தீங்க? நாளைக்கே போறேன்.
போய் அவங்களை சம்பேஸ்த்தா!
அவுங்களுக்கு தெரியும் அழுகையில எத்தனை வகை, எது அசலு, எது நகலுன்னு.
"பாருங்க உங்க மோகன் அண்ணா இது வரைக்கும் ஒரு காதல் கவிதையாவது வெளியிட்டுருப்பாரா? நீங்களும்தான் இருக்கீங்களே. நீங்க மட்டும் தான் என்னவோ கட்டிக்கப் போறவளுக்கு கவிதை எழுதின மாதிரி எல்லாத்தையும் வெக்கங்கெட்டுப் போயி--- பப்ளிஷ் பண்ணிக்கிட்டு "
---- அண்ணா காப்பாத்துங்க
“வில் யூ மைன்ட் யுவர் லாங்குவேஜ்?” என்மனைவியும் இப்படித் தான்ஆங்கிலத்துக்கு
மாறினால்,தினத் தந்தி ஞாயிறு பதிப்பை ஷர்ட் பாக்கெட் டில் போட்டதைப் போல் மடிந்து விடுவேன்!
(..’மடிந்து’தமிழ் தான் என்னமாய் விளையாடுகிறது
நம் வலைப் பூக்களில்)
வர..வர..உங்கள் வலைப்பூவில் எழுதுவதை விட அந்த விமரசனங்களும், அதற்கான உங்களின் எதிர் பதில்களும் சூப்பர்...உதாரணம்...”தலை மேகம்தாண்டி நீண்டாலும்,கால்கள் தரையில் பதிய காரணம் ஒரு
நல்துணையே அல்லவா?”
I REALLY ENJOYED!!!!!
1957ல் நானும் ஹைதிராபாத்தில் தான் இருந்தென்யா! டாங்க் பெண்டு,அசெம்பிளி ஹால், செகந்திராபத் ஸ்டெஷன்,காளிகொவில்,விகடன் விக்கற மேனன் கடை ம்ம்...முக்காத்துட்டுக்கு பிரயோஜன்மில்லாத இடங்கள்--செகரட்டெரியட்டே கட்டாத காலம்...குடுத்து வைச்சவங்க...நல்லா இருங்கப்பா---காஸ்யபன்.
பிரிய சிவா! ஆண்களுக்கு சிரிப்பில் அசலும் நகலும் புரியும்:பெண்களுக்கு அழுகையில் அசல் நகல் வகைகள் இனம்தெரியும் என்று கொள்ளலாமா? ஒரு நல்ல விவாதமாய் காணப படுகிறதே?
சிவா!என் காதல் கவிதையெல்லாம் நான் பதிக்கணும்: மொத்து வாங்குறதை நீ அழகு பாக்கணும் உனக்கு... அவ்வளவு தானே?
போட்டுருவோம் சிவா..
என் காதல் கவிதைகளில் சில உட்பிரிவுகள் இருக்குன்னு தோணுது ..
-முகம் தெரியாத ,என் ஆதர்சக் காதலிக்கு வாலிபத்தின் வனப்பில், வானவில்லின் முதுகில் அமர்ந்து எழுதியவை.
- இந்த மூஞ்சிதான் நமக்கு என்று தெரிந்தபின் சலிக்க சலிக்க எழுதியவை.
- முகங்களின் அழகு முகிழ்த்தும் காதலில் எழுதியவை.
பின்னோக்கிப் பார்க்கும்போது பாடுபொருளின் மேல் இருந்த காதலைவிட.. பாட்டுறைத்த தமிழ்மேல் தான் காதல் பீறிட்டிருக்கிறது என்று உணர்கிறேன்..
மூவார் முத்தே! வீட்டுக்குவீடு வாசப்படி! நல்லா வந்தானய்யா இங்க்லீஷ் கம்மனாட்டி நம்ம நாட்டுக்கு...
'மடி'யறதை மக்கள் உபயோகிக்கும் விதம் எனக்கும் சுவாரஸ்யமான நோக்கலே !' மடியும் மட்டைகள்' என்ற தலைப்பை இப்போதே என் மைத்துனர் ஆர்.வீ.எஸ்க்கு வழங்கி, உடனே ஒரு பதிவு போட வேண்டும் என என் தங்கையின் முத்திரையுடன் ஆணையிடுகிறேன்!
மீண்டும் முத்தா! சரி!
/உங்கள் வலைப்பூவில் எழுதுவதை விட அந்த விமரசனங்களும், அதற்கான உங்களின் எதிர் பதில்களும் சூப்பர்.../
நன்றி நண்பரே! என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதிலுரைப்பதை ஒரு மரியாதையாய்க் கொண்டேன். அவற்றில் மனதில் தோன்றும் கருத்துக்களை, சில கவிதைகளை வெளியிடுவதும், என் அன்பு நண்பர்களின் கும்மிக் கோலாகலமும் ஒரு பாணியாகிப் போனது. பல பதிவுகளில், பதிவைவிட பின்னூட்டங்கள் அதிக ரசனையுடன் அமைகிறது.
பதிவுப் பட்டம் பறப்பதே, நீளமாய் பின்னூட்ட வால் இருப்பதால் தானே?
காஷ்யபன் சார்.. நீங்கள் பார்த்த ஹைதராபாத் என்றோ முகம்மாறி விட்டது. சந்திரபாபு நாயுடு காலத்திலேயே இந்த நகரம் சிங்கப்பூர் போல் மாறிவிட்டது. அத்துணை ஐ.டீ.கம்பனிகளும் இங்கே முகாம் போட்டபின் இந்நகரத்தின் கலாச்சாரம் கூட வேறாகத் தெரிகிறது.
ஏனைய நகரங்களைவிட இங்கு மாற்றம் வெகு வேகம்..
எனக்கென்னவோ கூவத்து வாசனை அவ்வப்போது வேண்டி இருக்கிறது.
கெட்டும் (சென்னைப்)பட்டணம் சேர்!
மிகவும் அருமை மோகன்ஜி! வாழ்கையில் இயல்பாக எதிர்ப்படும் சிறு விஷயங்களை கூட மிகவும் அழகாக, நகைசுவை கலந்து எழுதுகிறீர்கள். அன்றாடம் நம்மை சுற்றி நடக்கும் சிறு சிறு விஷயங்களை கவனித்து, ரசித்தாலே வாழ்வு மிகவும் சுவாரசியமாக இருக்கும். நான் இந்த ரகம்தான், ஆனால் எனக்கு உங்களை போல் இவ்வளவு அழகாக எழுத இயலாது.
அவர்கள் காதலுக்குள் உங்கள் காதல் இன்னும் இளமையாய்........... அருமை!
//என் மனைவிக்கோ சிரிக்கவே நேரம் போதவில்லை// இந்த ஒற்றை வரியில் அழகாய் சொல்லிவிடீர்கள் உங்கள் தாம்பத்ய வாழ்வின் இனிமையை.
தொடரட்டும் இது இறுதிவரை! வாழ்த்துக்கள்!
பதிவும், பின்னூட்டங்களும் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.
//பதிவு பட்டம் பறப்பதே, நீளமாய் பின்னூட்ட வால் இருப்பதால் தானே// சூப்பர்! :)
//பின்னோக்கிப் பார்க்கும்போது பாடுபொருளின் மேல் இருந்த காதலைவிட.. பாட்டுறைத்த தமிழ்மேல் தான் காதல் பீறிட்டிருக்கிறது என்று உணர்கிறேன்.. //
அண்ணா.. பாட்டுடைத்தலைவி யார்? ;-) ;-)
இரண்டு காதல் கதைகளை ரசித்தேன்!
வணக்கம் மீனாக்ஷி மேடம்! உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.வாழ்க்கையின் சுவாரஸ்யமே சின்னசின்ன விஷயங்களில்தானே இருக்கிறது. உலகத்தில் ரசனையை விட பெரியது ஒன்றும் இல்லை. ரசானுபவத்தின் நேரத்தில் ஒருபகுதியை செலவிட்டே ஒரு படைப்பாளி படைப்பதால்,ரசிகனை விட ஒருபடி குறைந்தவனேயாகிறான். என் கணிப்பு சரிதானா மேடம்?
என் பாட்டுடைத் தலைவியா? ' 'பட்டுடை'தலைவிகளையும் சிற்றாடைத்தலைவிகளையுமா பாடுவேன்?
யாரைப் பாடினேன்? மறந்துபோச்சே..
பரணை ஏறச்சொல்றீங்க..
தங்கள் சித்தம் அடியவன் பாக்கியம்.
வாங்க ஆதி மேடம்..இரண்டு காதல் கதைகள்... நயமாகச் சொன்னீங்க. கதைக்குள் எப்படியோ என் கதையும் இல்ல எட்டிப் பாக்குது?
\\என் காதல் கவிதைகளில் சில உட்பிரிவுகள் இருக்குன்னு தோணுது .///
அடடா
அப்படியே என்னைப்போல... சே சே அண்ணாவைப் போல நானும்
மோகன்ஜி இப்பல்லாம் மாமாவுக்கு தான் மரியாதை. பிரித்து வைத்து என்ன பிரயோசனம் !!
அதுக்குத்தான் நான் அழும் பெண்களை ஆதரவாய் பேசி அசத்தனும்னு சொல்லுவேன் !!!
உங்கள் வாழ்கையை அழகாய் சொல்லிவிட்டீர்கள். அழகு அழகு.
என் தம்பி என்னைப் போல் தானே இருக்க முடியும்?
பிரிய வேதாந்த்! முதல் வருகை இது என் நினைக்கிறேன்.உங்கள் கோணம் வேறாக,ஆனாலும் நன்றாக இருக்கிறதே! உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி வேதாந்த்.
சாவகாசமாய் உங்கள் வலைப்பூவை மேய்கிறேன்.
//அடடா என் தங்கை இதைப் பார்க்க மாட்டாள் என்ற தைரியத்தில் தான் எழுதினீர்களா?///
அவங்க பதிவு எழுதறப்ப மட்டும்தான் எட்டிப் பார்ப்பாங்க .மத்த சமயத்தில் வரமாட்டாங்க
ஐயோ மோகன்ஜி
என் மகனுக்கு வாங்கி கொடுத்துள்ள லேப்டாப்பில் அவன் Google கணக்கில் "Stay Signed On" என்று போட்டு இருக்கவேண்டும். நான் இட்ட கருத்துரை அவன் பெயரில் வந்துவிட்டது
மன்னிக்கவும் அதனால் அவன் பெயரில் வந்து விட்டது - நீங்களும் அவன் ப்ளாக் அதனால் கண்டுள்ளீர்கள். அவன் இரண்டு மாதங்களாக தான் தமிழ் கற்றுக்கொள்கிறான். அவனாவது தமிழில் டைப் செய்வதாவது. அவன் தமிழில் கேள்வி கேட்டாலே பீட்டர் கணக்கில் ஆங்கிலத்தில் அள்ளி விசுவான் !!
அது சரி, உங்கள் பெண்டாட்டி எப்போதும் உங்களை கண்டு சிரித்துக்கொண்டு இருக்கின்றார்களா ?
என்னை போல் உங்களையும் உலகம் விசுறு என்று சொல்லபோகின்றது - ஜாக்கிரதை !!
உங்கள் அம்மா அழுததே இல்லை என்று சொல்லும்போது உங்கள் அப்பாவை காண விழைகின்றது. அருமையான தாம்பத்தியம் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டீர்கள்.
\\\ தலை மேகம்தாண்டி நீண்டாலும்,கால்கள் தரையில் பதியக் காரணம் ஒரு நல்துணையே அல்லவா?///
ரசித்தேன்.
எங்கே மேல போகவிடுறாங்க. காலை பிடிச்சுக்கிட்டு தொங்கிக்கிட்டே இருந்தா எப்படி பறக்கிறதாம்? டவுசரு கழண்டு போகுதுல்ல ?
தரையில் பதியக் காரணம்...
இந்தியத் தவளைப் பத்தி ஒரு குட்டிக் கதை உண்டு.
எல்.கே! உங்க பதிவுகளுக்கு சென்சார் இருக்கு! ஆர்.வீ.எஸ் க்கும் சென்சார் போர்ட் இன்சார்ஜை முடுக்கி விடனுமோ?!
அன்புள்ள சாய்! உங்களைக் காணவில்லையே என்று குறையாக இருந்தது. பிள்ளை ப்ளாகில் வந்து விட்டீரகள். நல்லது. சுற்றி இருப்பவர்களை இயன்றவரை மகிழ்ச்சியாக வைக்க ஒரு சின்ன விசாரிப்போ,ஒரு புன்னகையோ கூடப் போதும்.மனதில் ஆங்காரமும் வன்மமும் கொள்ளும் போதெல்லாம் அது பிறரை மட்டுமல்ல நம்மையும் சேர்த்தே பாதிக்கிறது.
அன்னை தெரசாவின் அன்பு வார்த்தைகளைக் கேளுங்கள்.
இந்த சின்ன வாழ்க்கையுள் சுற்றியுள்ளவர்களை வெறுப்பதில் நேரத்தை செலவிடாதீர்கள். பிறகு அவர்களை நேசிக்க நேரமில்லாமல் போய் விடுமல்லவா?
சிவா!வரவர ஆர்.வீ.எஸ் போல குறும்பு ஜாஸ்தியாத்தான் போச்சு உனக்கு!
அப்பாஜி! தவளைக்கதையா? எக்குத்தப்பாக அல்லவா அது தாவும்?
மோகண்ணா...பாவம் நீங்களா அண்ணியான்னு தெரில.கவிதை சொல்லியே அண்ணியைக் கவுத்திருக்கீங்க.அதுமட்டும் தெரியுது.அதான் அண்ணிக்கு இவ்ளோ காதல் உங்க மேல !
அண்ணா கண்டபடி றோட்ல நடக்கிற சமாச்சாரத்துக்கெல்லாம் மூக்கு நுழைக்கதீங்க.
நல்ல வேளை தப்பிட்டீங்க அண்ணைக்கு.இரண்டு பேருமா சேர்ந்து சாத்துப்படி வச்சிருப்பாங்க !
//இந்த சின்ன வாழ்க்கையுள் சுற்றியுள்ளவர்களை வெறுப்பதில் நேரத்தை செலவிடாதீர்கள். பிறகு அவர்களை நேசிக்க நேரமில்லாமல் போய் விடுமல்லவா//அன்னையின் அழகு மிக்க வாசகம். எடுத்துப் போட்டதற்கு மிக்க நன்றி மோகன்ஜி
A cool Ice cream with sweet Love story.
நேசிக்க மட்டுமல்ல... யோசிக்கக்கூட நேரமில்லாமல் போய்விடும். மற்றவர்களை குற்றம் சாட்டும் நோய் தொற்றிக்கொள்ளும்.அருமையான பதிவு.
அன்பின் மோஹன்,
கீர்த்தனாஞ்சலி ப்லாக்கில் “ காளிங்கன் கர்வ பங்கம்” என்று எழுதி இருக்கிறேன்.நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். உங்கள் பதிலுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்.
http://keerthananjali.blogspot.com/search?updated-max=2010-11-11T06:50:00-08:00&max-results=7
அன்புள்ள ஹேமா! உன் கருத்துக்காய் காத்திருந்து சோர்ந்து போயிட்டேன். ஒருவழியா வந்தாச்சு!
//நல்ல வேளை தப்பிட்டீங்க அண்ணைக்கு.இரண்டு பேருமா சேர்ந்து சாத்துப்படி வச்சிருப்பாங்க !//
உன் 'சாத்துப்படி'யை படித்துவிட்டு ரொம்ப நேரமா சிரிச்சுகிட்டிருக்கேன்.
அன்புள்ள இராஜராஜேஸ்வரி!
இன்னிக்கு வீட்டுல சமைச்சீங்களா! பொறுமையாய் என் பதிவுகளில் பலவற்றை வெகுநேரம் படித்து பொறுமையாய் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள். அதுவும் முதல் வருகையிலேயே...
உங்கள் ரசனைக்கும் அன்புக்கும் நன்றி. அடிக்கடி வாருங்கள். மனம்மகிழ மருந்திருக்குதிங்கே!
நன்றி பத்மநாபன்! அன்னை தெரசாவின் இந்த ஒரு மொழியை படித்தமுதல் அவர்களை திவீரமாய்த் தேட ஆரம்பித்தேன்..
மேலாலர்களுக்கான மேலாண்மை வகுப்புகளில் நான் அடிக்கடி சொல்வது..
சுஷ்மிதா சென் ஒரே வருடம் உலக அழகி!
ஐஸ்வர்யா ராய் ஒரு வருடம் உலக அழகி!
லாராதத்தா ஒரு வருடம் உலக அழகி!
அன்னை தெரசாவோ நிரந்தர அழகி!முகத்தில் அன்பை மட்டுமே பூசிக்கொண்டு,கருணைக் கண்களால் மனப்புண் ஆற்றும் நிரந்தர அழகி!
இந்தக் கருத்தும் யாரோ சொன்னது தான்! சத்தியமான வார்த்தைகள்.
'குறட்டைப் புலி'அவர்களே! உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்கள் வலைப்பக்கங்கள் நன்றாய் உள்ளன. அடிக்கடி சந்திப்போம்.
மோகன்ஜி, அது எப்படி பதிவு பார்த்துக் கொண்டிருந்த என்னை அப்படியே ஹைதராபாத்துக்கு ஹைஷாக் பண்ணி, கடைசில அந்தப் பெண் ஊட்ட, வழியற ஐஸ்கிரிம் + அசடு மூஞ்ச அப்படியே குளோசப்ல பார்க்க வைக்க முடிகிறது உங்கள் எழுத்தால்? திருவாங்கூர் மகாராஜா சிலையடியில் கற்ற பாடம் அப்படி!!!!
வாங்க வாசன் சார்! முதல் முறையா சந்திக்கிறோமோ?
உங்கள் பின்னூட்டம் மிக சுவாரஸ்யமானது. அடிக்கடி வாருங்கள். நன்றி!
கருத்துரையிடுக