என் கவிதையொன்று....
ஓர் பின்னிரவுப் பயணத்தில்
நெடுந்தொலைவுப் பேருந்தின்
பின்னிரவுப் பயணத்தில்,
சாலை பாவா ஓட்டத்தில்
சன்னலின் வழியாக
சல்லிக்கும் காற்றுவந்து
சேதி சொல்லும் – உன்னினைவும்
கற்பூர மணமாக
மனம் பரவும்.
காற்று வெளியினிலே
கவிதை யினம்தேடி
கண்ணும் அலைபாயும்
மேகப் பொதிகளிடை
மேவுநிலா வெளிவந்து
உந்தன்முகம் காட்டும்.
சாலையின் இருமருங்கும்
தலைதெறிக்க வருமரங்கள்
பார்வைக்குத் திரைவிரிக்கும்
உனையெண்ணி விகசிக்கும்
என்முகத்தை வெளிநீண்ட
புளியங்கிளைத் தட்டி
புவிக் கொணரும்.
மங்கிய வெளிச்சத்தில்
மறையும் பெயர்ப்பலகை
வரிசையில் உன்பெயரைக்
கண் தேடி மாயும்.
பேருந்தின் தாலாட்டில்
சீறிவரும் எதிர்க்காற்றும்
உன்னன்பின் பரவசம்போல்
மூச்சு முட்டும்.
சேருமிடம் வந்தபின்னர்
பேருந்து நின்றபின்னும்
விரைந்திடும் உள்ளம்மட்டும்
தீர்ந்திடாத கனவைத்தாங்கி
சோர்ந்து செல்லும்.
(பெங்களூர் 1979)
பட உதவி : Google Images
இன்னுமொரு கவிதை......
வாழ்க்கை
உலைபொங்கி கொதிவழிந்து
பொறுக்குச் சுவடுகள்
கோடிட்ட கலயம்....
‘பற்று’ நீங்கி பளபளக்கும் நேரம்,
பழைய கோலம் மறந்திருக்கும்.
மீண்டும் பொங்கி, பொறுக்குத்தட்டி
மீண்டும் துலங்கி, பொலிவு கூடி...
கலயம் தொடரும்,
அலுக்காத ஆட்டம்.....
உருண்டொரு நாள்
உடையும் வரை.
ஒரு கணக்கு
நம்மாளு ஞொய்யாந்ஜி ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பார்த்தாலும், சம்பள உயர்வையோ, பதவி உயர்வையோ தராமல் இருந்தது அவர் பணிபுரிந்த அலுவலகம். ஒரு நாள் அவர் மேலதிகாரியைப் பார்த்து இதுபற்றி பேசப் போனார்.
மேலதிகாரி : என்ன ஞொய்யாந்ஜி? இன்னா விஷயம்.?
ஞொய்யாந்ஜி : சார் ! நாலு வருஷமா சம்பள உயர்வோ,
பிரமோஷனோ இல்லாம இருக்கேன். உடனே
அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. சார்
மேலதிகாரி: எதுக்காக உனக்கு தர வேண்டும்?
ஞொய்யாந்ஜி: வேலை செஞ்சேன் சார்! வேலை..
மேலதிகாரி: எப்போ
செஞ்சே? நான் கேக்குறதுக்கெல்லாம்
பதில் சொல்லு .. ஒரு வருசத்துக்கு எத்தினி நாள்?
ஞொய்யாந்ஜி: 365
சார்!
மேலதிகாரி: ஒரு நாளின் 24 மணி நேரத்துல எவ்வளவு நேரம்
ஆபீஸ்ல
இருப்பே?
ஞொய்யாந்ஜி: 8 மணி நேரம் சார்!
மேலதிகாரி: அதாவது ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரம்
இங்கிருக்கே. அப்பிடின்னா ஒரு வருஷத்தின்
மூன்றிலொரு பங்கு 122 நாள் தான். சரியா?
ஞொய்யாந்ஜி: ஆமாம் சார்!
மேலதிகாரி: வாரத்துல லீவு எப்போ?
ஞொய்யாந்ஜி : சனி,ஞாயிறு ரெண்டு
நாள் சார்!
மேலதிகாரி: வருஷத்துல மொத்தம் எத்தனை சனி ,ஞாயிறு?
ஞொய்யாந்ஜி: உம்... 52 சனி 52 ஞாயிறு மொத்தம் 104 நாள்
மேலதிகாரி: அப்போ ஏற்கெனவே நான் சொன்ன 122 நாளில் 104ஐ
கழிச்சா
மீதி 18 நாள் தான்
ஞொய்யாந்ஜி: ஆமாம் சார்!
மேலதிகாரி: வருசத்துக்கு
எத்தினி நாள் கேஷவல் லீவு எடுப்பே?
ஞொய்யாந்ஜி :12 நாள் சார்
மேலதிகாரி: 18இல் 12 போன மீதி 6 நாள் தான். அதுவுமில்லாம
பொங்கல்,தீபாவளின்னு அரசு
விடுமுறை 10 நாள்
வேறு. அப்படின்னா வேலைநாள் எதுவுமே மீதி இல்லே.
எப்படி சம்பள உயர்வு, பிரமோஷன் உனக்கு தருவது?
ஞொய்யாந்ஜி: அதானே? உங்களை தொந்தரவு
பண்ணிட்டேன்.
ரொம்ப சாரி சார்! வரேன்..
சங்கப்பலகை வலைப்பூவின் பதிவர் திரு. அறிவன். அரசியல், இலக்கியம் பற்றி ஆராய்ச்சி அணுகுமுறையுடன் எழுதுகிறார். வானவில் மனிதனில் வந்த காமச்சேறு எனும் அருணகிரி நாதர் பற்றிய என் பதிவில், இவர் இட்ட பின்னூட்டங்கள் இவர் நோக்கின் கூர்மையைப் புலப்படுத்துகின்றன.இவர் அதிகம் எழுத வேண்டும் எனும் பேராவல் எனக்குண்டு.
வெங்கட் நாகராஜ் தலைநகரில் கால்பதித்த நற்றமிழன். எளிமையும், யதார்த்தமும் நிறைந்தது இவர் எழுத்து. இவரின் பார்வையின் வீச்சை உணர்ந்ததினால் சொல்வேன்.. இவர் ஒரு சிறந்த விமரிசகராய் பரிமானிக்க முடியும். களத்துல இறங்குங்க நண்பரே!
மனவிழி திரு சத்ரியன் அவர்களின் வலைப்பூ. கவிதைகள், நாட்டு நடப்பு என்று கொடி நாட்டும் பதிவுகள்.. கவிதைகள் சிக்கனமாய் ரசிக்கும் படி இருக்கின்றன. சட்டு புட்டுன்னு இந்த வலைப்பூவைப் பார்த்துடுங்க.
பா.ராகவன் பா.ராகவன் அவர்கள் அமுதசுரபி, கல்கி, குமுதம் போன்ற பல இதழ்களில் தடம் பதித்தவர். அவ்ர் அறிமுகம் பதிவே சுவையாக இருக்கிறது. நல்ல எழுத்தை பழக வேண்டுமெனில் இவ்வகை வலைப்பூக்கள் 'பாடத்திட்டம்' போன்றவை. கருத்தும் எழுத்தும் கலந்து காட்சியாய் மனத்துள் விரிவடையச செய்வது எளிதல்ல. எழுத்து முலாம் பூசும் வேலை அல்ல. அதற்கு பொன்னகை செய்யும் சூட்சமம் தேவை. இந்த தளத்தில் அது காணக் கிடைக்கின்றது.
அழியாச்சுடர்கள் இந்த வலைப்பூவை தொடங்கி நடத்தும் அன்பர்களுக்கு என் அனந்த கோடி நமஸ்காரம். இதை வலைப்பூ என்று சொல்ல மனம் வரவில்லை.. திராட்சைக் கொத்து?... தேன் கூடு? நவரத்தின ஹாரம்? காலத்தின் பொக்கிஷம்??.. சொல்லத்தெரியவில்லை. சிறந்த படைப்புகள் சிங்காரிக்கும் வலைமகுடம்.. சத்திரத்து விருந்துக்கு தாத்தையங்கார் சிபாரிசு எதற்கு.. அழியாச்ச்டர் அழைக்கிறது. அமிழ்ந்து முத்தெடுங்கள்....
18 comments:
கவிதைகள், கணக்கு ரெண்டுமே அருமை. பயணகாலத்தின் சுகங்களை ரசிக்க எனக்கும் பிடிக்கும்.
நன்றி ஸ்ரீராம்! பயணம் என்பது வரம். அண்மையில் என் அலுவலகம் தொலைவான இடத்திற்கு மாறியதால் காலையில் ஒன்றரை மணி நேரம் மாலையில் இரண்டு மணிநேரம் பயணத்திலேயே கழிந்து விடுகிறது.
வலைமேய்தல் குறைந்ததிற்கு இதுவும் ஒரு காரணம். ஆனாலும், இந்த நேரத்தை, நினைவுகளின் ஆழத்திலிருந்து என்றோ எங்கோ படித்தவற்றை ஆனந்தமாய் அசைபோட முடிகிறது .. நானே காரை ஓட்டாத நேரத்தில் கண்மூடி ஜபத்தில் அமிழ இயல்கிறது. பராக்கு பார்க்கும் நேரம் கதை மாந்தர்கள் கண்ணெதிரே அலைகிறார்கள்... கோணல் வாய், குருவி மூக்கு, சரிந்த வயிறு, சாகசக் கண்கள் என்று சலியாத அலசல்... ஐபாடில் அதிரும் ஸாக்ஸ்.. சுசீலா, ரஃபி,கண்டசாலா,டீ.எம்.எஸ்.. வேறென்ன வேண்டும் ஸ்ரீராம்?
கலா நேசன் சொன்னது
பின்னிரவுப் பயணக் கவிதை மிக அருமை. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி கலாநேசன்! அது பல வருடங்களுக்கு முந்தைய பயணம்... இன்னமும் முடியவில்லை
ரத்தின வேல் சொன்னது
அருமையான கவிதைகள்.
நல்ல நகைச்சுவை.
நல்ல அறிமுகங்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றி ரத்தினவேல் ஐயா!
பின்னிரவுக் கவிதை சூப்பர்ப். :-)
நன்றி ஆர்.வீ.எஸ்!
ஸ்ரீராம் சொன்னது
நாளை மற்றுமொரு நாளே என்று சொல்வதா...ஒரு நாள் கழிந்தது என்று சொல்வதா...ரெண்டாவது கவிதை பிரமாதம்.
அருமையான அறிமுகங்கள். வெங்கட் நாகராஜ் தவிர மற்ற தளங்கள் பார்த்துள்ளேன்.
காலவெளி கரைவதில்லை ஸ்ரீராம்.. நாம் தான் மெல்லமெல்ல கரைந்தபடி இருக்கிறோம்.. நீரில் அமிழும் சர்க்கரை பொம்மையாய்...
அருமையான கவிதை...
அருமையான நகைச்சுவை.
அருமையான அறிமுகங்கள்.
அருமை... அருமை... அருமை...
மிக்க நன்றி குமார்.
சத்ரியன் சொன்னது...
//கலயம் தொடரும்,
அலுக்காத ஆட்டம்.....
உருண்டொரு நாள்
உடையும் வரை.//
மோகன்ஜி,
அருமையான விளக்கம்.. வாழ்க்கை என்னும் தலைப்பிற்கு.
ஞொய்யாஞ்ஜி ரொம்ப வெவரமான ஆளா தெரியுறார்.
பக்தி இலக்கியத்தின் பக்கம் இனிமேல தான் தலைவைத்து படுக்க இருக்கிறேன். ஆர்வத்தை உண்டாக்கியதற்கு நன்றிங்க.
எம் பேருக்கு முன்ன திரு.-வெல்லாம் ரொம்ம்ம்ம்ப அதிகம்ணே.
பொடியன் நான்.
வாங்க சத்ரியன்! பாராட்டுக்கு நன்றி!
பக்தி இலக்கியம் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு சாதாரணமானதல்ல.
உணர்வும்,தமிழும் உச்சத்தை தொட்ட பங்களிப்பு.
அவற்றை பக்தியையும் தாண்டி பார்க்கும் போதே அதன் வேறு பரிமாணங்கள் புலப்படும். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
சத்ரியன்.. நீவிர் பொடியன் தான்... "சொக்குப் பொடி"யன்!
பயணத்தில் வந்த கவிதை-நெஞ்சில்
பயணித்து வந்த கவிதை
நயத்தோடு வந்த கவிதை-நீர்
நல்கினீர் நல்ல கவிதை
அருமை!
புலவர் சா இராமாநுசம்
தாங்களும் என வலைப் பக்கம்
வரலாமே
பயண கவிதை தென்றல் . ஞொய்யாஜி ஒத்துக்கொள்ளும் நேர்மையை பாராட்டவேண்டும் ( அரசுப் பணி விடுப்பு சமாச்சாரத்தை அழகாக சொருகிய உங்களையும் )
அறிவுசார் அறிமுகங்கள் ....நன்றிகள் ...
ஆமாம் அண்ணா, பயணம் கவிதைகளுக்கான ஊற்று. அதிலும் ரயில் பயணம் ஒரு காவியமே எழுதி விடலாம்.
அருமையான கவிதைகள்.
இரண்டாவது முன்னரே படிச்சாச்சு நான்
//ஞொய்யாந்ஜி//
ஏன் ஒய்,
இந்த பெயரை ஒரு முறை கரீட்டா எழுதி - எங்கோ டிராப்ட் என்று போட்டு வைத்து இருக்கீறீர் தானே ! ஐயோட என்ன கஷ்டம்
கருத்துரையிடுக