பக்கங்கள்

செவ்வாய், மார்ச் 20, 2012

அம்மா என் அம்மா



உன் தளர்ந்த தேகம் விட்டு
வெளித்தெறித்த நரம்பினமாய்

பின்னி நீளும் சன்னக் குழல்களூடே
ரத்தமும் குளூக்கோசும் திரவங்களுமாய்......

எண்கள் பரப்பி மினுக்கும் மானிட்டர்கள்
நீலமும்,சிவப்பும் பச்சையுமாய்,,,,,

அவற்றின் விகிதாச்சாரத்தில்
தொங்கும் உன் வாழ்க்கைக் கணக்கு.

அம்மா!

கால ஓட்டம் உன்னைக்கூட புறந்தள்ளி
ஆலவட்டம் போடும் அவலக் கணம் இது.

உன் வாய்க் குழறலில்
நான் சொல்லவியலாதவற்றைச் சொல்கிறாயா?

உதட்டைப் பிதுக்கும் மருத்துவர்கள்.
உத்திரம் காட்டி சிலுவையிடும் செவிலிச்சேச்சி.


மரணத்தின் அண்மை சப்பணம் கொட்டியமர்ந்து
 உன் கட்டிலோரம் காத்துக் கிடக்கிறது.

நீ போனால்
எனக்கொன்றும் நட்டமில்லை.

போய் வா!

உன் காலைச் சுற்றிப் படர்ந்த
என் வாழ்க்கையைக் கொண்டாடுவேன்.

கண்ணுறும் ஒவ்வொரு தாயையும்,
நீயா நீயா எனத்தேடித் திண்டாடுவேன்.

36 கருத்துகள்:

  1. உன் காலைச் சுற்றிப் படர்ந்த
    என் வாழ்க்கையைக் கொண்டாடுவேன்.

    கண்ணுறும் ஒவ்வொரு தாயையும்,
    நீயா நீயா எனத்தேடித் திண்டாடுவேன்.

    இப்படித்தான் என் மனம் இரு வருடங்களாய்க் குமுறிக் கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. ரிஷபன் சார்! இது நேற்று மருத்துவ மனையில் நாராய்க் கிடக்கும் என் அம்மாவின் அருகிருந்து எழுதினேன். என் வலைசொந்தங்கள் செய்யும் பிரார்த்தனைகள் அவளை எனக்காய் மீட்டுத் தரும் எனும் நம்பிக்கையோடு...

    பதிலளிநீக்கு
  3. அம்மா நலம் பெற
    நானும் பிரார்த்திக்கிறேன் அண்ணா....

    பதிலளிநீக்கு
  4. //நீ போனால்
    எனக்கொன்றும் நட்டமில்லை.

    போய் வா!

    உன் காலைச் சுற்றிப் படர்ந்த
    என் வாழ்க்கையைக் கொண்டாடுவேன்//

    மனத்தைக் கீறும் வரிகள்.

    அம்மா நோயிலிருந்து விடுபட்டு நீண்ட நாள் வாழ எங்கள் பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  5. நிச்சயமாய்...
    நானும் ப்ரார்த்தனை செய்கிறேன்!

    பதிலளிநீக்கு
  6. பிரிய வெங்கட்! நன்றி.. நீண்டதோர் உரையாடல் மனதிற்கு ஆறுதலாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீராம் உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  8. மூவார்! சில நாட்களுக்கு முன் நான் எழுத யோசித்து வைத்த ஒரு முறைமாறின காதல் கதையின் களனை அவளுக்கு சொன்ன போது சிரித்தபடி அவள் சொன்னது "போடா கிறுக்கா!".

    இரண்டு நாட்களாய் கிறுக்கனாய்த்தான் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. மோகன் அவர்களே, விரைவில் உங்கள் அம்மா குணமடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! அம்மாவுக்கு இணை இந்த உலகிலேயே கிடையாது. அவர்களின் மனமும், சிந்தனையும் நம்மை சுற்றியேதான் இருக்கும் என்பதால், நம்மை விட்டு எங்கும் போய் விட மாட்டார், போகவும் முடியாது. கவலை படாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. மோகண்ணா....சுகமான்னு கேட்க வார்த்தையில்லை.அம்மா சுகமாக என் வேண்டுதல்கள்.தாய்க்கும் தாயாய் இருந்து கவனித்துக்கொள்ளுங்கள் அம்மாவை !

    பதிலளிநீக்கு
  11. ஒவ்வொரு தாயிலும் தன் தாயைக் காணும் கனிவு கொண்ட உங்களைப் பெற்ற தாய் நலம் பெறப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. ம‌ன‌சின் அடியாழ‌த்திலிருந்து எழும்பும் துக்க‌ப் ப‌ந்தை அமிழ்த்த‌ எவ்வ‌ள‌வுதான் எத்த‌னித்தாலும் ... முடிய‌வே முடியாது ச‌கோ...க‌டைசி நான்கு வ‌ரிக‌ளின் க‌ன‌ம் காற்றைத் தாண்டி அழுத்துகிற‌து.

    //சில நாட்களுக்கு முன் நான் எழுத யோசித்து வைத்த ஒரு முறைமாறின காதல் கதையின் களனை அவளுக்கு சொன்ன போது சிரித்தபடி அவள் சொன்னது "போடா கிறுக்கா!".

    இரண்டு நாட்களாய் கிறுக்கனாய்த்தான் இருக்கிறேன்.//

    அழுத‌ழுது தீர்க்க‌ முய‌ற்சிப்போம்.

    எல்லாம் வ‌ல்ல‌ இறைய‌ருளை இப்ப‌டியான‌ த‌ருண‌ங்க‌ளில் தான் இறைஞ்சி நிற்க‌ வேண்டியிருக்கிற‌து. எம் இறையே, இன்னும் கொஞ்ச‌நா(ங்க‌)ள் இருந்துவிட்டுப் போக‌ட்டுமே அம்மா...

    தாங்கி வாழ‌வும் துணை நிற்க‌ வேண்டுகிறேன் ப‌ர‌ம்பொருளை.

    பதிலளிநீக்கு
  13. உங்கள் அம்மா நலம் பெற, எங்கள் பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  14. அம்மா நலம் பெற
    நானும் பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  15. //நீ போனால்
    எனக்கொன்றும் நட்டமில்லை.

    போய் வா!

    உன் காலைச் சுற்றிப் படர்ந்த
    என் வாழ்க்கையைக் கொண்டாடுவேன்//


    அம்மா நோயிலிருந்து விடுபட பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. எப்படி எப்படியோ ஓடிக்கொண்டிருக்கும் காலத்தின் கரையில் நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன் மோகன்ஜி. அயர்ந்த வேளையில் இப்பதிவைத் தவறவிட்டு விட்டேன்.

    அநேகமாக இந்த இரண்டு நாட்களில் என்னடா மோஹனா! பயந்து போயிட்டியாடா கொழந்தே என்றெழுந்து உங்கள் தலையைக் கோதியிருக்கக் கூடும்.

    இல்லையெனில் அது சீக்கிரமே நிகழப் ப்ரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. மோஹன்ஜியின் அம்மா நான் நினைத்தது போல எழுந்து மோஹன்ஜியின் தலையைக் கோதும் வாய்ப்பைத் தராது இன்று காற்றோடு இறையோடு கலந்துவிட்டார். என் ப்ரார்த்தனைகள் இப்போது அவரின் காலடிகளில் அஞ்சலியாக உருவெடுக்கிறது.

    ஒருபோதும் திரும்பக் கிடைக்காத ஒன்றை இழந்திருக்கும் மோஹன்ஜிக்கு என்ன சொல்ல என்று வார்த்தைகளைத் தேடித் தோற்று மானசீகமாக முதுகில் தட்டிக் கொடுக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. செய்தி அறிந்து துயருறுகிறேன். என் ஆழ்ந்த இரங்கல்கள்.

    Really very sorry Mohanji.

    பதிலளிநீக்கு
  19. ஏன் என்ன ஆயிற்று என்று எண்ணிப் படித்துக்கொண்டு வரும்போது கடைசியில் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். நீங்களே சொல்லியதுபோல் காணுறும் ஒவ்வொரு தாயையும் நீதான் நீதான் என்று கொண்டாடுங்கள். காலம் காயங்களை ஆற்றும். அவரது ஆத்மா சாந்தியடைய நானும் இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. கவிதையை படித்ததுமே கண்ணீர் திரையிட்டது. அம்மாவை போல் ஒரு மனுஷியை பார்க்கவே முடியாது.....

    என் ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணா....

    பதிலளிநீக்கு
  21. மிகவும் வருந்துகிறேன். ஈடு செய்ய முடியாத வேதனை. கண்ணீருடன் என் அஞ்சலியை அவர் காலடியில் சமர்பிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. அண்ணா! எனது ஆழ்ந்த இரங்கல்கள்... :-(

    பதிலளிநீக்கு
  23. போய் வா!

    உன் காலைச் சுற்றிப் படர்ந்த
    என் வாழ்க்கையைக் கொண்டாடுவேன்.

    கண்ணுறும் ஒவ்வொரு தாயையும்,
    நீயா நீயா எனத்தேடித் திண்டாடுவேன்.

    காற்றோடு இறையோடு கலந்துவிட்டஅன்னைக்கு ப்ரார்த்தனைகள் அன்னையின் காலடிகளில் அஞ்சலியாக சம்ர்ப்பிக்கிறோம்..

    பதிலளிநீக்கு
  24. These moments when words fail to make any sense;
    I can only send along my muted thoughts to you
    And wish they find your memories; may be I would find in them,
    A glimpse of the soul I wish to see...

    I am sorry for you loss, sir...

    பதிலளிநீக்கு
  25. //கண்ணுறும் ஒவ்வொரு தாயையும்,
    நீயா நீயா எனத்தேடித் திண்டாடுவேன்.//

    ஒவ்வொரு தாயிலும் அவர் உங்களுடன் இருப்பார் ஜி.

    பதிலளிநீக்கு
  26. ஈடு செய்ய முடியாத இழப்பு. எங்கள் இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  27. மோகன் ஜி அவர்களே! பிற தாயைக்காணும்போது "நீயா?நீயா?" என்று தேட "மன வளம்"வேண்டும்.அது உங்களிடம் உள்ளது.அமைதியும் மன நிம்மாதியும் பெற வாழ்த்துகிறேன். நல்லதென்றால் ஓரிரு நாட்கள் நாகபுரி வந்து என்னோடு தங்க வரும்படி கேட்டுக் கொள்கிறென் ---காஸ்யபன் .

    பதிலளிநீக்கு
  28. ஆழ்ந்த இரங்கல்கள் மோகன்ஜி அண்ணா..அம்மா. இறைநிலையோடு கலந்து உங்களுக்கு ஆதரவும் வாழ்த்துமாக என்றென்றும் இருப்பார்..

    பதிலளிநீக்கு
  29. அம்மா ....

    ஆறுதல் சொல்ல திராணியற்று
    என் தமிழ்
    தோற்று நிற்கிறது அண்ணா .

    பிரார்த்திக்கிறேன்
    அம்மாவின் ஆத்மா
    அமைதியுற .

    பதிலளிநீக்கு
  30. ஆழ்ந்த இரங்கல்கள் மோகன்ஜி

    பதிலளிநீக்கு
  31. ஆழ்ந்த வருத்தங்கள். அம்மாவின் இழப்பை எதுவும் ஈடு செய்ய முடியாது. அம்மாவின் நினைவை மரணம் கூட அழிக்க முடியாது. உங்கள் மனதில் என்றும் குடியிருக்கிறார் உங்கள் அன்னை.

    பதிலளிநீக்கு
  32. கவிதையும் சோகம் தந்தது. கருத்துரையும் சோகம் தந்தது.

    கவியின் கடைசி வரிகளில் நன்னம்பிக்கையும் அதனொடு மனதின் வீச்சினையும் உணர முடிகிறது.

    இறைவனின் பாதங்களில் இரண்டறக் கலந்த அம்மாவினை நானும் தொழுது கொள்கின்றேன் சகோ

    பதிலளிநீக்கு
  33. //நீ போனால்
    எனக்கொன்றும் நட்டமில்லை.

    போய் வா!

    உன் காலைச் சுற்றிப் படர்ந்த
    என் வாழ்க்கையைக் கொண்டாடுவேன்//

    ஆம் , அம்மாவின் காலைச்சுற்றிவந்த நாட்கள், அம்மாவின் மடி படுத்து கதைகள் கேட்ட நாட்கள், சாதம் பிசைந்து நிலாகாட்டி ஊட்டிய நாட்கள் என்று அம்மாவின் நினைவுகளை கொண்டாடும் நாட்களுக்கு பஞ்சம் ஏது.
    அம்மாவின் நினைவுகள் ஒரு சுகமான் சுமை.

    பதிலளிநீக்கு
  34. மிகவும் நெகிழ்ந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரை இட்டுச் செல்லுங்களேன்..