பக்கங்கள்

வெள்ளி, அக்டோபர் 17, 2014

சட்டைக் கவிதைகள்

மஞ்சள்

நேர்காணலுக்காய் உள்ளே அழைக்கப்பட
ஐந்துநிமிடம் இருந்த போதே
அதைப் பார்த்தேன்.
வெள்ளைசட்டையின் மூன்றாம்பட்டன் அருகே
உளுந்து அளவுக்கு ஓர் மஞ்சள்கறை.
கொண்டைக்கடலை அளவுகூட இருக்கலாம்.

காலை இட்லிசாம்பாரின் சிந்தலாய் இருக்கக்கூடும்.
அதை சாந்தி ஊற்றியபோது சிந்தியிருந்தால்
அப்போதே அவளை கத்தியாவது இருக்கலாம்.

அந்த மஞ்சள்பொட்டை விரலால் மூடிக்கொண்டு
அறைக்குள் நுழைந்தேன்.

அரக்குமஞ்சளில் புடவையணிந்த ஒரு அம்மாளும்,
சந்தணகுங்குமதாரியாய் ஒரு கண்ணாடிக்காரரும்,
மஞ்சள்பல் தெரிய அமரச்சொன்ன அதிகாரியும்
கண்களால் எனைக் கவ்வினார்கள்.

கேட்கப்பட்ட பத்து மஞ்சள்கேள்விகளில்
ஒன்பது மஞ்சள்பதில்கள் சரியானவை.
வாழ்த்துக்கள் என்று சொன்னபின்னரே
கறையை மறைத்த விரல்களை எடுத்தேன்.
கறை நல்லது.

வாழ்த்து சொன்ன சாந்தியிடம் கறையைக் காட்டினேன்.
காலையில் கேட்டைமூடி நான் சென்றபோதே
அதை அவள் பார்த்ததாய்ச் சொன்னாள்.


அளவுகள் 

நாற்பதென்றால் நாற்பது தான்.
முப்பத்தெட்டும் கூடாது,
நாற்பத்திரண்டும் உதவாது.

எல் எக்ஸெல் டபுளெக்ஸெல் எல்லாம்
 வேலைக்காகாது.
ஸ்லிம்பிட்,ஸ்டிச்லெஸ் சங்கதி
நமக்கும் புரியாது.

கௌஸ்பாய் தையல்கடையை
மூடிய பின்னே,
முகம் தெரியாதவன் தைத்ததை
முனகாமல் போட்டுக்கொள்கிறேன்,
காலர்நுனியில் குங்குமம் தீற்றி.

இல்லாத மாடல்

'என்னமாதிரி தைக்க'என்றான்.

'ஆனந்த ஜோதி எம்.ஜி.ஆர் போட்டமாதிரி,
டீசர்ட்டாட்டம் ;ஆனா சட்டைத்துணியிலே'என்றேன்.
இல்லையென்றே தலையசைப்பில் மிரண்டு சொன்னான்.

'சிவாஜி போட்ட சிலுக்கு சட்டை போல'என்றேன்.
'ஆவாது ஓல்டு பேஷன் சாரே' என்றான்.

அப்போ காமராஜர் மாடல் வேண்டுமென்றேன்.
முக்கால்கை சட்டை இப்போ முடியாதென்றான்.

'மோடி மாடல்சட்டை தான் தையேன்' என்றேன்.
அது சட்டையே இல்லையென்று அனுப்பிவிட்டான்.


புதுசு

சீ... என்ன இது?
மனுஷனை இப்படியா இறுக்குவது?
இனிமேலும்
எனக்குத் தாங்காது.
புதுசு தான்!
அதற்காக இப்படியா?

பொத்தான்களை ஒவ்வொன்றாக 
கழற்றினேன்

கலைந்த படுக்கையில்
படர்ந்தது
நான் எறிந்த இறுக்கமான புதுச்சட்டை.



பாம்புச் சட்டை

சட்டென்று கனவில் வந்தது
கிராமத்துவீட்டு வேலியில் தொங்கிய
பாம்புச்சட்டை.
இவ்வளவு வருடங்களுக்குப்பிறகும்
அன்று பார்த்தபடியே.

பாட்டனும் ராசய்யாவும் கோல்கொண்டு
எங்கும் துழாவியதையும்,
ஆடுதீண்டாப்பாளை செடிகளை
வேலியோரம் அம்மா நட்டதையும்,
'நல்லது' வந்திருந்தால் அப்பளம் சுடும் வாடைவரும்
என்று அப்பா சொன்னதையும்,
சுப்ரமண்யபுஜங்கம் படித்தபடி
பாட்டி இருந்ததையும்,
சன்னல் வழியே பார்த்தபடி பயந்ததையும்
நான் மறந்துவிட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன்.

ஃபப்பிள்பேக் பாலிதீன் கிழிசல்போல
கனவில் வந்த பாம்புச்சட்டை
இன்னமும்
ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.





46 கருத்துகள்:

  1. ஒன்ற்ரை வருடம் கழித்து உங்கள் பக்கத்தில் ஒரு பதிவு. பார்க்கவே மகிழ்ச்சியாக் இருக்கிறது அண்ணா...

    பாம்புச் சட்டை எனக்குள்ளும் சில நினைவுகளை மீட்டது!

    பதிலளிநீக்கு
  2. வருக வருக மீண்டும் வருகை தருவதற்கு நன்றி. எல்லாக் கவிதைகளிலும் தீபாவளியின் புதுத்துணியின் தாக்கம் தெரிகிறதே. அது சரி நன்கு எழுதுபவருக்கு எழுது பொருளுக்கா பஞ்சம். ? வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஆகா. அண்ணா. அருமை. அதிலும் "புதுசு"- குமுதத்தின் ஒரு பக்கக் கதை போல.
    பாம்புச்சட்டை மனசுக்குள் சுருண்டு படுத்துக் கிடந்து படுத்துது. வருடம் ஒரு முறை வந்தாலும் வருடம் முழுக்க நினைக்க வைத்து விடுகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு நாகராஜ், மிக சந்தோஷமாக இருக்கிறது. இந்த முறை நின்று விளையாடும் ஏற்பாட்டுடனேயே மீண்டு வந்திருக்கிறேன். விருப்ப ஓய்வை எடுத்துக்கொண்டு விருப்பமானதை மட்டுமே செய்யும் உறுதியோடு நிற்கிறேன்.
    தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு வந்த உற்சாகம் வெ்நா !

    பதிலளிநீக்கு
  5. உங்கள் வாழ்த்துக்கும் அசிக்கும் நன்றி G.M.B சார்! மிகப்பெரிய தேக்கத்துக்கு பின் வந்திருக்கிறேன் தான் ! இம்முறை எழுத்துக்கு கூடுதல் நேரத்துடன் ....

    உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  6. அன்பு சிவா! மீண்டும் பழைய உற்சாகம் . ஒரு கொண்டாட்ட மனநிலையில் ....

    இந்தக்கவிதைகளின் போக்கு சற்று எளிதானது. எழுத நேரமெடுப்பதில்லை. இத்தகு கவிதைகளுக்கு சந்தம், எதுகை,சொற்கட்டு என்ற எதுவும் வேண்டாம்..
    ஒரு விவகாரம்,அதற்கு ஒரு கண்ணோட்டம்,கொஞ்சம் பகடி,கொஞ்சம் நையாண்டி,முடிந்தால் கால்வாரல்கள்.....

    அண்மையில் இப்படி ஒன்றை அப்பாதுரை மேல் எழுதி அவருக்கு அனுப்பியிருக்கிறேன். மூன்றாம் சுழியிலேயே அது வரலாம். எல்லோரையும் வம்புக்கு இழுத்திருக்கிறேன்.

    இந்த நீண்ட இடைவெளியில் நம் நட்பு வட்டத்தில் பலரும் என்னை மறந்தும்கூட போயிருக்கலாம். எல்லோருடனும் மீண்டும் தொடர்பை மீட்கவேண்டும் சிவா.

    பதிலளிநீக்கு
  7. சட்டைகளில் தெரிகிறது
    வானவில்லின் விசித்திர நிறங்கள்..!

    பதிலளிநீக்கு
  8. வாங்கய்யா... வாங்க!!

    அறுபதாம் கல்யாணம் முடிஞ்சு இரண்டாம் தலை தீபாவளிக்கு ரெடி செஞ்ச டிப்டாப்பான சட்டைகளோட டப்டுப்ன்னு வெடிக்கிற பட்டாசா கவிதைகள்!! பதிலுக்கு வெறும் வாயால் தீபாவளி வாழ்த்து சொல்கிறோம்... தங்களுக்கும்.

    மெனக்கிடாமல் எழுதியிருப்பதாக சொல்லிக் கொண்டாலும் முதல் மஞ்சள் சொல்லிப் புரிந்ததை 'ஒரு பக்கம்' எழுதிச் செல்லலாம்.

    'புதுசு' குமுதக் குசும்பெல்லாம் 'அறுபது' எல்லாம் இல்லையென நம்மை நாமே நம்ப வைக்கும் ஏற்பாடு.

    பாம்பு சட்டை எல்லோரையும் பழைய நினைவுக்கு கொண்டு சென்று விடுகிறது. 'நல்லது'க்கு என்ன வாடை, வேலியை எப்படி பலப்படுத்தனும், சுப்பிரமணிய புஜங்கம் கூட படிக்கலாம் என எத்தனை பாரம்பர்யங்கள்...! இலகுவாகப் பதிந்து செல்லும் போதே கவிதைக் கம்பீரம் வந்துவிடுகிறதே...

    இல்லாத மாடல், அளவு- கவிதைகள் புதுக் களத்தில்! பருவ வயதில் நம்மை பிரம்மிக்க செய்த ஹீரோ தான் காலத்துக்கும் நம்முள். மோடி சட்டை பத்தி வெச்சீங்க ஒரு லெட்சுமி வெடி. உங்க பகடிக்கு அளவே இல்லை.

    கேட்டை மூடும் போதே மஞ்சள் கறையை பார்த்ததாக சொன்ன சாந்தி ரொம்ப யதார்த்தம். ஏன் சொல்லலைங்கறதும் சொல்லியிருந்தா என்னாகியிருக்கும் என்பதும் எல்லாப் பெண்களுக்கும் தெரிந்த ஒன்று. தப்பிச்சது உங்களோட, அவங்களும் தான். கறை நல்லதுன்னு ஒரு கவனக் குவிப்பு. துவரம்பருப்பு சைஸ் கூட கொண்டைக் கடலை சைஸ் ஆக தெரிவதன் சந்தர்ப்ப சூழல்.

    தீபாவளிக் குழப்ப மேகங்களுக்கிடையே பளிச்சிடும் வானவில் உற்சாகம் ஏற்றுகிறது.

    பதிலளிநீக்கு
  9. உளுந்து, துவரம்பருப்பு ஆக மாறியது எனது காட்சிப் பிழை..:))

    பதிலளிநீக்கு
  10. நிஜமாவே நீங்க தானா?

    ரெண்டு பதிவு போட்டப்புறம் சொல்லுங்க..

    பதிலளிநீக்கு
  11. வம்புக்கவிதையை எம்பதிவில போட்ட்றவா?

    பதிலளிநீக்கு
  12. இராஜராஜேஸ்வரி மேடம் ! நலம் தானா? இன்னைக்கு சாயங்காலம் உங்க தளத்துக்கு வந்துகிட்டே இருக்கிறேன் . நல்ல அகர்பத்தி ஏத்திவச்சு, பிரசாதத்தையும் ரெடியான வைங்க! உம்மாச்சிக்குல்லாம் வணக்கம் போட்டுட்டு பிரசாதத்தையும் கவனிக்கிறேன்்

    பதிலளிநீக்கு
  13. நன்றி நிலா!

    அறுபதாம் கல்யாண தலை தீபாவளின்னு சொன்னதை எங்க 'யூத் மாப்பிள்ளை கிளப் 'மெம்பர்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
    நன்றாகவே கவிதைகளை ரசித்திருக்கிறீர்கள்.

    //கேட்டை மூடும் போதே மஞ்சள் கறையை பார்த்ததாக சொன்ன சாந்தி ரொம்ப யதார்த்தம். ஏன் சொல்லலைங்கறதும் சொல்லியிருந்தா என்னாகியிருக்கும் என்பதும் எல்லாப் பெண்களுக்கும் தெரிந்த ஒன்று//
    நிலா முத்திரை...

    மஞ்சளுக்கான உங்கள் 'ஒரு பக்கத்தை' கற்பனையில் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதை எழுதுங்கள். ஒப்பிட்டுப் பார்த்து விடுவோம்.

    பதிலளிநீக்கு
  14. அப்பாதுரைகாரு,

    நெஞ்சமிருக்கு துணிவாக
    நேரமிருக்கு தெளிவாக
    நினைத்தால் பதிவேன் விரைவாக
    மூணுநாளுக்கொருகா சரியாக

    நம்புங்க பாஸ்.

    வம்புக்கவிதை மூணாம்சுழியிலத்தான் வரணும் .
    இன்னைக்கே போடுங்க முதலாளி .
    (பின்னூட்டம் கூட எழுதி வச்சுண்டேன் அண்ணே!)

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. வம்புக் கவிதையில் ஒண்ணு ரெண்டு பேரை இஸ்திருந்தா பரவாயில்லை.. ஏற்கனவே இபிகோனு ஒரு அராத்து, ஐ மீன் அனாமத்து, கமெண்ட் போட்டிருக்கே.. நீங்க ஒருத்தரை விடாம இஸ்திருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  17. எதுக்கு சொல்றேன்னா இப்ப வாங்கய்யான்ன சந்திரபுத்திரி வம்புக் கவிதைய படிச்சுட்டு குரியர்ல என்ன அனுப்புவாரு யோசிச்சுக்குங்க சொல்லிட்டேன்..

    பதிலளிநீக்கு
  18. புரியாத பாஷையில் கமெண்ட்ற சுப்புத் தாத்தா அப்புறம் புரியற பாஷையில் திட்டுவாரு.

    பதிலளிநீக்கு
  19. ஆர்விஎஸ்ஸு வீசுவாரோ ஏசுவாரோ?

    பதிலளிநீக்கு
  20. சீதாபதி கூட சும்மா இருக்க மாட்டாரு சொல்லிட்டேன்..

    பதிலளிநீக்கு
  21. அப்பால ஆசுகவி பாடுற உங்க அன்புத்தம்பி ஏசுகவி பாடலாம்.. பரவாயில்லையா ?

    பதிலளிநீக்கு
  22. //பாம்புச் சட்டை எனக்குள்ளும் சில நினைவுகளை மீட்டது!//

    எனக்கும் தான்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  23. யம்மாடியோவ்! இப்படி ஒண்ணொண்ணா சொன்னா எனக்கு உதராதா...அப்பாஜி!

    பரவாயில்லை . போட்ருங்க.. தாவாங்கட்டையைப்பிடிச்சு சும்மா தமாசுக்கு மக்கான்னு செல்லம் கொஞ்சிடுவோம். ஸ்மைலி போட்டு இமெயில் போட்ருவோம்.

    கோச்சுகிடாதவங்களுக்கு நம்ம கம்பேனி சார்பா பாராட்டுவிழா எடுக்கப் போறோம்னு சொல்லிடலாம்.

    நம்முடைய நட்புவட்டத்துல இருக்குறவங்க எல்லோரும் அன்பு வடிவானவங்க.. நகைச்சுவை உணர்வு உள்ளவுங்க ப்ரோ...
    போடுங்க பாஸ்... போடுங்க.....

    பதிலளிநீக்கு
  24. சுப்பு சார்... நலம்தானே? அடிக்கடி வாங்க சார்

    பதிலளிநீக்கு
  25. சமையல் உள்ளுக்கு போய் யாருக்கும் தெரியாம ஒரு கரண்டி சர்க்கரை சாப்பிடுங்க சார்... என் சார்பில். உங்க வாய்முகூர்த்தம் அம்மா வந்தாச்சு:))

    பதிலளிநீக்கு
  26. என்ன, அப்பாஜி பொடி அபாரமா இருக்கு?! என்ன வெடி வெச்சிருக்கீங்க அந்தக் கவிதையில?

    பதிலளிநீக்கு
  27. உங்க கற்பனை என்னவாயிருக்கும்? என்னால் யூகிக்க முடியலை. அப்பாஜி பக்கத்தில் கவிதை வரட்டும். அப்புறமா மஞ்சள் பத்தின ஒருபக்கம்:)

    பதிலளிநீக்கு
  28. அய்யய்யோ அந்தக் கவிதை நான் எழுதலிங்க நிலாமகள்.. சத்தியமா மண்டபத்துல மோகன்ஜி எழுதிக் கொடுத்தது..

    பதிலளிநீக்கு
  29. நிலா! எல்லாம் நலமாகும் நாட்டுக்கு....

    அப்பாஜிக்கு பொடி வைக்குறதே பழக்கமாயிடுச்சு...

    //உங்க கற்பனை என்னவாயிருக்கும்? என்னால் யூகிக்க முடியலை. அப்பாஜி பக்கத்தில் கவிதை வரட்டும். அப்புறமா மஞ்சள் பத்தின ஒருபக்கம்:)//

    கவிதை வந்துடுச்சின்னா அதுக்கும் பக்பக்பக்கம்....



    பதிலளிநீக்கு
  30. அப்பாகாரு !

    //அய்யய்யோ அந்தக் கவிதை நான் எழுதலிங்க நிலாமகள்.. சத்தியமா மண்டபத்துல மோகன்ஜி எழுதிக் கொடுத்தது..//

    க்ளாஸ்...

    பதிலளிநீக்கு
  31. @ அப்பாஜி...

    ரொம்ப பயந்தவர் தான் நீங்க.

    @ மோகன் ஜி ...

    கவிதை உங்களுதுதான். முன்பே நீங்களே சொல்லிட்டிங்க. என்ன வெடி என்பதையும் நீங்களே சொல்லிடுங்க.

    பதிலளிநீக்கு
  32. அந்தக்கவிதை...
    தலப்பாக்கட்டி பிரியாணி கடைக்கு
    தரப்பட்ட
    தயிர்பட்டை,
    எலுமிச்சை ஊறுகாயுடன்.
    அனுப்பியது யார் குற்றம்?

    முடிவை மூன்றாம்சுழியில் காணுங்கள்.



    பதிலளிநீக்கு
  33. நெஞ்சமிருக்கு துணிவாக
    நேரமிருக்கு தெளிவாக
    நினைத்தால் பதிவேன் விரைவாக
    மூணுநாளுக்கொருகா சரியாக//

    ஆஹா! வாங்க வாங்க எழுதுங்கள் மூணுநாளுக்கொருகா.

    தீபாவளிவருவதை கட்டியம் கூறிய கவிதைகள் அருமை.
    காலர்நுனியில் மஞ்சள் இல்லையா? குங்குமம் தானா?

    இல்லாத மாடல் கவிதை அருமை.
    தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. அது சட்டையே இல்லையென்று அனுப்பிவிட்டான். // :)

    Welcome back !

    பதிலளிநீக்கு
  35. கோமதி அரசு மேடம் ! நலமா?
    முதல் கவிதை ஒரே மஞ்சள் மயமா ஆனதாலே, காலர்நுனில குங்குமம் வச்சேன். உங்களயெல்லாம் ஏமாத்தவே முடியாதப்பா !

    பதிலளிநீக்கு
  36. உங்கள் வரவேற்புக்கு நன்றி ரிஷபன் சார் !

    பதிலளிநீக்கு
  37. வம்புக் கவிதைக்கு நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு
  38. Namasthe/-

    தங்களை மிகவும் miss பண்ணிக்கொண்டிருந்தோம்..திரும்பிவந்தததில் ரொம்ப மகிழ்ச்சி..

    மாலி

    பதிலளிநீக்கு
  39. சிவா! ரசித்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  40. மாலி சார்! உங்கள் அன்புக்கு நன்றி! மூன்றாம்சுழியையும் பாருங்கள்...

    பதிலளிநீக்கு
  41. வருவதே கிடையாது: அப்படியே மாமாங்கத்துக்கு ஒரு தடவை வந்தாலும் விசாகபட்டண ஹூட் ஹூட் மாதிரி சண்ட மாருதம்! ஹூம்!

    பதிலளிநீக்கு
  42. அன்புள்ள மோகன்ஜி...

    வணக்கம். நீண்ட நாட்களாகிவிட்டன உங்களைப் பார்த்து என்று வந்தேன். வந்தவுடன் சுவையான விருந்து. மனசுவிட்டு சிரித்து ரசித்தேன். இதமான மெல்லிய வருடலாய் மகிழ்ச்சியூட்டும் கவிதைகள். நான் ரசித்த வரிகள் சில. தீபாவளி வாழ்த்துக்கள்.



    காலையில் கேட்டைமூடி நான் சென்றபோதே
    அதை அவள் பார்த்ததாய்ச் சொன்னாள்.

    மோடி மாடல்சட்டை தான் தையேன்' என்றேன்.
    அது சட்டையே இல்லையென்று அனுப்பிவிட்டான்.


    ஃபப்பிள்பேக் பாலிதீன் கிழிசல்போல
    கனவில் வந்த பாம்புச்சட்டை
    இன்னமும்
    ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  43. மூவார்! இன்னைக்கு கூட புதுபதிவு போட்டிருக்கேன் பாஸ் !

    பதிலளிநீக்கு
  44. ஹரணி சார்! உங்கள் பாராட்டுக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  45. உங்களுடைய மீள்வரவு மகிழ்ச்சி தருகிறது மோகன்ஜி. வந்தவுடன் என்பக்கம் வந்து நலம் விசாரித்த உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி.

    காமாலை கண்டவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் என்பது போல் முதல் கவிதையில் மஞ்சள் மட்டுமே பிரதானமாய்... மங்கலம் உண்டாயிற்றே...

    சட்டைக்கவிதைகள் என்று தலைப்பு கொடுத்திராவிட்டால் புதுசு கொஞ்சம் இசகுபிசகாய் யோசிக்கவைத்திருக்கும்.

    மொத்தத்தில் ரசனைகள் அசத்துகின்றன. தொடர்ந்து எழுத என் வாழ்த்துகள் மோகன்ஜி.

    பதிலளிநீக்கு
  46. நன்றி கீதமஞ்சரி ! தொடர்ந்து எழுதுவேன் . அடிக்கடி வாருங்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரை இட்டுச் செல்லுங்களேன்..