ரங்கம்மா உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டிருந்தாள். அவள் கையிலிருந்த துடைப்பம் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது . வாருகோலின் இலட்சணமெல்லாம் தேய்ந்து ,ஒரு குச்சிக்கட்டையாய் அது இருப்பதனால்தானோ என்னவோ அதன் இலக்கை சரியாய் தாக்காமல் ‘சப்சப்’பென்ற ஒலியே அதிகமாய் எழுந்தது. அந்த அக்ரஹாரத்தின் கடைக்கோடி வீடு அது. வீடு எனும் சோபையை இழந்து, வெறும் செங்கல்ஜோடனையாய் இளித்துக் கொண்டிருந்தது.. அந்த வீட்டின் சமையற்கட்டு மேடையின் உட்பகுதியில்தான் ரங்கம்மா எங்களுடைய கரப்பான்பூச்சி காலனியில் வாருகோலாட்டம் ஆடிக் கொண்டிருந்தாள்.
என் இனத்தார் ஓரிருவர் தாக்குதலுக்கு தப்பாமல் உயிரைவிட்டு மல்லாந்திருந்தனர். எல்லாவரும் திசைக்கொருத்தராய் சிதறி ஓடிக்கொண்டிருந்தார்கள். நான்மட்டும் காரைப்பெயர்ந்த ஒரு சிறுகுழியில் தஞ்சம் புகுந்திருந்தேன். அம்மா என்ன ஆனாளோ? படபடப்பாய் இருந்தது. என்ன வாழ்க்கை இது?
சமையலறைக்குள் அடுத்த குரல் புகுந்தது. "ஏண்டி ரங்கு! காலமே இப்படி சிலம்பம் சுத்திண்டிருக்கே? இப்போத்தான் கரப்பான்பூச்சியை ஒழிக்க மருந்தெல்லாம் வந்திருக்கே.. வாங்கி அடிக்க வேண்டியது தானே? எதுக்கு இந்த ஹிம்சை?" இது அடுத்த வீட்டு பங்கஜாக்ஷி மாமி. இரண்டு மாமிகளும் ரொம்ப சினேகிதம்..
"மருந்துவாங்க காசிருந்தா முதல்ல உங்கஅண்ணாவுகில்லே பழையதுலே கலந்து கொடுத்திருப்பேன்?"
“அட ராமச்சந்திரா! என்னடி பேச்சு இது? உன் மஞ்சகுங்குமத்துக்கு பழுதில்லாமே அவர்தான் ஒரு வழியா வந்து சேர்ந்துட்டரே....... அசடாட்டம் எதையோ பேசிண்டு"
இருவரின் குரலும் மெல்ல தேய்ந்து அந்த இருளோடின சமையற்கட்டு மீண்டும் நிசப்தமானது.. ஆபத்துக்கட்டம் தாண்டியாச்சு.. எனக்கு இதொண்ணும் புதுசில்லே.. மூணு மாசத்துக்கொருக்கா நடக்கிற வைபவம்தான். ரங்கம்மா இனி வரமாட்டாள். எங்கம்மாவும் மத்த கரப்புகளும் திரும்பிவர கொஞ்சம் நேரமெடுக்கும் அதுக்குள்ளே உங்களுக்கு என்னைப்பத்தின விருத்தாந்தமெல்லாம் சொல்றேன். சித்த பெரியமனசு பண்ணிக் கேளுங்கோ!
என்னடா இது? நீச்சக்கரப்பு சொல்றதையெல்லாம் கேக்கத் தலையெழுத்தான்னு என்னை ஒதுக்கிடாதேள். ‘புல்லாய் பிறவி தரவேணும், புழுவாய் பிறவி தர வேணும்’னுல்லாம் பாடரேளோன்னோ... அதெல்லாம் மெய்யின்னா என் கதையையும் நீங்க கேட்டுத்தான் ஆகணும் சொல்லிபிட்டேன்..
எங்க கரப்பு காலனியிலே யாருக்கும் பேரில்லே.. என்னத்துக்கு பேரு?.. இத்துணுண்டு வயத்துக்காக ஒரு ஜீவிதம்.. ஆனா எங்கம்மா மத்தக் கரப்பையெல்லாம் விட மேலானவள் . 'எந்த ஜென்ம பாவமோ கரப்பா பொறந்துட்டோம். ஆனாலும் மத்தவா வாயிலே விழுந்து எழுந்திருக்காம ஜீவிச்சிட்டு அந்த தேவநாதன் காலடியிலே சேர்ந்துடணும்' என்பாள்.
அம்மா பிறந்ததிலிருந்து இந்த வீட்டுப்படியை தாண்டினவளில்லை. ‘ப்ரபந்தம் முழங்கின வீடுடா இது’ என்று என்னையும் வெளியே விட்டவளில்லை. நான் கொஞ்சம் பெரியவனானப்புறம்தான் ஆத்த விட்டு வெளிய போய்வர ஒப்புத்துண்டா .அதுவும் எதுத்த கோவில் வரைக்கும்தான்.
யாருக்கும் பெயரில்லாத காலனியிலே எனக்குமட்டும் அம்மா ‘பாண்டுரங்கன்’னு பேரு வச்சா. செல்லமா ‘பாண்டு பாண்டு’ம்பா. மத்தவாளுக்கு என்னைமாதிரி நேரான பேரில்லேன்னாலும் , அடையாளத்துக்குன்னு ‘ஒத்த மீசையன்,சிடுமூஞ்சி, பெரிய கருப்பன், ஜீண்ட்ரம், பீன்சு’ன்னு கூப்பிட்டுப்பா...
எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்.. ரொம்ப சங்கோஜி.. சட்டுன்னு பழகிட மாட்டேன். என்னைப் பார்த்தா மத்த கரப்புகளுக்கு இளக்காரம்தான். நான் கச்சலா இருக்கிறது மட்டுமில்லே... என் உடம்பு நெறம் வெளுத்து சோகையாய் இருப்பேன்.. தாளிப்புலே தப்பி விழுந்த உளுத்தம் பருப்பாட்டம் ஒரு நெறம்.. கேலி பண்ண மத்தவாளுக்கு இது போதாதா? அப்பப்போ அம்மாண்ட சொல்லி அழுவேன்.
‘உனக்கென்னடா ராஜா குறைச்சல்? நம்ம ஜாதிக்கே இல்லாத நெறம்டா உனக்கு.. ரங்கம்மா வைக்கிற சேமியா பாயசம் கூட உன் நெறம் தான்.. கரப்புகளுக்கு தெரியுமா அழகும் அழுக்கும்..’ ன்னு சமாதானம் சொல்வா.
நேத்து பாருங்கோ... ஒத்த மீசையன் என்னை வீணுக்கு வம்புக்கிழுத்தார். எங்க காலனியிலேயே மூத்தக் கரப்பு அது. கோவிலுக்கு தப்பாம போயிட்டு வரும். ஆனா போறவர்றவாளையெல்லாம் நொட்டை சொல்லும்..
நானு தேமேண்டு எறும்பு ஊர்கோலத்தை வேடிக்கை பார்த்துண்டிருந்தேன்.
“என்னடா பாண்டு? இப்படி வெறிச்சுவெறிச்சு பார்த்துண்டிருக்கே? எறும்பெல்லாம் உன்னை மிந்திரிபருப்புன்னு இழுத்துண்டு போயிடப் போறது!”
அவருக்கு என்னோட நெறத்தை கிண்டல் பண்ணல்லேன்னா போதுபோகாது. ஒருபக்கம் மீசைஇல்லாமப் போனாலும் நையாண்டிக்கு குறைவில்லே. நானொண்ணும் பதில் சொல்லல்லே. கோவிலப்பாக்க நடை கட்டினேன்.
“உனக்கு சும்மா ஒண்ணும் பாண்டுன்னு பேர் வைக்கல்லேடா உங்கம்மா. பொருத்தமாத்தான் வச்சிருக்கா போ!”
“ஸ்வாமி பேர் வச்சதுலே என்ன பொருத்தம் மாமா? அம்மாவுக்கு பிடிச்ச பேரு. வச்சுட்டா” என்றேன் தீனமாக.
‘பாண்டுரங்கன்’னு நினச்சுட்டியா? கூப்பிடறதோ பொருத்தமா பாண்டுன்னு மட்டும் தானே?”
"அதனால என்ன மாமா?"
"சாயங்காலம் கோவில்ல பாரதம் சொல்றா கேளு. தெரியும்.... ஹெஹ்ஹே!”
சித்த நாழியாச்சு.. ஓடி ஒளிஞ்ச மத்த கரப்பெல்லாம் ஒரு வழியா காலனிக்குள்ளே வந்துட்டா.. அம்மாவை பார்த்தப்பின்னே தான் சமாதானமாச்சு.
சாயங்காலமும் கோவிலுக்கு போனேன். பிரகாரத்துலே சேப்புசால்வை போர்த்திண்டு ஒரு மாமா கதை சொல்லிண்டு இருந்தார். அம்பாலிகா, விசித்ரவீர்யன், வேத வியாசர்ன்னு பேர்களெல்லாம் அவர் கதையில் வந்தன. தூணுக்கு இந்தப்புறம் நானும், அந்தப்புறமாய் நைவேத்தியத்துக்கு புளியோதரையுமா இருந்தா கதைதான் புரியுமா? “பகவானே! புளியோதரையை எல்லோரும் கைகொள்ளாம வாங்கி, சிந்திகிட்டே போகணும்னு வேண்டிகிட்டேன்.
அப்போதான் அந்த கதைசொல்ற மாமா சொன்னார்.
“வேதவியாசரைக் கூடினபோது அந்த முனியின் தோற்றம் கண்டு அசூயையில் அம்பாலிகா வெளிறிப் போனதால், அவளுக்கு பிறந்த பாண்டு மகாராஜா வெளுத்த அருவருப்பான தேகத்துடன் பிறந்தார்.”
அடடா ! பாண்டு மகாராஜாவுக்கும் என்னை மாதிரி வெளிறிப்போன தேகமா? ஓ....
அதான் ஒத்தமீசையன் ‘பாண்டுபாண்டு’ன்னு கிண்டல் பண்ணினாரா? மனசல்லாம் வலிச்சது.
தேவநாதன் வரப்ப்ரசாதி தான். புளியோதரை நான் வேண்டிகிட்ட மாதிரி தரையெல்லாம் சிந்திக் கிடந்தது. எனக்குத்தான் அதை சாப்பிட தோணல்லை.
நான் செத்துப்போனா, எறும்பெல்லாம்கூட அருவருத்து என்னை இழுத்துண்டு போகாது.
நான் யாருக்கு பிரயோஜனம்? என்னை ஏன் இப்படி பெத்தே அம்மா? உனக்கு என்னைப் பார்த்தா அருவருப்பில்லையா? இல்லை என்னைப் பிடிச்சா மாதிரி நடிக்கிறயா?
திரும்பிப் போகக்கூட தோணலே... இந்த அழகுல எனக்கு கல்யாணம் பண்ணனும்னு வேற அம்மா சொல்லிகிட்டிருந்தா. நான்கூட கனவெல்லாம் கண்டபடிதான் இருந்தேன். இப்போ புரியறது. நான் கனவுமட்டும்தான் காண முடியும்னு.
எல்லாம் போறும் போறும்..
“ஸ்...ஸ்..” ன்னு யாரோ கூப்பிடறமாதிரி இருந்தது. தூணோரம் கொஞ்சம் புஷ்டியா இன்னொரு கரப்பு தான் கூப்பிட்டது.. கிட்ட போனேன்.
“என்ன வேணும்.. நான் உங்களை பார்த்ததேயில்லையே.?”
“நான் இந்தக் கோயில்லையே தான் இருக்கேன். உங்களை அடிக்கடி பார்த்திருக்கேன். இப்படிஅப்படி பார்க்காமே போவேள்” என்றாள் அந்த புஷ்டி.
கேட்க மனசுக்கு சமாதானமா இருந்தது. “ என்ன வேணும் உங்களுக்கு?”
“எனக்கு நாலு பருக்கை புளியோதரை சிந்தலை இப்படி புரட்டிப்போட மாட்டேளா?”
இதென்ன?? இவளுக்கு நானென்ன வச்சஆளா?.
“ஏன்? நீங்களா எடுத்துக்க மாட்டேளா?”
“எனக்கு வேகமா நடக்க ஏலாது. ஒரு குழந்தை மிதிச்சு என் முன்னங்கால் போயிடுத்து. அதான் கேட்டேன்.”
அடடா... உடனே பருக்கைகளைப் புரட்டிக் கொண்டு வந்தேன்.
“கேட்கவே கஷ்டமா இருக்கு. எப்போ உதவி வேணும்னாலும் சங்கோஜமில்லாம கேளுங்கோ.”
“சந்தோஷம்.. உதவி வேணும்னா எப்படி உங்களை கேட்பேன்?..எங்கயோ வெளிய இல்லே இருக்கேள? எப்பவாவது இந்த பக்கம் வந்தால் பார்த்துக்கலாம். நான் வரேன்”.
மிச்சமிருந்த கால்களைஉந்தி தன்உடலை இழுத்தபடி மெள்ள சென்றாள். அடுத்திருந்த சுவரின் விரிசலுள் மறைந்தாள்.
அங்கேயே நின்று விட்டேன். என்னைப்போல இன்னொரு பாவப்பட்ட ஜென்மம்.. கொஞ்ச நேரம் போயிருக்கும்
“ பாண்டு.. பாண்டு” அம்மாதான் தேடி வந்துகொண்டிருந்தாள்.
“இங்கேயிருக்கேன்மா”
“கொஞ்ச நேரம் தவிச்சு போயிட்டேண்டா. இங்க தான் இருக்கியா?”
“ என்ன பாண்டு... என்ன யோசனை?”
“அம்மா.. நாம இனிமே இந்தக் கோயில்லையே இருக்கலாம்மா”
“பைத்தியமா உனக்கு? அந்த வீட்டுக்கு என்னடா? அது பிரபந்தம் ..”
“போறும்மா... பிரபந்தம் எப்பவோ முழங்கின வீடு தானே...இப்ப என்ன முழங்கறது.?. எப்பப்பாரு ரங்கம்மாவோட புலம்பல்.. இந்த இடத்துல இப்பவும் பிரபந்தம் முழங்குது அம்மா.. அர்ச்சனைகளென்ன? வேத கோஷமென்ன? பாரதமும் ராமாயணமும் பிரவசனம் ஆகிறதென்ன? நான் முடிவு பண்ணிட்டேம்மா. இனிமே இங்கயே இருப்போம்மா”
‘ஆமாம் மாமி.. இனிமே இங்கேயே இருங்கோளேன்’ என்று நாணத்துடன் புஷ்டி வெளியே வந்தாள்
ஆச்சு... என்ன அப்பிடியே நின்னுட்டேள் ??எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்கோன்னா.... எனக்கும் உங்களைப்போல பெரியவா யாரு இருக்கா? வந்து ரெண்டு அட்சதைபோட்டுட்டு கோயில்ல புளியோதரை பிரசாதம் வாங்கிண்டு போங்கோ... புதுசா மடப்பள்ளிகுள்ளேயே ஜாகை பார்த்துருக்கேன்.. வரட்டுமா?
கரப்பாம்பூச்சிக் காலனி :))
பதிலளிநீக்குப்ரபந்தம் முழங்கின வீட்டுமேல் கரப்புக்கு கூட என்னவொரு பிரேமை...!
மத்தவா வாயிலே விழுந்து எழுந்திருக்காம ஜீவிச்சிட்டு அந்த தேவநாதன் காலடியிலே சேர்ந்துடணும்//
எண்ணம் கூட நம்மாட்டமே...!
‘உனக்கென்னடா ராஜா குறைச்சல்? நம்ம ஜாதிக்கே இல்லாத நெறம்டா உனக்கு.. ரங்கம்மா வைக்கிற சேமியா பாயசம் கூட உன் நெறம் தான்.. கரப்புகளுக்கு தெரியுமா அழகும் அழுக்கும்..’ ன்னு சமாதானம் சொல்வா. //
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா !
ஒத்த மீசையன்,சிடுமூஞ்சி, பெரிய கருப்பன், ஜீண்ட்ரம், பீன்சு’//
நல்லாயிருக்கு சார் பேரெல்லாம்.
பாண்டுரெங்கனை பாண்டுன்னு கூப்பிட்டா ரெங்கன் மறைஞ்சுடறார் .
“பகவானே! புளியோதரையை எல்லோரும் கைகொள்ளாம வாங்கி, சிந்திகிட்டே போகணும்னு வேண்டிகிட்டேன்.//
அவாவாளுக்கு அவா அவா கவலை:))
தேவநாதன் வரப்ப்ரசாதி தான்//
கேட்டவர்க்கு கேட்டபடி வாழ்வு தருபவராச்சே...!
கரப்பு கதையும் மனுஷா கதை போலன்னா முடிஞ்சிடுத்து! பகவானே... ஷேமமா இருங்கோ!
அந்த கரப்பு பாண்டூக்கு ஒரு வேளை albino வியாதியோ? கரப்புக்கும் மனித உணர்வுகள் கொடுக்கும் அபார கற்பனை.
பதிலளிநீக்குகதை அருமை.
பதிலளிநீக்குகரப்பான் பூச்சியை பார்க்கும் போதேல்லாம் பாண்டு கதை நினைவுக்கு வந்து விடும் இனி.
கதை அருமை அண்ணா...
பதிலளிநீக்குமிகச் சிறப்பாக இருந்தது.
எப்படிங்க இப்படில்லாம் எழுதறீங்க? பொறாமையா இருக்கு! :)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குகதை கொண்டு சென்ற பாங்கு நேர்த்தி!
ஒரு ஜெயகாந்தனின் கதை படிக்கும் மோஸ்தரில் இருந்தது.
இன்று சாயந்திரமே, என் பெற்றோர்களிடம் படித்துக் காண்பிக்கப் போகிறேன்!
அடடா..... எப்படி உங்க பக்கத்தை இப்படிக் கோட்டை விட்டுருக்கேன் இத்தனை நாளா?
பதிலளிநீக்குகரப்புக்கு ரத்தம் கூட வெள்ளைதானே. அதனால் மேனி வெளுத்திருந்தாலும் அழகாத்தான் இருக்கும். பாண்டுகிட்டே சொல்லிருங்கோ.
எங்கூர்லே கரப்ஸ் கிடையாது.
என்ன ஊரோ?
போகட்டும்.... விட்டுப்போனவைகளைப் போய் வாசிக்கிறேன்.
ஜெர்மென் மொழியில் ஃப்ரான்ஸ் காஃப்காவின் மெடமோர்ஃபோஸிஸ் என்னும் சிறுகதை இலக்கியத்தில் மிகவும் பிரபலமானது.
பதிலளிநீக்குக்ரெஹர் சாம்ஸா என்ற பாத்திரம் ஒரு நாள் காலை எழும் போது தன்னை ஒரு கரப்பான் பூச்சியாய் எண்ணி மருகுவான்.
அந்தக் கழிவிரக்கத்தைத் தள்ளி விட்டு மனிதாபிமானத்தோடு கரப்பான் என்ற ஒரு ஜீவனுக்குள் புகுந்து அதன் குரலால் பேசி இருக்கிறீர்கள் மோகன்ஜி.
இந்தப் பாண்டுவின் ரிஷிமூலம் பாரதத்தின் பாண்டுதான் என்பது என் யூகம்.
எழுத்தின் மெருகு அப்படியே இருக்கிறது. அடுத்தடுத்த கதைகளில் அது இன்னும் பளிச்சிடும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நானும் விரைவில் கைகள் அள்ளிய நீருக்குத் திரும்பி வர இருக்கிறேன். எனக்கு முன்பு கருத்துகள் மூலம் தொட்ட அனைவரையும் நேரில் சந்தித்த ஓர் உணர்வு.
நிலா மேடம்!
பதிலளிநீக்கு//கரப்பு கதையும் மனுஷா கதை போலன்னா முடிஞ்சிடுத்து! பகவானே... ஷேமமா இருங்கோ!//
கரப்புக்கும் நமக்கும் ஏதும் வித்தியாசமிருக்கா என்ன?நாமெல்லாம் நிறையா படிச்சிட்டு,நிறையா கோபதாபம்,குழுமனப்பான்மையோட பெருகக் கட்டி சிறுக வாழ்ந்த வண்ணம் இருக்கிறோம்.. சிரிக்கவும்,பிறரை அழ வைக்கவும் தெரிந்த ஆடைகட்டின உயர்பிறவி கரப்புகள் தானே?
உங்கள் ஆசிகளை கரப்பு தம்பதிகளுக்கு தெரியப்படுத்தி விட்டேன்.
GMB சார்! உண்மைதான்! ஒரு அல்பினோ சோகைக்கரப்பை லிப்ட் ஏறும் போது பார்த்தேன். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் பாண்டு உங்களைப் பார்க்க தயாராகி விட்டான்..
பதிலளிநீக்குகோமதி அரசு மேடம்!
பதிலளிநீக்கு//கரப்பான் பூச்சியை பார்க்கும் போதேல்லாம் பாண்டு கதை நினைவுக்கு வந்து விடும் இனி//
நல்லவேளை! வைப்பர் போல ஆடும் மீசையுடன் என் முகம் நினைவுக்கு வரும் என சொல்லாம விட்டீர்கள்..
இதற்கு முந்தைய கவிதைகளைப் பார்த்தீர்களோ?
குமார்! மிக்க நன்றி..
பதிலளிநீக்குகீதா சாம்பசிவம் மேடம்! உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுங்க! நல்லா எழுதறேன்னு சொன்னீங்களே ஒரு வார்த்தை...(ரெண்டு வார்த்தையோ?) ரொம்ப நல்லா இருங்க மேடம்!
பதிலளிநீக்குமூவார்! நலம் தானே? உங்களுக்கு ஜெயகாந்தனைப் பிடிக்கும்னு தெரியும்.. என்னையும் பிடிக்கும்னு இன்னைக்குத்தான் தெரிஞ்சுகிட்டேன்..
பதிலளிநீக்குஅப்பாஅம்மாவிற்கு படித்துக் காட்டுவதாய் சொன்னது எனக்கு கனகாபிஷேகம் பண்ணின ஜிலிப்பு!
துளசி மேடம்! வாங்க மேடம்.. நலம் தானே?
பதிலளிநீக்குஎன்னது? உங்க ஊர்ல கரப்பு இல்லையா? அப்போ பல்லியெல்லாம் பிட்சா தான் சாப்பிடுதோ?!
அடடா! என் சுந்தரா! வாரும் பிள்ளாய்! வாரும்.. எவ்வளவு நாளாச்சு? என்னவோ நானு "சங்கத்த கலைங்கடா"ன்னு சொன்னதுபோல் காணாம போயிட்டமேன்னு வருத்தமா இருந்தது. 'கையில் அள்ளிய நீர்'மீண்டும் துவங்கும் என்ற செய்தி காதுக்கு அமிர்தம்..
பதிலளிநீக்குநிலாமகள்கிட்டே சுந்தர்ஜி மீண்டும் வருவார்னு பந்தயம் கட்டியிருக்கேன். உங்க முதல் பதிவு வந்தவுடன் எனக்கு ஒரு பவுன்ல மோதிரம்னு சொல்லியிருக்காங்க.
சீக்கிரமா பதிவிடுங்க பிரதர்.. என் மோதிர விரல் துடிக்குதே!
மோகன் ஜி,
பதிலளிநீக்குஎங்கூர் பல்லியா????
உங்க ஐயம் தீர்க்க இங்கே:-)
http://thulasidhalam.blogspot.com/2012/05/there-is-dragon-on-wall.html
வெள்ளைக் கரப்பு பலமுறை பார்த்ததுண்டு..... எல்லோரும் தான் பார்கிறார்கள்.
பதிலளிநீக்குஉங்களுக்கு மட்டும் தான் அந்த வெள்ளைக் கரப்பிலும் ஒரு கதை இருப்பது தெரிகிறது.
கதை முழுவதுமே கரப்பின் கதை என்பதை மறந்தே படித்த உணர்வு.
ரசித்தேன் மோகன் அண்ணா!
துளசி மேடம்! சுட்டிக்கு நன்றி. அருமையா எழுதியிருக்கீங்க.. சின்ன வயசுல அடம்பண்ணி ஹார்லிக்ஸ் குடிக்காத முதலைதான் வளராம பல்லியா நின்னு போச்சு!
பதிலளிநீக்குவெங்கட்! சுகம் தானே? பாராட்டுக்கு நன்றி தலைவரே...
பதிலளிநீக்குகொஞ்சம் லேட்டா வரேன்.. மனசு குறுகுறுக்கிறது.. கரப்பான் பூச்சியை நாயகனாக்கி உங்கள் கைவண்ணம் ஜொலிக்க எழுதியிருக்கிறீர்கள்.. இதை மனிதராகவும்.. பாண்டுவை மடப்பள்ளி ஆளாகவும் கூடக் காட்டியிருந்தாலும் இயல்பாய்த்தான் இருந்திருக்கும்.. உங்களின் வித்தியாசமான பார்வை கூடுதல் சுவை சேர்த்து விட்டது .. ஐயங்கார் ஆத்து புளியோதரை போல !
பதிலளிநீக்குவாங்க ரிஷபன்!
பதிலளிநீக்கு//இதை மனிதராகவும்.. பாண்டுவை மடப்பள்ளி ஆளாகவும் கூடக் காட்டியிருந்தாலும் இயல்பாய்த்தான் இருந்திருக்கும்.. உங்களின் வித்தியாசமான பார்வை கூடுதல் சுவை சேர்த்து விட்டது .//
உங்கள் பார்வை என்றும் படைப்பாளியின் பார்வை. சாத்தியங்களை அலசியபடி.
கரப்பான் ஊடே அழகான கதை மடப்பள்ளியில் வேலை செய்யும் போது உங்க நினைப்பு வரப்போது அண்ணாச்சி.
பதிலளிநீக்குஎனக்கு பின்னூட்டம் எழுதனும்னு தான் தோண்றது.. என்ன எழுதணும்னு தோணலியே....
பதிலளிநீக்குகரப்புக்கும் உண்டப்பா காதலென்று சொன்ன
பதிலளிநீக்குசிறப்பில் மகிழ்ந்தேன் சிலிர்த்து.- பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கென்று இந்த உணர்வைத்தான்
சொல்லாமல் சொன்னானோ சொல்.
கரப்புக்கும் உண்டப்பா காதலென்று சொன்ன
பதிலளிநீக்குசிறப்பில் மகிழ்ந்தேன் சிலிர்த்து.- பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கென்று இந்த உணர்வைத்தான்
சொல்லாமல் சொன்னானோ சொல்.
தனி மரம் சார்! மடைப்பள்ளியில் என் நினைப்பா? உப்பை அள்ளியள்ளி போட்டுடாதேயும்!
பதிலளிநீக்குவா சிவா! ரொம்ப நாளாச்சு!
பதிலளிநீக்குகருத்தாய் உன் கவிதை...
கருத்தான ஒரு கவிதை..
துரை சார் ! உங்களுக்கு பதில் சொல்ல விட்டுப் போச்சே! என்ன எழுதறதுன்னு தோணல்லியா?! எதாவது எழுதினாத்தான் மடப்பள்ளியிலிருந்து புளியோதரை தருவேன்...ஆமாம்...
பதிலளிநீக்குகரப்பான் பூச்சியைக் கண்டாலே அருவருக்கும் பலர் இந்தக் கதை வாசித்துமுடித்து அச்சம் மாறிப்போயிருக்கும் சாத்தியம் மிக அதிகம். வெள்ளைக்கரப்பைப் பார்த்தநொடியே அதன் உள்ளப்பரப்பில் ஊர்ந்துசென்று வாழ்வை எழுத்தில் வடித்த அழகுக்குப் பாராட்டுகள் மோகன்ஜி.
பதிலளிநீக்குகீதமஞ்சரி! உள்ளபடியே இந்தப்பாராட்டை ரசித்தேன்.. குரங்கை வரைந்து அம்மாவிடம் நீட்டி, சபாஷ் பெரும் குழந்தையைப்போல
பதிலளிநீக்குகோவில் பற்றிய விவாதம் ஏதும் இதிலே காணோமே, தம்பி! :)
பதிலளிநீக்குஅக்கா!இந்தக் கதையின் களம் பற்றி ஒரு விவாதம் எங்கோ நடந்தது . இங்கில்லை போலிருக்கே
நீக்கு//எந்த ஜென்ம பாவமோ கரப்பா பொறந்துட்டோம். ஆனாலும் மத்தவா வாயிலே விழுந்து எழுந்திருக்காம ஜீவிச்சிட்டு அந்த தேவநாதன் காலடியிலே சேர்ந்துடணும்' என்பாள்.//
பதிலளிநீக்குபாவமில்லையா இவையும் இறைவன் படைப்புத்தானே நாம் ரெண்டு காலில் நடக்கிறோம் அதுங்க 3 ஜோடி காலோட நடக்குதுங்க ..
//பகவானே! புளியோதரையை எல்லோரும் கைகொள்ளாம வாங்கி, சிந்திகிட்டே போகணும்னு வேண்டிகிட்டேன்
//
நானும் வேண்டிக்கறேன் எல்லாரும் சிந்திட்டே போனா இவங்களுக்கு வீட்டுக்குள் வரவும் நம்மகிட்ட அடிவாங்கவும் வேண்டியிராது
//
அங்கேயே நின்று விட்டேன். என்னைப்போல இன்னொரு பாவப்பட்ட ஜென்மம்.. கொஞ்ச நேரம் போயிருக்கும் //
இன்னும் 5 நிமிஷத்தில் பாண்டுவுக்கு fan கிளப் ஆரம்பிச்சிருவேன் போலிருக்கே :)
சார் அட்டகாசமான கதை கரப்பான் பூச்சியாவே மாறி அதன் பார்வையில் எழுதப்பட்ட கதை ,
பூச்சிகளுக்கும் தாய்ப்பாசம் ,நக்கல் நையாண்டி காதல் எல்லா உணர்வுகளும் இருக்கும் ..இனிமே எங்கேயாவது இவங்களை பார்த்தா பயமே வராது இந்த கதையை வாசிப்பவருக்கு :)
மோல்டிங் டைமில் வெள்ளையா இருப்பாங்க நீங்க பாண்டுவை சந்தித்தது அந்நேரம்னு நினைக்கிறேன் :)
அப்புறம் பாண்டுவும் புஷ்டியும் மடப்பள்ளி ஜாகையில் 16 உம் பெற்று பெருவாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறேன் :)
வாங்க ஏஞ்சலின். கரப்பாக மாறி தான் அதை எழுதினேன். நன்றாக ரசித்திருக்கிறீர்கள். நன்றி! உங்கள் வாழ்த்தை பாண்டுவுக்கும் புஷ்டிக்கும் தெரிவித்து விடுகிறேன்!
நீக்கு