ஒரு நல்ல மொழியாக்கம் என்பது அந்தரத்தில் கட்டிவைத்த கம்பியின் மேல் நடப்பது மாதிரி. அது செப்பிடு வித்தை. மூலமொழிக்கே உரித்தான சொற்பிரயோகங்கள், நடை, வாக்கிய கட்டமைப்புகளை மொழியாக்கம் செய்யப்படும் பெறுமொழிக்குரிய கட்டுமானத்துக்குள் கொண்டு சேர்ப்பது சிற்பம் செதுக்குவது போல. அப்படிக் கொண்டு வருவதை மாற்றமொழியின் மரபுக்குண்டான வகையிலும் சொல்லப்பட வேண்டும். அப்படி சொல்லப்பட்டது,அம்மொழியின் புதிய ஆக்கமாகவே ஏற்கும் வகையில் அமையவும் வேண்டும்.
நல்ல வாசகன், சமையற்கலையை நன்கறிந்த சாப்பாட்டுராம புருஷன் போன்றவன். ருசிபேதம் அறிந்தவன். ரசமண்டியை சாம்பாராக்கினால் கண்டுபிடிப்பவன்; வாசனையிலேயே உப்பு சேர்க்காததை உணர்ந்து கொள்பவன். அத்தனை இலக்கியமும் அத்தகைய நல்ல வாசகனை மனதில் நிறுத்தியே எழுதப்பட வேண்டும். நல்ல சுவடிகள் காலவெள்ளத்தையும் எதிர்த்து கரை சேரும்.
மொழியாக்கத்தினை படிப்பவரின் மனவோட்டமும் முன்முடிபுகளும் கூட இங்கு கவனம் கொள்ளத்தக்கது. வேற்றுமொழியின் நகலிது என்று தெரிந்தே படிப்பது,வாசிப்பனுபவத்தில் ஒரு மாற்று குறைவுதான். அயலார் வீட்டு தலையணையை தலைக்குவைத்து படுத்திருப்பது போன்ற சங்கடமும்,சிறிய மனவிலக்கமும் மொழிபெயர்ப்பை வாசிக்கும் போது நேர்வது தவிர்க்க இயலாதது. அதையும் மீறி வாசகனை கட்டிப்போடும் எழுத்தாளுமை கைவரப் பெற்ற மொழியாக்க எழுத்தாளர் வரிசையில், கண்டிப்பாக சகோதரி கீதாமதிவாணனை வைப்பேன். அவரின் மொழிபெயர்ப்பு நூலான ' என்றாவது ஒரு நாள்'அண்மைக்காலங்களில் நான் வாசித்த நல்லதோர் முயற்சியாகும். இந்த முயற்சியை நான் மொழிபெயர்ப்பு என்று பகுக்காமல் மொழியாக்கம் என்பதற்கு காரணம் மேற்சொன்ன கூறுகளே.
ஆஸ்திரேலியாவின் மாபெரும் சிறுகதையாசிரியரும் கவிஞரும் எழுத்தாளருமான 'ஹென்றி ஹெட்ஸ்பர்க் லாஸன்'இரு நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய ஆஸ்திரேலிய புதர்க்காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகளின் மொழியாக்கமே இந்நூல். புலம்பெயர்ந்த ஐரோப்பிய வந்தேறிகளே இந்த புதர்காடுறை மாந்தர்கள் .
காடுறை வாழ்க்கையின் ஆபத்துகளும், அச்சந்தரும் தனிமையும், சுரங்கத் தொழிலாளிகளின் பரிதாப வாழ்க்கையும் சுரங்கநிலங்கள் கைவிடப்படும்போது எழும் வறுமையும் இயலாமையும், வேலை வாய்ப்புகளைத் தேடி நகர்ப்பறங்களுக்கு இடம்பெயரும்போது எதிர்கொள்ளும் சவால்களுமாய் . அந்த ஐரோப்பியரின் வாழ்க்கைச்சிக்கல்களை, புலப்பெயர்வின் சொல்லொணா இன்னல்களை மையக்கருவாய்க்கொண்டு லாசன் படைத்த அற்புதமான கதைகள் இவை.
இந்த செவ்வியல் படைப்பாளியின் சீரிய ஆக்கத்தை, அந்தக் கதைகள்நிகழ்ந்த காலத்திற்கான மனநிலையை வரித்துக் கொண்டு , கதைமாந்தர்களின் போக்கையும் படைப்பாளி எத்தனித்த தாக்கத்தையும் உள்வாங்கி இந்த படைப்பு நேர்படவே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கீதா மதிவாணனுடன் போட்டிபோட்டுக்கொண்டு லாசனைப் படிக்க நேர்ந்தது. இந்த மதிப்புரைக்கான தாமதமும் அதனாலே தான். மூலமொழியில் படைப்பாளியின் படைப்பூக்கத்தை பழுதின்றி,சிதைவுகள் இன்றி தமிழுக்கு மடைமாற்றியது பாராட்டுக்குரியது.
இந்தத்தொகுப்பில் மொத்தம் 27கதைகள். லாசன் , தன் கதைமாந்தர்களையும் கதைக்களனையும் உருவாக்கியவிதம் எழுதுவதில் ஆர்வம் உள்ளோர் கைகொள்ளவேண்டிய யுக்தியாகும். ஒரு குறிப்பிட்ட குழுவின் வாழ்க்கைச் சித்திரங்களையே இத்தொகுதி பேசினாலும், கதைகள் வெவ்வேறு வாசிப்பனுபவங்களை அளிக்கின்றன.
முதல்கதையான 'மந்தையோட்டியின் மனைவி' அழையா விருந்தாளியாய் வீட்டினுள் நுழைந்த பாம்பைக் பற்றியது. கணவன் வீட்டிலில்லாத நேரம். குழந்தைகளுடன் தனியே இருக்கும் மனைவி இந்த இக்கட்டை எதிர்கொள்வதை சுவையாக விவரிக்கின்றது. நமக்கும் அந்த பரிதவிப்பும் படபடப்பும் தொற்றிக் கொள்கிறது.
சீனத்தவனின் ஆவி நம்மையும் அச்சுறுத்துகிறது. அந்த ஆவியே ஒரு படிமமாகி கதையை நகர்த்துகிறது. எவற்றுக்கெல்லாம்தாம் நாம் அரண்டபடியே இருக்கின்றோம்?!
'ஒற்றைச்சக்கரவண்டி' ஒரு குடும்பத்து உறுப்பினர்களின் மனநிலையை நுட்பமாக கையாளுகிறது.
'மலாக்கி' ஒரு அசடனின் கதை. அனைவரின் ஏளனத்திற்கும் உள்ளாகும் அவனுக்குள்ளும் பாசமும் நேசமும் உண்டென்பதை அவன் மரணத்தில் மற்றவர்கள் உணர்கிறார்கள். அந்தக் கழிவிரக்கம் நம்முள்ளும் உருக்குகின்றது.
'என்றாவது ஒருநாள்' கதையில் ஒருபகுதி: "இப்போது செய்வதற்கு ஒன்றுமில்லை... ஒரு வேளை உணவுக்காக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறோம். வயதாகும்வரை... நம்மைப் பற்றிய சிரத்தை குறையும்வரை.. உடல் அழுக்கடையும்வரை... இந்த ஓட்டம் தொடரும். இன்னும் வயதாகும்... இன்னும் சிரத்தை குறையும்... இன்னும் அழுக்கடவோம். இப்படியே இந்த மண்ணுக்கும் புழுதிக்கும் வெக்கைக்கும் ஈக்களுக்கும் கொசுக்களுக்கும் பழகிப்போவாம். இலக்கைத் தொலைத்து நம்பிக்கையைக் கைவிட்டு ஒரு மாடு மாதிரி கால்நடை வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொள்கிறோம். ஒரு நாயைப் போல போகுமிடமெல்லாம் நம்மோடு வருகிறது உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது இந்த முதுகுப் பை. அது இல்லாவிடில் சுமையற்றத் தோள்களும் எதையோ இழந்தது போலான தவிப்பும் நம்மைப் இயல்பாயிருக்க விடுவதில்லை." - எப்படி அந்த ஆற்றாமையும் இயலாமையும் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது பாருங்கள். ஒரு படைப்பாளியே மொழிமாற்றம் செய்யுமுகந்தான் இத்தகைய இயல்பான வரிகள் விழும். குறைகளைன்று பெரிதாய் ஒன்றுமில்லை. இன்னமும்கூட கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக்கொண்டு தமிழ்சிலம்பம் சுற்றியிருக்கலாம்தான். ஆனால் அது எந்த வகையாகவும் போயிருக்கலாம். கீதாவின் சுயகட்டுப்பாட்டுக்கு பாராட்டுகள்.
இந்தத் தொகுதியின் பிறகதைகளை, படிப்பவர் பார்வைக்கே விடுகின்றேன். இந்தக் கதைகளின் முழுமையான வாசிப்பில் ஒரு காலகட்டத்தின் கலாசாரமும் வாழ்க்கை போட்டுவிடும் இறுக்கமான முடிச்சுகளும் நம் நினைவுகளில் சுற்றியபடியே இருக்கின்றன. இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இவற்றில் பலவும் நம்மை சுற்றி நடந்தபடியேதான் இருக்கின்றன என்பது ஆச்சரியமான நிகழ்வு தான்.
திருமதி கீதா மதிவாணனின் இந்தத் தொகுப்பு ஒரு செய்தியை உரத்துச்சொல்கிறது. இதுபோன்ற பல தரமான மொழியாக்கங்கள் தமிழில் வர வேண்டும். புதிய சாளரங்கள் திறந்து பலவாய் இலக்கிய காட்சிகள் விரிவுபட வேண்டும்.
இன்றும்கூட,ஆஸ்திரேலியா போற்றும் செவ்வியல் படைப்பாளியான லாசனின் அறிமுகத்திற்கும், ஆற்றொழுக்காய் அவர் கதைகளை தமிழில் அள்ளிவந்ததிற்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
40 comments:
//ஒரு நாயைப் போல போகுமிடமெல்லாம் நம்மோடு வருகிறது உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது இந்த முதுகுப் பை. அது இல்லாவிடில் சுமையற்றத் தோள்களும் எதையோ இழந்தது போலான தவிப்பும் நம்மைப் இயல்பாயிருக்க விடுவதில்லை//
இதைப் படித்தபின், இல்லை படிக்கும்போதே,
தொய்ந்து போன என் தோளில் ஒரு பக்கமாகத்
தொங்கி வரும் அந்த முதுகுப் பை யைப் பார்த்தேன்.
உற்றுப்பார்த்த பார்த்தேன். அது ஏதோ பேசுகிறது போல்
தோன்றியது.
ஆம். பை தான் பேசுகிறது. என்னைபார்த்து அல்ல.என் உடலைப் பார்த்து.
"நாய் என்று சொல்வது நீயோ எனத் தோன்றியது.
நீ ஒரு நாள் போன பின் , என்னை யார் நன்றியுடன் சுமந்து செல்வார்?"
சு தா
சுதா! உங்களுக்கும் பின்னால் காணும் நாயோ பாண்டவர்களைத் தொடர்ந்த நாய்! தத்தாத்ரேயன் பக்கலில் பரவிய நாய். பைரவஸ்வானம்... இன்னமும் நிறைய காலமிருக்கிறது. பதறாதிரும்...
//பதறாதிரும்////
?????????
பதறுவதா???/? !!!!
எதற்கு ???
இந்த உயிர் உடலை விட்டு போய் விடுமோ என்றா ?
சந்தோஷம் அல்லவா அந்த நாள்.
அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ வாபி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முஞ்சதி ஆஷா பிண்டம்.
ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி என்று பழைய பூணூலைக் களைவது போல,
உயிர் உடலைக் களைந்து போடும்போது தானே
இந்த ஆசைகளும் (நிராசைகளும்) விழும் !!
அந்த முதுகைப் பை ஒருவேளை
இந்த ஆஷா பிண்டம் தானோ என்னவோ ??
கீதா மணிவாணன் அவர்களின் இந்த வரியின் கட்டமைப்பில் பதிவைப் பற்றி தங்களது கருத்துரையைப் பற்றி சொல்ல மறந்தேனோ ??
பின்னே வருவேன்.
சுப்பு தாத்தா.
அதானே பார்த்தேன்!
காயமே இது பொய்யடா-வெறும்
காற்றடைத்த பையடா ன்னு பாடின சித்தன் தோளில் சுமந்த பையோ இது?
பையே ஒரு பையை சுமக்கும் விசித்ரம்!
//பின்னே வருவேன்'// பின்னே இருந்த பையைப் பற்றி பேசுங்கால் நீங்கள் பின்னே வருவேன் எனில், பை முன்னே வருமா? வாரும்... பையப் பைய வாரும். பையோடு வாரும்..பை நிறைய பணத்தோடு வாரும் !!
நல்ல பகிர்வு. திருமதி கீதா மதிவாணன் எஹுதி இருக்கும் இந்தப் படைப்புகளில் சியவற்றை அவரது தளத்தில் நான் வாசித்து, ரசித்து மகிழ்ந்திருக்கிறேன். அவருக்கு எங்கள் வாழ்த்துகளும்.
"பெறுமொழிக்குரிய, மாற்றமொழியின் (இங்கு ஒரு ஸ்பேஸ் மிசிங்? அல்லது மாற்றுமொழி?) முன்முடிபுகளும்" போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் புரியவில்லை.
// எஹுதி// //சியவற்றை//
எழுதி, சிலவற்றை!
பிழை திருத்தம்!!!!!
அருமையான விமர்சனம்.
கீதமஞ்சரி அவர்களுக்கு பாராட்டுகள்.
//மொழியாக்கத்தினை படிப்பவரின் மனவோட்டமும் முன்முடிபுகளும் கூட இங்கு கவனம் கொள்ளத்தக்கது. //
பல நேரங்களில், மொழி பெயர்ப்பு நூலை படிப்பவர், முன்னமேயே அதன் மூலத்தையும் படித்திருக்கும் சாத்தியக் கூறுகளும் உண்டு.
இரண்டாவது, மொழி பெயர்ப்போர் பெரிதும் தாம் மொழி பெயர்த்திடும் நூலினை அம்மொழி பேசப்படும் மக்கள் தம் இயல்பு நடையில் சொல்லாது, தத்தம் சொற்கட்டுத் திறனைக் காட்டிடவே செய்கின்றனர்.
மூன்றாவது, மொழி பெயர்ப்பில் தனது முன் மன உறுதிப் பாடுகளை நுழைத்து விடுகின்றனர். மொழி பெயர்க்கவேண்டும், அதே சமயம் தமது நிலைப்பாடுகளையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று நினைப்பவர் உண்டு. இவர்களின் மொழி பெயர்ப்பில் இவர்களது மொழி வல்லமை தெரிகிறதே தவிர, மூலத்திற்கு அவர்கள் செய்யும் நீதியாக என்னால் கருத இயலவில்லை.
இதைத் தவிர, சிலர் இந்த "செப்பிடு வேலையில்" தன்னாலும் முடியும் என்று காட்ட வேண்டும் அல்லது தனக்கும் அந்த மொழியிலோ அந்த நூலிலோ பாண்டித்தியம் உண்டு எனப் பிரதர்சனம் செய்ய ஆவலுற்று, அந்த நூலில் முன்னமேயே ஏதேனும் இரண்டு மூன்று மொழி பெயர்ப்புகளைப் படித்து விட்டு , தனக்குப் புரிந்த வகையில், எதை மொழி பெயர்ப்பதாகச் சொல்கிறார்களோ, அந்த மொழியே தெரியாத நிலையில் கூட , தான் மொழி பெயர்த்ததாக கூறும் நிலை பார்க்கிறேன். இவர்களைக் கண்டால், மனம் இவர்களைப் பார்த்து வருத்தம் தான் கொள்கிறது.
இதைப் பற்றி இன்னமும் சொல்ல இரண்டாயிரம் சொற்கள் இரண்டு நாட்கள் வேண்டும்.
நீங்கள் கருத்துரை வழங்கி இருக்கும் திருமதி கீதா அவர்களின் நூலை வாங்கியேனும் படிக்கவேண்டும் என்ற ஆவலைக் கிண்டி இருக்கிறீர்கள் .
வழக்கம் போல, உங்களது பதிவு
வாழை இலை விருந்து.
சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
சிலரது ஓரவஞ்சனை புரிவதில்லை. நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே ஆனால் எது குற்றம் என்று மட்டும் சொல்ல மாட்டோம் ஹூம் ...
Source language- மூலமொழி
Target language- பெறுமொழி. மொழிமாற்றத்தை பெறுமொழி
'மாற்றமொழி' என்பது பெறுமொழி என்றிருக்கிறேன் வேண்டும் .சுட்டியமைக்கு நன்றி.
நன்றி ஶ்ரீராம்!
நன்றி வெங்கட்! உங்க புத்தகம் எப்போ அண்ணே?
சூரி சார். மிக அழகாக சொன்னீர்கள். மொழியாக்கத்திற்கு விதிகளை தீர்மானிப்பது அந்தந்த மொழிபெயர்ப்பாளர்களே! படிப்பது வாசகன்' விதி' !
வரிக்குவரி மொழி பெயர்ப்பது ஒருவகை.
பெறுமொழியின் தன்மைக்கேற்ப அங்கங்கு சிறு சுதந்திரம் எடுத்துக்கொண்டு கொஞ்சம் பட்டிபார்த்து நகாசு செய்வது மறுவகை,
நீங்கள் சுட்டியபடி மொழியாக்கமென்ற பெயரில் மனம்போன போக்கில் மட்டையடி அடிப்பது வேறு வகை.
கதைகளை விடுங்கள்.... ஷேக்ஸ்பியரையே 'செகப்பிரியர்' என்று மொழி(முட்டியை) பெயர்த்த பாரம்பரியம் மிக்கவர் நாம்.
நான்கூட சில தமிழ் ஆக்கங்களை, தமிழில் மொழிபெயர்க்க உத்தேசிருக்கிறேன் சுதா !
GMB சார்! கொஞ்சம் தாமதமாகி விட்டதே என்றுதான் உங்க மேட்டரை பக்கலில் வைத்துவிட்டேன் . நெற்றிக்கண்ணெல்லாம் ஒன்றும் இல்லை. வெறும் ஒண்ணரைக் கண் தான்! ஓரவஞ்சனை எல்லாம் பெரியதிட்டு. அழுதுடுவேன்.
பரவாயில்லை .... இப்பவே எழுதுன்னு சொல்லுங்க.... அடுத்த வாரம் 'ஜகஜக'ன்னு உங்க புத்தக விமரிசனத்தை போட்டுடலாம்.
நான் எவ்வளவு வருஷமாக உங்க செல்லம்னு எல்லோருக்கும் தெரியுமே GMB சார்!
சொல்லுங்க... டீலா.... நோ டீலா? போடவா... கம்னு இருக்கவா?!
மாற்றமொழி' என்பது பெறுமொழி//
மூல மொழி....சரியாகத் தான் படுகிறது.
பெறுமொழி ....கொஞ்சம் இடிக்கிறது.
பெறும் மொழி. ..இலக்கணப்படி இவை தனித்தனியே தான் இருக்கவேண்டும்.????
அப்ப ,
சேரும் மொழி, அடையும் மொழி என்றும் யோசித்துப் பார்க்கலாம். !!!!
பெறுமொழி ...பிரித்துப்பார்த்தால். பெறும் + ஒழி. (பெத்துப்போட்டு ஓடிப்போ !!!)
ஆனா, அப்படித்தான் செய்யறாங்கோ ??
அதெல்லாம் இருக்கட்டும்.
கீட்ஸ் கவிதை....ஒன்று டிரான்ஸ்லேட் செய்யுங்களேன்.
ஒரு சாம்பிள் அதிலேந்து:
Heard melodies are sweet, but
Sweeter are the unheard ones.
இதே சுவையோட சொல்லுங்க பார்ப்போம்
நம்ம மொழி லே...
சுப்பு தாத்தா.
இங்கன பாத்தீகளா?
www.subbuthathacomments.blogspot.com
சூரி சார்!
நீங்க சொல்வதும் நன்றாகவே இருக்கிறது. பூவை பூன்னு சொல்லலாம் . புய்பம்னு சொல்லலாம்.. நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்...
கீட்ஸ் சேலன்ஜ் நல்லாருக்கே!! எல்லோரும் முயலலாமே?
இந்த வரிகளில் கவிஞன் சொல்ல வருவதுயாதெனில், ' மனதின் கற்பனையே, வார்ததைகளாய் வெளிப்படுத்தியதைவிட வலிமை வாய்ந்தது' என்பதாகும். அந்தக் கவிதையே பல பூடகமான நுணுக்கங்கள நிறைந்தது. அவசியம் சில கவிதைகளை மொழியாக்கம் செய்வோம்.(இப்படி பலதும் செய்து பரணில் கிடக்கிறது.)
கேட்ட இசையெலாம் இன்பமடி!
கேளாதே நினைந்ததெலாமோ பேரின்பமடி!
அப்போதைக்கிப்போதே அவசரமாய் சொல்லிவைத்தேன்!
முகநூலில் கீதாமதிவாணன் கருத்து :
அன்புள்ள மோகன்ஜி… தங்களுடைய இந்த விமர்சனத்தை வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்தாலும் இன்று இப்போது வெளிவந்திருப்பது எனக்கொரு இன்ப அதிர்ச்சி. நல்லதொரு எழுத்தாளரும் வாசகருமாகிய தங்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் ஒவ்வொரு வரிகளும் என் எழுத்தை மேம்படுத்த உதவக்கூடியவை..
மொழிபெயர்ப்பு என்பதா மொழியாக்கம் என்பதா என்பதில் எனக்குமே இன்னும் தெளிவில்லை. ஆனால் மூலக்கதாசிரியரின் எழுத்தை அப்படியே தமிழ் வாசகர்களுக்குக் கொண்டுசேர்க்கவேண்டும் என்று விரும்பினேன். அதில் தவறியும் என்னுடைய பாணியோ எழுத்துநடையோ வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அந்த முயற்சியில் ஓரளவு வெற்றிபெற்றிருக்கிறேன் என்பது அநேகருடைய விமர்சனங்கள் மூலம் அறியமுடிகிறது.
இது ஒரு நேரடி மொழிபெயர்ப்பாக இருப்பதால் மூலக்கதாசிரியர் தொட்டுவிட்டுச் செல்லும் இடங்களில் விளக்கங்கள் தரப்படாமை ஒரு நெருடலாகவோ குறையாகவோ கருதப்படும் வாய்ப்புண்டு என்றாலும் இங்கு அதைத் தாங்கள் நிறையாகக் குறிப்பிடுவது மனத்துக்கு இதமளிக்கிறது. ஊக்கமும் உற்சாகமும் தரும் வகையில் மிகவும் நிறைவானதொரு விமர்சனப்பதிவு. தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி மோகன்ஜி.
சில நாட்களுக்குமுன்பே ஒன்றை எழுதிவைத்து, அதனையும் போக்கடித்துவிட்ட ஆயாசத்தில் தாமதம். மீண்டும் நினைவில் தொகுத்துக் கொண்டு எழுதியதால் எனக்குள் சின்ன தடுமாற்றம்..
மொழிபெயர்ப்பு அப்படியே வரிக்குவரி தமிழ்'படுத்து'வது... ஒரு ஐ.டி ப்ரோக்ரமை அப்படி செய்யலாம். ஒரு இலக்கியபடைப்பு முற்றிலும் மாறுபட்ட வேறொரு வாசகப் பரப்பை அடைய,பதிவில் குறிப்பிட்டிருந்தபடி நுண்ணிய மொழியாக்கமே மார்க்கம். இத்தகு கதைகளை நான் முயன்றிருந்தால் முற்றிலுமே மாறுபட்ட ஆக்கமாய் ஆகியிருக்கலாம். எல்லாமுமே சாத்தியம். உங்களுடைய முயற்சியை அங்கீகரிப்பதில் என் பொறாமை கூட இருக்கிறது கீதா.. சில கவிதைகளை மொழிமாற்றிப் பார்த்தால் வேறுபாடு விளங்கும். மீண்டும் வாழ்த்துக்கள்!
கீதா மதிவாணன் பதில்.:
ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி. நீங்கள் இதை முயன்றிருந்தால் நிச்சயம் அது மாறுபட்ட படைப்பாகத்தான் இருக்கும்.. அது என்னிலும் மிகவும் மேம்பட்டதாகவும் இருக்கும். அது எனக்கு மட்டுமல்ல, உங்கள் எழுத்தை அறிந்த அனைவருக்கும் தெரியும்.:) வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி மோகன்ஜி.
ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி கருத்து:
விமர்சனம் சூப்பர்...எல்லாவற்றையும் விட மொழிபெயர்ப்போ...(அ) மொழியாக்கமோ...எதோ ஒன்று ...ரிஸ்க் ஜாஸ்தி...மூலம் சிதைத்து விடாமல் சர்வ ஜாக்கிரதையாக எழுத வேண்டும்...நம் கற்பனையில் எது வேண்டுமானாலும் எழுதிவிடலாம்...ஆனால் இவ்வாறு எழுதுவதற்கு அபார திறமையும்...மொழி பாண்டித்யமும் வேண்டும்...
வாழ்த்துகள்!
உண்மை மூவார்... என் அனுபவத்தில் படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்கள் செய்யும் மொழியாக்கம் மூல படைப்பாளியின் மனவோட்டத்திற்கு அருகாமையில் இருக்கும். என் மனைவி வங்காளத்து சமையலை தமிழ்மணத்துடன் அட்ஜீஸ் பண்ணி சமைப்பாள். புதுமையாகவும் புதுருசியிலும் இருக்கும். அதாங்க மொழியாக்கமே !
கீதா மதிவாணன் கருத்து:
தங்களுடைய வாழ்த்துகளுக்கும் மொழிபெயர்ப்பு குறித்தக் கருத்துக்கும் மிகவும் நன்றி ராமமூர்த்தி சார்.
கணேஷ் பாலாவின் கருத்து(முகநூல்):
எத்தனை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் மோகன்ஜி. நானும்தான் படித்தேன், பாராட்டினேன். ஆனாலும் இத்தனை நுணுக்கமா ரசிச்சுச் சொல்ல முடிஞ்சுதோ..? மொழிபெயர்ப்பு என்றால் எனக்கு ரா.கி.ர.வின் மொழிபெயர்ப்புகள் மிகப் பிடிக்கும். நீங்கள் குறிப்பிட்டது போல சிறப்பான மொழியாக்கம் இருககும். அதற்கு அடுத்தபடியாக என் ப்ரண்ட் கீதா மதிவாணன் தான். இதன் மூலம் மீண்டும் என் கைகுலுக்கலும், பாராட்டுகளும், நல்வாழ்த்துகளும் கீதாவுக்கு.
நன்றி கணேஷ் பாலா! உங்கள் கருத்து மிகச்சரி! என்னுடைய வானவில் மனிதன் பதிவுகளுக்கு
கீதாமதிவாணன் எழுதும் கருத்தை பாராட்டி பல கருத்துகள் வரும். அதன்பின் என் பதிவு அம்பேல் தான் ! சகலகலாவல்லியாக்கும்!
கணேஷ்பாலா:
நீங்க சொல்றதன் படி பாத்தா, பதிவுகளை அம்பேலாக்கும் ‘சகலகலா வில்லி’ன்னுகூட சொல்லலாம் போலருக்குதே. ஹி... ஹி... ஹி....
கீதா மதிவாணன்:
கணேஷ்.. இப்புத்தகம் மூலம் உங்கள் மனங்களிலெல்லாம் உயரமானதொரு இடத்தைப் பிடித்திருப்பது மகிழ்வளிக்கிறது. கொடுத்த இடத்தைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டுமென்னும் முனைப்பு உந்தித் தள்ளுகிறது. உங்களுடைய அன்புக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி கணேஷ்.
கேட்ட இசையெலாம் இன்பமடி!
கேளாதே நினைந்ததெலாமோ பேரின்பமடி!//
1959 என நினைக்கிறேன்.
என்னுடன் ஐயம் பெருமாள் கோனார் வகுப்பிலே
செயின்ட் ஜோசப் கல்லூரியிலே
தமிழ் பீரியட் ஒன்றில் சக மாணவன்
பிச்சை முகமது என்று நினைக்கிறேன்.
(பிற்காலத்தில் அவர் ஜமால் முகமது கல்லூரியில்
தமிழ் பேராசிரியராக இருந்தார். )
நான், பிச்சை முகமது, வில்லியம்ஸ்( !) என்று சதா இப்படியே சிக்வீரா எடுத்த ஆங்கிலக் கவிதைகளை அடுத்த வகுப்பில் மொழி ஆக்கம் செய்து பொழுதைப்போக்குவோம்.
நான் செய்த மொழி ஆக்கம் எனக்கு மனதில் படிந்து விட்டது.
கேட்ட ராகங்கள் இனியவை.
கேளாதவை கனியவை.
என்று சொன்னது இன்னமும் என் டயரியில் இருக்கிறது.
இதையே மாலை வகுப்பில் இந்தி பிரசார சபையில் பிரவீன் ஆதுனிக் (மாடர்ன் லிடரசர்) படிக்கும்போது, கீட்ஸ் ஐ ஆசிரியர் திரு சுமித்ரானந்தன் அவர்கள் இந்தி மொழியில் பெயர்க்கச் சொல்லுகையில்,
सुने गीत तो मधुर है.
मधुरतम वो अन्सुने
என்று நான் மொழிந்த பொழுது,
எதித்த பெஞ்சில் உட்கார்ந்திருந்த
வசந்தா (இப்ப 78 இருக்கும் )
என்னைப் பார்த்து முறைத்ததும்
நினைவு இருக்கிறது.
சுப்பு தாத்தா.
கீதா அவர்களின் நூல் எங்கே கிடைக்கும்?
//என்னுடைய பாணியோ எழுத்துநடையோ வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.//
இது உண்மையில் மிகவும் கடினம்.
என்னதான் சொன்னாலும் நடை
(including our ways of expression,style and emphasis and rhythms)
எழுதுவது யார் என
உள்ளங்கை நெல்லிக்கனி போல
நம்மைக் காட்டிவிடும்.
பெறுமொழி ஆசிரியர் சொல்லாட்சி
சிறப்பாக இருப்பின் அது மூலத்தையும்
அழுத்தி விடும் அபாயம் இருக்கிறது.
தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் 1970லே படித்திருக்கிறேன். பின்,
1998 ல் , எங்கள் கல்லூரியில் பயிற்சிக்கு வந்த பெங்காலி பெண்மணி ஒருவரிடம் அதே கீதாஞ்சலியை விவரிக்கும்படி சொன்னேன்.
அவருடைய புரிதல் வேறு விதமாக இருந்தது.
சு தா.
மோகன் ஜி! என் முதல் புத்தகம் பற்றி கேட்டதற்கு நன்றி. முதல் மின் புத்தகம் கடந்த 11 அன்று வெளியாகியிருக்கிறது.... நைனிதால் பயணக் கட்டுரைகள், “ஏரிகள் நகரம் - நைனிதால்” என்ற பெயரில் வெளியிடூ செய்திருக்கிறேன். தகவலுக்கு http://venkatnagaraj.blogspot.com/2015/09/blog-post_12.html பதிவினை பாருங்கள்.....
தட்டுங்கள் திறக்கப் படும் என்று சொல்வார்கள். நானும் தட்டிக் கொண்டே இருக்கிறேன் என் புத்தக விமரிசனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் பின்னூட்டங்களில் மொழி பெயர்ப்பு மொழியாக்கம் பற்றிக் கருத்துகள் பார்க்கிறேன் என் பதிவு ஒன்றில் டி.பி. கைலாசம் அவர்கள் எழுதி இருந்த த்ரோணா பற்றிய ஆங்கிலக் கவிதையை மொழியாக்கவோ மொழிபெயர்க்கவோ வேண்டிக் கேட்டிருந்தேன் யாரும் செய்யவில்லை. நீங்களோ சூரி சிவாவோ எழுதினால் மகிழ்வேன் அந்தக் கவிதை கீழே
Drona
THY flaunted virgin phalanx cleft a twoa
By but a stripling, thine own pupil's son
Whose bow abash'd his sire's preceptor! You,
In pain of tortur'd vanity, let run
Thine ire to blind thee to the blackest deed
Besmirch'd the scroll of Aryan Chivalry!
The while thy master's ghoulish hate did feed
And fatten on thy victor's butchery,
Thy father's heart had it bore some pity
For Partha in his dire calamity,
Dread Nemesis had spar'd thine aged brain
The searing, killing agony accrued
Of death of thine own son. Thou didst but drain
The bitter gall thy vanity had brewed! நான் என் அறிவுக்கு எட்டியபடி மொழியாக்கம் செய்திருக்கிறேன் உங்களதைப் பார்த்தபின் தெரிவிக்கிறேனே நன்றி கூடிய விரைவில் என் புத்தக விமரிசனம் ப்ளீஸ்
சுதா.... அழகாய் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். உங்கள் விவரணை சுவாரஸ்யம். அதெல்லாம் இருக்கட்டும்... வசந்தா மேட்டுக்குடி வருவோம். கிளறினா எனக்கு இரண்டு கதைக்காவது விஷயம் கிடைக்கும் போலிருக்கே!
அருமை வெங்கட்! வாழ்த்துக்கள்.
GMBசார்! இரண்டு நாட்கள் கழித்து மும்பையிலிருந்து ஹைதராபாத் செல்வேன். அங்குபோனவுடன் விமரிசனம் மற்றும் கவிதையையும் பதிகிறேன். கவிதை ஸ்ட்ராங்க். கண்டதிப்பிலி ரசம் போலே !
//வசந்தா மேட்டுக்குடி வருவோம். கிளறினா எனக்கு இரண்டு கதைக்காவது விஷயம் கிடைக்கும் போலிருக்கே!//
வசந்தா பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இன்னிக்கு அவங்களுக்கு 17 வயசு (திருப்பிப்போட்டா)
இருக்கணும். நிசமாலுமே நல்ல பாடக்கூடிய பொண்ணு.
இன்னிக்கு ஸ்ரேயா கோஷால் பாடுறாங்க இல்ல. அவங்கள மாதிரி ஒரு வாய்ஸ் .
வூட்டுக்கு ஒரு நாள் கூட்டிக்கினு போயி, எங்க அம்மா கிட்ட
அறிமுகம் செஞ்சு வச்சு,
எங்க அம்மா பாட்டிலே புலி . இல்லையா.?
அவங்கள இவங்க கவர் பண்ணனுமே அப்படின்னு,
அம்மா, இவ ரொம்ப நல்லா பாடுவாம்மா, என்று சொன்னேன்.
அப்படியா, என்று முக மலர்ந்த என் அன்னை,
ஒரு பாட்டு பாடும்மா என்றதற்கு,
கடைசி வரைக்கும் என்ன தான் செய்கை காட்டி பாடு பாடு அப்படின்னு சொன்னப்பறம் கூட,
பாடாம போயிட்டா.
என் மனசுல்லே வாடாத மல்லி ஆயிட்டா...
ஊஹூம். அதெல்லாம் அந்தக் காலம்.
Much water has flown down the Ganga.
சு தா.
மன்னிக்கவேண்டும் மோகன்ஜி.. இந்தப் பதிவை எப்படித் தவறவிட்டேன் என்று தெரியவில்லை... அதற்காக வருந்துகிறேன். முகநூலில் இட்டக் கருத்துரைகளை இங்கும் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி. நீங்கள் அங்கு சுட்டி கொடுத்திராவிட்டால் இத்தகு அருமையான பின்னூட்டக்கலாய்ப்புகளைக் காணாமலேயே போயிருப்பேன். நன்றி மோகன்ஜி.
சுப்பு தாத்தா அவர்களின் கருத்துரைகளும் அவற்றின் சாரமும் வியக்கவைக்கின்றன. எப்படி வளைத்து வளைத்துக் கருத்திடுகிறார் என்ற மலைப்பு எப்போதும் போல் இப்போதும். கீட்ஸ் கவிதை வரிகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் அபாரமாகக் கொணர்ந்திருக்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக அவருடைய மொழிப்புலமை எளிதில் விளங்குகிறது. பாராட்டுகள் சுப்பு தாத்தா.
என்னுடைய இந்தப் புத்தகம் டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கிறது. தங்களுடைய வாசிப்பார்வத்துக்கு மிக்க நன்றி.
சூரி சார் ! உங்க வசந்தோத்சவத்தை மாமிகிட்டே சொன்னீங்களோ?! ரசிகமணி சார் நீங்க.... ஒரு நாவலுக்கான விஷயத்தை தேத்தலாம் போலிருக்கே !
கீதா! சூரி சார் ரோம்ப ஸ்வாரஸ்யமான பதிவர் . ஆர்வமிக்க வாசகர். அன்பான கணவர்... ஆச்சரியமான காதலர் வேற....
//
வசந்தோத்சவத்தை மாமிகிட்டே சொன்னீங்களோ//
வசந்த உத்சவம் வருஷத்துக்கு வருஷம் வர்றதே !!
நான் சொல்றது பெருமாளுக்கு.
சந்தம் போலத் தானே !!
ஒரு சந்தம் கை கொடுக்கலேன்னா இன்னொரு சந்தம்.
ஒரே சந்தத்திலே
பந்தம் ஜாஸ்தி ஆகும்போது தான்
வருகிறது
அந்தம்.
எல்லா பந்தங்களுமே ஒரு காலத்திற்கு உட்பட்டது தானே !!
காலத்தை மிஞ்சிய பந்தங்கள் சில இருக்கத்தான் செய்கிறது.
இங்கே எங்க ஊர் சாஸ்த்ரிகள் பொண்ணு கதியை பாருங்க.
http://aaranyanivasrramamurthy.blogspot.in/
சுப்பு தாத்தா
www.subbuthathacomments.blogspot.com
www.pureaanmeekam.blogspot.com
//ஒரே சந்தத்திலே
பந்தம் ஜாஸ்தி ஆகும்போது தான்
வருகிறது
அந்தம்.//
வேதாந்த சாரம் ஸ்வாமி!
கருத்துரையிடுக