பக்கங்கள்

திங்கள், அக்டோபர் 26, 2015

கவிக்கோ அப்துல் ரஹ்மான்


தமிழிலக்கியக் காட்டில் கூவித்திரியும் கவிக்குயில்கள் பல.
அந்தக் குயில்களுக்கு மத்தியில் தனித்து ஒலிக்கும் ஒரு கவிக்குரல். 
எளிமை அதன் சாரம்.
குறியீடுகளால் கூவிக் குவித்தது கவிதைகளை. 

அந்தக்குயில் அப்துல் ரஹமான். ‘கவிக்கோ’ என்ற பட்டத்திற்கு சந்தேகமற உரியவர். புதுக்கவிதைகள் கோலோச்ச எழுந்தபோது மரபின் வாசிப்பனுபவத்தை, வார்த்தைகளின் வார்ப்புருவை உள்வாங்கி தனிப் பாணியிலே சொல்லப் பட்டவை இவர் கவிதைகள்

எழுபதுளின் ஆரம்பத்தில் புதுக்கவிதை இலக்கிய முறையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டது என்றே சொல்லலாம். மரபுக் கவிதைகளின் தாக்கத்தை சற்றே பின்தள்ளி புதுக்கவிதை புழக்கத்தில் வந்தது. 
பல முயற்சிகள் முன்வைக்கப் பட்டன. சொல்லவந்ததை கவிதைகள் உரத்துச் சொல்லின. மரபின் வேலிகளை பிய்த்தெரிந்து பாய்ச்சல் காட்டின.
வாசகனின் உணர்வை நோக்கியே பேசின. 
மு.மேத்தா நா.காமராசன், தமிழன்பன்,சிற்பி,மீரா, பிரமிள்,ஞானக்கூத்தன் முதலானோர் நல்ல பங்களிப்பை செய்தனர். இன்றுவரை அவர்கள் கவிதைகள் ‘புது’க்கவிதையாகவே இருக்கிறது. 
காலம் அவற்றை களிம்பேற்றவில்லை .

வானம்பாடிக் கவிஞர்கள் இயக்கமாய் உருவானபோது அப்துல் ரஹ்மானின் கவிதைகள் அடையாளம் காணப் பட்டது. மரபை நன்கு உணர்ந்த கவிஞன் அப்துல் ரஹமான். மரபின் சொற்கட்டும் அடுக்கும் இயல்பாகவே இவர் கவிதைகளில் மிளிர்ந்தன. சொல்லவந்ததை உணர்த்தியபின்னும் இவரின் வரிகள் மனதில் ரீங்காரமிடும். கவிதையின் படிமங்களில் லயித்து வாசகன் உணர்வுகள் சுகம் காணும்.

பிறமொழி இலக்கிய வகைகள் சிலவற்றை தம் கவிதைகளில் முனைந்தார். சூஃபி பாடல்களின் தத்துவ தரிசனம் இவர் பாடல்களில் உண்டு. 
ஹைக்கூ, கஜல் கவிதைகள் பலவும் எழுதினர். ஆய்வு கட்டுரைகள், நூல்கள்,சொற்பொழிவுகள் கவியரங்கக் கவிதைகள் ஆகிய பல தளங்களிலும் ஈடுபட்டார். 
தாகூர்,ஷெல்லி, கலீல் கிப்ரான்,குன்ட்டர் கிராஸ், இக்பால், மிர்ஸா காலீப் போன்ற கவிஞர்களின் படைப்புகளில் ஈடுபாடு கொண்டவர்

அரபி, உருது, ஹிந்தி ஆங்கிலம் என பல மொழிகளிலும் தேர்ச்சியுள்ள கவிக்கோவின் கவியுள்ளம், ஒரு தேனியைப் போன்றே அந்த மொழிவனங்களின் இலக்கியப்பூக்களில் தேன்மாந்தின.

பகுத்தறிவுவாதியாய் தன்னை முன்னிறுத்தியவராய் இருந்தபோதும், கவிக்கோ ஆழ்ந்த இறைநம்பிக்கை உடையவர். தத்துவக் கவிதைகள் பல எழுதியிருக்கிறார்.

                           (பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் கவிதைநூல் வெளியீட்டு விழா- மாவட்ட
                    ஆட்சியாளர் திரு பிராபகர ராவ் , அடுத்து திரு.இறையன்பு, உரையாற்றும்
                    கவிக்கோ மற்றும் அடியேன் (கருப்பு சட்டையுடன்)

வருடம் 1991 என நினைக்கிறேன். என் அன்பு நண்பர் வெ. இறையன்பு அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட நண்பர்கள் ஏற்பாடு செய்தோம். அந்தக் கவிதைநூலை வெளியிட கவிக்கோ அவர்களை அழைத்திருந்தோம். ஒரு மாலைநேரம் விழா இருந்தது. அதற்காக கடலூருக்கு வந்த அவருடன், ஒரு பகல்முழுதும் கவிதை இலக்கியம் பற்றி தனியே விடுதியறையில் பேசிக்கொண்டிருந்தது, எனக்கு வாய்த்த மேன்மையான தருணங்களில் ஒன்று. அந்த சமயம் மிகுந்த உற்சாகத்திலிருந்தார். என் சில கவிதைகளை சிலாகித்தது பரவசமளித்தது. சிலேடையான சொல்லாடலும், மதுரைக்கே உரிய மெல்லிய நையாண்டியும் அவர் பேச்சில் கண்டேன். கவிதைகளின் சொற்சிக்கனம் பற்றிய அவரின் வார்த்தைகளை இதயத்தின் ஓரத்தில் எழுதி வைத்துக் கொண்டேன். சூஃபி இலக்கியம் பற்றி ஒரு தெளிவையும் ஆர்வத்தையும் ஏற்ப்படுத்தினார். விழா முடிந்து ஊர் திரும்பியவர் நன்றிபாராட்டி எனக்கு கடிதமும் எழுதியிருந்த அவரின் பண்பு நெகிழச் செய்தது.

கவிஞர் அரசியல் சார்புநிலை எடுத்தவர். தி.மு.க ஆதரவாளர். தனக்கு வாய்ப்பளிக்கப் பட்ட பல பதவிகளை ஒத்துக் கொள்ளாதவர். எனினும் கடந்த ஆட்சியில் தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவர் பொறுப்பை வகித்தார். அதை தன் இனம்சார்ந்த மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக ஏற்றார்.

பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்,ரகசிய பூ, பறவையின் பாதை, சொந்தச் சிறைகள்,சுட்டுவிரல்,விதைபோல் விழுந்தவன்,பாலை நிலா போன்ற பல கவிதை நூல்கள என நாற்பதுக்கும் மேற்ப்பட்டவை வெளியாயிருக்கின்றன.

தமிழன்னை விருது, கலைமாமணி விருது, ஆலாபனை கவிதைத் தொகுதிக்காக1999ல் சாகித்ய அகாடமி விருது போன்ற பல விருதுகள் இவரை வந்தடைந்தன.

‘அம்மிக் கொத்த சிற்பி எதற்கு?’ என்று கவிக்கோ திரைப்பாடல்கள் எழுதும் வாய்ப்பை மறுதலித்ததும் , ‘சிற்பிக்கு அம்மிகொத்தக் கூட தெரிந்திருக்க வேண்டும்’ என  கவிஞர் வைரமுத்து ஆற்றியதாய்க் கூறப்படும் எதிர்வினையும் அந்நாள் இலக்கிய வம்புகளில் ஒன்று!

நான் மிகவும் ரசிக்கும் அவரின் ஒரு வரிக் கவிதை ஒன்று உண்டு .

தலைப்பு : திருக்குறள்
கவிதைவரி : மும்முலைத் தாய்.

கவிக்கோவின் கவிதை வரிகள் சில:

ஆன்மாவின் விபச்சாரம்
.....................
அரும்பிய துருவ மீன்
அதனை நோக்கியே
திரும்ப வேண்டிய
திசைகாட் டியின்முள்
மின்மினிக் கெல்லாம்
மேனி திருப்பினால்
கப்பல் எப்படிக்
கரைபோய்ச் சேரும்............
===========

சிலப்பதிகாரம்
பால்நகையாள் வெண்முத்துப்
பல்நகையாள் கண்ணகிதன்
கால்ககையால் வாய்நகைபோய்\
கழுத்துநகை இழந்தகதை.

காமத்துப் பால் 

கடைப்பால் என்றாலே
கலப்புப் பால்தான்

முதுமை

முதுமை
நிமிஷக் கரையான்
அரித்த ஏடு

இறந்த காலத்தையே பாடும்
கீறல் விழுந்த இசைத்தட்டு

ஞாபகங்களின்
குப்பைக் கூடை

வியாதிகளின்
மேய்ச்சல் நிலம்.......
..................
உயிர்களுள் நான்
ஆய்தம் எனக்காட்ட
நடக்கும் பாதையெல்லாம்
காலோடு கோல்சுவடு.

மறுப்பதுபோல் தலையாட்டம்
வாழ்வையா?
மரணத்தையா?.........
............................

முதுமை
போதிமர நிழல்தான்
ஆனால்
சிலர்தான் இங்கே
புத்தர்களாகிறார்கள்
பலர்
உறங்கிவிடுகிறார்கள்......

----------------- இன்னொரு கவிதையில்,

பிருந்தாவனமெங்கும்
செவிகள் பூக்க
சுவாசத்தை ராகமாக்கி
ராதை உன்னில்
புல்லாங்குழலாகி இருக்கிறாள்.”

                                               என்று பால்வீதியில் பரவசம் காட்டுகிறார்.

“வருடம் தவறாமல்
குழந்தைகள் தினத்தைக்
கொண்டாடுகிறவர்களே!
தினங்களைக் கொண்டாடுவதை
விட்டு விட்டுக்
குழந்தைகளை எப்போது
கொண்டாடப் போகிறீர்கள்?
                                            என்ற அவரின் ஆதங்கத்தைப் பாருங்கள்.



இன்று அவருடைய பவளவிழா சென்னையில் விமரிசையாக நடந்து வருகிறது.

ஒரு உன்னதக் கவிஞனின் சில கவிதைகளைத் தேடித் படியுங்கள். அவர் இன்னமும் பலகாலம் வாழ்ந்து கவிதைகளை அள்ளித்தர ஆசீர்வதிக்க இறைவனை இறைஞ்சுகிறேன்.









31 கருத்துகள்:

  1. அப்துல் ரகுமான் பற்றிய தெளிவான மதிப்பீடு. மேலோட்டமாக மட்டுமே அவரைப் பற்றி அறிந்திருந்தேன். அவரது சிறப்புகளை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி
    உதரணக்கவிதைகள் அருமை.
    நேற்று ஜெயமோகன், அப்துல் ரகுமான் பற்றி எழுதிய கட்டுரையும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி முரளிதரன் ஜி !

    எப்படி அவர்கவிதை எளிமையால் நெய்யப் பட்டிரிக்கிறதோ, அது போன்றே பழகவும் எளியவர் என்பதை உணரலாம். வித்யாகர்வம் இல்லாத எளியவர்.

    எளிமைப் பற்றிக் கூட ஒரு கவிதை எழுதியிருக்கிறார் !

    எளிமை
    பட்டினி அல்ல
    பக்குவ விரதம்
    ஊமை அல்ல
    உன்னத மௌனம்
    கருமல டல்ல
    கட்டுப் பாடு

    ஜெ.மோவின் பதிவு கவிக்கோவுக்கு இத்திருநாளில் போடப்பட்ட பூமாலை!

    கவிக்கோவின் இசையொழுங்கையும்,ஒசைநயத்தையும் கொண்டு இசைப்பாடல்களையும் செய்யுள்வகைகளையும் உருவாக்காமல், வசனகவிதையில் நுழைந்தது சரியா எனும் ஜெ.மோவின் ஐயபாட்டுடன் ஒத்துப் போகிறேன்.கர்ப்பக்ருகத்தின் சிலையை நுணுக்கமாய் செதுக்கவல்ல சிற்பி, முன்னே இருக்கும் படிக்கல்லையும் செதுக்க வேண்டுமா என்ற கேள்வி இது!

    பதிலளிநீக்கு
  3. நன்றி நாகேந்திர பாரதி ! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. முதுமை

    ஞாபகங்களின்
    குப்பைக் கூடை//

    ஐயமில்லை.
    இருப்பினும் அந்த குப்பைக் கூடையிலே
    சில ரத்தினங்களும் இருக்கும் என்பதற்கு ஒரு
    சிறிய சாட்சி என் மனக்கண் முன் விரிகிறது.

    அதில் ஒன்று. நான் கவிக்கோ அவர்களை எதிர்பாராமல் ஒரு நாள் இரவில் ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ் ல் சந்தித்து சிறிது நேரம் தூங்கத் துவங்குமுன் உரையாடியது. 92-93 வருட வாக்கில் நடந்தது என்ற நினைவு இருக்கிறது.


    அவரை நான் ஒரு பெரும் புகழ் பெற்ற கவிஞன் என்று தான் அறிந்திருந்தேன். அவரது நூல்களை நான் அன்றைய கால கட்டத்தில் அதிகம் படித்ததில்லை.

    நான் எப்பொழுதோ படித்து பாஸ் செய்த பிரவீன் பரிட்சையில் உருது இலக்கியமும் ஒன்றாம். அதில் இருந்து ஒரு முகமது இக்பால் கவிதை நான் எடுத்து சொல்ல கவிக்கோ அவர்கள் ரசித்ததும் நினைவு இருக்கிறது

    அந்த கவிதையில் ஒரு வாக்கியம் இன்றும் நினைவில் இருக்கிறது.
    (Woh Roshni Ka Talib, Ye Roshni Sarapa

    The moth and the firefly through air both take wing. One seeks for light: one in light's all arrayed)

    (PARVANAA என்று நினைவு . ஒரு விட்டில் பூச்சி ஒளியின் தேடலில் தனது உயிரையும் தியாகம் செய்கிறது. ஒரு விளக்கின் ச்வாலைக்குள் புகுந்து மடிகிறது. இதை என்ன அழகாக இக்பால் சொல்கிறார். )

    அவரிடம் மஸ்தான் பாடல்களைப் பற்றி பேசியபோது அவரது நெகிழ்ந்த உள்ளம் எனக்கு மகிழ்ச்சி அளித்தது.


    கவிக்கோ அவர்களை என்றாவது ஒரு நாள் எங்கள் நிறுவன மன makizh மன்ற இலக்கியக் கூட்டத்தில் பங்கு பெறச் செய்யவேண்டும் என நினைத்திருந்தேன். இயலவில்லை.


    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  5. சு.தா.
    கவிக்கோவுடனான சந்திப்பை அழகாய்ச் சொன்னீர்கள்.இக்பாலின் கவிதைகள் தொண்ணூறுவாகில் புதுவையில் இருக்கும்போது படித்தேன். மீண்டும் படிக்கத் தூண்டுகிறீர்கள். உங்கள் மனமகிழ் மன்றம் இன்னமும் மகிழ்வுடன் இருக்கிறதா? அப்படி இன்னமும் மகிழ்வுடன் அது இருந்தால் நான் வரவா?

    பதிலளிநீக்கு
  6. தமிழ்க் கவிதை உலகில் பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிகண்ட கவிக்கோ குறித்த தங்கள் பதிவு மிகவும் அருமை நண்பரே.

    பதிலளிநீக்கு
  7. கவிக்கோ ஒரே கவிக்கோ, அது அப்துல் ரகுமான்.

    பதிலளிநீக்கு
  8. //இக்பாலின் கவிதைகள் தொண்ணூறுவாகில் புதுவையில் இருக்கும்போது படித்தேன்//



    அந்தப் பர்வானா கவிதை ஏதோ இரு பூச்சிகளை ஒப்பிடும் கவிதை அல்ல
    வாழ்க்கையின் நிதர்சனம்.
    ஒன்று மின்மினிப்பூச்சி .. உடலெங்கும் ஒளி .
    அடுத்தது விட்டில் பூச்சி. ..ஒளியைத் தேடிப்போகும் பூச்சி.

    இரண்டுக்கும் இறக்கைகள் உண்டு.
    இரண்டுமே வானில் பறக்கின்றன.
    ஒன்று ஒளியைத் தேடுகிறது.
    ஒன்று ஒளியே நான் என்கிறது.

    இந்தக் கவிதையின் அழகே
    நீங்களும் நானும் படிக்கப் படிக்க வெவ்வெறு அர்த்தங்கள் புரியும்.

    இறைவனைத் தேடி அழுதோர் அலுத்தோர் பலர் ,
    இறைவனே என்னுள் என உணர்ந்தவர் சிலர்.
    நில்லாது ஓடிடும் நீரலைகள் இருமருங்கில்
    நிஸ்சலம் நானே எனச் சொல்லிடும் இருகரைகள்.

    //உங்கள் மனமகிழ் மன்றம் இன்னமும் மகிழ்வுடன் இருக்கிறதா?//

    94 வரை நான் தஞ்சையில் ஹெச்.ஆர். (பி அண்ட் ஐ. ஆர் ) மேனேஜராக இருந்தபோது அந்த மன்றத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் (விளையாட்டுகள் தவிர) இலக்கிய கூட்டங்கள் உட்பட நடந்து கொண்டு இருந்தன. இப்போது அதைப் பற்றிய செயல்பாடுகள் குறித்து எனக்குத் தெரியவில்லை.
    94-95 ல் சென்னைக்கு வந்து விட்டேன். அதிகமாகப் பேசியதால், என்னைப் பயிற்சிக் கல்லூரிக்கு உதவி முதல்வராக அனுப்பி விட்டார்கள். இதெல்லாம் பழைய கதை.

    நிற்க.
    மஸ்தான் சாகிபு கவிதைகளை ஒரு பிடி பிடியுங்களேன் உங்கள் பதிவில் .

    (மூஞ்சியை மாற்றிவிட்ட)
    சுதா.



    பதிலளிநீக்கு
  9. நான் சிறுவனாக இருந்தபோது ஆனந்த விகடனில் கம்பராமாயணம் பற்றி ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். அப்போதே கவிக்கோ எனக்கு அறிமுகமானார். ஆனால், அதன்பின் அவரைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. தங்கள் பதிவின் மூலம் அறியாத பல தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. நன்றி!

    பதிலளிநீக்கு
  10. நன்றி குணசீலன் சார்!

    கவிக்கோ அவர்களின் கவிதைத் தேர் எத்தனை பிரமிப்புகளைத் தான் ஏற்றி வந்தது?

    இளவேனில் பற்றி சொல்லும் கவிஞர் :

    புவிமடந்தை மறுபடியும்
    பூப்பை அடைந்தாள்-தன்
    கவிஎழுத வர்ண மன
    யாப்பை அடைந்தாள் !

    பனிமலர்ப் பூஞ்சொல்லடுக்கி
    பாட்டு வரைந்தாள்-தன்
    தனிமைகளின் கனாக்குரலைக்
    கேட்டு வரைந்தாள் !

    இந்த வரிகள் மனதில் விரிக்கும் காட்சிதான் என்னே?!

    பதிலளிநீக்கு
  11. வாங்க ஆரூர் பாஸ்கர்! நீங்கள் சொல்வது போல் ஒரு கவிக்கோதான்...

    பதிலளிநீக்கு
  12. சு.தா,
    விட்டிலும் மின்மினியும் உங்கள் விவரிப்பில் இன்னமும் ஒளிர்கின்றன.. நன்று.
    //அதிகமாகப் பேசியதால், என்னைப் பயிற்சிக் கல்லூரிக்கு உதவி முதல்வராக அனுப்பி விட்டார்கள். //

    அட.. அங்கேயும் அதே கதை தானா.. என் கதையில் ஒரு மாற்றம் மட்டும் உண்டு. வசனமாய் சொல்லிவிடவா?
    "ஆம்.. நான் பேசத் தெரிந்தவன்..
    வெறும் பேச்சு மட்டுமல்ல...
    வாள்வீசத் தெரிந்தவன்,
    அதனால் வால்பிடித்து வாழவேண்டிய தேவை இல்லாதவன். ஹ...."

    பதிலளிநீக்கு
  13. வசனத்தில் சொல்லவந்ததை கோட்டை விட்டுவிட்டேன்..

    உங்கள் எண்ணப்படியே மஸ்தான் சாகிபு கவிதைகளைப் பற்றி அவசியம் எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. வாங்க செந்தில் குமார்! கவிக்கோ போன்றவர்கள் ஒரு காலகட்டத்தின் குரல். தமிழின் கவிதைவரலாற்றில் அவருக்கென ஒருஇடம் அவசியம் இருக்கும். நான் பதிவில் குறிப்பிட்டபடி அவருடனான சந்திப்பில் அவர் கைகாட்டிய பல கவிதைகளையும் நூல்களையும் படித்தேன்.. மறக்க இயலாத மனிதரும் கூட.

    இவரைப் போன்றே மு.மேத்தாவின் கவிதைகளைப் பற்றியும் ஒருமுறை அலசுவோம்.. வந்தபடி இருங்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  16. //வாள்வீசத் தெரிந்தவன்,//


    பலே !1

    //வால்பிடித்து வாழவேண்டிய தேவை இல்லாதவன்//

    பலே பலே.
    பிடித்தது பாம்பின் வாலோ ??

    //கோட்டை விட்டு விட்டேன். //

    கோட்டை ஓட்டையான பின்னே
    காட்டை சிலர் நாடுவர்.சிலர்
    ஏட்டைத் தேடுவர்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  17. சு.தா!
    //பிடித்தது பாம்பின் வாலோ ??//
    நான் பிடிப்பதெல்லாமே வாலாய் அமைந்தால் என்ன செய்வது சுவாமி?

    //காட்டை சிலர் நாடுவர்.சிலர்
    ஏட்டைத் தேடுவர்.//

    ஏதேது??மஸ்தான் சாஹிபுவை ஆரம்பித்து விட்டீர்கள் போலிருக்கிறதே!



    பதிலளிநீக்கு
  18. அவரைப் பற்றி அறியாத தகவல்களும் அறிந்தேன். திமுக அனுதாபி என்பது தெரியும். ஜூனியர் விகடனில் இவர் பக்கங்கள் வந்து கொண்டிருந்தே நேரங்களில் படித்த நினைவு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. நன்றி ஶ்ரீராம் ! அவர் கலைஞர் கருணாநிதி பற்றியும் ஒரு நூல் எழுதியிருக்கிறார் . படிக்கவாய்க்கவில்லை. ஆனாலும் இவர் வளையாத கவிஞர் என்பதறிவேன்.

    பதிலளிநீக்கு
  20. கவிஞரைப் பற்றிய அருமையான அலசல். பல புதிய செய்திகளை அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் சார் !

    பதிலளிநீக்கு
  22. அருமையான பதிவு.
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ரத்தினவேல் சார்! நலம் தானே? தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா28/10/15 1:58 PM

    அவரது சிறப்புகளை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி
    .
    அருமையான பதிவு.
    . பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி கோவைக்கவி! கோவை எப்படி இருக்கிறது?

    பதிலளிநீக்கு
  26. கவிக்கோவை பற்றிய சிறப்பான கட்டுரை! திருக்குறளுக்கு அவர் சொன்ன ஒற்றை வரி சிறப்பு! சிந்திக்கவைத்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  27. வாங்க சுரேஷ்!

    எனக்கும் அந்த திருக்குறள் கவிதை பிடித்தமானது. பதிவின் நீட்சி கருதி சில பாடல்களை நீக்கிவிட்டேன்.. வேறு சந்தர்ப்பத்தில் இன்னமும் சிலவற்றைப் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  28. அருமையான நினைவு மீட்டல் அப்துல் ரகுமானின் அவளுக்கு நிலா என்ற பெயர் கவிதைத்தொகுதி படித்த ஞாபகம் நிழல் போல!

    பதிலளிநீக்கு
  29. அவர் பற்றிய நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டேன். இந்தக் கவிஞரை இதுக்கு முன் பார்த்தது கிடையாது ஆனா, அவரின் சில கவிதைகள் படித்ததுண்டு. மு மேத்தாவின் கவிதைகளும் சேர்த்து வைத்திருக்கிறேன், நான் ஒரு கவிதைப் பைத்தியம்... அதிலும் ஹைக்கூ ரொம்பப் பிடிக்கும்.

    நீங்கள் பகிர்ந்துள்ள கவிதைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  30. வாங்க ஆதிரா !
    பல தமிழ்க் கவிஞர்கள் சிறந்த பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.
    அவர்களை வாழும் காலத்திலேயே போற்றுகிறோமா என்பது பெரும் கேள்வி.

    ஆனாலும்,மொழிவளமும் இன்றி, பொருளும் கவித்துவமுமின்றி கவிதை எனும் பெயரில்
    மலிந்து கிடக்கிறது எங்கும். நல்ல கவிதையைத் தேடி ரசிப்பது கடினமாகத்தான் ஆகிப் போனது.

    என் கவிதைகள் என் முகநூல் ( மோகன் ஜி) பக்கங்களில் வருகின்றன. பாருங்கள். வந்தபடி இருங்கள் ஆதிரா!





    பதிலளிநீக்கு

கருத்துரை இட்டுச் செல்லுங்களேன்..