வெள்ளி, மே 20, 2016

ஷெல்லியின் காதல் தத்துவம்



ஷெல்லியின் கவிதைகள் காலம் கடந்து நிற்கும் இலக்கியக் கானகம்.அதை,கானகம் என்று தான் குறிப்பிட வேண்டும். அவன் ஆக்கங்கள்,சீர்த்திருத்தி அமைக்கப்பட்ட பூங்காவனம் அல்ல. தருக்கள் மண்டி செழித்த காடு. உள்ளே புகுந்துவிட்ட மனம் வெளியேறுவது அத்தனை சுலபமன்று. அந்த வனத்தின் அழகிலே, அதன் வளத்தின் வகைமையிலே ஒன்றி அலைவது ஒரு சுகம்.


தமிழ்க்கவிதை புனைவது வசமான இளமையில், ஷெல்லியின் பல கவிதைவரிகளை மொழியாக்கம் செய்ததுண்டு. என் ஆதர்சக் கவிஞன் கீட்ஸ் தான் என்றாலும், தமிழ்ப்பாட்டன் பாரதியோ, ஷெல்லியை பரிந்துரை செய்திருந்தான். ஷெல்லிதாசன் என தன்னை பாரதி அழைத்துக் கொண்டான்.

காதல் தத்துவம் (love philosophy) என்ற ஷெல்லியின் கவிதை என் மொழிபெயர்ப்பில் இதோ அன்பர்களே! கீழே ஆங்கிலக் கவிதையையும் தந்திருக்கிறேன்.  

காதல் தத்துவம்

ஆற்றிடை கலக்கும்பல  ஊற்று
   கடலேறிக் கலந்திடும் ஆறு.
ஏற்றமிகு விண்ணகத்துக் காற்று
  கலக்குமே  இன்னுணர் வோடு.
ஒற்றையெனப் புவியிலொன்று ஏது?
   படைப்பெலாம் இறைநியதி யோடு
பற்றியோர் உணர்வொன்றிய போது
   நாமிருவர்  கலக்கத்தடை யேது?

மலைமுகடுகள் விண்ணையிடும் முத்தம்
அலைதழுவிடும் ஒன்றையொன்று நித்தம்.
எந்தமலர் இணைமலரை தள்ளிவைக்கும்?
சொந்தமிலா  பதரென்றதை ஊரொதுக்கும்.

கதிரொளி நிலம்தன்னை அணைத்திருக்கும்
மதியொளி அலைகடல்மேல் இதழ்பதிக்கும்.
இவ்வினிய  இணைகளெல்லாம் பயனிழக்கும்
கவ்வியிதழ் முத்தமொன்றுநீ தரும்வரைக்கும்


Love’s Philosophy

The fountains mingle with the river

And the rivers with the ocean,

The winds of heaven mix for ever

With a sweet emotion;

Nothing in the world is single;

All things by a law divine

In one spirit meet and mingle.

Why not I with thine?—



See the mountains kiss high heaven

And the waves clasp one another;

No sister-flower would be forgiven

If it disdained its brother;

And the sunlight clasps the earth

And the moonbeams kiss the sea:

What is all this sweet work worth

If thou kiss not me?


                                                                          (படம்: நன்றி கூகிள்,விக்கிபீடியா )







74 comments:

Ajai Sunilkar Joseph சொன்னது…

அருமையான கவிதை நண்பரே
மொழிபெயர்ப்பு செய்து பகிர்ந்தமைக்கு
நன்றிகள்....
வாழ்த்துகள் நண்பரே தொடருங்கள்...

ஜீவி சொன்னது…

பாரதிக்கு தாசன் இருநததை நாம் அறிவோம். பாரதியே, ஷெல்லியின் தாசன் என்று கையொப்பம் இட்டதையும் அறிவோம்.

இருபெரும் கவி ஆளுமைகளை ஒப்புமைப்படுத்தி, 'பாரதியும் ஷெல்லியும்' என்ற அற்புதமான நூல் ஒன்றை எழுதியுள்ளார் தொ.மு.சி. ரகுநாதன். வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ஆஹா அருமை! உங்கள் மொழி பெயர்ப்பை படித்தவுடன் ஆங்கிலத்தில் படித்தேன். அதன் அழகியலை உணர்ந்த முடிந்தது.சந்தத்துடன் மொழிபெயர்த்த விதம் சிறப்பு ஒரு தமிழ்ப் படத்தில் பாடலாகவே வைத்து விட்லாம் .

sury siva சொன்னது…

காதல் தத்துவம் ??
காதல் தத்துவம்
இப்படி நினைத்தீர்களோ ? (The Philosophy of Love )
காதலின் தத்துவம்.!!

இல்லை.

ஷெல்லி சொல்வது

காதல் ஒரு தத்துவம். (Love is Philosophy_

போத் ஆர் டிபரெண்ட் பர்செப்ஷன்s

வருவேன் விரைவில் . அதற்குள்
பரிமேலழகா !
பறந்து வா.

சுப்பு தாத்தா.

G.M Balasubramaniam சொன்னது…

ஷெல்லியும் நானறியேன் கீட்சும் நானறியேன் வேர்ட்ஸ்வர்த் டாஃபொடில்ஸ் வாசித்த நினைவு. ஆங்கிலக் கவிதைகளின் மொழியாக்கம் காணும்போதெல்லாம் நான் கேட்டுக்கொண்ட ஆர் கே நாராயணனின் துரோணர் நினைவுக்கு வருகிறார் கவிதை அழகாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள் நானறிந்த ஆங்கிலம் தமிழ் வரைஷெல்லி சொல்வதை காதல்(லே) தத்துவம் என்றல்லவா எடுத்துக் கொள்ள வேண்டும் பல நக்கீரர்கள் இருக்கும் இடத்தில் எனக்கென்ன வேலை.

மோகன்ஜி சொன்னது…

பிரியமில்லாதவன் அஜய்.
பாராட்டுக்கு நன்றி! உங்களை 'பிரியமில்லாதவன்' என்று அழைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் கவிதைகளில் நிறைய பிரியத்தைப் பார்க்கிறேனே! காதல் சொல்பவர்கள் 'பிரியமில்லாதவர்'களாக எப்படி இருக்க முடியும். பிரிய(மன)மில்லாதவர்களாகத்தானே இருக்க வேணும்?! வாழ்த்துக்கள் அஜய்!

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்!

ரகுநாதன் அவர்கள் ஒப்பு நோக்கி எழுதிய அந்த புத்தகத்தை பல வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன். அதை நூலகத்திலிருந்து வாசித்தேன்.அது ஒரு நல்ல ஆய்வாக இருந்தது. காதலை ஷெல்லி நன்றாகவே எழுதியிருந்தாலும், கீட்ஸ் அந்த சப்ஜெக்டில் கில்லாடி!
தொ.மு.சியின் நூல் தற்போது கிடைக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.

மோகன்ஜி சொன்னது…

முரளி சார்!
அன்புக்கு நன்றி!
// தமிழ்ப் படத்தில் பாடலாகவே வைத்து விடலாம் //

ஹா..ஹா... கவிதைகள் மேல் உங்களுக்கென்ன கோபம்?!
திரையிசையில் கவிதானுபவம் கசியும் பாடல்கள் கண்ணதாசனோடு ஏறத்தாழ போய் விட்டது. வைரமுத்துவும் அந்த வகையில் ஏற்றுக் கொள்ளலாம். தற்போது ஏதோஓரிரு பாடல்களில் நல்ல சொல்லாடலைப் பார்க்கறேன். பெரும்பாலும் இசையின் ஓசையில் நசுங்கும் வார்த்தைகள். இது வேறு காலம்.

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
காதல் தத்துவம்,காதல் ஒரு தத்துவம், காதலே தத்துவம், காதலா தத்துவம் என்று பட்டிமன்றம் நடத்தும் தருணமா இது.

மன்மதன் வரும் சாலையில் பரிமேலழகனுக்கு என்ன வேலை?
அங்கே வார்த்தைகளுக்கு வேலையில்லை...
வார்த்தைகள் புழங்கினாலும் அவற்றுக்கு அர்த்தமில்லை...
அர்த்தமென்று நமக்கு தோன்றுவதற்கு, காதல் அகராதியில் அர்த்தமே வேறு....

நாணி இனியோர் கருமமில்லை
நாலயலாரும் அறிந்தொழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து
பண்டுபண்டாக்க உறுதிராகில்
மானியுருவாய் உலகளந்த
மாயனைக் காணில் தலைமை றியும்
ஆணையால் நீரென்னைக் காக்க வேண்டில்
ஆயர்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்’

ஆண்டாள் சொல்வது காதலா தத்துவமா?



மோகன்ஜி சொன்னது…

GMB சார்!
// மொழியாக்கம் காணும்போதெல்லாம் நான் கேட்டுக்கொண்ட ஆர் கே நாராயணனின் துரோணர் நினைவுக்கு வருகிறார்//

முதலில் பாராட்டுக்கு நன்றி சார்!
உண்மையில் அந்தக் கவிதை எங்கோ நழுவி விட்டது. இணையத்தில் தேடி மொழியாக்கம் செய்ய முயல்கிறேன். (எனக்கு தெரிந்த வரையில்).

ஷெல்லியின் வாழ்க்கையில் காதல் நிகழ்வுகள் அவருக்கு இன்பம் சேர்க்கவில்லை. அவர் காதல் கவிதைகளில் எங்கோ துயரம் ஒரு கீற்றாய் ஒளிந்திருக்கும்.பாரதியைப்போலவே பலவற்றையும் பாடினார். அதில் காதல் சிறு பகுதியே!



sury siva சொன்னது…

/பரிமேலழகனுக்கு என்ன வேலை?//

பரி மேல் வந்த அழகன் வைகையில் இறங்கிவிட்டான் போல..
இன்னும் காணோம் .
போகட்டும்.

நாமே தனியா துடுப்பு போட்டு பார்ப்போம்.

இந்த ஷெல்லி இருக்கானே படா கில்லி.
எந்த வில்லி யா இருந்தாலும் அவன் முன்னே சல்லி ன்னேன்.

நீறு ஊறுது . ஆறாய் பெருகுது. கடல் லே கலக்குது. காத்தடிக்குது.


அந்தக் காத்து கொஞ்சம் மனசுக்கு இதமா இருக்குது.

அம்புட்டுதான்.

இதைப்பார்த்த ஷெல்லிக்கோ
கற்பனையில் ஒரு கன்னி
அந்தக் கன்னியின் கன்னம்
அந்தக் கன்னத்திலே முத்தம்.

எல்லாம் சேர்ந்து எண்ண அலை ஓடுது.
அங்கே நீறு ஓடுது. ஆற்றோட சேருது.
இங்கே எண்ணம் எழுது. சொல்லா பரிணமிக்குது .
கவிதை எனும் கடலிலே சங்கமிக்குது.

இதை பர்சானிபிகேஷனுக்கு ஒரு தலை சிறந்த உதாரணமா,
சொல்வார் எங்க ப்ரொபசர் சேஷாத்ரி.

நீறு, கடல், காற்று, மலை, வானம், எல்லாத்தையுமே மனதில் எழும் உணர்வுகளோட ஒன்றிப்போய் பார்க்கிறது

அந்த ஷெல்லி மாதிரி
பாரதி க்கும் தான் முடியும்.

நீர், நிலவு, வான், மதி , காற்று, அலை எல்லாமே தனியே நில்லாது, கலந்து இன்பம் காண்கையிலே, நீயும் நானும் நம் இதழ்களை கலந்தால் என்ன ?

இது தான் ஷெல்லி சொல்றார் அப்படின்னு நினைக்கிறேன்.

தமிழ் இலக்கணத்திலே புனைதல் என்பதற்குப் பொருள் : உள்ளதை உயர்த்தி உரைத்தல் என்று சொல்வார் .

முறிமேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உண்கண் வேய்த்தோள வட்கு .

சூட்சுமம் அதே.
தனிமையிலே இனிமை காண முடியுமா !

அதெல்லாம் ரைட் சாரே !!
நீ என்ன நோட்டா வோட் போட்டுட்டு ஓடிப்போக பார்க்கிற !!
நம்ம கவிதை எப்படி கீது .அத சொல்லிப்போடு அப்படின்னு சொல்றீங்க இல்லையா.

வாறேன் ..

சு தா.










”தளிர் சுரேஷ்” சொன்னது…

ஷெல்லியைப் பற்றிய தகவல்களும் பாடல் மொழிபெயர்ப்பும் ரசித்தேன். சந்த நயத்தோடு கூடிய அழகிய மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தலில் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே கூடாது என்பார்கள். மூலக் கவிதையையும் தந்து உங்கள் மொழிபெயர்ப்போடு அதையும் படிக்கையில் உங்கள் மொழித்திறனை அறிந்து வியந்து போனேன்! வாழ்த்துக்கள் ஐயா!

ஜீவி சொன்னது…

//தொ.மு.சியின் நூல் தற்போது கிடைக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.//

கிடைக்கிறது, மோகனஜி! NCBH வெளியீடாக. ஒரு காலத்தில் நான் வாங்கும் பொழுது விலை ரூ.20/-. இப்பொ0ழுது 7 மடங்காவது அதிகம் இருக்கும். அதுவும் NCBH என்பதினால்.

புத்தகங்களின் விலைகள் ஏகத்தாறாக எகிறியிருக்கின்றன. குறைந்த பிரதிகளே அச்சிடுவதால் விலை அதிகம். புத்தகச் சந்தை ஒரு தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்த்திருகிறது. அது தமிழ் வாசகர் கையில் தான் இருக்கிறது.

இன்று அதிகமாக மக்கள் வாங்கும் புத்தகங்கள்: 1. சமையல் கலை. 2. உடல் ம்ற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த நூல்கள். 2. குழந்தைகளுக்கான புத்தகங்கள்.

பல அற்புதமான புத்தகங்கள் மறுபதிப்பே காணாதது தமிழுக்கு பெரும் இழப்பு. மிகப்பெரும் சோகம் அது. வரும் ஜூன் முதல் தேதியிலிருந்து சென்னையில் புத்தகத் திருவிழா தொடங்குகிறது. பார்ப்போம்.

ஸ்ரீராம். சொன்னது…

மிகவும் அருமையாக இருக்கிறது.

kashyapan சொன்னது…

"கவ்வி இதழ் முத்தமொன்று நீ தரும் வரைக்கும் "---ஷஷ்டியப்த பூர்த்தி முடிஞ்சாச்சு சாமியோவ் ---காஸ்யபன்

ஜீவி சொன்னது…

//மன்மதன் வரும் சாலையில்......
அங்கே வார்த்தைகளுக்கு வேலையில்லை... //

பாதி நடுக் கலவியிலே காதல் பேசி
பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோலே

-- பாரதியார்

ஹலோ.. அதிவீரராம பாண்டியரே! எங்கே இருக்கீர்?>.




மோகன்ஜி சொன்னது…

சு.தா!
உங்க புரொபசர் சேஷாத்ரி சார்க்கு ஒரு ஜே!

உண்மைதான்...பாரதி காதலை வரைவது இன்னமும் பெரிய கேன்வாஸில்.

பெண்மையை அவன் பாடியதில் சில வரிகள்:

அன்பு வாழ்கஎன்று அமைதியில் ஆடுவோம்;
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்…

கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காதல் இன்பத்தைக் காத்திடு வோமடா…..

அன்னம் ஊட்டிய தெய்வம ணிக்கையின்
ஆனை காட்டில் அனலை விழுங்குவோம்
கன்னத் தேமுத்தங் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்…..

நான் தித்த இலக்கியம் அனைத்திலுமே அடிநாதமான உண்மை ஒன்றைக் கண்டுகொண்டேன்.
அது, இலக்கியம் புனைந்தோர் அனைவருமே, காதலிகளை விட காதலையே காதலித்திருக்கிறார்கள்.

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி தளிர் சுரேஷ்! உங்கள் அன்பு வார்த்தைகளுக்கு ஏற்றவனாய் நானிருக்க முயல்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்!

நல்ல புத்தகங்கள் மறுபதிப்புகள் காணாமல் போவது பெரிய சோகம் தான்! புத்தகப் பதிப்புகளின் நிலையை சரியாகக் கூறினீர்கள்.

மாறிவரும் காலாச்சார சூழலும், நேரத்தின் பெரும் பகுதியை விழுங்கிவிடும் முகநூல்,வாட்ஸ் அப் களேபரங்களும் வாசிப்புக்கான நேரத்தை எடுத்துக் கொள்கின்றன.

நிலைமை மாறும் என்று நம்புவோம்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஸ்ரீராம்!

சிவகுமாரன் சொன்னது…

ஆகா . அருமை அண்ணா.உங்கள் மொழிபெயர்ப்பை படிக்கும் போதே ஷெல்லியின் மூலத்தை படிக்கும் ஆர்வம் தொற்றிக் கொள்கிறது.
மூலத்தைப் படித்து மீண்டும் உங்கள் கவிதையை .
இரண்டும் ஒன்றே போல் தோன்றும் வெவ்வேறு சுகம்.

மோகன்ஜி சொன்னது…

காஸ்யபன் சார்!
//"கவ்வி இதழ் முத்தமொன்று நீ தரும் வரைக்கும் "---ஷஷ்டியப்த பூர்த்தி முடிஞ்சாச்சு சாமியோவ் ---//

வம்பா போச்சே! அதை ஷெல்லி யில்லே சொன்னான்?! சஷ்டியப்த பூர்த்தி முடிந்த பிறகு வந்த கவலை ஒன்றுண்டு.
எழுதி வைத்து தராமலே போன காதல் சொட்டும் கவிதைகளை என்ன செய்யலாம்?!

முதியவர்கள் காதலும் லேசுப்பட்டதல்ல...பாவேந்தரின் குடும்ப விளக்கிலிருந்து :

விதைத்திட்டேன் அவளின் நெஞ்சில்
என்றனை! நேற்றோ? அல்ல;
இதற்குமுன் இளமை என்ப
தென்றைக்கோ அன்றைக் கேநான்!
கதையாகிக் கனவாய்ப் போகும்
நிகழ்ந்தவை; எனினும் அந்த
முதியோளே வாழு கின்றாள்
என்நெஞ்சில் மூன்று போதும்.

புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள்உ டம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும் மூதாட்டி!
மதியல்ல முகம்அ வட்கு
வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக் கின்பம் நல்கும்?
"இருக்கின்றாள்" என்ப தொன்றே!

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்!
அதிவீர ராம பாண்டியனுக்காகத்தன் காத்திருக்கிறேன்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி சிவா!

இந்தப் பதிவை இடும்போது உன்னை நினைத்துக் கொண்டேன் தம்பி !

sury siva சொன்னது…

/"கவ்வி இதழ் முத்தமொன்று நீ தரும் வரைக்கும் "---ஷஷ்டியப்த பூர்த்தி முடிஞ்சாச்சு//

மூத்த குடி மகன் ஆகிவிட்டால்
முத்தத்துக்குமா தடை ???
லவ்வர்ஸ் பார்க்கில்
லிப் லாக் க்கு லாக் அவுட்டா ?

அனுமதியோம் அனுமதியோம்
அநியாத்தை அனுமதியோம்.
போராடுவோம் போராடுவோம்
வெற்றி பெறும் வரை போராடுவோம்.

தடையை மீறுங்கள் .
முகமது திறவுங்கள்.
மடை திறந்தாற்போல்
முத்தமாரி பொழியுங்கள்.

நெஞ்சு நனையட்டும்.
நினைவெல்லாம் மலரட்டும்.

என்ன சத்தம் ஏதோ கிழவி பாடுறாப்போல இருக்கே !! ?

நீல வண்ண கண்ணா வாடா, நீ ஒரு முத்தம் தாடா..
நிலையான இன்பம் தந்து....

சு தா.

மோகன்ஜி சொன்னது…

சுதா!
ஏதேது? திவீரமாகி விட்டாற் போலல்லவா இருக்கிறது.?

'உம்மாவுக்கு பற்களிருப்பது தடையே! அல்லவே!!' என்று பட்டிமன்றம் நடத்தும் உத்தேசம் உண்டா?

'நீல வண்ணக் கண்ணா வாடா' பாடித்தான் என்னை அப்பா தூங்கவைப்பாராம். உமக்கு யோகம் வேறாக இருக்கிறதே!!

sury siva சொன்னது…

எச்சரிக்கை.
இது ஒரு உரத்த சிந்தனை.
தங்கள் கவிதை பற்றிய குறிப்பான கருத்து எதுவும் இல்லை.

எனது பல கால ஐயங்கள்.

ஒரு மொழியில் உள்ள கவிதைகளைக் காவியங்களை இன்னொரு மொழியில், அது தாய் மொழியாக இருப்பினும், வார்த்திட வரைந்திட, வர்ணம் தீட்டிட விழையிலே ,
சில பல தடைகள் இருப்பது வெள்ளிடை மலை.

நான் பேச இருப்பது ஆற்றலற்றோர் பற்றி அல்ல.
ஆற்றல் பெற்றோர் இரு மொழியிலும் வல்லுநர் பற்றியே ஆம்.

ஒரு புலவனின் முழுமையையும் உணர்வதற்கு முன்னே அவன் படைத்த ஒரு எழுத்தில் ஒன்றை எடுத்து மொழிபெயர்ப்பது ....
அந்த மூல கவியின் உள் உணர்வுகளை சரியென சமைக்க இயலுமா என்ற ஐயம் முதலாவது.

கருத்தினை சொல் வடிவாக்கம் செய்யும் காலையிலே மொழி பெயர்ப்போனின் பாணி, நடை ஒரு தடையாகவும் சில நேரங்களில் இருப்பது இரண்டாவது. அந்த பாணி, நடை மூல த்திற்கு ஒத்து இல்லாத நிலையில் குறிஞ்சி பாலையாகும் நிலை.

எளிதாக புரியப்படும் ஒரு நாலு வரிகளை மொழி பெயர்த்தபின்னே
சொல்லகராதியைத் தேட வேண்டிய நிர்ப்பந்தம். ( இது இரு மொழிகளையும் தெரிந்த வாசகருக்கு பொதுவாக ஏற்படும் ஒன்றே. )

மூல நூலில் இருக்கும் மையக்கருத்துக்கு மேல் சிலவற்றினை மொழிபெயர்ப்பில் சொல்வது, அல்ல, சிலவற்றை , அதாவது, தனது ஒப்புக்கொள்ளப்பட்ட நீதிகளுக்கு புறம்பான வற்றை, அகற்றுவது , நீக்குவது தெரியாது சாயம் அடிப்பது, அல்லது தமது நெறிகட்கு உட்பட்டு, அதற்குத் தகுந்தாற்போல் செப்பனிடுவது .

(உதாரணமாக,
குரளை மொழிபெயர்த்த பலரில் சிலர் தெரிந்தே செய்யும் தவறு என்றும் சொல்லலாம், காலத்திற்கேற்ப பொருள் என்றும் சொல்லலாம்.) இன்னொன்றும் இருக்கிறது. நண்பருக்கு கோபம் வந்து விடும்.

1970 வாக்கிலே ஒரு பிரபலம் என்னை திருக்குறள் மொழிபெயர்ப்பில் பேய் எழுத்தாளனாக (கோஸ்ட் ரைட்டர்) பயன்படுத்திய போது எனது மனதில் எழுந்த இந்த ஐயங்கள்
இன்னமும் தொடர்கின்றன.

கீட்சை இந்தியிலே 1960 லே மொழி பெயர்த்து பின் எனக்கே ஒப்புதல் இல்லை என்று 1980 லே தோன்றி கிழித்து போட்டு இருக்கிறேன்.

2001 ல் பிரும்ம சூத்ரம் தனை மொழி பெயர்க்க துவங்கி 8 வது ஸ்லோகத்திலே யே டா டா காட்டிவிட்டேன்.

இது குறித்து மொழி வல்லுநர் மாசறு பொன்னாக, வலம்புரி முத்தாக காணப்படும் மோகன் என்ன சொல்கிறார் என்று கேட்க

சின்ன சின்ன ஆசை.

சு தா.




மோகன்ஜி சொன்னது…

சு.தா !
மொழியாக்கம் பற்றிய தீர்க்கமான கேள்விகளை முன் வைத்திருக்கிறீர்கள். மிகமிக சரியான கேள்விகள்.

இந்த தளத்தில் பலமுறை விவாதிக்கப்பட்ட விஷயமே இது.

‘ஒரு மொழிபெயர்ப்புக்கென அள்ளப் படும் கவிதையில், நழுவிப் போவதென்னவோ கவிதை தான்!’ என்பார்கள். நீங்கள் சொன்னது போல், ஆற்றல் கொண்ட படைப்பாளி மொழிபெயர்த்தாலும், மொழிபெயர்க்கப்பட்டது அந்த ‘படைப்பாளியின் கவிதை’யாகத்தான் இருக்கும். மேலும், அது அவன் உள்ளார்ந்த சிந்தனையில் தோன்றாத கரு ஆகலின், இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கும். கொஞ்சம் மேலான இரண்டாம் பட்சம் ! அவ்வளவு தான். இரண்டாவது டிகாக்ஷன் காப்பி போல.

இன்னமும் கூர்மையாக சொல்ல வேண்டுமெனில், பெற்ற தாயை புரிந்து கொள்வதற்கும்,கட்டிய மனைவியை புரிந்து கொள்வதற்குமான வேறுபாடுதான், சொந்த ஆக்கத்திற்கும், மொழியாக்கத்திற்கும் உள்ள வேறுபாடு. தாயை, ஏதும் சம்பாஷணை இன்றிகூட உணரமுடியும்.... ஊறிஊறி கலந்த உணர்வல்லவா அது?! தாரத்தின் கதை வேறு. சிறந்த தாம்பத்தியமே ஆயினும், அங்கு ஒன்றிய உணர்வு தான்.... ஊறிய உணர்வல்ல.

//மொழி பெயர்ப்போனின் பாணி, நடை ஒரு தடையாகவும் சில நேரங்களில் இருப்பது //

மூலபடைப்பினை ஆழ்ந்து உள்வாங்கும்போது, மொழிபெயர்ப்பாளன் தன் பாணியைக் கூட பெரும்பாலும் மாற்றிக் கொள்ள இயலும். பிரச்னை எங்கு வருமென்றால் மூலக் கவிதை சொல்லப்பட்ட பாவகை, உருவகங்கள், மொழிபெயர்க்கப்படும் மொழியில் சொல்லப் படும் வாய்ப்பு குறைவாகக் கூட இருக்கலாம் என்பதால்..

//சொல்லகராதியைத் தேட வேண்டிய நிர்ப்பந்தம்//

ஒரு நல்ல கலைஞன் இப்படி தேடித்தான் ஆகவேண்டும். நல்ல மொழிவளம் இரண்டு மொழிகளிலும் இருப்பினும், சிறந்த ஆக்கத்தினை அளிக்க,இந்த மெனக்கெடல் தேவைதான். perceptions மொழிபெயர்ப்பில் வேலைக்காகாது.

//.....தமது நெறிகட்கு உட்பட்டு, அதற்குத் தகுந்தாற்போல் செப்பனிடுவது //

இரண்டு மொழிகளும் தெரிந்தால் மட்டும் மொழியாக்கங்கள் உருவாக்கிவிட முடியாது. அப்படியெனில் மொழிபெயர்க்க டூரிஸ்ட் கைடுகள் போதும். மேலும், கவிதை மொழிபெயர்ப்பிற்கும், கதை மற்றும் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பிற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. கவிதை மொழிபெயர்ப்பில் அதிக உரிமை எடுத்துக் கொள்ள இயலாது. வார்த்தைகளின் தேர்வில், கவிதையின் தொனி சிறிது மாறிப்போனாலும் கவிதை எரவாணத்திற்குப் பாய்ந்துவிடும். கம்பிமேல் நடக்கும் செப்பிடு வித்தை அது.
மூலக்கவிதை முளைத்த மண்ணின் கலாச்சாரமும், உணர்வு நிலைகளும், உறவுகளின் ஊடாட்டமும்..... வேற்று மொழிக்கு அன்னியமானதாய் இருக்கலாம்: நேர் மொழிபெயர்ப்பு அங்கு அன்னியமாகி அடிபட்டுவிடும். மூலக்கவிதை சொல்ல வந்த உணர்வுகளுக்கு, மொழியாக்கம் செய்யப்படும் காலாச்சாரத்தின் ஆடைகட்டி களமிறக்க வேண்டும். இதைச் செய்யும்போது, எந்த அளவு சுதந்திரம் எடுத்துக் கொள்ளலாம் என்றால், தேர்ந்த மருத்துவன் சிகிச்சை முறையை தேர்வதுபோல் படைப்பாளி செய்தல் வேண்டும்.

//திருக்குறள் மொழிபெயர்ப்பில் பேய் எழுத்தாளனாக (கோஸ்ட் ரைட்டர்)//

நீங்கள் கோஸ்டாக எப்படி சம்மதித்தீர்களோ தெரியவில்லை! ஆனாலும் ஒன்று.. பல திருக்குறள் மொழிபெயர்ப்புகளை கண்ணுற்று ரத்தக் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். அவை எல்லாமே நிஜமான கோஸ்ட்டுகள் எழுதியவைதான் போலும்.
மொழிபெயர்ப்புக் குறள் படிக்கும் தேவையின்றி, தமிழிலேயே அதை படிக்க வாய்த்த நாமெல்லோரும் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் தானே சு.தா?!

சிவகுமாரன் சொன்னது…

இன்னும் சில அக்கரைக் கவிதைகளை மொழிபெயர்க்க எண்ணியிருந்தேன். சு.தா. மற்றும் தங்களது விளக்கங்கள் பயமூட்டுகின்றன, நீங்கள் குறிப்பிடும் தவறுகள் நேர்ந்து விடுமோ என்று.

சிவகுமாரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

சிவா!
//சில அக்கரை கவிதைகளை மொழிபெயர்க்க எண்ணியிருந்தேன்//

அக்கறையோடு மொழிபெயர்த்தால் ஆகாதது ஏது சிவா?

sury siva சொன்னது…

//ஆகாதது ஏது சிவா?//

முன்னவனே முன் நின்றால்
முடியாத பொருள் உளதோ !

சிவகுமார அவர்களின் மொழி பெயர்ப்புக் கவிதை ஒன்று படித்தேன்.
அங்கேயே அதற்கு ஒரு பின்னூட்டம் போட்டு விட்டேன்.

அது ஒரு மரபுக்கவிதை. இலக்கணத்துக்கு உட்பட்டது.
sonnet iambic pantameter வகையைச் சார்ந்தது.
14 வரிகள் இருக்கவெண்டும். இதனும் ஏதேனும் ஒரு வரி
முழுமையாக இருப்பதைப் பார்க்கமுடியும். நீங்கள் பார்க்கலாம் 3வது வரி ஒரு முழு வாக்கியமாக இருக்கிறது.

இலக்கண விதிகளுக்கு உட்படாத உடைபட்ட
எழுத்துக்கோர்வை மரபு சாராக் கவிதை என நம் மொழியில்
அண்மைக்காலத்தில் சொல்கிறோம்.

இப்போது, இந்தக் கவிதையை அதாவது ஒசிமாண்டியஸ் கவிதையை
சிவகுமாரன் மொழி பெயர்ப்பு கவிதை உருவத்தில் காணும்பொழுது
இலக்கண விதிகளுக்கு ஒப்ப எழுதியதாலோ என்னவோ என்னை வெகுவாக ஈர்த்தது. நீங்கள் சொல்லும் "அந்நியம் " உணரப்படவில்லை.


//நீங்கள் கோஸ்டாக எப்படி சம்மதித்தீர்களோ தெரியவில்லை!//

அதை ஏன் கேட்கிறீர்கள். நடுத்தர வயதைத் தொடாத வாலிபத்தைக் கடந்த நிலை. முதிர்ச்சி இல்லை எனச் சொல்ல முடியாது எனினும் ambitions குள்ளே இருக்கும் ரிஸ்க் கண்ணுக்கு புலப்படவில்லை.
என் பெயர் அட்டையில் இல்லை என்பதே புத்தகம் வெளியிடும் விழா வில் தானே தெரிய வந்தது. இருந்தாலும் அதைப் போட இயலாத சூழ்நிலை என்று அடுத்த நாள் என்னை சந்தித்த
எனது நண்பர் சமாதானம் சொல்லி "போட்ட சந்தன மாலையே அதிகம்" என்பது போல் சொன்னார்.

கீட்ஸ் மொழிபெயர்ப்பை நானே கிழித்துபோட்டது வேறு காரணம். 20 வருடங்கள் சென்ற பின் கீட்ஸ் பற்றிய எனது புரிதலே ஒரு புது லெவலுக்கு சென்று விட்டதால், பழைய புரிதல் எனக்கே என் அறியாமையை உணர்த்தி மனதுக்குள்ளே சிரிக்க வைக்க வைத்தது.

அது இருக்கட்டும்.
இதே கவிதையை நான் மொழி பெயர்த்தால் எப்படி இருக்கும் என்று முதல் பாராவை மட்டும் ஒரு தட்டி பார்த்தேன். பார்யாள் தந்த சேமியா பாயசம் சாப்பிட்ட பின்னே. ....

காலிங் பெல் அடிக்குது.

பின்னே

வர்றேன்.

சுதா.

மோகன்ஜி சொன்னது…

சுதா !
சிவாவின் மொழிபெயர்ப்பு முழுமையான ஒன்று. மொ.பெ வுக்கு நல்ல உதாரணம் .மிக லயித்து படித்தேன். என் தம்பி ஒரு வைரக்கல் !

உங்கள் மொழிபெயர்ப்பையும் போடுங்கள். படிப்போம்.
என் முந்தைய விளக்கம் பற்றி ஏதும் சொல்லவில்லையே சுதா?

ரொம்ப சின்னப் பையனாக, விரல் சூப்பிக் கொண்டே மொழிபெயரத்த ஆங்கிலக் கவிதைகள் இருக்கின்றன. சிலநாட்கள் சென்று பதிகிறேன். ஹைதராபாதில் அவை கிடக்கின்றன . நான் மும்பையில் கிடக்கிறேன்!

sury siva சொன்னது…

ஒரு கதை. அதில் சுவையான சண்டை.
எப்பவுமே எந்த சண்டையிலும் நம்ம ஒரு பார்டி இல்லன்னா
அது ரொம்பவே ரசிக்கும்.

இங்கே நம்ம அம்பியோட
அம்மாவுக்கும் மனைவிக்கும்

டென்னிஸ் ஆட்டத்தில் அம்பயர் பார்த்து இருந்தால் தெரியும் !!
அந்த அம்பயர் போல நம்ம அம்பி நடுவிலே இங்கேயும் அங்கேயும்
கண்களை ஓட்டிக்கொண்டு ......

ஒரு ஸ்டேஜிலே மனைவி சொல்ரா:

pankaj ! The door is open.

dheko..dharwaaja khula hai.

தமிழ்லே எப்படி சொல்வீக...?
பல டப்பிங் சீரியல் லே ....சொதப்பறாங்க...

இதான் நீங்க சொல்ற கல்சரல் எக்ஸ்ப்ரஷன்.
மொழி பெயர்ப்பு எக்சாக்ட் டா இருந்தா அடி வாங்கும் இல்லையா

சோனியா கூட்டத்திலே ஆவேசமாக பேசுகிறார்:
mind your business.
மொழிபெயர்ப்பாளர்:
மனசே உன் வியாபாரம் என்ன ?

சுதா.

ஜீவி சொன்னது…

நல்ல மொழிபெயர்ப்பு என்பது மூல நூலின் வரிகளை உளவாங்கிக் கொண்டு அர்த்தம் சிதையாமல் அதை நம் மொழியில் நம் இயல்புப்படிச் சொல்வது.

சுதா சார் உங்களுக்கு ஒரு புதுச் செய்தி.

என் மகன் ஜீவா http://jeevagv.blogspot.in/2015/10/blog-post_14.html
தன் இருபது வயதில் நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியாவுக்காக இரு நூலகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்து அவை வெளிவந்திருக்கின்றன..

1. ROBOTS AND ROBOTICS -- எம்.ஆர். சிதம்பரா ஆங்கிலத்தில் எழுதியது.
இந்தப் புத்தகத்தின் தமிழ்த் தலைப்பு: இயந்திர மனிதனும் அதன் இயக்கவியலும்.

2. WIND ENERGY -- சுனில் பி அதாவாலே ஆங்கிலத்தில் எழுதியது.
இந்தப் புத்தகத்தின் தமிழ்த் தலைப்பு: காற்று ஆற்றல்.

உங்களை அடுத்த தடவை சந்திக்கும் பொழுது புத்தகத்தின் பிரதிகளைத் தருகிறேன். இரண்டு புத்தகங்களும் தமிழில் எழுதிய புத்தகங்கள் போலவே இருக்கும். இரண்டுமே மொழியாக்கத்திற்கு இலக்கணம் வகுக்கும் புத்தகங்கள்.

அறிவியல் நூல்களை மூலமே தமிழில் எழுதியது மாதிரி தமிழாக்கம் செய்தது ஒரு சவாலாகவே அமைந்தது.

sury siva சொன்னது…

ஆஹா.

அறிவியல் நூல்களை தமிழில் தருவது சவாலான செயல் தான். ஐயமில்லை.

இந்த அறிவியலும் அதைச் சார்ந்த துறைகளிலும் அடிப்படை சொற்கள் அதற்கான தமிழாக்கங்களை அடிக்கடி மாற்றுவதால் பொறுமை சோதிக்கப்படுகிறது என்று எனக்கோர் எண்ணம். சரியா தவறா என்றே தெரியவில்லை.
மலையாளத்தில் ஆங்கிலத்தில் உள்ள அதே சொல்லையே உபயோகிக்கின்றனர். இதனால் அந்த மாணவர்கள் வேறு நாட்டுக்கு உயர் படிப்புக்குச் செல்லும்போது சிரமம் ஏற்படுவதில்லை.

அடிப்படை அனாடமி பிசியாலஜி பற்றிய ஒரு பாடம் 1998 ல் முதல் நிலை அதிகாரிகளுக்கு எடுக்கும்போது, நான் ஆர்டெரி என்ற சொல்லுக்கு தமனி என்று சொன்னேன். இப்போது அது வேற.

அது இருக்கட்டும்.

மொழி பெயர்ப்பு நடக்கையிலே ஒரு தீவிர மொழிஒரு வெறியை மனதில் கொள்ளாது எந்த சொல் புழக்கத்தில் இருக்கிறதோ அதையே சொல்லுதல் நல்லது. இது கவிதை எழுதுபவர்க்கும் பொருந்தும்.

1958 ல் பண்டார்கர் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். சமஸ்க்ருத, ஆதுனிக் இந்தி மொழிகளில் இவரது இலக்கண மற்றும் அகராதி புத்தகம் தான் அதிக விற்பனை ஆகிறது.

சிகரெட் என்பதற்கு ஸ்வேதா பத்ர பரிவேஷ்டித தூம்ர சலாகா என்று தனது புத்தகத்தில் அகராதியில் குறிப்பிட்டார்.
(வெள்ளையான இலையால் சுற்றப்பட்ட புகை விடும் ஒரு கருவி )
இதற்காக, கோபம் கொண்ட ஒரு அமைப்பை சார்ந்தவர் 1000 புத்தகங்களை வாங்கி அவர் வீடு வாசலின் முன் கொளுத்தினார்களாம்.

நான் ஸ்ரமபட்டதன் பலன் இது தானா என்று அந்த இலக்கணப் புலவர் நொந்து போன கதை இன்றும் பிரபலம்.

நிற்க.அந்த புத்தகமே இன்னமும் கைக்கு வ.வி.யே.

சுப்பு தாத்தா.

sury siva சொன்னது…

//உங்கள் மொழிபெயர்ப்பையும் போடுங்கள். படிப்போம்.//
இது என் மொழி பெயர்ப்பு என்று இல்லை.

எனது புரிதல்.
************************************
Love’s Philosophy
காதல் ஒரு தத்துவம் தான்.
The fountains mingle with the river
ஊற்றின் நீரு நதியுடன் கலக்க,
And the rivers with the ocean,
நதியின் நீரும் கடலை நாட,
The winds of heaven mix for ever
சொர்க்கத்தின் காற்றோ நம்முடன் கலந்து
With a sweet emotion;
இனித்திடும் எண்ணமுன் இதழில் கரைந்திட
Nothing in the world is single;
எதுவும் புவியில் தனி என இலையே
All things by a law divine
எல்லாப்பொருளும் இறை சொன்ன வழியே
In one spirit meet and mingle.
இருமுகம் எல்லாம் ஒரு முகம் ஆக,
Why not I with thine?—
இனியும் நீயும் நானும்
இணையா நிற்பது சரியா முறையா !

தனிமரம் சொன்னது…

அருமையான மொழிபெயர்ப்பு கவிதை. ஷெல்லிதாசன் பற்றி அதிகம் அறியவில்லை.தொடர்ந்து இப்படியான கவிதைகளை தாருங்கள்.

sury siva சொன்னது…

உங்கள் கவிதை யை மறுமுறை
மொழி பெயர்ப்புக்கான உங்கள் விளக்கத்துக்குப் பின்னே படித்தேன்.

ஷெல்லியின் உட்கருத்தினுள் நுழைய /சமைக்க உங்கள் முயற்சி.
அக்கவிதையை உங்களது பாணி, நடையிலே இட்டது.
ஷெல்லி கவிதை/உங்கள் கவிதை நளினம்/சுவை/ஈர்ப்பு

ஒன்று ; ரா.ரா. வ.
இரண்டு.... கேசவ்.
மூன்று: லதா.

சு தா.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி அய்யா

சிவகுமாரன் சொன்னது…

\\என் தம்பி ஒரு வைரக்கல்//
அண்ணா என்ன பேறு பெற்றேன்.இந்தப் பிறவியில்!?

சிவகுமாரன் சொன்னது…

\\என் தம்பி ஒரு வைரக்கல்//
அண்ணா என்ன பேறு பெற்றேன்.இந்தப் பிறவியில்!?

மோகன்ஜி சொன்னது…

சுதா!
//சோனியா கூட்டத்திலே ஆவேசமாக பேசுகிறார்:
mind your business.
மொழிபெயர்ப்பாளர்:
மனசே உன் வியாபாரம் என்ன?//

சிரித்து மாளவில்லை. எங்கிருந்துதான் உங்கள் கண்களுக்குப் படுகிறதோ?!

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார் !
உங்கள் மகன் ஜீவாவும் மொழிபெயர்த்ததாய் அறிந்து மகிழ்கிறேன்.
அறிவியல் மோழிபெயர்ப்பு அனைத்திலும் கடினமானது.
செறிவான கலைச்சொற்களோடு செய்யவேண்டிய நகாசு வேலை....
புலிக்குப் பிறந்த குட்டியன்றோ ?!

மோகன்ஜி சொன்னது…

சு தா !
பண்டார்கர் மொழிபெயர்த்ததைப் பற்றி சொன்னீர்கள்.
நம்மவர்கள் ஸேக்‌ஷ்பியரை 'செகப்பிரியர்' என்று முட்டியையே பெயர்த்திருக்பிறார்கள் !

மோகன்ஜி சொன்னது…

சு தா!
புரிதல் என்று போட்டதே பிரளயமாய் உள்ளதே ?!
நீரும் கோவாவில் இறங்கினால் நானெல்லாம் வனமஹோத்வம் என்று வியாஸம் எழுத அல்லவா போக வேண்டும்?

நல்ல முயற்சி சுதா!

மோகன்ஜி சொன்னது…

சுதா !
மேலே 'கோதா' என நானடித்ததை ஐபாட் ' கோவா' என்று மொழியாக்கம் செய்து கொண்டதே !

மோகன்ஜி சொன்னது…

சுதா!
//ஷெல்லி கவிதை/உங்கள் கவிதை நளினம்/சுவை/ஈர்ப்பு //
நன்றி ! தன்யனானேன்.

மோகன்ஜி சொன்னது…

சிவா!
//அண்ணா என்ன பேறு பெற்றேன்.இந்தப் பிறவியில்!?//

கோதில்லாத பிறவிக் கவிஞன் நீ ! பேறு என்னுடையதே தம்பி!

ஜீவி சொன்னது…

@ மோகன்ஜி

//உங்கள் மகன் ஜீவாவும் மொழிபெயர்த்ததாய் அறிந்து மகிழ்கிறேன்../

நன்றி, கோகனஜி! நான் கொடுத்திருக்கிற சுட்டியிலும் போய்ப் பார்க்க வேண்டுகிறேன். உங்கள் சங்கீத ஞானம் 'அடடவோ' போடச்செல்லும் சுதா தவறாமல் பின்னூட்டம் போடும் பிலாக் அது. சுதாவுக்கு என் மகன் அறிமுகம் ஆன பின்னாலே தான் நான் அறிமுகம் ஆனேன். அந்தவிதத்தில் தகப்பன் சாமி என் மகன். குட்டியைப் பார்த்துப் புலியைத் தெரிந்து கொண்ட கதை.

சுதா மொழ்பெயர்ப்பு விஷயங்களின் உள் போய் விட்டார். அதனால் தான் அவர் அந்த 20 வயதைக் கோட்டை விட்டு விட்டார்.

20 வயதில் நிறைய இளைஞர்கள் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இவன் கிரிக்கெட்டும் விளையாடினான், அந்த வயதில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு இரு நூல்களைக் கொண்டு வந்தான் என்பது தான் விஷ்யம்.
அதுவும் என்.பி.ட்டிக்கு! அகில் இந்தியாவில் அந்தந்தத் துறை வல்லுனர்னர்களே பங்களிப்பளிக்கும் சபையில்!

அந்த சமயத்தில் திருமதி. சுப்புலெஷ்மி என்பவர் NBT தமிழ்த்துறையில் தலைவராக இருந்தார். அவர் இந்த இருபது வயதுப் பையனின் மொழிபெயர்ப்பு ஆற்றலை வியந்து பாராட்டித் தனிக் கடிதமே எழுதியிருந்தார். தொடர்ந்து மொழிபெயர்ப்பு நூல்களை அனுப்ப NBT தயாராக இருந்தது. இருந்தும் அண்ணா பல்கலை கழகத்தில் எம்.இ. படிப்பின் கலவிச் சுமையில் மொழியாக்க வேலையைத் தொடர்ந்து செய்ய முடியாமல் போயிற்று.

அந்த பிலாக்குக்குப் போய்ப் பாருங்கள். மனம் இலேசாகிப் போகும்.

அன்புடன்,
ஜீவி

sury siva சொன்னது…

//அந்தவிதத்தில் தகப்பன் சாமி என் மகன். //

ஜீவா வெங்கடராமன் அவர்கள் எதைப்பற்றியும் தெளிவாக எழுதுவார். துவக்கத்திலே அவருடன் பல சண்டை நான் போட்டு இருக்கிறேன். (>6 வருடம் இருக்கும் என நினைக்கிறேன்.) அவருடைய இசை பதிவுகளுக்கு நான் முதல் ரசிகன். அவரது சில பாடல்களுக்கும் மெட்டு போட்டு பாடி இருக்கிறேன்.

தமிழ் நாட்டின் சிறப்புடைத்த பல பாடலாசிரியர்கள் பற்றி எழுதுவார்.

ஜீவி சொல்வது சரி தான். அவர் ஒரு தகப்பன் சாமி தான்.


மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்
ஜீவியைப் பார்த்துத் தான் எழுதியிருப்பாரோ ?

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்!
உங்கள் மகன் பற்றிய உங்கள் எண்ணங்கள் படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அவசியம் அவர் பிளாகைப் பார்க்கிறேன். இறைவன் கருணை இருந்தால்தான் மகன் தந்தைக்குப் பெருமை சேர்ப்பதும், தந்தை மகனை எண்ணி ஆனந்தம் கொள்வதும் நிகழும்.
உம்மிருவரில் யார்கொலோ சதுரர்?!

மோகன்ஜி சொன்னது…

சுதா!
ஜீவா உங்களையே மயக்கி விட்டார் என்றால் பெரிய கையாகத் தான் இருக்கமுடியும்.
அறிமுகம் செய்வித்தமைக்கு நன்றி!

sury siva சொன்னது…

கவ்வியிதழ் முத்தமொன்றுநீ தரும்வரைக்கும்//

இப்ப தான் கவனிச்சேன்.
அது என்ன கவ்வியிதழ் ?
வலிக்காதோ ?
சுத்த ராக்ஷத் தனமா இருக்கு ?

அதுக்கு பதிலா,
அதுக்கு முதல் வரி இன்னா ?

//இவ்வினிய இணைகளெல்லாம் பயனிழக்கும்//
இதைப் போட்டுப் பாருங்க..
"இங்கே நின் செவ்விதழ்கள் சேரும் வரைக்கும். "

கொஞ்சம் சஸ்பென்ஸ் ம் இருக்கும்.

சு தா.

sury siva சொன்னது…

இங்கே நின் செவ்வதரம் சேரும் வரைக்கும்

அப்படியும் இருக்கலாம்.

wait. wait.
கிழவி எதோ கத்தராளே ??

என்னங்க..என்ன பண்ணிட்டு இருக்கீங்க..

ஏன் என்ன விஷயம் ?

அயகிரி நந்தினி நந்தித மேதினி சொல்லவேண்டாமா.
விளக்கேத்தி பத்து நிமிஷம் ஆயிடுத்து.
மடி பண்ணிண்டு வாங்கோ
சு தா.

sury siva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

சுதா!
அப்படியெல்லாம் கூட சொல்லலாம் தான்.. அது அயிகிரி நந்தினியா என்ன,மாற்றி சொன்னால் மாமி திட்டுவதற்கு?!

sury siva சொன்னது…

அது அயிகிரி நந்தினியா என்ன,மாற்றி சொன்னால் மாமி திட்டுவதற்கு?!//
ஆஹா...

சும்மா சொல்லகூடாது..

நீங்கள் தோள் கொடுக்கும் தோழன் அல்ல
கை கொடுக்கும் தெய்வம்

அது சரி, மொழி பெயர்ப்பிலே எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது.

எந்த ஒரு மொழி பெயர்ப்பிலும்
மூலத்தை அழகாக, எளிதாக, படிப்பவர் புரிந்து, ரசிக்கும் வண்ணம், அதே சமயம், மூலத்தை படிக்கவேண்டும் எனத தூண்டிடும் வகையில், மொழி பெயர்ப்பது மட்டும் போதுமா ?
இல்லை, அதில், நமது மேதா விலாசத்திற்கும் இருக்கும் ஆதார் கார்டை , அதாகப்பட்டது, நமது முத்திரையை பதிக்கவேண்டுமா ??
அதற்காக மெனக்கட வேண்டுமா ?

உதாரணமாக,

மலர்மிசை ஏகினான்

ஒரு மொழிபெயர்ப்பாளர் சொன்னார்:
மலர் போல் உள்ளம் கொண்டு மீசை வைத்திருப்பவரை காக்கா பிடிப்பவர் சேர்ந்தால், வாழ்நாள் முழுவதும் கவலை இல்லாது வாழலாம்.

கேள்வி கம்பல்சரி, சாய்ஸ் கிடையாது.

சு தா.




sury siva சொன்னது…

"மீசை வைத்திருப்பவரை "//

திகைத்துப்போய், இன்னாயா கிண்டல் பண்றீகளா...?

அப்படின்னு கேட்டு விட்டேன்.

ஐயா, நம்ம எங்க நின்னுகிட்டு இருக்கோம் பாருங்க...
என்றார்.

"திருவெல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் என்றேன். "

ஆஹா...புரிந்தேன். புரிந்தேன் என
உளம் நெகிழ்ந்தேன்.

சு தா.

Geetha Sambasivam சொன்னது…

பதிவை விடப் பின்னூட்டங்கள் சுவாரசியம். எனக்கும் ஜீவாவைத் தான் முதலில் தெரியும். பின்னர் ஜீவாவே சொன்னார், ஜீவி என்னும் பெயரில் என் தந்தையும் வலைப்பக்கம் திறந்து எழுதி வருகிறார் என்று. ஜீவாவின் எழுத்தின் தரம் அவ்வளவு எளிதாக எடைபோடக் கூடியதன்று. மிக உயர்ந்தது! எதிலும் அவருடைய தீர்மானமான தீர்க்கமான அறிவும் சொல்லாடலும் வியக்க வைக்கும். நறுக்கென்று சுருக்கமாகத் தான் சொல்லுவார். ஆனால் அதிலேயே எல்லாம் அடங்கி விடும். அவருடைய பக்குவமான மனதும் ஆச்சரியப் பட வைக்கும். மொத்தத்தில் மிக மிக மிக உயர்ந்த மனிதர்! என்றென்றும் நலத்துடனும் இதே போன்ற பரிபக்குவத்துடனும் எழுதி வந்து பெற்றோருக்கும் உற்றோருக்கும் சிறப்பையும் சேர்த்து நம்மையும் மகிழ்விக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Geetha Sambasivam சொன்னது…

இந்தப் பதிவு மட்டுமில்லை, உங்கள் பதிவுகளே வந்து நாலைந்து நாட்கள் ஆன பின்னர் தான் எனக்குத் தெரிய வருகிறது. ஜீவாவின் பழைய பதிவொன்றில் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து விட்டுத் தேடிப் பிடித்து வந்தேன். :) இனிமையான பதிவு. அனைவரின் கருத்து ஓட்டங்களும் மன நிறைவைத் தருகிறது.

subbu thatha சொன்னது…

//அனைவரின் கருத்து ஓட்டங்களும் மன நிறைவைத் தருகிறது. //


கருத்து ஓட்டம் என்றால் ?
கருத்தைச் சொல்லி இட்டு ஓட்டம் பிடிப்பதா ?

நான் ஒருத்தன் மட்டுமே,
தர்ம அடி வாங்கினாலும் சரி, அப்படின்னு அங்கனவே விழுந்து கிடப்பேன்.
யாருனாச்சும் பார்த்து ஒரு பாக்கெட் புளியோதரை கொடுக்காமலா போயிடுவாங்க..


அது சரி..
இந்த பதிவு எப்படி சென்சார் கண்ணிலே படாம ஸி சர்டிபிகேட் வாங்கினது என்று புரியல்ல..

கடைசி வரி பார்த்தீகளா ?

லோகம் எப்படி போயிண்டு இருக்கு ? பாருங்கோ>

சர்வம் விஷ்ணு மயம் ஜகத் .

சுப்பு தாத்தா.
www.subbuthaha.blogspot.com

ஜீவி சொன்னது…

//என்றென்றும் நலத்துடனும் இதே போன்ற பரிபக்குவத்துடனும் எழுதி வந்து பெற்றோருக்கும் உற்றோருக்கும் சிறப்பையும் சேர்த்து நம்மையும் மகிழ்விக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். //

தங்கள் ஆசி மனதை நெகிழச் செய்தது. மிகவும் நன்றி, கீதாம்மா.

subbu thatha சொன்னது…

என்ன தான் அந்த இரண்டாவது ஸ்டான் ஸா விலே சொன்னதை மொழி பெயர்க்கப்பார்த்தாலும்

ரா.ரா.வ. முன்னாடி லதா நிக்க முடியுமோ?

அதனாலே கூகிள் காரன் வாசல்லே போய் நின்னு
ஐயா ஒரு ஹெல்ப் வேணும் அப்படின்னேன்.

இன்னான்னு கேட்டான்.
ஒன்னும் பெரிய விசயம் இல்ல.
இதுக்கு தமிழ்லே மொழி பெயர்ப்பு வேணும் அப்படின்னு
தூக்கிப்போட்டேன்.

இந்த புடிச்சுக்கோ அப்படின்னு ......
================================================================
மலைகளில் அதிக பரலோகத்தில் முத்தம் பார்க்க

மற்றும் அலைகள் ஒருவருக்கொருவர் பிடியிலிருந்து;

இல்லை, அக்கா-பூ மன்னிக்க வேண்டும்

அதன் சகோதரர் ஏளனமாகப் என்றால்;

மற்றும் சூரிய ஒளி பூமியை பிடியிலிருந்த

சந்திரன் உத்திரங்கள் கடல் முத்தம்:

என்ன இது இனிப்பு வேலை மதிப்பு

என்மேல் முத்தம் என்றால்?
=====================================
கோபம் வந்து அந்த கூகிள் ஆபீசுக்கு செல் போட்டேன்.
யாரோ எடுத்து யாரு நீ என்ன விஷயம் அப்படின்னு இங்க்லீஷ் லே
கேட்டாங்க..
விசயத்தைச் சொன்னேன்.

இதோ பாரு. அப்படின்னு ..அவரு.....

(

தொடரும்.)

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

சுதா !
//>எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்
தொழுது கெஞ்சி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னாய் நீங்கியொரு
வார்த்தை யேனும் மாற்றிடுமோ,
அழுத கண்ணீர் ஆறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ!

உமர் கய்யாமை கவிமணி கையாண்டவிதம் பாருங்கள்!

திணிப்பினால் மேதைமை வெளிப்படுவதில்லை. மாவுக்கேற்ற பணியாரம் தான் மொழிபெயர்ப்பிலும்.
இங்கு மாவு என்பது மொழிபெயர்ப்பாளனின் விஷயஞானம், இருமொழிகளிலும் அவன் புலமை எல்லாமும் தான்.

உங்க 'மீசை' நன்றாகத்தான் துடிக்கிறது.!!

மோகன்ஜி சொன்னது…

கீதாக்கா,
ஜீவா பற்றிய உங்கள் பார்வை அவர் மேல் என் ஆவலைத் தூண்டுகிறது . அவர் பதிவுகளை எல்லாம் பார்க்க குறித்துக் கொண்டேன்.

மோகன்ஜி சொன்னது…

கீதாக்கா !
//இந்தப் பதிவு மட்டுமில்லை, உங்கள் பதிவுகளே வந்து நாலைந்து நாட்கள் ஆன பின்னர் தான் எனக்குத் தெரிய வருகிறது//

ஏதோ தம்பி தட்டிதடவி எழுதறானே.....ஊக்கமா ரெண்டு வார்த்தை சொல்வோமேன்னு அக்கறையும் கரிசனமும் இருந்தா இப்படி விட்டேத்தியா சொல்ல வருமா?
நீங்க என்னோட அக்காவா? வெறும் பின்னூட்ட அக்காவா?

மோகன்ஜி சொன்னது…

சு தா!
//அது சரி..
இந்த பதிவு எப்படி சென்சார் கண்ணிலே படாம ஸி சர்டிபிகேட் வாங்கினது என்று புரியல்ல..

கடைசி வரி பார்த்தீகளா ?

லோகம் எப்படி போயிண்டு இருக்கு ? பாருங்கோ>///

ஆஹா! அக்காவே கண்டும் காணாமே நம்ம தம்பி இந்த மட்டுமாவது இருக்கானேன்னு கைதட்டிட்டு போறாங்க!
நல்லா டார்ச் அடிச்சு இதப் பாரும்மா உன் தம்பி லட்சணத்தைன்னு போட்டுத் தரீரே ப்ராம்மணா!

ஒண்ணு தெரிஞ்சுக்கும்ம்....இந்த மேட்டரை நான் சொன்னா மேதாவிலாஸம்... அதையே நீங்க சொன்னா விரஸம்... !!!!

நான் சமத்துலயும் சமர்த்து! ஹேப்பி பர்த் டே என் அருமை அக்கோவ்!

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார் !

நீர் இராஜேந்திரனைப் பெற்ற இராஜராஜ பெருவுடையான் வே!

மோகன்ஜி சொன்னது…

சு தா!
கூகிளும் ஆத்துக்காரியும் ஒண்ணு!
ரெண்டு அட்சரம் தட்டுமுன்னே பத்து சஜஷன்கள்....
கவிதையை உள்ளே விட்டீரோ... பல பழங்கதை வர்ஜியாவர்ஜமில்லாம தண்டவாளம் ஏறும்.
இதுவே சிறந்த மொழிபெயர்ப்படீன்னு கடையைக் கட்டும்!

Geetha Sambasivam சொன்னது…

//நீங்க என்னோட அக்காவா? வெறும் பின்னூட்ட அக்காவா?//

உங்க பின்னூட்ட அக்கா தான் நான்! :) இங்கே இத்தனை நாட்கள் கழிச்சு வந்து பார்த்தால் சுவையான கருத்துப் பகிர்வுகள்! அதைவிடப் பெரிசா நான் என்னத்தைக் கருத்துச் சொல்லிக் கிழிச்சுட்டேன்.

அப்புறம் அந்தக் கடைசி பஞ்சுக்கு காஸ்யபன் சார் பதில் கொடுத்துட்டார். இல்லைனா நான் சொல்லி இருப்பேன்! :)))) பாவம் தம்பினு தான் விட்டுட்டேன்.

jeevagv சொன்னது…

அனைவரின் அன்புசால் மொழிகளுக்கும் முதற்கண் நன்றிகள்!

மோகன்-ஜி, "என் வாசகம்" பதிவில் தாங்களின் வருகையும் மறுமொழியும் கண்டேன். மிக்க மகிழ்ச்சி.

இங்கோர் இயற்கைக் கவிதையை இன்னமுதாய்ப் பருகி இன்புற்றேன். நன்றிகள்!

மோகன்ஜி சொன்னது…

அக்கா,
வானவில் மனிதனில் கருத்துக்கா பஞ்சம்?! கின்னர கிம்புருடர்கள் நடமாடும் தளமாச்சே இது?!

மோகன்ஜி சொன்னது…

ஜீவா,
உங்கள் கருத்துக்கு நன்றி! வந்தபடி இருங்கள். தொடர்பில் இருப்போம்.