'பெர்ரீங்கன்ன்'..... என்று தெருவில் கூவின குரல்,
சட்டமடித்த கண்ணாடிப் பெட்டியில் வளையல்களும் பிறவும்.
வந்திடும் நேரம் முன்மாலைப் பெரும்பாலும்.
"எங்கடா உன்னைக் காணல்லியே ரெண்டுவாரமாய்?"
அம்மாவின் கேள்விக்கு சிரிப்போடே அமர்ந்தபடி அவர்.
என்னொத்த பயலுகளுக்கு 'வளையல் மாமா'
தெருவாசிகளுக்கு 'வளவி யாவாரி'
அம்மாவுக்கு மட்டும் 'ரகு'.
அவளுடைய தம்பி நினைப்பு வந்தால் 'ராதாகிருஷ்ணா'.
எல்லாவருக்குமே அவர் பதில் புன்னகைதான்.
அழுக்கில்லாத வெள்ளைசட்டை, கையிலெப்போதும் கைக்குட்டை,
துடைத்துதுடைத்து சிவந்தமுகம், சினேகமான கண்கள், சிரிப்பு தேங்கின வாய்.
இதுதான் ரகுமாமா.
திண்ணையில் கடைவிரிக்கும் அவரின் சரக்கில்
எனக்கு ஆர்வமூட்ட எதுவும் இல்லை.
கண்ணாடி வளை,ஐடெக்ஸ் மை,குங்கும டப்பிகள்
கொண்டைவலை,பிச்சோடா ரிங், ,ஹேர்பின், ஊக்குப்பின்கள்
கலர்கலராய் ரிப்பன் சுருள்கள்,கில்ட் மூக்குத்திகள்,
காதணியென பெண்கள் சமாச்சாரம்.
குனேகா ஸெண்ட் குப்பியை திறக்காமல் முகர
எனக்கு மட்டும் அனுமதியுண்டு.
பெரும்பாலும்அம்மா வாங்கியது
மெரூன்கலர் குங்குமம், ரப்பர்ஹேர்ப்பின்கள்,
சந்தணமணத்துடன் ஒரு சின்னபவுடர் டப்பா.
சிலமுறை அக்கம்பக்க பெண்டிரும் எங்கள் திண்ணைவந்து வாங்குவதுண்டு.
அம்மாவின் தேர்வே அவர்களுக்காய் பெரும்பாலும்.
விலையை மெல்ல சங்கோஜமாய் சொல்வதுதான் அவர் சம்பாஷனையில் அதிகம்.
பேரங்கள் இருந்ததில்லை. குறைத்துக் கேட்டபோதும் கோணாது கொடுக்கும் குணம்.
அப்போதெல்லாம் ...
'நீ கேட்பதில் நியாயம் உண்டாடி?' என்று பேரம் கேட்டவளையும்,
'எப்படிடா பிழைக்கப் போறே?'என்று ரகுமாமாவையும் அம்மா திட்டுவதுண்டு.
விழாக்கால தின்பண்டங்கள் அதிகமாகவே அவரிடம் தந்தனுப்புவாள்.
உப்புமா காபி உபசாரமும் ஓரொருமுறை நடப்பதுண்டு.
எங்கோ வட இந்திய மூலையிலிருந்து வந்த என் ராதாமாமாவை
ஒருமுறை அவர் வந்தபோது அறிமுகம் செய்துவைத்தாள்.
இருவரையும் பார்த்தபோது இரட்டையர் போல் தோன்றியது.
சிரிப்பில் தான் வித்தியாசம்.
ஒரு கோடைவிடுமுறையில் நண்பன் மைதீன் வீடு சென்றேன்.
உப்பலவாடித் தெருவில் 'பெர்ரீங்கன்ன்' என்றொலித்தது.
'பாயைக் கூப்பிடு' என்றாள் மைதீனின் அம்மா.
உள்ளறையிலிருந்த என்னை இருக்கச்சொல்லி மைதீன் வீதிக்கு ஓடினான்.
வாசலுக்கு வந்த ரகுமாமாவை உள்ளறை ஜன்னல்வழியே பார்த்தேன்.
மைதீனம்மா கேட்டது இல்லாததால், 'நல்லது'என்றபடி வீதியிறங்கினார்.
'அவரை ஏண்டா பாய் என்கிறே? ரகுமாமாடா அவர்!'
மைதீன் சிரித்தான், "லூசு.. ரகுமான்டா அவருபேரு. நாகூரு அவங்க ஊரு"
மைதீன்வீட்டுக் கேரம்போர்டில் கையளைந்தாலும்,
ரகுமாமா எப்படி ரகுமான் ஆனார் என்று மனது அளைந்தபடி கிடந்தது.
வீடு திரும்பும்போது விடைதுலங்கியது.
அம்மா அவரை வினவியிருக்க வேண்டும் "உன் பேரென்னப்பா?"
"ரகுமான்"
'ரகும்மா' என்று அம்மா அதைக் கேட்டிருக்க வேண்டும்.
மாலை அப்பாவுடன் பெரியகோவில் போனபோது அவருக்கு சொன்னேன்.
"எனக்குத் தெரியுமே ரகுமானை " என்றார்.
"அம்மாவுக்கு சொன்னீங்களாப்பா?"
"தெரிந்ததையெல்லாம் சொல்லணும்னு இல்லடா" என்று சிரித்தார்.
"அம்மாவுக்கு தெரிந்திருந்தாலும் ராதான்னோ ரகுன்னோ கூப்பிட்டுத்தானிருப்பா.
உப்புமா கொடுத்துதானிருப்பா" என்றேன்.
அம்மாவை எனக்குத் தெரியும்.
என்னைவிட அவருக்குத் தெரியும்.
இந்தமுறை என் பதில் கேட்டு அப்பா சிரிக்கவில்லை.
என்தலை கோதியபடி கண் துடைத்துக் கொண்டார்
.
கண்ணில் விபூதி விழுந்திருக்கும்.
அம்மாவின் எல்லையற்ற பாசம், ரகுமானை ரகுவாக்கி விட்டது! ஆமாம், ரகுமானிலும் ரகுராமனைக் கண்ட உங்க அம்மா வணக்கத்துக்குரியவர். அப்பாவுக்கு ஏன் கண்ணில் நீர் துளித்தது? அம்மாவின் ஈடு இணையற்ற அன்பை நினைத்தா? பரந்த மனது! சின்ன விஷயம் என்றாலும் மனதை நெகிழ வைத்து விட்டது. மிச்சம் மற்றக் கருத்துப் பகிர்வுக்குப் பின்னர். :)
பதிலளிநீக்குஎன் பள்ளிப் பருவம் அறுபதுகளில். தங்கச்சி, மதனின்னும், பிற மதத்தவரும் கூப்பிடும் நேயத்தை அந்த வயதில் கண்டிருக்கிறேன். ஒருக்காலும் துவேஷம் இல்லாத ஊராய் தான் கடலூர் என் நினைவுகளில் நீடிக்கிறது. என் நண்பர்கள் பலரும் பல்வேறு ஜாதியின்ராயும், மதத்தினராயும் இருந்தார்கள். இன்றும் கூட. பைபிள் அறிந்த பாப்பாரப் பிள்ளையாய் இருந்தேன். எனது பெற்றோரை நினைத்தால் ஆச்சர்யமாய் இருக்கிறது. இந்த சழக்குகளுக்கு மேலானவராய் இருந்தார்கள். அப்படித்தான் என் பிள்ளைகளையும் வளர்த்தேன். மனித நேயம் தான் எத்தனை மகத்தானது?!
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா
பதிலளிநீக்குமனிதநேயம் மகத்தானது
நன்றி கரந்தையாரே!
பதிலளிநீக்குஎன் அம்மாவின் வீட்டில் வேலை பார்த்த கோனாரம்மாவுக்கு, “ரைஹானா” என்கிற என் அம்மாவின் பெயர் வாயில் நுழையாததால், “கல்யாணி” என்றே அழைத்தார். இங்கு அரபுநாடுகளில், தம் வீட்டில் வேலை செய்யும் இந்திய/இலங்கை பணிப்பெண்களின்/ஆண்கள் பெயர்கள் வயதான அரபிப் பாட்டிகளின் வாயில் நுழையாததால், “ஃபாத்திமா” அல்லது ரஃபீக்/முஹம்மது என்றுதான் அழைப்பார்கள்.
பதிலளிநீக்குரெஹானா என்றால் 'தெய்வீக மணம்' என்று அர்த்தமாம். கல்யாணி எனில் 'மங்களம் நிறைந்தவள்' என்று அர்த்தம்.
பதிலளிநீக்குவாய்நிறைய கூப்பிட வேண்டிய பெயர்கள் இரண்டும். தம் மக்கள் என்ற உணர்வெழுந்தால், எந்த பெயரை இருந்தாலென்ன.
பல வீடுகளில் நல்ல பெயர்களை வைத்துவிட்டு, பீடை,தரித்திரம்,ஓடுகாலி, மரமண்டை என்றல்லவா அழைக்கிறார்கள்?!
நன்றி ஹுசைனம்மா !
பதிலளிநீக்குஇன்று வரையிலும் ,முஸ்லிம் பெண்களை 'மாமி'என்றுதானே நம்மில் பலரும் அழைக்கின்றோம்?மனித நேயத்துடன் அவர்களும் அதற்கு எதிர்ப்ப தில்லையே:)
பதிலளிநீக்கு//தம் மக்கள் என்ற உணர்வெழுந்தால், எந்த பெயரை இருந்தாலென்ன.//
பதிலளிநீக்கு"What's in a name? That which we call a rose
By any other name would smell as sweet." என்ற ஷேக்ஷ்பியரின் வரியை விட உங்கள் வரியில் நேயம் இழைந்திருப்பதால் ஆழம் அதிகம்!
மனித நேயத்துடன் அன்றை காலம் போல இன்றில்லைஎன நினைக்கும் போது மதவெறியும் போட்டியுலகமும் தான் இன்று மிச்சம்! கண்ணில் விழுந்தது தூசு அல்ல ரகுவின் கடந்தகாலமாக இருக்கலாம் தந்தையின் மனதில்)))
பதிலளிநீக்குஇப்படியான கதைகளை தொடர்ந்து எழுதுங்கள் !
பதிலளிநீக்குஉண்மை தான் பகவான்ஜீ!
பதிலளிநீக்குஎன்னைக்கூட உறவின்முறையில் அழைக்கும் சில நண்பர்களின் இல்லங்கள் உண்டு.
நாலைந்து தசாப்தங்களுக்கு முன்னிருந்த நோக்கும், அதற்கு பின் விழுந்த விட்ட இறுக்கமும் கவலைக்குரியது.
ஒரு தாய் மக்கள் எனும் உணர்வு மீண்டும் தழைக்க வேண்டுமென்பதே அவா.
மிக்க நன்றி Bandhu சார் !
பதிலளிநீக்குநன்றி தனிமரம்.!
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள்!
தனிமரம்!
பதிலளிநீக்குநிகழ்வு என திருத்திக் கொள்ளுங்கள்.
பாசப்பிணைப்பினை அனுபவித்துப் பகிரும்போது வெளிப்படும் உணர்வுகள் உண்மையானதாகவே இருக்கும். மனதைத் தொட்ட பகிர்வு.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் சார்!
பதிலளிநீக்குஅருமை! மனிதம் வாழ்கிறது, வாழ வைக்கிறது!! அன்பே இறைமை!
பதிலளிநீக்குவாங்க மிடில்கிளாஸ் மாதவி!
பதிலளிநீக்குஅன்பே இறைமை.... நன்றாகச் சொன்னீர்கள்.
கடைசிவரியில் விஷயத்துக்கு வந்துசேர்ந்தீர்கள். சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குஇன்றுதான் முதன்முறையாக உங்கள் பக்கத்துக்கு வரநேர்ந்தது.வாழ்த்துக்கள்.
பெர்ரீங்கன்ன் இப்படிக் கூவி விற்றால் என்ன பொருள். ?பெயர்களில் சாதியையும் மதத்தையும் பார்க்காத அம்மா சிறந்தவர்
பதிலளிநீக்குஏகாந்தன்!
பதிலளிநீக்குஅழகான பெயர் உங்களுக்கு. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
GMB சார்!
பதிலளிநீக்குதெருவில் வியாபாரிகளின் அழைப்புக் கூவல் ஒரு புது மொழியே! கூவி விற்கும் போது சொல்லப்படும் பெயர், ஒலியின் வேகத்திலும் உச்சரிப்பிலும் ஒரு புது கூப்பாடாக நம் காதுகளில் விழுகிறது.
'பெர்ரிங்கன்ன்' எனும் கூவல், நான் சில வருடங்கள் கேட்ட சத்தமே. 'ரிப்பன்' அந்த ஒலியில் சற்று அருகே வருகிறது. பழகிவிட்ட காதுகள் எது விற்கப் படுகிறது என்று உணரவேண்டியது தான்.
நன்றி GMB சார்!
அம்மாவை எனக்குத் தெரியும்.
பதிலளிநீக்குஎன்னைவிட அவருக்குத் தெரியும்.//
இந்த ரெண்டு வரி புரிய வைக்க எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்...
// பழகிவிட்ட காதுகள் எது விற்கப் படுகிறது என்று உணரவேண்டியது தான்.//
'கோல மாவு' என்பதை கீழ் ஸ்தாயில் இருந்து மேல் ஸ்தாய் வரை கூவிச் செல்பவர், காலை நேரத்தில் போணி செய்ய ஆளற்று இடையிடையே வசவு போல் ஏதோ முனங்கிச் செல்வதைக் கேட்கும் போது, இருப்பு இருந்தாலும் பரவாயில்லை. அவர் பிழைப்புக்கேனும் நிறுத்தி வாங்கலாமா என்று நினைப்பதுண்டு. பழைய பேப்பர் வாங்குபவர் அதை நீட்டி முழக்கி கூவிச் செல்வது ரசிக்கும்படி தான் இருக்கிறது.