வியாழன், ஆகஸ்ட் 05, 2010

மூக்குப் பொடி

NoseImage via Wikipedia


சார் ! ஒன்று கவனித்தீர்களா? இப்போதெல்லாம் பொடி போடும் ஆசாமிகளை அதிகம் பார்க்க முடிவதில்லை. அந்தத் தலைமுறை கடந்து போய் விட்டது என்றே தோன்றுகிறது.

என் சிறு பிராயத்தில் என்னை சுற்றித் தான் எத்தனை
 பொடியர்கள்! எத்தனை பொடித் திருமேனிகள்?

ஆள்காட்டி விரலுக்கும் கட்டைவிரலுக்கும் இடையே சிட்டிகைப் பொடி எடுத்து சின்முத்திரை காட்டியபடி அது சிந்திவிடாமலும்,அதை  லேசில் போட்டுக்கொள்ளாமலும் கையை ஆட்டி ஆட்டி பேசும் எத்தனை சித்த புருஷர்கள் இப்போது நினைவில் நிழலாடுகிறார்கள்?

பொடியை இட்டு வைக்க தான் எத்தனை தினுசில் சமாச்சாரங்கள்?

காய்ந்த வாழை மட்டைநறுக்கில் மடக்கிய பொடி;
சிலிண்டர் போல் உருண்டு, மேல் மூடி இட்ட தகர டப்பி.;
சின்ன புத்தகம் போன்ற வடிவில் மூடும் போது  கிளிக் என மூடிக்கொள்ளும் எவர்சில்வர் டப்பி,
ரயிலில் போகும் போது ஒரு வளமான மனிதர் தங்கத்தில் பொடி டப்பி வைத்திருந்ததைக் கூட பார்த்திருக்கிறேன்.

நான் படித்த பள்ளியில் கிருத்துவ ஆசிரியர்கள்  சிகிரட் பிடிப்பதும், பிராம்மண ஆசிரியர்கள் பொடி போடுவதும் ஏதோ  மத சம்பந்தமான சடங்கு  போல் அந்த வயதில் தோன்றும்.
மிக ஆச்சாரமான சிலரும் மூக்குப் பொடிக்கு ஒரு பூஜா திரவியத்தின் அந்தஸ்த்தைக் கொடுத்திருந்ததை நான் கண்டதுண்டு.

 இதற்கு,பிரம்மபத்ர நாசிகா சூரணம் போன்ற பரிபாஷை  வேறு.
பொடி போடுதல் புருஷ லக்ஷணம் என்பன போன்ற கித்தாப்புகள் பொடிக்கு உண்டு.
  
இந்தப்  பொடி ரசிகர்கள் இடுப்பில் வேட்டி கட்டுகிறார்களோ இல்லையோ, கண்டிப்பாய்க் கையில் கைக்குட்டை வைத்திருப்பர்.!

பொடியில் கருப்பு பொடி வெள்ளைப் பொடி, நெய்பொடி என ஏதேதோ உண்டு. சிலர் பொடி போட்டு போட்டு மூக்கே வாணக் குழாய் போல் மாறியிருக்கும். ரொம்பவே ஊழலாகப் பொடியைப்   போட்டு கொள்பவர்களே பெரும்பாலும்...


என் அப்பா பொடி போடுவது ஏதோ கைக்குழந்தையை குளிப்பாட்டும் லாவகத்தோடு நாசூக்காய் இருக்கும். முதலில் கைக்குட்டையை நீளவாகில்  உருட்டி அதை மடியமர்த்தி, பொடிடப்பியின்  தலையில் வாஞ்சையோடு மெல்ல விரலால் தட்டி, ஒரு சிட்டிகை எடுத்து , சடேரென்று தலையை இடப்பக்கம் திருப்பி , கை மூக்கருகில் செல்வதும் தெரியாமல்,பொடியை உள்ளுக்கிழுததும் தெரியாமல், பொடி போடப் பட்டுவிடும். இரு கைகளாலும் கைக்குட்டையை பிடித்து கீழ்மூக்கில் பிடில் வாத்தியத்துக்கு வில் இழுப்பது போல் மூக்கின் இருபக்கமும் சிலுப்புவது ஏதோ நாட்டிய முத்திரை போல் இருக்கும். பொடி போட்ட பின் ஓரிரு நிமிஷம் கிறங்கிய மௌனம் வேறு.


அறிவாளிகள் அனைவரும் பொடிப் பிரியர்களே என  என் அப்பா  கட்டும் கட்சியில் , நெப்போலியன் போனபார்ட் முதல் அறிஞர் அண்ணா வரை அனைவரும் இருப்பார்கள்.

பொடி பற்றி சில கவிதைகள் வேறு சொல்லுவார்.

கொடியணி மாடமோங்கி குலவுசீ ரானைக் காவில்
படியினி லுள்ளார் செய்த  பாக்கிய மனையான், செங்கைத்
தொடியினர் மதனன்,சோம சுந்தரன் கடையிற் செய்த
பொடியினைப் போடா மூக்கு புண்ணியம் செய்யா மூக்கே.

உ.வே. சாமிநாதய்யர் எழுதியதாய் அப்பா சொன்ன நினைவு.


இன்னொரு பாடலில் நாறுபுனல் மூக்கோட்டை என்ற பதம் மட்டும் நினைவிருக்கிறது.

அப்போதேல்லாம் பல பொடிக்  கம்பெனிகள் பிரபலமாய் இருந்தன. T.A.S .ரத்தினம் பட்டணம் பொடி, N.S.பட்டினம் பொடி, ஸ்ரீ அம்பாள் மூக்குத் தூள் போன்றவை. பின்னதன் பொடி டப்பியில் இரு குழந்தைகள் AMBAL SNUFF  என எழுதப்பட்ட ஒரு பதாகையை  இருபுறமும் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கும் என்பதும்  நினைவில் உள்ளது. T.A.S ஸிலோ ஒரு மீசை வைத்த முரட்டு ஆசாமி பொடி இடித்துக் கொண்டிருப்பதாய் விளம்பரம் இருக்கும்.

ஏதோ பொடிசாய் ஒரு பதிவு போட நினைத்து பொடி பற்றியே போட்டு விட்டேன். இந்தப் பதிவை இன்னும் பொடி போடும் புண்ணிய மூக்குகளுக்கு... அது என்ன?? ஹாங்... DEDICATE  செய்கிறேன்.

மேலும் பொடித் தகவல்கள் இருப்பின் பின்னூட்டம் இடுங்களேன்.





Enhanced by Zemanta

6 comments:

RVS சொன்னது…

பொடி போடுவது பொடியான விஷயம் அல்ல என்பதை நன்றாக போட்டுக் காண்பித்திருக்கிறீர்கள். என் தந்தையின் வக்கீல் நண்பர் ஒருவர் எப்போதும் பொடியும் கையுமாக இருப்பார். "தத்தா தத்தா கொஞ்சம் பொடி கொடு.. பேரா பேரா அந்த தடி எடு...." என்று எங்கேயோ கானா பாடல் கேட்டதாக நினைவு. பந்தலடியில் T.A.S ரத்தினம் பட்டினம் பொடி கடையில் ஒரு ஆள் குத்த வைத்து உட்கார்ந்து உரலில் பொடி அரைப்பது போல மின்சாரத்தில் இயங்கும் பொம்மை வைத்திருப்பார்கள். அரைக்கால் சட்டை போட்ட வயதில் ஒரு அரை நிமிடம் பார்த்த பின்னால் தான் அடுத்த பக்கம் தலை திரும்பும்.

கீரன் போன்றோர் இல்லாதது தமிழமுதம் கேட்கமுடியாமல் போய்விட்டது. அந்த வில்லிபாரத பிரசங்கத்தில் சகுனி சதியாலோசனை சொல்லும் நேரங்களில் துரியோதனன் "மாமனே மாமனே.." என்று சந்தோஷம் பொங்க கூறுவதாக துரியோதனனாகவே உருமாறி பேசியிருப்பார். அருமை அருமை..

பொடி பதிவு நன்றாக இருந்தது.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

வானவில் மனிதன் சொன்னது…

பின்னூட்டத்துக்கு நன்றி RVS. நினைவுகளின் நிழலில் ஒதுங்குவது மனதுக்கு ஆறுதலான விஷயம்.அதை ஒத்த கருத்தினரோடு பகிர்ந்து கொள்வது இனிமையான அனுபவம்.மேலும் சில நண்பர்களை அறிமுகம் செய்யுங்களேன்.தொடர்பில் இருப்போம் சகோதரா! .

vijayan சொன்னது…

மூக்குபொடிக்கு ஆதரவாக பழைய திரைப்பட பாடல் ஒன்று உள்ளது,''மூக்குபொடி போடுகின்ற மூளையுள்ள ஆண்களுக்கு முக்கியமா வேணும் இந்த கைக்குட்டை.,கைக்குட்டை,என்று தூக்கு தூக்கி படத்தில் tms -ம்,சிவாஜியும் கலக்கி இருப்பார்கள்.

மோகன்ஜி சொன்னது…

விஜயன் சார்,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.உங்கள் ப்ளாக் ஏனோ திறக்க முடியவில்லை.என்னவென்று பாருங்கள்.உங்கள் URL அனுப்புங்கள்.அரிதான பழைய விஷயங்கள் உங்களிடம் தெரிந்து கொள்ளலாம் என தோன்றுகிறது.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தங்களின் மூக்குப்பொடி காரசாரமாகவே உள்ளது.
நான் எழுதிய “பொடி விஷயம்” என்னும் சிறுகதையை தங்கள் ஈ.மெயிலுக்கு அனுப்பி வைக்கிறேன். முகர்ந்து பார்த்துவிட்டு, தங்கள் நண்பர்களுக்கு (நகைச்சுவைப் பிரியர்களுக்கு) புத்தாண்டுப்பரிசாக அனுப்பி வையுஙளேன்.

//மேலும் பொடித் தகவல்கள் இருப்பின் பின்னூட்டம் இடுங்களேன்//

தங்களின் வேண்டுகோளுக்காக.......

E Pushparaj சொன்னது…

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை, அத்தனை யும் நான் சிறு வயதில் அனுபவித்திருக்கிறேன்.
TAS ரத்தினம் மீசை, SN suff ஓ எங்கே போனது அவையெல்லாம்.