எட்டுக்குடியார் வீட்டின் பரந்த திண்ணைகள் அந்தக் கோடைவிடுமுறையில் திமிலோகப்பட்டன. அந்த அகன்றவீட்டின் மொத்த அகலத்துக்குமாய் ஒரு தட்டை செங்கல் மேவிய கீழடுக்குத் திண்ணையும், அடுத்த தட்டாய் நாலு படிக்கட்டுகள் தாண்டிய வாசலுக்கு இருபுறமும் அகன்ற இரு திண்ணைகளும் அந்தத்தெரு வானரங்களின் குதியாட்டத்தில் அதிர்ந்தன.
கீழ்த்திண்ணையில் வரதுவின் கீச்சுக்குரல்
சார் சார் ஒண்ணுக்கு ........
சட்டாம்பிள்ளை ரெண்டுக்கு
நான் போறேன் வீட்டுக்கு
நாளைக்கு வந்தா கேட்டுக்கோ!
பல்லாங்குழி ஒருபுறம்,கிச்சுகிச்சு தாம்பாளம் ஒருபுறம் என்று குழுக்களாய் ஆடிக்கொண்டிருந்தோம். முனைகள் மழுங்கி, பெரியவர்கள் நிராகரித்த சீட்டுக்கட்டில் சீட்டாட்டம் இன்னொருபுறம். தொலைந்துபோன ஏழு கிளாவர்,ஹாட்டீன் ராணிக்கு பதிலாய் கார்பன் பென்சிலால் எச்சில்தொட்டு எழுதப்பட்ட ‘பாஸிங்க்ஷோ’ சிகரெட் அட்டை இரண்டு அந்தக் கட்டின் கறுப்பாடுகளாய் எதிராளிக்கு கையிருப்பைக் காட்டிக் கொடுத்தது.
அந்த சீட்டாட்டத்தின் போதுதான் அந்தக்கலவரம் வெடித்தது.
சொல்றேன் இருங்க....
எனக்கும்,கல்யாணிக்கும் இடையே வார்த்தைகள் முற்றி, கை எட்டிய வரையில் அடியும் கிள்ளலும் இரண்டு பக்கமும் பரிமாறப்பட்டது.
கல்யாணியை உங்களுக்குத் தெரியாது. இரண்டாம் வகுப்பில் அவள் ‘ஏ’ பிரிவு ..ஞானசேகரன் சார் கிளாஸ். நான் ‘பி’ பிரிவு மேரி டீச்சர் கிளாஸ். கல்யாணி கொஞ்சம் ஓங்குதாங்கான பெண். அவள் வகுப்பு மானீட்டர் வேறு. அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும். ஆட்டமோ பாட்டமோ, அவள் இருப்பை சாதித்துக் கொள்வாள்.
பாருங்க பாதி சண்டையில விட்டுட்டு என்னமோ சொல்லிக்கிட்டிருக்கேன். அடிகள் அடுத்தகட்டத்துக்கு முன்னேறி, திண்ணையில் கட்டிப் புரண்டு கீழ்த்திண்ணைக்கு இருவரும் உருண்டு உக்கிரமாகிவிட்டிருந்தது. மூச்சுமுட்ட என் கழுத்தைச் சுற்றி கல்யாணி கால்களைப் பிடியாய்ப் போட்டு இறுக்க சுவாசத்துக்கு திண்டாடினேன். வாகாய், என் வாய்க்கு அண்மையில் தட்டுப்பட்டப் பகுதியில் ஒரே ‘அக் ‘ ஆம். கடித்து விட்டேன். கல்யாணி பிடியை விலக்கி அலறிய அலறலில் திண்ணை காலியாகி, பையன்கள் ஆளுக்கொரு திசையாய் ஓட, அங்கேய நிற்க நானென்ன பைத்தியமா? வீட்டுக்கு ஓடிவந்து சித்தியின் கால்களைக் கட்டிக்கொண்டேன். அப்பா அம்மா ஊரில் இல்லை. சித்தியின் செல்லமாயிற்றே நான்.
“என்ன மோகி? எங்க விஷமம் பண்ணிட்டு வரே? அய்யய்ய.. சட்டையெல்லாம் பாரு புழுதி..”
“என்னை கல்யாணி கீழே தள்ளிட்டாக்கா...” சித்தியை அக்காவென்றே அழைத்துப் பழகிவிட்டேன்.
“கல்யாணியா? அந்த ஆம்பிள காமாட்சியோட ஏண்டா உனக்கு சகவாசம்?”
“அவ ரொம்ப கெட்டவக்கா..”.
“நீ என்ன பண்ணினே?”
“ஒரு சின்ன அடி மட்டும் தான் கொடுத்தேன்”. கண்களைப் பார்க்காமல் வலுவற்று ஒலித்தது என் குரல்.
“ருக்மணி மாமீ ....” வாசலில் நீதிகேட்டு பெரும்பசு மணியடிக்கிறதே!
உள்பக்கம் ஓடிப்போய் ஜன்னல்வழி பார்த்தபோது கண்ணீரும் கம்பலையுமாய்க் கல்யாணி, அவளுடைய அம்மா மற்றும் பாட்டிவாசலில் நின்றிருந்தார்கள்.
ஏதும் தெரியாததுபோல் சித்தி அவர்களை வரவேற்றாள்.
“உள்ளே வாங்கோ மாமி”
“ஏண்டி? உங்க அக்கா எங்கே?”
“தேரழுந்தூர் போய்யிருக்கா... என்ன சொல்லுங்கோ?”
கல்யாணியின் பாட்டி கையை ஆட்டிஆட்டிக் கூவினாள்.
“உங்காத்து மோகன் பண்ணின காரியத்தைப் பாருங்கோ .. கடங்காரன்”.
“மோகி அப்படி என்னத்த பண்ணிட்டான்?”
சித்தியின் குரலில் கொஞ்சம் நிஜமான கலவரம் .
“எங்க கல்யாணியின் தொடையிலே ஆறுபல்லு பதியக் கடிச்சு வச்சிருக்கான்.கொழந்தைத் துடிக்கிறாள். எப்படி கன்னிப்போச்சு பாத்தியா?”
“எங்க மோகி அப்படியெல்லாம் பண்ண மாட்டான் பாட்டி.”என்ற சித்தி, கல்யாணியைப் பார்த்துக் கேட்டாள்.
“கல்யாணி! மோகியா உன்னைக் கடிச்சான்? எங்கடி?”
கல்யாணி ஆங்காரமாய் அதிர்ந்தாள்.”உங்காத்த்து மோகிப் பிசாசே தான் கடிச்சது. பாருங்கோ மாமி.”
கல்யாணியின் பாவாடை மெல்ல உயர்ந்தது.
சித்தி குனிந்து ஆராய்ந்தாள். நிமிடமாய் உள்ளே ஓடி சைபால் எடுத்து வந்து கல்யாணியின் தொடையில் இட்டு நிமிர்ந்தாள்.
“வரவர இவன் அழிச்சாட்டியம் ரொம்பத்தான் ஜாஸ்த்தியாயிடுத்து.அழாதடி கண்ணு... அவனுக்கும் அதே இடத்தில் கரண்டியை பழுக்கக் காய்ச்சி சூடு வைக்கிறேன் பார்.” சித்தி ரொம்பத்தான் கடுமைக் காட்டினாள்.
சீச்சீ.. அம்மாவே பரவாயில்லை. சூடு வைப்பாளாமே?
வழங்கப்பட்ட சித்தியின் தீர்ப்பில் சமாதானமாகி கல்யாணி கட்சி நகர்ந்தது.
உள்ளே வந்த சித்தி, ஓடப்பார்த்த என்னைப் பிடித்தாள்.
நான் திமிறியபடி ஆழ ஆரம்பித்தேன்.
“என்னைக் கொஞ்சறதெல்லாம் கொஞ்சிட்டு சூடும் வைக்கப் போறே இல்லை? சித்தப்பா வந்தபுறம் உன்னை அடிக்க சொல்றேன்” என்று விசும்பினேன்.
என்னை அணைத்தபடி சித்தி கொஞ்சினாள். “என் பம்ப்ளிமாசுக்கு யாரும் சூடு வைப்பாங்களா?”
“பின்னே அந்த பாட்டிக்கிட்டே அப்படி சொன்னியே?
”
“அப்பத்தாண்டா அவங்கல்லாம் போவா..”
“அப்போ எனக்கு நிஜமா சூடு வைக்க மாட்டியா?
“இல்லடா குட்டி ... இனிமே யாரையும் கடிக்கல்லாம் கூடாது. சரியா?”
அப்பாடா.. பழைய உற்சாகமும், குறும்பும் வந்தது எனக்கு.
“பிள்ளையார் பிராமிஸ் யாரையும் கடிக்க மாட்டேன்” என்று சித்தியின் கையை வலிக்காமல் கடித்துவிட்டு ஓடினேன்.
எனக்கு சித்தி வழங்குவதாக சொன்ன தண்டனை அந்தத்தெரு முழுதும் பரவி விட்டது. அடுத்த நாள் காலை என்னைக் குளிப்பாட்டி, இடுப்பில் ஒரு துண்டை கட்டிவிட்டு, கொடியிலிருந்து டிராயரை எடுக்க சித்தி உள்ளே போனசமயம் எதிர்வீட்டு ஜிகினி வந்தான். என்னைத் துண்டோடு பார்த்தவுடன் பேஸ்த்தாகி வெளியே ஓடினான்.
எனக்கு சித்தி சூடுபோட்டு விட்டதால் டிராயர் கூடபோட்டுக் கொள்ள முடியாமல் துண்டோடு நான் உலாவிக் கொண்டிருப்பதாக அவன் கிளப்பிவிட, கல்யாணி தரப்பு ஏகத்துக்கும் சந்தோஷப்பட்டிருக்கும்.
அன்று இரவே சித்தப்பா என்னை ஏதோ கல்யாணத்திருக்கு சிதம்பரத்திற்கு அழைத்துசெல்ல, என் சூடு மேட்டருக்குப்பின் என் நடமாட்டம் குறித்த ஊகங்களுக்கு வலு சேர்ந்தது.
அடுத்தவாரம் வழக்கம்போல் நான் விளையாடக் கிளம்பிய சமயம் சித்தி அழைத்தாள் ,”யாரும் உனக்கு சூடு விழுந்ததான்னு கேட்டால் ஆமாமின்னு சொல்லு” என்று கண் சிமிட்டினாள்.
என் பங்குக்கு நானும் காலை விந்திவிந்தி, பார்த்தால் பசிதீரும் சிவாஜிபோல் நடந்து காட்டினேன்.
முனிசிபாலிட்டி பைப்பில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது அங்கே கல்யாணி வந்தாள்.
‘வேணும் கட்டைக்கு வேணுமாம் வெண்கலக் கட்டைக்கு வேணுமாம்” என்று எகத்தாளமாய் கொக்கரித்தாள்.
பதிலுக்கு “பொக்கப்பல்லு பொரிமாவு” என்று அவள் பல் விழுந்ததைக் கேலி செய்த எனக்கும் அடுத்தவாரமே விழுந்த பல்லை வானம் பார்க்காமல் புதைக்க வேண்டிவந்தது.
அதே கல்யாணியை கல்லூரி நாட்களில் ஒருமுறை சந்தித்தேன். அவள்தான் என்னை அடையாளம் கண்டுகொண்டு பேசினாள். சிறுபிராயத்தில் என்னைவிட பெரிய ஆகிருதியுடன் தோன்றியவள்,அந்நாளில் உயரக் குறைவாயும் ஒல்லியாகவும் தென்பட்டாள். அவளுடன் ஓரிரு தோழியர் உடனிருந்ததால் அதிகம் நான் பேசவில்லை. எனக்கேனோ பாவமாய் இருந்தது..
அடுத்தமுறை கல்யாணியை பலவருடம் கழித்து கல்கத்தாவில் சந்தித்தேன்.
கல்கத்தாவில் நான் இருந்த நாட்கள் அவை. என் மனைவி இரண்டாம் பிரசவத்திற்கு என்கையில் கரண்டியைக் கொடுத்துவிட்டு சென்னை போனசமயம்.
லேக் மார்க்கெட்டில் மோகி என்று யாரோ கூப்பிடத் திரும்பினேன்.
முன் வழுக்கை விழுந்த ஒரு சுப்ரமணியம் கையில் ஒரு குழந்தையுடனும் இடுப்புயரத்தில் ஒரு பெண்குழந்தையும் ஒட்டிவர,கூடவந்தாள் கல்யாணி.... “நான் கல்யாணிப்பா”
“நல்லா இருக்கீங்களா?” என்று அவளைக் கேட்டபடி அவள் கணவரைப் பார்த்து மையமாய் சிரித்து வைத்தேன்.
“என்னங்க.. இவன் மோகன். என்னோட படிச்சவன். எங்க ரெண்டுபேர் வீடும் ரொம்ப சிநேகம்”.
“நீங்களும் கல்கத்தாவுலயா இருக்கீங்க?”
“நோ நோ நான் கும்மாணத்துகிட்ட பேங்குல வேலை செய்யுறேன். எல்.டீ.சில இங்க நேத்து வந்தோம்”.
“எங்கப்பா கிளார்க்கு” என்றது அவர் பெண்.
பொதுவாய் அவரிடம் பேசிக்கொண்டிருந்த போதும், அவ்வப்போது கல்யாணியை பார்த்தபடி இருந்தேன். ஓடிக் களைத்துவிட்ட குதிரைபோல் தோன்றினாள். அசுவாரஸ்யமாக உடுத்தியிருந்தாள்.
“எங்களை உன்வீட்டுக்கு கூப்பிட மாட்டியா?”
“சார் .அதெல்லாம் வேண்டாம். தக்ஷினேஸ்வரம் எப்படி போகணும்னு மட்டும் சொல்லுங்கோ” இது அவள் கணவர்.
அந்த ஞாயிறுகாலை எனக்கும் வேலைவெட்டி இருக்கவில்லை. “அதுக்கென்ன சார். நானே கூட்டிப் போறேன். வாங்க”.
தக்ஷினேஸ்வரத்துக்கு மினிபஸ் பிடித்தோம். டிக்கெட் வாங்கினேன். முன்னிருக்கையில் கல்யாணியும் அவள் கணவனும் அமர்ந்தார்கள்.. பின்னிருக்கையில் நான் இடம் பிடித்தேன். கல்யாணியின் பெண் பூமாவோ முன்னே அப்பாவுடன் உட்கார அடம்பிடித்து,கல்யாணியின் சுட்டெரிக்கும் ஒரு பார்வையில் அடங்கி உம்மென்று என் பக்கத்தில் அமர்ந்தாள்.
“என்ன கிளாஸ் படிக்கிறே பூமா?”
“மூணாவது.” வேடிக்கைப் பார்த்தபடி, என் கேள்விகளுக்கு திட்டமாய் பதில் சொன்னபடி பூமா.. கொஞ்சம் அவளின் அப்பா ஜாடை.
“நீ நல்ல பொண்ணாச்சே. அம்மாகிட்ட அடம் பிடிக்கலாமா?”
நானொன்னும் நல்லவள் இல்லை. உங்களை மாதிரி துஷ்டை”
அதிர்ந்து போனேன்.”என்ன? நான் துஷ்டனா? உனக்கார் சொன்னா?”
“நீங்க சின்னப்போ எங்கம்மாவைக் கடிச்சேளா இல்லையா?”
“உனக்கெப்படி தெரியும்?”
“அதான் உங்களை மோகின்னு அம்மா கூப்பிட்டாளே? அப்பவே நீங்கதான்னு தெரிஞ்சு போச்சு நேக்கு”
“நான் கடிச்சத்தை உனக்கு ஏன் சொன்னாள்?”
“நானும் உங்களை மாதிரி அப்புவை சண்டைபோட்டு கடிச்சுட்டேன். அதுக்கு அப்பா என்னை அடிச்சார். அம்மா கையில சூடு வச்சுட்டா”
இடது முழங்கையை காட்டினாள். ஒரு இஞ்சு நீளத்தில் சூட்டிழுப்பு வடுவாய் பளிச்சிட்டது. “சூடு போட்டுட்டு என்னை சமாதானம் பண்ணினப்போதான் துஷ்டத்தனம் பண்ணின உங்களுக்கு உங்க சித்தி சூடு வச்சதைச் சொன்னாள்.”
எனக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. ‘கடிக்கு சூடு’ என்று கல்யாணி மனத்தில் ஒரு நியதி உருவாகியிருக்க வேண்டும்.
சே! எனக்கு சித்தி சூடு வைக்கவில்லை என்று கல்யாணிக்கு நான் சொல்லியிருக்கவேண்டும். குற்றவுணர்வு என்னை சூழ்ந்தது.
அருகிலிருந்த பூமாவை லேசாய் அணைத்துக் கொண்டேன்.
தங்கள் நினைவுகளை ரசித்தேன்..
பதிலளிநீக்குஒரு குழந்தையின் கதையாய்த் துவங்கி மனிதனின் கதையாய் முடிந்த இந்தக் கதையில் நானும் என் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தேன். மோஹியை முன் வைத்து வரைந்த எல்லாச் சித்திரங்களுமே கொள்ளை அழகு. அந்தக் குழந்தைப் பாடல்கள் எல்லாமே எத்தனை அற்புதம்?அது கல்யாணியைக் கடித்த கதை மட்டுமல்ல. படித்த கதையும் கூட.
பதிலளிநீக்குமீண்டும் ஒரு குழந்தையாய் மீண்டும் அதே காலத்துக்கு மாறத் துடிக்குது பேராசை பிடித்த மனது.
இது கதையாக இருந்தாலும் ,சொந்த அனுபவமாக இருந்தாலும் சரி இதனை அழகாக சொன்ன விதம் பிரமாதம் மோகன்ஜி , நம் எல்லோருக்கு இதே போன்ற நிகழ்வுகள் அரை டிராயர் வயசில் நிச்சயம் நிகழ்ந்திருக்கும். எனக்கும்தான். பள்ளி விடுமுறை நாளில் தன வீட்டு மாடுகளை மேய்க்கும் சூடாமணியை கிண்டல் பண்ணிவிட்டு அப்பாவிடம் அடி வாங்கியது.
பதிலளிநீக்குமுதல் வருகைக்கும் வாழ்துக்கும் நன்றி சௌந்தர் !
பதிலளிநீக்குஎன் பிரிய சுந்தர்ஜி ! ஒரு உண்மையை சொல்லட்டுமா? நான் அவ்வப்போது மட்டும் பெரியவனாய் என்னை பாவித்துக் கொண்டு சற்று வளர்ந்தவனாய் நடமாடிவிட்டு மீண்டும் குழந்தைப் பருவத்திலேயே ஒன்றி நிற்கிறேன். எப்போடா வளருவோம்னு இருக்கு எனக்கு!
பதிலளிநீக்குமாணிக்கம் சார்! இது கதையில்லை.. மோகியின் அனுபவங்களே... அடடா! சூடாமணி கதையை அவசியம் போடுங்க பிரதர். உங்கள் நையாண்டி மிளிரும் நடையில் அதைப் படிக்க ஆவல் கொண்டேன். ஏமாற்றாமல் பதியுங்கள்.. உங்கள் பாராட்டுக்கு நன்றி மாணிக்கம்ஜி.. சூடாமணியையும் கடிக்கக் காத்திருக்கிறேன்... சாரி... படிக்கக் காத்திருக்கிறேன்
பதிலளிநீக்குஎன்ன ஒரு நடை! நடந்த நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு நிறுத்தியது உங்கள் எழுத்து மோகன்ஜி!
பதிலளிநீக்குஅட நீங்களும் கடிக்கற கட்சியா! நான் கூட சிறு வயதில் கடித்திருக்கிறேன். ஆனால் கடிபட்டது ஒரு பையன். சிறு வயதின் நினைவுகளில் அப்படியே மூழ்கி மனதளவிலாவது சிறுவனாகவே இருப்பது ஆனந்தம தான் ஜி!
“பிள்ளையார் பிராமிஸ் யாரையும் கடிக்க மாட்டேன்” என்று சித்தியின் கையை வலிக்காமல் கடித்துவிட்டு ஓடினேன்.//
பதிலளிநீக்குஅழகான நடையுடன் அருமையான நினைவுப் பகிர்வாய் ந்கர்ந்த கதைக்குப் பாராட்டுக்கள்.
நீரோடடமாக நீங்கள் எழுதியுள்ள நினைவுகளை நான்
பதிலளிநீக்குரசித்தேன். வானவில்லுக்கு வந்த வண்ணத்துப் பூச்சியாக. என் அரக்கோணம் நாட்கள் படித்துப் பாருங்களேன்.
அருமையான நடை... எனக்குள் என் சிறுவயது ஞாபகங்கள் தாலாட்டு போல தவழ்ந்தன..நன்றி.
பதிலளிநீக்குஅன்பு வெங்கட் நாகராஜ்!
பதிலளிநீக்கு//சிறு வயதின் நினைவுகளில் அப்படியே மூழ்கி மனதளவிலாவது சிறுவனாகவே இருப்பது ஆனந்தம தான் ஜி!//
உண்மைதான் நண்பரே! அறியாத வயசு... புரியாத மனசு.... அந்த பிராயத்தின் அனுபவங்கள்,வாழ்க்கை குறித்த நம் கண்ணோட்டத்தை தீர்மானிக்கின்றன.. அந்த நேரத்து வலிகளும் வெற்றிகளும் என்றும் உடன் வருபவை.
உங்கள் பாராட்டிற்கு நன்றிஜி !
இராஜேஸ்வரி மேடம்! நினைவுப் பகிர்வை ரசித்ததிற்கு நன்றி!
பதிலளிநீக்குG.M.B சார் ! உங்கள் வாழ்த்துக்கு நன்றி ! உங்களின் அரக்கோணம் நாட்கள் அருமை சார் !
பதிலளிநீக்குநன்றி ப்ரேம் ! உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
பதிலளிநீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குகதை துவங்கிய விதம் ,இடம்
கதை தொடர்ந்த அழகு., நடை
கதையின் முடிப்பு
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ரமணி சார் ! உங்கள் ரசனைக்கு நன்றி !
பதிலளிநீக்குமோஹித்துப் போனேன் நீங்கள் சொல்லிப் போன விதத்தில்..
பதிலளிநீக்குநிகழ்வுகளை வளர்த்துப் போன யதார்த்தமும் சரி.. முடிவில் அப்படியே புரட்டிப் போட்ட சூடு..
தேர்ந்த எழுத்தாளருக்கே இது சாத்தியம்..
அண்ணா அத்தனை பேரையும் குழந்தைப் பருவத்துக்கு அழைத்து சென்று விட்டீர்கள். எங்கள் தெருவில் கடிச்சான் குடும்பம் ஒன்று இருந்தது. அண்ணன், தங்கை , தம்பி எல்லோரும் சண்டை வந்தால் கடித்து விடுவார்கள். நான் நிறைய கடி வாங்கியிருக்கிறேன். நிறைய பஞ்சாயத்து நடந்திருக்கிறது, அந்தப் பெண்ணிடம் வாங்கிய கடியை மட்டும் வெளியே சொன்னதில்லை.
பதிலளிநீக்குஅண்ணா சிறுகதை தொகுப்பு ஏதும் வெளியிட்டிருக்கிறீர்களா ?.
பதிலளிநீக்கு-- சிறுகதையில் யார் மாதிரியும் இல்லாமல் உங்களுக்கென்று தனி பாணி வைத்திருக்கிறீர்கள் .
ரிஷபன் சார்! நீங்கள் இந்தக் கதையில் மோகித்துப் போனது எனக்கு கிடைத்த அங்கீகாரமாய் ஏற்றுக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குவாழ்க்கையின் அனுபவங்கள் தன்னையே எழுதிக் கொள்கின்றன. மிக்க நன்றி ரிஷபன் சார்!
அன்பு சிவா ! கடிச்சான் குடும்பம்... நன்றாக இருக்கிறது பெயர். கடித்தவனே கதை சொல்லிவிட்டேன். கடிபட்டவன் வேதனை பெரும்
பதிலளிநீக்குகதையாய் அல்லவோ இருக்கும்?
கொஞ்சம் சொல்லேன் சிவா!
அன்பு சிவா! என் எழுத்துக்களுக்கு ஒரு சிறிய, ஆனால் மும்முரமான நட்பு வட்டாரம் உண்டு. அவர்களின் வற்புறுத்தலாலேயே வலைக்கு வந்தேன் சிவா! இதுவரை வெளியீடு பற்றி நினைக்கவில்லை. அப்படி வெளியிட்டால் என் கவிதைகளை வெளியீட்டு பிறகு சிறுகதைப் பற்றி யோசிப்போம்.
பதிலளிநீக்குஇந்த நவம்பரில் அய்யப்பன் பற்றி ஒரு நூல் வெளியிட வேலைகள் நடந்து வருகிறது. வழக்கொழிந்த பல விருத்தங்கள் , விடுதிகள் மற்றும் பூஜை முறைகள் சார்ந்து இத்வரை வெளிவராத செய்திகளுடன் இருக்கும் என நம்புகிறேன். கடவுள் செயல்
மனிதம் இழையூடும் சுவாரசியமான கதை. நடையும் வழக்கும் மறுபடி படிக்கத் தூண்டியது. கல்யாணியை வேறே காரணத்துக்காகக் கடித்த நினைவைக் கொண்டு வந்தது. அந்த வயது! ஹ்ம்ம்.
பதிலளிநீக்குசார், இந்தக்கதையும், தலைப்பும், கடித்த இடமும் வெகு ஜோர். பிச்சு உதறி விட்டீர்கள். குழந்தைப்பருவத்தில் இதெல்லாம் அறியாமல் செய்யும் பிழைகள் தான் என்றாலும் அதை அப்படியே ஒரு அழகான கதையாக சற்றும் விறுவிறுப்பு குறையாமல் கடைசிவரை கொண்டு சென்றுள்ளது உங்களின் தனித்திறமையைக்காட்டுது.
பதிலளிநீக்குமனம் திறந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அன்பின் அப்பாதுரை சார்! எனக்கும் கதையை எழுதி முடித்தபின், சொல்லவந்த குழந்தைப் பார்வையை மீறி மனிதத்தின் மென் உணர்வுகள் தூக்கலாய்த் தோன்றியது. விட்டு விட்டேன்.
பதிலளிநீக்குபெரிய கல்யாணி.... சின்னவளைப் போல் இப்படி எங்கேயும் உருக்குவாளோ? நல்லாத்தான் கடிச்சீங்க போங்க!
//சார், இந்தக்கதையும், தலைப்பும், கடித்த இடமும் வெகு ஜோர். பிச்சு உதறி விட்டீர்கள்//
பதிலளிநீக்குகதை... சரி
தலைப்பு..... அதுவும் சரி
கடித்த இடம்.... தொடைன்னு சொல்லனுமா இல்லை திண்ணைன்னு சொல்லனுமா?
உங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி. இனி அடிக்கடி அதற்கே முனைவேன் வை.கோ சார்!
மோகண்ணா....பயமாத்தான் இருக்கு.இப்பவும் கடிச்சு வைப்பீங்களோன்னு !
பதிலளிநீக்குஇதைப்போல வாழ்க்கையில எங்களுக்கும் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருந்தாலும் அதைச் சுவாரஸ்யமா கதையாக்கிற சாமர்த்தியம் உங்ககிட்ட நிறையவே இருக்கு.குட்டி மோகி ரொம்பக் குழப்படிதான் !
இப்பவும் மோகிக்கு கடிக்கற பழக்கம் இருக்கோ ?
பதிலளிநீக்குகொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும்தானே அதுக்குக் கேட்டேன்
பயப்படாதே என் தங்கை ராணியே!
பதிலளிநீக்குகவ்வுதல் பயின்ற பிறகு கடித்தல் ஒழித்தேன்!
புலி தன் குட்டிகளை இடம்விட்டு இடம் மாற்ற குட்டியின் கழுத்தில் கவ்வித்தூக்கி செல்லுமே, அந்த லாவகம் கைவந்த பின்னர் யாருக்குமே வலிக்காமல் உடன் அழைத்து செல்வதும்,நம்பிக்கையூட்டி வாழ்வதும் நெறியாகிப் போனது எனக்கு.
//குட்டி மோகி ரொம்பக் குழப்படிதான் !//
பெரிய மோகியும் அப்படியே என்றுன் அண்ணி சொல்கிறாள்!
எல்.கே!
பதிலளிநீக்கு//இப்பவும் மோகிக்கு கடிக்கற பழக்கம் இருக்கோ ?//
நம்புங்கள் கார்த்திக்! கடித்தலும் அடித்தலும் நீக்கி காலம் பல ஆயிற்று.
அன்று கடித்தது கூட தற்காப்பில்தான் அல்லவா?
சமர்த்து நான் இப்போது.. வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாது!
//ஓடிக் களைத்துவிட்ட குதிரைபோல் தோன்றினாள்//
பதிலளிநீக்குஅண்ணா சூடு மேட்டரோட அந்த லாஸ்ட் டச்... சான்சே இல்லை.. இப்படி நெஞ்சை நசுக்குகிற மாதிரி எழுதணும்ன்னு முயற்சி பண்றேன்... முடியமாட்டேங்குது....
வாங்க ஆர்.வீ.எஸ்! பாராட்டுக்கு நன்றி! உங்க எழுத்துல நெஞ்சு பூரிச்சு இல்ல போகுது .... அப்படியே இருக்கட்டும். நெஞ்சை நசுக்கறதுக்கு என்னை மாதிரி நிறைய பேர் இருக்கிறோம். நெஞ்சம் துள்ள உங்களை மாதிரி இல்லே எழுதணும்?
பதிலளிநீக்குதேர்ந்த எழுத்து நடை,
பதிலளிநீக்குகதைக்குள் என் கையை பிடித்து கூட்டிச் சென்றது.
குழந்தை பருவ நினைவுகளை கூட்டிவிட்டுச் சென்றது.
அருமை........மிக அருமை
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி டாக்டர். அடிக்கடி வாருங்கள்
பதிலளிநீக்குகல்யாணியின் கடி யிலிருந்து பூமாவுக்கு கிடைத்த சூடு வரை பூமாலையான கதைத்தொடுப்பு... 70 -80 காலங்களில் சிறுவர் சிறுமியரின் நட்புறவு, விளையாட்டுச் சண்டை இதெல்லாம் டிஜிட்டல் உலகத்தில் காணமல் போய்விட்டது.. பல்லாங்குழி, சீட்டாட்டம் களை கட்டும் விடுமுறை ஆட்டங்களை அழகாக நினைவு படுத்தினிர்கள்...
பதிலளிநீக்குசரியான கடி ஐயா(யோ)!!!
பதிலளிநீக்குவிடுமுறைகள் ,அதற்கான எதிர்பார்ப்புகள், கொண்டாட்டங்கள்,பயணங்கள்,பரிமாற்றங்கள் எல்லாமே இன்றைய குழந்தைகள் இழந்திருக்கிறார்கள். அவர்களின் கற்பனையையும், கூட்டுக்களியின் வாய்ப்புகளையும் இழந்து கம்பியூட்டரின் வெட்டு கொள்ளு விளையாட்டுகளில் விழிபிதுங்கி அடுத்த ஆண்டு படிபபிற்கு ஆயுத்தம் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பிள்ளையிலும் பெற்றோர்கள் பில்கேட்சைத் தேடித்தேடி சலிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
பதிலளிநீக்குஅன்பின் மூவார்! மூணுபக்கம் எழுதின கதையை மூன்று வார்த்தைகளில் சொன்ன சமர்த்தரே! வாங்க வாங்க!
பதிலளிநீக்குகுழந்தைப் பருவ நினைவுகள் அருமை.
பதிலளிநீக்கு////ஓடிக் களைத்துவிட்ட குதிரைபோல் தோன்றினாள்//
எல்லோருமே வாழ்க்கையின் ஓட்டத்தில் இளமையின் அடையாளங்களை இழந்து வயதின் வடுக்களை ஏற்கிறோம்.
\\விடுமுறைகள் ,அதற்கான எதிர்பார்ப்புகள், கொண்டாட்டங்கள்,பயணங்கள்,பரிமாற்றங்கள் எல்லாமே இன்றைய குழந்தைகள் இழந்திருக்கிறார்கள்//
பதிலளிநீக்குஅண்ணா. நான் நேற்று இடுகையிட்ட கவிதையை படித்தீர்களா? அப்பாஜி "கால எந்திரமா " என்று கேட்டிருக்கிறார்.
கல்யாணியின் மனதுக்குள் மோகிக்கு சூடு வாங்கிக்கொடுத்த வலி இன்றும் புகைந்துகொண்டே இருக்கிறது போலும். மகளுக்கு சூடு வைத்துவிட்டு மனம் வருந்தி அழாமலா இருந்திருப்பாள். எழுத்துகளில் புகுந்து விளையாடுகிறது பிள்ளைப் பிராய நினைவுகள். சொல்லவந்ததும், சொல்லிச் சென்றதும் மிக அருமை மோகன் ஜி.
பதிலளிநீக்குகீதா சந்தானம் மேடம்! உங்கள் வாழ்த்துக்கு நன்றி. அழகாய்ச் சொன்னீர்கள். வயதின் வடுக்களை ஏற்கிறோம் என்று. பிள்ளைப் பிராயத்திலும்,இளமைக் காலத்திலும் நிகழ்வுகள் நம்மில் பதிக்கும் ஆச்சரியமும்,பிரமையும் அனுபவத்தால் மட்டுப் படுத்தப் படுகிறது. பலநேரங்களில் அசைபோடுதல் ஒன்றே சுகமாய் நின்று போகிறது.
பதிலளிநீக்குசிவா! இப்பொழுதுதான் கணனிப் பக்கம் வந்தேன். உன் கவிதை அருமை.. கால யந்திரம் எனும் அப்பாஜியின் கருத்தை மீறி பிறிதோர் சொல் நினைக்கவும் முடிய வில்லை.
பதிலளிநீக்குஎன் நெகிழ்வு நிறைந்த வாழ்த்துக்கள் என் அருமை
சிவா!
ப்ரிய கீதா மேடம்!
பதிலளிநீக்கு//சொல்லவந்ததும், சொல்லிச் சென்றதும் மிக அருமை மோகன் ஜி.//
அழகானதோர் பாராட்டு.
கல்யாணியின் மனஓட்டத்தில் ஏன் நான் இதை சொல்லியிருக்கக் கூடாது என்று உங்கள் கருத்தைப் பார்த்தபின் தோன்றியது.
இந்த நிகழ்வின் கடைசி சந்திப்பில் அவள் பார்வையும்,சில வார்த்தைகளும் சேர்த்து, இங்ஙனம் எழுதியிருந்தேனானால் இன்னும் அதிர்வை இது
ஏற்ப்படுத்தியிருக்கக் கூடும்.
புதிய கோணம் காட்டிய உங்களுக்கு என் நன்றி கீதா!
சிறுவயது நினைவுகளை புரட்டி போடும் வார்த்தை பிரயோகங்கள்... நல்ல எழுத்து நடை...ரெம்ப வால்தனம் பண்ணி இருப்பீங்க போல இருக்கு... :)
பதிலளிநீக்குஅப்பாவி தங்கமணி ! நன்றிங்க!
பதிலளிநீக்குஉண்மைதான் சின்னப்போ கொஞ்சம் வால்தனம் பண்னினேன்... இப்பவோ இன்னும் நிறைய....
narration was so vivid... the 'thinnai'...'pallaanguzhi'... everything was brought in front of my eyes! anything that happens in childhood- gets fixed deep in our minds...
பதிலளிநீக்குthe other day- i was having lunch with my colleagues-- one of them said- her daughter(2 yrs old..!) gave her so much trouble- that she beat her daughter... i somehow don't approve of beating kids... my mom has never beat me... she just scolds... dad- doesn't even do that. that did me no harm...
your plot made me think of a million other things! brilliant!
நன்றி மாதங்கி!குழந்தைகளிடம் பெரியவர்கள் செய்யும் வன்முறை கண்டிக்கப் படவேண்டியது. போன தலைமுறையில் பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைகளை தண்டித்தது போல் இப்போது இல்லை.முற்றிலும் இல்லை என்பதல்ல, பெரும்பாலும் குறைந்து விட்டது.
பதிலளிநீக்குஎன் வீட்டில் தண்டனைகள் இல்லை எனினும்,"சூடு வைக்கிறேனா இல்லையா பார்: சிதம்பரம் பாடசாலையில் அப்பளாக் குடுமியுடன் சேர்த்துவிடுகிறேனா இல்லையா பார்" போன்ற பயமுறுத்தல்கள் இருந்தன.
குழந்தைகள் பூப் போன்றவை. அவற்றின் குறும்புகளை ரசிக்கப் பழக வேண்டும். எதையுமே நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் அவர்களோடு ஒரு நம்பிக்கை உறவை மேற்கொள்ளல் வேண்டும்
மோகன்ஜி சொன்னது…
பதிலளிநீக்கு//கல்யாணியின் மனஓட்டத்தில் ஏன் நான் இதை சொல்லியிருக்கக் கூடாது என்று உங்கள் கருத்தைப் பார்த்தபின் தோன்றியது.//
இல்லை, மோகன்ஜி. உங்கள் கோணத்தில் சொன்னதுதான் அழகு, யதார்த்தம். கல்யாணியின் கோணத்தில் சொல்லப்பட்டிருந்தால் உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை... கதையின் முடிச்சை... அவள் வாயிலாய்க் கட்டவிழ்க்க இயலாமல் போயிருக்கும்.
கீதா!அப்படி ஒண்ணு இருக்கோ ! அதுவும் சரிதான்..
பதிலளிநீக்குஇதுபோன்ற இன்னொரு சம்பவத்தை முன்னிலை தரப்பாய் எழுதுவேன்.. பாருங்களேன்.. நீங்கள் சொல்வது போல் ஒரு சவாலாய்த்தான் இருக்கும். நேரம் கிடைக்கும் பொது என் முந்தைய பதிவுகளையும் பாருங்களேன். உங்களுக்குப் பிடிக்கும்.
கல்யாணியின் பார்வையில் சொல்லப் பட்டிருந்தால் கதையின் வலியில் நேசம் இருந்திருக்குமா தெரியவில்லை, ஆனால் பிரமாதமான உள்கண்ணாடித் திருப்பம் கிடைத்திருக்கும்.
பதிலளிநீக்கு//‘பாஸிங்க்ஷோ’ சிகரெட் அட்டை இரண்டு அந்தக் கட்டின் கறுப்பாடுகளாய் எதிராளிக்கு கையிருப்பைக் காட்டிக் கொடுத்தது// -
பதிலளிநீக்குஅழகு மோகன்ஜி. எத்துனையோ கல்யாணங்களில் எங்கள் குடும்பத்தில் அப்பா, சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள், கசின்ஸ் என்று சீட்டு ஆடும் காட்சிக்கு எடுத்து சென்றீர்கள்.
என் குடும்பத்தில்
- "எட்டை தொட்டிடின் கிட்டிடும் வெற்றி";
- "வேண்டுமென்றே - மகா கணபதிம்" என்று ஒரு வார்த்தையை மட்டும் கடுபெடுத்த பாடும் என் கஸின் !";
- "ஏலே, நான் பீஷ்மர் மாதிரி - நீங்கள் எல்லாம் என் அண்ணன் / தம்பி பசங்கட. உங்கள்கிட்டே தானே தோற்க்கரேன்" என்று சால்ஜாப்பு சொல்லும் என் கடைசி சித்தப்பா;
- பலதடவை பகடை ரங்கன் என்று பேர் எடுத்த என் அப்பாவிடமோ அல்லது அவரை போலேவே சீட்டுக்கட்டில் வெளுத்து வாங்கும் என்னிடமோ, என் தம்பிகளிடமோ காசை பறிக்கொடுத்தபின் "டூ மினிட்ஸ் தனியே வர முடியுமா" என்று கேட்கும் ஒரு சித்தப்பன் !
//“ருக்மணி மாமீ ....” வாசலில் நீதிகேட்டு பெரும்பசு மணியடிக்கிறதே!//
சூப்பர்
முடிவு அருமை. மனதில் பதியும் நினைவுகள்
சுந்தர்ஜி அவர்கள் சொன்னதுபோல் - மனது முப்பத்தைந்து வருடம் பின்னோக்கி செல்ல நினைத்தது உண்மை.
இளமை கால நினைவுகளை அசை போடுவது ஒரு சுகம் என்றால், அதை இது போல நமக்கு ஒத்த ரசனை உள்ளவர்களோடு பகிர்ந்து கொள்ளுவது அதை விட சுகம்.
பதிலளிநீக்கு'கடிக்கு சூடு'. எனக்கென்னவோ இது கல்யாணியின் மனதில் ஒரு நியதியாக இருந்திருக்காது என்று தோன்றுகிறது. சூடு வைத்துவிடுவேன் என்று ஒரு தாய் பயமுறுத்துவாலே தவிர, வைக்க மாட்டாள். குழந்தை பருவத்தில் உங்களுக்கு சூடு வைத்ததும் கொக்கரித்த அவள் மனம், பின் அதற்காக மிகவும் வருந்தி இருக்க கூடும். நாள்பட மனதில் இருந்த அந்த வருத்தமும், நடந்ததிற்காக உங்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்க இயலாத நிலையும் சேர்ந்து, அதே போன்ற ஒரு நிகழ்வு நடந்தவுடன், ஒரு வேகத்தில் எடுத்த முடிவின் அடையாளம்தான் இந்த பூமாவின் சூடு என்று நினைக்கிறேன். தன்னை விட, தன் குழந்தைக்கு ஒன்று என்றால்தான் ஒரு தாய் மிகவும் அதிகமாக உருகுவாள். எனவே இதை கல்யாணி தனக்கு தானே கொடுத்து கொண்ட தண்டனையாகவும்தான் நினைத்திருப்பாள். நீண்ட வருடங்களுக்கு பிறகும் உங்களை 'மோகி' என்று அழைத்ததும், தன் மகளிடமும் உங்களை 'மோகி' என்றே அறிமுகபடுத்தி இருந்ததும் அவர்கள் மனதில் உங்கள் மேல் இன்னமும் உள்ள அன்பு கலந்த நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.
மனதை உருகவைத்த அழகான, யதார்த்தமான பதிவு.
அன்பு அப்பாதுரை! நானும் உங்களைப் போலவே நினைத்தேன்.
பதிலளிநீக்குசாய்! உங்கள் அழகான பின்னூட்டத்தை பலமுறைப் படித்தேன். அதுவே ஒரு கதைத்துணுக்கின் அடர்த்தி பெற்றிருக்கிறதே!
பதிலளிநீக்குஎல்லோருமே கொஞ்சம் ரிவர்ஸ் கியரில் ரொம்பதூரம்தான் வந்து விட்டோம் சாய்!
உங்கள் பாராட்டை ஒரு அன்புத்தம்பியின் மென்தழுவலாய் ஏற்றுக் கொள்கிறேன்
பிரிய மீனாக்ஷி மேடம்! என்னவென்று சொல்ல.. உங்கள் கூர்ந்த பார்வையை , நுட்பமான மனவியல் கூறுகளின் அலசலை ஆச்சரியத்துடனும்,
பதிலளிநீக்குவியப்புடனும் நோக்குகிறேன்.
இந்தக்கதையை படித்து ,லயித்துப் பாராட்டிய அன்பு நெஞ்சங்கள் உங்களின் பின்னூட்டத்தையும் கண்டபின் தான் இந்தப் பதிவு முழுமையுறும் எனத் தோன்றுகிறது.
இந்தப் பதிவிற்கு தேவையில்லை என் நான் ஒதுக்கிய, கல்யாணியினுடனான ஒரு சின்ன உரையாடலை இங்கு சொல்லத் தோன்றுகிறது.
"சொல்லு மோகி! என் ஞாபகம் இருக்கா?"
"சின்ன வயசில் உடன்பழகியவர்களை அப்பப்போ நினைக்காம இருக்கமுடியுமா கல்யாணி ?"
"உன் மாதிரி அப்பப்போன்னு எனக்கு இருக்க முடியயாதேடா?"
"என்ன சொல்ற?"
"உன் பதிஞ்ச பல்லு என்னோடதானே இருக்கு!"
வெளுத்து சிரித்த என் பள்ளிக்கால தோழியின் பார்வையைத் தவிர்த்தேன்
தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட தண்டனை தன் கையில் அல்லவா இருக்க வேண்டும்? பிள்ளைக்குச் சூடு போட்டு விட்டு தனக்குக் கொடுத்த தண்டனையா? சரி தான்!!
பதிலளிநீக்குதவறாக நினைக்க வேண்டாம், நிறைய அம்மாக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன் மீனாக்ஷி.
அம்மாவும் மனிதர் தானே? 'சனியனே' என்று பசிக்கு அழும் பச்சைப்பிள்ளையை அடித்துப் புடைக்கும் தாய் செயலின் பின்னே வறுமையும் இயலாமையும் புரிந்தாலும் செயலின் அறியாமையை நாம் பின்னணியை வைத்துப் பார்ப்பதால் தவறுகளை மறந்து விடுகிறோம். சனியனே என்று கணவனை அடிக்க மாட்டாள் - காரணம் பத்தினி தர்மம். அதே பத்தினி என்னவோ பிள்ளையை செருப்பால் அடிக்கவும் தயங்க மாட்டாள்.
ஒரேயடியாக, 'தவறே செய்ய மாட்டாள் தாய்' என்பதெல்லாம் எம்ஜிஆர் பாட்டுக்கு ஒத்து வருமே தவிர நடைமுறை உண்மை கிடையாது.
விட்டுப்போன வசனம் தான் கதையே மோகன்ஜி!
பதிலளிநீக்கு//அப்பப்போன்னு//
பதிலளிநீக்குThat says it all !
சொல்லி சொல்லாததை, இப்பொழுது சொல்லி கண்கலங்க வைத்துவிட்டீர்களே மோகன்! நமது வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருடனும் ஒரு கதை தொடங்குகிறது. இதில் சிறுகதையாய் பல நடைமுறையில் முடிந்தாலும், தொடர்கதையாய் சில மனதில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, இல்லையா!
பதிலளிநீக்குகல்யாணி பூமாவிற்கு போட்ட சூடு ஒரு வேகத்தில்தான் என்று எழுதி இருக்கிறேன், வேண்டுமென்றே இல்லை அப்பாதுரை. அந்த குழந்தை எரிச்சலால் துடித்திருந்த நேரத்தில், கல்யாணியின் மனமும் வேதனையில் அதைவிட பல மடங்கு எரிந்திருக்கும் அல்லவா! இதைதான் நான் தண்டனை என்று சொன்னேன். ஒரு வேகத்தில் போட்டால் என்ன! இல்லை வேண்டுமென்றே போட்டால் என்ன! சூடு சூடுதானே! நீங்கள் எழுதி இருப்பது சரிதான்.
அன்பு அப்பாதுரை! ஒரு தாய் தன் குழந்தையை தன்னில் ஒரு பகுதியாய்,தானேயாய் எண்ணுதல் இயல்பே. சூடு என்பது பெரும்பாலும் ஒரு மிரட்டலாகவே தாய்மார்களால் கைகொள்ளப் படுகிறது. தாளமுடியாத குடைச்சல் தரும் பிள்ளைகள் சூடுவாங்குவதும் உண்டு. அது தாயின் வெறுப்பாலா என்ன? பிள்ளையை திருத்துவதாய் எண்ணி படிப்பறிவற்ற சில அம்மாக்கள் மேற்கொள்ளும் வன்முறை வெளிப்பாடு அது. நான் அதை நியாயப் படுத்தவில்லை.
பதிலளிநீக்குஇயலாமையும் ஏழ்மையும் சூழ்ந்து ,வாழ்வே ஒரு பெரும் சுமையாய்ப்போகும் போது மேற்கொள்ளப் படும் தற்கொலைகளை எண்ணிப் பார்க்கிறேன். அந்த சூழலில் ஆண் தன்னை மட்டும் மாய்த்துக் கொள்வான். பெண்ணோ,தன்னோடு தன் இளம் குழந்தைகளையும் சேர்ந்தல்லவா மாய்க்கிறாள்? அது வெறுப்பு என்பதைவிட, தன் குழந்தைகள் அனாதைகளாய் கஷ்டப்படக் கூடாதே என்று ஒரேமுறை பெறும் கஷ்டம் கொடுக்கிறாளோ என்று தோன்றுகிறது.
தாய்மை என்பது ஒரு கொள்கையோ கோட்பாடோ அல்லவே.. மிக மென்மையான அந்த உணர்வை புரிய வைக்க இயலாது. உணர வேண்டுமெனில் ஒரு தாயாய் பிறவி எடுக்கவேண்டும். நான் அப்படி தாயாய் பிறப்பெடுத்தால் உம்மை என் பிள்ளையாய்ப் பெற்றுக் கொள்கிறேன். ஆனால் சூடு போடுவேனா இல்லையா என்று உத்தரவாதமெல்லாம் கொடுக்கமாட்டேன்.
அன்பு அப்பாதுரை சார்!
பதிலளிநீக்கு//விட்டுப்போன வசனம் தான் கதையே மோகன்ஜி!//
அற்புதமாய் சொல்லியிருக்கிறீர்கள்.அதனாலே தான் கதையில் சேர்க்கவில்லை.
விட்டுப்போன வசனம்... பலமுறை இந்த வார்த்தைகளை மந்திர உச்சாடனம் போல் சொல்ல வைத்துவிட்டீர்கள் என்ன பெத்த ராசாவே !
ப்ரிய சாய்!
பதிலளிநீக்கு//அப்பப்போன்னு//That says it all !
அழகு தலைவரே.. ரொம்ப அழகு
மீனாக்ஷி மேடம்!
பதிலளிநீக்குஉங்கள் பின்னூட்டங்களைப் பார்க்கும் போது இன்னமும் கூர்மையாய் நான் எழுத வேண்டும் என சங்கல்பம் செய்துகொள்ளத் தோன்றுகிறது
//நமது வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருடனும் ஒரு கதை தொடங்குகிறது. இதில் சிறுகதையாய் பல நடைமுறையில் முடிந்தாலும், தொடர்கதையாய் சில மனதில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, இல்லையா!//
அற்புதமாய் சொல்கிறீர்கள்..
கொஞ்சம் ஏமாந்தால் மிளகாய் அரைக்கிறீங்களோ மீனாக்ஷி? :) ஒரு வேகத்தில் சூடு வைக்கணும்னா தனக்கு வைத்துக் கொள்வது தானே? பிள்ளைக்கு வைத்து பிள்ளையின் துடிப்பில் தன் மனம் கலங்கியதை தனக்குக் கிடைத்த தண்டனை என்பதா? தனக்கு சூடு வச்சுக்கிட்டாலும் தண்டனை தானுங்களே? தனக்குப் பசிச்சா பிள்ளைக்கு சாப்பாடு போடுவாங்களா தாயி?
பதிலளிநீக்கு(ஏதோ தெரியாம எழுதிட்டீங்க, விடுங்க; நானும் தெரியாம படிச்சுட்டேன்:)
சூடுங்கற பேச்சே இல்லேன்னு உத்தரவாதம் வேணும் மோகன்ஜி. அப்ப்த்தான்.. :)
பதிலளிநீக்குஎங்கம்மா இந்த மாதிரி பேச்செல்லாம் கூட எடுக்க மாட்டாங்க. 'மரமண்டை'னு திட்டியிருந்தா அதுவே ரொம்ப ரொம்ப ஜாஸ்தி. எல்லாத்துக்கும் சேத்து வச்சு எங்கப்பன் பின்னிட்டான்.. விடுங்க.
தாய்மை என்பது ஒரு கோட்பாடு என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குபடிப்பறிவற்ற அம்மாக்கள் என்றில்லை மோகன்ஜி. படிப்பறிவற்ற அம்மாக்களுக்காவது படிப்பறிவில்லை என்ற போலி சமாதானம் சொல்லிக்கொள்ளலாம். படித்த, மெத்தப் படித்த, அம்மாக்களின் கொடுமைகளும் நிறைய பார்க்கிறோம். (பார்க்கிறேன்). அம்மா என்றால் தெய்வம் என்றும் அப்பா என்றால் வேறே என்றும் சொல்கிறோம் - or in my case, உல்டா. தாயின் எந்தச் செயலையும் கருணைமழையே மேரிமாதா என்று பார்ப்பதை ஒப்பவில்லை. அவ்வளவுதான்.
பதிலளிநீக்குஅழைப்பிதழ்:
பதிலளிநீக்குஉங்களது இவ்விடுகையை இன்றைய வலைச்சரத்தில் “ஞாழல் பூ - அனுபவச்சரம்” என்ற தலைப்பில் வலையுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_08.html
நேரம் இருக்கும் போது வந்து பார்வையிட அழைக்கிறேன்.
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
இதிலே ஏற்கெனவே கருத்துச் சொல்லி இருக்கும் "கீதாக்கள்" நான் இல்லை. ஒருவர் கீதா சந்தானம்! இன்னொருவர் வெறும் கீதா! :)நான் மோகியைக் குறித்து இன்று தான் படிக்கிறேன். எங்கே அம்மா ஊரிலிருந்து வந்ததும் அவங்க கிட்டேக் கல்யாணியின் பெற்றோர் மறுபடியும் வந்து விசாரிப்பாங்களோனு கடைசி வரைக்கும் பயம்மா இருந்தது. ஆனால் அவங்களும் அதோட விட்டுட்டாங்க! சித்தியும் நல்ல சித்தி! யாருக்கும் கிடைக்காத சித்தி!
பதிலளிநீக்குகல்யாணிக்கும் மோகிக்கும் இடையே இருப்பது வெறும் நட்பா? இல்லைனு நினைக்கிறேன். மெல்லிய மயிரிழை போன்ற தூரத்தில் அன்பு நின்று விட்டது! ஒருவருக்கொருவர் மனதைப் பகிராமல் இருந்தது தான் காரணமா? அல்லது இருவருமே உணரவில்லையா? இப்போது மறுபடி கல்யாணியைப் பார்க்கையில் மோகிக்குப் புரிந்திருக்குமோ?
பதிலளிநீக்குஅப்பாதுரை கூறி இருப்பது போல் நானும் ஒரு சாதாரண மனுஷி தான்! என் குழந்தைகளிடம் கோபம் உண்டு! அன்பும் உண்டு! கண்டிப்பும் உண்டு! அடிப்பதும் பின்னர் வருந்துவதும் உண்டு. இப்போதுகூடக் குழந்தைகள் சொல்லிக் கேலி செய்வார்கள். ஆனால் அதற்காக மனதார வருந்தி இருக்கிறேன். என்னைத் தண்டித்துக் கொண்டதெல்லாம் இல்லை.
பதிலளிநீக்குஇந்தக் கதையில் உள்ள உபகதை! :)))))
பதிலளிநீக்குமோகி வரையில் அந்த சம்பவத்தின் நினைப்பும்,பாலியசிநேகிதத்தின் ஈர்ப்புமன்றி ஏதும் இல்லை என்று அறிவேன்... தங்கிவிட்ட பற்கள் தந்த உணர்வு சொல்ல இயலாதது.
பதிலளிநீக்கு//தங்கிவிட்ட பற்கள் தந்த உணர்வு சொல்ல இயலாதது.//
பதிலளிநீக்குஒருவேளை மோகி அதைப் புரிந்து கொண்டும் ஏதும் செய்ய இயலாமல் விலகி இருந்தால்! அப்போது மோகியின் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும்? கல்யாணியைப் பார்த்ததும் கடித்த பற்கள் தங்கி இருப்பது நினைவில் வந்திருக்குமா? என்ன நினைத்திருப்பார்?
ஆனால் இப்போது மோகிக்கு ஈர்ப்பு இல்லை என்று சொல்வது கொஞ்சம் கடுமையாகத் தெரிந்தாலும் அவர் நிலைமை அப்படி! ஆனால் கல்யாணி தான் பாவம்! :( அவள் கணவன் அவளைப் புரிந்து கொண்டவனா? எத்தனை எத்தனை எண்ணங்கள் தோன்றுகின்றன!