பக்கங்கள்

திங்கள், மே 23, 2011

அம்மா மரம்



எங்கள் தோட்டத்து பம்ப்ளிமாஸ் மரம்
அழல்தம்பமாய் உயர்ந்து
அனல்விரல் பலநீட்டும் வேள்வித்தீயாய்
கிணற்றடியில் கிளை விரித்து நிற்கும்.

குடம்குடமாய் அதன் பழங்கள் ..
குருவிகளால் இயன்றது முகர்தல் மட்டும்...


சிலநாட்கள் இலைகளுதிர்த்து அம்மணமாய்
சிலகோடைகள் பழம்பழுக்கும் சுவடின்றி....

அம்மா இழுக்கும் தொரட்டிக்கோல்
காம்பைவருடிப் பழம் கறக்கும்.

உக்கிராண அறைமூலை குவிந்த பம்பிளிமாஸ்கள்
உக்கிரபீமன் உருட்டிய கோலிகுண்டுகளாய்,

காத்திருக்கும்.......

அண்டைஅயல் அனைவருக்கும்
அம்மா கும்பமாய் எடுத்து நீட்ட...  
  
கத்தியை மெத்தென வாங்கும் கதுப்புத் தோலுரித்து
கனிச்சுளை நீள்முத்துக்களாய் உதிர்க்கும் அம்மா

பட்டுபோனது தெரிந்தும் மரத்தைப்
பலவருடம் விட்டிருந்தாள் அம்மா.

புயலில் அது விழுந்த நாளில்
பட்டினியிருந்தாள் அம்மா.  




picture: from GOOGLE with thanks      

54 கருத்துகள்:

  1. நம்ம அம்மாக்கள் அப்படித்தான். என் பள்ளி பருவத்தில், வீட்டில் நின்று பால் தந்த பசு கோடைக்காலத்தில் கோமாரி நோய் வந்து பசுவும் கன்றும் மரித்துப்போக அன்று அம்மா கொல்லையில் மாட்டு தொழுவத்தின் முன்னாள் குரலெடுத்து வாய் விட்டு கதறி அழுதது தான் என் நினைவுக்கு வருகிறது. நம் அம்மாக்கள் அப்படித்தான் மோகன்ஜி !

    பதிலளிநீக்கு
  2. பட்டுபோனது தெரிந்தும் மரத்தைப்
    பலவருடம் விட்டிருந்தாள் அம்மா.

    புயலில் அது விழுந்த நாளில்
    பட்டினியிருந்தாள் அம்மா.


    ..... நெகிழ வைக்கும் நிகழ்வு. அம்மாவின் அன்பு எப்பொழுதுமே தனித்துவம் வாய்ந்தது.

    பதிலளிநீக்கு
  3. உண்மை கக்கு மாணிக்கம் சார்! அம்மாக்கள் அப்படித்தான்.. இழப்புகளின் வலிகளை எளிதாய் எடுத்துக் கொள்வதில்லை தாய்மை.

    பதிலளிநீக்கு
  4. வாடிய பயிருக்கும் பட்ட மரங்களுக்கும் வாடுபவள் அல்லவா தாய்! உங்கள் இந்திய வருகைக்கு நல்வாழ்த்துக்கள் சித்ரா!

    பதிலளிநீக்கு
  5. மரத்துக்கும் மனம் கலங்கும் மாணிக்கம். உங்கள் அம்மாவை எண்ணிப் பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள் (நானும் ஒட்டிக் கொள்கிறேன்).

    பம்ப்லிமாஸ் சாப்பிட்டதே இல்லையே?! taste எப்படி இருக்கும்?

    பதிலளிநீக்கு
  6. பிள்ளைகள்போல வளர்க்கும் மரத்தோடும் கதைப்பா என் அம்மா.திட்டெல்லாம் விழும் சிலநேரம்.நான் பூக்கன்றுகளோடு கதைத்துக்கொள்வேன் !

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. //அம்மா இழுக்கும் தொரட்டிக்கோல்
    காம்பைவருடிப் பழம் கறக்கும்.//

    ஆஹா, பசு மடியில் பால்
    கறப்பதுபோல அழகான வரிகள்.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அவர்களுக்கு மரங்களும் பிள்ளைகளே

    பதிலளிநீக்கு
  10. எனக்கு நெய்வேலி நினைவுகள் வந்துவிட்டது ஜி! என் வீட்டிலும் பம்ப்ளிமாஸ் மரம் நிறைய பழங்களைத் தரும். அம்மாவும் எல்லா மரங்களையும், செடிகளையும் குழந்தைகள் போல பார்த்துப் பார்த்து கவனிப்பார். ம்ம்ம்…. அழகான உணர்வுகளை படம்பிடித்துக் காட்டிய நல்ல கவிதை! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. பப்ளிமாஸ் பற்றி எழுதி அம்மாவின் நினைவுகளை எழுப்பி விட்டீர். அம்மாக்களை பார்த்திருக்கிறேன்,அவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். உணரப்படாத அம்மாவின் அரவணைப்புக் குறித்து இந்த வயதிலும் ஏக்கம் உண்டு.

    பதிலளிநீக்கு
  12. //பட்டுபோனது தெரிந்தும் மரத்தைப்
    பலவருடம் விட்டிருந்தாள் அம்மா.

    புயலில் அது விழுந்த நாளில்
    பட்டினியிருந்தாள் அம்மா. //

    அருமையான வரிகள்...

    பதிலளிநீக்கு
  13. எந்தப் ப்ரதிபலனும் பாராத அன்பைத் தருவது மரமும் அம்மாவும் மட்டுமே.

    பொருத்தமான தலைப்பு பப்ளிமாஸின் மணம் போல.

    பாலு சாரின் ஏக்கமும் நெஞ்சைத் தொடுகிறது.

    பதிலளிநீக்கு
  14. அம்மா அம்மா தான்!
    பம்ப்ளிமாஸ் பழத்தை பற்றி கணவர் அவரது நெய்வேலி வாழ்க்கை பற்றிக் சொல்லும் போது கேள்விப்பட்டிருக்கிறேன்.. நேரில் கண்டதுமில்லை. சுவைத்ததுமில்லை. உங்கள் வரிகளில் உணர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. மரமோ விலங்கோ
    மனமுள்ளவர்கள் அதனுடனான
    தொடர்பில் உறவினராகிப் போகிறார்கள்
    மனமற்றவர்களுக்குத்தான்
    தொப்பில் கொடி உறவு கூட
    அன்னியமாகிப்போகிறது
    மனங்கவர்ந்த பதிவு

    பதிலளிநீக்கு
  16. //பட்டுபோனது தெரிந்தும் மரத்தைப்
    பலவருடம் விட்டிருந்தாள் அம்மா//

    மோகன்ஜி உண்மை. அது தான் அம்மா

    //எல் கே சொன்னது… அவர்களுக்கு மரங்களும் பிள்ளைகளே//

    உண்மை

    பதிலளிநீக்கு
  17. அம்மாவின் நினைவுகளோடு பம்ப்ளிமாஸ் ஆஹா.. நினைவுகள் அசைபோட்ட விதம் அருமை மோகன்ஜி!

    பதிலளிநீக்கு
  18. நன்றி அப்பாதுரை சார்!
    அடடா! நீங்க பம்ப்லிமாஸ் சாப்பிட்டதில்லையா? சிட்ரஸ் மாக்ஸிமா எனும் தாவரவியல் நாமகரணம் சூட்டப் பெற்ற பழம். பிரமாண்டமான எலுமிச்சை போல இருக்கும். ஆரஞ்சும் சாத்துக்குடியும் இதன் தம்பிகள். கிச்சிலியும்,நாரத்தையும் கசின்ஸ்ங்க. உள்ளே ஆரஞ்ச் போல சுளைகள். உள்ளே சன்ன முத்துக்கள் வெளிர் சிவப்பாய் இருக்கும். புளிப்பும் இனிப்பும் கலந்து கட்டி விர்ரென்ன நாவில் உறைக்கும். நல்ல மணம் உடையது. அப்படியே சாப்பிடலாம். கொஞ்சமாய் சர்க்கரைதூவி சாப்பிட்டால் இன்னமும் ருசி. ஹூம்..
    பம்ப்லிமாஸ் பற்றி தமிழ் கூகிளில் தேடிகீடிப் பாத்துடாதீங்க.... பதிவுக்கு படம்தேடி வெறுத்து விட்டேன். பழத்தின் பரிமாணத்தை வவைத்து கெட்ட கதைகள். வேணாம் போவாதீங்க... நான் சொன்னா கேக்கவா போறீங்க?
    படிச்சிட்டு குளிங்க தல!

    பதிலளிநீக்கு
  19. ஹேமா! மரங்களோடும் பூச்செடிகளோடும் உரையாடுதலும் உறவாடுதலும் நமக்கு மனசாந்தி அளிக்கும். செடிகள் கூட உறவாடலையும் இசையையும் ஏற்கின்றன என்றும் அடிக்கடி படிக்கிறோம்.. எனக்கும் நேரம் போவது தெரியாமல் மரங்களை ரசிக்கும் பழக்கம் உண்டு.

    பதிலளிநீக்கு
  20. வை.கோ சார்!
    //ஆஹா, பசு மடியில் பால்
    கறப்பதுபோல அழகான வரிகள்.// நன்றி சார்! இப்போதெல்லாம் பம்ப்லிமாசை பழக்கடைகளில் பார்க்க முடிவதில்லை

    பதிலளிநீக்கு
  21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  22. உண்மை கார்த்திக் ! எதிர்பேச்சு பேசா நல்ல பிள்ளைகள் மரங்கள் அல்லவா?

    பதிலளிநீக்கு
  23. கவிதையை ரசித்ததிற்கு நன்றி வெங்கட்நாகராஜ்! நம் பக்கத்து பம்ப்ளிமாஸ்க்கு ருசி அதிகம். நான் கூட அதை ருசித்து நாளாச்சு...

    பதிலளிநீக்கு
  24. G.M.B சார் !
    //உணரப்படாத அம்மாவின் அரவணைப்புக் குறித்து இந்த வயதிலும் ஏக்கம் உண்டு// படித்து நெகிழ்ந்தேன்..

    பதிலளிநீக்கு
  25. வாங்க சங்கவி ! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!

    பதிலளிநீக்கு
  26. நன்றி சுந்தர்ஜி ! நானும் பாலு சாரின் பின்னூட்டத்தை நினைத்துக் கொண்டே இருக்கிறேன். அந்த வேதனை ஒரு கவிதையாய் உருண்டு தொண்டையை அடைத்து நிற்கிறது... எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  27. நெய்வேலி,கடலூர் பக்கம் இந்த மரம் அதிகம் உண்டு. ஒரு முறை சாப்பிட்டுத்தான் பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  28. ரமணி சார்! என் கவிதை சொன்னதை விட உங்கள் கருத்து சொல்வது அதிகம். மிக்க நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  29. நன்றி சாய்! நமக்குக்கூட காருண்யமும்,பரிவும் வாய்க்கின்ற தருணங்களில் ஒரு தாயாக அல்லவா மாறிப் போகிறோம்

    பதிலளிநீக்கு
  30. பிரிய காதர் பாய்! பல நாட்களாகின்றன நீங்கள் வானவில் பக்கம் வந்தது. நீங்களும் ஒரு அம்மாப்பில்லை அல்லவா? நினைவிருக்கிறது. வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  32. பம்ப்லிமாஸ் சாப்பிட்டதில்லையே தவிர நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நாள் ஜெயலலிதாவை (read ஆயிரத்தில் ஒருவன்) என் மாமாக்களும் அவருடைய சென்னை கிரஸ்டியன் காலேஜ் நண்பர்களும் பம்ப்லிமாஸ் என்று அழைத்து ஞாபகம். கஷ்குமுஷ்கு என்று இன்னொரு சொல்லும் நினைவுக்கு வருகிறது - அதுவும் பழமா அல்லது சும்மா சொல்வதா தெரியவில்லை. பழைய ஜெயலலிதாவைப் பாத்தா எல்லாம் புரியுது :)

    சரி, விடுங்க.. அழல்தம்பம்னா என்னனு சொல்லிடுங்க. (அம்மாவைப் பத்தி அருமையா எழுதினா அப்பாதுரை புத்தி இப்படிப் போகுதேனு சொல்லப்போறாங்க..)

    (அடடே.. மறந்துட்டேன் பாருங்க...கூகில் தேடலுக்கு வழி சொன்ன வானவில் மனிதரே, வாழிய)

    பதிலளிநீக்கு
  33. பெயரில்லா26/5/11 4:45 AM

    உங்கள் தாயின் கருணை உள்ளத்தை ஒரு அழகான கவிதையாய் வடித்து அற்புதமாய் உணர வைத்து விட்டீர்கள். ஒவ்வொரு வரியும் அருமை. வாழை கன்றுகளோடும், பசுங்கன்றுகளோடும் நான் ஆனந்தமாய் வளர்ந்த நாட்களை நினைத்து பார்க்க வைத்து விட்டீர்கள். பூக்களை பார்த்தால் அதை மென்மையாய் வருடி கொடுக்க ஆசை. அதிலும் சங்குபூக்களின் மேல் என்றுமே ஒரு தனி மோகம் தான்.

    உங்கள் கல்யாணி கதைக்கு என் கருத்தை எழுதி இருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பார்க்கவும். தாமதமான பின்னூட்டதிற்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  34. அப்பாதுரை சார்!
    //அழல்தம்பம்னா என்னனு சொல்லிடுங்க//
    அழல்= நெருப்பு ; தம்பம்= pole,column,தூண்
    வேள்வித்தீ அடர்ந்து தூண் போலெழுந்து ஒரு உயரத்துக்கு மேல் பல தீ நாக்குகளை விரிவதை கிளைவிரித்த ஒரு சன்ன மரத்துக்கு ஒப்பீடாய் எழுதினேன். சரிங்களா?

    பதிலளிநீக்கு
  35. மீனாக்ஷி மேடம்! உங்கள் பாராட்டுக்கு நன்றி! மரங்களும்,மலர்களும்,பறவைகளும்,மனிதமுகங்களும் என்றும் திகட்டாதவை. முதலிரண்டு ரொம்ப உத்தமம். அவைப் பேசுவதில்லை. பறவைக்கூச்சலைக் கூட பக்ஷிஜாலம் என ரசிக்கலாம். மனிதமுகங்களின் வித்தியாசங்கள் தான் எவ்வளவு ரசிக்கத் தகுந்தது?. அதில் ஒரே தொல்லை அவை ஓயாமல் பேசும் என்பது தானே?

    என் முந்தைய பதிவுக்கு நீங்கள் இட்ட பின்னூட்டத்தை பார்த்து என் கருத்தையும் இட்டிருக்கிறேன். உங்கள் நுணுக்கமான பார்வை மலைக்க வைக்கிறது. நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  36. அண்ணா! எங்கள் வீட்டிலும் ஒரு நெல்லி மரம் இருந்தது. ஒரு புயல் மழையில் சாய்ந்துவிட்டது. படுத்துவிட்டது என்று நினைத்தது வளைந்தே மீண்டும் உயர்ந்து காய்களை ஆதிசங்கரர் தங்கத்தில் பொழியவைத்தது போல காய்த்து குலுங்கியது.

    அந்த கடைசி வரி டச்... உங்களால்தான் முடிகிறது... அற்புதம் அண்ணா! ;-))

    பதிலளிநீக்கு
  37. சொற்பிரயோகம் மிக அருமை..!

    -
    DREAMER

    பதிலளிநீக்கு
  38. வாங்க ஆர்.வீ.எஸ்! உங்கள் பாராட்டுக்கு நன்றி! உங்கள் சிவப்பு ரதம் எப்படி இருக்கிறது?. ஒரு பதிவு போட்டுவிடுங்கள்.(தெரிஞ்சிருந்தா நானும் பக்கத்தில் சாய்ந்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டிருப்பேனே!)

    பதிலளிநீக்கு
  39. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  40. அன்பின் 'கனவுமனிதரே' உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! அடிக்கடி வாருங்கள் !

    பதிலளிநீக்கு
  41. அம்மா மரம் படித்து அசந்துவிட்டேன். அழகான வர்ணனைகளும் கவிக்கோவையும் அழகு. எல்லா அம்மாக்களுமே இப்படித்தானா?முதன்முறையாய்த் தென்னை மரம் பாளை வைத்தபோது பொங்கல் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தார் என் அம்மா.

    என் அம்மாவையும் அவர் ஆசையுடன் வளர்க்கும் தோட்டத்துப் பழமரங்களையும் பார்க்க நினைக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது கவிதை.

    பதிலளிநீக்கு
  42. //எல் கே சொன்னது… அவர்களுக்கு மரங்களும் பிள்ளைகளே//

    பிள்ளைகள் மரங்களாக இல்லாமல் இருக்கணும்...! அவ்வளவுதான்.
    அம்மாவை ('ஜெ'யை அல்ல!) நினைவு படுத்தினீர்கள்!

    பதிலளிநீக்கு
  43. பப்ளிமாஸ் ஏதோ சின்ன வயசுல சாப்பிட்டிருக்கேன்..
    இப்ப ஞாபகம் இல்ல..படத்தைப் பார்த்தா..என்னைப் போல இருக்கும்னு நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  44. பிரிய கீதா மேடம்! எல்லா அம்மாக்களும் பெரும்பாலும் ஒரே வார்ப்புதான்.ஒரு சில வித்தியாச அம்மாக்களும் உண்டு. நான் பாதியே எழுதி,முடிக்காமல் விட்டிருக்கும் ஒரு பழையகதையை சமீபத்தில் பார்த்தேன் கீதா. ஒரு சிடுமூஞ்சி அம்மா அதில் வருகிறாள். படிச்சிட்டு திட்டாதீங்க. கோடி தானியத்தில் ஓரிரு சொத்தை இருக்கலாம் தானே?

    உங்கள் தாய்க்கு என் நமஸ்காரங்கள்..

    பதிலளிநீக்கு
  45. வாங்க ஸ்ரீராம்!
    //பிள்ளைகள் மரங்களாக இல்லாமல் இருக்கணும்...! அவ்வளவுதான்//

    பிள்ளைகள் மரமாய் இருந்தாலும் நிழலும்,பழங்களும் பெற்றவளுக்கு கிடைக்குமே. சில நேரங்களில் பிள்ளைகள் முட்செடியாய் அல்லவா மனம் கிழிக்கிறார்கள்?
    அடிக்கடி வாங்க ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  46. அன்பு மூவார்...
    //படத்தைப் பார்த்தா..என்னைப் போல இருக்கும்னு நினைக்கிறேன்...//

    இருங்களேன் பம்ப்ளிமாஸ் மாதிரி ஆனந்தமா...கண்ணுக்கு நிறைவா. ஒண்ணு நிஜம்... பம்ப்ளிமாஸ் சுளையின் புளிப்பும் இனிப்பும் கலந்தாற்போல், உங்கள் எழுத்து சிரிப்பும்,சிந்தனையுமாய்..

    பதிலளிநீக்கு
  47. \\\பட்டுபோனது தெரிந்தும் மரத்தைப்
    பலவருடம் விட்டிருந்தாள் அம்மா.

    புயலில் அது விழுந்த நாளில்
    பட்டினியிருந்தாள் அம்மா.///
    நெகிழ வைக்கும் வரிகள். போன வாரம் ஊருக்குப் போன போது , அம்மா பறித்து தந்த மாங்காய் போட்டு இன்று என் மனைவி சாம்பார் வைத்தாள்.விரும்பி சாப்பிட்டதைக் கவனித்த என் மனைவி கேட்டாள் " சாம்பாரில் உங்க அம்மா வாசனையோ ? "

    பதிலளிநீக்கு
  48. அண்ணா நேற்றே வந்தேன் பின்னூட்டம் இட முடியாமல் தவித்தேன் ... இன்று வந்தால் புதுப் பொலிவுடன். அருமை.

    பதிலளிநீக்கு
  49. நன்றி சிவா!

    சாம்பாரில் உங்க அம்மா வாசனையோ?

    கவிஞன் மனைவி அல்லவா? பேசவா சொல்லித்தர வேண்டும்? மிக ரசித்தேன்..
    அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் அம்மாவுக்கு என் வணக்கங்கள்

    பதிலளிநீக்கு
  50. பப்ளி மாஸ் பழத்தை இதுவரை சாப்பிட்டதில்லை .உங்கள் கவிதை பப்ளி மாஸ் பழத்தின் சுவையோடு அம்மாவின் பாசத்தையும் உணர்த்திவிட்டது . பப்ளிமாஸ் பழத்தை ரொம்ப நாள் பப்பாளி பழம் என்று முகவரி மாற்றி நினைவு வைத்திருந்தேன்.. குண்டு கன்னத்தோடு இருக்கும் பெண் குழந்தைகளை பப்ளிமாஸ் என்று சொல்லி கிள்ளுவதை பார்த்திருக்கிறேன் ....

    பதிலளிநீக்கு
  51. வாங்க பத்மநாபன்! எவ்வளவு நாளாச்சு? அண்மையில் சென்னையில் ஆர்.வீ.எஸ்ஸை சந்தித்தபோது உங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். நலம் தானே?

    பம்ப்ளிமாசை நீங்க கூட சாப்பிட்டதில்லையா? எப்போதாவது நாம் சந்திக்கும் போது பம்ளிமாஸ் பழங்களை மாலையாய்க்கட்டி உங்களுக்கு போடுகிறேன்!

    பதிலளிநீக்கு
  52. புயலில் அது விழுந்த நாளில்
    பட்டினியிருந்தாள் அம்மா.//
    அம்மாவுக்கு என் வணக்கங்கள்
    வாடிய பயிருக்கும் பட்ட மரங்களுக்கும் வாடுபவள் அல்லவா தாய்//
    nice..

    பதிலளிநீக்கு
  53. அம்மா நினைவு வரும்போதெல்லாம் பசி மறந்து விடுகிறதே நமக்கு...

    பதிலளிநீக்கு
  54. நிலா! இப்பத்தான் படிக்கிறீங்களா இதை?

    //அம்மா நினைவு வரும்போதெல்லாம் பசி மறந்து விடுகிறதே நமக்கு...//

    என் அம்மா மறைந்தபின் , சில நாட்கள் தூக்கம் கூட மறந்து விடுகிறது எனக்கு. என் அன்னையர் தின வாழ்த்தைத் தெரிவிக்கும் போதெல்லாம், மீதி நாளெல்லாம் உனக்கு நான் சித்தியா என்பாள்!

    மாலை ஆறுமணியிலிருந்து அம்மாவுடனான கணங்களைத் தனிமையில் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.. இப்போது மணி நள்ளிரவு 01.30. தூங்க முயற்சிக்க வேண்டும்.. நிலா! என் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரை இட்டுச் செல்லுங்களேன்..