வியாழன், ஜூலை 28, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு 4


கவிதைகள்

சூத்திரம்
மான்குட்டியை கவ்வும் வேங்கை 
தன்குட்டியை கவ்வும் பாங்கை
                       புரிந்து கொள்கிறேன்.
,
உறவுகளுக்கும் சூத்திரம் 
                            அதுதானென்பதோ,
பிறழ்வுகள் நேரும்வரை 
                        புரிவதேயில்லை.

மயக்கம் 

என்னதான் சொல்லு 
எச்சில் மாங்காய் 
என் விரதத்தைக் கலைத்ததேயில்லை

உன் பல்பதிந்த பகுதி.தவிர்த்து
மறுபுறம் சுவைக்கிறேன்.

உன் வாய்ப்பட்ட மாங்காய் 
புளிப்பானதென்று 
உன் முகச்சுழிப்பு ஒன்றாலேயே
தெரிகிறதெனக்கு.


முகமாயம் 

இற்றுப் போன குடிசைக் கூரைக்கு
மஞ்சள் பூசி அலங்கரிக்கும் 
                  பூசணிப் பூக்கள். 

சாந்துப்பொட்டாய் உச்சியில் ஒரு குயில் 

இருபுறமும் புருவமாய்   
வாலசைக்கும் அணில்களும். 

கண்களாய் சார்ந்த
கருப்பு டயரிரண்டு .

மூக்காய் முதிர்ந்த பூசணிக்காய்.
வாயாய் அகன்ற குடிசை வாசல் .

குடிசைக்கு எல்லாம் தான் இருக்கிறது 
வயிறொன்றைத் தவிர.


சலிப்பு 
எனக்கு பழகிவிட்டது
உன் ஈர முத்தமும் 
கண்டக்டர் எச்சிலும்  

உலரும் ஈரங்கள் 
ஊர்ப்பட்ட வாகனப்புகை 
உள்ளிழுக்கும் போக்குவரத்து போலீசை,
பார்க்கும் போதெல்லாம் 
பாவமாய்த்தான் இருந்தது.....

சாலைக் கடந்த தள்ளுவண்டி மடக்கி,
ஆப்பிள்களை அள்ளியதை காணும்வரை.

 இனி பதிவர்கள் அறிமுகப் படலம் 

எங்க கலையாத சங்கத்து சாமியாடிகள்!

மூன்றாம் சுழி : பதிவர் அப்பாதுரை அவர்களின் வலைப்பூ. இதில் இவர் வெளியிடும் கதைகள், நாடகங்கள், தேர்ந்த திரையிசைப் பாடல் அனைத்துமே இவரின் புதுமையான, வழக்கமான சிந்தனையை தவிர்த்தவையாய், தனித்து நிற்கின்றன. சட்டெனத் தலையில் தட்டி திருப்பும் வரிகள். கொஞ்சம் அதிர்ச்சி, கொஞ்சம் ஆச்சரியம், நிறைய வியப்பு, கொஞ்சமே கொஞ்சம் சீண்டலெல்லாம் கலந்துகட்டிய உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தக் கூடும்.
இவரின் நசிகேத வெண்பா இவரின் மேதைமையை வெளிப்படுத்தும் இன்னொரு வலைப்பூ. கடோபநிஷதத்தின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் கட்டுமானத்தை மீறாமல், இவரின் சில கொள்கைகளுக்கும் பங்கம் வராமல் எடுத்தாண்டிருக்கும் ரசவாதத்தை நீங்களே படித்தால்  மட்டுமே அனுபவிக்க இயலும். தளைதட்டாத வெண்பாக்களின் அழகா, வந்துவிழுகின்ற வார்த்தைகளின் வசீகரமா, தொடரும் விளக்கங்களா... எதைச் சொல்வேன்?..

தீராத விளையாட்டுப் பிள்ளை : ஆர்.வீ.எஸ் அவர்களின் புன்னகைப்பூ.இந்த ஐ.டீ அசுரன் தொடாத துறையில்லை. எல்லாவற்றையும் நகைச்சுவை லாரியில் அள்ளிக் கொண்டு வந்து அதகளப்படுத்தும் பொல்லாத பிள்ளை.
எதையும் நகையுணர்வோடு பார்க்கும் இவரின் எழுத்துக்களில் வார்த்தை ஜாலம், நக்கல் , சுய எள்ளல்எல்லாமும் உண்டு. 'சூப்பர், கலக்கல்' என்று பின்னூட்டம் போட்டுவிட்டு அலைபேசியில் திட்டும் உரிமை எனக்குண்டு. கொஞ்சம் மூடு கெடும் போதெல்லாம் இந்த வலைத்தளத்துக்கு செல்லுங்கள். விசிலடித்துக் கொண்டு திரும்புவீர்கள்!

ஆனந்த வாசிப்பு: பத்மநாபன் அவர்களின் வலைப்பூ. இவர் பதிவுகளை அத்திப்பூ என்று சொல்ல மாட்டேன். அடிக்கடி தென்படாத குறிஞ்சிப்பூ. ஆனாலும் ரசமான பின்னூட்டங்களால் அனைவர் தளத்தையும் அழகுபடுத்தும் வண்ணத்துப் பூச்சி இவர். வானவில்லின் நிறப்பிரிகையில் இவரின் சாயம்கூட ஒட்டிக் கொண்டிருக்கிறது. நன்றி பத்மநாபன்.

சிவகுமாரன் கவிதைகள் : கவிதையை சுவாசிக்கும் என் அன்புத்தம்பியை படித்தால் நீங்களும் நேசிப்பீர்கள். சந்தங்களின் அந்தம் காட்டும் இவர் கவிதைகளின் சொல் புதிது. பொருளும் புதிது. அருட்கவியென்று இன்னொரு ஆன்மீகப்பூவும் இவர் தோட்டத்தில் உண்டு. சென்று பாருங்கள். இருந்தமிழை இருந்து படியுங்கள்.

கைகள் அள்ளிய நீர் : சுந்தர்ஜி அவர்களின் வலைப்பூ. நானும் இவரின் கருத்துப் புனலை கைகளில் அள்ளி விடத்தான் பார்க்கிறேன். இயலவில்லை.  சங்கோஜ நடையுமுண்டு.. சாட்டை அடியுமுண்டு. பொலிவான சுந்தர்ஜீயின் வலையை அவசியம் பார்க்கவேண்டும் நீங்கள்..

ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்களின் அழகு வலைப்பூ. இவர் தேவன், கல்கி ஜாதி. 'மூவார்முத்து' என்று நான் சூட்டிய பேருக்கு இதுவரை சண்டை போடாதவர்.மெல்லிய நகைச்சுவை இழையோடும் உறுத்தாத தமிழை ரசிக்கலாம். தரனின் கீர்த்தனாஞ்சலி எனும் இன்னொரு வலைப்பூவில் இவரின் கீர்த்தனை சமைக்கும் அழகையும் பார்க்கலாம்.

ரிஷபன்: தோளில் தூக்கிய குழந்தை படம் போட்ட வலைப்பூங்க!. இவர் கதைகளைப் படித்தால் நீங்களும் அவர் தோளில் அமைதிமாய் கவலை மறந்து வாசிப்பானுபவம் கொண்டு மிதக்கலாம். சிறுகதை செதுக்கும் வித்தையை இவர் சில பதிவுகள் போட்டு இளைய தலைமுறைக்கு வழிகாட்டவேண்டும் என்பது என் ஆவல்.

வை.கோபாலகிருஷ்ணன்: இவர் ஒரு எழுத்து பாக்டரி வைத்திருக்கும் இளைஞர். பழைய நிகழ்வுகளை அசைபோடும் அழகே தனி. பாருங்கள்.

 வானம் வெளித்த பின்னும் ஹேமா: என் கோபக்கார, சுவீகாரத் தங்கை. இவரின் இன்னொரு வலைப்பூ உப்புமட சந்திஎன் தங்கையாக இவள் இருப்பதால்தானோ என்னவோ, எதுஎழுதினாலும் எனக்கு பிடித்து போகிறது. அதனால் நீங்களே பார்த்துவிட்டு  மார்க் போடுங்கள். ( கொஞ்சமா போட்டீர்களானால் நான் அழுதுடுவேன் !)

மைத்துளிகள் மாதங்கி மௌளியின் வலைப்பூ . சிக்கனமான வார்த்தைப் பிரயோகத்தில் மனக்காட்சியை ஏற்படுத்தும் நல்ல எழுத்து. வித்தியாச பார்வை. இன்னமும் நிறைய எழுதுங்கள் மாதங்கி!

பாகீரதி :எல்.கே அவர்களின் வலைப்பூ. பாசாங்கில்லாத எழுத்து இவருடையது. புதுமையான கருத்துக்கள் கொண்ட இந்தப் பதிவர்  ஒரு நல்ல நாவலை செதுக்க வேண்டும். இது இந்த அண்ணனின் அன்புக் கட்டளை!

உள்ளதை (உள்ளத்தை)சொல்லுகிறேன் :சாய் அவர்களின் வலைப்பூ. ஒளிவு மறைவு இல்லாத எழுத்து. இவருடையது. ரசமான பதிவுகள் உண்டு. பாருங்கள் உடனே!

மணிராஜ் இராஜராஜேஸ்வரி: இவரின் ஸ்தல யாத்திரை பதிவுகள் கன்னத்தில் போட்டுக் கொள்ள வைக்கும். மேடம் பிடியுங்க இந்தப் பட்டத்தை...
"லையுலக சுந்தராம்பாள்  .K.P.S போல பக்தியை பரப்புங்கள்.

எங்கள் பிளாக் ஸ்ரீராம் அவர்களின் வலைப்பூ. நாங்கள் அவரை அழைப்பதென்னவோ பின்னூட்டப் பெருமாளு என்று. சுவையான கருத்துக்களை பதியும் இவரின் பதிவுகளை கண்டிப்பாய் ரசிப்பீர்கள் என்பதற்கு நான் உத்தரவாதம்.

இன்னமும் இருக்குங்க 'பதிவார் திருக்கூட்டம்' . நாளை சந்திப்போம்.   
  
      






              







              

23 comments:

ஸ்ரீராம். சொன்னது…

பிறழ்வுகள் நேர்ந்தும் புரியாமைக்கு இது ஓகே. நல்ல கவிதை.இந்த உறவுப் பிணைப்புகளைப் பற்றி தனிப் பதிவே போடலாம். உலரும் ஈரங்கள் சிரிக்க வைத்து விட்டது.
நீங்கள் சகபதிவர்களை அறிமுகப்படுத்தும் அழகு சுவையாக இருக்கிறது.அட, எங்கள் ப்ளாககுமா... நன்றி...ஆனால் நீங்கள் அந்தப் பக்கம் அதிகம் வருவதில்லையே ஜி...அது எங்களுக்குக் குறைதான்!

பத்மநாபன் சொன்னது…

கவிதைகள் ஒன்றுக்கொன்று சளைக்காமல்....ஆஹா..ஆஹா போட்டு ரசிக்க வைக்கின்றன...

கலையாத சங்க உறுப்பினர்களில் இந்த எழுத்தமைதியாளனுக்கும் இடம் நன்றி.....அனைவரையும் அறிமுக படுத்திய விதம் அருமையாக இருந்தது..

அப்பாதுரை சொன்னது…

ஓ.. இது வேறு அது வேறா?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

உறவுகளுக்கும் சூத்திரம்
அதுதானென்பதோ,
பிறழ்வுகள் நேரும்வரை
புரிவதேயில்லை.//

அழகான வரிகள்.

என்னைஅறிமுகப்படுத்திப்பட்டமும் கொடுத்திருக்கிறீர்களே..
நன்றி. நன்றி.

கௌதமன் சொன்னது…

// அப்பாதுரை சொன்னது…
ஓ.. இது வேறு அது வேறா?//

எது?

அப்பாதுரை சொன்னது…

ஓ அதுவா? இது தான் அதுனு நெனச்சேன். இது மாதிரி அதுவானாலும், அது இது இல்லேன்னு புரிய லேட்டாயிருச்சு கௌதமன்.

அதை விடுங்க. காஸ்யபன் பதிவில் கந்தசாமி சிறுகதை படிக்காதவங்க அவசியம் படிங்க. ரேர் ட்ரீட்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அனைவரையும் அறிமுக படுத்திய விதம் அருமை.

G.M Balasubramaniam சொன்னது…

உறவுகளின் சூத்திரங்களும் பிறழ்வுகளும் கூறும் நீங்கள் என் பதிவு “உறவுகள் “படியுங்களேன்.ஸ்ரீராம் சொல்வதை ஏற்கனவே செய்துவிட்டேன். வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் சொன்னது…

தினம் வலைக்கு வருகிறீர்கள். அலசுகிறீர்கள்.தங்கள் தம்பி என்று சொல்லிக் கொள்ளும் தகுதி எனக்கு இருக்கிறதா தெரியவில்லை.
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அண்ணா.

உறவுகள் பற்றிய சூத்திரம் நிறைய யோசிக்க வைத்தது. நான்கே வரிகள். நச்சென்று நடு மண்டையில் விழுந்தது போன்று இருந்தது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அட... நானுமா?

அப்பாதுரை சொன்னது…

'வலைச்சரம். இதுதான் அதுனு..' எழுத நினைத்து வலைச்சரம் சொல் விட்டுப் போனது கௌதமன். வலைச்சரம் பதிவும் இதுவும் ஒன்றே என்று நினைத்தேன்.

மோகன்ஜி சொன்னது…

பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம்! பணியும் பயணமும் என் நேரத்தை சூறையாடி வருகின்றன. இயன்ற வரையில் எஞ்சிய நேரத்தை வலை மேய செலவிடுகிறேன். இனி அடிக்கடி வருகிறேன் நண்பரே!

மோகன்ஜி சொன்னது…

நன்றி பத்மநாபன் ! எழுத்தாமைதியாளரே! நாம் கலையாத சங்கத்தில் அனைவருமே கைப்புள்ளை தானே?!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை!அதுவே இதுவாய், இதுவே அதுவாய் ஆகும் ஆனந்தப் பெருவெளியில் அண்ணே

மோகன்ஜி சொன்னது…

இராஜராஜேஸ்வரி மேடம்! உங்கள் பாராட்டுக்கு நன்றி! அன்பின் வெளிப்பாடே இந்த சகோதரன் தந்த பட்டம் அல்லவா? நற்பணியைத் தொடருங்கள்

மோகன்ஜி சொன்னது…

அன்பின் கௌதமன் ! வாங்க! அதுவா? இதுவா? எதுவாயின் என்? சோற்றுருண்டையும், சேரத்திண்ணையும், கூறக் கவிதையும், கொள்ள அன்பும் இருந்தால் போதாதோ?

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார் ! இன்னைக்கு உங்களுக்கு கௌதமன் சார் தான் அகப்பட்டாரா?! காஸ்யபன் சார் எழுத்துக்கு ஒரு நமஸ்காரம்..

மோகன்ஜி சொன்னது…

நன்றி குமாரு !

மோகன்ஜி சொன்னது…

G.M.B சார்! உங்கள் வாழ்த்துக்கு ந அன்றி! உங்கள் பதிவை இன்று படித்து விடுவேன் சார்!

மோகன்ஜி சொன்னது…

அதென்ன அப்படி சொல்லி விட்டாய் சிவா? நமக்கெல்லாம் ஒரே தகுதி தமிழ்க் காதல் ஒன்று தானே? பாராட்டுக்கு நன்றி சிவா!

மோகன்ஜி சொன்னது…

மூவார்! நீரே தான்!

மோகன்ஜி சொன்னது…

ஓ அதுவா? இது தான் அதுனு நெனச்சேன். இது மாதிரி அதுவானாலும், அது இது இல்லேன்னு புரிய லேட்டாயிருச்சு கௌதமன்.

அதை விடுங்க. காஸ்யபன் பதிவில் கந்தசாமி சிறுகதை படிக்காதவங்க அவசியம் படிங்க. ரேர் ட்ரீட்.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

மோகன்ஜி

என்னுடைய ப்ளாகையும் மதித்து போட்ட உங்களுக்கு நன்றி

அப்பாதுரையை - அறிமுக படுத்த ஒரு இடுகையில் ஒரு பேரா பத்ததாது

சூத்திரம் - அழகு.

இற்றுப்போன குடிசைக்கு - பூசணி உவமை அழகு

மயக்கம் - இன்னும் கொஞ்சம் யோசித்து இருக்கலாமோ ! எனக்கு கேள்வி கேட்க மட்டும் தெரியும் !

சலிப்பு - பெண்டாட்டியிடம் சொல்லி பாருங்கள். பிண்ணி விடுவாள் ! கொஞ்ச நாளுக்கு பிறகு இரண்டும் நாத்தம் என்று சொல்லுகிறீர்கள் தானே !! நாராயணா நாராயணா !

உலரும் ஈரங்கள் - அழகு தலைப்பு - கவிதையை போலே !

- சாய்