(கதையின் இந்தப் பகுதியைத் தொடர்வது அடியேன் )
“சரிடா! நான் மதியம் கிளம்பறேன்.. கலியபெருமாள்
கோயிலுக்கு போயிட்டு அப்படியே ஊருக்குத்
திரும்பணும்... சாவகாசமா இன்னொரு முறை வறேன்.. சரிதானே?”
என்றார் ஆராமுது.
சிவபாதம் சற்று சாய்ந்து அமர்ந்து கொண்டார்.
துருத்தியின் உறுமலாய் பெருமூச்சு வாங்கியது.. ஆராவமுதன் முகத்தை ஏறிட்டுப்
பார்த்தார்... கண்கள் பொங்கிக் கொண்டு வந்தது..
‘”ஆராமுது.. என்னை நாலு அறை அறைய மாட்டியா? தோளில் போட்டிருக்கும் சவுக்கத்தால் என் கழுத்தை இறுக்கி கொன்னு போடுடா..
இங்கே நீ வந்தது முதல் எதுவுமே கேட்டுக்காம எதுக்கு வதைக்கிறே?”
ஆராமுது எழுந்து வந்து சிவபாதத்தின் கைகளைப் பற்றிக்
கொண்டார்.
“வேண்டாம்டா. எதுவுமே நீ சொல்ல வேண்டாம்.
சொல்லி என்ன ஆகப் போகிறது.. எதை மாற்ற முடியும்.?. வேறென்னடா
கேட்பேன்? நான் இழந்து போனதுக்கெல்லாம் உன்னிடம் காரணம்
இருக்கும்னு தெரிஞ்சிக்குற வேகத்துல தான் வந்தேன்.. உன்னிடம் காரணங்கள்
இருக்கும்னு.. நீதான் காரணம்னு இல்லே.... என்னை விட நீதான் அதிகம்
இழந்திருக்கேன்னு உன்னைப் பார்த்தபிறகு தோணுது.. நீ ஏதும் சொல்ல வேண்டாம்.. நாம
இழந்ததெல்லாம் போதும்.. எனக்குன்னு நீயாவது எஞ்சணும்.. எல்லாத்தையும் விட்டுத் தள்ளு..
உன் பழைய ஆராமுதா.... அசட்டு நாயேம்பியே.. அந்த அசட்டு நாயாவே இருந்துட்டு
போறேன்.. கலங்காம இருடா”.
பற்றின கைகளின் வெம்மையில் அதன் இறுக்கத்தில்
அவர்களின் சந்தேகங்கள்,அவநம்பிக்கைகள்,வேதனைகள் பொசுங்கின.. ஒரு பேரமைதி சினேகிதர்களின் நெஞ்சில் குடிகொண்டது..
“நீ.. ரொம்ப பெரியவண்டா.. உனக்கு நல்லது செய்வதாய்த்தான்
அதையெல்லாம் செய்ய” சட்டென்று சிவபாதத்தின் வாயைப் பொத்தினார்
ஆராமுது..
“போறும்.. இப்பத்தானே
சொன்னேன்.. விடுன்னா விட்டுடணும்.. பொழச்சிக் கிடந்தா இன்னொரு சமயம் பேசிக்கலாம்..
எல்லாத்தையும் மறந்துட்டு பழைய சிவபாதமா மீசைய முறுக்கிக்கிட்டு முண்டாவைத்
தட்டிக்கிட்டு நில்லுடா.. நீ நிப்பே.. உன் முள் கிரீடத்தை இறக்கி வச்சுட்டீன்னா நீ
எட்டூருக்கு நிப்பே.. ஒரு வார்த்தை பேசாதே”
“அம்மாடி.!”
சமயல்கட்டைப் பார்த்து கூவினார் ஆராமுது.”உன் சம்சாரம் பேரு
என்ன.?”
“கற்பகம்”
“அம்மாடி கற்பகம்! சமையல் ஆயிடுச்சுன்னா இலைய
போடு தாயி.. எனக்கு கிளம்ப நாழி ஆச்சு.”
கற்பகத்துக்கு தூக்கிவாரிப் போட்டது.. தன் பெயரை
சொல்லி கூப்பிட்ட ஆராமுதன் குரலில் இருந்த வாத்ஸல்யம் அவளை உருக்கியது.. அவள் ஏதோ
ஒரு பழைய கணக்கு நண்பர்கள் இடையில் சரிசெய்யப் படுவதாய் உணர்ந்தாள். என்ன
கணக்கானால் என்ன? இந்த சந்திப்பில் தன் புருஷனுக்கு பல
சுமைகள் இறங்கிப் போகும் என உணர்ந்தாள். ‘தன்னை பேர் சொல்லி
அழைப்பவன் எனக்கு பந்தப் பட்டவன்..அவயாம்பிகை அனுப்பின தேவதூதன்’
“இதோ.. பத்து நிமிஷத்துல ஆயிடும் அண்ணா!”
“என்னை.. என்னை அண்ணாங்குறாடா!” ஆராமுது நெகிழ்ந்தார்.
“உன்னை குலசாமின்னு சொல்லணும்டா வெறும் அண்ணாங்குறா
போக்கத்தவ!”
மேலே ஏதும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
ஆராமுது ரசித்து சாப்பிட்டார். கற்பகம் ! தெளிவா ரெண்டு
கரண்டி ரசத்தை கையில விடும்மா”
இரண்டுகை ரசம் ஆறு ஏழு என நீண்டது.
கற்பகத்துக்கு கண்ணீர் தளும்பியது. “மெல்ல குடிங்கண்ணா. புரையேறப் போகுது”..
“என்னை யாரும்மா நினைச்சுப்பா? புரையேறுறதுக்கு?”
‘இனி நான் நினைப்பேனண்ணா’ கற்பகத்தின் மனசு அலறியது..பிள்ளை சுமக்காமல் பாழாய்க் கிடந்த அவள்
வயிற்றில் தாய்மை சுருண்டது.
“சரிடா.. கிளம்பறேன். இன்னைக்கு ரொம்ப உடம்பை
அலட்டிக்கிட்டே.. படுத்துக்கோ”
“எப்படா திரும்ப வருவே?
“எப்ப வேணும்னாலும்”
“அண்ணா! இது உங்க வீடு”.
ஒரு குழந்தையை பார்ப்பது போல் அவளைப் பார்த்தார்
ஆராமுது..”எனக்கொரு நமஸ்காரம் பண்ணேன் கற்பகம்”
ஓடிவந்து ஆராமுதன் காலில் விழுந்தாள்..சட்டைப் பையிலிருந்து
கொஞ்சம் பணம் எடுத்து அவள் கையில் திணித்தார்.
”தீர்க்காயுசா இரும்மா. இந்த கிருக்கனை நல்லா பார்த்துக்கோ”
“சரிண்ணா. சீக்கிரமா திரும்பி வாங்க.”
“உன் ரசத்துக்காகவாவது திரும்ப வருவேன்.” வாசலை நோக்கி நடந்தார் ஆராமுது. விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு கையில் ஒரு
ரெக்ஸின் பையுடன் சிவபாதத்தின் கண்முன்னே போனபடி......
‘நீ ரொம்ப பெரியவண்டா... அவர் கைகள் தானாய்க்
குவிந்தன. போவது தன் பழைய அப்பாவி ஆராமுது
இல்லை. புத்தனிவன்.. ஏசுப்பிரபு..
மெல்ல கட்டிலில் சரிந்தார். கற்பகம் தலையணைகளை சரி
செய்தபடி சிவபாதத்திடம் சொன்னாள், “மனசுக்கு ஆறுதலா இருக்குங்க.. சரி கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்துக்குங்க. இவர் நம்மகூட நாலு நாள் இருந்தா நீங்க எழுந்து ஒடுவீங்க.” என்று எழுந்தாள்.
“எழுந்து ஓடுவேனா?”
“அவனை ஊரைவிட்டு ஓட வைடா.. இல்ல உலகத்தை
விட்டே ஓட வைப்பேன்.. அப்பாவின் இரைச்சல் சிவபாதம் காதில் ஒலித்தது. சிவபாதத்தின்
ஒரே தங்கை ஜமுனா ஆராமுதுக்கு தன் காதலைத் தெரிவித்து தன்னை ஏற்றுக் கொள்ளும்படி
எழுதின கடிதம் அவன் அப்பாவின் கையில் சிக்க ருத்ர தாண்டவம் ஆடினார்.
‘ஜாதி கெட்டநாயி! உன் சினேகிதன்னு வீட்டுக்குள்ள வளைய வரவிட்டது எங்க
கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பார்த்தியாடா?’
‘இல்லப்பா. அவன் அப்படி இல்லை. இந்த
சிறுக்கிய வெட்டுங்க,, ஆராமுதுவை ஏதும் சொல்லாதீங்க.. இப்பத்தான் அடுத்தடுத்து அப்பாவும் அம்மாவும்
செத்துப் போயி ஆளில்லாத அனாதையா நிக்கிறான்பா’
“அவன் இல்லேன்னா செத்துபொய்யிடுவேங்கிறாளே
கடுதாசில.. அவனை இருக்க விட்டாத்தானே?’
அப்பாவும்
பிள்ளையும் ஆலோசித்தார்கள். அப்பாவின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்த அந்த
அலுவலகத்தில் ஆராமுதன் பொறுப்பிலிருந்த பணம் இருபதாயிரம் மாயமானது. பொறுப்பாளர்
போலீசுக்கு போவதாயும், எழட்டு வருடம் சிறைவாசம்
உறுதியென்றும் மிரட்டவைக்கப் பட்டார். கலங்கி நின்ற ஆராமுதனை ஊரைவிட்டே கண்காணாமல்
போய்விடும்படி தன் பங்கு வசனத்தை சிவபாதம் சொல்லி கொஞ்சம் பணமும்
கொடுத்தனுப்பினான்
.’மறந்தும் இந்தப் பக்கம் வந்து விடாதே.
எந்தக் கடிதமும் போட்டுவிடாதே. வடக்கே எங்காவது போய் பொழச்சிக்கோ. இங்க
உனக்கும்தான் யாரிருக்கா? கொஞ்ச வருஷம் போனபிறகு பார்த்துக்
கொள்ளலாம். ஏதும் வண்டி பிடிச்சி மதராஸ் போய் வடக்கே போற ரயிலைப் பிடிச்சியானா
தப்பிச்சிக்கலாம். இங்கே மேற்கொண்டு நான் ஏதும்
சமாளித்துக் கொள்கிறேன்.”
ஆராவமுதன் விலகியவுடன் ஆபீஸ்கணக்கு சரி செய்யப்பட்டது.
ஆராவமுதனின் இந்த கதிக்கு காரணமான ஜமுனாவுக்கு நடந்த நாடகம் அப்பாவும் பிள்ளையும்
பேசிக் கொண்டபோது தெரியவந்தது. வீட்டின் கிணற்றின் ஆழத்தில் நியாயம்தேடி தஞ்சம்
புகுந்தாள். எதற்குமே அர்த்தமில்லாமல் போய்விட்டது.
அப்பா! என்ன சாதித்தீர்கள்.? உனக்கேன் பாழும்காதல் வந்தது ஜமுனா? உயிரான
சினேகிதத்திற்கு துரோகம் செய்தேன்.. அது உன்னைக் காக்கவென என்னை நானே ஏமாற்றிக்
கொண்டேன் ஆராமுதா! எனக்குள்ளும் என் அப்பனின் ஜாதி மயக்கம் இருந்திருக்க வேண்டும்.
தங்கை போய், தகப்பன்தாயும் போய், ரத்தபந்தமென
குழந்தைப்பேறும் இல்லாது போய், இன்று ரத்தமும் சுண்டிப்போய் வெளிறிக் கிடக்கிறேன்.
அரசல்புரசலாய் ஏதோ தெரிந்து வந்த ஆராமுது வெறெதும் கேட்காமல் தன் மௌனத்தால்
கொன்றுவிட்டுப் போயிருக்கிறான்.. இல்லை மன்னித்து விட்டுப் போயிருக்கிறான். ‘ஆராமுதா! உன்னைப் பார்த்ததே போதுமடா.. அகலிகைக்கு விமோசனம் வந்தாப்போல உன்
ஸ்பரிசம் என் பாவத்தையெல்லாம் கழுவி விட்டது. இது போதும் இது போதும்.’. மாடிவிட்டு கீழே இறங்கினார்..
“மெல்ல மெல்ல” கற்பகம்
கைலாகு கொடுத்தபடி உடன்வந்தாள்
“என்ன அண்ணனையே நினைச்சுக்கிட்டிருக்கீங்களா?”
“அண்ணன்!”முனகிக்
கொண்டே தோட்டத்தில் தரையைப் பார்த்தார் சிவபாதம்.
தரையோடு ஒட்ட வெட்டபட்ட முருங்கை மரத்தின்
வேர்த்தட்டில் பொன்பசுமையில் சிறிதாய் துளிர்விட்டிருந்தது.
(முற்றும்)
67 comments:
வித்தியாசமான இந்த சுழல் தொடருக்கு எங்களையும் பங்குதாரர்களாக்கிய உங்களுக்கு அன்பின் நன்றி.
நெகிழ்ச்சியான தருணங்கள்... நிறைவான முடிவு...
எதற்குமே அர்த்தமில்லாமல் போய்விட்டது. //
அகலிகைக்கு விமோசனம் வந்தாப்போல உன் ஸ்பரிசம் என் பாவத்தையெல்லாம் கழுவி விட்டது. இது போதும் இது போதும்.’. //
தரையோடு ஒட்ட வெட்டபட்ட முருங்கை மரத்தின் வேர்த்தட்டில் பொன்பசுமையில் சிறிதாய் துளிர்விட்டிருந்தது. //
துளித்துவிட்ட விருட்சமென நிறைவு த்ரும் முடிவுக்கு பாராட்டுக்கள்..
சூப்பர்ப் சார்!
தாய்மை துளிர்த்ததுன்னு வந்திருக்கலாமோ?
மோகன் ஜி! ஒருவரே ஒரே சமயத்திலமர்ந்து எழுதினால் ஒருமாதிரி இருக்கும். கிடைத்த இடைவெளியில் கூடுதலாக சிந்தித்து எழுதியுள்ளிர்கள்.படித்துக் கொண்டு வரும்போது சிவபாதம் .தங்கை ஜானகியை ஆராவாமுதனோடு அனுப்பவேண்டும் என்று நான் எவ்வளவு தான் விரும்பினாலும் நீங்கள் அதனச் செய்யவில்லை.விரும்பி மணக்கும் திருமணங்கள் சாதிக் கலவரத்தில் முடியும் போது அத்தகய திருமணங்கள் நடந்தால் நல்லது தான் என்ற பிரக்ஞை உருவாக்கப் படவேண்டுமென்று கருதுகீறேன். ஆராமுதன்,சிவபாதம்-சைவத்தையும் வைஷ்ணவத்தையும் குறிக்கிறதோ! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.
// நான் இழந்து போனதுக்கெல்லாம் உன்னிடம் காரணம் இருக்கும்னு தெரிஞ்சிக்குற வேகத்துல தான் வந்தேன்.. உன்னிடம் காரணங்கள் இருக்கும்னு.. நீதான் காரணம்னு இல்லே.... என்னை விட நீதான் அதிகம் இழந்திருக்கேன்னு உன்னைப் பார்த்தபிறகு தோணுது..//
கிளாஸ்!
//உன் முள் கிரீடத்தை இறக்கி வச்சுட்டீன்னா நீ எட்டூருக்கு நிப்பே..//
கடைசி வரை இறக்கி வைக்கவில்லை, பாருங்கள்!
கடைசிவரை முள் கிரீடத்தை இறக்கி வைக்க விடாமல் செய்ததே, ஆராமுதன் கொடுத்த தண்டனை. பட்டும் படாமலும் விட்டும் விடாமலும் போன கதையின் இழைகளைக்கோர்த்து அழகாய் முடித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
Fabulous end!
The journey itself was awesome... the chain blog idea is great... please do come up with more such ventures!
ரிஷபன் சார்! உங்கள் பங்குக்கு நன்றி சொல்லி விட்டீர்கள். கதையில் உங்கள் பங்குக்கு என் பங்காய் நன்றியும் வாழ்த்துக்களும்!
பாராட்டுக்கு நன்றி தனபாலன்!
இராஜராஜேஸ்வரி மேடம்! தொடர்ந்து ஊக்கப் படுத்தும் உங்கள் பாராட்டுகளுக்கு எங்கள் மூவரின் நன்றி!
ப்ரிய ராஜி! மிக்க நன்றி.
///தாய்மை துளிர்த்ததுன்னு வந்திருக்கலாமோ?//
சேய்மை தான் துளிர்க்கும்.. தாய்மை பொங்கும் அல்லவா ராஜி ? பெண்மையின் அத்தனை உணர்வு வெளிப்பாடுகளுக்கும் தாய்மையே அடிநாதமாய் இருக்கிறது.
கதையில் ஆராமுதனிடம் ஏற்பட்ட மதிப்பும்,கணவன் நலம் அன்றி வேறு நினைவில்லா கற்பகத்திற்கு ஆராமுதன் மேல் ஏற்பட்ட சகோதர வாஞ்சையில், ஏற்படும் உணர்வு பெருக்கத்தை அவ்வாறு குறிப்பிடலாயிற்று.
நுணுக்கமாய் வாசிக்கிறீர்கள். சந்தோஷமாய் இருக்கிறது சகோதரி!
வாங்க வாங்க காஸ்யபன் சார்! நீங்கள் தொடர்ந்து வாசித்தது எனக்கு மகிழ்ச்சி சார். என் முதல் அத்தியாயத்தைத் தொடர்ந்து ரிஷபனும், இராமமூர்த்தியும் இரண்டு அத்தியாயங்களை தொய்வில்லாமல் தொடர்ந்தார்கள். உருவான கதையோட்டத்தை ஒரு புது திருப்பமாய் முடித்தேன். உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லவா?
கடந்த ஒரு வார காலம் வேலை மேலீட்டால் ஒரு வரி கூட எழுத இயலவில்லை. நேற்று மாலை ஒரு மூச்சில் பதிவேற்றி வெளியிட்டேன். இப்போது வேறு ஒரு திருப்பமும் தோன்றுகிறது.. இனியும் தொந்தரவு செய்தால், சிவபாதமும் ஆராமுதனும் என்னை ஜமுனா குதித்த கிணற்றில் அல்லவா தள்ளி விடுவார்கள்?
ஜமுனாவையும் ஆராமுதனையும் சேர்ப்பது கூட ஒரு முடிவு தான்..
//விரும்பி மணக்கும் திருமணங்கள் சாதிக் கலவரத்தில் முடியும் போது அத்தகய திருமணங்கள் நடந்தால் நல்லது தான் என்ற பிரக்ஞை உருவாக்கப் படவேண்டுமென்று கருதுகீறேன். //
எனக்கென்னவோ தற்காலத்தில் கலப்பு மணங்கள் அவ்வளவு எதிர்ப்பை ஏற்ப்படுத்துவதில்லை என நினைக்கிறேன். காலம் மாரித்தான் வருகிறது..
திருமணங்கள் சாதிக்கலவரமாய் மாறுவது இருக்கட்டும்... ஸம்ஸாரக் கலவரங்களாய் மாறி வெடிக்கின்றன. பரஸ்பர அன்பும், விட்டுக் கொடுத்தலும்,சகிப்பும் குறைந்து வருவது கவலைக்குரியது.
//ஆராமுதன்,சிவபாதம்-சைவத்தையும் வைஷ்ணவத்தையும் குறிக்கிறதோ! //
அற்புதம் சார்! கதாபாத்திரங்களின் பெயர்கள் தற்செயலாய் அமைந்தது.
நீங்கள் எங்களுக்கு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி! அன்பு...
ஜீ.வி சார்!
/கிளாஸ்/
என்ன அழகான வாழ்த்து?! மூவரின் சார்பிலும் உங்கள் கருத்துகளுக்கு நன்றி!
//உன் முள் கிரீடத்தை இறக்கி வச்சுட்டீன்னா நீ எட்டூருக்கு நிப்பே..//
கடைசி வரை இறக்கி வைக்கவில்லை, பாருங்கள்!/////
முள் கிரீடம் இருப்பது சுட்டப் பட்டுவிட்டது. சிவபாதம் தெளிவார் என்று நாமும் கற்பகத்தைப் போலே நம்பித்தான் ஆக வேண்டும்!
சமயத்தில் தான் மன்னிக்கப்படுதல் எனும் நிலை, முள் கிரீடமல்ல... முள் அங்கியாகக் கூட ஆளை இறுக்கும்..
G.M.B சார்! இந்தக் கதையை முதலிருந்தே ஆழ்ந்து வாசித்து அதன் போக்கை உங்கள் கருத்துக்களால் அலசியிருக்கிறீர்கள்.. ரிஷபன், இராமமூர்த்தி மற்றும் நானும் உங்கள் அன்புக்கு கடமைப் பட்டிருக்கிறோம்...
சுப்புத் தாத்தா வேறு ஜில்லுன்னு ஒரு காதல் கதை கேட்டிருக்கிறார்..
இன்னைக்கே காதலிக்க ஆரம்பித்து விடுகிறேன்!
நன்றி மாதங்கி! இது ஒரு புது முயற்சி தான்! ஏற்கெனவே பின்னூட்டங்களில் நான், ஆர்.வீ.எஸ், பத்மநாபன் எல்லோரும் ஒரு போக்காய் கும்மியடித்திருக்கிறோம்.. அவை வெகுவாக ரசிக்கப் பட்டன.
ஒரு கதையாய் மூவர் ஒரே சமயத்தில் மூன்று வலைப்பூக்களில் இடுவது எங்களுக்கு மகிழ்வைத் தந்த முயற்சி.. மேலும் சில முயல்வோம் மாதங்கி!
// நான் இழந்து போனதுக்கெல்லாம் உன்னிடம் காரணம் இருக்கும்னு தெரிஞ்சிக்குற வேகத்துல தான் வந்தேன்.. உன்னிடம் காரணங்கள் இருக்கும்னு.. நீதான் காரணம்னு இல்லே.... என்னை விட நீதான் அதிகம் இழந்திருக்கேன்னு உன்னைப் பார்த்தபிறகு தோணுது.. நீ ஏதும் சொல்ல வேண்டாம்.//
இப்படி பேசி ஆறுதல் சொல்ல எப்படி பட்ட ஒரு மனசு வேணும் மோகன்ஜி. அந்த மனசை பாத்து கையெடுத்து கும்பிடனும் போல இருக்கு. கண் கலங்கிட்டேன்.
பிரமாதம்! கலக்கிடீங்க மோகன்ஜி.
வாழ்க்கைல எந்த உறவுமே விட்டுப்போன இடத்துலேந்து தொடங்கரதில்லை, தொடங்கவும் முடியாது. "இடைப்பட்ட காலம் எல்லாவற்றையுமே முழுங்கிவிடும்" ராமமூர்த்தி அவர்கள் எழுதிய அற்புதமான வரி இது. மூச்சு நிற்பதற்கு முன் மன பாரம் இறங்கியது ரொம்ப பெரிய நிம்மதி. நிறைவான முடிவு.
மூவருக்கும் வாழ்த்துக்கள்!
காலம் எந்தப் புண்ணையும் ஆற்றி விடுகிறது. ஆறாத ரணங்கள் அருகில் வந்ததும் அன்பினால் அகன்று விடுகின்றன. கல்லாய் கனத்த மனம் இறகாய் பறக்கிறதே இன்பத்தில், நட்பில்..!
மன்னிக்கப்படுதல் எனும் நிலை, முள் கிரீடமல்ல... முள் அங்கியாகக் கூட ஆளை இறுக்கும்..//
கேட்க முடியாமலும் சொல்ல முடியாமலும் சிநேகிதர்கள் தவித்து தடுமாறிய தொடக்க உரையாடல்கள் வெகு நெகிழ்ச்சி.
பெயர்ப் பொருத்தங்கள் பிரமாதம். அவளும் அவனில்லாமல் சொன்னபடி உயிரை விட, வீம்பும் வீராப்பும் காலங்கள் பல கடந்து ஒன்றுமேயில்லாமல் தான் போய் விடுகிறது.
என்னை நினைக்க யாரிருக்கா என்றவருக்கு மறக்க முடியாமல் மாண்டவளை உணர்த்தவும் முடியாத தர்ம சங்கடம் சிவபாதத்துக்கு. சிநேகிதனிடம் இறக்க முடியாத முள் கிரீடம நம்முள் உறுத்தியபடி. இப்பவும் கற்பகத்துக்கு அண்ணனாகிவிட்டார் ஆராவமுது.
கைகுவித்து ரசித்து ரசித்து நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகி உருகி உருகி பருகிட எங்களுள் ரசமாய் இறங்குகிற கதையோட்டம். எல்லாக் கணக்கும் முடிந்து, கற்பகத்தின் கை ரசத்துக்காகத்தான் வரவேண்டும் இனி அவர். எட்டு ஊருக்கு நிற்கும் எழுத்து அல்லவா இது!
சிவபாதம் இறங்கி விட்டார்...வெட்டப்பட்ட உறவும் நட்பும் துளிர்ப்பது தான் நலம். துளிர்த்த முருங்கை கிளைபரப்பி வேதாளம் (சா'தீ'யம்) ஏறாமல் இருக்க வேண்டுமே..நமக்காவது. 'சிவபாத'த்தின் அப்பா 'ருத்ர தாண்டவ'மாடியதையும்' “அவனை ஊரைவிட்டு ஓட வைடா.. இல்ல உலகத்தை விட்டே ஓட வைப்பேன்.."(என்ன ஒரு வில்லத்தனம்!)நாங்களும் கண்டுக்கலை கதை சுவாரஸ்யத்தில்!
கதாபாத்திரங்களின் பெயர்கள் தற்செயலாய் அமைந்தது.//
அப்படியா.
நீங்கள் எங்களுக்கு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி! // 'கண்ணாடி'யில் கொஞ்சம் பொடி!
எங்க நெனைப்புதான் பொழைப்பை கெடுக்குதோ ...?! எந்த அடையாளமும் அற்ற, மனித சுபாவங்களை மட்டும் சுட்டும் படி தான் உங்க எழுத்துகளை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்வதால் தான் தொடர்ந்து வருகிறேன்.
தற்காலத்தில் கலப்பு மணங்கள் அவ்வளவு எதிர்ப்பை ஏற்படுத்துவதில்லை என நினைக்கிறேன். காலம் மாறித்தான் வருகிறது..//
நிச்சயமாய்! நிறைய 'சிவபாதம்'கள், பிராயச்சித்தம் தேடி. ஜமுனா'க்கள் தேடிய நியாயம், கால மழை நிரப்பிய வாழ் கிணற்றின் விளிம்பில் மிதந்தபடி.
சுப்புத் தாத்தா வேறு ஜில்லுன்னு ஒரு காதல் கதை கேட்டிருக்கிறார்..//
இந்தக் கோட்டையிலும் அஸ்திவாரம் காதல் தானே...!
புழுக்கத்தை தவிர்க்க சிலுசிலுன்னு காத்து வேண்டியிருக்கு ...
//நேற்று தான் பக்கத்து வீட்டு பாட்டி 'அந்தக்கால சோபன்பாபு போலிருக்கிறாய்' என்றாள்.//
மோகன்ஜி, இது நீங்க மாதங்கி அவர்களின் 'மைத்துளிகள்' வலைபூவில போட்ட கமெண்ட். அதுக்கு பதில் கமெண்ட் நான் இங்கேயே போடறேன். :)
சத்தியமா சொல்றேன் நீங்க நம்பினா நம்புங்க. உங்களோட வலைப்பூக்கு முதல் முறை வந்தபோது உங்களுடைய profile photo பார்த்து விட்டு, இவரை பாக்கும்போது ஒரு தெலுங்கு ஹீரோவை நினைவு படுத்தறாரே, யாரது,யாரதுன்னு ரொம்ப மண்டையை உடைசுண்டு, கடைசில அட! இவர் நம்ப 'பந்தாலு அனுபந்தாலு' ஹீரோ ஷோபன் பாபு மாதிரி இருக்காருன்னு கண்டு பிடிச்சுட்டேன். :) இதை நான் அப்பவே சொல்லி இருப்பேன். அப்ப நான் உங்க வலைபூவுக்கு புதுசு. அப்பறம் சொல்ல மறந்தே போச்சு. இப்ப பாட்டி சரியா ஞாபகபடுத்திட்டாங்க. நான் தேங்க்ஸ் சொன்னேன் சொல்லிடுங்க அந்த பாட்டி கிட்ட.
இனிமே உங்களை ஹீரோன்னு கூப்பிடலாமா? ஆஹா! ஆர்.வீ.எஸ். அவர்கள் கூட உங்க க்ரூப்ல ஒரு 'காதல் மன்னன்' இருக்கார்ன்னு சொன்னாரே, அட அது நீங்கதானா! வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்! :))
நெகிழ்வான முடிவாக இருந்தது. மன்னித்தல் என்பது பெரிய விஷயம்.
இந்த சுழல் தொடர் பிரமாதமாக இருந்தது. பாராட்டுகள் மூவருக்கும்.
இப்பொழுதுதான் மூன்று பதிவுகளையும் படித்து முடித்தேன். மனிதம் அழியவில்லை. உங்கள் ஆனைவரையும் எப்படிப் பாராட்டுவது என்று தெரியாமல் விழிக்கிறேன்.
மூன்று நபர்களின் எப்படி ஒன்றாக இணைந்தன! அற்புதமான முயற்சி. மோகஞி உங்கள் பதிவு உணர்ச்சிகளின் உச்சகட்டத்தில் கொண்டு நிறுத்திவிட்டது. போனதெல்லாம் போகட்டும். இனியாவது சமாதானம் பூமியில் வரட்டும் என்பது போல முருங்கை மரமும் துளிர்விட்டது..அருமை அருமை அருமை. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நன்றி மீனாக்ஷி!
//வாழ்க்கைல எந்த உறவுமே விட்டுப்போன இடத்துலேந்து தொடங்கரதில்லை, தொடங்கவும் முடியாது//
ஏன் மீனாக்ஷி! நிஜம் என்னவென்றால் உறவுகள் விட்டுப்போக முடியாது. போகவும் கூடாது. விட்டுப்போதல் கோபதாபங்களினாலோ கருத்து வேற்றுமைகளாலோ வேறு காரணங்களுக்காகவோ இருக்கலாம்.
பிரிவின் காரணங்களையே பாராட்டிக் கொண்டிருந்தால், அந்த உறவு பலப்பட நிகழ்ந்த அன்புப் பரிமாற்றங்களும், பகிர்வும் பொய்யெனப் போவதோ?
உறவுகள் விட்டுப் போகலாம்.. பட்டுப் போகக் கூடாது.
விட்ட இடத்தில் தொடர்வதும்,விட்டுப் போனவற்றையெல்லாம் பிடிக்கவும் பெரிய மனம் வேண்டும், மாளாத நேயம் வேண்டும்..ததன்னிலே நிறைவு வேண்டும்.. கசப்பை, வெறுப்பை, ஆங்காரத்தை மன்னிக்கும் பெரும்போக்கு வேண்டும்.
இது சின்ன வாழ்க்கை மீனாக்ஷி! மிகச் சின்ன வாழ்க்கை.. இதிலே கைகளில் அள்ளியதெல்லாம் இருத்திக் கொள்ளும் அவசியம் இருக்கிறது..
என் எழுத்தில் நான் சொல்ல வருவதெல்லாம் அந்தப் பேரன்பு ஒன்றினையே.. அதைப் புரிந்து கொள்ளும் என் நட்பு வட்டத்திடம் நான் வேண்டுவதும் அது தான்.. புனிதம் கோயில்களில் மட்டும் இல்லை.. நேயம் பொங்கும் நெஞ்சங்களில் இருக்கிறது..
நட்பு, உறவு இவற்றையெல்லாம் தாண்டி அந்த பேரன்பு அனைவரிடத்துலும் ஏற்படும் உன்னதத்தைத் தான் சொல்லி வருகிறேன்.. வாழுந்து வருகிறேன்..
வானவில் மேல் ஏறி நிற்பதால், கண்பார்வை கொள்ளும் அளவு அந்த அன்பின் நீட்சியை பயில முயல்கிறேன், பயின்று வருகிறேன்.
அன்பு தனில் செழிக்கும் இந்த வையம்.
ஸ்ரீராம்!
//ஆறாத ரணங்கள் அருகில் வந்ததும் அன்பினால் அகன்று விடுகின்றன. கல்லாய் கனத்த மனம் இறகாய் பறக்கிறதே இன்பத்தில், நட்பில்..!//
என்ன அற்புதமாய் சொல்லியிருக்கிறீர்கள்..
உங்களைக் கட்டிக் கொண்டு கூத்தாட வேணும் போல் இருக்கிறது ஸ்ரீராம் !
நிலா!//கைகுவித்து ரசித்து ரசித்து நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகி உருகி உருகி பருகிட எங்களுள் ரசமாய் இறங்குகிற கதையோட்டம். எல்லாக் கணக்கும் முடிந்து, கற்பகத்தின் கை ரசத்துக்காகத்தான் வரவேண்டும் இனி அவர். எட்டு ஊருக்கு நிற்கும் எழுத்து அல்லவா இது!//
நீங்கள் சொல்வதில் உள்ள அழகைவிட அப்படி என்ன அழகாய் நான் எழுதி விட்டேன்?
எனக்கு இப்படி மணக்க மணக்க ரசம் சமைத்து நாலுகை அள்ளிப் பருக தருவீர்களா நிலா?
நிலா!
//எந்த அடையாளமும் அற்ற, மனித சுபாவங்களை மட்டும் சுட்டும் படி தான் உங்க எழுத்துகளை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்வதால் தான் தொடர்ந்து வருகிறேன்.//
என்னை நன்றாய்ப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.. மிக்க நன்றி. என் எழுத்துக்கு அடையாளமாய் நேயம் ஒன்றே இருக்கிறது நிலா!
காண்பதைக் காட்சி படுத்த முயலும் எழுத்தைதான் முயல்கிறேன். எனக்கு வெறேந்த அடையாளமும் இல்லை.
மேலும் என் வளர்ப்பும் படித்த இலக்கியமும் என் நம்பிக்கைகளோ, ஆசைகளோ யாரையுமே புண்படுத்தாத வண்ணம் அமைந்து விட்டது. சொச்ச வாழ்க்கையையும் அப்படியே கழித்துவிட உத்தேசம்.
காஸ்யபன் சார் அவர்களை என் தந்தையின் ஸ்தானத்தில் பார்க்கிறேன். அவர் எழுத்தும் கருத்தும் என் ரசனைக்குரியவை. சிலவற்றை நான் ஏற்காது போனாலும் அவர் சொல்வதால் எனக்கு முக்கியமாகிறது. நேரம் கிடைக்கும் பொது அவர் வலைப்பூவை பார்வை இடுங்கள் நிலா!
மீனாக்ஷி! இப்ப உங்க கிட்ட மாட்டிக்கிட்டேனா? அது மாதங்கியை வம்புக்கு இழுக்க சொன்னது.. நானாவது சோபன் பாபுவாவது.. அவருக்கு தெலுங்கில் என்ன பட்டம் தெரியுமா? "அந்தகாடு' அழகன்னு அர்த்தம்.. எனக்கு அவரைப் பிடிக்கும்.
நான் கொஞ்சம் 'லூஸ் மோகன்' மாதிரி தான் இருப்பேன். அந்தப் பாட்டிக்கும் ஆர்.வீ.எஸ் தாத்தாக்கும் வேற வேலை இல்ல!
மிக்க நன்றி ஆதி! உன் பாராட்டை நான் ,ரிஷபன் மற்றும் ராமமூர்த்தி சார் சமர்த்தாக பகிர்ந்து கொள்கிறோம் தாயே!
வாங்க வல்லி ஸிம்ஹன் மேடம் !
/உங்கள் பதிவு உணர்ச்சிகளின் உச்சகட்டத்தில் கொண்டு நிறுத்திவிட்டது. போனதெல்லாம் போகட்டும். இனியாவது சமாதானம் பூமியில் வரட்டும் என்பது போல முருங்கை மரமும் துளிர்விட்டது..அருமை அருமை அருமை./
மிக்க நன்றி மேடம். வணக்கத்துடன் உங்கள் பாராட்டை மூவரும் ஏற்றுக் கொள்கிறோம்.. அடிக்கடி வாங்க..
ஒரு சித்திரத்தின் FINISHING கே கடைசியில் வரையப் படும் கண்கள் தான் ! அந்த விதத்தில் கதையினை பூர்த்தி செய்த விதம் அருமை ! அடியேனுக்கு வாய்ப்பு கொடுத்ததிற்கு நன்றிகள் பல !
அன்புடன் உங்கள்
மூவார் ...
அன்பு மோகன் ஜி!
எண்ணங்களுக்குத் தான் எத்தனை விதவிதமான விரிப்புகள்! வேறொரு மடல் அவிழ்ப்பாய், என் தளத்தில் 'கனவும் காட்சியும்' சிறுகதையாய்..
ஜமுனா தான் யமுனா இல்லை.
அந்தக் கதை பிரசுரமான நவம்பர் 18 அமரர் தி.ஜானகிராமனின் நினைவு நாள். அவர் நினைவாய் யமுனாவும் பாபுவும்.
//பிரிவின் காரணங்களையே பாராட்டிக் கொண்டிருந்தால், அந்த உறவு பலப்பட நிகழ்ந்த அன்புப் பரிமாற்றங்களும், பகிர்வும் பொய்யெனப் போவதோ?//
உறவு பலப்பட நிகழ்ந்தவை எல்லாம் மதிப்பில்லாமல் போவதால்தானே பிரிவே வருகிறது மோகன்ஜி.
//உறவுகள் விட்டுப் போகலாம்.. பட்டுப் போகக் கூடாது.// மிகவும் அருமையாக சொன்னீர்கள். எவ்வளவுதான் செழித்து வளர்ந்து நின்றாலும் கவனிப்பு இல்லாதது பட்டுதான் போகும்.
அன்பு என்பது புரிந்து கொள்ளுதல், மனதை புண்படுத்தாமல் நடத்தல், உபத்திரவமாக இல்லாமல் இருத்தல். இணைந்த உறவில் இதை கடைபிடிக்க முடியாமல் போனால் பிரிந்து, அவர்கள் நிம்மதியாகவாது இருக்க உதவுதும் அன்புதான்.
மற்றபடி வாழும் வாழ்வில் யாரையுமே விரோதியாக எண்ணாமல், அன்பு என்ற பெயரில் அவர்கள் சுதந்திரத்தில் தலையிடாமல், நம்மால் இயன்ற உதவிகளை இறுதிவரை செய்துகொண்டு வாழ்வதுதான். வார்த்தைகளால் பிறரை புண்படுத்தாமல் வாழ முயல்வதே வாழ்வின் சிறந்த தவம்.
//அன்பு தனில் செழிக்கும் இந்த வையம்.// அன்பேதான் வையகம்.
நானும் நிறைய தெலுங்கு படங்கள் பார்த்திருக்கிறேன். எனக்கு ஷோபன் பாபு அவர்களை பிடிக்கும். உண்மையாகவே உங்கள் போட்டோ பார்த்தபோது எனக்கு இவர்தான் நினைவுக்கு வந்தார். Compliment -ஐ ஏற்றுக் கொள்ளுங்கள் மோகன்ஜி. :))
கலங்கடித்து விட்டீர்கள் அண்ணா .
சிவபாதத்தின் குற்றவுணர்ச்சி போலவே எனக்கும், இத்தனை நாட்கள் வலைப்பக்கம் வாராமல் போனதின் ஏக்கம் மனதை அரித்துக் கொண்டிருந்தது. இப்போது இன்னும் அதிகமாகிப் போனது.
\\\ஆராமுதன்,சிவபாதம்-சைவத்தையும் வைஷ்ணவத்தையும் குறிக்கிறதோ! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.///
\\புத்தனிவன்.. ஏசுப்பிரபு..//
போகிற போக்கில் சர்வ மதங்களையும் தொட்டுவிட்டுப் போயிருக்கிறீர்கள் .
உங்களுக்கு பார்க்கிற , சந்திக்கிற நபர்கள் எல்லோரும் கதாபாத்திரங்கள். தங்களை சந்திக்கும் அந்தத் தருணத்திற்காக பயந்து கொண்டிருக்கிறேன். எந்தக் கதையில் எப்படி புகுத்துவீர்களோ என்னை என்று.
\\சேய்மை தான் துளிர்க்கும்.. தாய்மை பொங்கும் அல்லவா //
ரசித்தேன்.
அண்ணா! கரைத்துவிட்டீர்கள். நண்பர்களின் பாசப்பிணைப்பை என்னவென்று சொல்வது.
கற்பகம் வரும் சீன்கள் அற்புதம். பக்கத்தில் உட்கார்ந்து வாத்சல்யத்துடன் சொன்ன கதை மாதிரி இருக்கிறது. ரிஷபன் சாரும் மூவார் முத்தும் நன்றாகவே மிடில் கதை எழுதினார்கள். க்ளைமாக்ஸ் கதையை சிகரத்தில் நிறுத்திவிட்டது.
சூப்பர்ப். கதைப்பட்டறை ஒன்று நடத்தி என் போன்றோருக்குக் கொஞ்சம் சொல்லிக்கொடுக்கவும். நன்றி. :-)
அண்ணா! இரசிகமணி பத்மநாபன் இல்லாததால் இந்தப் பின்னூட்டப் பெட்டிகள் சோபை இழந்து காணப்படுகின்றன. என்ன செய்வது? :-(
எனக்கு இப்படி மணக்க மணக்க ரசம் சமைத்து நாலுகை அள்ளிப் பருக தருவீர்களா நிலா?//
வாங்கண்ணா ... வாய்ப்பு கிடைத்தால்.
மூவார்!
/ஒரு சித்திரத்தின் FINISHING கே கடைசியில் வரையப் படும் கண்கள் தான் ! /
நாங்க பக்கம் பக்கமா எழுதி யாராவது பாராட்டுவாங்களான்னு ஆகாசத்தைப் பார்த்துகிட்டு இருப்போம்..
நீங்களானா இப்படி ஒரு லைனைப் போட்டு அத்தனையும் அள்ளிக்கிட்டு போயிடுவீங்க!
போங்க பங்காளி!
மீனாக்ஷி! பாடம் நடத்துறது என் தொழில்..
அதானோ என்னவோ பேராசிரியத்தனம் அப்பப்போ எழுத்துலையும் வந்துடும்..
நீங்க கருத்து சொன்ன விதத்துல கொஞ்சம் ஆடித்தான் போறேன்!
"சந்திராவை ஏண்டா கன்னத்துல கிள்ளினே?"ன்னு கையிலே பிரம்போடு மிரட்டின மங்களம் டீச்சர் தான் நினைவுக்கு வராங்க..
இல்ல மிஸ்.. நானில்லே மிஸ்.. சந்திரா தான் அவளையே கிள்ளிக்கிட்டா மிஸ்...
மீனாக்ஷி! உங்கள் காம்ப்ளிமெண்டை ஏற்றுக் கொள்கிறேன்... அப்பாதுரை சென்றமுறை இந்தியா வந்த போது ஹைதராபாத் வந்திருந்தார். அவர் வலையில் அந்த சந்திப்பைப் பற்றி எழுதின போது நான் ஒரு பிரபல நடிகரை நினைவு படுத்துவதாய் எழுதியிருந்தார்.. ஆர்.வீ.எஸ் "அது செந்திலா இருக்கும் அண்ணே"ன்னு சொன்ன ஞாபகம்.
ஒரு க்ரூப்பாத்தான் கிளம்பி இருக்கீங்க...
அன்பின் ஜீ.வீ சார்! உங்கள் சிறுகதையைப் படித்தேன்.அற்புதமான எழுத்து. என் கதை உங்களுக்குள் இன்னொரு விரிவை ஏற்ப்படுத்தி நல்லதோர் படைப்பை தந்திருக்கிறது..
கதையின் களம் அழுத்தமாய் படர்ந்திருக்கிறது.
என் பாராட்டுகளும் நன்றியும் ஜீ.வீ சார் !
சிவா!
//உங்களுக்கு பார்க்கிற , சந்திக்கிற நபர்கள் எல்லோரும் கதாபாத்திரங்கள். தங்களை சந்திக்கும் அந்தத் தருணத்திற்காக பயந்து கொண்டிருக்கிறேன். எந்தக் கதையில் எப்படி புகுத்துவீர்களோ என்னை என்று.
//
எனக்குள் புது நினைப்பை ஏற்ப்படுத்தியிருக்கிறாய்.
அடுத்த கதைக்கு கதாநாயகன் ரெடி! என்ன... மூன்று கதாநாயகிகள்.. அறுகோணக் காதல்.
ஆர்.வீ.எஸ்! கதை பட்டறை தொடங்கணுமா? அதுவும் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கணுமா?
நாட்டுல எல்லாம் விளையாட்டா போச்சு!
பத்மநாபனை யாராவது கட்டி இழுத்து வார மாட்டீர்களா?
மாற்றுப் பார்வைக்கு நன்றி!
நன்றி நிலா! அந்த ரசானுபாவத்துக்காய் காத்திருப்போம்..
நான் கூட நல்லா ரசம் வைப்பேன்... சுந்தர்ஜியைக் கேளுங்க!
நான் கூடத் தான் சூப்பரா வெந்நீர் வைப்பேன் ...யார் குடிக்கிறது ?
"தியாகங்கள்" சென்ற தலைமுறைவரை மட்டுமே போற்றப்பட்ட புனிதம்.
அந்நிய கலாச்சாரப் பணதேடல், நம் பழைய வழிமுறைகளை, வாழ்க்கை நெறிகளை
மாற்றி விட்டதாய் தெரிகிறது.
வேற்றுச் சாதி திருமணம் அன்று ஊரைவிட்டு அனுப்புவதாய்,
கிணற்று நீரின் ஆழத்தில் பதில் தேடுவதாய் தனிநபர்களோடி முடிந்து போனது.
இன்றோ, மூன்று ஊர்கள் கொழுத்தப்ப்டுகிறது. புனித காதலே பல காரணங்களுக்காக
புதுப்புது அர்த்தங்களில் அரங்கேறுகிறது.
பழைய சிவாஜி, எஸ்ஸெஸார் இணந்து நடித்த படம் பார்த்தது போலிரிந்தது. மூவரின் கதை வசனம் டைரக்ஷனில் மூன்று இடைவெளி கொண்ட மர்ம படம். வாழ்த்துக்கள் இந்த முதல் முயற்சிக்கும்.
மூவார்! நீங்க வெந்நீர் வைங்க.. மீதியையெல்லாம் நான் பார்த்துக்கறேன்!
வாசன் சார்! அதெல்லாம் மறைந்து போயிடக் கூடாதுன்னுதான் கதை கனவுன்னு நம்மைப் போல் சிலர் கூவி வருகிறோம்...
//பழைய சிவாஜி, எஸ்ஸெஸார் இணந்து நடித்த படம் பார்த்தது போலிரிந்தது. மூவரின் கதை வசனம் டைரக்ஷனில் மூன்று இடைவெளி கொண்ட மர்ம படம். வாழ்த்துக்கள் இந்த முதல் முயற்சிக்கும்.//
உண்மைதான் கதையை எழுதினது நான் நீங்கலாக இரண்டு சூப்பர் ஸ்டார்கள் அல்லவா! உங்கள்
வாழ்த்துக்கு நன்றி வாசன் சார்!
காஷ்யபன் ஐயாவை சுந்தர்ஜி சாரோட வலைப் பதிவுகளின் கருத்துரைகள் வழி அறிந்து மட்டற்ற மரியாதை உள்ளது என்னுள்.
உங்க கதையின் முடிவுப் பகுதி படிச்சபோதே எனக்கும் பெயர்களின் சூட்சுமம் மனசில் நெருடியது. புத்தியின் தொடர் அசைபோடலில் தெளிந்தேன். கருத்துரையில் நீங்க குறிப்பிட்ட 'கண்ணாடி' என்னை மேலும் தெளிவித்தது.
மற்றபடி, அவர் முன் நிற்கத் தகுதி எனக்கிருக்கிறதா எனத் தெரியவில்லை.
யூ டூ...? என்று உங்களை சண்டை பிடிக்க எண்ணிய நான் பிறந்தவீட்டு குறை கண்ணில் படாதது போல் வழவழத்து ரொம்ப தெளிவானவள் போல் காட்டிக் கொண்டேன்.
மூவார் சார் வைத்த வெந்நீர் தேவையா இப்பொது ? :)
நான் எஸ்கேப்!
நள பாகத்துலே நீங்க எல்லோருமே எக்ஸ்பர்ட் என்பது தான் ஊரறிந்த விஷயமாச்சே!
//யூ டூ...? என்று உங்களை சண்டை பிடிக்க எண்ணிய நான் பிறந்தவீட்டு குறை கண்ணில் படாதது போல் வழவழத்து ரொம்ப தெளிவானவள் போல் காட்டிக் கொண்டேன்.//
யம்மா...யம்மா.... அட என் சமர்த்தே!
ஃபோனில் பேசித் தீர்த்தாயிற்று. என்ன எழுதன்னு விரலுக்குத் தயக்கமா இருக்கு.
வேண்டாத புள்ளிகளை அழித்து ஸ்பஷ்டமாக ஒரு கோலம் வரைய முடிந்திருக்கிறது உங்கள் லாவகத்தால்.
ஒரு மாட்டை நீளமான கயிற்றால் கட்டி மேய விட்டு விட்டு, ஒரு மரத்தடியில் கண் செருக குளத்துக்கரையில் கிடக்கும் அலக்ஷியம் என்று சொல்லலாம்.
கதையை விட கதை சொன்ன விதம்தான் இது மாதிரியான சோதனை முயற்சிகளுக்கு ஆணிவேர்.
ஃப்ரெஷ்ஷான ஒரு முயற்சிக்கு அசராமல் அசத்திய ரிஷபனுக்கும், மூவாருக்கும் ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ்.
அன்பின் மோகன் ஜீ
நம் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கு...
http://www.blogintamil.blogspot.com/
அருமையான முடிவு. அன்பு என்னும் அமுதசுரபியைக் கண்டெடுத்த அனைவருக்கும் என் நன்றி. கடைசியில் முருங்கை மரம் துளிர்த்தது தான் மிகப் பொருத்தமான ஒன்று. எல்லாரும் சொல்லிட்டாங்க. இனிமேல் நான் என்ன சொல்ல இருக்கு! தொய்வில்லாமல் கொண்டு போனதோடு இப்போதைய காலங்களில் மறந்து கொண்டு வரும் மனித நேயத்தை நினைவூட்டியும் இருக்கிறீர்கள்.
மூன்று பேர் எழுதிய புதுமைத் தொடர் கதை அருமை. அதிலும் கடைசி அத்தியாயத்தில் கற்பகம், ஆராவமுதின் அன்பு உரைநடையில் சொல்லப்பட்டக் கவிதை.
ப்ரியா சுந்தரா!
கருத்தப் படித்தவுடன் ஒரு பதிலும் இட்டேன்.. காணமல் போயிற்று என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும் .
//ஒரு மாட்டை நீளமான கயிற்றால் கட்டி மேய விட்டு விட்டு, ஒரு மரத்தடியில் கண் செருக குளத்துக்கரையில் கிடக்கும் அலக்ஷியம் என்று சொல்லலாம்.//
இப்படி கண்செருக மாட்டைக் கட்டிப்போட்டு விட்டு கிடக்கிறானே என்றல்லவா நண்பர்கள் ரிஷபன் மாட்டுக்கு புல் போட , ராமமூர்த்தியோ தண்ணி காட்டியிருக்கிறார்.
இதுவொரு நல்ல முயற்சி என்றே கருதுகிறேன்.. எழுத்தைக் கூர் பார்த்துக் கொள்ளும் ஆரோக்கியமான மூயற்சி. இது போன்றவை பதிவர்கள் தொடரலாம்.
என் எழுத்தை நீர் புத்தகமாய்ப் பதிப்பிக்கும் போது, இந்தக் கதையை என் ஓட்டத்திலேயே எழுதித் தருகிறேன். போதுமா?
மஞ்சு பாஷிணி! கவன ஈர்ப்புக்கு நன்றி.. அது இருக்கட்டும்...இந்த நாலாம் பகுதிக்கு எங்கே உங்கள் வியாஸம்?
கீதா சாம்பசிவம் மேடம்! உங்கள் கருத்துக்கு என் நன்றி.. அன்பு ஒன்றே இந்த உலக கோளத்தைப் புரட்டிப்போட வல்ல நெம்புகோல் அல்லவா?
கீதா சந்தானம் மேடம்! உங்கள் பாராட்டுக்கு நன்றி.. ஒரு பெரிய கதை எழுத இருக்கிறேன்... தாங்குவீர்களா?
அற்புதமான பதிவு
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்
அண்ணா நலமா ?
ஆராமுதா! எனக்குள்ளும் என் அப்பனின் ஜாதி மயக்கம் இருந்திருக்க வேண்டும். தங்கை போய், தகப்பன்தாயும் போய், ரத்தபந்தமென குழந்தைப்பேறும் இல்லாது போய், இன்று ரத்தமும் சுண்டிப்போய் வெளிறிக் கிடக்கிறேன். அரசல்புரசலாய் ஏதோ தெரிந்து வந்த ஆராமுது வெறெதும் கேட்காமல் தன் மௌனத்தால் கொன்றுவிட்டுப் போயிருக்கிறான்.. இல்லை மன்னித்து விட்டுப் போயிருக்கிறான். ‘ஆராமுதா! உன்னைப் பார்த்ததே போதுமடா.. அகலிகைக்கு விமோசனம் வந்தாப்போல உன் ஸ்பரிசம் என் பாவத்தையெல்லாம் கழுவி விட்டது. இது போதும் இது போதும்.’. மாடிவிட்டு கீழே இறங்கினார்..//
வெகு காலமாய் முள்ளாய் உறுத்திய குற்றவுணர்விலிருந்து விடுதலை பெற்று விட்டார் சிவபாதம்.
//என்னை விட நீதான் அதிகம் இழந்திருக்கேன்னு உன்னைப் பார்த்தபிறகு தோணுது.. நீ ஏதும் சொல்ல வேண்டாம்.. நாம இழந்ததெல்லாம் போதும்.. எனக்குன்னு நீயாவது எஞ்சணும்.. எல்லாத்தையும் விட்டுத் தள்ளு.. உன் பழைய ஆராமுதா.... அசட்டு நாயேம்பியே.. அந்த அசட்டு நாயாவே இருந்துட்டு போறேன்.. கலங்காம இருடா”.
பற்றின கைகளின் வெம்மையில் அதன் இறுக்கத்தில் அவர்களின் சந்தேகங்கள்,அவநம்பிக்கைகள்,வேதனைகள் பொசுங்கின.. ஒரு பேரமைதி சினேகிதர்களின் நெஞ்சில் குடிகொண்டது..
ஆராவமுதன் கைகளின் அணைப்பில் சிவபாதம் கரைந்து போனார் அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்.
நட்பு மீண்டும் துளிர்த்து விட்டது பொன்பசுமையாய்.
கதையை படித்து முடிக்கும் போது கண் ஓரத்தில் கண்ணீர் துளிர்த்தது உண்மை.
அருமையாக இருக்கிறது கதை.
மூன்று பேர் எழுதியதையும் படித்தேன்.
மூவருக்கும் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி மேடம்.. நேரம் கிடைக்கும் போது என் ஏனைய பதிவுகளையும் அவை எனக்களித்து உறவுகளின் பின்னூட்ட அன்பையும் பாருங்கள். நன்றி!
கருத்துரையிடுக