செவ்வாய், மார்ச் 31, 2015

வாக்கிங்



ஒரு பெருநகரத்தின் மையத்திலிருக்குது இந்த மேல்தட்டு குடியிருப்பு வளாகம். வந்தேறிகளை விரட்டியும் விலைக்குவாங்கியும் வளைக்கப்பட்ட பெரிய சதுரம்.. வட்டமாய் விட்டுவிட்டு ஆறு பல்லடுக்கு கட்டிடங்கள். நடுவே ஒரு பெரிய புல்தரை. புல்தரையை சுற்றி நடைபாதை.

அந்த நடைபாதை ஒரு பெரிய வட்டத்தை நடுவாந்திரத்தில் குறுக்கியும், கீழ்பக்கத்தைவிடமேற்பகுதி அகன்றும் இருக்குமாறு அமைச்சிருக்கா. மேற்புறமாய் பாதைதாண்டி சிலநீற்றூற்றுகள் வரிசைகட்டி நிக்கிறது. ஆகாசத்திலிருந்து பார்த்தால் பெரிய பாதம்போல் தோணுமாயிருக்கும். கோகுலாஷ்டமி கிருஷ்ணபாதம்..... பெரியபெரிய பதம்வைத்து கண்ணா நீ வாவா! வா! பாதமே இத்தனை பெரிதெனில் உன் மோகவுரு எவ்வளவு பெரிதாய் பரந்திருக்கும்? மலைமுகடுகள் தலையணையாக,உன்மார்பில் பொருதவள் எத்துணை பென்னம்பெரியவள்! விசாலம் சொல்லுவாளே சுந்தரகாண்டம்.....”எழுந்துஓங்கி விண்ணொடு மண் ஒக்க, இலங்கும்ஆடி......’’ 

மூணுமாசம் கழித்து இன்னைக்குதான் வாக்கிங் வந்துருக்கேன். அண்மையில தான் ஹிருதயத்துக்குள்ளே துருவி ஸ்டென்ட் வச்சிருக்கா.

நெஞ்சைக்கிழித்து பார்த்தீங்களே.... அங்கிருந்த முகங்களை, ஞாபகங்களை, சௌந்தர்யங்களை கண்டீர்களோ? கண்டிருந்தாலும் என்போல அவற்றை சீராட்டத் தெரியுமோ? அந்தக் கமலத்தில்தான் ஒவ்வொரு காலத்துல ஒவ்வொரு ஜீவனை தேவதையா ஆவாஹனம் பண்ணி, வேளை தப்பாம ஷோடசோபசாரம் பூஜாவசம். அடுத்த தேவதைக்கு வேளைவந்தபின், இருப்பிலுள்ளதை கோஷ்டமூர்த்தமா நினைவு கர்ப்பத்துல ஏற்றி... உங்களுக்கு இதெல்லாம் புரியுமோ. புரிஞ்சாலும் அவசியமோ? வேலையைப் பாருங்கோ.....

இதோ என்னை தாண்டிகிட்டு ஒரு பொண்ணு வேகமா நடந்துபோறா. டக்குடக்குன்னு பொய்க்கால்குதிரை நடை. பூரிக்கு பிசைந்து வச்ச மைதா உருட்டலாட்டம் ஒரு பசுவெண்ணை நிறம். கருப்புல முக்கால்சராயும் வெள்ளைபனியனுமாய் ‘நைக்கி’ அலங்காரம். காலரில்லா பனியனுக்கு கழுத்தைசுற்றி கருப்புல பைப்பிங்தையல். அதே பைப்பிங்ல ஒருகீற்று நேற்கோடாய் முதுகுநெடுக்க இழுத்திருக்கு. ஆளை ரெண்டாப் பிளந்தாப்பல..... குதிரைவால் பின்குச்சம் ரெண்டுதோளுக்குமாய் மாறிமாறி ஜிங்குஜிங்குன்னு ஆடறது. கையில தர்ப்பணதட்டு அகலத்துக்கு ஒரு செல்போன். அதுல வெள்ளை ஒயர் கிளைவிட்டு காதேறிகிடக்கு. 'தாமரைப்பூத்த தடாகமடி'யா கேக்கப் போறா?! ஏதோவொரு ஜிங்கலாலா..... தாண்டி ரொம்பதூரம் போயாச்சு. இப்போ பளிச்சுன்னு காண்றது முக்கால் பேண்டுக்கும் மீந்த அவளோட கெண்டைக்கால்கள்தான்.

'அம்மா! காலைக்காட்டிண்டு புடவையைத்தூக்கி சொருகிக்காதேயேன்... எனக்கு பிடிக்கல்லம்மா....' அதுதான் அம்மாவுக்கு வேலை செய்யத்தோதுன்னு எனக்கென்ன தெரியும்?

'இதப்பாருடீ! உன் புருஷனுக்கு பாதத்துக்குமேல கண்ணுக்குப்படாம பாத்துக்கோ. எட்டு வயசுலேயே சொருகின புடவையை இழுத்துஇழுத்து விட்டுடுவான்'....புது மருமகளுக்கு அம்மோபதேசம்...

ஒற்றைத்தலையணையில் புதுவாசனையோடு கிசுகிசுத்ததோ 'அப்டில்லாம் உனக்கு தடையில்லை. வேணும்னா பாதத்தை மட்ட்டும்ம் மூடிக்கோ'ன்னு...

'ச்சீய்ய்'....

'சீச்சீ'கள் சிதறியபடி சிலகாலம்....

'என்ன சார்? தனிக்கு சிரிச்சபடி நடந்தாறது ?'

"சீச்சீ... அதெல்லாம் ஒண்ணுமில்லே... லைப் சர்டிபிகேட் அனுப்பிட்டேளா?"

"இன்னும் இல்லை."... சிந்தனை வயப்பட்டது கிழ சகபாடி. லைப் சர்டிபிகேட் குறித்து நினைவுறுத்தி டென்ஷன் பண்ணியாச்சு. அதுங்கிட்ட இருந்து இன்னுமொரு பத்துநிமிஷம் பேச்சுமூச்சு இருக்காது. தியாகராஜன் இத்தனைக்கும் என்னைவிட மூணுவயசு சின்னவன். பொறக்கறச்சேயே அவன் கிழவனா பொறந்தாச்சு. கவலைப்பட்டுகிட்டு இருக்கறதுக்குன்னு ஒரு பிறப்பு. இந்த பொழுதுக்கு ஒரு லைப்சர்டிபிகேட்.என்ன செய்ய?

கொஞ்சமேதூரம் சேர்ந்து நடைபோட்ட தியாகராஜன் சொல்லிக்காம பின்வாங்கியாச்சு. உங்க 'எட்டிகெட்டு' இங்கிதமெல்லாம் கிழமார் நாங்க அறியோம்.  மேலே நடக்குறேன்.

நடைபாதையை சுற்றி மார்உயரத்துக்கு நெருக்கமா வெறும்பச்சையாய் குரோட்டன்ஸ் போல நெடுக்க நட்டுருக்கு. இப்பத்தான் புதுசாக பார்க்கறாப்பல பார்க்கிறேன். மேலிலையெல்லாம் பொன்பச்சையாய் துளிர்த்திருக்க கீழிலைகள் அடர்பச்சையில் முதிர்ந்துகிடக்கு. சீரா வெட்டிவிட்டிருக்கான். ரொம்ப உறுத்து பார்த்தால்தான் அந்தப்பக்கம் கொஞ்சிக்கொண்டிருக்கும் இளஞ்சோடி இடுக்குகளூடே நீரோட்டமாக தெரியும். அவ்வளவு அடர்ந்த பச்சைவளையம். அதுசரி... அந்தப் பக்கம் இருப்பது 'இளஞ்'ஜோடின்னு எப்படி தெரியும்னு கேக்கறேளா? ஒரு நம்பிக்கை தான்... அப்படியே இருக்கட்டுமே!

இது 'சி' பிளாக். இங்குதான் பாதையும் வளையறது. ரெண்டுமாடி உசரத்துக்கு பெரும் கான்கிரீட் தூண்கள்தான். அதுக்கும் மேல்தான் இருப்பிடங்கள். அத்தூண்கள் அடர்ந்த கூடத்தில், பத்துபதினைந்து பெண்டுகள் கையைக்காலை மடக்கிநீட்டி, தலையையும் தோளையும் சுழற்றி முன்னும்பின்னுமாய் ஆடிண்டு இருக்கா. பெரிய கறுப்பு ஸ்பீக்கர்களினின்று இசைவழியறது.  ஜங்குசக் ஜங்குசக் ஜங்குஜங்கு ஜங்குசக்....

லுக்மீ லெப்ட் லுக்மீ ரைட்
லுக்மீ லேடி யூ ஆர் ரைட்.
ஜங்குசக் ஜங்குசக்
ஜங்குஜங்கு ஜங்குசக்....

இது பிட்னஸ் எக்ஸர்ஸைசாம்...ஏரோபிக்ஸோ இறங்கோபிக்ஸோ ஏதோ ஒண்ணு.

அந்தப்பாட்டு தாளகதிக்கேத்தபடி நானாத்தான் இட்டுகட்டி சொல்றேன். 'லுக்மீ'ன்னு வருமோ? 'லுக்அட்மீ’'ன்னு தானே சொல்லணும்? பரவாயில்லை... இசையுடைய பாட்டுக்கு இழுக்கு நன்று ! ஆடுங்கோ.. நல்லா ஆடுங்கோ... ஊளைசதை வைக்காம ஊட்டமா இருங்கோ. இதெல்லாம் அப்போ உண்டா? ஆனா போற வரைக்கும் விசாலம் கோயில் சிலையாட்டமாத்தானே இருந்தா?

“ .......உங்களுக்கென்ன? உக்காந்த இடத்துல காப்பி... அம்பாரம் பாத்திரம் துலக்கி கல்லுரல் தேயத்தேய மாவரைச்சு, சமைச்சு,பறுமாரி பம்பரமா நாளெல்லாம் சுழண்டு அக்காடான்னு படுத்தா பின்னோடியே பாதம் சொரண்ட நீங்க... ‘’ தலைய விலுக்குன்னு ஆட்டிக்கிறேன்... நினைப்பு என்னவோ அப்படி ஆட்டினா உதுந்து போயிடும்னு... 

அந்த மேடு பார்த்தீங்களா? அங்க ஒரு விசிறிவாழை இருந்தது. விழுந்தது.அதோட சரி. என் தம்பி கிட்டே நாலுமாசம் மங்களூரிலிருந்துவிட்டு திரும்பிவந்து பாக்கிறேன்.... வாழையைக் காணோம். ரெண்டு பாக்குமரம் ஒண்ணுக்கொண்ணு எதிரெதிரா வளைஞ்சு விறைச்சுகிட்டு அங்க நிக்கிறதுகள். வேரடி மட்டும் என்னவோ ஒண்ணு பக்கத்துடன் ஒண்ணாத்தான் நட்டிருக்கு. 

இந்த ரெண்டையும் பாக்குமரம்னா சொன்னேன்? ஒரு பாளையுண்டா பாக்குண்டா? இது பாக்குமரம் போல ஏதோ ஒண்ணு. எல்லாமே இங்க ஏதோ ஒண்ணைப்போலதானே? மனுஷனைப் போல மனுஷன்.. உறவைப் போலவே உறவு.....வாழ்க்கை போலவொரு வாழ்க்கை.

இடது 'பாக்குபோல' மரத்துகீத்துகளிலே காய்ஞ்சுபோன கீத்தொண்ணு தொங்கினபடி இருக்கு. எப்பவோ மேலத் தைக்கால்தெரு கரண்ட்கம்பியில செத்துத் தொங்கின கருடனை மாதிரி. கோயில்ல மூன்றாம் நாள் உற்சவம் வேற... ஆவுடையப்பன்தான் துரட்டிக்கோலை ரப்பர்கிளவுஸ் போட்டுகிட்டு அந்த கருடப்பட்சியை கீழே தள்ளினது .குளக்கரையிலே குழிவெட்டி,உப்பு கற்பூரம் நாமகட்டி எல்லாமுமா போட்டு புதைச்சா...

பெரியவால்லாம் தலைமுழுகினா... பாட்டிகளெல்லாம் உபவாசம் இருந்தா... இப்படி வந்து இங்க உயிரைவிடுமோ பெருந்திருவடி?! இப்போ அந்தப் பாட்டிகளில்லே, ஆவுடையப்பனில்லே.. அந்தப் குளத்தை தூர்த்து கட்டடமாக் கூட ஆயிடுத்து. நினைப்புமட்டும் ஊசலாடிகிட்டே இருக்கு, இதோ காய்ஞ்சு தொங்கற கீத்துமாதிரி.


ரெண்டு ரவுண்டு நடந்திருப்பேனா? அதுக்குள்ள கால்முட்டி பாட்டுபாடறது. தைலம் தேச்சுக்கிறதெல்லாம் ஒரு மனசாந்திக்காகத்தானே? மொசைக் பெஞ்சில் உட்கார்ந்துட்டேன். உட்கார்ந்தப்புறம் தான், நாங்கல்லாம் மட்டும் லேசுபட்டவாளான்னு இடுப்பு, தோள்பட்டை, கழுத்து மூணுமா லாவணி பாடறதுகள்.

'சிங்கக்குட்டிக்கு காலுவலிக்குதா?', மடியில் என் கால்களைத்தூக்கிப் போட்டுக்கொண்டு பிடித்துவிட்ட என் தாத்தா நினைப்பு வந்துடுத்து.
'அஸ்மத் பிதாமஹம் கௌண்டின்ய கோத்ரம் கோபாலசாமி சர்மாணாம், ருத்ரரூபம் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி.'

தாத்தாவோட சரி! அதுக்கப்புறம் யாரும் என்னைக் கொண்டாடினவங்க இல்லை. எனக்கு வாய்ச்சவளோட கண்ணோட்டமே தனி. ஜூரம் வலின்னு சொன்னாப் போறும் ,முகத்துல தனி சிடுசிடுப்பு வந்துடும்.

'கையும்காலும் இரும்பால அடிச்சு வார்ப்படமாவா வார்த்திருக்கு? பூனையாட்டம் உடம்ப நக்கிண்டே இருக்காம ஆறவேலையைப் பாருங்கோ'ம்பா.... மருமகளோ ஒருபடி மேல... இருமினாலே போறும்.. அவளோட வாய்,மூக்கு,கண்ணு,புருவமெல்லாம் சுருங்கி ஒரு நேர்க்கோட்டுக்கு வந்துடும். மகராசிக்கு அவ்வளவு அருவருப்பாம்..... 

உனக்கும் என்னைமாதிரி எழுபத்தெட்டு வயசு வரும்... வா... நீ இருமினா உன் மருமகள் உன்னை துப்பாக்கி எடுத்து சுடப்போறா பாரு... 

என்னோட பேத்திக்கு ஏழுவயசு. குழந்தைக்கு சுகவீனம் வந்தாக்கூட வீட்டுல மிரட்டலும்உருட்டலும் தான். ஒரு தழுவல்கூட இருக்காது. யாரைச் சொல்றது என்னத்த சொல்றது...

மெல்ல எழப்பார்க்குறேன். கீழ்க்கால் நடுங்குது. பரந்தாமனை ஒரு வாக்கிங் ஸ்டிக் வாங்கித்தரச் சொல்லணும். ஒருவழியா வீட்டுக்குள் வந்தாச்சு. சோபாவில் படுத்தபடி பேத்தி சிணுங்குகிறாள். 'ஸ்கூல்ல ரெண்டு பீரியட் டான்ஸ் ரிகர்ஸல்ம்மா... காலுல்லாம் வலி தாங்கல்லமா' . 

பரபரன்னு சோபா ஓரத்தில் சரிந்து உட்கார்ந்தேன். பேத்தியின் கால்களை மடியில் கிடத்தி 'என் சிங்கக்குட்டிக்கு கால்வலிக்குதா?' என்று அந்த மெல்லிய கால்களைத் பிடித்துவிட்டேன். எதிர்பாராமையின் ஆச்சரியம் கலையாமலே 'சூப்பரா இருக்குத் தாத்தா' என்றாள் முகம்பொங்க சிரித்தபடி. விரல்களில் நெட்டிமுறித்து விட்டேன். 'வௌவ்.சூப்பர் தாத்தா' என்றாள் மீண்டும். 

எனக்கு பேத்தி பாக்கியம் மட்டும்தான். 'பிதாமஹம்.... ருத்ர ரூபம்... தர்ப்பயாமி' ஒண்ணும் கிடைக்காது. பரவாயில்லே.....

உனக்கு கைகால் பிடிச்சுவிடற புருஷனும் பிள்ளைகளுமா வாய்க்கட்டும் என் குலக்கொடியே !

38 comments:

ஸ்ரீராம். சொன்னது…

தாண்டிச் செல்லும் இளம்பெண் வர்ணனை, ஏரோபிக்ஸ்-இறங்கோபிக்ஸ்.. ஜமாய்க்கறீங்க.. (நல்லவேளை, என் கணினி சமைக்கறீங்கன்னு அடிக்கலை பாருங்க! :P )

முதுமையின், இயலாமையின் ஆற்றாமை ஆற்றொழுக்காய் வரிகளில்..ஏதோ இந்த அளவில் முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் வீட்டில் வைத்திருக்கிறார்களே.. அதை நினைத்து சந்தோஷப் படுவதை விட்டு விட்டு..

:))))))))))

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வாக்கிங் பற்றிய டாக்கிங் .. ரைட்டிங் அருமையோ அருமை.

படிக்க அதுவும் ..... ஆங்காங்கே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.:)

முடிவினில் சிறியதோர் சோகமும் இழையோடியது.

குலக்கொடிக்கான நல்வாழ்த்துகள் நம்பிக்கை தருவதாகவும் உள்ளது.

sury siva சொன்னது…


அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முஞ்சதி ஆஷா பிண்டம்.

அந்த ஆஷா என்ற ஒரு வார்த்தையிலே
எதெல்லாம் அடக்கம் ?
என்று நேத்தைக்கு முந்தா நாள் தான் ஒரு பெரியவர் கிட்டே
பேசிண்டு இருந்தேன்.

"பின்குச்சம் ரெண்டுதோளுக்குமாய் மாறிமாறி ஜிங்குஜிங்குன்னு ஆடறது. "
என்ன ஒரு காளிதாசன் மேக சந்தேச வர்ணனை !!
அதுவும் ஜிங்கு ஜிங்குன்னு ம்யூசிகலா !!

வைரமுத்து கூட தோத்தார் போங்கோ. !!

இந்த மாதிரி ஒரு வர்ணனை பண்ணி எங்கோ ஹிட்டன் ஆ இருக்கிற
அந்த ஆஷாவை திருப்தி பண்ணிக்கிறது கதாசிரியர் மட்டும் தான் னு
இல்லைங்காணும் !!

என்னது !! ஏகாதசி அதுவுமா இந்தக் கதை கண்ணுலே பட்டுடுத்து.
மனசை இன்னி முழுக்க படாத பாடு படுத்தும். என்ன தான் வயசு எட்டு கழுதை வயசு ஆயிட்டாலும் மனுஷ்ய ஜன்மம் தானே !!
அதான் ஆதி சங்கரரே சொல்லியிருக்கார்.

காயத்ரி இன்னிக்கு ஒரு நூறு கூட பண்ணிடனும்.
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே...

ராமனை மட்டும் ஜபி.
மோகன்ஜி வர்ணனையை நாளைக்கு படிச்சுக்கலாம்.

அப்படின்னு எதோ ஒன்னு உறுத்தினாலும் மனசுக்குள்ளே
அந்த வானவில் பக்கத்தை
கை புக் மார்க் பண்ணி வைக்கிறது.

கிழவி தூங்கினப்பறம் சாவகாசமா இன்னும் ஒரு தரம் படிக்கணும்.

என்னமா எழுதறார்!! பேனா இங்கிலே கூட வயாகரா இருக்குமா என்ன ??

சுப்பு தாத்தா.

அப்பாதுரை சொன்னது…

இதை மாதிரி ஒண்ணு எழுத வரமாட்டேங்குதேனு ரொம்ப கடுப்பா இருக்குண்ணா... வாக்கிங் வரி நெடுக ஆகா போட்டுண்டே வந்தேன்.

அப்பாதுரை சொன்னது…

சுப்புத் தாத்தா பின்னூட்டம் பின்னிட்டார்.

கீதமஞ்சரி சொன்னது…

எழுபத்தெட்டு வயது உடம்பு… மனசு மட்டும் இன்னும் இருபத்தெட்டாய்!

வேகமாய்த் தாண்டிச் செல்லும் பெண்ணின் பின்னழகு வர்ணனை குறும்பும் சக கிழபாடிக்கு லைப் சர்டிபிகேட்டை நினைவுபடுத்தி பதற்றமடையச்செய்து ரசிக்கும் குசும்பும் அசத்தல்.

தனிமையின் ஏக்கத்தொணிப்போடு ஒரு வாழ்க்கை.. இயலாமை… எதிர்பார்ப்பு.. ஏமாற்றம்.. ஆதங்கம்… இதுதான் என்று முகத்திலறையும் யதார்த்தத்தோடு கதை நடக்கிறது.. ஆம்.. நடையாய் நடக்கிறது.

அந்த கான்கிரீட் காட்டுக்குள் உலா வரும் ‘போல’ உலகத்திலும் ரசிக்கவும் காட்சிப்படுத்தவும் நினைவுகளை மீட்கவும்தான் எத்தனை அம்சங்கள்… சூழ்நிலைக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் உயிரின் சாதுர்யம் அந்த கடைசி பத்தியில்…

சுய கழிவிரக்கம் பொங்கும் வேளைகளில் கை கால் பிடித்துவிட வேண்டாம்.. கனிவு பொங்கும் வார்த்தைகள் போதுமே… என்றுதான் மனம் அங்கலாய்க்கிறது.

நேற்றுவரை பெற்றுக்கொண்டும் பெறமுடியவில்லையே என்று வருந்திக்கொண்டுமே வாழ்ந்தாகிவிட்டது. தன்னால் தரமுடியும் என்பது இப்போதாவது சிந்தனையில் உதித்ததே.. வாழ்க்கை இனி சுகமாக வாய்க்கலாம்..

மேலே உள்ளது கதை பற்றியது. எழுத்துநடை பற்றி என்ன சொல்ல? வரிகளுக்குள் வாசிப்போரை ஈர்த்துக்கொள்ளும் அற்புதம்.

\\அந்தக் கமலத்தில்தான் ஒவ்வொரு காலத்துல ஒவ்வொரு ஜீவனை தேவதையா ஆவாஹனம் பண்ணி, வேளை தப்பாம ஷோடசோபசாரம் பூஜாவசம். அடுத்த தேவதைக்கு வேளைவந்தபின், இருப்பிலுள்ளதை கோஷ்டமூர்த்தமா நினைவு கர்ப்பத்துல ஏற்றி..\\

இந்தக் கதையை இனியும் தொடரத்தான் வேண்டுமா? புரியாத மொழியில் வாசித்து என்ன புண்ணியம்? பேசாமல் போய்விடலாமா? என்று யோசித்தபடியே விழிகளை நகர்த்தினால்…

\\உங்களுக்கு இதெல்லாம் புரியுமோ. புரிஞ்சாலும் அவசியமோ? வேலையைப் பாருங்கோ.....\\

அப்பாடா! பெரும் ஆசுவாசம். நல்லவேளை… ஒரு அற்புதமான படைப்பினை அநாவசியமாய்த் தவிர்க்கப் பார்த்தேனே..

மனம் நிறைந்த பாராட்டுகள் மோகன்ஜி… உங்களுடைய தனித்த முத்திரை இந்தக் கதையிலும் பதிக்கப்பட்டுவிட்டது.

sambasivam6geetha சொன்னது…

என்ன ஒரு அருமையான எழுத்து நடை! லா.ச.ரா.வை மீண்டும் படிப்பது போல் உணர்வு. மனதைக் கொக்கி போட்டு இழுத்து விட்டது. அதிலும் அந்தக் கமலத்தில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ஜீவனைஆவாஹனம் பண்ணினதை நினைச்சால்!!!!!

sambasivam6geetha சொன்னது…

என்ன இருந்தாலும் எத்தனை பார்த்தாலும் விசாலம் மட்டும் இன்னமும் அலுக்கவில்லை பாருங்க! இத்தனைக்கும் சிடுசிடுனு வேறே சொல்றார். ஆனாலும் மனது அவளைத் தானே தேடுகிறது! பேத்தியின் முகத்தில் விசாலத்தைக் கண்டாரோ! விசாலத்துக்குச் செய்யமுடியாமல் விட்டதை எல்லாம் பேத்திக்குச் செய்து ஆறுதல் தேடிக்கிறாரோ!

sambasivam6geetha சொன்னது…

இவ்வளவு உருகறவர் சிடுசிடு மனைவியோட எப்படிக் காலம் தள்ளி இருப்பார்? அதிலும் சாகும்வரை கோயில் சிலையாட்டமா இருந்தவளோட. ஆனால் ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத் தான் இருந்திருக்கு போல! நடுவில் என்ன ஆச்சு? மண்டையைக் குடையுதே! :)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அசத்தல்... நடை மனதை கவர்ந்தது...

சுப்புத் தாத்தாவும், சகோதரி கீத மஞ்சரியும் - பின்னூட்டங்களும் அருமை...

மோகன்ஜி சொன்னது…

ஸ்ரீராம்!
உங்க ஜமாய்க்கிறீங்க டைமிங் அட்டகாசம்!

//ஏதோ இந்த அளவில் முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் வீட்டில் வைத்திருக்கிறார்களே.. அதை நினைத்து சந்தோஷப் படுவதை விட்டு விட்டு.. //

முதியோர் இல்லங்களுக்கு எல்லா முதியவர்களும் வந்து சேர்வதில்லை. நம் கதாநாயகரின் கண்ணோட்டத்தில் வெளியான உறவுமுடிச்சுகள், அவரை மு.இல்லத்தில் சேர்த்திருந்தாலும் இப்படித் தானே இருந்திருக்கும்?

முதுமையின் எண்ணவோட்டமும் எதிர்பார்ப்புகளும் சிக்கலானவை.. குழந்தைகளின் மனநிலைக்கு ஒத்தவை. குழந்தைகளுக்கு இல்லாத அனுபவமும் சார்புகளும் மட்டுமே அதிகப்படி.. கொஞ்ச நாள் கழித்து ஒரு முதியோர் இல்லத்து தம்பதிகளைப் பற்றி எழுதுவேன். அவர்களை நன்கு அறிந்தவன்.. வாழ்க்கையின் சிக்கல்கள் வார்த்தைகளில் அதே தாக்கத்தோடு பெரும்பாலும் சிக்குவதில்லை. சற்றேனும் சிக்கும்போது ஒரு நல்லகதை கிடைக்கின்றது.

உங்கள் ஊக்கவரிகளுக்கு நன்றி ஸ்ரீராம். எப்போ சந்திக்கப் போறோம்?

மோகன்ஜி சொன்னது…

வை.கோ சார்! ஒரு 'உற்சாக டைனமோ'வின் பாராட்டு தரும் ஊக்கத்தை இப்போது பெற்றேன். நன்றி ஜி!

sury siva சொன்னது…

// எப்போ சந்திக்கப் போறோம்? //
யாரை ?
அந்த ஜிங்கு ஜிங்குவையா ??

நீங்க முன்னாடி போங்க..
நான் பின்னாடி வாரேன்.

தர்ம அடி வாங்கறதுக்கும்
உடம்பிலே தெம்பு இருக்கணும் இல்லையா
சொல்லுங்கோ...

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

சுப்புத் தாத்தா!

சுவையான கருத்து உங்களுடையது!

//என்ன ஒரு காளிதாசன் மேக சந்தேச வர்ணனை !!
வைரமுத்து கூட தோத்தார் போங்கோ. !!//

காளிதாசன், வைரமுத்து, மோகன்ஜி... எல்லோரும் உங்களுக்கு ஒரே ஈடு தான் போங்க!

//ஹிட்டன் ஆ இருக்கிற
அந்த ஆஷாவை திருப்தி பண்ணிக்கிறது கதாசிரியர் மட்டும் தான் னு இல்லைங்காணும் !!//

உண்மை.. கதாசிரியன் திருப்தி கொண்ட ஆஸாவை விருத்தி செய்து பெருக்கிக் கொள்கிறவனே நல்ல வாசகன்.. சமயத்தில் கதாசரியனுக்கு தன் எழுத்து காட்டின போதத்தைவிட வாசகன் பொருள் கொண்ட விதம் உச்சமான அனுபவமாய் அமையும். நான் ஒரு பூஞ்சை எழுத்தாளன். நீங்கள் உயர்ந்த வாசகர் என்பது நாமெல்லோரும் அறிந்தது தானே !

//கிழவி தூங்கினப்பறம் சாவகாசமா இன்னும் ஒரு தரம் படிக்கணும்.

என்னமா எழுதறார்!! பேனா இங்கிலே கூட வயாகரா இருக்குமா என்ன ??//

சரிதான்! என் இங்கிலே வயாகரா மட்டும் இருந்திருந்தா தூங்க விட்டிருப்பீங்களா?! கலி! எல்லாம் கலி!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்!
//இதை மாதிரி ஒண்ணு எழுத வரமாட்டேங்குதேனு ரொம்ப கடுப்பா இருக்குண்ணா//

இப்பிடில்லாம் உற்சாகம் தந்தாலாவது அஞ்ஞாதவாசம் புறப்படாம எழுதுவேன்னு மைன்ட் மில்க் (மனப்பால்) குடிக்காதீங்க பாஸ்!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்! சுப்புத்தாத்தாவின் கருத்துகள் என்றுமே கலக்கல் தான்!

மோகன்ஜி சொன்னது…

கீதமஞ்சரி!
அற்புதமான பின்னூட்டம். இவ்வளவு நுணுக்கமாய் அலசியிருக்கிறீர்கள்..

//பெற்றுக்கொண்டும் பெறமுடியவில்லையே என்று வருந்திக்கொண்டுமே வாழ்ந்தாகிவிட்டது. தன்னால் தரமுடியும் என்பது இப்போதாவது சிந்தனையில் உதித்ததே//

கதையின் உயிர்நாடி இந்த எண்ணமே! முதுமை அள்ளிவழங்கவும் முடியும் என்ற கோணத்தை மையமாக்கி சொல்லமுயன்ற கதை இது.

நன்றி கீதமஞ்சரி!

மோகன்ஜி சொன்னது…

கீதமஞ்சரி!
அற்புதமான பின்னூட்டம். இவ்வளவு நுணுக்கமாய் அலசியிருக்கிறீர்கள்..

//பெற்றுக்கொண்டும் பெறமுடியவில்லையே என்று வருந்திக்கொண்டுமே வாழ்ந்தாகிவிட்டது. தன்னால் தரமுடியும் என்பது இப்போதாவது சிந்தனையில் உதித்ததே//

கதையின் உயிர்நாடி இந்த எண்ணமே! முதுமை அள்ளிவழங்கவும் முடியும் என்ற கோணத்தை மையமாக்கி சொல்லமுயன்ற கதை இது.

நன்றி கீதமஞ்சரி!

மோகன்ஜி சொன்னது…

கீதாசாம்பசிவம் மேடம்!
//விசாலம் இன்னமும் அலுக்கவில்லை பாருங்க..//

நல்ல தாம்பத்தியம் அலுக்காத தீராத தொந்தம்.. அது கருத்து வேறுபாடுகளைத் ஏற்றுக்கொண்டு, பூசலிட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்டு சேர்ந்து ஓடும் தீராத ஓட்டம்..

விசாலத்தின் சிடுசிடுப்பு வியாதிகோரும் போது என்று கதை குறிப்பிடுகிறது. மீதி நேரத்தில் கிழவி சாந்த சக்குபாயாக இருந்திருப்பாள் என்று நம்புவோம்!
சூப்பர் அலசல் மேடம்!

மோகன்ஜி சொன்னது…

கீதாசாம்பசிவம் மேடம்!
//இவ்வளவு உருகறவர் சிடுசிடு மனைவியோட எப்படிக் காலம் தள்ளி இருப்பார்? அதிலும் சாகும்வரை கோயில் சிலையாட்டமா இருந்தவளோட. ஆனால் ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத் தான் இருந்திருக்கு போல! நடுவில் என்ன ஆச்சு? //

நீங்க ஆம்பிளைப் பயலுவளை புரிஞ்சிகிட்டது இம்புட்டு தானா? சிடுசிடுவோ கடுகடுவோ, ஒரு தடவை கமிட்டாயிட்டா அவங்கபேச்சை அவங்களே கேக்க மாட்டாங்க! நாலுக்கும் நடுவுல அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு தன் வேலையை கருத்தா பார்த்துகிடுவாங்க. ஒரு அசட்டு சிரிப்புல மனசுக்கு ஏற்காததை ஜீரணம் பண்ணிக்கிட்டு,கோயில் சிலையோ, கோட்டைமதிலோ காலம் தள்ளிடுவோமில்லே !!

G.M Balasubramaniam சொன்னது…

நெஞ்சைக் கிழித்தா ஸ்டெண்ட் வைக்கிறார்கள்.எழுபதுகளில் இருப்பவருக்கு தாரத்தை இழந்தவருக்கு வரும் நினைவுஅவளது உடம்பு ( அது சந்தோஷம் தருவது) அவள் மனக் உடம்பு முடியலைன்னு சொன்ன போது வரும் சிடு சிடுப்பு( மருமகளும் அதில் குறைந்தவளல்ல) மாற்றி மாற்றி வரும் நினைவுகள் ( வயதானவருக்கு நினைவுகள்தானே வாழ்க்கை? இன்னும் சந்தோஷமான நினைவுகளுக்குக் கொடுத்து வைக்காதவரின் எண்ண ஓட்டங்கள்,ஒரு விரக்தி ஒரு அசூயை கூடவே ஓடும் ஒரு சோக இழை. நானும் அந்த வயதில் இருப்பதால் I can empathaize. பெற முடியாதபோது கொடுக்க முடிவதில்கிடைக்கும் இன்பம் எல்லாமே நன்றாகச் சொல்லிப் போகப் படுகிறது. வாழ்த்துக்கள். எழுத்தின் நடை ஆங்காங்கே மாறுவது நானாக ஏதும் கற்பிக்க முயலவில்லை. வாழ்த்துக்கள்ஜி.

மோகன்ஜி சொன்னது…

சூரித்தாத்தா! 'எப்போ சந்திக்கப் போறோம்'ன்னு கேட்டதுக்கு இப்பிடியா யோசிப்பீங்க? பெரியபுள்ள தனமாயில்லே இருக்கு?

மோகன்ஜி சொன்னது…

பாராட்டுககளுக்கு நன்றி தனபாலன்!

மோகன்ஜி சொன்னது…

GMB சார்!

//நெஞ்சைக் கிழித்தா ஸ்டெண்ட் வைக்கிறார்கள்// என்ன சொல்ல?
ஆர்ட்டரி,வென்றிகில், மகா தமனி,சிரைதமணி,பெரிகார்டியம்லாம் சொல்லி அங்க தாமரை, தேவதைகள்னா நல்லாவா இருக்கும் ? அதான் அப்பிடி.. தகவல் பிழையை பொறுக்கவும்.

நினைவோட்டத்துக்கும் நடப்புக்கும் மாறிமாறி கதை பயணிப்பதால் எழுத்து நடையிலும் மாற்றம்.

ஒருமுதியவரின் எண்ணவோட்டத்தை எழுதியவிதம் பற்றிய உங்கள் பாராட்டுக்கு நன்றி சார்!

மோகன்ஜி சொன்னது…


ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி by SMS:

சார்..... சூப்பர்! எழுதினா இந்த மாதிரி எழுதனும்னு வாசகனை சுண்டி எழுப்பும் எழுத்தின் சொந்தக் காரருக்கு ஒரு ராயல் சல்யூட்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி மூவார்! ரொம்ப நன்றி!

sury siva சொன்னது…

//சூரித்தாத்தா
இப்பிடியா யோசிப்பீங்க?//
just said
in lighter vein.
please do not get offended.

ரெண்டு ராம நாமா கூட சொல்லிடறேன்.

திருப்தி தானே.!!
yathaa sowharyam
thushadwam.
சுப்பு தாத்தா.


subbu thatha.
www.pureaanmeekam.blogspot.com

மோகன்ஜி சொன்னது…

சூரி தாத்தா!
நீஙக ஒண்ணு! உங்களை தப்பா புரிஞ்சிப்பேனா? கூல் சார்!

உங்களைப் போல ராமநாமா சொல்லி சரி பண்ணனும்னா நானோ அனுமாரா இல்லே மாறியிருக்கணும்?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

வாக்கிங் -அற்புதமான (எழுத்து)நடை
அப்பாதுரை உங்களை ஸ்லாகிப்பதன் காரணம் புரிந்து விட்டது.
நீங்க இருவருமே முதல் தர எழுத்தாளர்களாக பரிமளித்திருக்க வேண்டியவர்கள்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க முரளிதரன் சார்,
உங்கள் பாராட்டுக்கு நன்றி முரளிதரன் சார்!

//அப்பாதுரை உங்களை ஸ்லாகிப்பதன் காரணம் புரிந்து விட்டது.
நீங்க இருவருமே முதல் தர எழுத்தாளர்களாக பரிமளித்திருக்க வேண்டியவர்கள்.//

பத்திரிகைகளில் எழுதி, புத்தகங்கள் போட்டு , மோவாயைத்தாங்கியவாறு பேனாவுடன் கன்னம் தங்கிய விரல்களுடனான போஸில் போட்டோவில் தோன்றுவதும் தான் 'பரிமளிப்ப'தெனில், அது வேண்டாம் என தான் இந்த ஒடுக்கம்.

எனக்காகத்தான் எழுதிக் கொள்கிறேன். எண்ணங்கள் குவிந்து, வார்த்தைகள் வரிசைகட்டி நிற்கும் மோனசந்தியில், அவற்றை ஏட்டில் மாற்ற மனமின்றி, அந்த இன்பலாகிரியில் மட்டுமே அமிழ்ந்து கிடக்கும் என் சுதந்திரம்.
இந்த வலையுலகில் அந்த சுதந்திரத்திற்கு குந்தகம் இல்லை எனத்தான் இங்கு சிலதைப் பதிகின்றேன்.

எந்த நிர்ப்பந்தமும் இன்றி, 'யாதும் சுவடு படாமல்' இங்கு வந்து போவதில் ஒரே ஆனந்தம்.... உங்களைப்போன்ற பதிவுலக நட்புகள் சொந்தம் பாராட்டுவது தானே?

அப்பாதுரையின் நிலைப்பாடு கூட என்னொத்ததே என்று நினைக்கிறேன்.. அவரளவு சரக்கு இல்லாதவன் நானென்று
தெரிந்தும்கூட....

அடிக்கடி வாருங்கள் முரளி....


sury siva சொன்னது…

//எனக்காகத்தான் எழுதிக் கொள்கிறேன்//

சபாஷ் !!

ஒன்று சொல்லட்டுமா?
துளசிதாஸ் வடமொழியில், மான சரித மானஸ் எழுதினார்.வ்ரஜ பாஷை.
அது இந்திக்கும் பிராசீன மொழி.

அதைப் படித்த மொழி வல்லுனர்கள், சம்ஸ்க்ருத புலவர்கள், அவரிடம் சொன்னார்களாம்: ஏனய்யா...ஏற்கனவே வால்மீகி எழுதிய ராமாயணம் இருக்கிறது. மொத்தம் 25000 ஸ்லோகங்கள் .
அத படிக்கறதுக்கே ஆளைக்காணோம்.
.நீ வேற நீ பாட்டுக்கு ஒரு பதினாயிரம் பாட்டு எழுதியிருக்கிங்க...

இதெல்லாம் யாரு படிப்பாங்க அப்படின்னு எழுதியிருக்கீங்க... என்றார்களாம்.

துளசிதாசர் அமைதியாக பதில் சொன்னாராம்.

யாரும் படிக்கவேண்டும், என்னைப் புகழவேண்டும் என்று எல்லாம் நினைக்கவும் இல்லை. இந்தக் காவியத்தை எழுதவும் இல்லை.

இது என் ஆத்ம திருப்திக்காக . ஸ்வாந்த சுகாய.. என்றாராம்.

அது போன்று தான் நீங்கள் சொல்லுவதும் .

இந்த மன நிலை இருக்கும் வரை,

விருப்பும் வெறுப்பும் தலை காட்டாது.
காய்தலும் உவத்தலும் இருக்காது.

என்னைப் போன்ற அற்பங்கள் பொழுது போகாத கிழங்கள் அப்பப்ப
புகழும். சமயத்திலே வெறுப்பேத்தும். கடுப்பேற்றும்.

கண்டுக்காம இருந்தா தன்
சொர்க்கம் தன் படைப்பு தான்.

ஆல் த பெஸ்ட்.

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

சுப்பு தாத்தா!

தன்யோஸ்மி ! ஸ்வாந்த சுகாயனாய் இருக்க ஆசீர்வாதம் பண்ணுங்க.... காய்த்தல் உவத்தலின்றி நாலுபேருக்கு நல்லது சொல்லும் மனசுவாய்க்க வாழ்த்துங்கள்!

நிலாமகள் சொன்னது…

வாக்கிங் கிளம்பி வந்து சேர மூணு நாளாச்சு.

நல்லாயிருக்கு நடை.

டாக் டாக்குன்னு கூடவே போனாப்பல ஒரு வர்ணனை. பைப்பிங் தையல் உட்பட நோட் பண்ணிண்டு.

அவோ காலிலிருந்து அம்மாவுக்கு அப்படியே பார்யாளுக்கு தவ்விண்டே பின்னுக்கு போகுது மனசு. வலிக்கிற காலுக்கு தாத்தா நெனைப்பு மருந்து. இன்னும் மறந்துடாத ஸ்லோகமெல்லாம் சொல்லி தாத்தா போனதை அவரோடு போன பிரியத்தை சொல்லியாச்சு.

எதிரெதிரா வளைஞ்சு விறைச்சுகிட்டு நிக்கற ரெட்டை மரத்துக்கு ஒத்தை விசிறியே தேவலை.

மோகன்ஜி சொன்னது…

வாங்க நிலா ! ரசித்ததிற்கு நன்றி !

பைப்பிங் தையலை நான் எங்கே நோட்பண்ணினேங்க? அட ராமா.... அந்தக் கிழவர் பார்த்ததிற்கு எனக்கு பொல்லாப்பா ?!

//எதிரெதிரா வளைஞ்சு விறைச்சுகிட்டு நிக்கற ரெட்டை மரத்துக்கு ஒத்தை விசிறியே தேவலை//

கதையிலே அந்த மரங்களை நட்டபோது ஒரு குறியீடாய்த்தான் கொண்டு வந்தேன். சிறுகதையின் போக்குக்கு வேகம் சேர்க்க எண்ணி ஒரு கதாபாத்திரத்தை நீக்கினேன். மரத்தை வெட்ட மனமில்லாமல் அந்தப் பகுதியை விட்டு வைத்தேன் .
நீங்கள் குறிப்பிடும் 'ஒத்தை விசிறியே தேவலை' எனுமாறே சொல்லவந்தேன்.. அது கதையை வேறொரு திசைக்கு கொண்டு செலுத்தியிருக்கும்.....

இது உங்கள் கவனம் பெற்றது எனக்கு நிறைவாக இருக்கிறது...

நிலாமகள் சொன்னது…

//ஸ்வாந்த சுகாய..//

உங்க பதிவுகளுக்கு மணிமகுடம் 'சுதா'வின் விசாலமான ஞானப் பார்வை.
பதிவு எழுதி திருப்தியாயிருக்கும் எல்லோருக்குமாக அமைந்தது அவரது கருத்துரை.

மோகன்ஜி சொன்னது…

நிலா ! உண்மை.. அவர் கருத்துகள் பதிவை மேம்படுத்துகின்றன. தகுதியில்லையெனினும், அவருடைய உயர்ந்த பாராட்டுகளுக்கே மனசும் விழைகிறது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இன்றைய வலைச்சரத்தில் கோபாலகிருஷ்ணன் அவர்களால் தங்களது வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டதறிந்து மகிழ்கின்றேன். வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://www.ponnibuddha.blogspot.com/

பூந்தளிர் சொன்னது…

வாக்கிங் போவதில் என்ன ஒரு சவுகரியம் இல்லியா?