பக்கங்கள்

ஞாயிறு, நவம்பர் 29, 2015

புத்தினி


நடுநிசியில் நீங்கிச் சென்றான் சித்தார்த்தன்.  
சடுதியில் பிரிந்தே  யசோதரை இதயத்தை,
சுக்கலாய்ப் பொடித்து சுயம்தேட அகன்றான்.
பக்கலில் நல்மகவை பார்த்தபடி தவித்தாள்.

ஓரிரவில் குலைந்ததோர் வாழ்வுதனை  ஒதுக்காமல்,.
ஈரைந்து திங்கள்சுமந்த  மகவெண்ணி உயிர்தரித்தாள்.
உருவழிந்து ஊண்குறைத்து உறக்கம் துறந்தாள்.
கருபுகுந்தாள் தான்வகுத்த கூடொன்றின் கர்பத்துளே.

ஆசிகொண்ட நாளொன்றில் புத்தனும் மீண்டான்.
தூசிமூடிய பாதத்தையவள்  கண்டு உறைந்தாள்
ஞானம்கண்டு  சுக்கான தேகமதோ தகதகக்க,
மோனத்திலே சருகாய் ஆனவளோ கேட்டனளே!

‘உம்மையே  புத்தன்என்பரோ? புத்தனெனில் யாதாதல்?’
“இம்மையிலே ஞானம்கொண்டான்’’ என்றனனே ததாகதன்.
பல்லக்கு ஏறாதான் பாதம்பார்த்திருந்த அபலையவள்,
மெல்லவோர் மென்முறுவல் சிந்தியே மௌனமானாள்.

‘இருவருமே ஞானம் கண்டடைந்தோம்  ஐயன்மீர் !
இவ்வுலகை உமது மெய்யறிவோ உய்விக்கும் - ஆயின்
நானடைந்த ஞானமதோ பந்திக்கு வாராதே !
கானகத்து நிலவெனவே வீசியே ஓய்ந்திடுமே’

அளந்துமனம் சொல்லியே சூனியத்தில் லயித்தனள் !  
‘விளக்கும்படி’ புத்தனவன் வினவவும் முடித்தனளே :
“பெண்மையது முழுமைகாண வெளித்தேடல் வேண்டாவே.
திண்ணமாய் தன்னுள்ளே  பூரணம்தான் கொள்வாளே”


படம்: நன்றி கூகிள்


  


23 கருத்துகள்:


  1. /ஈரிரண்டு திங்கள்சுமந்த மகவெண்ணி உயிர்தரித்தாள்./ ஈரிரண்டா ஐயிரண்டா ஜி?

    பதிலளிநீக்கு
  2. நலம் தானே GMB சார்! திருத்தி விட்டேன். நன்றி ஜி!
    !

    பதிலளிநீக்கு
  3. இப்போதுதான் தங்கள் தளம் வரும் வாய்ப்பு கிடைத்தது. கவிதையை ரசித்தேன். புகைப்படம் அருமை. தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  4. யசோதரை சொல்வது நெத்தியடி! அருமை.

    பதிலளிநீக்கு
  5. நன்றி முனைவர் சார்! வந்த வண்ணம் இருங்கள்

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. ஶ்ரீராம் ! புத்தன் போதனைகள் மட்டுமல்ல... அவன் வாழ்க்கை பற்றிய செய்திகளும் கூர்ந்து அவதானிக்கத் தக்கது.

    'மனைவி சற்று ஏறுமாறாய் இருப்பாளேயானால் கூறாமல் சன்னியாசம் கொள்' என்றாள் ஔவை. துறவால் ஏறுமாறாகிப் போவது எப்போதும் மனைவியரின் வாழ்வல்லவா?
    யசோதரைக்கும் புத்தர் உபதேசம் செய்து கடைத்தேற்றினார் என்று அறியப் படுகிறது. அவளுக்கு எதற்கு உபதேசம் என்ற நோக்கு இது.

    பதிலளிநீக்கு
  8. சில முக நூல் கருத்துகள்:

    ரத்தினவேல்:

    புத்தினி - இருவருமே ஞானம் கண்டடைந்தோம் ஐயன்மீர் !
    இவ்வுலகை உமது மெய்யறிவோ உய்விக்கும் - ஆயின்
    நானடைந்த ஞானமதோ பந்திக்கு வாராதே !
    கானகத்து நிலவெனவே வீசியே ஓய்ந்திடுமே’ = அருமை சார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு
    மோகன் ஜி

    சுந்தர்ஜி:
    அபாரம். அபாரம். வெண்பால போட்டு அசத்தி இருக்கலாமே குரு?

    மோகன்ஜி:

    பத்து பதினைந்து நிமிடத்தில் எழுதினேன். வெண்பியிருக்கலாம் தான்.. பண்ணிடுவோம்!

    எனக்கு வந்த ஒரு ஆங்கில மெயில் கண்ட உந்துதலில் எழுதி வைத்தேன்..

    முத்துகனி வாசன்(எரிதழல்):

    அகத்தாள் அகத்தும
    புருஷன் போதியிலும்
    பெற்ற பூரணத்தில்
    ஒரு குறை...ஆசையை
    வெல்வது வெறியல்லவா
    வெறியில்லையெனில்
    வெளியேறியிருக்குமா
    அரண்மனை விட்டு
    அந்தப்புரம் விட்டு
    அணைத்தலை விட்டு
    அனைத்தை விட்டு
    அதன் மஞ்சத்தில்
    கிடக்கும் குஞ்சை விட்டு..


    மோகன்ஜி:
    ஆஹா... சபாஷ்!

    கீதா சாம்பசிவம்:

    மோகன் ஜி பள்ளிக்கூட நாட்களில் யசோதராவுக்காகக்கேட்ட கேள்விகள் அனைத்தும் நினைவில் வந்தன. அவை எனக்கு அதிகப்பிரசங்கி என்ற பெயர் வாங்கிக் கொடுத்தன. ஆனாலும் பல ஆண்டுகளாக இது ஓர் உறுத்தல் தான்! மௌன ராகங்கள் பாடும் இவர்களை யாருமே போற்றவில்லையே என நினைப்பேன். இன்று உங்கள் சிந்தனை ஒரு பாமாலையைச் சூட்டி அழகு பார்த்ததோடு அல்லாமல் யசோதரைக்கு மங்காப் புகழையும் தந்து விட்டது.

    மோகன்ஜி:

    மிக்க நன்றி அக்கா!

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதை சிந்திக்க வைத்த ரசனை.

    பதிலளிநீக்கு
  10. நன்றி செந்தில் குமார்

    பதிலளிநீக்கு
  11. பத்தினிகளில் பலரும் புத்தினிகள் தான்!

    துறந்து உலகில் ஊடாடித் திரும்பியவன் சுக்காக அதனினும் எடையற்று சருகானவளின் உள்ளிருப்பை வியந்தேற்றும் கவிவரிகள் கனமாகி கனப்படுத்தின.

    கானகத்து நிலவென்ற கனகச்சித உவமைக்கு ஒரு சபாஷ்! எங்கும் எதிலும் சமத்துவத்தை கடைபிடிக்க நிலவும் சூரியனும் இரவும் பகலும் நம்மைத் தூண்டியபடி.

    பதிலளிநீக்கு
  12. புத்தனெனில் யாதாதல்?’//

    புத்தனெனில் யாதாதல்?’

    சத்தத்தை நிறுத்தி,
    சித்தத்தை உள்ளடக்கி,
    நித்தியமனித்யம் பேதம் தெளிந்தவன்
    சிறுகூட்டில்
    சிதம்பரனை கண்டவன்
    உன்மத்தமானவன்
    உண்மை புரிந்தவன்

    தன்னைத் தொலைத்தவன்

    புத்தனோ !!

    சு தா

    பதிலளிநீக்கு
  13. யசோதரை பெற்ற ஞானம் கானகத்து நிலவே!அந்நிலவொளியை வெளிக்கொணர்ந்த கவிதை!

    பதிலளிநீக்கு
  14. நிலா!
    //பத்தினிகளில் பலரும் புத்தினிகள் தான்!//

    இந்தக் கவிதை சொல்வதே அதைத்தானோ? ரசனைக்கு நன்றி...

    //எங்கும் எதிலும் சமத்துவத்தை கடைபிடிக்க நிலவும் சூரியனும் இரவும் பகலும் நம்மைத் தூண்டியபடி.//

    சபாஷ் நிலா! கூர்ந்த பார்வையிது..

    பதிலளிநீக்கு
  15. வாங்க சு.தா!

    உங்கள் விளக்கம் அழகானது. புத்தனின் அஷ்டாங்க யோகம் எனும் வழிமுறை சாதனையாளனை புத்தானாக்குவது..

    1. ஸம்மா திட்டி - நல்ல காட்சிகள்
    2. ஸம்மா ஸங்கப்போ - நல்லெண்ணங்கள்
    3. ஸம்மா வாகா - நல்வாய்மை
    4. ஸம்மா கம்மந்தோ - நற்செய்கை
    5. ஸம்மா ஆஜீவோ - நல்வாழ்க்கை
    6. ஸம்மா வியாயாமோ - நன்முயற்சி
    7. ஸம்மா ஸதி - நன்முறையில் கடைப்பிடித்தல்
    8. ஸம்மா ஸமாதி - நல்ல தியான ஒழுக்கம் .

    புத்தநெறி பற்றி விரிவாய் விவாதிக்கும் ஒரு வாய்ப்பை எதிர்பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  16. சென்னைப் பித்தன் சார்! நலமா? யசோதரை புத்தினியல்லவா... in her own right....

    பதிலளிநீக்கு
  17. கரந்தையாரே... வருக... வாழ்த்துக்கு நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
  18. 1 லேந்து 8 வரைக்கும்
    நல்ல நல்ல நல அப்படின்னே சொல்லிகினே போய்க்கினே இருக்கீகளே !!

    நல்ல அப்படின்னா இன்னாயா...அத
    நல்ல சொல்லுய்யா..
    நாலு பேருக்கும் புரியும்படி
    நவிலய்யா

    திட்டி அப்படின்னா காட்சிகள் இல்லீங்கோ..
    பார்வை. அவுட்லுக். அப்ப்ரோச்
    சங்கப்போ அப்படின்னா கூடவே இருக்கற தோஸ்த் .
    வாகா அப்படின்னா வாய் ஒரு வாகனம் அது வழியா உதிர்க்கப்படுகின்ற
    வார்த்தைகள். அது வாய்மையா இருக்கணும். அது எக்ஸ் டெண்டெட் லாஜிக்.
    ஆஜீவோ அப்படின்னா புரந்ததுலேந்து நிதானமான வாழ்க்கை.
    வியாயாமோ அப்படின்னா காரியங்கள். கருமங்கள்.
    சதி . அப்படின்னா சத் விசயதில்லே ஈடுபாடு.
    சமாதி அப்படின்னா நிலைத்திருக்கும் ஒன்றிலே இணைந்திருக்கும் நேச்சர்.

    புத்தரோட எட்டும் பாலோ பண்ணற ஒவ்வொத்தனும்
    வள்ளல் பெருமான் ஆகிவிடுவாக..

    முடியல்லையே...

    நமக்கு படிக்கத்தான் முடியும்.
    பாலோ பண்றது சாத்தியமா ??

    //நானடைந்த ஞானமதோ பந்திக்கு வாராதே !//

    இருங்க..
    மழைதண்ணி வூட்டுக்குள்ளே கூரை வழியா கொட்டுது. வூட்டு குழாய் லே தண்ணி வல்லே. இன்னா செய்யறோம் ?
    இன்னான்னு பாத்துட்டு, இரண்டு சொம்பு மொண்டுகிட்டு
    வாரேன்.

    சு தா.

    பதிலளிநீக்கு
  19. ஞானப்பெண்ணின் வாதம் புரிஞ்சாப்புலயே இருக்குது.

    பதிலளிநீக்கு
  20. ஒண்ணு ஞானம் இன்னொண்ணு ஊனம்.

    பதிலளிநீக்கு

கருத்துரை இட்டுச் செல்லுங்களேன்..