வெண்ணை உருகுமுன் பெருகிவிட்ட பெண்ணை நதி
எண்ணற்ற செடிமரமென அள்ளிக்கொண்டு போகின்றது.
புயலும் மழையும் கடலூருக்குப் புதிதா என்ன ??
புரட்டிபோடப்பட்ட வாழ்க்கையை கக்கத்தில் ஏற்றியபடி,
உயிரும் உறவும் இருப்பதை தலைக்கணக்கு எண்ணி
புதிய தொடக்கத்துடன் போகும் என் மக்கள்.
கண்ணீரில் எங்களூர் ‘மல்லாட்டை’யை விதைப்போம்.
அதன் உவர்ப்பில் இனிக்கும்
எங்கள் கரும்பு.
நிவாரணம் என்றொரு நீர்க்கடன் சடங்கு
நிராதரவாய் உயிர்மீண்ட சடலங்களுக்கும் உண்டு.
பெண்ணைநதி சீறும்தோறும் மீண்டுவரும் அவன்முகம்.
ராமதாசு... என் பள்ளி சிநேகிதன்........
ஒரு புயலின்போது,
ஊரினிரு எல்லைகளாய் கோடிட்ட
கெடிலமும் பெண்ணையும் தழுவிக் கொண்டன.
தெப்பமாய் மிதந்த ஊர் சோகத்தில் தவிக்க,
பள்ளிவிடுமுறையைக் கொண்டாடித்திரிந்த பாலியம்.
கர்ணத்தோட்டம் சூழ்ந்த இடுப்பளவு நீரில் விளையாட
காற்றில்சரிந்த வாழைகளால் கட்டுமரம்
ராமதாசு தான் கட்டினான்.
பழக்கமில்லாத பனங்கிழங்கை சாப்பிடத் தந்தான்.
பெண்ணை பாலத்தின் அக்கரையின் அருகிருந்த மடுவைக்
காட்டித்தந்தவனும் அவன்தான்.
‘அதன் சுழலில் விழுந்தால்,
பிச்சாவரத்தில் தான் பொணம் கிடைக்கும்’ என்று அவன் சொன்னதை
நம்பியிருந்தேன் மறு கேள்வியின்றி.
ஓரிரு மாதங்களில் அந்த மடுவிலேயே அவன் மாண்டுபோனான்.
பள்ளிப் பிரார்த்தனையில்
பீட்டர் சாமியார் மௌனஅஞ்சலி செய்யச்சொன்ன கணம்'
சத்தமாய் அழுதேன்..
நொண்டிசார் விரல் அசைப்பில் வாய்பொத்திய அன்று மதியம் ஏதும் சாப்பிடவில்லை
நாங்கள்.
மனதில் உறைந்த துக்கம்.
படியாத அவன் முன்தலை முடி ,
அவன் சொல்லித் தந்த கெட்டவார்த்தைகள்.
‘அய்யிரே’ என்ற அழைப்பு.
பனங்கிழங்கின் மணம்.
மனசோரம் சிரித்தபடி தான் இருக்கிறான்.
பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடந்த போதெல்லாம்
மனக்கரங்கள் நீளும் அந்த மடுவைத் துழாவியபடி.
நினைவின் பாரம் தாங்கவொட்டாமல்
மீண்டும் அவனை மடுவிலேயே எறிகின்றேன்.
இன்றும் கடலூரை வெள்ளம் பதம் பார்க்கிறது.
மாநிலத்து நேய உள்ளங்கள்
உதவிக்கென்று விரைகின்றன
உணவுடனும் உடையுடனும்.
இதை யாரேனும் படிக்கக் கூடும்.
அந்தப் பாலம் கடப்பீராயின்
அந்த மடுவருகில்
ஒரு உணவுப் பொட்டலத்தைப் போடுங்கள்.
அங்கு தான் என் ராமதாசு இருக்கிறான்.
உணவு முடியாதெனில்...
ஒரு பனங்கிழங்கையேனும்.
பதிலளிநீக்குநீங்கள் அறிந்த ராமதாசுக்கு உங்கள் அஞ்சலி படித்தேன் இந்த பெரு மழை வெள்ளத்தில் நாம் அறியாத நூற்றுக்கணக்கானவர்பால் செல்கிறது என் மனம்
மனம் கணக்கிறது
பதிலளிநீக்குGMB சார் !உண்மை .. இழப்புகளும், சந்தோஷ் தருணங்களும் நம் பால்ய நினைவுகளுடன் மோதி மனதில் வகைப்படுத்தப்படுகிறது.
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் !
பதிலளிநீக்கு"உணவுப்பொட்டலத்தை போடுங்கள்
பதிலளிநீக்கு............................................................
,
இல்லையென்றால் பனங்கிழங்கை
போடுங்கள் "
மோகன் ஜி உமது அரவது ஆண்டு சோகத்தை எங்கள் நெஞ்சில் ஏற்றிவிட்டிர்களெ நியாயமா?
---காஸ்யபன் .
காஷ்யபன் சார்! மனிதர்களை மரணம் அள்ளிக் சென்று கொண்டுதான் இருக்கிறது,.நமக்கு நெருக்கமானவர்களையும் மற்றவரையும் ...
பதிலளிநீக்குசில மரணங்களை நம்மால் மறக்கமுடியவில்லை... இது இந்த பத்து வயது சிறுவனின் ஐம்பதாண்டு வேதனை ஐயா !
சிலரின், இதுபோன்ற எதிர்பாராத மரணங்களை நம் மனம் ஒருபோதும் ஏற்றுக்கொள்வது இல்லை.
பதிலளிநீக்குஉங்கள் ராமதாஸ் போலவே ..... என்னுடன் 1971-1977 பக்கத்து இருக்கையில் சேர்ந்து பணியாற்றியவரும், குடும்ப நண்பருமான M. கண்ணன் என்பவரின் திடீர் மறைவு கடந்த 40 ஆண்டுகளாக என்னை வாட்டி வதைத்துத்தான் வருகிறது.
உணர்ந்து எழுதியுள்ள இந்த ஆக்கம் மனதை கனக்க வைக்கிறது.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமனம் ஏற்றுக் கொள்ளாத இந்த மரணங்களே கதைகளாயும் கவிதைகளாயும் வெளிப்படுகின்றன.உதாசீனமும், அவமதிப்பும், இயலாமையும் கூட ஒரு வகையில் மரணங்களே! அவை கூடபுனைவுகளாய்...
பதிலளிநீக்குநன்றி வை. கோ சார்! உங்கள் கண்ணனையும் உலவ விடுங்களேன்...
மரணம் எப்போதும் நட்பின் இறுக்கத்தை நெஞ்சில் ஆணி போல ஏற்றிவிடுகின்றது.கவிதை நெஞ்சை நெருடுகின்றது.
பதிலளிநீக்குஉண்மை தனிமரம்... இளமையில் கொண்ட வறுமையும், பிரிவும், தனிமையும் நெஞ்சில் நீங்காத ரணம்...
பதிலளிநீக்குமனதை கனக்க வைத்த கவிதை. நண்பர் பிரிவு மறக்க முடியாத சோகம் தான்.
பதிலளிநீக்குஇப்போதும் இந்த மழை வெள்ளம் எத்தனை பேர் நட்பை பதம் பார்த்ததோ!
புயலும் மழையும் கடலூருக்குப் புதிதா என்ன ??
பதிலளிநீக்குபுரட்டிபோடப்பட்ட வாழ்க்கையை கக்கத்தில் ஏற்றியபடி,
உயிரும் உறவும் இருப்பதை தலைக்கணக்கு எண்ணி
புதிய தொடக்கத்துடன் போகும் என் மக்கள்.//
ஆமாமாம் ஜி. ஊர்ப் பாசம் ததும்பிடும் துல்லிய கணிப்பு!
வெள்ளம் வடிந்த பின்னொரு நாளேனும் பாலம் கடக்கையில் ராமதாசு நினைவெழ, துணையாய் உங்க நேசமும் வியாபிக்குமென் மனதுள்.
வெள்ளம் அமிழ்த்திய மக்கள்தம் வெந்துயர் நிமிண்டுகிறது காருண்யத்தை. நம்மை நலமாக இன்றுவரை வைத்திருக்கும் இறையருளுக்கு நன்றி சொல்லக் கூடாமல் தவிக்கிறது இவர்களுக்காய்.
கோமதி அரசு மேடம்! மரணம் ஒன்றே பேருண்மை. தன் இலக்கை என்றும் தவறவிடாத பட்சபாதமில்லாத இராஜாளி ! அதனை மௌனமாக ஏற்றுக்கொள்வதே அறிவின் செயல்பாடு. பாழும் மனதுதான் பரிதவிக்கும்...
பதிலளிநீக்குநன்றி நிலா ! அந்தப் பினாகினி(பெண்ணையாறு) நதிக்கரை தான் என் மூத்தோரும் உறவுகள் சிலருமாக உலகைநீத்த இறுதிப்புள்ளி. எனினும் உயிரோடு அதிலிறங்கி மீளாத ஒரு நண்பனின் நினைவு தரும் பாரம் அதிகம்.
பதிலளிநீக்குஇப்போதைய இழப்புகள் உள்ளம் பதற வைக்கிறது. கடவுள் எந்தக் கணக்கை சரி செய்கிறார் என்று புரியவில்லை.
வணக்கம்
பதிலளிநீக்குஒவ்வொரு வரிகளையும் படிக்கும் போது மனம் கனக்கிறது...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருக ரூபன் ! உங்கள் அன்புக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குநிவாரணம் என்றொரு நீர்க்கடன் சடங்கு//
பதிலளிநீக்குசெய்த பாவத்துக்கெல்லாம் பிராயச்சித்தமோ ?
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குசில பாரங்கள் சிறகிலானவை; சில சிறகுகள் இரும்பிலானவை.
பதிலளிநீக்குஎந்த வயசாக இருந்தாலும் நட்பின் பிரிவு மனதைக் கனக்கத்தான் வைக்கிறது. அருமையான அஞ்சலி ராமதாசுக்கு
பதிலளிநீக்குசு.தா! செய்ததிற்கு மட்டுமல்ல, செய்யப்போவதற்கும் சேர்த்துதானோ என்னவோ?
பதிலளிநீக்குஅப்பாதுரை சார் !
பதிலளிநீக்கு//சில பாரங்கள் சிறகிலானவை; சில சிறகுகள் இரும்பிலானவை.//
மிக ஆழமான வரிகள்...,
நன்றி கீதா மேடம்!
பதிலளிநீக்கு