பக்கங்கள்

வெள்ளி, டிசம்பர் 25, 2015

கல்



(சில நாட்களுக்கு முன்,ஏதோவோர் தெலுங்கு தொலைக்காட்சியைக் கடந்தபோது ,பாதியிலேஒரு கவிதைகேட்டேன். எழுதிய தெலுங்கு கவிஞன் யார் என அறியமுடியவில்லை. நினைவில் தொகுத்து தமிழாக்கித் தந்திருக்கிறேன். அந்தக் கேள்வியின் உக்கிரம் சற்று நேரம் தகித்தபடி இருந்தது.)

ஏதோ ஓர் ஊரிலிருந்து ஒரு மஹா சிற்பி வந்தான்.
வேறேதோ ஊரிலிருந்து பெரிய கல்லைத் தருவித்தான்.

ஆறடி அளந்து கல்லை அறுத்துக் கொண்டான்.
மிகுந்து விட்ட மூன்றடிக்கல்லை ஒதுக்கி விட்டான்.

ஆறடிக் கல்லோ விக்கிரகமாய் கோவில்கொண்டது.
மூன்றடிக் கல்லோ வண்ணான்துறை சேர்ந்தது.

நாற்றமெடுத்த மனங்களெல்லாம்
 தெய்வத்தின் முன்னே நின்றன....
நாற்றமெடுத்த துணிகளெல்லாம், அந்த
துவைக்கும் கல்லை சூழ்ந்தன.

வேண்டிவேண்டி உலர்ந்த தொண்டைகள்
தீர்த்தம் பட்டு நனைந்தன.
அழுக்குக்கறை கொண்ட துணிகளோ
தண்ணீரினில் முங்கின.

அர்த்தம் புரியா தோத்திரங்களில் 
பூஜாரியின் பக்திக்குரலோசை.
துவைக்கும் வண்ணான் குரலெழுப்பும் 
இஸ்ஸுஇஸ்ஸெனும் தப்பலொலி.

சடகோபம் பவித்திரமாய்
தலைகளை வருடியது.
பவித்திரம் வேண்டி துணிகளோ
படிக்கல்லை மோதின.

ஆயிற்று....

கோவில்விட்டு நீங்கிய மனங்கள் 
தத்தம் அழுக்கை 
             மீண்டும் வாரிச் சென்றன.
துவைக்கப்பட்ட துணிகளோ 
தூய்மை கொண்டு திரும்பின.

கோவில்கொண்ட தெய்வமா?துவைக்க சென்ற கல்லா?
யார் தெய்வம்? யாரே கல்??


46 கருத்துகள்:

  1. பொருள் பொதிந்த கவிதை கல்லா கடவுளா என்னும் கேள்விக்குப் பதில் சொல்ல முனைந்தால் மேலும் மேலும் சந்தேகங்கள் தொடரும் கல்லோகடவுளோ அதை நாம் பாவிக்கும் விதத்தில்தான் இருக்கிறதோ? கேள்வியாகவே முடிக்கிறேன் இதுவரை சரியாகப் பதில் தெரியவில்லை. அருமையான சொல்லாடல். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இதை எழுதிய கவிஞன் குரலில் நாத்திகம் ஒலிக்கவில்லை என்றே எண்ணுகிறேன்.. அவன் நினைப்பெல்லாம் அழுக்கை சுற்றியே என்று தோன்றுகிறது. நீங்கள் சொல்வதுபோல் பாவிக்கும் விதத்தில் தான் இருக்கிறது GMB சார்!

    பதிலளிநீக்கு
  3. முக நூலில் ரிஷபன் ஸார் சொல்லி இருப்பதுதான் எனக்கும் தோன்றியது!

    பதிலளிநீக்கு
  4. மிக அருமை! நம் மனதை நாமே வெளுத்துக்கொள்ளுகிற மாதிரி ஒரு அருமையான சிந்தனை!

    இங்கு மனிதன் உண்டாக்கிய கற்களில் ஒன்று மனிதன் வணங்கவும் இன்னொன்று மனிதன் அழுக்கைப்போக்கவும் பயன்படுகின்றன. புற அழுக்கைப்போக்க மனிதனால் முடிகிறது. ஆனால் அழுக்கு நிரம்பிய மனிதர்களின் மனதை வெளுக்க இறைவனாலும் முடியவில்லை!
    இதில் இறைவனின் பங்கு எங்கிருக்கிறது? சுயமாக உணர்தல் மட்டும் தானே மன அழுக்கு நீங்க வழி செய்யும்?

    பதிலளிநீக்கு

  5. தெலுங்கு கவிஞர் வேமன்னாவின் பாணியோ என்று தோன்றுகிறது. நீ தெய்வம் என்று நினப்பது "கல் "தான் " என்கிறர் கவிஞர் ---காஸ்யபன்..

    பதிலளிநீக்கு
  6. ஆகா
    அற்புதமான கவிதை ஐயா
    பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. ரிஷபன்(முகநூலில்) ;
    துணிகளும் மீண்டும் அழுக்காகும்.. மீண்டும் படித்துறை வரும்.

    பதிலளிநீக்கு
  8. ரிஷபன் சார்!
    கவிதை வருவதைக் காட்டிலும் போவதைப் பற்றியே பேசுகிறது போலும்! இதில் கவிஞன் குரலில் நாத்திகம் தெரியவில்லை... அவன் கவலை எல்லாம் அழுக்கைப் பற்றியே!

    பதிலளிநீக்கு
  9. ரிஷபன்( முகநூலில்):
    அந்த விவாதத்திற்குப் போகவில்லை. படித்ததும் அதன் தொடர்பான சிந்தனை. கவி ஒரு எல்லையோடு நிறுத்தியதை.. தொடர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  10. வாங்க ஶ்ரீராம் ! ரிஷபன் சாருடனான கருத்துகளை மேலே தந்திருக்கிறேன். மன அழுக்கு நீங்காத மனிதனே அல்லவா மீண்டும் துணியை அழுக்காக்கி அனுப்புகிறான்?

    பதிலளிநீக்கு
  11. மனோ மேடம்!

    துணி வெளுக்க மண்ணுமுண்டு.
    உடல் வெளுக்க சாம்பலுண்டு.
    மனம் வெளுக்க வழி சொல்லுவாய் கோதையே முத்துமாரியம்மா!

    பதிலளிநீக்கு
  12. காஸ்யபன் சார்! வேமன்னாவின் தெலுங்கு வழக்கு செறிவானது. இந்தக்கவிதை மொழி தற்போதைய சரளமொழியே ! வேமன்னாவோ ' நட்டகல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சார்த்தியே' வகையறா....

    பதிலளிநீக்கு
  13. ஒரிஜினல் எப்படி இருந்ததோ உங்கள் மொழி பெயர்ப்பில் தனித் தன்மை தெரிகிறது. மீண்டும் மீண்டும் அழுக்கோடு வந்தாலும் அழுக்கு நீக்கும் வல்லமையை சலவைக் கல் பெற்றிருக்கிறது.
    பொருள் பொதிந்த கதை

    பதிலளிநீக்கு
  14. நன்றி முரளிதரன் சார்! சேரும் இடம் தரும் மேன்மை தான் கவனத்திற்குள்ளாகிறது . வல்லமையும் உழைப்பும் மானிடர் கண்களுக்கு தெரியாது.

    பதிலளிநீக்கு
  15. நான் என் பதின்ம வயதில் பெரியார் நாட் குறிப்பு என்று ஒரு " டயரி " விற்பார்கள் .அதனைத்தான் பயன் படுத்துவேன்.அதில் வேமன்னாவின் மேற்கோள்கள் நிறைய இருக்கும். மூலத்தை படித்ததில்லை. ஆனாலும் என் மனதில் பதிந்த தெலுங்கு கவிஞர்களில் வேமன்னாவும் ஒருவர். அதேபோல தியாராஜரின் பாடல்களும்மிகவும் அர்த்தம்பொதிந்தவை. மோகன் ஜி நான் முரண்பாட்டின் மூட்டை. குழப்பத்தின் பொட்டணம் படித்துப் படித்தே கெட்டுப் போனவன் ---வாழ்த்துக்கள்---காஸ்யபன்..

    பதிலளிநீக்கு
  16. தெய்வம் என்றால் அது தெய்வம்
    கல் என்றால் அதுவெறும் கல்தான்

    உண்டென்றால் அது உண்டு..
    இல்லை என்றால் அது இல்லை.!

    பதிலளிநீக்கு

  17. “நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே;

    சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா!

    சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!

    நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!”

    பதிலளிநீக்கு
  18. காஷ்யபன் சார்! வேமன்னாவின் பாடல்கள் மிக செறிவானவை. நான் பல வருடங்களுக்கு முன் பல பாடல்களை தமிழாக்கம் செய்து நண்பர்களை அசத்தியதுண்டு.. அவையெல்லாம் எங்கே போயின என்றே தெரியவில்லை. அவற்றில் சிலவற்றை ஒரு கட்டுரை போலும் எழுதி மறைந்த எழுத்தாளர் விக்கிரமன் சார் அவர்களிடம் கொடுத்தேன்.மிக ரசித்தார். மீண்டும் முயன்று பார்க்க ஆவலாய்த்தான் இருக்கிறது. உங்கள் ஆசிகளுடன் அதைச் செய்வேன்.

    தியாகையர் கீர்த்தனங்கள் பக்திபாவத்தில் மிக நெகிழ்ச்சி கொண்டவை. ராகங்களில் இரண்டற ஒன்றிவிட்ட சாஹித்யங்கள். அர்த்தம் புரிந்து கேட்டால் நம்முள்ளே ஏதேதோ நடக்கும். தெலுங்கனாய் பிறந்ததின் பெரிய நன்மை இது எனக்கு.
    ஆனாலும் பெரும்பாலும் சாஹித்யம் தெரியாததினால் பாடகர்கள் வரிகளை த்வம்சம் செய்து இசையால் நிரவுவது மட்டும் பெரும்பாலும் நடக்கிறது. தெலுங்கனாய் பிறந்ததிற்கு இதுவே தண்டனை என்று எடுத்துக் கொள்வேன்.

    // மோகன் ஜி நான் முரண்பாட்டின் மூட்டை. குழப்பத்தின் பொட்டணம் படித்துப் படித்தே கெட்டுப் போனவன்// சார்! சார்! முரண்படுதல் வளர்ச்சியின் உந்துவிசை. ஒரு 'கலைமனது' அமைவதில் முரண்பாடு மூச்சாகிறது. எதிலும் ஒரு 'அழகும் ஈர்ப்பும்' பொதிந்திருத்தல் இயற்கையின் விதியல்லவா? கலைமனம் அதில் லயிக்கிறது. அந்த லயிப்பு, நாம் கொண்ட கொள்கைகளுடன் முரண்படலாம்... தர்க்க அறிவு அதை நிராகரிக்கலாம்... எனினும் அந்த லயிப்பு கலைமனத்தின் இயல்பு... அதுவே பலசமயம் ஒரு சுமையும் கூட... ஏனையோருக்கு அந்த குழப்பங்கள் இல்லை.

    நீங்கள் குழப்பத்தின் பொட்டணம் அல்ல.. முந்திரி, ஏலம், திராட்சை, பாதாம் ,அக்ரூட் என பல தினுசும் சேர்ந்த குவியல்.. அந்தக் கலவைதான் உங்கள் பலம்... எங்கள் வரம்...

    பதிலளிநீக்கு
  19. வாங்க இராஜேஸ்வரி மேடம்!

    //உண்டென்றால் அது உண்டு..
    இல்லை என்றால் அது இல்லை.!//

    என்ன தெளிவான பார்வை கவியரசருக்கு? பொருத்தமாய் உரைத்தீர்கள்.

    பதிலளிநீக்கு
  20. மேடம்!
    //நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!”//
    உள்ளிருப்பவனை தக்கவைத்துக் கொள்ள அல்லவா வெளியே இவ்வளவு பாடு?!

    பதிலளிநீக்கு
  21. வணக்கம்
    கருத்து நிறைந்த அற்புதமான வார்த்தைகள் கவிதையில் புரையோடியுள்ளது..தொகுத்து தந்தமைக்கு நன்றி ஐயா
    எனது பக்கம் வாருங்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:        

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  22. நன்றி ரூபன்! உங்கள் வலைக்கு அவசியம் வருகிறேன்

    பதிலளிநீக்கு
  23. அட்டகாசமான கவிதை!கவிஞருக்கு பாராட்டுக்கள்! மொழிபெயர்ப்பில் அசத்திவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  24. நன்றி தளிர் சுரேஷ் ! பாராட்டுக்கு நன்றி !!

    பதிலளிநீக்கு
  25. யார் தெய்வம்...?
    யாரோ கல்...?

    அட்டகாசமான கவிதை ஜி.
    அருமை.

    பதிலளிநீக்கு
  26. நன்றி குமார் ! நலம் தானே ?

    பதிலளிநீக்கு
  27. இப்பதிவைப் படித்ததும் ராமகிருஷ்ணபரமஹம்சர் கூறிய கதை நினைவிற்கு வந்தது. சற்றொப்ப கரு அதனையே ஒத்திருந்தது. அருமை.

    பதிலளிநீக்கு
  28. நன்றி முனைவர் சார் !

    பதிலளிநீக்கு
  29. // கோவில்கொண்ட தெய்வமா?துவைக்க சென்ற கல்லா?
    யார் தெய்வம்? யாரே கல்??//


    அழுக்கை மனதில் கொண்டு
    ஆண்டவன் முன்னே அழுதால்
    இடர்கள் நீங்குமோ ?

    அழுக்கை நீக்கிவிட்டாலோ
    ஆண்டவன் அவன்
    அந்தக் கல்லில் தான் என இல்லாது
    எந்தக் கல்லிலும் இருப்பது
    கல்லாத ஒருவனுக்கும் புரிந்தது
    காசி பஞ்சகம் சொன்னதே !!

    ஆக,
    ரஹீம் பாய் என நினைக்கிறேன்.
    माला तो कर मे फिरै जीब फिरै मुक माहि.
    मनुवा तो दस दिश फिरै यह तो सुमिरन नाहि.

    ஜப மாலை கையில் உருளும்
    பீஜ மந்த்ரம் நாவில் உருளும்
    மனமோ பத்து திசைகளிலும் செல்லும்
    இதுவோ தியானம் ?

    இது இயலுமா? தெரியவில்லை.

    ஆக,
    ஆலயம் சென்றவன்
    அகத்தை வெல்ல
    அழுக்கை உதறினால்
    கல்லைக் காணாது
    கடவுளைக் காண்பான்.

    சு தா.




    பதிலளிநீக்கு
  30. பாடல்
    படாத பாடு படுத்துகிறது.

    படிக்கப் படிக்க வெவ்வேறு கோணங்களில்
    புரிந்துகொள்ள ஒரு தூண்டுதல் இருக்கிறது.

    பாடலின் உட்கருத்து.
    அழுக்கு தான்
    ஐயமில்லை.

    அழுக்கை துணியில் இருந்து நீக்க,
    ஆற்று க்கரை கல்லுக்குச் செல்கையில்
    அவனுக்கு என்று இல்லை
    எவனுக்குமே
    எதற்காக செல்கிறோம்
    என்ன லட்சியம் என்ன எதிர்ப்பார்க்கிறோம்
    என்ன நடக்கும் என்பது
    நன்றாகவே தெரிகிறது.

    ஆலயத்துக்குச் செல்பவன் மனதில் என்ன இருக்கிறது?
    அவன் அங்கே செல்வது எதற்காக?
    அங்கே அவன் பெருமாளைப் பார்க்கச் செல்கிறானா?
    அவன் குடி கொண்ட கோவிலில் சிற்பங்களைப் பார்க்கச் சென்றானா?
    அவனை ஆராதிக்கும் வழி முறைகள் தெரிந்துகொள்ளவா?
    அவனை இவன் பார்க்கையிலே தெரிவது, உணர்வது
    அவன் உடுத்தி இருக்கும் பீதாம்பரம் பட்டு ஆடையா?
    அவன் மேலே சாத்தியிருக்கும் மலர் மாலைகளா?
    வைர வைடூரியன்களா?
    பக்கத்தில் அமர்ந்திருக்கும் பத்மாவதி தாயாரா?
    இல்லை, ஆராதனைகள் முடிந்தபின் தனக்குக் கிடைக்கும்
    பிரசாதங்களா ? பரிவட்டம் கட்டி தனக்கு ஒரு மாலை போடுவார்களே
    அதற்கான போட்டோவை சரியாக எடுக்கச் சொல்லவேண்டுமே என்ற
    கவலையா ?
    எத்தனை தட்டில் போட்டால் எந்த மரியாதை கிடைக்கும் என்ற கணிப்பா?

    மொத்தமாகச் சொல்லவேண்டும் என்றால்,
    எந்த ஒரு
    ஆலயத்துக் செல்கையில், நம்
    ஆழ்மனம் சலனப்படுக்கிறது.
    ஒருமிப்பு இல்லை.
    லட்சியம் இல்லை.
    ஆக எதுவும் நடக்கவில்லை.
    நடக்க வாய்ப்பும் இல்லை.

    தவறு அந்தக் கல் மேல் என்று சொல்வது
    தண்டனை . நமக்கு நாமே கொடுப்பது.

    ஆஸ்க். அண்ட் தை ஷல் பி கிவன். என்பர்.

    ஆலயம் செல்பவனுக்கு
    என்ன கேட்பது என்றே தெரியவில்லை.
    கேட்பது நியாயமானதா என்றும் தெளிவில்லை.

    கேள் . கொடுக்கப்படும் என்பர்.
    கேட்பது தர்மமாக இருந்தால்,
    கிடைக்கும்.
    அது கல்லா கடவுளா என்ற சர்ச்சை ஏன் ?

    உன் மனம் கல்லாக இல்லாது
    கரையும்படி இருந்தால்,
    கடவுளை உன்னிலே
    காண்.

    தத் துவம் அஸி .

    சு தா.

    பதிலளிநீக்கு
  31. //அர்த்தம் புரியா தோத்திரங்களில் ?//

    அந்தக் கல்லில் எனக்கொரு
    ஐயம் வந்தபின்னே

    அர்த்தம் புரியா தோத்திரங்களுக்கும்
    அர்த்தம் புரியும் தொத்திரங்களுக்கும்

    என்ன வித்தியாசம் ?

    தெரிந்தால் இன்னும் தொந்தரவு தான் மிஞ்சும்.



    சு தா.

    பதிலளிநீக்கு
  32. நல்ல கவிதை கடைசியில் கேட்ட கேள்வியும் நல்ல கேள்விதான். ஆனால் பதில் தான் வேறு வேறு மாதிரி வருகிறது. துணி துவைக்கும் கல் அழுக்கைப் போக்குவதாலேயே அதை தெய்வம் என்று சொல்லமுடியுமா? தெய்வம் நம் மனத்தின் அழுக்கை நீக்குவதில்லை என்பதால் அது தெய்வம் இல்லை என்று ஆகுமா? தவறு நம் மேல் அல்லவா?
    யோசிக்க யோசிக்க நிறைய சிந்தனைகள் எழுகின்றன. சிந்திக்க வைத்த கவிதை. அதை அழகு தமிழில் கொடுத்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. //தெய்வம் நம் மனத்தின் அழுக்கை நீக்குவதில்லை என்பதால் அது தெய்வம் இல்லை என்று ஆகுமா? தவறு நம் மேல் அல்லவா? //

    அழுக்கை நீக்குவது என்பது ஏதோ ஒரு க்ளோரின் டாப்லெட் போட்டு விட்டு போதும் என்பதல்ல. அது ஒன் டயம் அப்ப்ளிகேஷன் இல்லை. அது ஒரு ப்ராசஸ்.

    அதுக்குத்தான் ஆசார்யன் சொல்லி இருக்காப்போல...
    சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்.
    நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
    நிர்மோஹத்வே நிஸ் சல தத்வம்.
    நிஸ் சல தத்வே ஜீவன் முக்திஹி.

    நல்லாரை நாடவேண்டும் ..இது முதல் படி.
    நல்லார் யாரு அப்படின்னு தேடுவதிலேயே இந்த ஜன்மம் முடிந்துவிடும்.

    இன்னொரு கோணத்திலே ,
    அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்
    இழுக்காறு இயன்றது அறம் .

    அழுக்காறு என்றால் பொறாமை.
    அழுக்கு + ஆறு என்று சொல்லப்போனால்,
    மனம் ஓடிய வழி நடப்பதும் ஆகும்.

    மனசு எங்கெங்கயோ ஓடும்போது
    உடம்பு மட்டும் கோவில் விளாகத்தில் இருந்து,
    தெய்வம் என்னோட அழுக்கைப் போக்கல்லையே
    என்றால்
    நீங்க சொல்ற மாதிரி தான்

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  34. சுதா !
    //அகத்தை வெல்ல
    அழுக்கை உதறினால்
    கல்லைக் காணாது
    கடவுளைக் காண்பான்.//
    Your Prayer does not change the God, it just changes you எனும் கூற்று உண்டே !

    இந்தக் கவிஞன் கேள்வி கடவுள் முன்னே நிற்கும் மனிதனை சுயபரிசோதனை செய்யத் தூண்டினால் அதுவே இந்தக் கவிதையின் வெற்றி என்று கொள்ளலாம் .

    ரஹீம்பாயின் வரிகள் அருமை சு.தா. ்

    பதிலளிநீக்கு
  35. உங்கள் அருமையான இரண்டாவது கருத்துக்கு நமஸ்காரம்.

    மனிதமனம் இயல்பாகவே நினைவுகளை,கற்பிதத்தை ,பகற்கனவை பின்னிக் கொண்டே செல்கின்றது. (சித்தவ்ருத்தி நிரோதயா:) நமது யோகம்,தியானம் எல்லாமுமே செயலின்மையை மனதிற்கு பழக்கமுள்ளதாக ஆக்கவே முயல்கின்றன. இரண்டு சிந்தனைகளுக்கு நடுவிலும் கூட நிஸ்சிந்தனையாக மனம் நிற்க முயலவேண்டும். அது தரும் சாந்தி சொல்லுக்கடங்காதது. 'சும்மா இரு அற சொல் என்றலுமே' என்பார் அருணகிரி.

    கடவுளின் சன்னதியில் வேண்டிக் கொள்வது இருக்கட்டும்.... ஒரு கணமேனும் தன் சிந்தனைவலையிலிருந்து விடுபட்டு அலங்காரத்திலோ, மொழிபுரியாத மந்திரொலிகளின் ஒசைலயத்திலோ மனம் ஒடுங்குவதால் தான் கோவிலுக்கு சென்றால் மனது லேசாகிறது. ஒரு க்ஷணத்திற்கே இது பலன் எனில், அந்த ஒடுக்கம் பெருகப்பெருக, கல்லில் ஆவாஹனமான தெய்வம் கண்களுக்குள் குடிகொள்ளாதோ!

    பதிலளிநீக்கு
  36. //பவித்திரம் வேண்டி துணிகளோ
    படிக்கல்லை மோதின.//

    பொயடிக் எக்ச்டஸி.

    சு தா.

    பதிலளிநீக்கு
  37. சு.தா !புரியாதவை இரும்பு சங்கலியால் நம்மை கட்டிப் போட்டால், புரிந்தவை தங்கசங்கிலியால் ஆன தளை.
    அறிவும் தர்க்கமும் சிந்தனையை விரிக்கும். மனம் அலைபாய்ந்தபடி இருக்கும்.
    அலையடிக்கும் துறையிலே ஆழமிறாது.

    பதிலளிநீக்கு
  38. வாங்க ரஞ்சனி மேடம்!
    கேள்விகள்... அவை உருவாக்கும் தாக்கம்....
    எழும் பதில்கள்... அவையெழுப்பும் குழப்பம்...
    விடைகளை சீர்தூக்கி விளையும் தெளிவு....

    நல்ல கவிதை இதை உருவாக்கும்..
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம் !

    பதிலளிநீக்கு
  39. ரஞ்சனி மேடத்திற்கான உங்கள் விளக்கம் நன்று சு.தா !

    உங்கள் 'பொயடிகல் எக்ஸ்டசி' வாழ்த்துக்கு என் சொந்த நன்றி!!

    பதிலளிநீக்கு
  40. அருமை. விளக்கங்கள் அனைத்தையும் படித்துப் புரிந்து கொள்ள முயல்கிறேன். இரண்டுமே கல் தான். ஒன்று நாம் உடுத்தும் துணியின் அழுக்கை நீக்குகிறது. இன்னொன்று நம் மன அழுக்கை நீக்குவது. துணி மீண்டும் மீண்டும் அழுக்காகி மீண்டும் மீண்டும் அதே கல்லுக்கு வரும். ஆனால் மன அழுக்கோ? உடனே நீங்குமா? நீங்கினால் நாம் மீண்டும் இங்கே வர மாட்டோமா? இந்த மன அழுக்கை நாம் தான் நீக்க வேண்டும். இந்தக் கல்லில் இருக்கும் தெய்வம் நீக்காது. நாமாகத் தான் நம் மன அழுக்கைப் போக்கிக் கொள்ள வேண்டும். கல்லைத் தெய்வமாகவும் வணங்கலாம். கல்லாகவும் பார்க்கலாம். கல்லாகப் பார்ப்பவனிடம் மன அழுக்கு நீங்குமா? தெய்வமாகப் பார்ப்பவனிடம் மன அழுக்கு நீங்குமா? ஒருவன் நாத்திகன், ஒருவன் ஆத்திகன்! யாரிடம் மன அழுக்கு நீங்கும்? ஆத்திகனிடமா, நாத்திகனிடமா?

    பதிலளிநீக்கு
  41. கீதா மேடம்! வந்துட்டீங்களா? மிக அழகாக சொல்லி விட்டீர்கள்.
    //ஒருவன் ஆத்திகன்! யாரிடம் மன அழுக்கு நீங்கும்? ஆத்திகனிடமா, நாத்திகனிடமா?//
    மன அழுக்கு என்பது ஆத்திகநாத்திக வாதத்திற்கு அப்பாற்பட்டதல்லவா? எனக்குத் தெரிந்து மேன்மையும் உன்னதமுமான வாழ்க்கை வாழ்ந்து வரும் நாத்திக அன்பர் பலரை அறிவேன்.இறை நம்பிக்கையும் ஆன்மீகமும் 'மனத்துக்கண் மாசிலனாவத'ற்கான நெறியை அடைய வேண்டியே !

    பதிலளிநீக்கு
  42. மனத்துக்கண் மாசிலன் ஆனவனுக்குக் கல்லால் ஆன விக்ரஹமும் ஒன்று தான், துணி துவைக்கும் கல்லும் ஒன்று தான். எல்லாவற்றிலும் அவன் காண்பது இறையை மட்டுமே! வேறுபாடு தெரியாது! இந்தச் சிந்தனை எல்லாம் அவனிடம் இருக்காது. யார் தெய்வம், எது கல் என்பதெல்லாம் அவனுக்கு வேண்டாத ஒன்று.

    பதிலளிநீக்கு
  43. ஆஹா மேடம் !! அற்புதம்

    பதிலளிநீக்கு
  44. அருமையான கவிதை.சிந்திக்க வைக்கிறது.
    கல்லில் குடி கொண்டுள்ள இறைவனிடம் பக்தி கொண்டு இருப்பவன் படி படியாக தன் மன அழுக்குகளை போக்கி கொள்ளலாம் என்று நம்புகிறான்..

    கல்லில் அடித்து துவைத்தால் அழுக்கு போய் விடும் என்று நினைத்து கல்லில் அடித்து துவைப்பவர் நம்பிக்கையும் வீண் போகவில்லை.இவருக்கு செய்யும் தொழிலே தெய்வம்.

    சிற்பி கல்லில் தெய்வத்தை வடிக்க வேண்டாத பாகங்களை செதுக்கி எடுத்து விட்டபின் தான் தெய்வம் உருவாகிறது. அது போல் நம்மிடம் வேண்டாத குணங்களை இறைவன் அருளால் களைந்து விட்டால் நல்ல மனிதன் கிடைப்பான்.
    தினம் அழுக்குகளை அடித்து துவைத்து போக்குவது போல், நம்மிடம் வேண்டாத அழுக்குகளை அன்று அன்று இறைவன் துணையால் கழுவி துடைத்து விடலாம். அதற்கு மனம் ஒத்துழைக்க அவனைதான் அழைக்க வேண்டும். அவன் அருளால் அவன் தாள் வணங்கி.
    அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது.


    பதிலளிநீக்கு

கருத்துரை இட்டுச் செல்லுங்களேன்..