பக்கங்கள்

ஞாயிறு, மே 29, 2016

ஜெயமோகனின் காடு நாவல் - சில எண்ணங்கள்

2004ஆம் வருடம். கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு ரயிலில் பயணம். விடாத மழையில் விரைந்து கொண்டிருந்த ரயிலில்தான் முதன்முறையாக காடு நாவலைப் படித்தேன். கோவையில் ஆரம்பித்த நாவலை, நான் முடிக்கும் போது ஹைதராபாதை நெருங்கியிருந்தேன்.

அந்தப் பயணம் முழுவதும் நான் என் வசம் இல்லை. சமயம் வாய்க்கும் போதெல்லாம் காடுகளில் சுற்றிய எனக்கு, இந்த நாவல் ஒரு அந்தரங்கமான அனுபவமாக இருந்தது.கடந்த பன்னிரண்டு வருடங்களில், மேலும் மூன்று வாசிப்புகள் முடித்திருந்தேன்.


நீண்ட இடைவெளிக்குப் பின்பு,நான்கு நாட்களுக்கு முன், புதியதாய் வாசிப்பவன் போல் ஒரு பாவனை மேற்கொண்டு, ஐந்தாம் முறையாக வாசிக்கத் தொடங்கினேன். ஆயினும், எனக்குள் இருந்த கதையையும்,பதிந்த முகங்களையும், மனதுள் முகிழ்ந்திருந்த சம்பவங்களின் சூழல் காட்சிகளையும் மீறி ,அவற்றின் மேல் புதிதாய் ஒன்றை அழித்தெழுத இயலவில்லை. பழைய பாட்டையிலேயே வாசிப்பு நடந்து முடிந்தது.

                                             


என்றுமே நான் இந்தக்கதை மாந்தரின் மொழியை  பேசப் போவதில்லை. என்றும் இந்தக்கதையின் நாயகன் போல் உருகிஉருகி அலையப் போவதில்லை. இந்தக் கதையின் பாத்திரங்கள் போன்ற குணமும் ஆளுமையும் கொண்ட மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பும் இருக்கப் போவதில்லை. எனினும், இது எனக்கு நெருக்கமான கதை. காடும், விரவிய சங்கக்கவிதைச்சிதறல்களும், தொட்டுச் சென்ற தொன்மமும், காதலின் உன்மத்தமும் தான் இந்த நெருக்கத்திற்கு காரணங்களாக இருக்கலாம்.

அம்மா சுடச்சுடத்தரும் வெண்பொங்கல் நினைவுக்கு வருகிறது'.லேகியம் போல கிளறியிருக்கேன். சாப்பிடுடா தங்கம்' என்று அருகிருந்து பரிமாறும் அவள் குரலின் கனிவும் நினைவிலாடுகிறது.. குழைந்த அரிசிபருப்பின் கூடவே மிளகு,நறுக்கின இஞ்சித்துண்டு,முந்திரிப் பருப்பும் சேர்த்து நெய்யையும் உருக்கியூற்றினால் தான் அது வெண்பொங்கல். இந்தக் காடு நாவல் கூட வெண்பொங்கல் போன்ற ஒரு கலவை சுவைதான்.

காடே அரிசியாகவும், காதல் பருப்பாகவும்,மிளகு காமமாகவும்
இஞ்சித்துண்டுகள் கட்டற்ற பெருந்திணையாக காமத் திளைப்பாயும்,
முந்திரிப்பருப்பு சங்கப் பாடல்துணுக்குகளாகவும்
நெய்மணமோ மலையாத்தி நீலியாகவும் ஆன பொங்கல் காடு.
இதில் மிளகையும் இஞ்சியையும் ஒவ்வாதவர்கள் அவற்றை ஒதுக்கிவிட்டாலும் காடு வாசிப்பு சுவை குன்றாது.

மிளகின் விறுவிறுப்பும் இஞ்சியின் மணமும் வேகமும்தான் பொங்கலுக்கு சுவை சேர்க்கின்றன என்பதையும் உணராமலில்லை. அவையன்றி பொங்கல் பொங்கலாக இருந்திருக்காதுதான். இந்தக் கதைக்கு இன்றியமையாத நுட்பமான உள்சரடு,  அந்தக்காமத்தின் சதிராட்டமதான். சித்தர்பாடல்கள் போல,அருணகிரியின் பாடல்கள் போல வெளிப்படையாக சொல்லப் படுகிறது. அவர்களெல்லாமும் காமத்தை வெளிப்படையாக சொல்லிவிட்டு,அதை தவிர்க்கச் சொன்னார்கள் . ஆசிரியரும் அதை வெளிப்படையாகத்தான் சொல்லிச் செல்கிறார். காமத்தின் இன்றியமையாமையை , மானுடத்தின் ஆடையில் ஊவாமுள்ளாய் பொதிந்திருக்கும் அதன் உறுத்தலை, சொன்னபடி செல்கிறார்.

இந்தக்காட்டின் மறுபக்கம் தறிகெட்டலையும் காமம் தான். வசப்படாத காட்டின் மர்மங்களே போல், காமமும் ஒரு தைய்யமாக மானுடத்தை ஆட்டிவைக்கும் கதையை பந்திவைக்கிறார் ஆசிரியர். நகரங்களின் நிகழும் மேல்பூச்சுகளின்றி, சடுதியில் சதிராடுகிறது காமக்களி. விரசமா இந்த விவரணை என்று யோசித்துமுடிக்குமுன், காட்டுமழையின் வேகத்தோடு காமச்சாரல் பொழிந்து விடுகிறது. மழையை கேள்வி கேட்பது எங்ஙனம்? அதுவும் பொழிந்தபின்??

கதாநாயகன் கிரியின் உன்னதமான காதலின் தவிப்பையும், அந்தத் தவிப்பினால் உந்தப்பட்ட எண்ணங்களின் தறிகெட்ட ஓட்டத்தையும் கவிதையைப் பிழிந்து எழுதியிருக்கிறார் ஜெயமோகன். கதைசொல்லலினூடே, பிரமிக்கவைக்கும் உவமைகள் தரும் கிறக்கத்தில் அங்கங்கே நின்று மலைத்து, வாசிப்பைத் தொடர நேர்கிறது.மிகப் பொருத்தமாக, செறுகலாக அன்றி, சங்கப்பாடல் வரிகள் கதையில் இழையோடுகின்றன.

இதன் கதாபாத்திரங்கள் யாவரும் தன்னளவில் முழுமையானவர்களாகவும், கதாநாயகனுக்கு சிறப்பு அந்தஸ்து ஏதுமின்றியும் நாவல் நிர்தாட்சண்யமாக நீள்கிறது. காடே கதாநாயகனை மீறிய உயிர்ப்புடன் நம் புலன்களில் விரிகிறது. குட்டப்பன், ரேசாலம்,குரிசு, அய்யர்,கிரியின் மாமா,மாமி, அம்மா,வேணி, சினேகம்மை,ரெஜினாள்,ஆகியோரின் பாத்திரங்கள் கச்சிதமாக படைக்கப் பட்டிருக்கின்றன. தேவாங்கும்,மிளாவும், கீறக்காதனும், ஏன் அயனிமரம் கூட கதையின் ஓட்டத்திற்கு பங்காற்றியிருக்கின்றன.

காட்டின் உள்ளிட்டை, இவ்வளவு தெளிவாகவும் விவரமாகவும் சொன்ன பிரிதோர் ஆக்கம் தமிழில் வந்திருக்குமா என்பது சந்தேகமே. எனது பதினெட்டாம் வயதில் , சபரிமலையின் அடர்ந்த காட்டில் எனக்கோர் மறக்கவியலாத அனுபவம் ஏற்பட்டது. ஒரு குருஸ்வாமியின் துணையாக ஓர் புழக்கம் அற்றுப்போன ஒரு வழியில் காட்டினுள்ளே செல்ல நேர்ந்தது.அது எல்லோரும் செல்லும் பாதையல்ல . நான் துணை செல்ல ஒப்புக்கொண்டது ஆர்வக் கோளாறாலும் வயதுக் கோளாறாலும் எனச் சொல்லலாம். காட்டின் உள்ளிருந்து மூன்றுமணிநேரம் கழித்து வெளியே பொதுவழிக்கு மீண்ட   போது, வேறொரு மனிதனாய் வந்தேன். உடம்பே கண்ணாக, உடலே ஒரு இதயமாக, சாகசம் ஒடுங்கி, பயம் வடிந்து, பக்திகூட பயமோ என்றுணர்ந்து, நினைவழிந்து நிர்மலமாகி இருந்தேன். இந்தக் கதையில் காடு விவரிக்கப்படும் இடமெல்லாம் என் அனுபவம் விழித்துக் கொள்ளும். உணர்ந்த ஒருவனுக்குத்தான் அந்த எழுத்தின் உயரம் புரியும் போலும் . அது வெறும் விவரணை அன்று. ஆசிரியருடைய வித்வத்தின் வெளிப்பாடு!.

குறிஞ்சித் திணையின் அழகியல்,மண்மனம் போல் கதையெங்கும் மணந்து கிடக்கின்றது. கதாநாயகன் கிரியின் நனவும் கனவும் ஒன்றோடொன்று இழைந்து கிடப்பதை சிலந்திவலையின் இழைபின்னலாக கதைபின்னிச் செல்கிறது. கூர்ந்த வாசிப்பினுடே அதை நாம் உள்வாங்கும் போது, அந்த மயக்கே இந்தப் படைப்பிற்கு ஒரு அலங்காரமாகிறது .

காடழிவின் நிதர்சனத்தை கதை காட்டிச் செல்லும்போது, அடிவயிற்றுள் கல் விழுந்தது போன்ற துக்கம் நம்மைக் கவ்விக் கொள்கிறது. மனிதனின் கயமைக்கு விடிவே இல்லையா என்ற பதற்றம் பற்றித் கொள்கிறது.

கதையின் முதலிலேயே வரும் காஞ்சிரமரத்தின் கசப்பை, அதில் வாழ்ந்த வனநீலியின் நிழலசைவை வாசித்தபின், அது மனத்தின் ஆழத்தில் பரவிப் புரள்கிறது. கண்ணாடி கோளத்தின் கீழே காற்றில் படபடக்கும் காகிதம் போல் அது அங்கே அல்லாடியபடி இருக்கிறது. எந்தநேரமும் அந்தக் கோளத்தை உருட்டிவிட்டுவிட்டு காகிதம் பறந்து விடுமோ எனும் கிலி படர்கிறது.  கதைமுடியும் வரை கூடவரும் அந்த போதத்தின் பதைப்பு, எழுத்தாளனின் கையொப்பம்; முத்திரையுடன் இடப்பட்ட நேர்த்தி.

இந்தக் கதையின் மொழியும் வார்த்தைகளும் புத்தம்புதியவை. ஐந்தாவது வாசிப்பிலும் மங்காது சுடர்விடுகின்றன. ஜெயமோகனின் நீலம் படித்த உன்மத்த தருணங்களிலும்கூட, காடுஏனோ  நினைவுக்கு வந்தபடியே இருந்தது. இந்தக்  கதையின் பல வரிகள் எனக்கு பாடாந்திரம் ஆனவை எனதான் சொல்ல வேண்டும். ('காடாந்திரம்'ஆனவை என சொல்ல வேணுமோ?!)

இந்த நாவலை, ஜெயமோகன் தனக்கே தனக்காக எழுதிவைத்து, போனால் போகிறது என்று வாசகருக்காய் விட்டுக் கொடுத்து விட்டாரோ எனும்படியான கட்டற்ற அந்தரங்க எழுத்தாய் காடு மிளிர்கிறது.

அந்த மிளாவின் காலடித்தடங்கள் கல்வெர்ட்டின் சிமிட்டி சுவர்மாட்டில் மட்டுமா பதிந்திருக்கிறது? என் மனசில் கூடத்தான்.


காடு நாவல்
தமிழினி வெளியீடு
ரூ 190/-
 (படங்கள் நன்றியுடன்: கூகிள்)

வெள்ளி, மே 27, 2016

ஈஸ்வர அல்லா தேரே நாம்

'பெர்ரீங்கன்ன்'..... என்று தெருவில் கூவின குரல்,
சட்டமடித்த கண்ணாடிப் பெட்டியில் வளையல்களும் பிறவும்.
வந்திடும் நேரம் முன்மாலைப் பெரும்பாலும்.

"எங்கடா உன்னைக் காணல்லியே ரெண்டுவாரமாய்?"
அம்மாவின் கேள்விக்கு சிரிப்போடே அமர்ந்தபடி அவர்.

என்னொத்த பயலுகளுக்கு 'வளையல் மாமா'
தெருவாசிகளுக்கு 'வளவி யாவாரி'
அம்மாவுக்கு மட்டும் 'ரகு'.
அவளுடைய தம்பி நினைப்பு வந்தால் 'ராதாகிருஷ்ணா'.
எல்லாவருக்குமே அவர் பதில் புன்னகைதான்.

அழுக்கில்லாத வெள்ளைசட்டை, கையிலெப்போதும் கைக்குட்டை,
துடைத்துதுடைத்து சிவந்தமுகம், சினேகமான கண்கள், சிரிப்பு தேங்கின வாய்.
இதுதான் ரகுமாமா.

திண்ணையில் கடைவிரிக்கும் அவரின் சரக்கில்
எனக்கு ஆர்வமூட்ட எதுவும் இல்லை.
கண்ணாடி வளை,ஐடெக்ஸ் மை,குங்கும டப்பிகள்
கொண்டைவலை,பிச்சோடா ரிங், ,ஹேர்பின், ஊக்குப்பின்கள்
கலர்கலராய் ரிப்பன் சுருள்கள்,கில்ட் மூக்குத்திகள்,
காதணியென பெண்கள் சமாச்சாரம்.
குனேகா ஸெண்ட் குப்பியை திறக்காமல் முகர
எனக்கு மட்டும் அனுமதியுண்டு.

பெரும்பாலும்அம்மா வாங்கியது 
மெரூன்கலர்  குங்குமம், ரப்பர்ஹேர்ப்பின்கள்,
சந்தணமணத்துடன் ஒரு சின்னபவுடர் டப்பா.

சிலமுறை அக்கம்பக்க பெண்டிரும்  எங்கள்  திண்ணைவந்து வாங்குவதுண்டு.
அம்மாவின் தேர்வே அவர்களுக்காய் பெரும்பாலும்.

விலையை மெல்ல சங்கோஜமாய் சொல்வதுதான் அவர்  சம்பாஷனையில் அதிகம்.
பேரங்கள் இருந்ததில்லை. குறைத்துக் கேட்டபோதும் கோணாது கொடுக்கும் குணம்.
அப்போதெல்லாம் ...
'நீ கேட்பதில் நியாயம் உண்டாடி?' என்று பேரம் கேட்டவளையும்,
'எப்படிடா பிழைக்கப் போறே?'என்று ரகுமாமாவையும் அம்மா திட்டுவதுண்டு.
விழாக்கால தின்பண்டங்கள் அதிகமாகவே அவரிடம் தந்தனுப்புவாள்.
உப்புமா காபி உபசாரமும் ஓரொருமுறை நடப்பதுண்டு.

எங்கோ வட இந்திய மூலையிலிருந்து வந்த என் ராதாமாமாவை
ஒருமுறை அவர் வந்தபோது அறிமுகம் செய்துவைத்தாள்.
இருவரையும் பார்த்தபோது இரட்டையர் போல் தோன்றியது.
சிரிப்பில் தான் வித்தியாசம்.

ஒரு கோடைவிடுமுறையில் நண்பன் மைதீன் வீடு சென்றேன்.
உப்பலவாடித் தெருவில் 'பெர்ரீங்கன்ன்' என்றொலித்தது.
'பாயைக் கூப்பிடு' என்றாள் மைதீனின் அம்மா. 
உள்ளறையிலிருந்த என்னை இருக்கச்சொல்லி மைதீன் வீதிக்கு ஓடினான்.

வாசலுக்கு வந்த ரகுமாமாவை உள்ளறை ஜன்னல்வழியே பார்த்தேன்.
மைதீனம்மா கேட்டது இல்லாததால், 'நல்லது'என்றபடி வீதியிறங்கினார்.

'அவரை ஏண்டா பாய் என்கிறே? ரகுமாமாடா அவர்!'

மைதீன் சிரித்தான், "லூசு.. ரகுமான்டா அவருபேரு. நாகூரு அவங்க ஊரு"

மைதீன்வீட்டுக் கேரம்போர்டில் கையளைந்தாலும்,
ரகுமாமா எப்படி ரகுமான் ஆனார் என்று மனது அளைந்தபடி கிடந்தது.

வீடு திரும்பும்போது  விடைதுலங்கியது.
அம்மா அவரை வினவியிருக்க வேண்டும் "உன் பேரென்னப்பா?"
"ரகுமான்"
'ரகும்மா' என்று அம்மா அதைக் கேட்டிருக்க வேண்டும்.

மாலை அப்பாவுடன் பெரியகோவில் போனபோது அவருக்கு சொன்னேன்.
"எனக்குத் தெரியுமே ரகுமானை " என்றார்.
"அம்மாவுக்கு சொன்னீங்களாப்பா?"
"தெரிந்ததையெல்லாம் சொல்லணும்னு இல்லடா" என்று சிரித்தார்.

"அம்மாவுக்கு தெரிந்திருந்தாலும் ராதான்னோ ரகுன்னோ கூப்பிட்டுத்தானிருப்பா.
உப்புமா கொடுத்துதானிருப்பா" என்றேன்.
அம்மாவை எனக்குத் தெரியும். 
என்னைவிட அவருக்குத் தெரியும்.

இந்தமுறை என் பதில் கேட்டு அப்பா சிரிக்கவில்லை.
என்தலை கோதியபடி கண் துடைத்துக் கொண்டார்
.
கண்ணில் விபூதி விழுந்திருக்கும்.

வெள்ளி, மே 20, 2016

ஷெல்லியின் காதல் தத்துவம்



ஷெல்லியின் கவிதைகள் காலம் கடந்து நிற்கும் இலக்கியக் கானகம்.அதை,கானகம் என்று தான் குறிப்பிட வேண்டும். அவன் ஆக்கங்கள்,சீர்த்திருத்தி அமைக்கப்பட்ட பூங்காவனம் அல்ல. தருக்கள் மண்டி செழித்த காடு. உள்ளே புகுந்துவிட்ட மனம் வெளியேறுவது அத்தனை சுலபமன்று. அந்த வனத்தின் அழகிலே, அதன் வளத்தின் வகைமையிலே ஒன்றி அலைவது ஒரு சுகம்.


தமிழ்க்கவிதை புனைவது வசமான இளமையில், ஷெல்லியின் பல கவிதைவரிகளை மொழியாக்கம் செய்ததுண்டு. என் ஆதர்சக் கவிஞன் கீட்ஸ் தான் என்றாலும், தமிழ்ப்பாட்டன் பாரதியோ, ஷெல்லியை பரிந்துரை செய்திருந்தான். ஷெல்லிதாசன் என தன்னை பாரதி அழைத்துக் கொண்டான்.

காதல் தத்துவம் (love philosophy) என்ற ஷெல்லியின் கவிதை என் மொழிபெயர்ப்பில் இதோ அன்பர்களே! கீழே ஆங்கிலக் கவிதையையும் தந்திருக்கிறேன்.  

காதல் தத்துவம்

ஆற்றிடை கலக்கும்பல  ஊற்று
   கடலேறிக் கலந்திடும் ஆறு.
ஏற்றமிகு விண்ணகத்துக் காற்று
  கலக்குமே  இன்னுணர் வோடு.
ஒற்றையெனப் புவியிலொன்று ஏது?
   படைப்பெலாம் இறைநியதி யோடு
பற்றியோர் உணர்வொன்றிய போது
   நாமிருவர்  கலக்கத்தடை யேது?

மலைமுகடுகள் விண்ணையிடும் முத்தம்
அலைதழுவிடும் ஒன்றையொன்று நித்தம்.
எந்தமலர் இணைமலரை தள்ளிவைக்கும்?
சொந்தமிலா  பதரென்றதை ஊரொதுக்கும்.

கதிரொளி நிலம்தன்னை அணைத்திருக்கும்
மதியொளி அலைகடல்மேல் இதழ்பதிக்கும்.
இவ்வினிய  இணைகளெல்லாம் பயனிழக்கும்
கவ்வியிதழ் முத்தமொன்றுநீ தரும்வரைக்கும்


Love’s Philosophy

The fountains mingle with the river

And the rivers with the ocean,

The winds of heaven mix for ever

With a sweet emotion;

Nothing in the world is single;

All things by a law divine

In one spirit meet and mingle.

Why not I with thine?—



See the mountains kiss high heaven

And the waves clasp one another;

No sister-flower would be forgiven

If it disdained its brother;

And the sunlight clasps the earth

And the moonbeams kiss the sea:

What is all this sweet work worth

If thou kiss not me?


                                                                          (படம்: நன்றி கூகிள்,விக்கிபீடியா )







வெள்ளி, மே 13, 2016

ராஜா ரவிவர்மா



ரவிவர்மன் எழுதாத கலையோ?' என்று ஜேசுதாஸ் நேற்று ராத்திரி ஐபோனில் கொஞ்சிக் கொண்டிருக்க, நானறிந்த ரவிவர்மா சித்திரங்களை நினைவின் ஆழங்களில்தேடி துழாவியபடியே தூங்கிப்போனேன். விடிந்தும் கூட, ஜேசுதாஸின் சிணுங்கலும் ரவிவர்மாவின் நினைவும் விடவில்லை.

                                                   


ராஜா ரவி வர்மாவின் சித்திரங்கள் எனக்கு மழலை தெளியுமுன்னே பரிச்சயமாகி இருந்தது. தாத்தாவின் பூஜையறையில் கணபதிக்கு இடமும் வலமுமாக இருந்த லட்சுமியும ஸரஸ்வதியும் ரவிவர்மனின் கைவண்ணம். யாகுந்தேந்து என்று இன்றும்கூட கைதொழும்போது அந்த மலையாளத்திச்சி தான் வாணியாக மனதில் நிழலாடுவாள். பெரியகூடம் நெடுகிலும் வரிசைகட்டியிருந்த படங்களில் பலவும் ரவிவர்மன் எழுதின கலைதான்.
                               
                                      
மயிலமர்ந்த ஆறுமுக சுப்ரமணியரின் இருபுறமும், அவர் தொடைகளில் அபத்திரமாய் உட்கார்ந்திருந்த வள்ளிதேவானையர் விழுந்து விடுவார்களோ என்று விசனப்பட்டிருக்கிறேன். ஆகாயத்திலிருந்து விழும் கங்கையை தலையில் ஏற்கத் தயாராக,இடுப்பில் இருகையூன்றி புலித்தோலுடுத்து, தலைச்சடை விரித்தபடி, மேலே பார்க்கும் சிவன் ஞாபகம் வருகிறது. அவருடைய நான்கு கரங்களில் இருகரங்களால் தன் சூலாயுதத்தை தனக்குபின்னால் பிடித்திருப்பார். அந்த படத்தில் ஒரு ரிஷி சிவனை பார்த்தபடி இருப்பார். சிவனுடைய காளையின் முதுகில் கையூன்றியபடி சிவப்பு சேலையில் பார்வதி. என் பள்ளித்தோழன் கிருஷ்ணமூர்த்தியின் அம்மா ஜாடையுடன் மார்த்துவ மாமிபோல் விசனத்துடன் பார்த்திருப்பாள். நிறம் பழுத்த படம். சமையற்கட்டு வாசலுக்குமுன் முண்டக்கட்டையாய் குழந்தை கிருஷ்ணன் யசோதைமுன் நின்றிருப்பார். பார்க்கும் போதெல்லாம் சிரிப்பு வரும். இப்படியா டிங்காவைக் காட்டிக் கொண்டு நிற்பான் இந்தக் கிருஷ்ண படவா?!

நினைவு தான் எவ்வளவு தெளிவாக இருக்கிறது? மீண்டும் மனசெல்லாம் நாங்கள் குடியிருந்த அந்த நாயுடு வீட்டுக்கூடம்தனில் படர்ந்திருக்கிறது. அந்தப்படங்களின் வரிசை, நடுவேயிருந்த இரண்டு முக்கோண மாடங்கள். ஒன்றில் மகாபெரியவர் படம்.ஒன்றில் சந்திரப்பிரபை போன்ற விபூதி சம்புடம்.... அதை 'விபூதி போட்' என்று அழைக்கும் தம்பி.... அடடா ! பதிவு ரவிவர்மா பற்றி அல்லவா?

ஓவியத்தில் ரசனை ஏற்பட்டு பின்னாளில் தேடித்தேடி சித்திரங்களில் மூழ்கிக் கிடந்த நாட்கள்.ஐரோப்பிய ஓவியங்களின் பரிச்சயம் ; சில ஓவியப் பித்தர்களின் நட்பு இவையெல்லாம் சித்திரங்களை பார்க்கும் கண்ணோட்டத்தையே மாற்றி அமைத்தன. வண்ணங்களின் கலவை, சித்தரிக்கப்படும் உடலின் பரிமாணங்கள், ஆகியவை ஒரு ஓவியத்தின் கலைநயத்தை தீர்மானிக்கின்றன. இந்திய ஓவியர்களில், மேனாட்டு சைத்தரீக முறைமையை,நம் கலாச்சார பண்டாட்டிற்கொப்ப பயன்படுத்தி தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் ராஜாரவிவர்மா. வரைந்த காட்சியும் உருவங்களும் தட்டையாக ஒற்றைப் பரிமாணத்தில் தோன்றும் நமது ஓவிய மரபில், அவரது முப்பரிமாண ஐரோப்பிய பாணி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. கடவுளரின் உருவங்களையும் புராணக் காட்சிகளையும் வரைந்து தள்ளினார். அவற்றின் வணிக சாத்தியம் உணர்ந்து அவற்றை அச்சிட்டு விற்பனை செய்யும் ஏற்பாடுகள் வெற்றி கண்டன. கடந்த நூற்றாண்டு ஹிந்துக் குடும்பங்களில்,ரவிவர்மாவின் அச்சிடப்பட்ட கடவுளர் படங்கள் இல்லாத வீடே இருக்காது என்று ஆனது.

ராஜாரவிவர்மா 1848ல் கிளிமானூர் அரசகுடும்பத்தில் பிறந்தார். திருவனந்தபுரம் அரசவம்சத்துடன் தொடர்புள்ள குடும்பம் அவருடையது. கோயில் தம்புரான் என்றழைக்கப்பட்ட அவர்கள் திருவிதாங்கூர் ராஜவம்சத்துடன் திருமணத் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ளும் உரிமை பெற்றது. 'மறுமக்கத்தாயம்' எனும் தாய்வழி மரபுப்படி மாமன் ராஜராஜவர்மனின் ராஜா பட்டம் இவரை அடைந்தது. திருவனந்தபுரம் அரண்மனையில் ஓவியம் கற்றார். தஞ்சை ஓவியப்பாணியையும் முறையாகக் கற்றார். டச்சு ஓவிய அறிமுகமும், தைல ஓவியமுறையும்(oil painting) இவருக்கு அறிமுகமாகின. ரவிவர்மாவின் இளைய சகோதரர் ராஜராஜவர்மாவும் அவருடன் ஓவியக்கலையில் ஈடுபட்டார். ராஜா தீன்தயாள் என்ற புகழ்பெற்ற ஹைதராபாத் புகைப்படக்கலைஞருடைய நட்பும் பல காலம் நீடித்தது.

திருவனந்தபுரம் மஹாராஜா ஆயில்யம் திருநாள் ஆதரவுடன் இவரது ஓவியக்கலை பெயர்பெற்றது. பல சர்வதேச கண்காட்சிகளில் அவரது ஓவியங்கள் பங்குபெற்றன. பதக்கங்களை அள்ளின. விவேகானந்தர் பங்கேற்ற உலக மதங்களின் மகாசபையில் காட்சிப்படுத்த இவரின் சில ஓவியங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. . பல ராஜ வம்சத்தினர் மற்றும் பிரபுக்களை சித்திரமாய் தீட்டி பாராட்டுகள் பெற்றார்.

மைசூர் அரண்மனை,ஹைதராபாத் சலார் ஜங்க் மியூசியம் ,மும்பை ஆர்ட் சொஸைட்டி,சென்னை எழும்பூர் மியூசியம் ,புதுக்கோட்டை மியூசியம் ,பதேசிங்க் மஹாராஜா மியூசியம் பரோடா,கல்கத்தா விக்டோரியா மெமோரியல் ,தில்லி ரயில்வே மியூசியம், திருவனந்தபுரம் சித்ரா ஆர்ட் கேலரி மற்றும் பல தனியார் சேகரிப்புகளில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காணக் கிடைக்கின்றன. இணையப் படங்களிலும், யூடியூப் தொகுப்புப் படங்களிலும் ரவிவர்மா நீக்கமற நிறைந்திருக்கிறார்.

ஐரோப்பிய நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை அவருக்கு நிராசையாகவே போயிற்று. கடல்தாண்டி பயணம் மேற்கொண்டால் அந்த நாட்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய சமூக நிராகரிப்புகளும், பயணம் போய் திரும்பிய பின்,கோவில்களுக்குள் நுழைய விதிக்கப்படும் தடைகளும் அவரைப் பின்வாங்கச் செய்தது.

பாரதத்தின் பல பிரதேசங்களுக்கும் பயணம் செய்தபடி இருந்தார். அந்நாளைய சமஸ்தானங்களுக்கு சென்று மன்னர்களையும் ராணிகளையும் பட்டத்து இளவல்களையும், மற்றும் ஆங்கிலேய பிரபுக்களையுமே வரைந்து தள்ளியிருக்கிறார். மிக சொற்ப நேர அளவே ஓவியம் தீட்ட எடுத்துக் கொள்வாராம்.



ஏறத்தாழ இரண்டாயிரம் ஓவியங்கள் வரை அவர் வரைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.மகாபாரதம், இராமயணக் காட்சிகள் , மற்றும் புராணகதைமாந்தர்கள் அவருடைய ஓவியங்களின் பரிமளித்தன. சாகுந்தலம் பற்றிய சில ஓவியங்கள், தூரிகை வனைந்த கவிதைகளாயின. அவர் வரைந்த பெண்களின் கண்களிலேயே சொல்ல வந்த உணர்ச்சியை விதைத்து வைத்தார். கடவுளரின் தனி ஓவியங்கள் அல்லாது, ரவிவர்மாவின் பிரபலமான ஓவியங்களில் சில:
ஶ்ரீகிருஷ்ணன் ராயபாரம்(தூது);
மதுக்குடுவை ஏந்திச் செல்லும் திரௌபதி;
காலில் குத்திய முள்ளை நீக்கும் சகுந்தலை; சந்தனுவும் மத்ச்யகந்தியும்
ருக்மாங்கதனும் மோகினியும்;
ஜூடித்;ஶ்ரீராமர் வருணபகவானை மிரட்டும் காட்சி ;
அன்னப்பறவை தூது;
விஸ்வாமித்திர்ர் மேனகையை ஏற்கமறுத்தல்;
நிலவொளியில் நங்கை;ஜடாயுவின் சிறகுகளை இராவணன் வெட்டும் காட்சி;
ஊஞ்சலாடும் மோகினி;
தந்தைக்கு இந்திரஜித்தின் காணிக்கை முதலியன.

எனினும் ஸ்வாமி விவேகானந்தருக்கு ரவிவர்மாவின் ஓவியங்களை பற்றி ஏதும் நல்ல அபிப்ராயம் இல்லை . அந்த ஓவியங்கள், இந்திய கலாசாரத்தின் வெளிப்பாடற்றவை என்ற கருத்தை ஸ்வாமிஜி சொல்லியிருந்தார். விநோதமாக, மகான் அரவிந்தரும் அதே போல மாறுபட்ட கருத்தைத்தான் ரவிவர்மாவின் கலைமீது வெளிப்படுத்தினார்.இந்திய ரசனையையும்,அதன் கலைப்பண்பாட்டையும் தரம்தாழ்த்தியவர் என்று குற்றம் சுமத்தினார்.

மனிதர்களை வரைந்த சித்திரங்களில், அந்த இடத்தின் சூழல், அணிந்த நகைகள், ஆடைகள், தரை,சுவர் என எல்லாவற்றிலும் விசேஷ கவனம் செலுத்தி நுணுக்கமாய் வரைந்தார். வரையப் பட்ட மனிதரின் முகம் மற்றும் உருவ அமைப்பிலும் தென்படக்கூடிய மாறுபாடுகளை சமன்செய்யும் உத்திபோலும்.

ஜனவரி 1905ல் சகோதரர் ராஜராஜ வர்மாவின் மறைவு ரவிவர்மாவை மிகவும் பாதித்தது . தன்னுடைய கலையிலும் பயணங்களிலும் உற்றதுணையாக நின்ற தம்பியின் மரணம் அவரை நிலைகுலையச் செய்துவிட்டது.

ரவிவர்மா சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். அந்தகாலத்தில் மதுமேகத்திற்கு சரியான மருத்துவ தீர்வுகள் இல்லாததாலும், இடைவிடாத பயணங்களாலும் சரியான உணவுமுறைகளை அவர் கைகொள்ளவில்லை. குற்றாலம் அருவியின் மூலிகை நீரும் காற்றும் அவர் நோயைத் தீர்க்கும் என நம்பினார். தமது கடைசிகாலத்தை அங்கேயே கழிக்க எண்ணி, குற்றாலத்துக்கு அருகேயுள்ள இலஞ்சியில் நிலமும் வாங்கினார். சர்க்கரை நோய் முற்றி அவர் முதுகில் ராஜப் பிளவை எனும் பல்வாய்ப்பிளவை உண்டாகி அல்லலுற்றார். அக்டாபர் 1906ல் அவர்தூரிகை ஓய்ந்தது.

எந்தக் கலைஞனுக்கும், அவன் மேற்கொள்ளும் கலைவடிவத்திற்கும், நோக்கத்திற்கும் ஒப்ப, போற்றுதலும் எதிர்மறை விமர்சனமும் உண்டாகும். ரவிவர்மாவும் கடும் விமரிசனத்திக்கு ஆளானவர். மேற்கத்திய பாணியைக் கைக்கொண்டு நமது பாரம்பரிய சித்திரக்கலையை சிதைத்துவிட்டார் என்றும், அரண்மனைக் கலைஞன் என்றும், சராசரிகளின் ஓவியன் என்றும் விமரிசனத்திற்கு உள்ளானார். எனினும் ஓவியக்கலையை சாதாரண மக்களும் ரசிக்கும் விதத்தில் அதை வெகுஜனக் கலையாக பரப்பினார் என்பதில் ஐயமில்லை. கடந்த நூறாண்டுகளில் வந்த தலைமுறைகள், இரவிவர்மாவின் ஓவியங்களை ரசிக்காமல் இருந்திருக்க முடியாது. சித்திரக்கலை ரசனையின் பாலபாடம் ரவிவர்மாவிலிருந்தே தொடங்குவதாய்க் கொள்ளலாம்.

                                                            
                                                                         (படங்கள்: நன்றியுடன் கூகிள், விக்கி)



வியாழன், மே 05, 2016

பெரிய பாட்டன் சங்கதி

மெல்ல ஊர்ந்திடும் கடிகார முட்கள் 
வேகமாய் கிழிபடும் தினசரித்தாள்.

சிரிக்கும் தொறும் கண்ணீர்.
அழுகையே போலும் புன்னகை

சாபம் போல்வரும் ஆசி
சரசம் போலோ கோபம்

உணர்வதோ யானைப்பசி
உண்பதோ குழந்தைக் கொறிப்பு

கனவு காண்பதாய் விழிப்பு
நினைவு அழியா உறக்கம்

தாவிஅலையும் ஞாபகங்கள்
தவிக்கவிடும் பொல்லா மறதி

கூட்டத்தில் உணர்வதோ தனிமை
தனிமையில் நினைவுகளின் சந்தடி

உறவுகளுடன் ஓயாத பேச்சு 
பேச்சாலே விலகும் உறவு

சொல்லத் தடுமாறும் நாவு
சொல்லியே வருமோ சாவு