செவ்வாய், அக்டோபர் 04, 2011

தொழுவத்து மயில் 3


இதுவரை (1)   (2)

வனரோஜா அந்த காலனியிலேயே முக்கியத்துவம் வாய்ந்த மனுஷியாய்   
மாறிபோனாள்.  கல்யாண ஜவுளி எடுக்கவும், நகை டிசைன் தேர்வு செய்யவும் வனரோஜாதான் உடன் செல்ல வேண்டும். ஐயப்ப பூஜைக்கு கோலம் இடவும், கிருஸ்‌மஸ் கோரோல் பயிற்றுவிக்கவும், வனரோஜா தான் முன் நின்றாள். அவ்வளவு ஏன்? கீரைக்காரி முதலில் வனரோஜா கைதொட்டு கீரை வாங்கிய பின் தான் 'கீர..கீரெய்' என்று குரலெடுத்து விற்கத் தொடங்குவாள்.

வனரோஜாவை தெருப்பிள்ளைகள் அக்கா அக்கா என்று சுற்றிவந்தன. அவர்களுக்கு கதைகள் சொல்வது, பாட்டுபோட்டி பேச்சுபோட்டிகளுக்கு அவர்களைத் தயார் செய்வது என்று அவளுக்கு நிறைய வேலை இருந்தது. ஊர்க் குழந்தைகளெல்லாம் தன் குழந்தைகளாய் ஆகிப் போனதாலோ என்னவோ, அவளுடைய தாய்மை அத்துடன் திருப்திபட்டு விட்டது. கிருஸ்டி வனரோஜா திருமணமாகி நாலு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்பது ஒரு குறையாய் அவர்களுடைய சுற்றத்துக்கு தோன்றத் தான் செய்தது. வனரோஜாவுக்கு இந்தக் கேள்வி வேதனை தந்தது.

துரை! நமக்கு பிள்ளை இல்லையே என்று உங்களுக்கு வருத்தம் உண்டு தானே?” ஒருநாள் இரவு தலையணை உறையை மாற்றியபடியே வனரோஜா கேட்டாள்.

சின்னத் தயக்கத்திற்கு பின் கிருஸ்டி சொன்னான்,  ரோஜா! நம்மிருவரின் அன்பையும் பாசத்தையும் இன்னொரு ஜீவனோடு பங்கு வைக்க வேண்டாம் என்பது கர்த்தரின் சித்தம் போல் இருக்கிறது. நானுக்கு, நீயெனக்கு. விடு அந்தப் பேச்சை.

வனரோஜா அவனை அணைத்துக் கொண்டாள். கருப்பா!

சரி! படும்மா! ஏனோ கிருஸ்டியின் குரலில் சொல்லவியலாத வேதனை தொனித்தது. இந்த வேதனையை என் வனரோஜா வாழ்நாள் முழுதும் தாங்கவியலுமா? போனமுறை அவளுக்கு குழந்தை பெற வாய்பில்லை என்று சென்னையில் பரிசோதித்த டாக்டரம்மா சொன்னாளே! அதை அவளிடம் 'எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று மறைத்தல்லவா நம்பிக்கை வார்த்தைகளை விதைத்தோம்?'

ஏய் கருப்பா! என்ன யோசனை ? கொஞ்சம் சிரிக்கக் கூடாதா ! இன்னைக்கு எங்கயோ ஒரு நாட்டுப்பாடல் வரி ரெண்டு பார்த்தேன். சொல்லவா?” அவனை திசை திருப்ப ஏதோ நாடகம்...

எதைப்பத்தி ரோஜா?”

எல்லாம் உங்க அழகான கலரு பத்தித்தான்!

சரி! சொல்லு

நாவப் பழத்தினிலே,
நல்காயாம் பூவினிலே
காக றெக்கையிலே
நல்கருப்பு எங்க மச்சான்.

உன்னை என்ன செய்யிறேன் பாரு! சிரித்தபடி அவளை அவன் துரத்த.... இரவு வெட்கப்படக் காத்திருந்தது.

அதற்கு பிறகு எப்போதும் பிள்ளையில்லையே என்று ஒருபோதும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. மற்றவர்கள் பேசும்போதும் ஒரு பெரும் தோரணையோடு சிரிப்பொன்றையே வனரோஜா பதிலாய்த் தந்தாள். மீண்டும் குறும்பும் பாட்டும் அவளிடத்தில் குடிபுகுந்தன..

ஹஹ்...'நல்கருப்பு எங்க மச்சான்'....  கிருஸ்டிராஜுக்கு சிரிப்பு பொங்கிவந்தது. எவ்வளவு குறும்பு?!. நாட்டுப்பாடல்களிலே தான் எத்தனை ஆர்வம் உனக்கு?. எவ்வளவு பாடல்கள்? எவ்வளவு விடுகதைகள்? என் ரோஜா! உனக்கு இன்று நாற்பத்தெட்டு வயது என்று யாரும் சொல்ல முடியுமா?
ஒரு குழந்தை போல் தானே உன் பேச்சும் உருவமும்... 
'கருப்பு' பற்றி இன்னொரு பாடல் கூட ஒருமுறை சொன்னாயே ரோஜா!
சட்டென வரிகள் மறந்துவிட்டதே? ரோஜா.. அம்மாடி ரோஜா!
அந்தக் கருப்பன் பாட்டு.... வேண்டாம்...இப்போது எழுப்ப வேண்டாம்...  காலை பார்த்துக் கொள்ளலாம்.


அன்றும் இன்றும் கிருஸ்டிக்கு ஒரே ஒரு நண்பன் வரதராஜன் தான். கிருஸ்டி மாதிரி வரதுவும் அதிகம் பேசமாட்டார்.  வரதுவின் மனைவி பத்மா வனரோஜாவுக்கு நல்லதோழியும் கூட. அன்று கிருஸ்டியின் பிறந்த நாள். கிருஸ்டிக்கு மிகவும் பிடித்த கேரட் அல்வா செய்திருந்தாள். வாழ்த்த வந்த வரதுவுக்கு அல்வாவின் ருசி தேவாம்ருதமாய் இருந்தது. வனரோஜாவின் சமையலுக்கு பரம ரசிகன் வரது.

அதெப்பிடி உனக்கு மட்டும் இப்படி ஒரு கைமணம் வனரோஜா?”

கைமணம் என்னண்ணா? மனசும் கண்ணும் சமைக்கிற வாணலியிலேயே இருந்தா தானா அல்வா ருசிக்குமண்ணா!

பத்மா இடைமறித்தாள். போ ரோஜா! நானும்தான் இதெல்லாம் செய்யுறேன், ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு மாதிரி!.... என்னங்க.! ஒண்ணும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?” என்று வரதுவின் தோளில் தட்டினாள் பத்மா.

எதையாவது சொல்லி, எப்போதோ கிடைக்கிற அல்வாவுக்காக தினமும் கிடைக்கிற மோர்சாதத்தை கெடுத்துக்குவானேன்! என்று கிருஸ்டி சொன்னபோது அனைவரும் சிரித்தார்கள்.

நல்ல நட்பு, நல்ல மனைவி, நல்ல ரசனை, நல்ல மனசு...... வேறென்ன வேண்டும்?

என் ப்ரிய ரோஜா! நீ என் வயிற்றுக்காய் சமைத்தாயா இல்லை என் ஆன்மாவை பசியாற்றுவதற்காகவா? எத்தனை நறுவீசு உன் செயல் அனைத்திலும்?... அரிசியை களைவதாகட்டும், வீடு பெருக்குவதாகட்டும்.... வீணையை லயித்து மீட்டும் ஒரு உன்னதக் கலைஞனின் கைவண்ணம் போலல்லவா இருக்கும்? எதிலும் ஒரு ஆர்வம், எதிலும் ஒரு ஈடுபாடு, எதிலும் ஒரு அர்ப்பணிப்பு உனக்கு!

உனக்கு நினைவிருக்கிறதா ரோஜா? முதன்முதலாய் இந்த வீட்டுக்கு மருமகளாய் நீ வந்த அன்று இதே கேரட் அல்வாவைத் தானே செய்தாய்? அப்பா எவ்வளவு ரசித்து உன்னைக் கொண்டாடினார்?

போன வாரம் உன்னை சும்மா விளையாட்டாகத்தானே அதை செய்து கொடு என்று கேட்டேன் ? அதை நினைவில் வைத்து இன்று கூட அதே கேரட் அல்வாவைத்தானே செய்து வைத்திருக்கிறாய்? ஒரு வாயாவது அதை நீ சாப்பிட்டுப் பார்த்தாயா ரோஜா? நன்றாகத்தானே இன்றும் செய்திருக்கிறாய் இல்லையா ?  

 (தொடரும்)

38 comments:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

//நல்ல நட்பு, நல்ல மனைவி, நல்ல ரசனை, நல்ல மனசு...... வேறென்ன வேண்டும்?//

இதெல்லாம் கிடைத்துவிட்டால் வேறு எதுவும் வேண்டாம் ஜி!

கதை நன்கு போய்க் கொண்டு இருக்கிறது.... சொல்லிக்கொண்டு போகும் விதம் நாங்களும் கிறிஸ்டி - வனரோஜா கூடவே இருந்து பழகுவது போல இருக்கிறது.

தொடரட்டும்...

பத்மநாபன் சொன்னது…

வரிகளின் இரு வண்ணங்களிலும் மாறா அன்பு... கிருஷ்டியின் சொல் ஒவ்வொன்றும் வனரோஜா எதோ ஒரு சோகத்தை சுட்டுவதாக மர்மம் அடுத்த பாகத்தை உடனே தேடுகிறது...

மோகன்ஜி சொன்னது…

அன்பு வெங்கட்!
/நாங்களும் கிறிஸ்டி - வனரோஜா கூடவே இருந்து பழகுவது போல இருக்கிறது/

இது உங்கள் அழகான ரசனையின் விளைவு... கதை மாந்தர்கள் நம்மிடையே இருப்பவர்கள், இருந்தவர்கள் தானே?

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்ஜி! வாழ்க்கையின் அத்தனை கணக்குகளுக்கும் பிறகு எஞ்சி நிற்பது அன்பு ஒன்றே அல்லவா?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

என் ப்ரிய ரோஜா! நீ என் வயிற்றுக்காய் சமைத்தாயா இல்லை என் ஆன்மாவை பசியாற்றுவதற்காகவா?/

ஆன்மாவின் ராகமாய் இசைந்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தொழுவத்தில் ஒரு மயில் இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்! அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாமே!

மோகன்ஜி சொன்னது…

இராஜராஜேஸ்வரி மேடம்! உங்கள் பாராட்டுக்கு நன்றி!
/தொழுவத்தில் ஒரு மயில் இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்! அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாமே!/

உண்மைதான்!ஆனால், தொழுவத்தில் வாழும் வாழ்க்கையை மயில் அல்லவா ரசிக்க வேண்டும்?

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வனரோஜா நல்லதொரு பெயராக உள்ளது. காரட் அல்வா தொண்டைக்குள் சுலபமாக பயணிப்பது போல கதையும் போகிறது. தொடருங்கள். vgk

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல மனைவி..நல்ல பிள்ளை...நல்ல குடும்பம் தெய்வீகம் என்றொரு சீர்காழியின் பாடல் ஒன்று உண்டு. அது நினைவுக்கு வந்தது உங்கள் "நல்ல நட்பு, நல்ல மனைவி" வரிகளைப் படித்ததும்...பத்துஜிக்கும் வணரோஜாக் கவலை வந்து விட்டது போலும்! "மனசும் கண்ணும் சமைக்கிற வாணலியில இருந்தா..." உண்மையான வரிகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

மோகன் அண்ணா...

தொழுவத்து மயில் படிக்கும் போது வனரோஜாவும் கிறிஸ்டியும் நம்மருகில் வந்து அமர்ந்து விடுகிறார்கள்.

வரிகள் ஒவ்வொன்றும் வசமிழக்க வைக்கின்றன.

தொடரும் என்று ஆரம்பிக்கும் இடத்தில் முடிவு அடுத்த பகுதிக்கான ஆவலைத் தூண்டுகிறது.

இந்த பகுதியின் கடைசிப் பாரா பெரிய சோகத்தை மறைத்து வைத்து கதை சொல்வதாய் எனக்குப் படுகிறது.

வாழ்த்துக்கள் அண்ணா...

மோகன்ஜி சொன்னது…

வனரோஜா எனும் பெயர் உங்களுக்கும் பிடித்திருப்பது பற்றி மகிழ்ச்சி வை.கோ சார்! தொடர்ந்து படித்து உங்கள் கருத்தை விரிவாகச் சொல்லுங்கள்.

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஸ்ரீராம்!சீர்காழியின் பாடலை நினைவுறுத்தியதற்கு நன்றி. பத்துஜியின் கவலை குறித்து எனக்கும் கவலையாய்த் தான் இருக்கிறது.

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய குமார்! உங்கள் பாராட்டு நெகிழச் செய்கிறது. மீதிக் கதையையும் படித்து கருத்து சொல்லுங்கள் சகோ.

geetha santhanam சொன்னது…

நல்லா போயிண்டிருக்கும் வனரோஜா-கிறிஸ்டி காதல் கதையைப் பெரிய சோகத் திருப்பம் எதுவுமில்லாமல் கொண்டு சென்று முடிக்கவும். உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கட்டும்

கீதமஞ்சரி சொன்னது…

இல்லறம் முழுமை பெறுவது குழந்தைகளால்தான் என்பார்கள். இங்கே ஒரு இல்லறம் அவர்களில்லாமலேயே நல்லறமாய் விளங்குகிறதே... அழகான படைப்பு. சற்றே வேகமாய் கதை நகர்த்துவதுபோலொரு உணர்வு. சட்டென்று முடிந்துவிடக்கூடாதே என்ற என் உள்மனத்தின் வேட்கையின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம். இனிதே தொடருங்கள் மோகன்ஜி.

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

கீதா சந்தானம் மேடம்! உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லவா? வனரோஜா ரத்தமும் சதையுமாய் என் வாழ்வின் பெரும்பகுதியை ஆக்கிரமித்த ஒரு பாசமிகுந்த தேவதை. கதையின் பொருட்டு வேறு பெயருடனும் வேறு சூழ்நிலையிலும் அவளை உலவ விட்டுள்ளேன். அவசியம் இருப்பின் அதையும் சொல்வேன். உங்கள் பயம் எனக்கும் இப்போது உண்டு மேடம் . உண்மைகள் இலக்கியங்களை விடவும் வலி மிகுந்தவை..

மோகன்ஜி சொன்னது…

கீதா ! நானும் ரமணி சாரும் உங்களைப் பற்றி சொன்னது சரியே. கதையோட்டத்திற்கு நான் மேற்கொண்டிருக்கும் முன்னும் பின்னுமாய் கதையை நகர்த்தும் பாணியில் அதிக நேரம் முடிவை தக்கவைக்க இயலாது. இதனாலேயே, மூன்று பதிவுகளுக்காய் நான் எழுதியதை இந்த ஒரு பதிவில்.சுருக்கி ஒன்றாக்கினேன் கையும் களவுமாய் பிடித்து விட்டீர்கள். உங்கள் கூர்ந்த வாசிப்புக்கு என் வாழ்த்தும் நன்றியும்.

அப்பாதுரை சொன்னது…

//தொழுவத்தில் வாழும் வாழ்க்கையை மயில் அல்லவா ரசிக்க வேண்டும்?

யப்ப்ப்பாஆ! வலிக்குதய்யா.

மோகன்ஜி சொன்னது…

விந்தைகள் நிறைந்த வாழ்க்கை இது அப்பாதுரை. பரந்த இயற்கைவெளியில் தோகைவிரித்து சுதந்திரமாய் ஆட வேண்டிய மயில்கள், சிலநேரம் தொழுவத்திற்கு வர நேர்கிறது. சில சமயம் மயில்களே கூட தானே இயைந்து தொழுவத்திற்கு தன்னை பிணைத்துக் கொள்கின்றன. புது நிலைப்பாடுகளின் போக்கை சிலநேரம் மயில்களும் ,பலநேரம் தொழுவமும் முடிவு செய்கின்றது.. கண்ணுரும் நமக்கு ஏற்படும் வலியை, சம்பந்தப்பட்ட மயில்களே கூட உணராமல் போகலாம். அல்லது முழுமனதோடு ஏற்றும் கொள்ளலாம். நமக்கு புரிபடாத இத்தகு சமன்பாடுகள் இருக்கத்தானே செய்கிறது?

geetha santhanam சொன்னது…

//மூன்று பதிவுகளுக்காய் நான் எழுதியதை இந்த ஒரு பதிவில்.சுருக்கி ஒன்றாக்கினேன் கையும் களவுமாய் பிடித்து விட்டீர்கள்.//
இப்படி செய்யலாமா மோகன்ஜி. நாங்களெல்லோரும்தான் கதை நடை சூப்பரென்று சொல்லிக்கொண்டிருக்கிறோமே. சுருக்கியதை வி(வ)ரிக்க முடிந்தால் செய்யுங்கள்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

மயில் தன்னிஷ்டத்தோட வசிக்குதுன்னா, தொழுவமாயிருந்தாலும் பிருந்தாவனமாய் மாறிப் போயிடுமே !!

RVS சொன்னது…

மனசைப் பிசையிறீங்க தல...

உடம்புக்கு தேவலாமா? சொகமா இருக்கீயளா? :-))

மோகன்ஜி சொன்னது…

கீதா சந்தானம் மேடம் ! கதை முடிந்த பின் நீங்களே ஒத்துக் கொள்வீர்கள் என்னை. விட்டதை எல்லாம் வேறெங்காவது நிரவி விடுவேன் சகோதரி!கோவிச்சுக்காதீங்க !

மோகன்ஜி சொன்னது…

அமைதிச் சாரல்!
/மயில் தன்னிஷ்டத்தோட வசிக்குதுன்னா, தொழுவமாயிருந்தாலும் பிருந்தாவனமாய் மாறிப் போயிடுமே !!/

உண்மை தான். அது மயிலின் சந்தோஷமே என்று நாம் உணரும் வரை, அல்லது உணர்ந்த பின்னாலும் கூட, மூன்றாம் நபராய் நோக்கும் நமது உணர்வுகள் எப்படி இருக்கும்?..

கொஞ்சம் குழப்பிட்டேனோ?

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஆர்.வீ.எஸ்.. இப்போது பரவாயில்லை..

meenakshi சொன்னது…

கதையில் கவிதையாய் பல வரிகள் மிகவும் ரசிக்க வைக்கின்றது. இந்த வானவில்லில் தொழுவத்து மயிலின் எழிலான நடை மனதை கொள்ளை கொண்டு விட்டது.
பின்னூட்டங்களில் உங்கள் கருத்தை படித்த பின், இந்த வனரோஜா உங்கள் நண்பரின் மனைவியாக இருப்பார் என்று நினைக்கிறேன். கதையில் வரும்
வரதராஜன் நீங்கள்தானோ! :) என் ஊகம் தவறென்றாலோ, உங்களை எந்த விதத்திலாவது சங்கட படுத்தினாலோ தயவு செய்து மன்னிக்கவும்.

மோகன்ஜி சொன்னது…

மீனாக்ஷி மேடம்! உங்கள் அழகான பாராட்டுக்கு நன்றி!உங்கள் ஊகத்தால் சங்கடம் ஏதும் இல்லை.

மிக ஸ்வாரஸ்யமான ஊகம்தான்.

ஏன்? நானே வனரோஜாவாக இருக்க கூடாதா?

meenakshi சொன்னது…

நீங்களே வனரோஜவாக..... ம்ம்ம்.... இது இன்னும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. எழுத்தாளர்களின் கற்பனைக்கு எல்லையேது! அதே நேரம்
உண்மை எது என்பதை தெரிந்து கொள்ளவும் மிக ஆவலாக இருக்கிறது. எழுத்தாளர்களிடம் இருந்து ஒரு விஷயத்தை அவ்வளவு சீக்கிரம் தெரிந்து கொண்டு விட முடியுமா, என்ன?! :)

அப்பாதுரை அவர்களுக்கு நீங்கள் எழுதி இருக்கும் பின்னூட்டம் மிகவும் பிரமாதம் மோகன். வாழ்கை என்பதுதான் எவ்வளவு விசித்திரமானது!

அப்பாதுரை சொன்னது…

உங்கள் பின்னூட்டப் பதிலை படிக்கப் படிக்கச் சலிக்கவேயில்லை. (புரிந்ததா என்பது வேறு விஷயம்.. இலக்கியத்தரமா இருக்குதுங்கோ)

அப்பாதுரை சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

மீனாக்ஷி மேடம்! கதையை முடித்தவுடன் சொல்கிறேனே.. கொஞ்சம் பொறுங்கள்.
//அப்பாதுரை அவர்களுக்கு நீங்கள் எழுதி இருக்கும் பின்னூட்டம் மிகவும் பிரமாதம் மோகன்//

எனக்கென்னமோ அப்பாதுரைன்னு டைப் அடிச்சவுடனே தானா பதில் பிச்சுக்கிட்டு வருது. எல்லாப் புகழும் அப்பாவுக்கே...
கீழே அவர் கருத்தைப் படிச்சீங்க இல்லே?

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்! // படிக்கபடிக்க சலிக்கவே இல்லை.. புரிஞ்சாப்பலயும் இல்லை..// அடடா... கிளம்பிட்டாருய்யா... இலக்கியத்தரமா வேற இருக்குதாமே.. புரியாம போனா இலக்கியம்..

நானு இலக்கிய கர்த்தா?? ஏண்ணே இந்தக் கொலைவெறி...

நிலாமகள் சொன்னது…

நல்ல நட்பு, நல்ல மனைவி, நல்ல ரசனை, நல்ல மனசு...... வேறென்ன வேண்டும்?

நீங்க‌ளே வ‌ன‌ரோஜாவாக‌, கிருஸ்டியாக‌,ச‌வ‌ரிமுத்தாக‌, வ‌ர‌துவாக‌, வ‌ர‌தும‌னைவியாக‌ அவ‌தார‌மெடுத்த‌ல்ல‌வா இழைக்கிறீர்க‌ள்....! எப்ப‌டியோ... நிஜ‌ம்தான் ச‌ர்வால‌ங்கார‌ காவிய‌மாகிற‌து; க‌ற்ப‌னை எங்கேனும் நிஜ‌ வ‌டிவ‌ம் பூணுகிற‌து.

ம‌ன‌சையும் உட‌ம்பையும் ஆசுவாச‌ப்ப‌டுத்தும் எழுத்து வ‌ர‌ம்!

G.M Balasubramaniam சொன்னது…

மக்கட் பேறு இல்லாத அன்பிலேயே கட்டுப்பட்டுக்கிடக்கும். கிறிஸ்டி வனரோஜா வாழ்வின் பகுதிகள் நினைவுகளாய் கொண்டு செல்வது அருமை. எந்த ஒரு கதைக்கும் ஒரு உண்மைப் பின்னணி இருக்கும். அப்போதுதான் சுவை அதிகரிக்கும். தொடர்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

அன்பு நிலா!உங்கள் நுணுக்கமான பாராட்டு வரிகள் என்னை இன்னமும்எளிமையானவனாக்கட்டும். நன்றி.

மோகன்ஜி சொன்னது…

G.M.B உங்கள் வாழ்த்து எனக்கு ஆசீர்வாதம் ஐயா! இந்தக் கதைக்கும் அந்த பின்னணி உண்டு. தொடர்ந்து படியுங்கள்.

Aathira mullai சொன்னது…

தொழுவத்துல இருக்கிற கிருஷ்டி இப்ப எங்க மனசுல நெறைஞ்சு இருக்கா.. நல்ல ஓட்டம். மென்மையும் உண்மையும் இணைந்துள்ளன... அடுத்த பாகத்தைப் பார்க்கப் போறேன்.. இதுவும் நல்லாத்தான் இருக்கு சேர்த்து வைத்து எல்லாவற்றையும் படிப்பது.