ஞாயிறு, அக்டோபர் 02, 2011

தொழுவத்து மயில் 2
ரோஜா! ஒண்ணுகேட்டா கோவிப்பியாம்மா ?”

சொல்லுங்க துரை!

வனரோஜா கிருஸ்டியை துரை என்றே அழைக்க ஆரம்பித்திருந்தாள்.

"ரோஜா! என்னையும் என் நிறத்தையும் சகிச்சிகிட்டு உன் அப்பாவின் சொல்லுக்காகத்தானே என்னுடன் வாழுறே இல்லையா ?"

வனரோஜாவின் முகம் வாடியது. நீங்க ஏன் இப்படியெல்லாம் நினைக்கணும்? இந்த அழகும் நிறமும் அப்படியேவா இருக்கும்? உங்களை கர்த்தரெனக்குத் தந்த ஆசீர்வாதமாய் எண்ணி இருக்கேன். இனி எப்போதும் இப்படிக் கேட்டு என்னை வேதனைப்படுத்த வேண்டாம்.

இல்லை ரோஜா! எனக்கெப்போதும் இந்த தாழ்வு மனப்பான்மை இருப்பதுதான். இனிமேல் கேட்கமாட்டேன்"

தலையைக் குனிந்து கொண்டான் கிருஸ்‌டி. 

ஒரு குழந்தையைப் பார்ப்பதுபோல் அவனைப் பார்த்தாள் வனரோஜா.
'இதென்ன கிறுக்கடா என் அத்தானே! காதல் அலைமோதும் உன் பார்வைக்கு முன், யாரும் வேதனைப்படலாகாது என தன்னை பிறற்காக்கி வாழும் உன் நெறியின் முன்.. மங்கும் நிறம் எதற்கடா? 
உன் சுயஇரக்கத்துக்கு மருந்து என்னிடம் இருக்கிறதடா ! என் அத்தானே!' 

மெல்ல அவன் பின்புறம் வந்து அவனை இறுக அணைத்தபடி காதருகே கிசுகிசுத்தாள்.. 
டேய்! கருப்பா!

ஒரு சின்ன அதிர்ச்சி! ஒரு பெரிய மூர்க்கம்!! வெட்கப்பட்ட இரவோ விடியத் துணியவில்லை.

எப்போதாவது கண்கள் பளிச்சிட கிருஸ்டியை அவள் கருப்பா என்றழைப்பதுண்டு.

எப்போது கடைசியாய் அப்படி அழைத்தாள்? ஆம்.! இருபத்தியைந்தாம் மணநாளுக்கு வெள்ளைநிற புது ஜிப்பா அணிந்தபோது..... கருப்பா! கருப்பா!

வனரோஜாவை கிருஸ்டியின் வீட்டில்விட முதன்முதலாய் அழைத்துவந்த அந்தோணி சார் சொன்னார்.

சவரிமுத்து ! ஒரு விஷயம்.. நம்ம வனரோஜா அவளுடைய பள்ளிக்கூட நாட்களிலேயே மரக்கறி உணவு இயக்கத்தில் ஏற்பட்ட ஈர்ப்பில் முழு வெஜிட்டேரியனாகவே மாறிப்போனாள்."

"அப்படியா?"

"ஆமாம் சவரிமுத்து அவளின் பிடிவாதத்தால் அசைவம் எங்கள் வீட்டுக்கே அன்னியமாயிடுச்சி."

"அதனாலே?"

"வனரோஜா சைவம் மட்டும் தான் சமைக்கும் சாப்பிடும். அது கவுச்சி எடுக்காது. கருவாடு வாசனை பட்டாலே குமட்டும் அதுக்கு.
சாப்பாட்டு விஷயத்தில் அவள் போக்கிலேயே விட்டுவிடு சவரி! .

இதென்ன அக்கிரமமா இருக்கு? அதெப்பிடி ஒரே வீட்டில் சைவம் அசைவம்னு ரெண்டு சமையல் முடியும் அந்தோணி?”

சவரிமுத்து கொஞ்சம் சத்தமாய்ப் பேசத் தலைப்பட்டார்.

சவரி! நான் சொல்லவந்தது...

நாளையிலிருந்து நம்மவீட்டுலையும் கீரைத்தண்டு, பருப்புப்பொடி, வத்தக்குழம்பு, மோர்சாதம், நெல்லிக்கா ஊறுகாதான். எங்களுக்கு மட்டும் இனி கருவாடு கொமட்டாதா அந்தோணி?”

அந்தோணிக்கு கண்கள் கலங்கின. உள்ளிருந்து ஓடிவந்த வனரோஜா சவரிமுத்துவின் கால்களைக் கட்டிக்கொண்டாள். கண்ணீர் உகுத்தாள்.

சேசுவே சேசுவே என்று மனத்துள் அரற்றினார் சவரிமுத்து.

எல்லாம் நேற்றுபோல் இருக்கிறது. பக்கவாதம் வந்து சவரிமுத்து படுக்கையில் விழுந்த போது வனரோஜா அவருக்கு தாயாய் மாறிப் போனாள். ஒரு அருவருப்பு, ஒரு முகச்சுளிப்பு உண்டா? அவருக்கு தினமணி வாசிப்பதிலிருந்து, ஏதேதோ கதைகள் பேசி, சவரிமுத்து தனிமையை உணராமலிருக்கச் செய்தாள். வீட்டின் கூடத்தில் நடக்கும் ஜெபத்தை, சவரிமுத்து படுத்திருந்த அறைக்கு மாற்றினாள். அவள் ஜெபத்தை மேற்கொள்ளும் முறைகள் ஒரு தெய்வீகமான சூழலை ஏற்ப்படுத்தின. நாளும் ஏதோ ஒரு பாடலோ பிரசங்கத்தையோ கூடுதலாய்ப் படிப்பாள்.

அன்று ஈஸ்டர். அன்றைய ஜெபத்தில் வனரோஜாவின் குரல் தேவமாதாவையே அழைத்து வந்தது.

மருள்தரு வலியுறுவே! மருள்அறு சினவுருவே!
அருள்தரு தயையுருவே! அளவறு திருவுருவே!
தெருள்தரு கலையுருவே! செயிரறு மனுவுருவே!
பொருள்தரு மணியுருவே! பொழிமண அடிதொழுதேன்.

உரையில கலைநிலையே! உயர்அற மடையுரையே!
கரையில படற்கடலே! கதியுயிர் பெறுகரையே!
வரையில சுகநிலையே! வளர்தவ மடவரையே!
புரையில மனுமகனே! பொதிமல ரடிதொழுதேன்!

மருமலி மலர்நிழலே! மறைமலி யுயர்பயனே!
திருமலி கரமுகிலே! சிவமலி தனிமுதலே!
இருமலி யுலகுளரே! இணரொடு தொழும் அடியே!
குருமலி யரநெறியே! கொழுமலர் அடிதொழுதேன்!

ஏதோ ராகத்தில் வார்த்தைகள் மலர்களாய் விகசித்தன.
சவரிமுத்துவின் கண்களில் நீர் வழிந்தது. இப்படியொரு குழைவும்,தெய்வீகமும் மிளிரும் பாடலை அவர் இதற்குமுன் கேட்டதில்லை. 

'என்ன பாடலிது' என்பதாய் தலையசைத்தபடி கண்களால் அவர் வினவ, வனரோஜா தேம்பாவணி என்றாள்.

இரண்டுமூன்று நிமிட மௌனம்.

'எங்கும் நிறைந்திலங்கும் ஏகப் பரம்பொருளே! உமக்கான தோத்திரங்களை ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட அயல்நாட்டவரைக் கொண்டு எழுதுவித்து, அதை என் இல்லம் துலங்கவந்த தேவதையின் வாக்கினிலே வெளிப்படுத்தினீர். அதை இந்த எளியவனின் இதயங்குளிர கேட்கச்செய்தீர்.. இதுபோதும் எனக்கு...சேசுவே! சேசுவே!!'

கண்களை மூடிய சவரிமுத்து கொழுமலரடியோடு இரண்டறக் கலந்து விட்டார். 

அவரின் மறைவுக்காய் வனரோஜா வேதனைப்பட்டது மிக அதிகம்..

கிறிஸ்டிராஜுக்கு வனரோஜாவின் அந்த தேம்பாவணி பாடல் வரிகள் காதில் இப்போது ரீங்கரித்தன. 
என் செல்வமே!
எனக்காய் இப்போது, ஒரே ஒருதரம் மட்டும் அந்தப் பாடலைப் பாடுவாயா?

வேண்டாம். இப்போது வேண்டாம்.  அயர்ந்திருக்கிறாய்..... 

நீ பாடினால் தானா? 

இந்த இரவு என்னைச் சுற்றி எண்ணப் புற்றுகளை எழுப்பிவிடும்...... அதனுள்ளே உன் பேச்சும் பாட்டும் ரீங்கரிக்கும்.
என் மயிர்க்கால்களெல்லாம் காதுகளாய் மாறி அதையெல்லாம் உள்வாங்கும்.
அந்த மோனத்தை, தவ அதிர்வை உனது இருப்பு கூட கலைத்து விடுமோ.. என் செல்வமே... 
எதற்கு இருவராய்ப் பிறந்தோம்? நாம் எதற்கு இருவராய்ப் பிறந்தோம்??

( தொடரும் )

35 comments:

பத்மநாபன் சொன்னது…

வரிகள் ஒவ்வொன்றும் அன்போடு காதலாய் சிலிர்க்க வைக்கின்றன...
//வெட்கப்பட்ட இரவோ விடியத் துணியவில்லை.//
// மயிர்க்கால்களெல்லாம் காதுகளாய் மாறி அதையெல்லாம் உள்வாங்கும்.//
// நாம் எதற்கு இருவராய்ப் பிறந்தோம்//
வனரோஜா எனும் தேவதையை வைத்து ஒரு பெரும் உணர்வு விருந்தே படைத்து கொண்டிருக்கிறீர்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தொழுவத்து மயில் அழகாவேப்போகுது.
தொடரட்டும். தொடர்கிறோம்.

meenakshi சொன்னது…

மோகன் நலம்தானே!
'தொழுவத்து மயில்' தலைப்பே மனதை அள்ளியது. மூன்றாம்சுழியில் வந்த ஒரு காதல்கதையில் மனம் உருகி, கரைந்து போயிருந்தது. அதிலிருந்து மீண்டு வருவதற்குள் மீண்டும் மனம் உருக ஆரம்பித்து விட்டது உங்கள் தொழுவத்து மயிலில். மனதை மயில் இறகால் வருடுவது போன்ற இதம், நேசம் அவர்கள் காதலில். காதலனை செல்ல பெயர் வைத்து கூப்பிடுவதில் உள்ள கவர்ச்சி வேறு எதிலுமே இல்லை. சவுரிமுத்துவின் அன்பிலும்தான் எத்தனை உருக்கம்.

// வெட்கப்பட்ட இரவோ விடியத் துணியவில்லை.// இந்த ஒரு வரியே கவிதையாய் ஜொலிக்கிறது.
கடைசி பத்தியில் மனம் கிறங்கி போனேன்.

வாழ்த்துக்கள்! அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன், ஆவலுடன்.

ஸ்ரீராம். சொன்னது…

படித்த வரிகளின் வசீகரம் எழுதிய கைகளின் திறமையை வெளிப் படுத்துகிறது. எந்த வரியைப் பாராட்ட...? தேம்பாவனிப் பாடல் அருமை. வனரோஜாவின் நிலை பற்றி சஸ்பென்ஸ் வளர்க்கிறீர்கள். கிறிஸ்டியின் எண்ண ஓட்டங்களைப் படிக்கும்போது அவரும் 'கொழுமலரடியோடு' கலந்திருக்கக் கூடாதே என்று மனம் ஏங்குகிறது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

//எதற்கு இருவராய்ப் பிறந்தோம்? நாம் எதற்கு இருவராய்ப் பிறந்தோம்??//


கதையில் வரும் வரிகளில் எந்த வரியைச் சொல்வது எதைவிடுவது... எல்லாமே நல்ல வரிகள்...

வனரோஜாவும் கிறிஸ்டியும் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகரித்து விட்டது மோகன்ஜி!.

அப்பாதுரை சொன்னது…

பாராட்டத் தோன்றவில்லை மோகன்ஜி. பரவசத்தில் பாராட்டவே தோன்றவில்லை.

வனரோஜா பெயரே கவிதை. அந்தப் போதையிலேயே இன்னும் கிறங்கிப்போயிருக்கிறேன்.

புதுமையான தொடக்கம்; இரண்டாம் பகுதியில் நெகிழ வைத்த இரண்டு நிகழ்ச்சிகள். அடுத்த பகுதியின் ஆச்சரியத்துக்குக் காத்திருக்கிறேன்.

(இதை எழுதணுமானு நெனச்சீங்களா? என்ன விளையாட்டா இருக்குதா?)

சுந்தர்ஜி சொன்னது…

கவிதையும் செய்நேர்த்தியும் இயல்பாய் நெகிழவைக்கும் மொழியும்கொண்டு கடக்கும் லாவகம் ஒவ்வொரு தடவையும் நிகழ்வது சகஜமாகிவிட்டது மோகன்ஜி.

மோகன்ஜி சொன்னது…

நன்றி பத்மநாபன்!
/வனரோஜா எனும் தேவதையை வைத்து ஒரு பெரும் உணர்வு விருந்தே படைத்து கொண்டிருக்கிறீர்கள்.../

உணர்வுகளின் உச்சத்தில் தான் தேவதைகள் தென்படுகிறார்களா? இல்லை தேவதைகளைக் கண்டதால் உணர்வுகள் உச்சமெய்துகின்றனவா?

மோகன்ஜி சொன்னது…

வை.கோ சார்! தொடர்வதற்கு நன்றி!

மோகன்ஜி சொன்னது…

மீனாக்ஷி மேடம்! தற்போது நான் நலமே. மூன்றாம் சுழியும், வானவில்லும் உருக்கொண்டது உருகி நெகிழும் வளைவுகளால் தானே! ஒன்று இந்திர தனுசு! இன்னொன்று வேறொரு தினுசு...

உங்கள் கருத்தின் அமைதி அழகாயிருக்கிறது மேடம்.. தொடர்ந்து விமரிசியுங்கள்.

மோகன்ஜி சொன்னது…

ஸ்ரீராம்! உங்கள் தவிப்பு பிடிச்சிருக்குங்க...
தேம்பாவணியில் பல ஆச்சர்யமான வரிகள் உண்டு. நானும் மீண்டும் ஒரு முறை படிக்க உத்தேசித்திருக்கிறேன். ஓரிரு பதிவுகள் போடவும் தோன்றுகிறது. உங்கள் அன்பான பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம்!

மோகன்ஜி சொன்னது…

வெங்கட்! வாழ்த்துக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள் தலைவரே!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்! உங்கள் பரவசத்துக்கு நன்றி!
/வனரோஜா பெயரே கவிதை./ இப்போது நான் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் வரிகள் என்ன தெரியுமா? 'எனக்கு பிடித்த பாடல், அது உனக்கும் பிடிக்குமே'... பேரு வைக்கும் போதே நெனைச்சேன் பங்காளி விழுந்துருவாருன்னு!கதை முடியட்டும்.. உங்களுக்கு சொல்ல செய்திகள் இருக்கு துரை! அட பாத்தீங்களா ? வனரோஜா கூட கிருஸ்டியை துரைன்னு தானே கூப்பிடுது?!

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி! நான் எழுதின நெடுங்கதைக்கும், உங்களோட சிலிர்ப்பூட்டும் கருத்துக்கும் சரியா போச்சு.

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
G.M Balasubramaniam சொன்னது…

நினைவலையில் நிகழ்வலைகள். நன்றாகப் போகிறது மோகன் ஜி.

மோகன்ஜி சொன்னது…

G.M.B சார்!
/நினைவலையில் நிகழ்வலைகள்/
என்ன அழகான ஆழமான வார்த்தைகள் சார்!
தன்யோஸ்மி!!

சே.குமார் சொன்னது…

தொழுவத்து மயில் அழகாகப் போகுது.

// வெட்கப்பட்ட இரவோ விடியத் துணியவில்லை.// - கவிதை.

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி குமார்! தொடர்ந்து படித்து கருத்து சொல்லுங்கள் நண்பரே!

கோவை2தில்லி சொன்னது…

கதையின் நடை ரொம்ப அற்புதம் சார். வரிகள் ஒவ்வொன்றும் கவிதையாய் இருக்கிறது.

தொடருங்கள்.....கவிதையை....

மோகன்ஜி சொன்னது…

போங்க ஆதி ! கவிதை மெனக்கெட்டு எழுதினா உரைநடை மாதிரி இருக்குன்றீங்க... கதையா எழுதினா கவிதைன்றீங்க!

நன்றி ஆதி! தொடர்ந்து படிங்க.. எங்க தலைவரை நல்லா பாத்துக்குங்க!

ரிஷபன் சொன்னது…

வனரோஜாவை நேரில் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது உங்க எழுத்தில் கிறங்கி.

மோகன்ஜி சொன்னது…

ரிஷபன் சார்! உங்கள் பாராட்டு நெகிழ்த்துகிறது நெஞ்சை.. இன்று மூன்றாம் பதிவும் வெளியிட்டிருக்கிறேன். படியுங்கள் ஜி .

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எதற்கு இருவராய்ப் பிறந்தோம்? நாம் எதற்கு இருவராய்ப் பிறந்தோம்??


இருவரல்ல ஒருவ்ரென்று தேவதை ஆசீர்வதித்ததே!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தேம்பாவனி பாடல் அருமையான பகிர்வு!

மோகன்ஜி சொன்னது…

இராஜராஜேஸ்வரி மேடம்!இருவரும் ஒருவராய் இருத்தல் என்பது, இருவரில் ஒருத்தர் மிஞ்சும் நேரம் ஆணிவேரோடு அசைத்தல்லவா பார்க்கப் படும்? இயற்கையின் விளையாட்டில், கடைசியில் எஞ்சுவது கண்ணீர் வழிந்து காய்ந்த தடம் தானோ?

தேம்பாவணி பாடல்களை ரசித்தத்திற்கு நன்றி மேடம்.

கீதா சொன்னது…

கிறிஸ்டியின் காதற்தீவிரமும், வனரோஜாவின் கனிந்த உள்ளமும், சவரிமுத்துவின் பெருந்தன்மையும் என்று ஒவ்வொரு பாத்திரமும் நேர்த்தியுடன் செதுக்கப்பட்டு கண்முன் வளையவருகின்றன. அதிலும் தேம்பாவணிப் பாடலைத் தேர்ந்தெடுத்து இணைத்தவிதம் அருமை மோகன்ஜி.

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய கீதா மேடம்! பாத்திரப் படைப்புகளை நன்றாக அலசியிருக்கிறீர்கள். தேம்பாவணி ஒரு நல்ல காவியம். அது குறித்து ஒரு விரிவான பதிவு பிரிதொருசம்யம் வெளியிட ஆவலுண்டு கீதா.

RVS சொன்னது…

கருப்பா!!!!!


இது விடாது கருப்பா?

நெக்ஸ்ட் பார்ட் போறேன்...

காதல் கருப்பனைய்யா..... :-))

மோகன்ஜி சொன்னது…

இது கை விடாத கருப்பு ஆர்.வீ.எஸ். மேலே படிங்க...

நிலாமகள் சொன்னது…

தேம்பாவ‌ணியை தேடிப் ப‌டிக்க‌த் தூண்டும் அந்த‌ப் பாட‌லும் ச‌ரியான‌ இடைச்செருக‌ல்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி நிலா! என் இருபத்துகளின் தொடக்கத்தில் முழுவதுமாய் தேம்பாவணியைப் படித்தேன். சில வைர வரிகள் இன்னமும் நெஞ்சில் நிழலாடுகிறது.

தேம்பாவணி பற்றி ஒரு விரிவான பதிவை இட எண்ணியிருக்கிறேன்.

ஆதிரா சொன்னது…

இரண்டாம் பாகம் விரு விரு... அது சரி எங்கேருந்து எங்கே.. தேம்பாவணி.. இப்படி அங்கே இங்கே எல்லாம் போயி வந்து எடுத்து சரியா இணைக்கிறது என்பது சுலபம இல்லை. தேடலும் உங்கள் கைவரிசையும் இணைந்து ஜொலிக்கிறது. அடுத்த பகுதி போறேன்.

சிவகுமாரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிவகுமாரன் சொன்னது…

தேம்பாவணியை வனரோஜாவின் குரலில் கேட்டு உருகிப் போயிருக்கிறேன். என்னை மீட்டெடுக்க கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் அண்ணா,