“நான் இப்போ வயலூர் போகப்போறேன். வரியா?”
“உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க? இப்ப என்னத்துக்கு அலையணும்? ரெஸ்ட் எடுத்துக்கலாமில்லையா?” பரிவின் அங்கலாய்ப்பு.
“இப்போ தலைவலி சுத்தமா இல்லம்மா. காத்தாட போகணும் போல இருக்கு.”
மைக்ரேன் மண்டையிடியின் உக்கிரம் மதியம் சற்றுத் தணிந்து விட்டது. எண்ணச்சுழல் எங்கோ மையம் கொண்டு வேல்வகுப்பாய் வெளிப்பட்டது.
‘பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
இடித்துவழி காணும்
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்கு நிகர் ஆகும்
வாய்விட்டு வரிகள் விழ வயலூர் போனாலென்ன எனும் எண்ணவிதை,வளர்ந்து விருட்சமாகி, பிடரியைப் பிடித்து தள்ளுகிறது.
“மணி மூணரை தானே ஆகிறது. வெயில் தாழப்
போலாமே .”
“இல்ல.. இப்போ போனா சரியா கோவில் திறந்தவுடன்
ஸ்வாமியை பார்த்துட்டு வந்திடலாம். கிளம்பு.”
“எனக்கு அம்பாரம் வேலையிருக்கு இப்போ. சனிக்கிழமைப் போலாமே?”
“அப்போ.... சனிக்கிழமையும் போலாம். இப்போ நான் மட்டும் போயிட்டு வந்துடறேன்.”
அவளுக்குத் தெரியும். முதலையும் மோகனும் கொண்டது விடார்.
“காபியாவது சாப்பிடுவீங்களா?”
“தா”
காபியின் மணம் ஹாலில் நிறைவதற்குமுன் முகம் கழுவி உடைமாற்றி வந்துவிட்டேன். நாக்கைசுட்ட காபியின் சூட்டை ஊதிஊதி, அவசரம்..
“ஸ்வாமி வயலூரிலயே தான் இருப்பார். மெள்ள வண்டி ஓட்டலாம்” கொஞ்சம் வேகம்.. கொஞ்சம் விட்டேத்தி.
‘சரி’..
தில்லைநகரிலிருந்து எனது ஸ்விப்ட் கார் முன்மாலையின்
அதிகம் ஆளில்லாத சாலையில் வேகம் பிடித்தது.
வயலூருக்கு இன்னும் நாலைந்து கிலோமீட்டர் இருக்கும்..
ஒரு முச்சாலை சந்திப்பின் சமீபம் வேகம் குறைத்து வண்டி ஊர்ந்தது.
அருகிருந்த கிராமப் பள்ளிக்கூடம் விட்டிருந்த நேரம்.
பத்துபதினைந்து சிறுவர்கள்.. புத்தகப் பையும் கூச்சலுமாய் சலசலத்துக் கொண்டு பாதி ரோடு வரை பரவி நின்றார்கள்.
காரின் வேகத்தை முற்றும் குறைத்தேன்.
“ரோடை விட்டு தள்ளி நில்லுங்கப்பா” என்றேன்.
“சார்! சார்! எங்களை வயலூராண்ட இறக்கி விடுங்க சார்.”
“ப்ளீஸ் சார்! ப்ளீஸ் சார்!!”
“இவ்வளவு பேரு இருக்கீங்களே. வண்டியில இடம் இருக்காதே”
“அட்ஜஸ் பண்ணிக்கிறோம் சார்! பிளீஸ்.”
கார் சவாரியின் ஆர்வமும்.. மறுதலிக்கப்படும் வாய்ப்பு தந்த அவநம்பிக்கையும் கலந்த முகபாவத்துடன் பார்வையாலேயே எனக்கு நெருக்கடி தந்தார்கள்.
“சரி! எவ்வளவு பேர் கொள்ளுதோ அவ்வளவு பேரைத்தான்
ஏத்திக்குவேன். மத்தவங்க பஸ்சுல போய்க்கோங்க சரியா?"
“சரி சார்!” கோரஸ்.
காரை ஓரம்கட்டி பின்பக்கக் கதவைத் திறந்தேன்.”ஏறுங்க “
“மெள்ள...ஒவ்வொருத்தரா”
முதலில் ஏறிய சிறுவன் அடுத்தபக்கக் கதவோடு ஓட்டி அமர்ந்தான். அடுத்தவனை அவன் மடியில் அமர்த்திக் கொண்டான். மூன்றாமவனை தன்னருகே நெருக்கி அமர வைத்து.... பின் சீட்டில் பத்து பேர்.
மிஞ்சிய மூவரை முன்சீட்டில் அமர்த்தி காரைக் கிளப்பினேன்.
“போலாமா”
“ரைட்! ரைட்!” கூச்சல்.
என் சிரிப்பில் அவர்கள் சகஜமானார்கள்.
“மெள்ள ஓட்டுங்க சார்!”
“ஏண்டா”
“அப்போ தானே ரொம்பநாழி காரில் போக முடியும்”
“ஏ.சி போடுங்க சார்
போட்டேன்.
"இந்த வண்டி புது மாதிரி இருக்குதே ! பேரு என்னா சார்?”
“ஸ்விப்ட்”ப்பா.
“ஸ்வீட்டா?” ஒரு குறும்பனின் வினவலுக்கு ஓவென்று நகைத்தார்கள். "டேய்.. என்ன நசுக்காதடா!” வேறோர் குரல்.
“சார்! ஏதும் பாட்டு போடுறீங்களா?”
“என்ன பாட்டு வேணும்?”
“ரஜினி பாட்டு.. தல பாட்டு ” நேயர் விருப்பம்...
மீண்டும் வண்டியை ஓரம் கட்டினேன்.
சி.டி எடுக்க டேஷ்போர்ட்டைத் திறந்தபோது, நேற்றுவாங்கி வைத்து, எடுக்க மறந்து போன ஆனந்தபவன் பாதாம்கேக் டப்பா சரிந்தது.
பிரித்தேன். “ஆளுக்கு ஒண்ணு எடுத்துக்குங்க.. எல்லாருக்கும் இருக்கான்னு பாரு”.
“டேங்க்ஸ் சார்!” வித்தியாசமாய் உச்சரித்தான்.
இரண்டு நிமிடம் காருள்ளே அமைதி.
வண்டியை மீண்டும் கிளப்பினேன். “எல்லாருக்கும் இருந்ததா?”
“இன்னும்கூட ஒண்ணு இருக்கு சார்! நல்லாருக்கு! நீங்களும் எடுத்துக்குங்க!” உருமாறிப் போயிருந்த அட்டை டப்பாவை நீட்டினான்.
“டேங்க்ஸ் சார்!” என்றபடி எடுத்துக் கொண்டேன்.
‘டேய்! சாரு என்ன மாதிரியே தப்பா டேங்க்ஸ் சொல்றாரு பாரேன்!”
சிரித்தேன்,”தப்புன்னு தெரியுதில்ல. அப்போ சரியாச் சொல்லவேண்டியது தானே?”
“அப்படித்தான் சார் எனக்கு சொல்ல வருது".
”சார்! இவன் நேத்திக்கிகூட ரங்கநாதன் சார் கிட்ட உதை வாங்கினான் சார்.”
“பொய் சொல்றான் சார்”
வண்டி ஊர்ந்து கொண்டிருந்தது. மெள்ள ஓட்டச் சொல்லி கட்டளை இட்டுருக்கிறானே! கும்பகோணத்தில் நான் அமர்ந்து போன ஜானவாச ஊர்வலம் நினைவுக்கு வந்தது. இன்று அவளையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம்..
முன் சீட்டில் ஒரு வாண்டு.. “சார்! நான் ஹாரன் அமுக்கவா?”
“சரி” அவன் கையை ஹாரன் மேல் இழுத்து வைத்தேன்.
யாருமில்லாத சாலையில் ஒலிஎழும்ப.. காற்று மட்டும் நகர்ந்து மரங்களை அசைத்தது.
வயலூர் வந்து விட்டது.
“சரி! எல்லாரும் இறங்குங்க ! ஆளுக்கு அம்பது ரூபா தாங்க!”
“ஓ” மீண்டும் கூச்சல். “சார். நான் கலக்டர் ஆன உடனே உங்களுக்கு செக் அனுப்பறேன் சார்!”
“ஒரு ரூபா இருக்கு வேணா தரவா சார்?” இது இன்னொருவன்.
ஒருவர் விடாமல் கை குலுக்கினார்கள். ஒருவன் சல்யூட் அடித்தான். சளசளவென பேச்சுதெறிக்க புழுதி கிளப்பியபடி நடந்தார்கள். சற்று நேரம் பார்த்தபடி நின்றேன்.
முருகன் சன்னதியில் ஓதப்பட்ட மந்திரங்கள் அந்த சிறுவர்களின் இடைவிடாத பேச்சாய் ஒலித்தது. மெல்லப் பேசிக் கொண்டு கடந்த இரு அர்ச்சகர்களின் பேச்சில்’நெய்வேத்தியம்’ என்று காதில் விழுந்தது.
‘உனக்குத்தான் சற்றுமுன் நெய்வேத்தியம் ஆகிவிட்டதே முருகா.. இன்னும் எவ்வளவு தரம் தான் உனக்கு....
இன்றைக்கு என்ன உன் முகத்தில் அத்தனை மந்தஹாசம்?”
.