திங்கள், நவம்பர் 22, 2010

மன்னிக்க வேண்டுகிறேன்.

.வேலைச்சுமையில் வலைச்சுவையை சிலநாள் ஒதுக்க நேர்ந்தது.
மீண்டும் எழுத, மனம் கொள்ளா உற்சாகமும் சின்னதாய்க் குற்ற உணர்வும் கூட.. வானவில்லுக்கு வந்து வந்து நொந்த தோழமைக்கு என் கைகுவித்து சிரம் கவிழ்த்தே வணங்குகிறேன்.!  மீண்டும் என் பரணிலிருந்து சில கவிதைகள் ..


வாழ்க்கை

உலைபொங்கி கொதிவழிந்து
      பொறுக்குச் சுவடுகள்
               கோடிட்ட கலயம்....
பற்று நீங்கி பளபளக்கும் நேரம்,
பழைய கோலம் மறந்திருக்கும்.


மீண்டும் பொங்கி, பொறுக்குத்தட்டி
மீண்டும் துலங்கி, பொலிவு கூடி...

கலயம் தொடரும்,
அலுக்காத ஆட்டம்.....
உருண்டொரு நாள்
        உடையும் வரை.


அடையாளம்

புலிக்கு கோடுகள்
புள்ளிகளோ மானுக்கு.

சேவலுக்கு கொண்டை,
கூவல் நயம் குயிலுக்கு.

எல்லாவற்றிற்கும்
ஏதோவொரு அடையாளம்.....,
எனக்கும் உனக்கும் தவிர.


பிரார்த்தனை

ஆண்டவனே !
வாழையிலையில்
அன்னமும் புளிக்குழம்பும் இட்டு
வயிரடைக்கத்தான் வழியில்லே.

வெத்தலையில்
     சுண்ணாம்பும் பொகயலையும் வச்சு
வாயடைக்கவாவது வழி செய்யேன்.

(ஜூலை 1983)

நீ சொன்ன பிறகுதான்!

சடுதியில் நெகிழ்ந்த
சந்தர்ப்ப ஆடையை
சரியாது காத்த கை
சாச்வதமென நிலைக்க,
சங்கடத்தில் நெளியும்
சலித்த மனது .
சிந்திக்க முயன்றது 
நீ சொன்ன பிறகுதான் 

 (ஜனவரி 1978)







Enhanced by Zemanta