வியாழன், மே 31, 2012

நிழல் யுத்தம்





நீ வேலைக்கு வீ.ஆர்.எஸ் குடுத்துட்டு கும்பகோணத்துல எப்படித்தான் மூணு மாசமா இருக்கியோ?நீ வேகவேகமா வயசாளியாக ஆசை படறாப்பல தோணுதுப்பா.

என்னுடைய பேச்சு என் அம்மாவின் மொழி.. தீர்மானமான முடிபுகள் தொக்கி நிற்கும் வார்த்தைகள் என் அம்மா எனக்களித்த சீதனம்.

ஊரிலிருந்து மும்பைக்கு வந்திருக்கும் அப்பாவுடன் காலை வாக்கிங் இந்த மூன்று நாட்களாய் மனசுக்கு குதுகுலம்.

அப்படி இல்லே அஜிதா. மனசுக்கு ஏத்த வேலையா செய்யாம வயத்துப் பாட்டுக்கென ஒரு உத்தியோகத்தை முப்பது வருஷம் செஞ்சுட்டேன். வேலைத் தேடின நாட்கள்ள என்ன மாதிரி பி.காம் படிச்சவனுக்கு பெரிசா சாய்ஸும் இல்லப்பா. அடிமை சாசனமா என்னையே எழுதிக் குடுத்துட்டு வேலை, பிரமோஷன்னு குதிரை ஓட்டம் ஓடினேன். ஜுரம் வந்து ரெண்டு நாள் படுத்திருந்த போது சட்டுன்னு தோணுச்சு. நாம என்ன பண்ணிட்டிருக்கோம்னு. எனக்குன்னு நான் எப்பவுமே இல்லாம ... இன்னமும் நாம வாழவே ஆரம்பிக்கல்லியேன்னு ஒரு திகில் வந்தது. இனியும் பணம்கிறது ஒரு பொருட்டா வேணாம்னு தோணிடிச்சு. நீயும் பெரியவனும் தான் தலையெடுத்தாச்சே? லீவுமுடிஞ்சு ஆபீஸ் சேர்ந்த ஐஞ்சாவது நிமிஷம் விருப்ப ஓய்வுன்னு கடுதாசி கொடுத்துட்டேன்.

வேலையை விடுறதைப் பற்றி அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்பா நீ!

அப்படி சொல்லியிருந்தா வேலையை விட சம்மதிச்சிருக்க மாட்டா. அவளை கேட்டுட்டா இந்த உத்யோகத்துல சேர்ந்தேன்? அவங்கப்பா என் உத்தியோகத்துக்குத் தானே அவளை எனக்கு கட்டி வச்சார்?”

என்னத்தையாவது சொல்லாதப்பா! நீ வேலை மாற்றல்ன்னு ஊர் ஊரா மூணு வருசத்துக்கு ஒருக்கா கிளம்புறப்போல்லாம் அம்மா தானே மூட்டமுடிச்சை கட்டியிழுத்துகிட்டு உன்னோட வந்தா. ஒரு லைப் பார்ட்னரை மதிக்க தோணுச்சா உனக்கு?”

அம்மாடியோவ்... இதுல இவ்வளவு உள்வயணம் இருக்கா? சரிதான்.

இதுதான் எனக்கு பதிலாப்பா?”

அஜீ! இருடா.. அவளை மாதிரியே குதிக்காதே. இப்ப நீ சொன்னியே லைப் பார்ட்னரை மதிக்கணும்.. அது இதுன்னு.. என் தலைமுறை ஒரு ரெண்டாம் கெட்டான். எங்கம்மா என்னைக்கும் அப்பா மனசுக்கு மாறா ஒரு முடிவும் எடுத்ததில்லே. ஏன்? அவள் எந்த முடிவுமே எடுத்ததில்லே. ஆனாலும் சந்தோஷமா தான் இருந்தா. முடிவெடுக்காம இருக்கிறதே அவளோட சுதந்திரம் போல தோணும். என் கூட்டு புருஷன் பொண்டாட்டி கதையே வேற. தானும் முடிவு எடுக்க மாட்டோம்.. தன் துணையையும் முடிவெடுக்க விட மாட்டோம்.

இர்ரெஸ்ப்பான்சிபல் எவேசிவ் ஆன்சர்

நிஜம் அதுதான். நேத்து நீ சொன்னியே, அவங்கவங்க தன் வாழ்க்கையை யோசிச்சு ஒரு அண்டர்ஸ்டாண்டிங்ல சேர்ந்து போறது தான் இன்னைய பேமிலின்னு? இந்த வழி கூட பரவாயில்லை. எப்படி இருக்கிறதுன்னு தெரியாம ஒருத்தருக்கு இன்னொருத்தர் கழுத்தில் கட்டிவிட்ட பாறாங்கல்லாய் தான் நிறைய பேர் வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு.

நான் மேற்கொண்டு பேசவில்லை. என்னாச்சு அப்பாவுக்கு? கடுமையான வேலைக்குப் பிறகு எவ்வளவு நேரம்கழித்து வீட்டுக்கு வந்தாலும் சற்றும் கடுகடுப்போ அலுப்போ இன்றி எங்களுடன் சிரிக்க சிரிக்க பேசின அப்பாவா? என் நண்பர்களுக்கெல்லாம் தானும் ஒரு நண்பனாய் அவர்கள் பொறாமைப்படும் விதத்தில் தலைமுறை தாண்டி நின்ற அப்பாவா? என்னாச்சு இவருக்கு?

அப்பா! ஆர் யு ஆல்ரைட்?”

பதிலாய் அப்பாவின் வசீகரமான ஒரு தோள் குலுக்கல்..
.
அஜிதா!”. அப்பாவின் குரல் இளகி மென்மையாய் ஒலித்தது. அதுவே என்னை மெல்ல தழுவிக் கொண்டது போல் இருந்தது .

அம்மாவோட ஏதும் சண்டையாப்பா?”

அடிபட்டது போலஅப்பாவின் பார்வை. இப்போ பெரியவனாகி விட்டதாலேயே இப்படி கேக்க தோணுச்சா என்பதாய் ஒரு கேள்வி அந்த பார்வையில் இருந்தது.

ஏன்? அப்படி ஏதும் உன்கிட்ட அம்மா சொன்னாளா?”

இல்லப்பா. நானாத்தான் கேட்டேன்.

எப்பவுமே நம்ம வீட்டில் நடக்கிறது தான். சண்டைன்னு ஒண்ணும் இல்லடா. சொல்லாம நான் வேலையை விட்டது அவளுக்கு ரொம்ப வருத்தம். அதனால நிறைய வாக்குவாதம். கோவம். ஒரு கூரைக்கு கீழயே திசைக்கொருத்தாரா பார்த்தபடி கொஞ்ச நாளாய்  

எனக்குத் தெரியும்.. அம்மாவுக்கு அப்பா மேல் கோபம் வந்தால் அவரை முதன்முதலாய் பார்த்த நாள்தொட்டு அவளுக்குள் மண்டின அத்தனை கசப்பையும் ஒன்று விடாமல் பட்டியலிடுவாள். அந்தந்த சமயத்து பிரச்னை தொட்டு அந்தக் குற்றப் பட்டியல் மாறுபடும். எந்த சமாதானமும், தன்னிலை விளக்கமும் அப்பாவை காப்பாற்றியதில்லை. வாங்கிக் கட்டிக் கொண்டு கக்கி முடிச்சாச்சா?’ என்று சிரித்தபடி ஏதோ ஒரு புத்தகத்துக்குள் தன்னை புதைத்துக் கொள்வார். பாவம் அப்பா.. அவருக்குத்தான் எத்தனைக் கனவுகள் இருந்தன? ஒரு நல்ல சினிமா எடுக்கணும்.. இரண்டு நாவல் எழுதணும்... ஊர் ஊராய்ப் போகணும்.. இடுப்புல காசை முடிஞ்சுக்காம இமயமலையில் திரியணும். அள்ளி அள்ளி பசிச்சவங்களுக்கு பரிமாறணும். .இன்னும் என்னென்னவோ/
.
விடுப்பா. இனி உனக்கு பிடிச்சதை உன் மனம் போனபடி செய். பணம் ஒரு பிரச்சினை இல்லை.நானும் அண்ணாவும் இருக்கோம். சந்தோஷமா இருப்பா.. ரொம்ப சந்தோஷமா......எனக்கேதோ தொண்டையை அடைத்தது

வாயேன்பா. இந்த இரானி ஹோட்டல் டீ சூப்பரா இருக்கும்.

அப்பாவை பேசவிட்டுக் கேட்போம் என்று எனக்கு தோன்றியது.
அப்பாவுடனான சம்பாஷணை என்றுமே அழகு தான். ஒரு நல்ல சினிமா துவங்குமுன் தியேட்டரில் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருப்பது போல் உணர்ந்தேன் .

மேஜையில் வைக்கப்பட்ட பிஸ்கட்டுகள் பரப்பியிருந்த தட்டைப்பார்த்தபடி அப்பா சிரித்தார்.

என்னப்பா சிரிக்கிற?”

நான் முதல்முறையா மெட்றாசைப் பார்த்தது பி.யூ.சி படிக்க அங்கு போன போது தான். எங்க அண்ணா புகாரி ஹோட்டலுக்கு கூட்டிக்கிட்டு போனார். இப்படித்தான் ஒரு தட்டு பூரா பிஸ்கட்டை வகைக்கு ரெண்டாய் கொண்டு வச்சான். நானும் திணறத்திணற வாய்க்குள் அடைச்சுக்கிட்டேன். உன் பெரியப்பா அவ்வளவு பசியா உனக்குன்னு கேட்க, குடுத்த காசு வீணாக்க மனசில்லாமத்தான் எல்லாத்தையும் சாப்பிட்டேன்னு சொன்னேன்... சாப்பிட்ட பிஸ்கட்டுக்கு மட்டும் தான் பி‌ல் போடுவான் என்று தெரியாமல்.

சிரித்தேன்.. அப்பாவுக்கு எந்த சூழலிலும் சொல்லவொரு நிகழ்ச்சி இருக்கும். ஜோடனையோடு அவர் சொல்லும் அழகே தனி. அப்பா இதையே அம்மாவுக்கு சொல்லியிருந்தால் பட்டிக்காடுன்னு சொல்லி தலையில் அடித்துக் கொண்டு அவரைக் குறுக்கியிருப்பாள். இல்லையெனில் இந்தக் கதையைக் கேட்டு கேட்டு காது புளிச்சிபோச்சு என்று வெட்டியிருப்பாள்.. அப்பா! தோழமையே இல்லாமலா நீ இருந்திருக்கிறாய் ?

டீ ரொம்ப நல்லா இருக்குடா செல்லம்.

அடுத்தமுறை இந்த ஹோட்டலுக்கு வந்தால் நீ அமர்ந்திருக்கும் இந்த நாற்காலியில் தான் அமர்வேன் அப்பா...

அடுத்து என்னப்பா பண்ண போறே?”

வேலையை விட்ட முதல் மாதம் ஆபீசிலிருந்து வர வேண்டிய பணம் வாங்க வேண்டி அலைஞ்சேன். நங்கநல்லூரில் உன் அண்ணன் வீடு கட்டி முடிக்கிற அலைச்சலில் ரெண்டு மாசம் ஓடிப் போச்சு. இப்போ நாலு நாளா மும்பைல உன்னோட டேரா. இனிமேதான் என்ன செய்யிறதுன்னு யோசிக்கணும் அஜீ

உனக்கு சமையல் தான் சூப்பரா வருமில்ல?”

ஆமா ஜோரா சமைப்பேனே! ஏன் கண்ணு கேக்குற?”

கும்பகோணத்துக்கு போனப்புறம் கொஞ்ச நாள் நீ தனியா தான் இருக்கணும்

ஏண்டா?”

கொஞ்ச நாள் அம்மா என்னோட இருக்கட்டும்பா. ஹோட்டல் சாப்பாடு போரடிக்குது.

உடனே அப்பா ஒன்றும் சொல்ல வில்லை. அம்மா கிட்ட பேசினியா?”

கேட்டேன். இருந்துட்டா போச்சுன்னா. எதுக்கும் உன் கிட்டயும் பேசச் சொன்னா.

சரி. அவ கொஞ்ச நாள் உன்னோட தான் இருக்கட்டுமே.

வீடு வந்து சேர்ந்தோம். வேகும் வெஞ்சனம் வீடெல்லாம் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. அம்மா சமையல். அடிச்சிக்க முடியாது. நோ சான்ஸ் !

அப்பாவும் பிள்ளையும் நடந்தே கும்மாணத்துக்கு போயிட்டீங்களோன்னு பார்த்தேன் அம்மா தொடர்ந்தாள்...அப்பாவுக்கு நேத்தெல்லாம் முழங்கால் வலின்னு கால் முட்டில கஞ்சீரா இல்லே வாசிச்சிகிட்டிருந்தார்?”.

அம்மாவுக்கு அப்பா மேல் உள்ள கரிசனமா இல்லை நையாண்டி செய்கிறாளா என்று எனக்கு புரியவில்லை.

கால் முட்டில கஞ்சீரா! உங்கம்மா தஞ்சாவூர் இல்லே?!. கால் முட்டி கஞ்சீரா வாசிக்கும் தோள்பட்டை தோடி ராகம் வாசிக்கும்

அவுட் ஆப் காண்டெக்ஸ்ட் அப்பா. கால் முட்டி கஞ்சீரா வாசிக்கும்கறதுக்கு தோள்பட்டை ஏதாவது வாத்தியம் வாசிச்சா தான் சரியா வரும்.. தோடி ராகம் பொருத்தமா இல்லை.

தோள்பட்டை தோவுக்கு தோடின்னு அடுத்தாப்புல போட்டேன். நீ தான் வேற சொல்லேன்.

நமக்கு வராதுப்பா
.
என்ன தஞ்சாவூர் பார்ட்டி வாயை திறக்கக் காணோம்? சரக்கு இல்லையா ? தீர்ந்து போச்சா?” என்று குழந்தையாய் சிரித்தார் அப்பா

பெரிய கம்ப சூத்திரம்! கால் முட்டி கஞ்சீரா வாசிக்கும். தோள்பட்டை துந்தனா வாசிக்கும்.... இவரு நாவல் வேற எழுதப் போறாராம்! கழுத்து நொடிப்பில் காதுத்தோடு ஒருமுறை மின்னி ஓய்ந்தது.

சபாஷ்மா

அப்பா மௌனமாய் என்னைப் பார்த்தார். சின்ன அசட்டு சிரிப்பு தேயாது இதழ்களில் தொங்கிக் கொண்டிருந்தது.

உம் பிள்ளை உன்னை இங்க இருக்க சொல்றான் கேட்டியா?”.

யாருக்கு நான் தேவையோ அங்க இருக்கிறது தானே சரி.

ஏன் வம்புக்கிழுக்கிறே? நீ கும்பகோணத்துல தேவையில்லைன்னு நான் சொன்னேனா?”

சொன்னால் தானா? வேலைவாணாம்னு ஒதுங்கியாச்சு. ஆம்படையாளும் வேணாம்னு ஒதுக்கிட்டா கும்பகோணத்துல வானப்பிரஸ்தம் அனுபவிக்கலாமே.

லூசு. வானப்ரஸ்தத்துக்கு பொண்டாட்டியையும் கூட்டிண்டு தான் போவா. சன்யாசத்துக்குத்தான் ஓதறிட்டுப் போறது.... மேதாவி.

பேச்சுல கூட சேர்ந்திருப்போம்னு வர்றதா? விட்டுட்டு ஓடற மனசுக்கு வேறெப்படி பேச வரும்?”

ஏன். நீ கூட அஜிதனுக்கு சொல்லியிருக்கலாமே.. அப்பாவும் கொஞ்ச நாள் இங்கயே இருக்கட்டுமேன்னு?”

நான் சொல்லி எடுபடுமா? நீங்க தான் உங்க பிள்ளை மனசுலே எதெதையோ சொல்லி நைச்சியமா இந்த ஏற்பாட்டைப் பண்ணியிருப்பேள். தனியா சந்தோஷமா இருங்கோளேன். இதெல்லாம் புதுசா எனக்கு ? இவனை பிள்ளையாண்டிருந்த போது, இந்த சமயத்துல அம்மா துணை அவசியம்னு அரிச்சு புக்காத்துக்கு என்னை அனுப்பிட்டு, எதுத்தாத்து கோமளாங்கி கௌசல்யாகிட்ட புரை குத்த மோர் இருக்கான்னு வழிஞ்ச ஆளு தானே நீங்க.

அம்மா ப்ளீஸ். இப்பிடி எதுக்கு மேல மேல பேசறே. உன்னை இங்க இருக்கச் சொல்லி ஒரு ஆசையில் கேட்டேன். சண்டை போடாதயேன்

அம்மா அப்பாவுடன் போவதாய் சொல்லிவிட்டாள்.

மும்பை ரயில் நிலையத்தில் அம்மாவை ரயில் பெட்டியில் அமர வைத்துவிட்டு, போகும் வழிக்கு பழங்களும் மினரல் வாட்டரும் வாங்க இறங்கினேன். கூடவே அப்பாவும் இறங்கி வந்தார்,

அம்மா கிளம்பிட்டாளேன்னு நீ வருத்தப் படாதே. அவ ஒரு டைப்பு. கொஞ்ச நாள் கழிச்சு நான் அனுப்பி வைக்கிறேன்.இவ்ளோ சொல்றாளே.. நான் தனியா இருப்பேன்கிற தவிப்பு தான் அவளுக்கு அப்பாவின் சமாதானம் தொடர்ந்தது.

அதெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா. அப்பா கையை பிடித்துக் கொண்டேன். பெட்டிக்கு திரும்பினோம்.
இன்னும் ஐந்து நிமிஷத்தில் வண்டி புறப்பட்டு விடும்.

இறங்கி ஜன்னலண்டை வந்துடு என்றாள் அம்மா.

பிளாட்பாரம் இறங்கிவந்து ஜன்னல் கம்பியை பிடித்தபடி அப்பாவைப் பார்த்த வண்ணம் நின்றேன்.

அஜிதன் நீ இருப்பேன்னு ஆசையா கேட்டான். மாட்டேன்னு திரும்பரதுல மனசு கஷ்டம் பாரு அவனுக்கு.

அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா

அப்பா! நீ கொஞ்ச நாளாவது தனியா,முழுசா இருக்கணும் புழுக்கம் இல்லாம.. அமைதியா உன்னை நீயே மீட்டெடுக்க, உன் சந்தோஷ தருணங்களை ஏதும் தடையின்றி நீயே உருவாக்கிக்கொள்ள அல்லவா அம்மாவை இங்கேயே இருத்திக் கொள்ள நினைத்தேன்? நினைத்தது நடக்கிறதா? அல்லது இந்த நினைப்பே சரியா?

என்னடா ஒண்ணும் பேசாமல் யோசனைல இருக்கே?” என்ற அம்மாவின் குரல் சிந்தனையை அறுத்து என்னை மீட்டு வந்தது.

அஜீ! அம்மா போறேனேன்னு தப்பா எடுத்துக்காதே! உங்கப்பாவுக்கு பசி தாங்காது. ஷூகர் வேற படுத்துது. நான் இல்லைன்னா சாப்பிடாம கொள்ளாம ஏதும் புஸ்தகம் வாசிச்சின்டேயிறுப்பார். குழந்தை திருட்டுத் தனமா மண்ணு தின்கிற மாதிரி தானே காபி வச்சு சக்கரைய அள்ளி போட்டுப்பார். நான் இருக்கிற வரையில பார்த்துப்பேன். போயிட்டா அவர்பாடு உன்பாடு.. ஊர் போய் சேர்ந்தப்புறம் முதல் வேலை உனக்குப்பொண்ணு பாக்குறதுதான். இந்த மாசி வந்தா உனக்கு இருபத்தியாறு வயசு முடிஞ்சுடும்.

ஆரம்பிச்சுட்டியாம்மா. கல்யாணம்னாலே எனக்கு கால்முட்டி கஞ்சீரா வாசிக்கிறது, தோள்பட்டை துந்தனா வாசிக்கிறது என்றேன்.

அம்மா பெரிதாக சிரித்தாள். நகர ஆரம்பித்து விட்ட ரயிலின் ஜன்னலூடே அப்பாவின் முகம் மங்கலாய்த் தெரிந்தது. அப்பாவுக்கும் கண்கள் கசிந்து நான்கூட மங்கலாய்த் தான் தெரிந்திருப்பேன்.
     



    




.