ஞாயிறு, மே 26, 2013

டி.எம்.எஸ்



 
இன்னுமொரு தூக்கம் துறந்த இரவு. மூன்று தலைமுறைகளை வசியப்படுத்தி ஆதூரம் தந்த காந்தக்குரல் மீளா மௌனத்தில் ஒன்றி விட்டது. டி.எம்.எஸ் அமரராகி விட்டார். சில நஷ்டங்கள் என்றுமே ஈடு செய்யப்படுவதில்லை. இந்த இழப்பும் மாளப் பெரிய இழப்பு..  

இந்த மகத்தான கலைஞனுக்குக்கூட சாவு என்ற ஒன்று வரும் என்று எதிர்பார்க்கவில்லை தான். அவர் பின்னணி பாடகர் என்று என்றுமே நான் ஒத்துக் கொண்டதில்லை. நடிகனின் குரலின் பாங்கை உள்வாங்கி, கவிஞனின் வரிகளில் தொக்கி நிற்கும் அர்த்தத்தையும்,உணர்வையும் தன்வயப்படுத்தி, கோதற்ற தங்கக் குரலில் வெளிப்படுத்த  டி.எம்.எஸ் போன்ற வேறொரு பாடகன்  யாருமே இருந்ததில்லை. பாடலாசிரியனின் வரிகளுக்கு வண்ணம் சேர்த்தவர் : நடிகனின் ஆளுமைக்கு தன் குரல் ஜாலத்தால் அர்த்தம் தந்தவர் டி.எம்.எஸ்.

எத்தனை ஆயிரம் பாடல்கள்... குழைவும் கோபமும்,காதலும் காருண்யமும்,ஏக்கமும், துக்கமும் இந்த மேதையின் குரலில் வடிவம் பெற்றன. பின்னணி இசையின் ஏகபோக சக்ரவர்த்தியாய் பீடு நடை போட்டவர்.

அவர் பாடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகின்றன தான். அண்மைக்கால டீ.வி நிகழ்ச்சிகளின் சித்ரஹிம்ஸையில்,அந்த காந்தர்வனின் குரலோசை மூப்பில் நொய்ந்து நெளிந்து நடுங்கியதும் கூட நாம் பார்த்தது தான். ஆனாலும் நம் டி.எம்.எஸ்ஸை நம்மிடமிருந்து பிரிக்க சாவுக்குத் தான் எத்தனை நெஞ்சுரம்? உலகெங்கும் வாழும் அவரின் ரசிகர் ஒவ்வொருவரும் தன் ஆயுளில் ஒரே ஒரு நிமிடம் அவருக்காய்க் கொடுக்க முடிந்திருந்தால் கூட இன்னுமொரு நூற்றாண்டு வாழ்ந்திருப்பார் அன்றோ டி.எம்.எஸ் ?

டி.எம்.எஸ் பாடல் கேட்காமல் நான் கழித்த நாட்கள் வெகு குறைவு. உலோபி சேர்க்கும் பொன் போல அவரின் பாடல்களை தேடிதேடி சேர்த்தேன். இனிஅவர் பாடல்களைக்  கேட்கும் போதெல்லாம் அவர் இப்போது இல்லை எனும் எண்ணம் தரப்போகும் நெருடலை எப்படி தாங்கப் போகிறோம் என்பது இன்னுமொரு துக்கம். இன்னும் சில நாட்கள் உன் பாடல் கேட்கும் நெஞ்சுரம் எமக்கில்லை.

அவர் பாடித்துதித்த முருகன் இணையடி நிழலில் இளைப்பாற அமரனாகி விட்டார் நம் அன்பு டி.எம்.எஸ்....

மயில் முருகன் இனி டி.எம்.எஸ்ஸிடம் நேயர் விருப்பம் கேட்டபடி உள்ளம் உருகலாம்.. 

ஆனாலும் கருணை முருகா... எங்கள் நட்டத்திலா நீ லாபம் பார்ப்பது?


புதன், மே 01, 2013

தத்த்தி




இன்னமும் இந்த தத்த்திப் பயலை எங்கே காணோம்?

காலிப் பொடிமட்டையை மத்தியானத்துலேயிருந்து எவ்வளவு தடவை தான் முகர்வது? தீனதயாளு சாருக்கு கோபமாய் வந்தது. ஒரு வருஷமாய் இந்தத் திண்ணைதான். காலு விழுந்தப்புறம் எல்லாரோட சகாயமும் இல்லாமல் ஏதும் முடிகிறதா? போதாததற்கு தெரிந்தவர்கள் எல்லோரும் ஒவ்வொருவராய்க் கழன்று கொண்டு விட்டார்கள். தயாளு பேச ஆரம்பிச்சா விடிஞ்சிரும்ன்னு புது பிராபல்யம் வேறு. ஏதோ ஆஞ்சநேயனுக்கு பண்ணின பக்தியில் அய்யாதுரையும், தாசரதி என்கிற தத்த்தியும் வந்து போய்க் கொண்டிருக்கிறார்களோ பிழைத்தோமோ என்று தயாளுசார் சந்தோஷிப்பது வழக்கம்.

புல்லட் வண்டி அதிர்கிறது.. அய்யாதுரை தான் வரான்...

எப்படி சார் இருக்கீங்க?” பிளாஸ்டிக் பையில் இருந்த நாலு ஆப்பிளையும், ஒரு கட்டு தையலிலையையும் திண்ணையில் வைத்தார் அய்யாதுரை. அய்யாதுரைக்கு தயாளுசார் ஒன்பதாம் வகுப்பில் கணக்கு வாத்தியார்.

என்ன அடி வாங்கியிருப்பான்? இல்லாத வீட்டுப் பையன்.. எதனாலோ தயாளுசார் அய்யாதுரைக்கு இலவசமாய் ட்யூஷன் எடுத்து பரிட்சைக்கு பணம் கட்டி ஆதரவு செய்தது இப்போது தலைக்கு மேல் காய்க்கிறது. க்ஷேமமாய் இருக்கட்டும்.. இந்த நாஸ்திக வாதம் மட்டும் அவனுக்கு இல்லைன்னா எப்படி இருக்க வேண்டியவன்? கட்டட காண்ட்ராக்ட் வேலையில் துட்டை அரித்து கொட்டியாகிறது..

பண உதவியாகட்டும் சரீர பிரயாசை ஆகட்டும் அய்யாதுரை  அவருக்கு  ஒரு குறையும் வைத்ததில்லை. ஆனால் தயாளுசார் விடாமல் சாமி சடங்கு என்று பேசும் போது பதிலுக்கு கிண்டலாய் பதில் சொல்லப் பழகிவிட்டார் அய்யாதுரை. இந்த ஒரு வருடமாய்  அய்யாதுரையை திட்டுவதையும் குறைத்துக் கொண்டு விட்டார் தயாளு.
யாருமற்று, தம்பியின் பிள்ளை வீட்டுத் திண்ணையில் தனியாளாய் கிடக்கும் போது என்ன தர்க்கம் வேண்டிக் கிடக்கிறது ?..கபிராஜ வல்லபா.. சத்குரோ..

அப்ப கிளம்பறேன் சார்! என்ற அய்யாதுரை நினைவுக்கு வந்தவராய் சட்டைப் பையில் இருந்து பொடிமட்டையை எடுத்துக் கொடுத்தார்.

மகராஜனா இருடா?”  புல்லட் புட்புட்ட்.. என்று பறந்தது.. தயாளு சாருக்கு பொடியை போட்டுக் கொள்ளக் கூட தோன்றவில்லை.. என்ன பாசம்.. என்ன முன்யோசனை.. நெகிழ்வாய் இருந்தது.. பாவிக்கு பகவத் நிந்தை மட்டும் இல்லையின்னா....

’மாமா.. மாமா  தாசரதி அரக்கபரக்க ஓடிவந்தான்.. எப்போ வராம் பாரு?

தாசரதி என்றால் அங்கு யாருக்கும் தெரியாது. கொஞ்சம் மந்தமானவன் என்பதால் எல்லோரும் தத்த்தி தத்த்தி என்று அழைத்து அதுவே பேராகி விட்டது. நாலுவருஷம் முன் அவன் தாயாரும் போய் சேர்ந்தாள். தனிக்கட்டை தான். கொஞ்சம் குட்டை தான். யாரும் பெண் கொடுக்கவில்லை. ராயரின் ரைஸ் மில் மாவு மிஷினில் மாவரைக்கும் வேலை.. மதியம் ஒரு மணிக்கு மில்லை கட்டிவிடுவார் ராயர். ஊர்க்கோடியில் இருக்கும் அவரது நிலத்தில் துளசி செடிகளுக்கு தண்ணீர் விடுகிற வேலையும் தத்த்திக்கு உண்டு.

என்னடா டவுனுக்கு போய்ட்டியா? ஆளையே காணும்?”.

எங்கயும் போகல்லை மாமா. ரேழில தூங்கிட்டேன். தத்திக்கு நாக்கு லேசில் மடியாது. பேச்சு குழறலாய்த் தான் இருக்கும்..

நல்லா தூங்கினே போ.. வெளக்கு வைக்கிற நேரம் பாத்தியோ?”

அத விடுங்கோ. இதக் கேளுங்கோ மாமா. கேட்டா எழுந்து கூத்தாடுவீங்க

என்னடா பீடிகையெல்லாம் பலமா இருக்கு? நீ தூங்குற அழகைப் பார்த்து எந்த சுந்தரியாவது கல்யாணம் பண்ணிக்கிறேன்னுட்டாளா?”

:இனிமே எனக்கெதுக்கு மாமா கல்யாணம்? சொப்பனம் கண்டேன் மாமா.. சித்த மின்னே... கனவுல யாரு வந்தா தெரியுமா? ஆஞ்சநேயராக்கும்.

என்னது? ஆஞ்சநேயராஅடடா.என்ன பாக்கியமடா உனக்கு! போக்கத்தவனே!. நானும் தான் எத்தனை ஸ்லோகம் சொல்றேன் எத்தனை பஜனைப் பாட்டா ஹனுமான் மேல பாடுறேன்.. ஒரு நாளும் ஸ்வாமி சொப்பனத்துல வந்ததில்லையே? தண்ணில மூழ்கறாப் போல,நாயி துரத்துறாப்பலயும் தானே எனக்கு வருது?”

பெருமையாய் சிரித்துக் கொண்டான் தத்த்தி

சொல்லு. சொப்பனத்துல பகவான் என்ன பண்ணினார்?” ஆர்வ மேலீட்டால் குரல் உயர்த்திக் கேட்டார் தயாளு.

நம்ம ராயர் தோட்டத்துல பெரிய பாறை இருக்கில்ல? அதுல சாஞ்சி உட்கார்ந்திருந்தார். நான் துளசி பறிச்சிகிட்டிருக்கேன். இங்க வாடா தத்த்தின்னு கூப்பிட்டார்..

பாக்கியம்டா? தத்த்தின்னா கூப்பிட்டார்?”

ஆமாம் மாமா.. ஏதும் ஸ்லோகம் தெரியுமா?ன்னு கேட்டார் மாமா. எனக்குதான் எதுவும் சட்டுன்னு வாய்க்கு வரல்லே.."

முட்டாப் பயலே.. அஞ்சிலே ஒன்று பெற்றான் சொல்லிக் கொடுத்திருக்கேன் இல்லே? அத சொல்லித் தொலய வேண்டியது தானே?”

ஹாங்.. வரும் வரும்.. நீங்க அவர் எதுத்தாப்பல நின்னிருந்தீங்கன்னா அப்போ தெரிஞ்சிருக்கும்.. பெரிசா பச்சையா உட்கார்ந்திருந்தார். வெலவெலன்னு வந்துடுத்து.

அது சரி. பெருமாளைப் பார்த்தா யாருக்கு பேச்சு வரும்?.. பச்சையா இருந்தார்ன்னியே.. கிரீடமெல்லாம் இருந்ததா?”

அதெல்லாம் இல்லை தலேல முடி கொண்டையாட்டம் கட்டி இருந்தது.. துளசி மாலை சுத்தியிருந்தது.

ஹாஹா... சமய சஞ்சீவி வந்திருக்காருடா.. என்ன கொடுப்பினைடா உனக்கு? அப்புறம்?” தயாளு பரபரத்தார்.

என் தூக்குசட்டியிலே பெருமாள் கோவில் தத்தியன்னம் இருந்தது. அதைக் குடுன்னு வாங்கி ஒரே கவளமா வாயிலே போட்டுகிட்டார்.இந்தப் பாறை சாஞ்சிக்க வாட்டமா இருக்குடான்னார்

ஹே ராமதூதா! அப்புறம்?”

பாறை மேல சாஞ்சிக்கிட்டு, நல்லா காலை நீட்டி, இந்தக் காலை சித்த அமிக்கி விடுடான்னார். நானும் பயந்து பயந்து பிடிச்சிவிட்டேன். கொஞ்ச நேரத்துல காலை இழுத்துகிட்டு சட்டுன்னு எழுந்தார். எனக்கு டவுனுக்கு போகணும்.. சமர்த்தா இருன்னு தலையில தட்டினார்.

தயாளு தத்த்தியின் தலையைத் தடவி கண்ணில் ஒற்றிக் கொண்டார். ஆஹா.. நேர்ல பாக்குறாப்புலயே இருக்கே.. சொல்லு சொல்லு..

அப்பன்னு பார்த்து நம்ம அய்யாதுரை புல்லட்டுல அங்கே வந்தார்.

அந்த கடங்காரன் அங்க எங்க வந்தான்?”..

என்னடா தத்த்தி! டவுனுக்கு போறேன் வரயா.. நாலு டியூப் லைட் எடுத்துக்கிட்டு வரணும்ன்னு சத்தமா கேட்டார் அய்யாதுரை

ஸ்வாமி ஒண்ணும் சொல்லலையா?”

நானே பதிலாஒண்ணும் சொல்லலியே... உங்களை நான் மறுபடி பார்க்க முடியுமான்னு ஹனுமாரைக் கேட்டேன். சிரிச்சார்.. நீ ரொம்ப புண்ணியம் பண்ணியிருந்தா என் வால் மட்டும் கண்ணுக்கு தெரியும்னார்.. ஒரே தாவலா தாவி அய்யாதுரை புல்லட்டு பின்சீட்ல உட்கார்ந்துட்டார்.. அப்புறம் என் கண்ணுல அவர் தெரியலே.தனக்குப் பின்னால் ஹனுமார் அமர்ந்திருப்பது தெரியாமல் அய்யாதுரை வண்டியைக் கிளப்ப, அதுவும் புழுதியடிச்சிக்கிட்டு  நகர்ந்துட்டுது.

அய்யாதுரை பரம நாஸ்திகனாச்சேடா. போயும்போயும் ஸ்வாமி அவனோடயா போகணும்? அது சரி! என்னத்துக்கு இப்போ சிரிக்கிறே?”

மாமா.. ரொம்ப புண்ணியம் பண்ணியிருந்தா என் வால் மட்டும்  தெரியும்னாரே ஸ்வாமி.. அப்படி புண்ணியம் பண்ணினவா பார்த்திருந்தா, வண்டில போற அய்யாதுரை வாலோட போறாப்புல தெரிஞ்சிருக்கும்! தத்த்தி கைக்கொட்டி சிரித்தான்

போறும்.. அவன் சூத்தாமட்டை கெட்டக்கேட்டுக்கு வாலு ஒரு கேடு!

இருவரும் வாய்விட்டு சிரித்தார்கள்..

என்னவோடா.. உங்கம்மா பண்ணின பாக்கியம் இன்னைக்கு உன் கனவுல தரிசனம் காமிச்சிட்டார் ஹனுமார். உனக்கு இனி நல்ல காலம் தாண்டா தாசரதி.. அட என்னடாது..என் காலைப் பிடிக்கிறே?ஸ்வாமி காலைத்தொட்ட கைடா உன்னுது. என் காலைத் தொட்டு என்னை பாபியாக்கிடாதே!

ஸ்வாமி எதுக்கு டவுனுக்கு போயிருப்பார் மாமா?”

உம்... காலேஜில வாசிக்க..  என்ன கேள்வி கேக்குறாம் பாரு?”

ஸ்வாமிக்கெல்லாம் ஏதும் பள்ளிக்கூடம் படிப்புன்னு உண்டா மாமா?”

தயாளு சாருக்கு ஆயாசமாய் இருந்தது தத்த்தியின் கேள்வி.. இவனைத் இனி திட்டக் கூடாது. ஸ்வாமியே அவனைத் தேடி வந்திருக்கிறார். லேசுபட்ட விஷயமா?

தாசரதி.. ஹனுமனுக்கு நவவியாக்ரண பண்டிதன்னு ஒரு பேர் இருக்கு தெரியுமா?. அவர் பாலகனா இருக்கறப்போ நேரா சூரியன் கிட்டயே போய் எனக்கு வேதம் சாஸ்த்ரம்லாம் இப்போவே சொல்லிக் கொடுன்னு அடம் பிடிச்சார். எனக்கு இப்போ நேரம் இல்லே.. என் வேலையைப் பார்க்கணும் போன்னுட்டார். நானும் கூடவே வரேன்னார் ஹனுமார். நான் போற வேகத்துக்கு ஈடா உன்னாலே பின்னாடி கூட வர முடியாது. அப்படி வந்தாலும் வித்தையை சொல்லிக்கிற சிஷ்யன் குருவுக்கு முன்புறமா இருந்து வாய்ப் பொத்தி கேட்கணும்.. உன்னால எப்படி முடியும்? வேற குருவைப் பார்த்துக்கோன்னு சொல்லிட்டு ஸஞ்சாரம் பண்ணத் தொடங்கிட்டார். ஹனுமாரோ நிமிஷமா சூரியனுக்கு முன்னுக்கா வந்து கையால் வாயை பொத்திக்கிட்டு ரிவர்ஸுலேயே ஸூர்யன் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்தபடி ஒரு நாளைக்குள்ளே சகல வேத சாஸ்த்ரத்தையும் கத்துகிட்ட மகானுபாவர்டா அவர்.

தத்த்தி கிளம்பி போய் விட்டான். ஊரெல்லாம் அவன் கனவு ஒரே  பேச்சாய் போய் விட்டது. தாசரதியின் முகத்துக்கு ஒரு தனி சோபை வந்து வலம் வர ஆரம்பித்தான்.

கொஞ்ச நாளில் தயாளு சாருக்கு உடம்புக்கு  ரொம்பவே முடியாமல் போய் செத்துப் பிழைத்தார். டவுன் ஆஸ்பத்திரியில் பலநாட்கள் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தவரை நிறைய செலவு செய்து கரை சேர்த்ததென்னவோ அய்யாதுரை தான். எல்லாம் மெல்ல உணரத் தொடங்கிய தயாளுவுக்கு அய்யாதுரை வாலுடன் நடந்து போவது போலவே பிரமை ஏற்பட்டது.. தாசரதியோ கண்ணிலேயே படவில்லை. ஒருவாறாய் மீண்டும் பழைய திண்ணைக்கு வந்து சேர்ந்தார் ஈர்க்குச்சி போல..
  

இப்போதெல்லாம் காசிராயர் தோட்டம் எவ்வளவோ மாறி விட்டது. ஹனுமார் சாய்ந்து அமர்ந்த கல்லை சுற்றி கர்ப்பக்ருஹம் எழுப்பப்பட்டு, ஸஞ்ஜீவி பர்வதத்தை தூக்கிக் கொண்டு பாயும் பஞ்சலோக விக்ரகம் பிரதிஷ்டையாகி ஆறுகால பூஜையோடு அமர்க்களப் படுகிறது. கர்ப்பக்ருஹத்தின் முன்பாய் ஒரு பெரிய மண்டபம், கூரையில்  பல ஓவியங்களும்,தூண்களில் சுதைபொம்மைகளும் வண்ணமயமாய் காட்சியளிக்கிறது. கோவிலே கூட்டம் அலைமோத திணறிக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு வங்கியின் உபயத்தில் ஒரு பெரிய ஸ்டீல் உண்டியல் வேறு.

மண்டபம் தாண்டி கொடிமரம். அதற்குமுன்பாய் ஒரு புல்லட் வண்டி சந்தனக்காப்பும், மாலைகளுமாய் நின்று கொண்டிருக்கிறது. இது நம்ம அய்யாதுரையின் புல்லட் அல்லவா? திருமதி அய்யாதுரை தன் புருஷனிடம் இல்லாத பக்தியையும் சேர்ந்து பெற்றிருந்தாள். தாசரதியின் இன்பக்கனாவின் விவரங்கள் அறிந்து அவள் கண்ணீர் உகுத்தாள். நம்பிக்கையே இல்லாத அய்யாதுரையின் வண்டியில் பின்னால் அமர்ந்து ஸ்வாமி போனது தன் பக்திஸ்ரத்தையால் தான் என்று நம்பினாள். கோவில் கைங்கர்யம் துவங்கியவுடனே அனுமார் அமர்ந்த பைக்கை கோவிலுக்கு அளித்து அதற்கு தீரா பெருமை தேடித் தந்தாள். அய்யாதுரையின் கடவுள் மறுப்பு, கட்டிய மனைவியிடம் செல்லுபடியாகவில்லை.. புல்லட்டுக்கு தனி சன்னதி அமைக்க கோவில் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றிநன்கொடை வசூலிக்கவும் முடிவாயிருக்கிறதாம்

லேமினேட் செய்த படங்கள், துளசி மாலைகள், கேசட், ஸ்தோத்திர புத்தகங்கள் ,தாயத்துகள் விற்றுதீர்ந்தன. தெற்கு கோடியில், எலக்ட்ரிக் டமாரம் மிரட்டிக் கொண்டு நிற்கிறது. அதனருகில் உள்ளே இருக்கும் ஹனுமனின் பெரிய போட்டோ.. ஸ்வாமியின் காலடியில் இருபது நாள் தாடியுடன் கைகள் கூப்பி வணங்கியபடி ஒரு தாட்டியான சாமியாரின் போட்டோவும் ஒருசேர இருந்தது. ... அட.. இவரை எங்கோ பார்த்தாற்போல் அல்லவா இருக்கிறது? நம்ம தத்த்தி தாசரதியா?
அபச்சாரம்.. தாசரதி இப்போது பெரிய மகான் என்று கொண்டாடுகிறார்கள்.. தத்திரிஷி ஸ்வாமிகள் எனும் நாமகரணத்தோடு அருள்பாலிக்கிறார். இப்போதெல்லாம் அதிகம் பேசுவதில்லையாம்.

ஹனுமத் ஜெயந்திக்கு பெரிய வடதேர் அனைவரையுமே பரவசப் படுத்தி விட்டதாம்.. தேருன்னா வடம் இருப்பது சகஜம் தானே என்கிறீர்களா? அது வடை தேர்ங்க.. தேர்முழுதும் மிளகு வடையாலேயே அலங்கரிக்கப்பட்டு மணக்க மணக்க அசைந்து வந்த அழகைப் பார்க்க உங்களுக்குதான் கொடுத்து வைக்கவில்லை.. அடுத்த வருஷம் வாரும். இந்த வடைத்தேர்  கூட ஹனுமன் கனவில் தந்த கட்டளை என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

நடமாட்டம் குறைந்து போன தீனதயாளு காதுக்கு அவ்வப்போது தத்திரிஷி ஸ்வாமிகள் பற்றிய தகவல்கள் வரும்.. நாட்பட நாட்பட தாசரதியின் கனவைப் பற்றி அவருக்கு ஏதோ உவ்வாமுள்ளாய் உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதற்காக அந்த பெருமாள் இல்லைன்னு ஆகிவிடுமோ?ஸ்வாமி அவர் கார்யத்தை எதையோ, யாரையோ வியாஜ்ஜியமாய் வைத்து நடத்திக் கொள்கிறார். எதுக்கு வேற எண்ணமும்  பொச்சரிப்பும்.?. போன வாரம் வடைத்தேர் வீட்டைக் கடந்து வீதியுலா போனபோது வீசிய வாசனை இன்னமும் மூக்கிலே துளைக்கிறது.. இந்த தத்த்தி.. அபச்சாரம்...தத்திரிஷி ஸ்வாமிகள் பழகின தோஷத்துக்காவது நாலு வடையை தினத்தந்தி பேப்பர் தூண்டில் மடித்து அனுப்பி வைக்கப்படாதோ?