எது சிறுகதையாவது
எனும் கேள்வி சற்றே சிக்கலானதுதான்., ஒரு சம்பவத்தை, அல்லது கதைமாந்தரின் ஒருநேரத்து
உணர்வை, ஒரு சிக்கலை, ஒரு தெளிவை, ஒரு முடிவை சொல்லிச்செல்லும் எழுத்தே சிறுகதை என
உருப்பெற்று விட்டது. சிறுகதையில் கதை மேலதிகமாய் நீட்சி பெறுவதில்லை. ஒரு
நாவலுக்கான பெருங்கதையின் விவரிப்பை நான்கைந்து பக்கங்களில் சுருக்கி சொல்லும்
வடிவக் குறுக்கமும் சிறுகதையாவதில்லை.
தமிழில்
சிறுகதைகள் ஒரு முக்கிய இலக்கியஆக்கமாய் முழுமை பெற்றுவிட்டதென்றே சொல்லலாம்.
கடந்த ஏழெட்டு சதாப்தங்களில் சிறுகதை படைப்புகள் பலநிலைகள் கண்டு முன்னேறி
வந்திருக்கின்றன. வெகுஜனப் பத்திரிக்கைகள் பெரும்பாலான சிறுகதைகளின் எல்லைகளை
வகுத்து விட்டாலும், சிற்றிதழ்கள் பலவித உத்திகளை முயற்சி செய்யும் களனாய்
வாய்த்திருந்தன. இணையமோ,வெள்ளமடைகளைத் திறந்து விட்டது எனலாம். எல்லாமும்
சிறுகதைகளாய் வடிக்கப்படுகின்றன. ஆனால் வடித்ததெல்லாமும் சிறுகதை ஆவதில்லை. இந்த
ஆராய்ச்சி விரிக்கப் பெருகும்ஆதலின், இந்த அளவில் நிறுத்தி மேலே தொடருவோம்.

திரு ஜி.எம்.
பாலசுப்ரமணியம் அவர்கள் வலையுலகில் நன்கு அறிமுகமான பதிவரும் எழுத்தாளரும் ஆவார்.
வயதுக்கும் படைப்பூக்கத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்து வரும் 76 வயது இளைஞர். கதைகள், அனுபவப்பகிர்தல்கள், கவிதை,
ஆராய்ச்சி, ஆன்மிகம் எனப் பயணிக்கும் இவரின் பதிவுகள் வேகமும், பிடிக்கடங்கா
திமிறலும் கொண்டவை. அதொன்றாலேயே தம் வாசகர்களை ஈர்ப்பதையும் தக்க வைத்துக்
கொள்வதையும் நிகழ்த்துகிறார். ஒளிவுமறைவின்றி தன் எண்ணத்தையும் எதிர்பார்ப்பையும்
பதிவு செய்கிறார். இவர் கருத்தை
மறுதலிக்கலாம். ஆயினும் இவரை வாசித்தலை தவிர்க்கமுடியாது.
ஜி.எம்.பி அவர்களின் சிறுகதைத் தொகுப்பான
‘வாழ்வின் விளிம்பில்’ அண்மையில் வெளிவந்த படைப்பாகும்.
இந்த விமரிசனமும் சற்றே தாமதம் தான். முன்னரே
எழுதிவைத்த என் அணிந்துரை, ஒரு சிறுகதை ஆராய்ச்சிக் கட்டுரையாகவே விரிந்து
விட்டபடியால் அதை பிறிதொரு தருணத்திற்காக பக்கலில் வைக்க முடிவு செய்தேன். இவரென்ன
அடுத்த புத்தகம் போடாமலா இருக்கப் போகிறார்? அப்போதைக்கிப்போதே அதை பத்திரமாய்
பதுக்கி வைத்தேன்! இந்தக் கட்டுரையை இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பதிப்புக்கான
மதிப்புரை என்றே கொள்ளலாம்.
இந்தக் கதைகள் பத்திரிக்கைகளில் வெளியானவை அல்ல.
சொன்ன விதத்திலும், சொல்லப்பட்ட பொருளிலும் தனக்கான வடிவை தாமே அமைத்துக்கொண்ட
கதைகள். இவற்றை, சம்பவப் பதிவுகள்... எண்ணச் சிதறல்கள்...ஒரு நோக்கு.... உள்ளொளிப்
பயணம்.... உணர்ச்சி வெளிப்பாடு.... என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லிக்
கொள்ளுங்கள். முந்திரி,திராட்சை, கல்கண்டு,பாதாம்,கர்ஜூரம் என்று பலதும் கலந்துகட்டிக்
கொடுத்தால் சாப்பிடமாட்டோமா என்ன?
இந்தத் தொகுதியில் மொத்தம் பதினாறு கதைகள்.
எழுத்தாளர் உருவாக்கியிருக்கும் இந்தக் கதைவனத்தில் பலதருக்கள், பலபூக்கள், பலவாய்த்
தாவரங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆயினும் அது வகையொழுங்கு பூண்ட நந்தவனமாய்
இராமல், அந்த மீறலே கூட ஒரு ஒழுங்காய் காணப் பெறுகிறது.
‘வாழ்வின் விளிம்பில்’ கதையில் மரணத்தை
எதிர்நோக்கியிருக்கும் ரங்கசாமியின் சஞ்சலங்கள் சீராக பதியப்பட்டிருக்கிறது.
முடிவை ஊகத்துக்கு விட்டபடி முடிகிறது. இந்தத் தொகுதியின் சிறந்த படைப்பாய் இதையே
கொள்ளலாம்.
‘கேள்வியே பதிலாய்’ எனும் கதையில் வரும்
அம்மாஜி போன்ற கதாபாத்திரத்தை நாம் பலஊர்களிலும் பார்க்கலாம். பாத்திரப் படைப்பில்
ஒரு கூர்மை. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம் தான்
என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது.
‘ஏறி வந்த ஏணி’யும் இன்றைய குடும்பங்களின் கசப்பான
யதாத்தத்தை பேசுகிறது. தலைப்பே உணர்த்தும் ஒரு குடும்பத்தலைவனின் நிலை, குடும்ப நலனுக்காக அவன் மேற்கொள்ளும் அனைத்துக்கும் கிடைக்கும்
அங்கீகாரத்தை பேசுகிறது. அந்த வெறுமையின் கசப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.
‘மனசாட்சி’கதை, உடற்கிளர்ச்சி தோற்றுவிக்கும்
காதல் எந்த திசையில் பயணிக்கும் என்று படம்பிடித்து காட்டுகிறது.. ஒரு வழக்கமான
கதை.
இளமையின் ஏழ்மை மனத்தளவில் பலருக்கும்
கடைசிவரை இருக்கத்தான் செய்கிறது. அதிக சம்பாத்தியம் கூட அதை மாற்றுவதில்லை
என்கிறது ‘அனுபவி ராஜா அனுபவி’.
ஒரு சராசரி மனிதன் விஸ்வரூபம் எடுக்கும்
தருணம் ஒன்றை அழகாகச் சொல்லும் ‘இப்படியும் ஒரு கதை’. கச்சிதமான உருவாக்கம்.
பெண்களுக்கான அநீதி சமுதாயத்தில் இன்னமும்கூட
நீங்கவில்லை என்று ஆசிரியர் வீசும் சாட்டை ‘எங்கே தவறு’ கதையில் தெறிக்கிறது.
‘விபரீத உறவு’ கதையின் ஏமாற்றுக்கார
வைத்தியனும்,
ஜோதிட பலிதம் பேசும் ‘சௌத் வி கா சாந்த் ஹோ’வும்,
திருமணம் நடத்துவதின் சிக்கல்களைச் சொல்லும் ‘லக்ஷ்மி
கல்யாண வைபோகமே’வும்,
இளம் விதவைக்கு சம்பிரதாயங்களின் பெயரால்
நிகழும் அவலங்களைச் சாடும் ‘பார்வையும் மௌனமும்’ இதர சில கதைகள்.
சொல்லவந்ததை ஐயம் திரிபற சொல்லிச் செல்கிறது
இவரின் எழுத்து. கதை மாந்தர்களூடே ஆசிரியரும் பயணிக்கிறார்.. அவர்களின்
சம்பாஷணைகளோடே இவர் குரலும் ஒலிக்கிறது. உபதேசிக்கிறது ; கடிந்து கொள்கிறது;
அனுதாபிக்கிறது. சமயங்களிலே வாசகன் ஊகத்துக்கு இடம்தர மறுக்கிறது.. அந்த ஊடாடும்
குரலே கதையாடல் செய்கிறது. அதிகம் கைக்கொள்ளப் படாத உத்தியாய் நிற்கிறது. சட்டென்று
நம்மை ஆட்கொள்வது கதைசொல்லலில் ஜி.எம்.பி சார் கைகொள்ளும் மொழியின் எளிமையே.
வித்தார ஜோடனைகள் இல்லாத நேரிடையான விவரணைகள்.
நம் பாசத்திற்குரிய ஜி.எம்.பி சாரின்
படைப்புகளுக்கு இன்னமும் எழுது பொருள் இருக்கிறது. அவருக்கும் கூட வற்றாத கற்பனைத்திறன்
இருக்கிறது. எழுதியதைக் கொஞ்சம் ஊறப் போட்டு, செதுக்கவும் செய்தல் வேண்டும். நன்கமைந்த
கருத்தே ஆயினும், கதைப்போக்கின் ஓட்டத்தை மட்டுப்படுத்துமெனில் நிர்தாட்சண்யமாய்
கத்திரியை கையிலெடுக்கத்தான் வேண்டும். இதை விமரிசகனாக சொல்லாமல் அவரின் வாசகனாய்
சொல்கிறேன். என் தமையனுக்கு இதைச் சொல்ல எனக்கில்லாத உரிமையா?!
அன்புடன்
மோகன்ஜி