சடுதியில் பிரிந்தே யசோதரை
இதயத்தை,
சுக்கலாய்ப் பொடித்து சுயம்தேட அகன்றான்.
பக்கலில் நல்மகவை பார்த்தபடி தவித்தாள்.
ஓரிரவில் குலைந்ததோர் வாழ்வுதனை ஒதுக்காமல்,.
ஈரைந்து திங்கள்சுமந்த மகவெண்ணி
உயிர்தரித்தாள்.
உருவழிந்து ஊண்குறைத்து உறக்கம் துறந்தாள்.
கருபுகுந்தாள் தான்வகுத்த கூடொன்றின் கர்பத்துளே.
ஆசிகொண்ட நாளொன்றில் புத்தனும் மீண்டான்.
தூசிமூடிய பாதத்தையவள் கண்டு உறைந்தாள்
ஞானம்கண்டு சுக்கான தேகமதோ
தகதகக்க,
மோனத்திலே சருகாய் ஆனவளோ
கேட்டனளே!
‘உம்மையே புத்தன்என்பரோ?
புத்தனெனில் யாதாதல்?’
“இம்மையிலே ஞானம்கொண்டான்’’ என்றனனே ததாகதன்.
பல்லக்கு ஏறாதான் பாதம்பார்த்திருந்த அபலையவள்,
மெல்லவோர் மென்முறுவல் சிந்தியே மௌனமானாள்.
‘இருவருமே ஞானம் கண்டடைந்தோம்
ஐயன்மீர் !
இவ்வுலகை உமது மெய்யறிவோ உய்விக்கும் - ஆயின்
நானடைந்த ஞானமதோ பந்திக்கு வாராதே !
கானகத்து நிலவெனவே வீசியே ஓய்ந்திடுமே’
அளந்துமனம் சொல்லியே சூனியத்தில் லயித்தனள் !
‘விளக்கும்படி’ புத்தனவன் வினவவும் முடித்தனளே :
“பெண்மையது முழுமைகாண வெளித்தேடல் வேண்டாவே.
திண்ணமாய் தன்னுள்ளே பூரணம்தான்
கொள்வாளே”
படம்: நன்றி கூகிள்
படம்: நன்றி கூகிள்