வியாழன், ஆகஸ்ட் 04, 2016

எப்படி மனம் துணிந்தீரோ?

            
‘உனக்கு நினைவிருக்கா? எனக்காக ஏதோ ஒரு அபிநயம் பிடின்னு உன்னைக் கேட்டேன்... எப்படி மனம் துணிந்தீரோ?’ ன்னு, அது அருணாசல கவியோட சாகித்தியம் தானே? அப்படித்தான் இருக்கணும்.. அதுக்கு நீ ஆடினே... 
தான் மட்டும் காட்டுக்கு போறதா ஸ்ரீராமசந்த்ர பிரபு சீதாதேவிக்கு சொல்ற கட்டம். தான்மட்டும் சொகுசா அரண்மனையிலே இருக்க, தன் பர்த்தா  தனியா காட்டுக்குப் போறதாங்கிற தவிப்பு சீதைக்கு. ராமர் தனியா காட்டுக்குப் போய் பலகஷ்டமும் பட்டு, அவர் மட்டும் நல்ல பேரு வாங்கிக்கவானுல்லாம் ஏதேதோ கேக்கிறா... ராமனோட நிழலா கூடவே போயிடணும்னு அவளுக்கு தவிப்பு. என்னென்னவோ உணர்ச்சிகள்....

என்னமாடி அபிநயிச்சே என் செல்வமே? திரும்பத் திரும்ப பாடின ஒரே வரிக்கு ஒவ்வொரு முறையும் எத்தனை தினுசா உன் கண்ணும் புருவமும்,கைகளும் விரல்களும் பேசினது? உன் உடம்பை இயக்குவதெல்லாம் நரம்புகளா இல்லை மின்னல்கொடிகளா? என்ன சுருக்கு, என்ன லாவகம்? கண்முன்னே காட்டையும், பட்சிகளையும், மிருகங்களையும் கொண்டு நிறுத்தினே!’.

சரி ! கூட வான்னு ராமன் ஒத்துகிட்டவுடன் அத்தனை ஆவேச அலம்பலையெல்லாம் விட்டு பூரிப்பும் நிறைவுமா நீ நகைகளை,மகுடத்தை, பட்டாடைகளை களைந்த வேகமென்ன? மரவுரி தரித்து நாணத்துடன் ஸ்ரீராமன் சுண்டுவிரலை உன் சுண்டு விரலால் பற்றின பாந்தமென்ன? நிமிஷமா அயோத்திக்கு என்னையும் கொண்டு சேர்த்தே. அந்த பத்து பதினைந்து நிமிஷத்துக்குள்ளே எனக்குள் என்னென்னவோ ஆனதே... நீ சீதையா பட்ட அவஸ்தையெல்லாம் என் அடிவயித்தைக் கலக்கிப் போட்டதே.... சீதையைப் பெத்த ஜனகனா தவிச்சேனே. ஜனகனுக்கு எது தவிப்பு? உணர்ச்சிகளையெல்லாம் கடந்த ஆத்ம ஞானி அல்லவா அவர்...

யாருக்கு வேணும் ஞானமும் ஆத்மனும்.  அந்தக் கலக்கமும் தவிப்பும் தானேடி எனக்கு நீ காட்டின ஞானம்.. என் கண்ணே.. என் கண்ணே...

“சார்! சார்! சார் !! “

தோளை உலுக்கியபின் தான் ஹரிஹரன் சுயநினைவுக்கு வந்தார்.

“பயமுறுத்திட்டீங்களே சார்!” என்றபடி நின்றிருந்தான் காலையில் அந்த மருத்துவமனை அக்கௌவுன்ட்சில் பார்த்த வாலிபன்.

அவனை வெற்றுப் பார்வை பார்த்தபடி நின்றார். இன்னமும் ‘எப்படி மனம் துணிந்தீரோ’ கண்களுக்குள் சலனித்தபடி இருந்தது.

மூன்றுநாட்கள் தூங்காத கண்கள். உகுக்க மறந்த கண்ணீர் உறைந்து கிடந்த கண்கள். ’’ம்’’....

"சார்! இன்னைக்கு பதினோரு மணிக்கு மும்பை ஸ்பெஷலிஸ்ட் லேண்ட் ஆயிடுவார். ராசியான கை சார் அவருது. எப்படியும் சரியாக்கிடுவார் சார்”

“ம்”

“அவருக்கு பேமென்ட் கேஷா குடுக்கணும்னு பெரிய டாக்டர் சொல்லிகிட்டிருந்தார் சார். கொஞ்சம் ஏற்பாடு பண்ணிட்டீங்கன்னா தேவலை”

“ஓ... எப்போதைக்குள்ள வேணும்?”

“சாயங்காலம் ஆறு மணிக்குள்ளே சார். பேங்கு நாலுமணி வரை தான் சார்.”

“சரிப்பா ! போய் டிரா பண்ணிக்கிட்டு வரேன்.”

“தேங்க்ஸ் சார்... ஏதும் சாப்பிட்டீங்களா?”

சின்னதொரு தலையாட்டல்.... ஆயிற்று என்றோ இல்லை என்றோ,கேட்டதற்கு நன்றி என்றோ அர்த்தம் பண்ணிக்கொள்ள இயலாத தலையாட்டல். மெல்ல ஐ.சி.யூ அறையின் சிறு கண்ணாடி வட்டத்தின் வழியே பார்த்தார். பாதங்கள் அசைவுகளின்றி வாடித் தெரிந்தன. வரும் டாக்டர் என்ன செய்வார் என்று தெரியவில்லை. நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ளக்கூட பயமாய் இருந்தது. பேங்குக்கு போக திரும்பினார்.
எதிரே ஜூனியர் டாக்டரும் மூன்று போலீஸ் அதிகாரிகளும் வந்துகொண்டிருந்தார்கள்.

“சார்! போலீஸ் வாண்ட்ஸ் டு டாக் டு யூ”

“ம்”

“சார்! இந்த அறையில்  உட்கார்ந்து பேசுங்கள்.! மைண்ட் சம் டீ?”

போலீஸ் அதிகாரி அவரை புன்னகையுடன் மறுத்தார்.

“வெரி சாரி மிஸ்டர் ஹரிஹரன். பெரிய அதிர்ச்சி தான் இது.”
ஹரிஹரன் கண்களை மூடி ஆழமான பெருமூச்சு விட்டார்.

“சார்! என் பெயர் சார்லஸ். இந்த வழக்கைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததை எல்லாமும் சொல்லுங்கள்.”

“ முந்தா நாளே கேட்டாங்களே...”

“ இதுவும் தேவை கருதி தான். ப்ளீஸ் கோஆப்பரேட்”

“ஷ்யூர்...கேளுங்க சார்... சார்லஸ்....”

“ இந்தப் பெண் உங்கள் சொந்த மகளில்லை என்று சொன்னார்கள்.”

“ ஆமாம். திருமணமாகி ஆறு ஆண்டுகளாகியும் எனக்கு குழந்தைப் பிறக்கவில்லை. என் தொழிற்சாலை போர்மேனும் அவன் மனைவியும் ஒரு சாலை விபத்தில் உயிரிழக்க, அவர்கள் இரண்டு வயது மகளை நானே.. நாங்களே வளர்க்க ஆரம்பித்தோம்.”

“இந்தப் பெண் மஹிமாவுக்கு இது தெரியுமா?”

“பத்து வயது ஆகும்போது தெரிவிக்க வேண்டி வந்தது. என் சொத்துக்களை உயில் எழுதிய தருணத்தில்”

“அதற்கென்ன அவசியம் அப்போது நேர்ந்தது சார்?”

“காட்! அந்த சமயத்தில் என் மனைவிக்கும் எனக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது. அவளுடைய சுற்றம் சரியில்லை. என் பணத்தை எனக்கு சொல்லாமலே அவர்களுக்காக செலவு செய்ய ஆரம்பித்தாள். கேட்டபோது சண்டை. அழுகை.. அவள் அண்ணன் தம்பிகளால் எனக்கும், இந்தக் குழந்தைக்கும் ஏதும் ஆகிவிடுமோ என நினைத்தேன். மனைவியோடு விலகல் முற்றியது. என் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட ஆரம்பித்தாள். எங்கள் விவாகரத்தும் நடந்தது. அதற்குப் பிறகுதான்
உயில் எழுதினேன். இதையெல்லாம் அன்றே விவரமாகக் கேட்டார்களே மிஸ்டர் சார்லஸ். “
ஹரிஹரன் குரலில் அலுப்பு தெரிந்தது.

“சாரி சார்! நான் நேற்றுதான் மாற்றலாகி இங்கு வந்தேன். என்னை இந்த வழக்கிற்கு அதிகாரியாகப் போட்டிருக்கிறார்கள். நேர்பேச்சில் புதுத் தகவல்கள் கிடைக்குமா என்றுதான் உங்களை மீண்டும் தொந்தரவு செய்கிறேன். ப்ளீஸ் டோன்ட் மைண்ட்”

“உங்கள் மனைவி... முன்னாள் மனைவி மேல் ஏதும் சந்கேகம் இருக்கிறதா?”

“இவ்வளவு நாட்கள் கழித்து அவள் ஏன் ஏதும் செய்ய வேண்டும்? அவளுக்கு மஹிமா மேல் அன்பிருந்தது. எனது ஆன்மீக நாட்டங்கள்தான் அவளை விவாகரத்து கேட்கும் அளவுக்கு கொண்டுசென்று விட்டது.. கடைசிவரை என்னிடம் மன்றாடிக்கொண்டே தானே இருந்தாள்?”

“ஓ! அவர்களுக்கு கடவுள் நம்பிக்கைக் கிடையாதா?”

“அவள் முருக பக்தை. விரதங்கள் கூட இருப்பாள். நான் ஒரு குருவை நாடிச் சென்றதும், அவளையும் அவர் சத்சங்கங்களில் கலந்து கொள்ள வற்புறுத்தியதும் தான் தவறாகப் போய்விட்டது.
ஒரு முறை குருவை சந்திக்க அவளை நிர்பந்தித்து கூப்பிட்டு சென்றேன். அவர் ஏதோ ஆசிபோல் சொல்லப்போக, இவள் கடுப்பாகி அவரை மிகவும் ஏசிவிட்டாள். அன்றுதான் முதல்முதலாய்  அவளை கைநீட்டி அடித்தும் விட்டேன். அதுவே பிரிவுக்கு காரணமாகிப் போனது”

ஹரிஹரன் தன் வலது உள்ளங்கையைப் பார்த்துக் கொண்டார்.
அடித்த கை... அணைக்க முடியாத கை போலும்.

“ஸோ... அவர்கள் மீது சந்தேகமில்லை?”...

“ஆமாம் சார்! அவளுக்கு தொடர்பிருக்க முடியாது. நேற்று பேப்பரில் படித்துவிட்டு, விசாரித்துக்கொண்டு வந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள். அவளை நான் இழந்திருக்கக் கூடாது. இவளையும் எப்போதைக்குமாக இழந்துவிடுவேனோ என்று பயமாய் இருக்கிறது சார்லஸ் சார்!”

சப்தமில்லாமல் வாய்திறந்து அழுதார். கண்கள் பிரவாகமாயிற்று. ஒரு கேவல் வந்து அழுகை நின்றது.” சாரி! சாரி!”

சார்லஸ் அவர் கைகளை அழுந்தப் பற்றியது ஆறுதலாக இருந்தது.

“மஹிமாவின் உடம்பில் மொத்தம் பதினொரு கத்திக் குத்துகள். பதற்றத்துடன் குத்தப்பட்டவை. அவற்றில் சில உடம்பில் அதிகம் ஊடுருவாமல் கிழித்திருக்கிறது. நான்கு இடத்தில் ஆழமான குத்துக்கள். அவள் சாகவேண்டும் என்ற அவசரத்துடன் செய்யப்பட்டிருக்கும் அன்ப்ரொஃபஷனல் அட்டெம்ப்ட்.”

“சொல்லாதீர்கள் சார். ப்ளீஸ்!” ஹரிஹரன் பதறினார்.

“மஹிமாவுக்கு ஏதும் காதல் இல்லை என்றும், உங்களுக்கு எதிரிகள் கிடையாது என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அப்படித்தானே?”

“ஆமாம். சார்! குருவருளால் அந்தப்பிரச்னைகள் ஏதும் எனக்கும் மஹிமாவுக்கும் இல்லை.. குருநாதர் சொன்னதுபோல், இது பூர்வ ஜென்ம பாபம் தான்.”

சார்லஸ் அவரைக் கூர்ந்து நோக்கினார். மஹிமாவுக்கு உங்கள் குருநாதர் பற்றி சொல்லியிருக்கிறீர்களா?”

“இல்லை சார் .அவள் குழந்தை தானே? மேலும் அவளுக்கும் அமுதா போல் அவரை பிடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று அவர்பற்றி சொல்லவில்லை. மேலும் குருநாதர் பதிமூன்று ஆண்டுகாலம் இங்கில்லையே.”

ராமன் பதினான்காண்டுகள் காட்டுக்குப் போனார். என் குரு பதிமூன்றாண்டுகள்.. அவர் விருப்பமில்லாமல் அப்படி சிறைக்கு போயிருப்பாரா? குருநாதா... எப்படி மனம் துணிந்தீரோ என் சுவாமி?... ஹரிஹரன் மனதுக்குள் அரற்றினார்..

“யார் அமுதா?”

சட்டென்று கவனம்திரும்பி, “என் மனைவி சார். முன்னாள் மனைவி.”என்றார் ஹரிஹரன்.

“ஓ..சரி”

“உங்கள் குரு இங்கில்லை என்றீர்கள். அவ்வளவு நாளும் எங்கிருந்தார்.?”

“பக்தர்களின் பாவங்களை சுமந்து கொள்ளும் குருநாதர் அதை அனுபவித்துத் தானே ஆகவேண்டும்? எங்கள் குரு ஒரு வட மாநிலத்திலும் பிரபலமாகி வந்த நாட்கள்... அமைச்சர்களும் தனவந்தர்களுமாய் அவரை எப்போதும் சுற்றி நின்றிருப்பார்கள். பெரும்பழிக்கு ஆளாகி, யாருடைய கொலையிலோ சம்பந்தப்படுத்தப்பட்டு அவரை அங்கே சிறையில் அடைத்து விட்டார்கள். அவருடைய சொத்துக்களை எல்லாமும் பறிமுதல் விட்டார்கள். நானும் இன்னுமிரு பக்தர்களும் ஆறுமாதத்துக்கொருமுறை சென்று பார்த்துவிட்டு வந்தபடி இருந்தோம்.
போன மாதம்தான் விடுதலையாகி, பஞ்சைப் பராரியாய் வந்து நின்றார். பளபள என ஜொலித்த என் ஸ்வாமி, வாடி வதங்கி வந்தார். அந்த நிலையில்கூட என் மனைவி பற்றியும், மஹிமா பற்றியும் கேட்டார் அவர்.!”

“பாவம். அவர் இப்போது எங்கேயோ?”

“என் வீட்டின் அவுட்ஹவுசிலேயே தங்கச் சொல்லிவிட்டேன். அதுவும் வசதியான இடம்தான். பாக்யமில்லையோ?! சரி...
எனக்கு வேலையிருக்கிறது சார்லஸ் சார்! பணமெடுக்கப் போக வேண்டும்.”

“கடைசியாக இரு கேள்வி. உங்கள் உயில் என்று சொன்னீர்களே... அது விவரம் சொல்ல முடியுமா?”

ஹரிஹரன் சொல்லத் தயங்கினார். “நான் என் வக்கீலைக் கேட்டுக் கொண்டுதான் சொல்ல முடியும். தப்பா நினைக்காதீங்க”

“சார்! உங்கள் நல்லதுக்குத் தான் கேட்கிறேன். இதை எங்கும் ரெகார்ட் செய்யவில்லை. ஏதும் க்ளூ கிடைக்குமா என்றுதான் கேட்கிறேன். உங்கள் முன்னாள் மனைவிக்கு உயில் விவரம் தெரியுமா?”

தயக்கத்துடன் உடனிருந்த இரு போலீசாரையும் பார்த்தார். அவர்கள் பக்கம் சார்லஸ் திரும்ப, குறிப்பறிந்து ‘வெளியே இருக்கிறோம் சார் ‘ என்று நீங்கினார்கள்.

“இப்போது சொல்லுங்கள் சார். நாமிருவர் மட்டுமே இருக்கிறோம்.”

“என் உயில் விவரம் எனது வக்கீலுக்கும் எனக்கும், மஹிமாவுக்கும்  மட்டுமே தெரியும். அண்மையில்தான் குருநாதர் காதிலும் போட்டு வைத்தேன்.”

“என்னவாறு அந்த உயிலை எழுதியிருந்தீர்கள்.?

“என் சொத்துக்கள் நானே சம்பாதித்தவை. எனக்குப் பின்னால் அவை என் மகளுக்கு போய் சேர வேண்டும் என்றும், அவள் மேஜராகும் வரை குருநாதர் தான் அவளுக்கு கார்டியனாக இருக்க நியமித்தும், ஒருவேளை எனக்கும் மஹிமாவுக்கும் ஏதும் ஆகிவிட்டால், சொத்துக்களுக்கு குருநாதரே பாத்தியதை என்றும் உயில் எழுதியிருந்தேன்.
குருநாதர் வந்த பிறகே விவரத்தை அவருக்கும் சொல்லி ஆசி பெற்றேன். அடுத்த வாரம் மஹிமாவுக்கு பதினெட்டு முடிந்து பத்தொன்பது தொடங்குகிறது. குருநாதர் ஒரு ஹோமத்துக்கு ஏற்பாடு செய்வதாய்ச் சொன்னார்.”

“நல்லது சார்! நல்லதே நடக்கட்டும். தேவைப்பட்டால் மீண்டும் வருவேன். போலீசுக்கு தெரிவிக்காமல் வெளியூர் எங்கும் போகவேண்டாம் ” என்று சார்லஸ் விடைபெற்றார்.

ஹரிஹரன் வங்கிக்கு சென்றார்....

சார்லஸ் ஹரிஹரன் வீடு நோக்கி சென்றார்.

ஹரிஹரன் வீட்டு அவுட்ஹவுசில் இருந்தபடி, மஹிமாவுக்கு வந்ததாய் ஒரு காதல் ரசம் சொட்டும் கடிதத்தை தயார் செய்துகொண்டிருந்த குரு, சார்லசை எதிர்பார்க்கவில்லை.      



(பின் குறிப்பு: இந்த கதையோட்டத்தில் ஒரு வித்தியாசம் அல்லது மாற்றம் ஒன்று இருக்கிறது. என்னவென்று கண்டு பிடிப்பவர்களுக்கு ஒரு பரிசு உண்டு.)