நாட்டி கார்னர்
‘டாக்டர் கண்ணம்மா,பேராசரியை, ரிட்டையர்டு..’ என்று கொரியரில் வந்த கவரை பிரித்துக் கொண்டிருந்த போதுதான் அழைப்புமணி அடித்தது.
இப்போதுதான் கொரியர் பையனுக்கு கதவைத் திறந்து மூடியிருந்தாள் கண்ணம்மா. மறுபடியும் கதவைத் திறந்தாள் .
‘ஹாய் ஆண்ட்டீ!’ என்று சுவாதீனமாய் நுழைந்தாள் ஜெகா.
‘’மதி இல்லையாஆண்ட்டீ?’’
“குளிக்கிறாம்மா. இப்போ வந்துடுவா. உன் ஸ்கூல் வேலையெல்லாம் எப்படி இருக்கு?’’
‘நல்லா போய்கிட்டு இருக்கு ஆண்ட்டி’’
‘வாடி!’ என்றபடி மதி ஹாலுக்கு வந்தாள். பெரிய டர்க்கி டவல் ஒன்று ஈரமகுடமாய் அவள் தலையை சுற்றியிருந்தது.தனது மகள் மதி அழகு தான். அவள் அப்பா ஜாடை. தன்னைப்போல் கருப்பு இல்லை என்று கண்ணம்மா நினைத்துக்கொண்டாள்.
அவள் அப்பாவைப் போலவே மதிக்கு தன்னிடம் இருந்து விலக்கமும் பாராமுகமும் கூட. மழை விட்டும் தூவானம் விடாதபடி, மதி இப்போது கண்ணம்மாவின் வாழ்க்கையின் இரண்டாம் பாகத்து போருக்காய்ப் புறப்பட்டிருக்கிறாள் ! இந்நாட்களில்,பேத்தி அம்புலு மட்டும்தான் கண்ணம்மாவின் ஒரே சந்தோஷம். ஏதோ புண்ணியம்... அம்புலு மதியைப் போலன்றி கண்ணம்மாவிடம் ஒட்டுதலாய் இருந்தாள். அம்புலுவுக்கென்றே அறுபது வருஷத்து நிராகரிப்பு சிலுவையை சுமந்தபடி காத்திருந்ததாய் கண்ணம்மாவுக்கு ஒரு எண்ணம்.
“அம்புலு எங்கடி மதி?’’
“அவ தோஸ்த்து திவ்யா வீட்டுக்கு விளையாடப் போயிருக்கா. பண்ற அட்டகாசம் தாங்கமுடியலே ஜெகா! குளிக்க அழும்பு. சாப்பிட அடம். சொல்ற பேச்சு கேட்கக்கூடாதுன்னு பிடிவாதம். அப்பப்போ,தாங்கமுடியாம ரெண்டு அடிகூட போட்டுடறேன் ஜெகா”
“ஆறு வயசுபொண்ணு எப்படி இருக்கும்? நீங்கல்லாம் அம்புலு மாதிரி இருந்தவங்க தானே?” என்றபடி மூன்று தேநீர் கோப்பைகளுடன் சமையலறையிலிருந்து வந்தாள் கண்ணம்மா.
“இவங்க செல்லம் இருக்கிற மிதப்புலதான் குட்டிபிசாசு ஆடுறா. இந்த ஒண்ணை பார்த்துக்கவே எனக்கு விட்டுப் போகுது. ஒரு டீச்சராக, முப்பது நாப்பது பிள்ளைகளை எப்படித்தான் மேய்க்கறியோ ?”
ஜெகாவின் சிரிப்பில் பெருமிதம் இருந்தது.
“அது ஈஸி மதி. ஸ்கூல்னா புள்ளைங்களுக்கு ஒரு பயம் இருக்கும். இப்போ புது டெக்னிக் ஒண்ணு சேர்த்திருக்கோம். சொல்ற பேச்சு கேக்காம விஷமம் செய்யிற புள்ளைங்களை தனியா ஒருமூலையில் நிக்க வைச்சிடுவோம். அந்தமூலைக்கு ‘நாட்டிகார்னர்’னு பேரு. அடி,திட்டு எதுவும் கிடையாது. அப்படி நிக்கறதுங்களிடம் மத்த பிள்ளைங்க பேசக்கூடாது. பார்க்ககூடாது. நாட்டி கார்னர்ல நிக்கிறது அவமானம்னு, பிள்ளைகள் செய்யிற விஷமம் ரொம்ப குறைஞ்சு போச்சு”
“இது நல்லா இருக்கே!” மதிக்கு நாட்டிகார்னர் வைத்தியம் ரொம்பவே பிடித்து விட்டது. மேலும்மேலும் ஜெகாவிடம் அதைப் பற்றியே கேட்டபடி இருந்தாள்.
“இதுக்கு, வலிக்காம இரண்டு அடியை முதுகில் போட்டுவிடலாமே? குழந்தைகள் கூனிக்குறுகிப் போகாதோ?” கண்ணம்மா எதிர்வாதம் வைத்தாள். அவள் கவலையெல்லாம் மதி நாட்டிகார்னரில் அம்புலுவை நிற்க வைத்துவிடப் போகிறாளே என்பது தான். அம்புலு வேறு ரொம்ப ரோஷக்காரி ஆயிற்றே?!
“அப்படி இல்லை ஆன்ட்டி! சின்னதாக ஒரு சோசியல் பாய்காட் அதுங்களுக்கு ஒரு தயக்கத்தைத் தரும். பண்ணக்கூடாதுங்கறதை செய்ய யோசிப்பாங்க. இதுல ஒரு சைக்காலஜி இருக்கு”
என்ன டீச்சர் இவள்? சைக்காலஜி இருக்காமே? நாசமாப் போன சைக்காலஜி?! குழந்தைகளை’அதுங்களுக்கு’ என்று விளிப்பவள் என்ன கற்றுத் தரப் போகிறாள்? நல்ல காலமாக என் அம்புலு, இந்த பிடாரி ஸ்கூலில் படிக்கவில்லை என்று கண்ணம்மா தனக்குள் பொருமினாள்.
கண்ணம்மாவுக்கு ‘நாட்டி கார்னர்’ அளித்த பதற்றம், மதிக்கு அதில் மேலும் ஸ்வாரஸ்யத்தை ஏற்படுத்தி விட்டதோ என்னவோ? கண்ணம்மா பயந்ததே வீட்டில் நடைமுறைக்கு வந்துவிட்டது. மதி மெல்ல அம்புலுவின் மேல் ‘நா.கா’அஸ்திரத்தை பிரயோகிக்கத் தொடங்கினாள்.
ஹாலின் கோடியில், பால்கனி கண்ணாடிக்கதவுக்கு முன், சோபாவுக்கு இரண்டு ஸ்லாப் டைல்ஸ் தள்ளி,சுவரோரத்து ஸ்லாபை நாட்டிகார்னராக மதி பிரகடனம் செய்திருந்தாள் .அம்புலுவின் சின்னசின்ன மீறல்கள் அவளை நாட்டிகார்னரில் நிறுத்தின.
‘இதெல்லாம் இப்போது வேண்டாம்’ என்றால், மதி பிடிவாதமாக அதையே செய்வாள். அவ்வளவு பொருத்தம் கண்ணம்மாவுக்கும் மதிக்கும்... என்ன செய்வது? வாங்கி வந்த வரம் அப்படி! ‘சரி, விட்டுப்பிடிப்போம்’ என்று கண்ணம்மா நிச்சயம் செய்து கொண்டாள்.
அன்று இரவு கண்ணம்மாவின் மேல் கால்களைப் போட்டுக் கொண்டு அம்புலு ஒடுங்கிய குரலில் சொன்னாள்.
“திவ்யாவோட நான் ‘எனிமி’ வுட்டுட்டேன் கண்ணப்பு.”
“ஏண்டா செல்லம்? உனக்குத் தான் அவள் ரொம்ப ப்ரெண்ட் ஆச்சே?”
“நேத்து நீ கோவிலுக்கு போயிருந்தியா? மம்மி போர்ன்வீட்டா குடிக்கக் குடுத்தாளா? நான் குடிக்க மாட்டேன்னு அடம் பிடிச்சேனா? மம்மி என்னய நாட்டிகார்னர்ல நிக்க வச்சிட்டா கண்ணப்பு.”
“ஏண்டா கண்ணு அடம் பிடிக்கறே? அதை குடிக்கலாமில்லே? சரி! அதுக்கு ஏன் திவ்யாவோட எனிமி விட்டே?”
“அப்போப் பார்த்து என்னோட விளையாட திவ்யா வந்தா கண்ணப்பு. மம்மி என்னை கார்னரை விட்டு வரக்கூடாதுன்னு சொல்லிட்டா. திவ்யா கிட்டே நான் பனிஷ்மெண்ட்லே இருக்கேன்னு வேற சொல்லிட்டா.என்னெ பாத்து திவ்யா கெக்கெக்கேன்னு சிரிச்சுட்டு ஓடிட்டா கண்ணப்பு. எனக்கு எப்படி இருக்கும்? அதான் எனிமி விட்டுட்டேன் கண்ணப்பு....”
கண்ணம்மாவுக்கு வேதனை மண்டியது. அம்புலுவை நெஞ்சோடு சேர்த்து கட்டிக்கொண்டாள். குழந்தைக்கும் அந்த அணைப்பு வேண்டியிருந்ததோ என்னவோ? வழக்கத்தைவிட இறுக்கமாய் இருந்தது அம்புலுவின் அணைப்பு. அப்படியே மடியில் சரிந்துகொண்டாள்.முகத்தை இடமும் வலமுமாய் புரட்டிக் கொண்டாள்.
அவ்வப்போது அம்புலுவுக்கு கார்னர் கவனிப்பு நடந்தபடிதான் இருந்தது. கண்ணம்மா தடுத்தால் மதிக்கு அடம்தான் அதிகமாகிறது. மதி இன்னொரு வளர்ந்த குழந்தை.......
போன ஞாயிறு மாலை. உள்ளே அம்புலு தூங்கிக் கொண்டிருந்தாள்.
பால்கனியில் தனியாக அமர்ந்து ஏதோ யோசனையில் இருந்தாள் கண்ணம்மா. வழக்கமாக செல்லும் வாக்கிங் இன்று செல்லத் தோன்றவில்லை. வாக்கிங் என்ன, வாழ்க்கைப் போன்ற தீராத பெரும் பொறுப்பா?
ஹாலில் நடமாட்டம் கேட்டது. பால்கனிகண்ணாடிச் சுவரின் அந்தப்பக்கம் அரக்குநிறத் திரை மறைத்தது. வலப்பக்கம் திறந்திருந்த கதவினூடே நுழைந்த காற்று திரையோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது.
சட்டென்று உள்ளே ஹாலில் பேச்சுக்குரல் கேட்டது. மதியும் மாப்பிள்ளையும் தான் சோபாவுக்கு வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். எழுந்து உள்ளே சென்றுவிடத்தான் எழுந்தாள் கண்ணம்மா. தன் பேர் அடிபடுவது கேட்டு கால்கள் பின்ன நின்றுவிட்டாள். புருஷன் பொண்டாட்டிபேச்சை ஒட்டுக் கேட்க கூடாது தான். தானே அங்கு பேசுபொருள் ஆனபோது, முன்னாள் பேராசிரியையின் காதுகளும் கூர்மையாயின.
“உங்கம்மாவை எங்கே காணும்?” மாப்பிள்ளை மதியைக் கேட்டார்.
“ஐந்தரை மணியாச்சே! கீழே வாக்கிங் போயிருப்பா. அம்மா ஆர்மி மேஜரோட சம்சாரம் . நேரம்னா நேரம்தான்”
“மேஜர் சம்சாரத்துக்கு இப்போ நேரம் சரியில்லை! உங்கிட்ட அவங்களைப் பற்றி கேட்டுட்டேனே ?”
“எனக்கென்ன அம்மாவை திட்டணும்னு ஆசையா என்ன? மிலிட்டரிக்காரன் சம்சாரம்னு சாதிக்க பங்சுவாலிடி ஒண்ணத்தான் பிடிச்சிகிட்டிருக்கா. நேரம். டைம்டேபிள் போட்டு அவளும் வாழ்ந்தாச்சு.
சிரிக்கிறதுக்கும் அம்மாவா இருக்கிறதுக்கும் தான் நேரம் ஒதுக்கல்ல.
நான் அம்மாவுக்கு ஒருபொருட்டா இருந்ததே இல்ல. நான் பெத்த சனியனும் அப்படியே அவளைக் கொண்டிருக்கு.”
“மதி! பெத்த தாயை எதுக்கு கரிச்சுகொட்டறே? உன் பொண்ணோடக் கூட ஒத்துப் போகல்லை உனக்கு. பிரச்னை உன் கிட்டேதானான்னு யோசி... பொறுமையாக இரேன் “
“ஆமாமாம்....எல்லாத்துக்கும் நான்தான் காரணம். ஊருக்கெல்லாம் பாடம் சொல்ற புரொபசர் அம்மா. எனக்கு ஒரு தாலாட்டு பாடினவளில்லே”
“சரி.. சரி “
“ஒரு குத்து எண்ணை வச்சி எனக்கு தலைவாரினவளில்லை. சாப்பாடு ஊட்டினவளில்லை. ஏதேனும் நான் தப்பு பண்ணிட்டா முகத்தைக் கோணிகிட்டு உச்சந்தலையில் நறுக்கென்று குட்டுவாள். குட்டின வலி போயிடுத்து. அந்த ஆங்காரமும் வெறுப்பும் என்னாலே மறக்கவே முடியல்லைங்க.”
“போறும் மதி! இன்னும் எத்தனைகாலம் இப்படி கறுவிகிட்டிருப்பே. விடு.”
“உங்களை என்னிஷ்டத்துக்குக் கல்யாணம் பண்ணிகிட்டேன்னு அம்மா கொடுத்த சாபம் கொஞ்சமா என்ன? இப்போதான் வேண்டாத மாப்பிள்ளையே வக்கீலா மாறி வக்காலத்து வாங்குற காலமாச்சே!”
“லூசு... அந்த சூழ்நிலையிலே உணர்ச்சிவசப்பட்டு சொன்னதுக் கெல்லாம் அர்த்தம் பாத்துகிட்டு...அதே அம்மா தானே அம்புலுவை நீ உண்டானவுடனே நம்மோடவே வந்து தங்கிட்டாங்க? அம்புலுவும் அத்தையும் ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்ளோ பாசமா இருக்காங்க?”
“போதும்....போதும். அவளையும் மெல்ல எனக்கு வேண்டாதவளா ஆக்கிடுவாங்க போலிருக்கு. அம்மா போனவாரம் பாண்டிச்சேரி போயிருந்தாளில்லையா? திரும்பினவுடனே, ‘தான் இல்லாதப்போ அம்புலுவை நாட்டிக் கார்னர்லெ நிக்க வைக்கிறேனா’ன்னு வேலைக்காரி கிட்ட கேட்டிருக்கா. எனக்கென்ன என்பொண்ணு மேல பழியா பகையா?’’
“மதி! எனக்குகூட இந்த நாட்டிகாரனர் சனியனைப் பிடிக்கல்லே. குழந்தையை பதைக்க விடுறயோன்னு தோணுது. பாத்து செய்....’’
அதற்குமேல் மாப்பிள்ளை போகமாட்டார். தெரியும் கண்ணம்மாவுக்கு.
இருவரும் அறைக்குள்ளே போய்விட்டார்கள். மெல்ல உள்ளே வந்த கண்ணம்மா சமையலறைக்குள் புகுந்தாள். இரவு சப்பாத்திக்கு ஆயுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
இரவு தூக்கம் பிடிக்கவில்லை. எங்கே எப்போது மதியுடன் இவ்வளவு இடைவேளிகள் தோன்றின? தனக்குள் தேடிப் பார்க்கவும் அச்சமாக இருந்தது. குழப்பம், வெறுப்பு, விலக்கம் என்றுதானே தன் நாட்களும் போயிருக்கின்றன? தன் மகளுக்கும் அதைத்தான் சீதனமாய்த் தந்திருக்கிறேனா? பலவிதமாய் தனக்குள்ளேயே கண்ணம்மா அரற்றிக் கொண்டிருந்தாள்.
எல்லா திங்கட்கிழமையையும் போலத்தான் அந்தநாளும் வரவேற்பில்லாத கட்டாயமாய் விடிந்தது. மதியும் மாப்பிள்ளையும் அலுவலகம் புறப்பட்டு விட்டார்கள். அம்புலுவையும் ஸ்கூலுக்கு அனுப்பியாயிற்று.
வீடு நிசப்தம் சூழ்ந்தது. இன்று கண்ணம்மாவின் திருவாசக வாசிப்பு இருக்காது. பிறந்திளைத்தாயிற்று. மதி என்னவெல்லாம் சொல்லி விட்டாள்? இப்படியெல்லாம் நீ வேதனைப்படுவது போலவா இத்தனை நாளும் இருந்துவிட்டேன்? என் கண்ணே! அம்மாவாய் இருக்க நேரமில்லாமல் வாழ்ந்துவிட்டேனா? அப்படியா உன் மனதில் பதிய விட்டுவிட்டேன்? அம்மாடி! என் கண்ணே!!’ கண்ணம்மா தவித்தாள். தலைசுற்றி விழுந்துவிடுவாள் போல இருந்தது. தண்ணீரைக் குடித்தாள்.
கண்கள் அனிச்சையாக நாட்டிகார்னரை நோக்கின. கண்ணம்மா இரண்டெட்டில் நாட்டிகார்னரில் போய் நின்றுகொண்டாள். அந்த சுவரோர ஸ்லாப் சதுரம் அவளை எதிர்பார்க்கத்தான் இல்லை. கண்ணம்மாவுக்கு பாதங்கள் கனத்து அந்த நொடியில் கால்களிரண்டும் பலமழிந்து விட்டாற்போல் நிலைகொள்ளவில்லை. நெஞ்சு கரகரவென்று அமிலம் சுரந்தாற்போல அம்மியது. அந்தமூலைச் சதுரத்தில்...நாட்டிகார்னரில் நின்று அந்த ஹாலை வெறித்தாள்.
கட்டம் கட்டமாய் ஸ்லாபுகள் பாவியதரையில், தனிமை மினுக்கிக் கொண்டிருந்தது. பெரிய சதுரங்கப்பலகையில் வெட்டுப்படப்போகிற சிப்பாய்க் காய் ‘தான்’ தானென்று ஒருநினைப்பு பூதாகாரமாய் மூண்டது. முன்னேறிமுன்னேறி பலகையின் எதிர்விளிம்பு வரை எப்படியோ வந்துவிட்ட காய். மேலும் முன்செல்ல வழியின்றி பக்கலிலும் அசைய வொட்டாமல் சமைந்து நின்றுவிட்ட காய். எதிர்விளையாட்டு விளையாடும் விதியின் கரத்தால் வெட்டுப்படக் கலவரமாய்க் காத்திருக்கும் காய். இதுதான் நாட்டிகார்னரா? குழந்தை விதிர்த்துப் பதறும் குற்றச்சதுரமா? சுயத்தை அழிக்கும் வெட்டுக் கல்லா? குறுகிக் குமையவைக்கும் குற்றவாளிக்கூண்டா? சுய இரக்கமும் சோகமும் பொங்கிவரும் ஊற்றுக்கண்ணா?
கண்ணம்மாவுக்கு இந்த நான்கு நிமிடங்களே நான்கு யுகங்களாய்த் தோன்றின. பெரிய விசும்பலுடன் அழத் தொடங்கினாள்.தான் பிறந்ததிற்கு, தான் வாழ்ந்ததிற்கு, தான் இழந்ததிற்கு எல்லாவற்றுக்குமான அழுகை.
முன்ஜென்மங்களிலும் நேர்ந்து உறைந்துபோன எல்லாவற்றையும் கரைப்பதற்கான கண்ணீர். ‘தேம்பும் குழந்தை நொண்டி’யென கற்பித்து, தேம்பாமல் விட்ட தருணங்களுக்கான அழுகை. சுருள்சுருளாய் பீறிட்டு வழியும் அழுகை. இந்தப் பாட்டம் எப்போது ஓயுமோ என்று புலப்படாத அழுகையாகக் கரந்தே நீடித்தது. உள்ளே கரைய இனிமிச்சமில்லை என்றறிந்த கண்ணீர் நின்றது. துண்டான பல்லிவால், துடிப்பைத் தொடர்வதைப் போல விசும்பல் கொஞ்சநேரம் தொடர்ந்தது.
கண்ணம்மா தன் கனத்து நடுங்கும் கால்களை நாட்டிகார்னரில் இருந்து வெளியே வைத்தாள். ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாய் புடவையை இடப்பக்கமாய் இடுப்பில் சொருகிக்கொண்டாள். ஹாலின் மறுஓரத்தில் காலணிகளுக்கான ஸ்டேண்டுக்கு பக்கத்தில்,மேஜை மீதிருந்த வண்ணமீன் தொட்டிக்கருகில் சென்றாள் . தொட்டியை கவனமாய் கீழிறக்கினாள். அதன் கனமான மேஜையை நகர்த்தி இழுத்து வந்தாள்.
நாட்டிகார்னர் சதுரத்தை மூடியபடி அதன்மேலாக அந்த மேஜை நகர்ந்தது. மேஜை மீன்தொட்டியை மீண்டும் சுமந்தது. புதுஇடம் கண்ட மீன்கள், நாட்டிகார்னருக்குத் தள்ளப்பட்டது தெரியாமல், சந்தோஷமாய் நீந்தித் திளைத்தன.