ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

ஒரு இங்கிலீஷ் ஒளவையாரின் சூப்பர் ஆத்திச்சூடி !!


நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது என் அன்பிற்கினியவர்களே!.
ரெஜினா ப்ரெட் எனும் தொண்ணூறு வயது மூதாட்டி, வாழ்க்கை தனக்கு போதித்த நாற்பத்தைந்து முக்கிய பாடங்களை அழகாக சொல்லியிருக்கிறார்.

இதன் தமிழாக்கமும்,கொஞ்சமே கொஞ்சம் மசாலாத் தூவலும் மட்டும் அடியேன் செய்தது.

யான்பெற்ற இன்பம் பெருக இவ்வலையகம்!

இதை எனக்கு  மின்னஞ்சிய என் பாஸுக்கு நன்றி!

இனி இங்கிலீஷ் ஒளவையாரின் ஆத்திச்சூடி!

 1. வாழ்க்கை நமக்கு எப்போதுமே சாதகமாய் இருப்பதில்லை. இருந்தாலும் கூட அது மிக அழகானது.
 2. குழப்பத்தில் தயங்கும் போது, நின்று விடாதீர்கள் : மெல்ல அடுத்த அடியை எடுத்து வையுங்கள்.  
 3. பிறர்  மீது வன்மம் வளர்த்துக் கொண்டு,அதற்காக காலம் விரயம் செய்யுமளவுக்கு மிகுதியான நேரம், நம் சின்ன வாழ்க்கையில் இல்லை.
 4. உடல் நலிவுறும் போது,உங்கள் அலுவலகமோ, வாடிக்கையாளர்களோ அதிகம் உதவ முன்வர மாட்டார்கள். அந்த சமயங்களில் ஆதுரமாய்க் கரம்  நீட்டுபவர்கள், நம் குடும்பத்தினரும்,நண்பர்களுமே! அவர்களோடு எப்போதும் தொடர்பிலேயே இருங்கள்.
 5. கிரெடிட் கார்டு பில்களை மாதாமாதம் கட்டிவிடவும்.
 6. எல்லா விவாதங்களிலும்,நீங்களே வெற்றி கொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லை.உடன்பாடின்மைக்கும் உடன்படுங்கள்
 1. அழவேண்டியிருப்பின்,யாருடனாவதோ அல்லது யார் தோளிலோ சாய்ந்து அழவும்.தனிமையில் குமைவதை விட அது ஆறுதல் தரும்.
 2. கடவுளிடம் கோபித்துக் கொள்ள வேண்டியிருந்தால், தயங்காமல் அவரைக் கோபித்துக் கொள்ளவும். அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியும்.
 3. முதல் சம்பளத்திலிருந்தே பணி ஓய்வினை கருத்தில் கொண்டு சேமிக்கவும்.
 4. சுய கட்டுப்பாடு தேவை தான். ஆனால்,சாக்லேட் என்றால்.. அது கொஞ்சம் கஷ்டம் தான்.. பரவாயில்லை.
 5. உங்கள் கடந்த காலத்துடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள்.. அது நிகழ் காலத்திற்கு  குடைச்சல் தராமல் சுலபமாக்கும்.
 6. நீங்கள் கண்ணீர் உகுப்பதை உங்கள் பிள்ளைகள் பார்க்க நேர்ந்தால்.... சரி விடுங்கள்.. பரவாயில்லை.. மூக்கை சீந்திக் கொள்ளுங்கள்.
 7. பிறருடன் நம் வாழ்க்கையை  எப்போதும் ஒப்பீடு செய்யாதீர்கள். அவர்கள் வாழ்க்கைப் பயணத்தில் என்னென்ன பிரச்னைகளோ? அவையெல்லாம்  உங்களுக்கு தெரியுமா?
 8. ஏதேனும் ஓர் உறவு இரகசியமாக இருக்க வேண்டும் என்றால், அந்த உறவில் நீங்கள் இருக்கக் கூடாது!
 9. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமே தலைக்கீழாய் மாறக் கூடும். ஆனாலும் பதட்டப் படாதீர்கள்.கடவுள் கண் இமைப்பதில்லை.
 10. ஆழ்ந்து மூச்சை உள்ளிழுக்கவும். அது மனதை அமைதிப் படுத்தும். உள்ளிழுத்த மூச்சை அவசியம் வெளியே விட்டு விடவும்.
 11. உபயோகமற்றவை, நேர்த்தியில்லாதவை, மகிழ்ச்சி தராதவை-இவைகளை தவிர்த்து விடுங்கள்
 12. உங்கள் உயிரை மாயக்காத எந்த நிகழ்வும், உங்களை பலப்  படுத்தவே வந்தவை என்று உணருங்கள்
 13. மகிழ்ச்சி ததும்பும் குழந்தைப் பருவத்திற்கு, உங்களுக்கு இன்னும் கூட அவகாசம் இருக்கிறது. இன்னொருமுறை,குழந்தையாய் மாறித்தான் பாருங்களேன்! ஆனால் ஒன்று! இந்த இரண்டாவது குழந்தைப் பருவத்தின்  மகிழ்ச்சிக்கு நீங்களே பொறுப்பு.
 14.  உங்களுக்குப் பிரியமானதை நீங்கள் பின்தொடரும் பட்சத்தில்,இல்லை,கிடையாது,முடியாது போன்ற மறுப்புகளை பதிலாக ஏற்றுக் கொள்ளாதீர்கள்
 15. அழகான மெழுகு வர்த்திகளை ஏற்றுங்கள்: புது விரிப்புகளை இடுங்கள்: பளிச்சென நல்ல ஆடைகளை உடுத்துங்கள். இவற்றையெல்லாம் ஏதேனும் விசேஷ தருணத்திற்காக பத்திரப் படுத்த வேண்டாம். அந்த இனிய நாள் இன்று தான்.!
 1. கவனமாய் எல்லாவற்றிற்கும் முன்னேற்பாடுகள் செய்து கொள்ளுங்கள். ஆனாலும், போகிற போக்கில் செல்லுங்கள்.
 2. கிறுக்குத்தனத்தை இப்போதே வெளிப்படுத்திக் கொள்ளலாம். முதுமை வரையில் அதற்கென காத்திருக்க வேண்டாம்.
 3. உங்கள் உடம்பின் அதிமுக்கியமான செக்ஸ் உறுப்பு உங்கள் மூளை தாங்க!
 4. உங்கள் மகிழ்ச்சிக்கு வேறு யாரும் பொறுப்பல்ல. நீங்கள் தான் பொறுப்பு.   
 5.  பெரும் பிரச்சினை என நீங்கள் கருதும் நிகழ்வின் போது நீங்கள்  காணவேண்டிய விடை இந்த ஒரு கேள்விக்குத்தான்... ஐந்து வருடம் கழித்தும் இதன் தாக்கம் இருக்குமா?. பதில் இல்லை எனில் மேட்டர்  ஜுஜுபி.
 6. வாழ்க்கையின் கணங்களை தேர்ந்தெடுங்கள்..எப்போதும்.
 7. அனைவரையும்,அனைத்தையும்... மனதார மன்னித்து விடுங்கள்.
 8. மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது உங்கள் பிரச்சினை அல்ல.
 9. காலம் அத்தனை காயங்களையும் ஆற்றிவிடும். காலத்திற்கு கொஞ்சம் சந்தர்ப்பம் கொடுங்கள்.
 10.  நல்லதோ கெட்டதோ, எந்த சந்தர்ப்ப சூழலும் கண்டிப்பாய் மாறியே தீரும்.
 11. உங்களை நீங்களே சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.ஏனெனில்,யாருமே உங்களை அப்படி எடுத்துக் கொள்வதில்லையே!
 12.  அற்புத, அம்மானுஷ்ய நிகழ்ச்சிகளில் கொஞ்சம் நம்பிக்கை வைப்பதில் தவறே இல்லை.
 13. நீங்கள் செய்த புண்ணிய பாவங்களுக்கேற்ப கடவுள் உங்களிடம் கருணை செய்வதில்லை. அவர் கடவுளாய் இருப்பதாலேயே கருணையைப் பொழிகிறார். அதற்கு நாம் பாத்திரமாக வேண்டாமா?
 14. வாழ்க்கையை தணிக்கை செய்துகொண்டிருக்க வேண்டாம். நில்லுங்கள் இந்த நிமிடத்தில்.. இந்த கணத்தில் வாழுங்களேன்.
 1. வயது ஏறிக்கொண்டே போவது சந்தோஷமே.. இல்லையெனில் அதற்கு  மாற்றாக, சின்ன வயசில் மண்டையை அல்லவா போட வேண்டி இருக்கும்?!
 2. உங்கள் குழந்தைகளுக்கு வாய்த்திருப்பதென்னவோ ஒரே ஒரு குழந்தைப் பருவம் மட்டுமே. அவர்களைக் குழந்தைகளாய் இருக்க அனுமதியுங்கள்.
 3. எல்லாமும் முடிந்த பிறகு,எஞ்சியிருப்பது, நீங்கள் செலுத்திய அன்பு மட்டுமே.
 4. தினமும் வெளியே வந்து தான் பாருங்களேன். அதிசயங்கள் முக்குக்கு முக்கு காத்திருக்கிறது.
 5. நாம் எல்லோரும் நம் பிரச்சினையை ஓரிடத்தில் குவித்துவிட்டு, நம் விருப்பப்படி அந்தக் குவியலிலிருந்து ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க விட்டால்,  நாம் அதிலிட்ட நமது  பிரச்சினையையே மீண்டும் தேர்ந்தெடுப்போம்.     
 6.  பொறாமை என்பது காலவிரயம். நம்மிடம் தான் அது ஏற்கெனவே நிறைய ஸ்டாக் இருக்கிறதே! போதும் போதும் இன்னமும் வேண்டாம்.
 7. மிகச் சிறந்தது இனிமேல் தான் ஏற்பட வேண்டும்.
 8. நீங்கள் எவ்வளவு தான் மோசமான மனநிலையில் இருந்தாலும் சரி... எழுந்திருங்கள்.. கொஞ்சம் மேக்கப் போட்டு, நல்ல உடை உடுத்தி, கொஞ்சம் ஸீன் போடுங்கள். அப்புறம் பாருங்கள்.. தெளிந்து விடுவீர்கள்.
 9. வளைந்து கொடுங்கள்..விட்டுக் கொடுங்கள்
 10. வாழ்க்கை ஒரு பரிசு.. அந்தப் பரிசின் சுகத்தை முழுக்க அனுபவியுங்கள்.

வலையுலகின் சகோதர சகோதரிகளே!

முதுகு வலிக்க இதைக் கணனியில் டைப்படித்து பதிவிட்டிருக்கிறேன். இதில் ஒன்றிரண்டாவது உங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க எத்தனியுங்கள்.
பொறுமையாகப் படித்ததற்கு என் அன்பும் நன்றியும்...

60 comments:

எம் அப்துல் காதர் சொன்னது…

புதிய ஆத்திச்சூடி அட்டகாசம் பாஸ். எல்லாமே தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் தான். (26)இல் "என்று" என்ற வார்த்தையில் "று" விட்டுப் போயிருக்கு திருத்தி விடவும்) வாழ்த்துகள் தல!!

பெயரில்லா சொன்னது…

it seems useful.thanks. sathi

மோகன்ஜி சொன்னது…

காதர் பாய்,கருத்துக்கு நன்றி.(26)ஐத்திருத்தி விட்டேன்.நன்றி பாஸ்

மோகன்ஜி சொன்னது…

வாங்க சத்தி, ரொம்ப நன்றிங்க.

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல கருத்துக்கள்.
//முதுகு வலிக்க இதைக் கணனியில் டைப்படித்து பதிவிட்டிருக்கிறேன்// ரொம்பத்தான் பொருமை உங்களுக்கு:-)

RVS சொன்னது…

//44. வளைந்து கொடுங்கள்..விட்டுக் கொடுங்கள்
45. வாழ்க்கை ஒரு பரிசு.. அந்தப் பரிசின் சுகத்தை முழுக்க அனுபவியுங்கள்.
//

நன்றாக இருந்தது மோகன்ஜி... உங்கள் வலையில் நவரசமும் ததும்புகிறது... வாழ்த்துக்கள்... பத்துக்கு முன்னாடி நா போட்டேன் கமெண்டு... ஹா ஹா ஹா...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி சொன்னது…

தெய்வ சுகந்தி மேடம்! உங்கள் வருகைக்கு நன்றி! நான் முதுகுவலி டைப் அடித்ததால் வந்தது என்று குறிப்பிட்டது உண்மையான காரணம் இல்லைங்க. அது.. அது வந்து.. ஹாங் .. 'குடும்பபாரம்' சுமந்ததால் வந்ததுங்க. இதை எங்க வீட்டுல போட்டுக் குடுத்துடாதீங்க மேடம். வருகைக்கு நன்றி மேடம் .

மோகன்ஜி சொன்னது…

ரொம்ப நன்றி ஆர்.வீ.எஸ்.வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்.நீங்க சொன்னது ரொம்ப சரி.இன்னும் பத்து சார் இன்னும் காணல்லியே.ஓ! அவர் ஒட்டகத்த விட்டு இறங்கி வர வேண்டாமா?
அப்பிடியே யானைப் பதிவுக்கு வாங்க பாஸ். இன்னும் விட்ட குறை ,தொட்ட குறை அதுல இருக்கே?!

Unknown சொன்னது…

அத்தனையும் முத்துக்கள்... சேமிப்பில் வைத்துவிட்டேன் ...

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையா இருக்குங்க..!

மோகன்ஜி சொன்னது…

வாங்க செந்தில் சார்! நீங்க சேமிப்பில் இந்த முத்துக்களை வைத்துக் கொண்டேன் என்றது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.நான் இதை தமிழாக்கம் செய்ததே நல்லா அனுபவ பூர்வமான கருத்துக்கள் பரவட்டும் என்பதற்குத் தான். அடிக்கடி வாங்க சார்!

மோகன்ஜி சொன்னது…

வாங்க குமார்! பாட்டி என்ன அசத்து அசத்திட்டாங்க பாருங்க!

ப.கந்தசாமி சொன்னது…

நல்ல அருமையான கருத்துக்கள். இதைத்தனியாக சேமித்து பவர் பாய்ன்ட் ஸலைடுகளாக மாற்றி என் நணபர்களுக்கெல்லாம் (உங்களையும் சேர்த்து-நீங்களும் இப்போது என் நண்பர்தானே) அனுப்பப் போகிறேன்.

Chitra சொன்னது…

முதுகு வலிக்க இதைக் கணனியில் டைப்படித்து பதிவிட்டிருக்கிறேன். இதில் ஒன்றிரண்டாவது உங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க எத்தனியுங்கள்.

.....முயற்சி பண்றோம்! ஹா,ஹா,ஹா,ஹா....

நல்ல அறிவுரைகள்!

sury siva சொன்னது…

// உங்கள் உடம்பின் அதிமுக்கியமான செக்ஸ் உறுப்பு உங்கள் மூளை தாங்க!//

எக்ஸாக்ட்லி.
அதுவும் கிரியேடிவ். இதுவும் கிரியேடிவ்.
ஒரு வித்தியாசம்.
அது கிரியேட் பண்ணுவது நம்மைப்போல ஒரு அதிக பட்சம் நம் வயது இருக்கக்கூடும். அல்லது அதற்கு மேல்
ஒரு பத்து பர்சென்ட் கூட வாழக்கூடும்.
இது கிரியேட் பண்ணுவது எக்காலத்துமே மார்க்கண்டேயனாக இருக்கும்.

கம்பன், ஹோமர், வள்ளுவர், சேக்ஷிபியர் எல்லாமே இதை உணர்ந்தவர்கள் தான் போல் இருக்கிறது.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

sury siva சொன்னது…

மூளையும் ஒரு செக்ஸ் உறுப்பே !!
(தொடர்ச்சி)

இன்னும் ஒரு கோணத்தில்,
அது தரும் சுகம், ஆனந்தம் பரவசம் ஒரு கணமே இருக்கும்.
இது தரும் பேருவகை என்றென்றும் நிலைத்து நிற்கும்.

உதாரணத்திற்கு உங்கள் இந்த பதிவியே எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொருவர் பாராட்டும்பொழுதும் உங்களுக்கு எந்த பூரிப்பு ஏற்படுகிறது !!

அடுத்து, வித்தியாசங்களைக் குறிப்பிடுகையில் ஒற்றுமைதனையும் சொல்லவேண்டும்.

பாவம் செய்து பெற்றெடுத்த பிள்ளையும் பெண்ணும் பெற்றோருக்கு தமது தகாத செயலால் அவமதிப்பைக்
கொண்டு வருகிறார்கள். நம் பிள்ளையா இப்படி செய்தான் என்று நோவதைத் தவிர வேறு வழி பெற்றோருக்கு இல்லை.

தொலை நோக்கு இல்லாத ஒருவன் எது எழுதினாலும், கான்ட்ரவர்சியாக போய், வம்பில் மாட்டிக்கொள்கிறான்.
( கான்ட்ரவர்சியல் ஆகவே எழுதவேண்டும் என எழுதுவர்கள் வேறு வரிசை. )

சுப்பு ரத்தினம்.

பெயரில்லா சொன்னது…

அது 50 Lessions of Life not 45

MoonramKonam Magazine Group சொன்னது…

புதுமை + இனிமை இந்த ஆத்திச்சூடி

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

சூப்பர் ஆத்திச்சுடி...! சூப்பர்..!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/

மோகன்ஜி சொன்னது…

வாங்க கந்தசாமி ஐயா! நீங்கள் பவர் பாய்ன்ட் ஆக்கி நண்பர்களுக்கு அனுப்புவேன் என்று சொல்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி நான் உனக்கு நண்பன் தானே என்கிறீர்கள். மகனோடு நட்பாயிருக்க முடியாது என்று யார் ஐயா உங்களுக்கு சொன்னது? நன்றி.

மோகன்ஜி சொன்னது…

சித்ரா மேடம்! கருத்துக்கு நன்றி. சமையல் குறிப்பு என்னாச்சு?

மோகன்ஜி சொன்னது…

சுப்புரத்தினம் சார். விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி! வித்தியாசமாக உங்கள் புரிதலை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்

//பாவம் செய்து பெற்றெடுத்த பிள்ளையும் பெண்ணும் பெற்றோருக்கு தமது தகாத செயலால் அவமதிப்பைக்கொண்டு வருகிறார்கள். நம் பிள்ளையா இப்படி செய்தான் என்று நோவதைத் தவிர வேறு வழி பெற்றோருக்கு இல்லை.//

மேற்கண்ட உங்கள் கருத்து அருமை! நன்றி.

மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள பெயரில்லா..மிக உன்னிப்பாக எண்ணியிருக்கிறீர்கள்.ரொம்ப நன்றிங்க!

மோகன்ஜி சொன்னது…

மூன்றாம் கோணத்தின் பார்வை அலாதியானது தானே?!
வருகைக்கு நன்றி நண்பரே!

மோகன்ஜி சொன்னது…

வெற்றி சார் .. உங்களைப் பார்த்து நாளாச்சு.. நலமா?

பத்மநாபன் சொன்னது…

அனுபவித்து படித்து ,அனுபவித்து பின்னூட்டம் இட இந்த நேரம்....

முதலில் தமிழாக்கத்திற்கு பாராட்டு.... எனக்கு மேலாண்மையில் ஆர்வம் மிகுதி. அதற்காகவே ஆங்கிலத்தில் படித்தாலும் , அது பட்டர் ஜாம் ஆக சலிப்பூட்டும். அதே சமயத்தில் தமிழில் படிக்கும்பொழுது .மிருது இட்லியும் சாம்பார் , துவையல் மற்றும் ,பொடி போட்டு சாப்பிடுவது போன்று சுகம்....

கஷ்டப் பட்டு தட்டியிருக்கிங்க.....கடைப்பிடிக்கிறோமோ இல்லையோ , அனுபவிச்சு படிச்சு பார்க்கலாமேன்னு உட்கார்ந்தேன்... அனைத்தும் கடைப்பிடிக்கிற மாதிரி அற்புதமா மசாலா தூவி சுவை கூட்டியிருக்கிங்க..அதில் சில நகைச்சுவையும் சுகம்.எப்படி படிச்சேன் என்பதை ஐந்து ஐந்தா நன்றியோடு வழங்குகிறேன்.

வாழ்க்கை அழகாக இருப்பதே நமக்கு சாதகமான விஷயம் தானே.

குழப்பம் அதிகம் வரும் பொழுது நிச்சயம் சோர்வு வரும்... சோர்வு பலத் தயக்கங்களை முன்வைக்கும்... நாம் பின்னடையாமல் நமது காலடியை முன் வைத்து முன்னேற வேண்டும்.....

இனிப்பான குறுகிய வாழ்வில் வன்ம கசப்பிற்கு எதற்கு வீணாக இடம்...

அனைவரின் தொடர்பில் இருப்பது எவ்வளவு சுகம்...

ஆமாங்க கிரெடிட் கார்டு முதல்ல ஒன்னுமே வேண்டான்னு சொல்லும் அப்புறம் எல்லாமே வேணும் சொல்லி நம்மள முழுங்கடிச்சிரும்...

இனி அடுத்த பின்னூட்டத்தில் ஐந்து ( பத்து பத்தா கூகிள் எடுக்க மாட்டிங்கிது..)

பத்மநாபன் சொன்னது…

வாதத்தில் நாம் தான் ஜெயிக்க வேண்டும் என்று உண்மைக்கு புறம்பா இருப்பது ...கடைசியில் நம்மை வாழ்க்கையில் தோல்வியில் விடும்.

சிரிப்பதற்கு மட்டுமல்ல அழுவதற்கு கூட ஆத்மார்த்த நட்பு வேண்டும்...

கோபமும் உரிமை சார்ந்த விஷயம் தானே... கடவுளை விட வேறுயாரிடம் நமக்கு அதிக உரிமை இருக்கு ....எது செஞ்சாலும் நமக்கு நன்மையை தவிர வேறு எதையும் செய்யமாட்டார்....

நாளைக்கு நாளைக்கு சொல்லிட்டே இருந்தால் ஒய்வே பெற்றுவிடுவோம்.

கட்டுப்பாடு கஷ்டமான விஷயம் தான்...... அதில் கிடைக்கும் சுகமே தனி...

(அடுத்த ஐந்து ஐந்து நாளை....அனுபவிச்சு படிக்கிறோம்ல.....)

மோகன்ஜி சொன்னது…

சீனப் படையெடுப்பின் போது தமிழகத்தின் நடிக நடிகையர் யுத்த நிதி திரட்டிக் கொண்டு, டில்லி ராஷ்டிரபவன் சென்றிருந்தனர் . அப்போது ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழ் திரையுலகினருடன் மனம் விட்டு சகஜமாக உரையாடிக் கொண்டிருந்தார். திடீரென்று நடிகர் சந்திர பாபு எழுந்து ஜனாதிபதியின் மடியிலேயே அமர்ந்து, அவர் மோவாயைப் பிடித்துக் கொஞ்சினாராம் "ரசிகன்டா கண்ணு நீ!!"என்று.ஜனாதிபதியும் அதை தமாஷாக எடுத்துக் கொண்டு ரசித்தாராம். எனக்கும் உம் மோவாயைப் பிடித்து "ரசிகன்டா கண்ணு நீ!!" என்று கொஞ்ச வேண்டும் போல் இருக்கிறது. கை எட்டவில்லை... கொஞ்சம் ஒட்டகத்தை விட்டு இறங்குகிறீரா?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Wow... very nice

மோகன்ஜி சொன்னது…

வாங்க தங்கமணி மேடம்!கருத்துக்கு நன்றிங்க!

பத்மநாபன் சொன்னது…

பதிவு பின்னூட்டம் அப்புறம் ..... இப்ப பின்னூட்ட பின்னூட்டம்....சந்திரபாபு கொஞ்சல் பாராட்டிய செய்தி வெடி சிரிப்பு வரவைத்தது.. அந்த குதிப்பு குறும்புக்காரரை நினைத்தாலே குபுக் ..... ... அப்புறம் மூனு மாசத்திற்கு ஒருமுறை தான் ஒட்டகத்தை விட்டு இறங்க விடுவாரு ஷேக்கு ...

ஸோ இப்ப,...புஜ்ஜிப்பா கொஞ்சலை மானசீகமாக ஏற்று நன்றிக்கிறேன் .

பத்மநாபன் சொன்னது…

அடுத்து படித்த ஐந்தை எனக்கு பிடித்த வகையில்....மேலும் கடைப்பிடிக்கலாமே என ஆர்வம் மேலிட...


11.போனது போகட்டும் என்று சென்றதில் அனுபவத்தை மட்டும் வைத்துக்கொண்டால் வாழும் காலம் அமைதியாக இருக்கும்.

12,நம்ம படற கஷ்டம் குழந்தைகளுக்கும் கொஞ்சம் தெரியட்டும்.. பொறுப்புணர்வோடு இருப்பார்கள்....

13.ஒப்பிட ஆரம்பிச்சுட்டா அது நம்ம வாழ்க்கையல்ல..... ஏன் இன்னோருவரின் வாழ்க்கை.....

14.எதிலும் வெட்ட வெளிச்சமாய் இருக்கணும் . ஒளிவு மறைவு எதுக்கு? வருமான வரி அதிகாரியா வந்துருக்காங்க...

15.காற்றைக்கூட அதன் வேலை முடிந்தால் அனுப்பிவிட வேண்டும்....அடுத்த தேவைக்கு புதிய காற்று.... என்றும் புத்துணர்வு.....

Muniappan Pakkangal சொன்னது…

Nalla pathivu Mohanji.Itz a practical guide.By the by,from where is regina Bret from ?

RVS சொன்னது…

மோகன்ஜி இப்படி ஒரு யானை லிஸ்ட் போட்டு பத்துவை இங்கே கட்டிபோட்டுடீங்க.. யானையை கண்டா அடி பணிஞ்சிடுது பார்டி.. அண்ணனால அங்க எட்டிப் பார்க்க முடியலை போலிருக்கு.... "ரசிகமணி" பத்து விலாவாரியா ஒரு பின்னூட்டம் இட்ட பிறகு நான் இடலைன்னா நல்லா இருக்காது. நமக்கு ரொம்ப பிடிச்சது ஐட்டம் நம்பர் 23.

//கிறுக்குத்தனத்தை இப்போதே வெளிப்படுத்திக் கொள்ளலாம். முதுமை வரையில் அதற்கென காத்திருக்க வேண்டாம்.//

அதற்காகத்தான் ப்ளாக் எழுதி வெளிப்படுத்தறேன்... ;-) ;-) என்ன சரியா?

நண்பேன்டா பாணியில் ரசிகன்டா சொல்லிப்பார்க்கலாம்.
இந்த பின்னூட்ட மகிழ்ச்சி மென்மேலும் வளருவதற்கு வாழ்த்துக்கள்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! பதிவை என்னமா உள்வாங்கியிருக்கீங்க? பாட்டிக்கும் எனக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. மீதியையும் இறக்குங்க முதலாளி! நல்லாவே இருக்கு...

மோகன்ஜி சொன்னது…

முனியப்பன் சார்.. ரெஜினா ப்ரெட் "ஓஹியோ" வைச்
சேர்ந்தவர்.. உங்கள் வாழ்த்துக்கு நன்றிங்க. கொஞ்சம் தமிழ் இலக்கியம் பற்றி எழுதலாம்னு பாக்குறேன்.. என்ன சொல்றீங்க?

மோகன்ஜி சொன்னது…

ஆர் .வீ.எஸ். நீங்களும் 23ஆம் நம்பர் பஸ்ல தான்
ஏறியிருக்கீங்களா. ஸ்டாப்புக்கு ஸ்டாப்பு நிக்குமே அது.. புட் போர்டல பாத்தீங்களா! நாந்தேன் அங்க
தொங்கிக்கிட்டு வாரேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//வாழ்க்கை ஒரு பரிசு.. அந்தப் பரிசின் சுகத்தை முழுக்க அனுபவியுங்கள். //


வாழ்க்கை மாத்திரமா? இப்பதிவும் ஒரு பரிசே! இதைத் தமிழாக்கி அதாவது பலாவில் சுளை வகுத்துத்
தந்ததற்கு மிக்க நன்றி

மோகன்ஜி சொன்னது…

வாங்க யோகன்.உங்கள் வாழ்த்துக்கு நன்றி.உங்கள் அன்புள்ளங்களுக்கும் இந்த விஷயத்தை தெரிவியுங்கள்.. ஏதோ ஒரு கருத்து மனத்தைத் தைத்து வாழ்க்கையை மாற்றக் கூடும்.

பத்மநாபன் சொன்னது…

( பாட்டிக்கும், பேரனுக்கும் நன்றி...கருத்துரை இடுக பகுதி கொஞ்சம் ரகளை பண்ணியதால தாமதமாகுது.. யார் பிளாக்கர் மக்கர் பண்ணுதுன்னு தெரியல )


16.நேர விரயம் தானே...அதிலும் மகிழ்வில்லாதது எதற்கு?
17.இரும்பை ப்போல் மன உறுதியை வைத்துக்கொண்டால் உயிர் உத்தரவாதமாக இருக்கும்.
18.குழந்தை பருவம்..... இரண்டாவது முறை நடிக்கத்தான் முடியும் ...அதையாவது ஒழுங்காச்செய்ய வேண்டும்.
19.எதிர்மறையான எண்ணம் வந்தாலே, பிரியம் தொலைந்து வெறுப்பு தான் மிஞ்சும்.
20.வீட்டுப்பாடம் ஒழுங்கா செஞ்சுட்டா, வகுப்பில் ஒழுங்கா படிப்பில் மனம் செலுத்தலாம்.

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! பின்னூட்டத்தை வோர்ட்ல அடிச்சு காபி செய்து ப்ளாக் கமெண்ட் பாக்ஸ்ல ஓட்டுங்க. எனக்கும் ஓரிருமுறை பின்னூட்டத்தை துப்பிடிச்சு. அதிலிருந்து ஹார்லிக்சை அப்பிடியே சாப்பிடுறதில்லை.பெரிய பின்னூட்டம்னா காப்பி பேஸ்ட் தான். யானைக்கப்புறம் யானைமுகக் கடவுள் நம்ம ப்லோக்ல எழுந்தருளியிருக்கிறார். வந்து சேவிச்சிட்டு போங்க

ஹேமா சொன்னது…

மோகன்ஜி...அத்தனையும் வாழ்வுக்கு தேவையானதே.பிரதி பண்ணிக்கொண்டேன்.நன்றி.

பத்மநாபன் சொன்னது…

வலையின் அலையில் எற்பட்டகுழப்பம்..எண்கள் மாறிவிட்டது..மற்றபடி பாட்டி சொன்னதும் பேரன் சுவைகூட்டியதும் எண்ணங்களை சீராக்குது.

23.செய்யற வயசுல செய்யலேன்னா கிறுக்கு பட்டம் தான் கிடைக்கும்.
24.மனசுல இருக்கிறான் மன்மதன்... ஆட்டமும் அடக்கமும் ஹைப்போதலமஸ்....
25. நாம தான் மகிழ்ச்சியா இருந்து அந்த பொறுப்பை நிறைவேத்தனும்.
26.ப்ளஸ் டு படிக்கறப்ப இருக்கும் கஷ்டம் நிச்சயம் எம்.இ ல இருக்காது.
27. வாய்ப்பை நழுவ விடக்கூடாது..
28.மன்னிப்பது போன்ற சிறப்பான தீர்ப்பு வேறு இல்லை, தண்டனையும் வேறு இல்லை

மோகன்ஜி சொன்னது…

உங்கள் வருகைக்கு நன்றி ஹேமா.. உங்கள் கவிதைகளுக்கு ஆற அமர ஞாயிற்றுக்கிழமை படிக்க உத்தேசம். "வானம வெளித்த பின்னும்" ரொம்ப அழகு இந்தப் பெயர்.

மோகன்ஜி சொன்னது…

அருமைய்யா! நாடு விட்டு நாடு வந்து பத்மநாபன் என்ன போடு
போடுறார் பாருங்க..மனசுல இருக்கிறான் மன்மதன்... ஆட்டமும் அடக்கமும் ஹைப்போதலமஸ்....
எப்பிடிய்யா? அருமை அருமை.. ஹும்! மன்மதன் மனசுல இல்லே உடம்புல இருக்கிறான் என்று பேச எதிர் அணியிலிருந்து..ஆர்.வீ.எஸ் வாங்க.. உங்க பாடு கஷ்டம் தான்.. வாங்கய்யா..(சாலமன் பாப்பையா குரலில் படித்துக் கொள்ளவும் )

அண்ணாமலை..!! சொன்னது…

ரொம்ப அருமையான கருத்து ஒவ்வொண்ணும்..!
ரொம்ப நன்றிங்க!

மோகன்ஜி சொன்னது…

வாங்க அண்ணாமலை சார்! வாழ்த்துக்கு நன்றிங்க

அப்பாதுரை சொன்னது…

36-28-42
(வேறே எதுவும் நினைக்காதீங்க, டர்ட்ட்ட்ட்டி மைன்ட்)

Vishnu சொன்னது…

இதை எனக்கு மின்னஞ்சிய என் பாஸுக்கு நன்றி!....
......
முதுகு வலிக்க இதைக் கணனியில் டைப்படித்து பதிவிட்டிருக்கிறேன்//
எங்கயோ உதைக்குதே ஜி

மோகன்ஜி சொன்னது…

மின்னஞ்சியது ஆங்கிலத்தில், என் டைப்பிங்கோ
தமிழில்... நா பாசுகு தமிழு ராது.. உங்க சந்தேகத்தைப் பார்த்து இப்போ மனசு வலிக்குதுங்க!

vidhyaavenkat சொன்னது…

particularly i like 8 and 13th points. very nice.
great.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

மோகன்ஜி

போன வருடம், உங்களை எனக்கு தெரியாது. அருமை நண்பரே. எனக்கு எல்லாமே தேவை போலிருக்கு

வாழ்க்கையில் எவ்வளவு தவறு செய்து இருக்கின்றோம் என்று புரியுது. ஆனால் மனது ஒரு குரங்கு - மறுபடியும் அதே கோவம், குரோதம் .....

இதை பிரிண்ட் செய்து டெய்லி படிக்கவேண்டும். உங்கள் அனுமதி இருந்தால் - இதை என் ப்ளோகில் போடலாமா ?

என்னுடைய ஆத்திசூடி படித்து இருக்கின்றீரோ ?

மோகன்ஜி சொன்னது…

என் பிரிய சாய்! நம் தவறு நமக்கு புரியும் போதே அதற்கு விடிவும் உருவாகிறது சோதரா!

என் அனுமதி உங்களுக்கு தேவையில்லை சாய்! ஜமாயுங்கள்.

உங்கள் ஆத்திச்சூடியை படித்து பின்னூட்டமும் இட்ட ஞாபகம். மீண்டும் ஒருமுறைப் படிக்கிறேன்.

உடல்நிலையில் கவனம் கொள்ளவும்.

சிவஹரி சொன்னது…

நல்ல கருத்துகள் பொதிந்த வரிகள்..

பகிர்ந்தமைக்கு நன்றி

கோமதி அரசு சொன்னது…

இங்கிலீஸ் ஒள்வையாரும் அருமையாக ஆத்திச்சூடி சொல்லி இருக்கிறார்.

எல்லாமே மிக நன்றாக இருக்கிறது.

//உடல் நலிவுறும் போது,உங்கள் அலுவலகமோ, வாடிக்கையாளர்களோ அதிகம் உதவ முன்வர மாட்டார்கள். அந்த சமயங்களில் ஆதுரமாய்க் கரம் நீட்டுபவர்கள், நம் குடும்பத்தினரும்,நண்பர்களுமே! அவர்களோடு எப்போதும் தொடர்பிலேயே இருங்கள்.//

அருமை வேலை வேலை என்று குடும்பத்தை தொலைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

//ஆழ்ந்து மூச்சை உள்ளிழுக்கவும். அது மனதை அமைதிப் படுத்தும். உள்ளிழுத்த மூச்சை அவசியம் வெளியே விட்டு விடவும்.//

மூச்சை கவனித்துக் கொண்டு இருந்தாலே சாந்தி ஏற்படும், கோபம் போன்ற மற்ற குணங்கள் குறையும் இதை ராமகிருஷ்ணர் மடத்தில் சாந்தி சாந்தி என்று சொல்லி மூச்சை கவனிக்கவும் என்பார்கள்.

வாழ்க்கையில் கடைபிடிக்கிறோம் நன்றி.

கோமதி அரசு சொன்னது…

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_26.html

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரிhttp://blogintamil.blogspot.com/2013/12/blog-post_26.html?showComment=1388023369804#c6732373831674887856

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரிhttp://blogintamil.blogspot.com/2013/12/blog-post_26.html?showComment=1388023369804#c6732373831674887856

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரிhttp://blogintamil.blogspot.com/2013/12/blog-post_26.html?showComment=1388023369804#c6732373831674887856

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.