சனி, ஜூன் 09, 2012

துங்கா


யாரப்பா நீங்களெல்லோரும்?” கணக்கப்பிள்ளையின் வினவலுக்கு பதில் கூற முன்னகர்ந்தான் இருளன்.

வந்தவர்கள் பத்து பேர். இருளனுக்குப் பின்னால் சுடர்விளக்காய் நின்றிருந்தாள் துங்கா. யொவனம் பூரிக்கும் பதினாறு வயது பைங்கிளி. அவள் இருளன் மகள்.

கணக்கையா! நாங்க கழைக் கூத்தாடிங்க சாமி! உங்க புழல் கோட்டம் பார்த்திராத வித்தையெல்லாம் செய்து காட்ட வந்திருக்கோமுங்க. வள்ளலைய்யாவை ஒரு முறை பார்த்து விட்டால் எங்களுக்கு விமோசனம் கிட்டும் சாமி!


ஐயாவை இந்நேரம்..... என்று மறுப்பை கணக்கர் விடுக்குமுன், தந்த வேலைப்பாடு செய்யப்பெற்ற பெரும் கதவு திறந்தது.
வெளியே வந்தவரோ வள்ளலே தான். அயன்றை சடையநாதர் எனும் அவர்பெயரை யாரும் வாய்விட்டு உரைத்ததில்லை. கர்ண மகா பிரபு கலியுகத்தில் அவதரித்தது போல் அள்ளி வழங்கும் கொடைவள்ளல். புலவரும் கலைஞரும் தொண்டை நாட்டுக்கு தொடர்ந்து வந்து வள்ளலின் ஆதரவு பெற்றார்கள்.

யாரப்பா இவர்கள்?”  

நிலம்பட வணங்கி எழுந்தனர் அனைவரும். இருளனே தொடர்ந்தான். 

ஐயா! நாங்கள் கழைக்கூத்தாடிகள்.. இந்தக் கலையின் அருகி வரும் சில கரணங்களை என் மகள் துங்கா மிக அநாசயமாய் செய்வாள் பிரபு! உங்கள் சன்னிதானத்தில் ஒரு முறை எங்கள் திறம் காட்ட கருணை செய்யுங்கள் பிரபு !

அப்போதே துங்காவைக் கண்ணுற்றார்.'இந்த சிறுபெண்ணா?'

உம்ம்... அப்படி என்ன வித்தைதான் தெரியும் இவளுக்கு?”

கழைக்கூத்தில் மிகக் கடினமான விச்சுளிப் பாய்ச்சல் எனும் வித்தையை இவளுக்கு கற்பித்திருக்கிறேன். சிறு பிராயத்திலேயே சூட்டிகையாய்க் கற்றுக் கொண்டாள் ஐயா! ஒரு கலைஞனின் கம்பீரமும்,ஒரு தகப்பனின் பெருமிதமும் இருளனின் குரலில் ஒலித்தது.

விச்சுளிப் பாய்ச்சலா? அது என்னய்யா பெரிய வித்தை?” வள்ளலின் குரலில் ஆர்வம் மேலிட்டது.

பிரபு! விச்சுளிப் பாய்ச்சல் மிகவும் நுண்ணிய,ஆபத்து நிறைந்த வித்தை. ஒரு நெடிய மூங்கிலின் உச்சிக்கு இவள் ஏறி அந்தரத்தில் நிற்பாள். அங்கிருந்தபடி தன் காதணியைக் கழட்டி நிலத்தில் எறிவாள்.

அப்புறம்?”

எறியப்பட்டக் காதணி நிலத்தில் விழுமுன்னர் மின்னலாய்க் கீழே பாய்ந்து, அதைக் கைக்கொண்டு ஒரு நொடிக்குள் மீண்டும் மூங்கிலின் உச்சிக்கு பழையபடி சென்று விடுவாள்.

அதெப்படி சாத்தியம்?“

உச்சியில் ஏறியபின் ஒரு யோகப் பிரயோகத்தினால் மூச்சை அடக்கி தன் உடலை ஒரு இறகைப் போல் லேசாக்கிக் கொள்வாள்.

ஆச்சரியம்...கொஞ்சம் ஆபத்தான வித்தை தான்!

ஆபத்து கொஞ்சமல்ல ஐயா! உயிரையே பறித்து விடக் கூடியது.
ஒரு முறை செய்வதற்கு ஆறு மாத காலம் மூச்சடக்கும் யோகப் பயிற்சியை கடுமையாய்ச் செய்ய வேண்டும். ஒரு முறை இப்பாய்ச்சலை செய்து விட்டால், மீண்டும் இந்த வித்தையை ஆறுமாதத்திற்குப் பிறகு தான் செய்ய வேண்டும். அதுவன்றி உடனேயே செய்யத் துணிந்தால் மரணம் அந்தக் கணமே...

போதும்.. இந்த விச்சுளிப் பாய்ச்சலுக்காக மட்டுமே இவளைத் தயார் செய்து அவளை வேறொன்றுக்கும் லாயக்கில்லாமல் அடித்து விட்டாயோ?”

இல்லைப் பிரபு.. அவள் வயதுப் பெண்கள் கற்க முடிந்தவை அத்தனையும் கூடவே கற்று வந்திருக்கிறாள். அது மட்டுமல்ல பிரபு! பாக்கள் புனைவதிலும் முறையாக தமிழாசான்களிடம் பாடம் கேட்டிருக்கிறாள்.

பாப்புனையவும் வருமோ.? அதைச்சொல்லு.. அதைச்சொல்லு...
நீங்களனைவரும் இன்று முதல் எம் விருந்தினர்.. விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள். நாளை முதல் காலை வேளையில் கொஞ்ச நேரம் தூங்காவின் தமிழைக் கேட்போம்..

பிரபு! விச்சுளிப் பாய்ச்சல் எப்போது வைத்துக் கொள்ளலாம்?”

சொல்கிறேன்... கொஞ்சம் போகட்டும்.

அடுத்த ஒரு வாரகாலம் துங்காவின் செய்யுளியற்றும் வேகத்திலும், செறிவான கருத்துக்களிலும் வள்ளல் தன்னை மறந்தார். துங்காவின் மேல் அவருக்கு அபிமானமும், வாஞ்சையும் தோன்றி மகளாகவே நடத்தலுற்றார். அடுத்த வெள்ளிக் கிழமை துங்கா விச்சுளிப் பாய்ச்சல் வித்தை நிகழ்த்த முடிவாயிற்று. பறையறிவித்து ஊரெல்லாம் கூடியது.

இருளன் கணீர்க் குரலில் பாய்ச்சல் நிகழும் விதம் குறித்து அறிவித்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே பாய்ந்து ,ஒரு நொடியில் காதணியைக் கைக்கொண்டு மீண்டும் மூங்கிலின் உச்சிக்கு துங்கா சென்று விடுவாள் ஆதலின் தக்கையில் வைத்த கண் போல் பாய்ச்சலைக் காணுமாறு வேண்டினான்.

கரகரவென துங்கா மூங்கிலின் உச்சிக்கு சென்று விட்டாள்.
வள்ளல் மூச்சைப் பிடித்துக் கொண்டார். இந்திர ஜாலம்...
காதணியை எறிந்ததென்ன? பாய்ந்த வேகமென்ன? அது தரையைத் தொடுமுன்னர் கைக்கொண்டதென்ன? மீண்டும் மூங்கில்முனை சேர்ந்ததென்ன??

ஜனங்கள் கையொலி எழுப்ப மறந்து வாய்ப் பிளந்து நின்றார்கள்.

சடையநாத வள்ளல் மனம் மகிழ்ந்து பலப்பல பரிசுகள் நல்கிக் கொண்டாடினார். இருளன் கூட்டம் விடைப் பெற்றபோது வள்ளல் நெகிழ்ந்து போனார். துங்கா! கவனமாய் இரு தாயே! கவிபுனையும் ஆற்றலை பெருக்கிக் கொள். கூடிய விரைவில் இங்கு மீண்டும் வா! வரும் போது கவிதையோலைகள் ஒரு வண்டி கூட வர வேண்டும் புரிந்ததா?”

துங்கா கண்ணீரோடு விடை பெற்றாள். வள்ளலின் அன்பும் தமிழ் போற்றும் அருங்குணமும் அவளுடைய உள்ளமெல்லாம் நிறைந்து நின்றது.

அடுத்து இருளன் கூட்டம் பாண்டிய நாடு சென்றது. மதுரையில் வழுதிப் பாண்டியனிடம் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்த்தி பரிசில் பெறல் இருளனின் நீண்ட நாள் கனவன்றோ.?

மதுரை வந்த பின் மன்னன் முன்னர் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்ச்சியும் முடிவானது.

எள்போட்டால் எள்விழாத கூட்டம். மன்னன் பரிவாரங்களுடனும், குறிப்பாகதன் புதிய ஆசைக்கிழத்தியுடனும் வந்தமர்ந்தான்.

வழுதிக்கு கட்டியம் கூறி முடித்தவுடன் இருளன் விச்சுளிப் பாய்ச்சல் நிகழும் விதம் பற்றி சொல்லி, கண்ணிமைக்காமல் காண வேண்டினான்.

மூங்கிலேறிய துங்கா பாய்ச்சலை வெற்றிகரமாய் முடித்தும் விட்டாள். அவள் பாயத்தொடங்குமுன் தானா வழுதியின்
ஆசைநாயகி அவனை அவள்பால் திருப்ப வேண்டும்?! 
பாய்ச்சலில் ஆனந்தித்து மக்கள் எழுப்பிய ஆரவாரம் வழுதியை திடுக்குறச் செய்தது.
என்ன?நான் பார்க்கு முன்னரே பாய்ச்சல் நிகழ்ந்து விட்டதா?’

மீண்டும் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்த்த துங்காவுக்கு ஆணையிட்டான்.

மறுபடியும் ஆறுமாதம் கழித்தே நிகழ்த்தமுடியும் இல்லையெனில் தான் மாள்வது உறுதியென்ற துங்காவின் இரைஞ்சல்களுக்கு அந்தக் கல்நெஞ்சன் செவி சாய்க்கவில்லை.

இது என் ஆணை! செய். என்று உருமினான் வழுதி.

வேறு வழியில்லை. செய் அல்லது செத்து மடி என்பது மன்னன் உறுதி. செய்தாலோ செத்து மடிவதும் உறுதியன்றோ.

துங்கா சுற்றுமுற்றும் பார்த்தாள்.இருளனும் கூட்டமும் அரற்றிக் கொண்டிருந்தார்கள். ஜனங்களோ திகிலோடு நின்றார்கள். வான் நோக்கி பிரார்த்தித்தாள். மரணத்தின் மடியில் சாய்ந்து விட்ட அந்தத் தருணத்தில் கூட,தன் மீது அன்பு பொழிந்த சடைய நாத வள்ளலை நினைவு கூர்ந்தாள். அவள் பாப்புனையும் திறன் மீது அவர் கொண்ட மதிப்பை எண்ணினாள். வானத்தில் அப்போது ஒரு நாரைக் கூட்டம் பறந்து கொண்டு இருந்தது. புள் வீடு தூதாய் அக்கணமே செய்யுள் புனைந்து உரத்துக் கூவினாள்.

மாகுன் றனையபொற் தோளான் வழுதிமன்
                   வான்க ரும்பின்
      பாகொன்று சொல்லியைப் பார்த்தெனைப் பார்த்திலன்
                          பையப்பையப்
போகின்ற புள்ளினங் காள் புழற் கோட்டம்
                      புகுவ துண்டேல்
சாகின்றனள் என்று சொல்லீர் அயன்றைச்
                        சடையனுக்கே

விண்தொடு கழைமீ மிசையோர் விச்சுளிப்பாயும் வித்தை
கண்கொடு காணான் வேற்றுக் கணிகைபால் கருத்தைப் போக்கி  
எண்கெட இருகால் ஈண்டே இயற்றுமோர் ஏவல் ஏற்றே
பெண்விடும் ஆவி அன்னோன்  பெருங்கழல் வாழ்த்திற் றென்னீர்


கூட்டம் திகைத்தது.

மூங்கிலேறினாள். மூச்சை அடக்கினாள். காதணியை எறிந்தாள். சரிந்தாள். சடலமாய் வீழ்ந்தாள். திரும்பிப் போன வழுதியின் செவிகளில் மக்கள் இட்ட சாபம் விழுந்திருக்காது தான்.

விச்சுளிப் பாய்ச்சல் பெண் குறித்து ஒரு கழைக்கூத்தைத் தாண்டி செல்லும் போது என் தமிழையா சொன்னதுவும், அப்பாடல்கள் தேடிப் படித்த தருணம் கண் கசிந்ததுவும் நெஞ்சில் நீங்கா நினைவுகள்.

சாகும் அந்தக் கணத்திலும் ஒரு வள்ளல் பெருமை சொல்கிறாள் எனில் அவன் எத்துணை உயர்ந்தோனாய் இருக்கவேண்டுமெனக் கருதி, பாண்டியன் தன் புலவர்களை வள்ளல் சடையனை சந்தித்து வரப் பணிக்கிறான். அவர்கள் மீண்டு, சடையன் பெருமை சொல்லும் தனிப் பாடலும் மூன்றுண்டு. பிறிதொரு சமயம் அவற்றைப் பார்ப்போம்.



48 comments:

'பரிவை' சே.குமார் சொன்னது…

விச்சுளிப் பாய்ச்சல் இப்போதுதான் கேள்விப்படுகிறேன், அருமையான பகிர்வு.

அப்பாதுரை சொன்னது…

கவிதையும் களமும் அழகாகவே இருக்கிறது.
சாத்தியம் தான் உதைக்கிறது. கழைக்கூத்தாடி தமிழில் இத்தனை தேர்ச்சி பெறுவதற்கு...
கற்பனை செய்த கவியைப் பாராட்ட வேண்டும்.
எடுத்துக் கொடுத்த உங்களையும்.

ஸ்ரீராம். சொன்னது…

கற்றுக் கொடுத்ததா வித்தையைவிளம்பரம் செய்து காசாக்க முயன்றதா எது இருளனின் குற்றம்... சாகும் தருவாயிலும் வள்ளலின் புகழ் பாடும் என்று உயர்வு நவிற்சிக்குச் சொல்லப் பட்டிருந்தாலும் துங்கா மனதில்!

அப்பாதுரை சொன்னது…

கொஞ்சம் யோசித்தால் வள்ளல் கூட வள்ளல் தானானு தோணுது..

ஸ்ரீராம். சொன்னது…

வள்ளலுக்கு சமூகப் பிரக்ஞை இருந்து இருளனைக் கடிந்து, துங்காவை மேற்கொண்டு எங்கும் செல்ல விடாமல் தத்தெடுத்துக் கொண்டிருக்க வேண்டுமோ....!

நிலாமகள் சொன்னது…

'ச‌ரியான‌ விச்சுளி', 'விச்சுளி மாதிரி' என்றெல்லாம் மூத்தோர் சொல்ல‌க் கேட்ட‌ நினைவெழுந்த‌து. அத‌ன் ச‌ரியான‌ அர்த்த‌ம் விள‌ங்கிய‌து இப்போது. க‌ற்ப‌னையோ நிஜ‌மோ... க‌வ‌லையில்லை. அவ‌ள் நாரைக‌ளை நிமிர்ந்து நோக்கி, த‌மிழால் தூது அனுப்பிய‌ த‌ருண‌ம் சிலிர்த்து த‌வித்த‌து ம‌ன‌ம். க‌ண்ண‌கிக்குப் பின் ஒருத்தியும் பாண்டிய‌ அர‌ச‌ செருக்கால் அழிகிறாள்...

'பைய‌ப் பைய‌ப் போகின்ற‌ புள்ளின‌ங்கால்...' அட‌டா!

சிவகுமாரன் சொன்னது…

கண்கள் கசிந்தன,
விச்சுளிப் பாய்ச்சல்- வார்த்தையே இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன்.
நம் தமிழில் இன்னும் என்னென்ன சுவைகள் புதைந்து கிடக்கின்றனவோ. தோண்டி எடுத்து அள்ளித் தாருங்கள் அண்ணா .

மோகன்ஜி சொன்னது…

வாங்க குமார்! நலம் தானா? விச்சுளிப் பாய்ச்சல் போன்ற அரிய சாகசங்களும் பிற வீர விளையாட்டுக்களும் மெல்ல மெல்ல வழக்கொழிந்து விட்டன.

காதல் வீரர்களாயும் கணனி சூரர்களாயும் மாறியன்றோ வருகிறோம்..

இலக்கியத்தில் கொட்டிக்கிடக்குது தமிழன் வாழ்ந்த வாழ்க்கை.

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை ! பாமர மக்கள் இலக்கியம் படைக்கவில்லை என எப்படி சொல்வது? எத்தனையோ பாடல்கள் காணக் கிடக்கின்றன. அற்றை தமிழாசான்களுக்கு ஆணி பிடுங்கும் அவலமில்லை. பிளாக் எழுத மடிக்கணனியில் மல்லாடத் தேவையில்லை. எளிய வாழ்க்கைமுறை... எளியவருக்கும் கற்பித்திடும் நேரமும் வாய்ப்பும் இருந்திருக்கிறது.

சோற்றுப் பாட்டுக்கே புரவலரை வானுயரப் பலரும் பாடி குவித்த புகழ்மாரியும் வெள்ளமாய்க் கிடக்கிறது. அதிலும் சில கற்பனை உச்சங்களைத் தொட்டிருக்கிறார்கள்.
இந்தப் பாடல் கூட அப்படி வள்ளல் சடைய நாதனுக்காய் யாரோ எழுதியதாயும் எனக்குத் தோன்றவில்லை.

இந்த சம்பவம் குறித்து இன்னொரு பாடலும் உள்ளது..

தொண்டை மண்டல சதகம் என்று உண்டு . அதில் பின் வரும் பாடலைப் பார்ப்போம்

பாகொன்று சொல்லியைப் பார்த்தமை
யாலன்று பாண்டியன்முன்
நோகின்ற சிற்றிடை வேழம்பக்
கூத்தி நொடிவரையில்

சாகின்றபோது தமிழ்சேர்
அயன்றைச் சடையன் தன்மேல்
மாகுன் றெனச்சொன்ன பாமாலை
யுந்தொண்டை மண்டலமே.

இதிலும் இந்த சம்பவம் நினைவு கூறப் படுகிறது. நாம் பதிவில் குறிப்பிட்ட பாடல்களை ஆதாரமாய்க் கொண்டு மேற்ச்சொன்ன பாடலும் வனையப் பட்டிருக்கலாம்.

உயர்வு நவிற்சியை வகைதொகை இல்லாமல் கையாண்டு வந்திருக்கிறோம்.. பாடலுக்கு பரிசில் தரும் பாங்கு இன்று கூட இருக்கிறதல்லவா?

பாமர இலக்கியம் இலக்கண வரம்பை மீறி,அல்லது அதுவே ஒரு இலக்கணம் வகுத்துக் கொண்டு நாட்டுப் புறப் பாடல்களாய் மிளிரவில்லையா. தாலாட்டு , காதல்,உடன்போக்கு, பிரிவாற்றாமை, ஒப்பாரி எனப் அத்துணையும் உயிர்ப்புடன் ஒரு பண்பாட்டையே முன்வைக்கவில்லையா?

மோகன்ஜி சொன்னது…

ஸ்ரீராம்! சாகின்றேன் என்று தூங்கா சொன்னது வள்ளலுடனான பிரிவாற்றாமையினாலா என்று இந்தப் பாட்டை வேறுவிதமாய் யோசித்துப் பார்த்தேன்... பொருந்தவில்லை.

நேர்க்கருத்தே பொருந்தி வருகிறது. இந்தப் பாண்டியனுங்க என் தப்பு தப்பா முடிவெடுக்கிறாங்களோ? கண்ணகி, துங்கான்னு நிறைய பேரை பாடாப்படுத்தியிருக்காங்க.

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை!
//கொஞ்சம் யோசித்தால் வள்ளல் கூட வள்ளல் தானானு தோணுது//

உங்களை பாட்டாலே தான் அடிக்கோணும்! எங்க வள்ளலையா சந்தேகப் படுறீங்க?

சடையனை பார்த்து,ரொப்பிக்கிட்டு வந்த புலவன் பார்க்கப் போகும் பராரிக்கு சொல்கிறான்:

இரவ ளாலரே! பெருந்திரு உறுக

அரவுமிழ் மணியும்,அலைகடல் அமுதும்

சிங்கப் பாலும் திங்கட் குழவியும்

முதிரை வாலும் குதிரை மருப்பும்

ஆமை மயிரும் அன்னத்தின் பேடும்

ஈகென இரப்பினும் இல்லென அறியான்

சடையனை அயன்றைத் தலைவனை

உடையது கேண்மின் உறுதியா ராய்ந்தே

எப்படித்தான் கொடுப்பானோ?!

மோகன்ஜி சொன்னது…

ஸ்ரீராம் ! நல்லா சொன்னீங்க.. நானும் அப்படித்தான் பொருமிக்கிட்டிருக்கேன்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க நிலா! அழகா ரசிச்சிருக்கீங்க.

//பைய‌ப் பைய‌ப் போகின்ற‌ புள்ளின‌ங்காள்...' அட‌டா!//

எனக்கும் இந்தவரிகள் நீண்ட சிந்தனையைக் கொடுத்தது..

மோகன்ஜி சொன்னது…

உண்மை சிவா! தமிழொரு தங்கச் சுரங்கம்! தோண்டிகிட்டு கீழே போனா மீள மனசு வராது.

பொழப்பு தான் நினைப்பைக் கெடு!க்குது தம்பி!

அப்பாதுரை சொன்னது…

தமிழ்க்காவலரே.. நாட்டுப்பாடலுக்கு இலக்கணம் தேவையில்லை, உணர்வும் உணர்ச்சியும் போதும். கூத்தாடும் பெண் சந்தத்துக்கு சொந்தக்காரியானதப் பத்தியில்ல சொல்லுறோம்? நல்லாத்தா இருக்கு பாட்டு. பாட்டுல குத்தமில்லே.

தோண்டுங்க தோண்டுங்க.. நீங்க பாட்டுக்கு அப்பப்ப தோண்டி எடுத்துப் போடுங்க.. நாங்க பொறுக்கிக்குவோம்.

G.M Balasubramaniam சொன்னது…

போகின்ற புள்ளினங்காள் என்று படிக்கும்போது ‘நாராய் நாராய் செங்கால் நாராய் ‘என்றபாட்டு நினைவுக்கு வந்தது. அந்தக் காலத்தில் சேதி தெரிவிக்க அன்னங்களையும் நாராய்களையும் மேகங்களையும் தூதர்களாகத் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர், வீச்சுளிப் பாய்ச்சல் புது தகவல் நன்றி. முன்பெல்லாம் மிகைப்படக் கூறல் ஒரு ஸ்பெஷாலிடியாகவே இருந்திருக்கும் போல் தோன்றுகிறது.

எல் கே சொன்னது…

மிக அருமை

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்!

அப்பனும் வயலிலதான்

ஆத்தாளோ ஊரிலதான்

காக்காவும் கரையிலதான்

கருக்கலிலே வாங்கமச்சான்”

கொஞ்ச நேரம் அசைபோட்டுகிட்டிருங்க!

பத்மநாபன் சொன்னது…

கழைக்கூத்தில் விச்சுளி பாய்ச்சல் புதுமையான விளையாட்டாக இருக்கிறது ...இப்பவும் தெருக்களில் நடக்கும் கம்பிவளையம், ஒற்றை கயிற்று மூங்கிலாட்டம் இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது விச்சுளியும் சாத்தியமே... இதற்கு தமிழ் பூச்சு அருமையிலும் அருமை....

மோகன்ஜி சொன்னது…

GMB சார்! கவிஞனின் கற்பனைக்குஎல்லை ஏது?
கவிதைக்கு பொய்யே அழகோ?

மோகன்ஜி சொன்னது…

வாங்க எல்.கே! நலமா? திவ்யா குட்டி சுகமா?

மோகன்ஜி சொன்னது…

நன்றி பத்மநாபன்! அந்தப் பெண் கவிதையில் பாய்ந்தது நம் நெஞ்சத் தடாகத்திலே தானே?

ரிஷபன் சொன்னது…

இதுவ்ரை கேள்விப்படாத கதை.
மோகன் ஜி .. உங்க எழுத்து என்னைக் கட்டிப் போடுது..
துங்காவை நினைச்சு கலங்க வச்சுட்டீங்க. என்றோ நிகழ்ந்ததை இன்றி சொல்லி அதற்கும் மனசு அலை பாய்கிறது என்றால் அது உங்களுக்கே உரித்தான பெருமை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விச்சுளிப்பாய்ச்சல் புதிய ஒரு சொல் எனக்கு. கழைக்கூத்தாடிகள் இன்று காணாமலே போய்விட்டார்கள்....

தமிழ் ஒரு தங்கச் சுரங்கம், தோண்டத் தோண்ட எத்தனை எத்தனை விஷயங்கள் நமக்குக் கிடைக்கிறது....

மோகன்ஜி சொன்னது…

என் ப்ரிய ரிஷபன்! உங்கள் பாராட்டு என்னை மகிழ்விக்கிறது. ரொம்ப தான் செல்லம் கொடுத்து என்னைக் கெடுக்கிறீர்களோ!

உங்களுக்காய் இன்னொரு ரகசியம். அந்த செய்யுள்களில் அந்தப் பெண்ணின் பெயர் எங்கும் குறிப்பிடப் படவில்லை.

சில நாட்களுக்கு முன் காலில் சதங்கையுடன்கையில் சாட்டையுடனும்
சடார் சடார் என்று தன்னை அடித்துக் கொண்டு பிச்சை கேட்டு வந்தார்கள் ஒரு அப்பனும் பெண்ணும். அந்த சிறுமிக்கு ஏழெட்டு வயது இருக்கும். அந்த சிறுமிக்கு கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு,அடித்துக் கொள்கிறாயே உனக்கு வலிக்கவில்லையா? என்று தெலுங்கில் கேட்டேன். நெற்றியில் கட்டியிருந்த ரிப்பன் பட்டியை சரி செய்தபடி வலிக்காது என்று சிரித்தாள். உன் பெயரென்னம்மா என்றதற்கு அவள் சொன்ன பதில் "துங்கா"!

மோகன்ஜி சொன்னது…

கழைக்கூத்துக்காரர்கள் அருகித்தான் போய்விட்டார்கள் வெங்கட்!

ஆனால் கழைக்கூத்துக் கலையை சில அரசியல்வாதிகள் ஸ்வீகரித்துக் கொண்டுவிட்டாராகள். அண்ணாந்து நாம் வேடிக்கை பார்க்கும் நேரம் நம் அடிமண் பறிக்கப் படுகிறதோ?

ஜனங்கள் சந்தோஷப் பட்டால் சரி!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இருளனுக்குப் பின்னால் சுடர்விளக்காய் நின்றிருந்தாள் துங்கா.

தூங்கா விளக்காய் மனம் கவர்கிறாள்...

அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

விச்சுளிப் பாய்ச்சல் என் இதயத்தை சுக்கு நூறாய் கிழித்து விட்டது..
குற்றம் செய்தவன் யார்?
1) இருளனா?
2) சுடர் விளக்கு துங்காவா?
3) கழைக்கூத்தாடி என்பதிலிருந்து
துங்காவை தமிழ்க் கவிதாயினியாய்
மாற்ற மறந்த சடையனா?
4) அந்த துப்பு கெட்ட பாண்டியனா?
சீக்கிரம் சொல்லுங்கள் ஐயோ என் இதயம் வெடிக்கப் போகிறதே!
வறுமை தான் என்ன ஒரு கொடிது? அதன் அகோர பசிக்கு கலையும், புலமையும் பஸ்மமாக வேண்டியது தானா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை..

மோகன்ஜி சொன்னது…

உங்கள் பாராட்டுக்கு நன்றி இராஜேஸ்வரி மேடம்!

ஹேமா சொன்னது…

இலக்கியச் சுவை அண்ணா.சொல்லச் சொல்ல அள்ளிக்கொண்டேயிருக்கலாம் தமிழின் அழகை.சொல்லும் திறன் உங்களிடமும்.அற்புதம் !

RVS சொன்னது…

தமிழின் பல தளங்களுக்கு எங்களை அழைத்துச்செல்கிறீர்கள் ஜி!

இது உங்கள் எழுத்தின் புலிப்பாய்ச்சல்!! நன்றி. :-)

மோகன்ஜி சொன்னது…

பதிவைப் படித்த சூட்டோடு அலைபேசியில் அழைத்து நெகிழும் நண்பர் குழாம்... இது நல்ல எழுத்தின் பாற்பட்டதா அன்றி நட்பின் பாற்பட்டதா?

உங்கள் உணர்ச்சி வேகம் உங்கள் மென் மனதின் தாக்கம் . நீர் தானையா கீர்த்தனம் எழுத இயலும்!

உங்கள் கேள்விகளுக்கு என் வசம் பதிலில்லை. காலம் காலமாய் இப்படித்தான்.எத்தனைத் துங்காக்கள் ஈழத்தில் சின்னா பின்னமானார்கள் ?
புராண அரக்கர்களை அவர்களின் உருவம் வேறுபடுத்திக் காட்டியது. இன்றைய ராக்ஷசம் யாவரும் போல் உடுத்தி யாவரும் போல் சிரித்து நஞ்சு கக்குகின்றது.

துங்காவுக்கொரு கவிதைக் கல்லறை இருக்கின்றது. மண்மூடிப் போன அபலைகளை யார் நினைப்பது?

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஹேமா! சொல்பவனுக்கு என்ன பெருமை ஹேமா. படைத்தவனுக்கே அன்றோ அவை சேர வேண்டும்? உன் அன்புக்கு நன்றி ஹேமா.

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி ஆர்.வீ.எஸ் !

kashyapan சொன்னது…

மோகன் ஜி அவர்களே! விச்சுளிப்பாய்ச்சல் பற்றி அறிஞர் கி.வ.ஜ. சொல்லக் கேட்டிருக்கிறென். கிட்டத்தட்ட "பூமராங்" மாதிரி மனித உடலை பயன்படுத்துவது. ஓடிவந்து காலல் உந்தி வானத்தில் உயரப்போய் மீண்டும் சம்நிலையில் நீற்பது "விச்சுளிப்பாய்ச்சல்". கிட்டத்தட்ட நவீன ஜிம்னாஸ்டிக்" பயிற்சி போன்றதாகும் . பெயர் நினைவில் இல்லை.கிட்டத்தட்ட இப்படியோரு பாய்ச்சலை ஒலிம்பிக் போட்டியில் ஒரு சோவியத் சிறுமி செய்து காட்டியுள்ளாள். பத்துக்கு பத்து மதிப்பேன் பெற்ற அந்த சிறுமிக்கு அப்போது பத்து வயதுதான் என்பது என் யூகம்..---காஸ்யபன்

மோகன்ஜி சொன்னது…

வாங்க காஸ்யபன் சார்! மிக நல்ல தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

கி.வா.ஜ அவர்கள் தலைமையில் ஒரு கவியரங்கத்தில் பங்கு கொண்டு அவரால் பாராட்டு பெரும் பாக்கியம் எனக்கு கிட்டியது. எனக்கு அவர் சொன்ன அறிவுரை : கைத்தட்டலுக்காக எழுதாதே.மனம் தொட்டு எழுது."

முயற்சி பண்ணிக் கொண்டுதான் இருக்கிறேன் சார்!

கீதமஞ்சரி சொன்னது…

இப்படிப்பட்டதொரு அரிய படைப்பைப் படிக்கும் வாய்ப்பு இன்றுதான் அமைந்தது. விச்சுளிப்பாய்ச்சலால் என்னுள் பாய்ந்து மனம் பறித்துப் போய்விட்டாள் துங்கா. பழம்பாடல்களும் அவற்றைத் தாங்கள் சுவைபடத் தொகுத்தளித்த விதமும் மனவாழம் புகுந்து நெகிழ்த்துகின்றன. மிகவும் நன்றி மோகன்ஜி.

மோகன்ஜி சொன்னது…

நன்றி கீதமஞ்சரி! இன்னமும் சில முத்துக்களை அவ்வப்போது பார்ப்போம். உங்கள் வாழ்த்து ஊக்கம் தரும் அமுதம்.

vasan சொன்னது…

'துங்கா'வின் விச்சுளி பாய்ச்ச‌ல், என்றோ ந‌ட‌ந்த‌து
இன்று க‌ண்முன் அர‌ங்கேறுகிற‌து, உங்க‌ளின் எழுத்தின் திண்மையால்.
பின்னோட்ட‌ங‌களிலும் அத‌ன் ப‌தில்க‌ளிலும் கொட்டிக் கிட‌க்கிற‌து புதுப்புது செய்திக‌ள்.
"விச்சுளி பாய்ச்ச‌ல்" முத‌ன் முறையாய் கேள்விப்ப்டுகிறேன். மிக்க‌ ந‌ன்றி மோக‌ன்ஜி

மோகன்ஜி சொன்னது…

வாசன் சார்! வருகைக்கும் அன்புக்கும் நன்றி. மீண்டும் ஒரு முறை நாமெல்லாம் சந்திக்க வேண்டும். ஒரு நாளெல்லாம் சேர்ந்திருந்து நடப்பை அலசி நினைவின் பக்கங்களில் ஒரு கூட்டுப் பதிவை இட வேண்டும்.

Thoduvanam சொன்னது…

அருமையான பகிர்வு.நுனிக் கம்பின் உச்சியில் உயிர் ஊசலாட,வித்தை கட்டும் கழைக் கூத்தாடி.. கணிகையை நோக்கிய கயவன் காவலன்..நெஞ்சில் தூங்காத புரவலன்..கூடு நோக்கி போகும் புள்ளினம்..காட்சி விரிய .. விச்சுளிப் பாய்ச்சல் கேட்டு விதிர் விதித்துப் போனேன். துங்கவின் முடிவில் நெஞ்சு பொறுக்குதிலை..

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

மோஹன்ஜி! உங்களிடம் பேசிய பின் தான் வாசிக்க முடிந்தது துங்காவை!

ஹா! எத்தனை அற்புதமான சாகஸங்களின் குவியல் நம் முன்னோர்கள். விச்சுளியின் வீச்சுக்குச் சற்றும் குறைவில்லா சொற்றுளிப் பாய்ச்சல்.

துங்காவின் பாதங்களிலும் தமிழையாவின் கன்னங்களிலும் மோஹன்ஜியின் விரல்களிலும் பதிக்கிறேன் முத்தம்.

காஸ்யபன் ஐயா நினவிடுக்குகளில் தேடிய அந்த 1976 மாண்ட்ரியல் ஒலிம்பிக்ஸ். அது 14 வயது ரஷ்ய ஜிம்னாஸ்டிக் சிறுமி நாடியா கோமென்சி.

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி காளிதாஸ் முருகையா சார்! பேர் அழகா இருக்குங்க. ஒரு கேரக்டருக்கு உங்க பேரை வச்சுக்கலாமா சார்?

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய சுந்தர்ஜி!
/சற்றும் குறைவில்லா சொற்றுளிப் பாய்ச்சல்./ எங்கயோ போய்க்கிட்டிருக்கீங்க!

உங்க 'உம்மா'வுக்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த சிறப்பான பகிர்வை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

லிங்க் தவறாகி விட்டது... மன்னிக்கவும்... சரியான லிங்க் :

http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_28.html