ஒரு காதை அறுத்துக்குறேன் எனப் பந்தயம் கட்டறதும்
கேட்கவே காது கூசுதுன்றதும்,
காது குளுந்து போச்சுய்யான்றதும்,
கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சுன்றதும்...
கண்ணு,காது வச்சு பெரிதாக்கிடுவாங்கங்கிறதும்........
எப்பவும் காதுலயே கையி!
காதை இழுக்காம நமக்கு ஒரு பேச்சு வருதா?
நான் சொல்றதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கிறீர்களா?
காதைக் கடிப்பது என்பது ரகசியம் சொல்வதைக் குறிக்கும்.
மைக் டைசன் கோபத்தில் நிஜமாகவே எதிராளியின் காதை கடித்து துப்பி விட்டான். எதற்கும் ரகசியம் பேசும் போது ஜாக்கிரதையாய் இருங்கள்...
காதோரம் எங்கும் துளையிட்டு தங்கத்தில் மாட்டல்கள் போடுவது பேஷன் இப்போ. ஒரு காதை அறுத்தால்,போதும், ஒரு மாதம் ஒரு குடும்பம் உட்கார்ந்து சாப்பிடலாம்.
“என் மாமியாருக்கு பாம்புக் காதுடீ” என்று உங்கள் தோழி சொன்னால் நம்பாதீர்கள். ஏனென்றால் பாம்புக்கு செவியே கிடையாது. அதிர்வையும் சலனத்தையும் மட்டும் கொண்டே அது உதார் விடுகிறது.
மூணு தவளை டூர் போச்சாம். மூணும் ஒரு பள்ளத்துல விழுந்துடிச்சாம். எம்பி எம்பி வெளிய வர பாத்துச்சாம்.
சுத்தி இருந்த தவளை எல்லாம் கைய கைய ஆட்டி,
“வேணாம் குதிச்சு சோர்ந்துடாதீங்க. இது பெரிய பள்ளம். வெளிய வர வாய்ப்பேயில்லே. எதாச்சும் சாப்பிட குடுக்குறோம். பாம்பு வர்ற வரை உள்ளே இருங்க”ன்னு கூச்சல் போட்டதுகளாம். இதைக் கேட்ட பயத்திலேயே ஒரு தவளை உயிரை விட்டுடிச்சாம். இன்னொன்னு ரொம்ப டென்சனோட குதிச்சு மயங்கிடிச்சாம்.
மூணாவதோ குதிச்சு குதிச்சு வெளியே வந்துடிச்சாம்.
மற்ற தவளைகளைப் பார்த்து, ”நீங்க உற்சாகப் படுத்தினதுக்கு நன்றி”ன்னுதாம்.
மத்த தவளைகளுக்கு ஒண்ணுமே புரியலையாம்.
விஷயம் என்னன்னா, மூணாவது தவளைக்கு காது கேட்காது. மற்றவை ‘வராதே வராதே’ன்னு கைய ஆட்டினதை,
ஊக்கப் படுத்தறதா நினைச்சு உற்சாகமா குதிச்சுதாம்.
பிறர் நம்மை சோர்வுறச் செய்யும் போதோ, அதைர்யப் படுத்தும் போதோ, செவிடாய் இருக்க பழகிக் கொள்ளுங்கள்.
பாருங்களேன் அநியாயத்தை, இரண்டு காதும் கஷ்டப்பட்டு தாங்கும் கண்ணாடியை காதுக் கண்ணாடி எனக் கூப்பிடாமல், வெறுமே முட்டுக் கொடுக்கும் மூக்கின் பேரால்,
’மூக்குக் கண்ணாடி’ என்றல்லவா அழைக்கிறோம்?!
விமானப் பயணத்தின் போது காது அடைக்கும்..எனக்கும் ஒரு பயணத்தில் இப்படி அடைத்து ‘ஞொய்’ ஆனபோது, விமானப் பணிப்பெண் புன்னகையுடன் “வெஜ்ஜா நான்வேஜ்ஜா” எனக் கேட்க,”அஜ்ஜீத் தானே நீங்க?” எனக் கேட்டதாய்ப் புரிந்து கொண்டு, “ஓ நோ!”என நான் தன்னடக்கம் காட்ட, புவ்வா இல்லாமல் பயணித்தேன் போங்கள்! “தல” புண்ணியத்தில் உபவாசம்! அட! நிஜமாதாங்க!
நடிகை மீனாவின் காதுக்கும் மேலூருக்கும் ஒரு தொடர்பு இருக்கு தெரியுமா? எதுக்கு சஸ்பென்ஸ்? நானே சொல்லிடறேன்.
‘காது செஞ்ச மண்ணு அது மேலூரு’ என்று பொற்காலம் சினிமாவில் மறைந்த முரளி பாடினாரே....”தஞ்சாவூரு மண்ணு எடுத்து” பாட்டில்..... அதைத்தான் சொன்னேன்... ஏன்.. ஏன்.. நீங்க டென்சன் ஆவுறீங்க? மீதியையும் காது குடுத்து கேளுங்க!
மிகச் சிறந்த சிம்பனி இசையை வடித்த மேதை பீதோவனுக்கு காது கேட்காது.
காந்தி தாத்தாவுக்கு காது மடல்கள் பெரியவை.
எங்க பாட்டி சொல்லும்,”இட்டு கெட்டது காது.. இடாது கெட்டது கண்’ காதுக்குள்ள குச்சி ,ஹேர்பின்,பட்ஸ், ஸ்க்ரூ டிரைவர் எல்லாம் இட்டு கொடஞ்சா காது டமாரமாயிடும்..
நல்ல அஞ்சனம்(கண் மை) இடாததால கண்ணு புட்டுக்குமாம்.
ஆகவே தாய்க்குலமே! ஐடெக்ஸ் உபயோகிங்க!!
ஒரு பழைய தெலுங்கு சினிமா பாட்டு ..
அதில் இரு வரிகள்....
“ மனம் ஓர் ஊமை எனினும் அதற்கோர் மொழியும் இருக்கும்.
செவியுள்ள இன்னொரு இதயத்துக்கே அம்மொழியும் புரியும்”
நல்லா இருக்கில்லே?
கடவுள் அர்த்தமின்றி எதையும் செய்யரதில்லே! பாருங்களேன்.
ஒரு வாயைக் கொடுத்தவன் காதை இரண்டா இல்லை தந்திருக்கான்!
அந்த வாயும் ரெண்டே இன்ச்சு..
காதோ ஒவ்வொன்னும் நாலு இன்ச்சு...
வாய்க்கு மேலுதடு, கீழுதடுன்னு ரெண்டு ஷட்டர் வேற இருக்கு.
காதுகளோ திறந்த மேனிக்கு மூடியில்லாம.. ஏன்? ஏன்?
கொஞ்சமா பேசு, நிறைய கேளுன்னு இல்ல அப்பிடி வச்சாரு?..
அப்பிடியா இருக்கோம்.. கேட்கிறேன் சொல்லுங்க?
குழந்தைங்களோட காது மடலை தடவிப் பார்ப்பது
என்னா சொகம்.!
இருங்க முடிச்சிட்டேன்..
காதே ஒரு கேள்விக் குறி மாதிரி இருப்பதாலே, ரெண்டே ரெண்டு கேள்வியோட என் காதை, ஸாரி வாயைப் பொத்திக்கிறேன்!
அமெரிக்காவில் வாழும் அன்பு நெஞ்சங்களே! உங்க ஊர் ஓபாமாவுக்கு காது எக்ஸ்ட்ரா லார்ஜ் சைசாமே ?
நம்ம தெக்கத்தி “காது பாம்படம்” மறுபடி பேஷனா வரப் போவுதாமே!
இப்பத்தானே சொன்னேன்? காதைக் கொடையாதீங்க..
.
(தீராத விளையாட்டுப் பிள்ளை வலைப்பூவில் நான் ஒரு பின்னூட்டம் இடப் போக, எனக்கு காது இருக்கிறதா என அன்பர் ஆர்.வீ.எஸ் அவர்களுக்கும், என தங்கை ஹேமாவுக்கும் சந்தேகம் வந்தது., காது பற்றி இடுகை இடுமாறு எனக்கு அன்புக் கட்டளை இட்டு விட்டார்கள்.. இந்தக் காது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? )