திங்கள், அக்டோபர் 27, 2014

திருலோக சீதாராம்- சில நினைவுகள்


         
'எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்’ என்றான் பாரதி. பாரதிக்கொரு ஞானவாரிசு வந்தார். அவரோ, 'எழுத்தும், எழுதுகோலும் மட்டுமன்றி எழுதுபவனும் தெய்வம்' என்று கவிதைக்காவலனாய் ஒரு உன்னத வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். அவர்தான் கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள்.

 ஒரு ஆற்றல்மிக்க கவிஞராய் ,பத்திரிகை ஆசிரியராய், தேசிய இயக்க முன்னோடியாய், கேட்போர் மயங்கும் பேருரையாளராய், இலக்கியவாதியாய் பன்முகம் கொண்ட மேதையாய்த் திகழ்ந்தவர்  திருலோகசீதாராம். 

சீதாராம் அவர்களின் தந்தை பெயர் திருவையாறு லோகநாத சாஸ்திரி. ஊரின் பெயரான திருவையாற்றிலிருந்து "திரு'வையும்தகப்பனார் பெயரில் உள்ள "லோக'த்தையும் சேர்த்துக் கொண்டு புதுமையாய் திருலோக சீதாராம்’ என்று பெயர் கொண்டார்.


(திருலோக சீதாராம் அவர் மனைவியுடன்)
                 
தான் ஞானத் தந்தையாக வரித்துக் கொண்ட மஹாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு வருடம் தவறாமல் நீர்க்கடன் செலுத்தி வந்தவர்.

பாரதியாருக்குப் பின்னர் அவர் குடும்பத்தை கண்இமைப்போல் காத்துவந்தவர். பாரதியின் மனைவி செல்லம்மாள்பாரதியின் இறுதிநாட்களில் நோயுற்றிருந்தபோது ஒருமகனாய் உடனிருந்து உதவியவர். தன் மடியிலேயே இறுதி மூச்சைவிட்ட செல்லம்மாள் பாரதிக்காக அந்திமக்கிரியை செய்து துக்கம் மேற்கொண்டவர்.  



                         

திருலோகசீதாராம் திருச்சியில் நடத்திவந்த சிவாஜி பத்திரிகையில் பல எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு ஊக்கமளித்தவர்.

எழுத்தாளர் சுஜாதாவை அடையாளம் கண்டு அவரின் முதல்படைப்பை சிவாஜியில் வெளியிட்டு அவருக்கு ஒரு ராஜபாட்டை அமைத்தவர்.        

அவர் காலத்திய அத்தனை பெரிய எழுத்தாளர்களையும் மிக நெருங்கிய நண்பர்களாய்ப் பெற்றவர். திருச்சி வரும் எழுத்தாளர்கள் அத்தனைபேரும் இவரை சந்திக்காமல் திரும்ப மாட்டார்கள். இவரின் விருந்தோம்பல் மிகப் பிரசித்தம். 

பாவேந்தர் பாரதிதாசனுடனும் ,புதுமைப்பித்தனுடனும்  நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

திரு G.D.நாயுடு, எழுத்தாளர்கள் கரிச்சான்குஞ்சு, தி.ஜானகிராமன், கு.பா.ரா மற்றும் பல ஜாம்பவான்கள் அவரின் பேச்சாற்றலையும் கவித்திறனையும் வியந்து அவரோடு நீண்ட நட்பு கொண்டிருந்தனர். 

‘மந்தஹாசன்’ என்றும்,’படிக்காசுப் புலவர்’ என்றும் இலக்கிய நண்பர்கள் இவரை அழைத்து வந்தனர்.

இவர் பயணங்களில் பெருவிருப்பு கொண்டவர். சுத்தானந்த பாரதியார் இவரை ‘திரிலோக சஞ்சாரி' என்று குறிப்பிடுவாராம். 

 வாலி பல சமயங்களில் எழுத்திலும் பேட்டிகளிலும் இவரைப் பற்றி நினைவு கூர்ந்தபடி இருந்தார்.

தேவசபை' எனும் குழுமத்தை ஏற்படுத்தி, இலக்கிய சர்ச்சைகளை காவிரியின் கரையில், தேர்ந்த ஆர்வலர்களுடன் நிகழ்த்தினார்.

 சீதாராம் அவர்கள் கவிதைகளை ஏற்ற இறக்கங்களுடன் கம்பீரமாக சொல்லும் பாங்கு அனைவரையும் கவர்ந்தது. அபாரமான நினைவாற்றல் கொண்டவர். பல இலக்கியப் பாடல்களை அவர் குறிப்புகள் ஏதுமின்றி மடை திறந்த வெள்ளம்போல் பொழிவதை பலரும் நினைவுகூர்வார்கள்.

'ஆற்காடு தூதன்' எனும் இதழோடு இவர் இலக்கிய பயணம் தொடங்கியது.

நாற்பதுகளின் ஆரம்பத்தில் ‘கிராம ஊழியன்’ எனும் அரசியல் பத்திரிகை இலக்கிய ஏடாக மீண்டும் உயிர்பெற்றது. திருச்சிக்கு அப்பால் உள்ள துறையூரில் மறுமலர்ச்சி இலக்கிய ஏடாக வளர்ந்து வந்தது. திருலோக சீதாராம் அவர்களை ஆசிரியராயும், கு.ப.ரா. அவர்களை கௌரவ ஆசிரியராயும் கொண்டு வெளிவந்து, பல நல்ல ஆக்கங்களை வெளியிட்டது. 1944இல் கு.ப.ரா. இறந்தபோது, வல்லிக்கண்ணன் கிராம ஊழியனுக்கு வந்தார். அந்த ஆண்டே திருலோகசீதாராம் 'சிவாஜி ' இதழைத் தொடங்க, வல்லிக்கண்ணன் கிராம ஊழியனின் ஆசிரியராய் பொறுப்பேற்றார். 

சற்றொப்ப 37 ஆண்டுகாலம் அவர் சிவாஜி இதழை வெளியிட்டுவந்தார்.. ‘கவிஞர் அச்சகம்’ எனும் பதிப்பகத்தையும் நடத்தினார். அதில் அவர் எழுதிய ஆக்கங்களில் சில நூல்களாயின. ‘இலக்கியப் படகு’ எனும் நூல் அதிக கவனம் பெற்ற ஒன்று. விகடனில் அவர் எழுதிய கட்டுரைகள் ‘புதுயுகக் கவிஞர் ‘ என்ற நூலாய் வெளியிடப்பட்டது. மேலும் சில நூல்களும் வெளியாயின.

ஹெர்மான் ஹெஸ்ஸே எழுதிய 'சித்தார்த்தா'எனும் நூலை இவர்  மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்பில் நழுவிவிடும் மூலநூலின் உயிர்ப்பை போலன்றி, சீதாராம் அவர்களின் மொழிபெயர்ப்பு ஜீவனுடன் விளங்கியது. பல ஆங்கிலக் கவிதைகளையும் மொழியாக்கம் செய்தார்.

கவிஞரின் 'கந்தர்வகானம்' எனும் படைப்பிற்கு, சாஹித்திய அகாதமி விருது கிடைப்பதாக  இருந்தது என்றும்,ஏனோ கடைசி நிமிடத்தில் நழுவிவிட்டது என்றும் ஒரு பேச்சுண்டு. 'கந்தர்வ கானம்' ஏற்படுத்திய தாக்கத்தில் தொழிற்சங்கவாதியும்,படைப்பாளியுமான திரு நாகலிங்கம் தன் பெயரை 'கந்தர்வன்' என மாற்றிக் கொண்டார்.

காரைக்குடி கம்பன் கழகத்திலும், இலக்கிய  மாநாடுகளிலும் கவிஞரின் காந்தக்குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. கு.ப.ரா, வல்லிக்கண்ணன்,கவிஞர் சுரதா என அவர் ஆதரவு பெற்றோரின் எண்ணிக்கை அதிகம். எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத எளிமை உடைவராகவே திகழ்ந்தார். மரபுக்கவிதையிலும் வேகமும் செறிவுமாய், புதுபாடுபொருள்களை கொண்டு நெஞ்சையள்ளும் கவிமாரி பொழிந்தார்.

கவிஞர் தேர்தலிலும் போட்டியிட்டார். வீதிவீதியாய் பாரதியின் பாடல்களை கணீரென பாடியவாறே வாக்கு சேகரித்தாராம். 

56 வயதுவரை மட்டுமே வாழ்ந்த கவிஞர் 1973 ஆம் வருடம் அவரின் ஞானத்தந்தை பாரதியினைத் தேடி இவ்வுலகை நீத்தார். நல்ல இலக்கிய படைப்புகளையும் ஒரு அன்புமயமான குடும்பத்தையும் விட்டுச் சென்றார். 
திருலோகசீதாராம்
 

 








திருலோக சீதாராம் அவர்களின் சீடரும் நெடுநாள் நண்பருமான பன்மொழி வித்தகர் TNR என்று அறியப்படும் சேக்கிழார் அடிப்பொடிதிரு டி.என்.ராமச்சந்திரன் அவர்கள் திருலோக சீதாராமின் பல சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அண்மைக்காலத்தில் வெளிவந்த மிகச்சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதைநூல் ஆகும். 

இது .கவிஞரின் நயமிக்க படைப்புகளான ‘கந்தர்வ கானம்’, ’உடையவர்’, ’புகழ்க்கவிகை’ குருவிக்கூடு'' போன்ற நெடுங்கவிதைகள் உட்பட 55 ஆக்கங்களை  சுவைகுன்றாமல் மொழிபெயர்த்துள்ளார். 


சேக்கிழார் அடிப்பொடி
T.N.ராமச்சந்திரன் அவர்கள் 
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தஞ்சையில் நடந்த விமரிசையான விழாவில் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. ஹைதராபாதிலிருந்து இவ்விழாவுக்கென தஞ்சை சென்றிருந்தேன்.

இங்கு நான் நெஞ்சுநிமிர்த்தி சொல்லிக்கொள்ள ஒன்று உண்டு. திருலோக சீதாராம் அவர்கள் எனக்கு சொந்தக்காரர். என் தந்தைக்கு மாமன்முறை. கடலூர்,பாண்டிச்சேரி வரும் போதெல்லாம் எங்கள் இல்லத்துக்கு அவர் வருவதுண்டு. என் இளமைப்பிராய நினைவுகளில்,அவரின் சற்றே குள்ளமான உருவமும், கணீர்க்குரலும், என் பதின்மவயதின் கவிதை முயற்சிகளை அவர் ஊக்குவித்ததும் நிழலாடுகின்றன. அவர் வெற்றிலை செல்லத்தில்தான் அவர் கவித்துவம் இருப்பதாய் என் தந்தை கேலியாய் சொல்வதுண்டு.

 அவருடைய நான்கு புதல்வர்களும், மூன்று மகள்களும் குடும்பத்துடன்  இந்த விழாவுக்காய் தஞ்சை வந்திருந்தனர். குடும்பத்து உறுப்பினர்களில் ஒருவனாய் நின்று, ஒரு மாமேதையை இரண்டு நாட்கள் சிந்தித்திருந்தது, என் மனதிற்கு நிறைவாய் இருந்தது. நாளெல்லாம் கவிஞரின் வாழ்க்கைச் சம்பவங்களை அசைபோட்டபடி இருந்தோம்.

 திருலோக சீதாராம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சற்று விரிவாக எழுதும் முயற்சியில் இருக்கிறேன். புத்தகவெளியீட்டு விழா சமயத்தில் நண்பர் திரு ரவிசுப்ரமண்யம் கவிஞர் பற்றிய ஆவணப் படத்தையும் தொடங்கினார்.

அண்மையில் திரு ஜெயமோகன் அவர்களுக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலில் இந்த விழா பற்றி குறிப்பிட்டிருந்தேன். தற்செயலாக முந்தையதினம் தன் நண்பர்களிடம் திருலோகசீதாராம் பற்றி பேசியதாகவும், அவர்  பாரதிக்கு நீர்க்கடன் செய்து வந்ததைப் பற்றி, மகாபாரதத்தில் விதவிதமான மகன்களைப் பற்றி வருவதன் தொடர்ச்சியாக......” என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். மிக மனநெகிழ்வாய் இருந்தது. காலத்தை வென்று நிற்க ஒரு கவிஞனுக்கு, தன் உயர்ந்த படைப்புகள் மட்டுமின்றி , உன்னதமான வாழ்க்கைமுறை கூட தேவை என்று எண்ணிக்கொண்டேன்.


திருலோகசீதாராம் அவர்களின் சில வாழ்க்கைக் குறிப்புகளை இந்தப் பதிவில் தந்திருக்கிறேன். கவிஞரின் வைரவரிகளை இன்னொரு பதிவில் பேசுவோம். கவிஞரைப் பற்றி பாவேந்தர் பாரதிதாசன் யாத்த கவிதை ஒன்றின் சிலவரிகளை சிந்தித்து இந்தப் பதிவினை நிறைவு செய்வோம்.

இவனுயர்ந்தான்   அவன்   தாழ்ந்தான்
என்னும்  இன   வேற்றுமை   ஓர்  அணுவும்  இல்லான்
எவன்   பொதுவுக்கு   இடர்   சூழ்ந்தான்
அவன்   தாழ்ந்தான்   அஃதில்லான்
உயர்ந்தான்  என்று
நுவல்வதிலே   திருலோகன்  அஞ்சாநெஞ்சன்
தக்க  நூற்கள்   ஆய்ந்தோன்



படங்களுக்கு நன்றி: முதல் படம்- திருமதி இந்திரா, தஞ்சை(கவிஞரின் மகள்).
ஏனைய படங்களுக்கு GOOGLEக்கு நன்றி) 




வியாழன், அக்டோபர் 23, 2014

காதல் கோட்டை






நானும் மோதிமோதித்தான் பார்க்கின்றேன்,
ஒருதலையாய் ஆர்ப்பரிப்பில்
அலையடித்து அலையடித்து
உன்னை உண்டுவிடத் துடிக்கின்றேன்.

தெறிக்கும் நீர்த்திவிலைகள் தளர்ந்து
கசிகின்றன உன் மேனிவழி.
காலம் உதிர்ததுவிட்ட கல்லிடுக்குகளினூடே
துப்புரவாய் நீரையெல்லாம் துப்பிவிடுகிறாய்

நிராகரிப்பின் வன்மத்தில்
ஓங்கிஓங்கித் தாக்குகின்றேன்.
சற்றும் அசைந்து கொடுப்பதில்லை நீ.

பின்வாங்கித் தளர்கிறேன் கண்ணீர்நுரைக்க.
காலம்காலமாய் கண்ணீர் சிந்தி,
உப்பாய்க் கரிக்கின்றேன்.

எனக்கு வேறுவழியில்லை.
உனக்கும் கூடத்தான்.

என்றோ ஒருநாள் உனை உதிர்த்துவிடுவேன்,
கல்லுகல்லாய்....

வாரி உருட்டி யுன்னை
பொத்தி வைப்பேன்
என் கர்ப்பத்துள்...




வெள்ளி, அக்டோபர் 17, 2014

சட்டைக் கவிதைகள்

மஞ்சள்

நேர்காணலுக்காய் உள்ளே அழைக்கப்பட
ஐந்துநிமிடம் இருந்த போதே
அதைப் பார்த்தேன்.
வெள்ளைசட்டையின் மூன்றாம்பட்டன் அருகே
உளுந்து அளவுக்கு ஓர் மஞ்சள்கறை.
கொண்டைக்கடலை அளவுகூட இருக்கலாம்.

காலை இட்லிசாம்பாரின் சிந்தலாய் இருக்கக்கூடும்.
அதை சாந்தி ஊற்றியபோது சிந்தியிருந்தால்
அப்போதே அவளை கத்தியாவது இருக்கலாம்.

அந்த மஞ்சள்பொட்டை விரலால் மூடிக்கொண்டு
அறைக்குள் நுழைந்தேன்.

அரக்குமஞ்சளில் புடவையணிந்த ஒரு அம்மாளும்,
சந்தணகுங்குமதாரியாய் ஒரு கண்ணாடிக்காரரும்,
மஞ்சள்பல் தெரிய அமரச்சொன்ன அதிகாரியும்
கண்களால் எனைக் கவ்வினார்கள்.

கேட்கப்பட்ட பத்து மஞ்சள்கேள்விகளில்
ஒன்பது மஞ்சள்பதில்கள் சரியானவை.
வாழ்த்துக்கள் என்று சொன்னபின்னரே
கறையை மறைத்த விரல்களை எடுத்தேன்.
கறை நல்லது.

வாழ்த்து சொன்ன சாந்தியிடம் கறையைக் காட்டினேன்.
காலையில் கேட்டைமூடி நான் சென்றபோதே
அதை அவள் பார்த்ததாய்ச் சொன்னாள்.


அளவுகள் 

நாற்பதென்றால் நாற்பது தான்.
முப்பத்தெட்டும் கூடாது,
நாற்பத்திரண்டும் உதவாது.

எல் எக்ஸெல் டபுளெக்ஸெல் எல்லாம்
 வேலைக்காகாது.
ஸ்லிம்பிட்,ஸ்டிச்லெஸ் சங்கதி
நமக்கும் புரியாது.

கௌஸ்பாய் தையல்கடையை
மூடிய பின்னே,
முகம் தெரியாதவன் தைத்ததை
முனகாமல் போட்டுக்கொள்கிறேன்,
காலர்நுனியில் குங்குமம் தீற்றி.

இல்லாத மாடல்

'என்னமாதிரி தைக்க'என்றான்.

'ஆனந்த ஜோதி எம்.ஜி.ஆர் போட்டமாதிரி,
டீசர்ட்டாட்டம் ;ஆனா சட்டைத்துணியிலே'என்றேன்.
இல்லையென்றே தலையசைப்பில் மிரண்டு சொன்னான்.

'சிவாஜி போட்ட சிலுக்கு சட்டை போல'என்றேன்.
'ஆவாது ஓல்டு பேஷன் சாரே' என்றான்.

அப்போ காமராஜர் மாடல் வேண்டுமென்றேன்.
முக்கால்கை சட்டை இப்போ முடியாதென்றான்.

'மோடி மாடல்சட்டை தான் தையேன்' என்றேன்.
அது சட்டையே இல்லையென்று அனுப்பிவிட்டான்.


புதுசு

சீ... என்ன இது?
மனுஷனை இப்படியா இறுக்குவது?
இனிமேலும்
எனக்குத் தாங்காது.
புதுசு தான்!
அதற்காக இப்படியா?

பொத்தான்களை ஒவ்வொன்றாக 
கழற்றினேன்

கலைந்த படுக்கையில்
படர்ந்தது
நான் எறிந்த இறுக்கமான புதுச்சட்டை.



பாம்புச் சட்டை

சட்டென்று கனவில் வந்தது
கிராமத்துவீட்டு வேலியில் தொங்கிய
பாம்புச்சட்டை.
இவ்வளவு வருடங்களுக்குப்பிறகும்
அன்று பார்த்தபடியே.

பாட்டனும் ராசய்யாவும் கோல்கொண்டு
எங்கும் துழாவியதையும்,
ஆடுதீண்டாப்பாளை செடிகளை
வேலியோரம் அம்மா நட்டதையும்,
'நல்லது' வந்திருந்தால் அப்பளம் சுடும் வாடைவரும்
என்று அப்பா சொன்னதையும்,
சுப்ரமண்யபுஜங்கம் படித்தபடி
பாட்டி இருந்ததையும்,
சன்னல் வழியே பார்த்தபடி பயந்ததையும்
நான் மறந்துவிட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன்.

ஃபப்பிள்பேக் பாலிதீன் கிழிசல்போல
கனவில் வந்த பாம்புச்சட்டை
இன்னமும்
ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.





ஞாயிறு, மே 26, 2013

டி.எம்.எஸ்



 
இன்னுமொரு தூக்கம் துறந்த இரவு. மூன்று தலைமுறைகளை வசியப்படுத்தி ஆதூரம் தந்த காந்தக்குரல் மீளா மௌனத்தில் ஒன்றி விட்டது. டி.எம்.எஸ் அமரராகி விட்டார். சில நஷ்டங்கள் என்றுமே ஈடு செய்யப்படுவதில்லை. இந்த இழப்பும் மாளப் பெரிய இழப்பு..  

இந்த மகத்தான கலைஞனுக்குக்கூட சாவு என்ற ஒன்று வரும் என்று எதிர்பார்க்கவில்லை தான். அவர் பின்னணி பாடகர் என்று என்றுமே நான் ஒத்துக் கொண்டதில்லை. நடிகனின் குரலின் பாங்கை உள்வாங்கி, கவிஞனின் வரிகளில் தொக்கி நிற்கும் அர்த்தத்தையும்,உணர்வையும் தன்வயப்படுத்தி, கோதற்ற தங்கக் குரலில் வெளிப்படுத்த  டி.எம்.எஸ் போன்ற வேறொரு பாடகன்  யாருமே இருந்ததில்லை. பாடலாசிரியனின் வரிகளுக்கு வண்ணம் சேர்த்தவர் : நடிகனின் ஆளுமைக்கு தன் குரல் ஜாலத்தால் அர்த்தம் தந்தவர் டி.எம்.எஸ்.

எத்தனை ஆயிரம் பாடல்கள்... குழைவும் கோபமும்,காதலும் காருண்யமும்,ஏக்கமும், துக்கமும் இந்த மேதையின் குரலில் வடிவம் பெற்றன. பின்னணி இசையின் ஏகபோக சக்ரவர்த்தியாய் பீடு நடை போட்டவர்.

அவர் பாடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகின்றன தான். அண்மைக்கால டீ.வி நிகழ்ச்சிகளின் சித்ரஹிம்ஸையில்,அந்த காந்தர்வனின் குரலோசை மூப்பில் நொய்ந்து நெளிந்து நடுங்கியதும் கூட நாம் பார்த்தது தான். ஆனாலும் நம் டி.எம்.எஸ்ஸை நம்மிடமிருந்து பிரிக்க சாவுக்குத் தான் எத்தனை நெஞ்சுரம்? உலகெங்கும் வாழும் அவரின் ரசிகர் ஒவ்வொருவரும் தன் ஆயுளில் ஒரே ஒரு நிமிடம் அவருக்காய்க் கொடுக்க முடிந்திருந்தால் கூட இன்னுமொரு நூற்றாண்டு வாழ்ந்திருப்பார் அன்றோ டி.எம்.எஸ் ?

டி.எம்.எஸ் பாடல் கேட்காமல் நான் கழித்த நாட்கள் வெகு குறைவு. உலோபி சேர்க்கும் பொன் போல அவரின் பாடல்களை தேடிதேடி சேர்த்தேன். இனிஅவர் பாடல்களைக்  கேட்கும் போதெல்லாம் அவர் இப்போது இல்லை எனும் எண்ணம் தரப்போகும் நெருடலை எப்படி தாங்கப் போகிறோம் என்பது இன்னுமொரு துக்கம். இன்னும் சில நாட்கள் உன் பாடல் கேட்கும் நெஞ்சுரம் எமக்கில்லை.

அவர் பாடித்துதித்த முருகன் இணையடி நிழலில் இளைப்பாற அமரனாகி விட்டார் நம் அன்பு டி.எம்.எஸ்....

மயில் முருகன் இனி டி.எம்.எஸ்ஸிடம் நேயர் விருப்பம் கேட்டபடி உள்ளம் உருகலாம்.. 

ஆனாலும் கருணை முருகா... எங்கள் நட்டத்திலா நீ லாபம் பார்ப்பது?


புதன், மே 01, 2013

தத்த்தி




இன்னமும் இந்த தத்த்திப் பயலை எங்கே காணோம்?

காலிப் பொடிமட்டையை மத்தியானத்துலேயிருந்து எவ்வளவு தடவை தான் முகர்வது? தீனதயாளு சாருக்கு கோபமாய் வந்தது. ஒரு வருஷமாய் இந்தத் திண்ணைதான். காலு விழுந்தப்புறம் எல்லாரோட சகாயமும் இல்லாமல் ஏதும் முடிகிறதா? போதாததற்கு தெரிந்தவர்கள் எல்லோரும் ஒவ்வொருவராய்க் கழன்று கொண்டு விட்டார்கள். தயாளு பேச ஆரம்பிச்சா விடிஞ்சிரும்ன்னு புது பிராபல்யம் வேறு. ஏதோ ஆஞ்சநேயனுக்கு பண்ணின பக்தியில் அய்யாதுரையும், தாசரதி என்கிற தத்த்தியும் வந்து போய்க் கொண்டிருக்கிறார்களோ பிழைத்தோமோ என்று தயாளுசார் சந்தோஷிப்பது வழக்கம்.

புல்லட் வண்டி அதிர்கிறது.. அய்யாதுரை தான் வரான்...

எப்படி சார் இருக்கீங்க?” பிளாஸ்டிக் பையில் இருந்த நாலு ஆப்பிளையும், ஒரு கட்டு தையலிலையையும் திண்ணையில் வைத்தார் அய்யாதுரை. அய்யாதுரைக்கு தயாளுசார் ஒன்பதாம் வகுப்பில் கணக்கு வாத்தியார்.

என்ன அடி வாங்கியிருப்பான்? இல்லாத வீட்டுப் பையன்.. எதனாலோ தயாளுசார் அய்யாதுரைக்கு இலவசமாய் ட்யூஷன் எடுத்து பரிட்சைக்கு பணம் கட்டி ஆதரவு செய்தது இப்போது தலைக்கு மேல் காய்க்கிறது. க்ஷேமமாய் இருக்கட்டும்.. இந்த நாஸ்திக வாதம் மட்டும் அவனுக்கு இல்லைன்னா எப்படி இருக்க வேண்டியவன்? கட்டட காண்ட்ராக்ட் வேலையில் துட்டை அரித்து கொட்டியாகிறது..

பண உதவியாகட்டும் சரீர பிரயாசை ஆகட்டும் அய்யாதுரை  அவருக்கு  ஒரு குறையும் வைத்ததில்லை. ஆனால் தயாளுசார் விடாமல் சாமி சடங்கு என்று பேசும் போது பதிலுக்கு கிண்டலாய் பதில் சொல்லப் பழகிவிட்டார் அய்யாதுரை. இந்த ஒரு வருடமாய்  அய்யாதுரையை திட்டுவதையும் குறைத்துக் கொண்டு விட்டார் தயாளு.
யாருமற்று, தம்பியின் பிள்ளை வீட்டுத் திண்ணையில் தனியாளாய் கிடக்கும் போது என்ன தர்க்கம் வேண்டிக் கிடக்கிறது ?..கபிராஜ வல்லபா.. சத்குரோ..

அப்ப கிளம்பறேன் சார்! என்ற அய்யாதுரை நினைவுக்கு வந்தவராய் சட்டைப் பையில் இருந்து பொடிமட்டையை எடுத்துக் கொடுத்தார்.

மகராஜனா இருடா?”  புல்லட் புட்புட்ட்.. என்று பறந்தது.. தயாளு சாருக்கு பொடியை போட்டுக் கொள்ளக் கூட தோன்றவில்லை.. என்ன பாசம்.. என்ன முன்யோசனை.. நெகிழ்வாய் இருந்தது.. பாவிக்கு பகவத் நிந்தை மட்டும் இல்லையின்னா....

’மாமா.. மாமா  தாசரதி அரக்கபரக்க ஓடிவந்தான்.. எப்போ வராம் பாரு?

தாசரதி என்றால் அங்கு யாருக்கும் தெரியாது. கொஞ்சம் மந்தமானவன் என்பதால் எல்லோரும் தத்த்தி தத்த்தி என்று அழைத்து அதுவே பேராகி விட்டது. நாலுவருஷம் முன் அவன் தாயாரும் போய் சேர்ந்தாள். தனிக்கட்டை தான். கொஞ்சம் குட்டை தான். யாரும் பெண் கொடுக்கவில்லை. ராயரின் ரைஸ் மில் மாவு மிஷினில் மாவரைக்கும் வேலை.. மதியம் ஒரு மணிக்கு மில்லை கட்டிவிடுவார் ராயர். ஊர்க்கோடியில் இருக்கும் அவரது நிலத்தில் துளசி செடிகளுக்கு தண்ணீர் விடுகிற வேலையும் தத்த்திக்கு உண்டு.

என்னடா டவுனுக்கு போய்ட்டியா? ஆளையே காணும்?”.

எங்கயும் போகல்லை மாமா. ரேழில தூங்கிட்டேன். தத்திக்கு நாக்கு லேசில் மடியாது. பேச்சு குழறலாய்த் தான் இருக்கும்..

நல்லா தூங்கினே போ.. வெளக்கு வைக்கிற நேரம் பாத்தியோ?”

அத விடுங்கோ. இதக் கேளுங்கோ மாமா. கேட்டா எழுந்து கூத்தாடுவீங்க

என்னடா பீடிகையெல்லாம் பலமா இருக்கு? நீ தூங்குற அழகைப் பார்த்து எந்த சுந்தரியாவது கல்யாணம் பண்ணிக்கிறேன்னுட்டாளா?”

:இனிமே எனக்கெதுக்கு மாமா கல்யாணம்? சொப்பனம் கண்டேன் மாமா.. சித்த மின்னே... கனவுல யாரு வந்தா தெரியுமா? ஆஞ்சநேயராக்கும்.

என்னது? ஆஞ்சநேயராஅடடா.என்ன பாக்கியமடா உனக்கு! போக்கத்தவனே!. நானும் தான் எத்தனை ஸ்லோகம் சொல்றேன் எத்தனை பஜனைப் பாட்டா ஹனுமான் மேல பாடுறேன்.. ஒரு நாளும் ஸ்வாமி சொப்பனத்துல வந்ததில்லையே? தண்ணில மூழ்கறாப் போல,நாயி துரத்துறாப்பலயும் தானே எனக்கு வருது?”

பெருமையாய் சிரித்துக் கொண்டான் தத்த்தி

சொல்லு. சொப்பனத்துல பகவான் என்ன பண்ணினார்?” ஆர்வ மேலீட்டால் குரல் உயர்த்திக் கேட்டார் தயாளு.

நம்ம ராயர் தோட்டத்துல பெரிய பாறை இருக்கில்ல? அதுல சாஞ்சி உட்கார்ந்திருந்தார். நான் துளசி பறிச்சிகிட்டிருக்கேன். இங்க வாடா தத்த்தின்னு கூப்பிட்டார்..

பாக்கியம்டா? தத்த்தின்னா கூப்பிட்டார்?”

ஆமாம் மாமா.. ஏதும் ஸ்லோகம் தெரியுமா?ன்னு கேட்டார் மாமா. எனக்குதான் எதுவும் சட்டுன்னு வாய்க்கு வரல்லே.."

முட்டாப் பயலே.. அஞ்சிலே ஒன்று பெற்றான் சொல்லிக் கொடுத்திருக்கேன் இல்லே? அத சொல்லித் தொலய வேண்டியது தானே?”

ஹாங்.. வரும் வரும்.. நீங்க அவர் எதுத்தாப்பல நின்னிருந்தீங்கன்னா அப்போ தெரிஞ்சிருக்கும்.. பெரிசா பச்சையா உட்கார்ந்திருந்தார். வெலவெலன்னு வந்துடுத்து.

அது சரி. பெருமாளைப் பார்த்தா யாருக்கு பேச்சு வரும்?.. பச்சையா இருந்தார்ன்னியே.. கிரீடமெல்லாம் இருந்ததா?”

அதெல்லாம் இல்லை தலேல முடி கொண்டையாட்டம் கட்டி இருந்தது.. துளசி மாலை சுத்தியிருந்தது.

ஹாஹா... சமய சஞ்சீவி வந்திருக்காருடா.. என்ன கொடுப்பினைடா உனக்கு? அப்புறம்?” தயாளு பரபரத்தார்.

என் தூக்குசட்டியிலே பெருமாள் கோவில் தத்தியன்னம் இருந்தது. அதைக் குடுன்னு வாங்கி ஒரே கவளமா வாயிலே போட்டுகிட்டார்.இந்தப் பாறை சாஞ்சிக்க வாட்டமா இருக்குடான்னார்

ஹே ராமதூதா! அப்புறம்?”

பாறை மேல சாஞ்சிக்கிட்டு, நல்லா காலை நீட்டி, இந்தக் காலை சித்த அமிக்கி விடுடான்னார். நானும் பயந்து பயந்து பிடிச்சிவிட்டேன். கொஞ்ச நேரத்துல காலை இழுத்துகிட்டு சட்டுன்னு எழுந்தார். எனக்கு டவுனுக்கு போகணும்.. சமர்த்தா இருன்னு தலையில தட்டினார்.

தயாளு தத்த்தியின் தலையைத் தடவி கண்ணில் ஒற்றிக் கொண்டார். ஆஹா.. நேர்ல பாக்குறாப்புலயே இருக்கே.. சொல்லு சொல்லு..

அப்பன்னு பார்த்து நம்ம அய்யாதுரை புல்லட்டுல அங்கே வந்தார்.

அந்த கடங்காரன் அங்க எங்க வந்தான்?”..

என்னடா தத்த்தி! டவுனுக்கு போறேன் வரயா.. நாலு டியூப் லைட் எடுத்துக்கிட்டு வரணும்ன்னு சத்தமா கேட்டார் அய்யாதுரை

ஸ்வாமி ஒண்ணும் சொல்லலையா?”

நானே பதிலாஒண்ணும் சொல்லலியே... உங்களை நான் மறுபடி பார்க்க முடியுமான்னு ஹனுமாரைக் கேட்டேன். சிரிச்சார்.. நீ ரொம்ப புண்ணியம் பண்ணியிருந்தா என் வால் மட்டும் கண்ணுக்கு தெரியும்னார்.. ஒரே தாவலா தாவி அய்யாதுரை புல்லட்டு பின்சீட்ல உட்கார்ந்துட்டார்.. அப்புறம் என் கண்ணுல அவர் தெரியலே.தனக்குப் பின்னால் ஹனுமார் அமர்ந்திருப்பது தெரியாமல் அய்யாதுரை வண்டியைக் கிளப்ப, அதுவும் புழுதியடிச்சிக்கிட்டு  நகர்ந்துட்டுது.

அய்யாதுரை பரம நாஸ்திகனாச்சேடா. போயும்போயும் ஸ்வாமி அவனோடயா போகணும்? அது சரி! என்னத்துக்கு இப்போ சிரிக்கிறே?”

மாமா.. ரொம்ப புண்ணியம் பண்ணியிருந்தா என் வால் மட்டும்  தெரியும்னாரே ஸ்வாமி.. அப்படி புண்ணியம் பண்ணினவா பார்த்திருந்தா, வண்டில போற அய்யாதுரை வாலோட போறாப்புல தெரிஞ்சிருக்கும்! தத்த்தி கைக்கொட்டி சிரித்தான்

போறும்.. அவன் சூத்தாமட்டை கெட்டக்கேட்டுக்கு வாலு ஒரு கேடு!

இருவரும் வாய்விட்டு சிரித்தார்கள்..

என்னவோடா.. உங்கம்மா பண்ணின பாக்கியம் இன்னைக்கு உன் கனவுல தரிசனம் காமிச்சிட்டார் ஹனுமார். உனக்கு இனி நல்ல காலம் தாண்டா தாசரதி.. அட என்னடாது..என் காலைப் பிடிக்கிறே?ஸ்வாமி காலைத்தொட்ட கைடா உன்னுது. என் காலைத் தொட்டு என்னை பாபியாக்கிடாதே!

ஸ்வாமி எதுக்கு டவுனுக்கு போயிருப்பார் மாமா?”

உம்... காலேஜில வாசிக்க..  என்ன கேள்வி கேக்குறாம் பாரு?”

ஸ்வாமிக்கெல்லாம் ஏதும் பள்ளிக்கூடம் படிப்புன்னு உண்டா மாமா?”

தயாளு சாருக்கு ஆயாசமாய் இருந்தது தத்த்தியின் கேள்வி.. இவனைத் இனி திட்டக் கூடாது. ஸ்வாமியே அவனைத் தேடி வந்திருக்கிறார். லேசுபட்ட விஷயமா?

தாசரதி.. ஹனுமனுக்கு நவவியாக்ரண பண்டிதன்னு ஒரு பேர் இருக்கு தெரியுமா?. அவர் பாலகனா இருக்கறப்போ நேரா சூரியன் கிட்டயே போய் எனக்கு வேதம் சாஸ்த்ரம்லாம் இப்போவே சொல்லிக் கொடுன்னு அடம் பிடிச்சார். எனக்கு இப்போ நேரம் இல்லே.. என் வேலையைப் பார்க்கணும் போன்னுட்டார். நானும் கூடவே வரேன்னார் ஹனுமார். நான் போற வேகத்துக்கு ஈடா உன்னாலே பின்னாடி கூட வர முடியாது. அப்படி வந்தாலும் வித்தையை சொல்லிக்கிற சிஷ்யன் குருவுக்கு முன்புறமா இருந்து வாய்ப் பொத்தி கேட்கணும்.. உன்னால எப்படி முடியும்? வேற குருவைப் பார்த்துக்கோன்னு சொல்லிட்டு ஸஞ்சாரம் பண்ணத் தொடங்கிட்டார். ஹனுமாரோ நிமிஷமா சூரியனுக்கு முன்னுக்கா வந்து கையால் வாயை பொத்திக்கிட்டு ரிவர்ஸுலேயே ஸூர்யன் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்தபடி ஒரு நாளைக்குள்ளே சகல வேத சாஸ்த்ரத்தையும் கத்துகிட்ட மகானுபாவர்டா அவர்.

தத்த்தி கிளம்பி போய் விட்டான். ஊரெல்லாம் அவன் கனவு ஒரே  பேச்சாய் போய் விட்டது. தாசரதியின் முகத்துக்கு ஒரு தனி சோபை வந்து வலம் வர ஆரம்பித்தான்.

கொஞ்ச நாளில் தயாளு சாருக்கு உடம்புக்கு  ரொம்பவே முடியாமல் போய் செத்துப் பிழைத்தார். டவுன் ஆஸ்பத்திரியில் பலநாட்கள் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தவரை நிறைய செலவு செய்து கரை சேர்த்ததென்னவோ அய்யாதுரை தான். எல்லாம் மெல்ல உணரத் தொடங்கிய தயாளுவுக்கு அய்யாதுரை வாலுடன் நடந்து போவது போலவே பிரமை ஏற்பட்டது.. தாசரதியோ கண்ணிலேயே படவில்லை. ஒருவாறாய் மீண்டும் பழைய திண்ணைக்கு வந்து சேர்ந்தார் ஈர்க்குச்சி போல..
  

இப்போதெல்லாம் காசிராயர் தோட்டம் எவ்வளவோ மாறி விட்டது. ஹனுமார் சாய்ந்து அமர்ந்த கல்லை சுற்றி கர்ப்பக்ருஹம் எழுப்பப்பட்டு, ஸஞ்ஜீவி பர்வதத்தை தூக்கிக் கொண்டு பாயும் பஞ்சலோக விக்ரகம் பிரதிஷ்டையாகி ஆறுகால பூஜையோடு அமர்க்களப் படுகிறது. கர்ப்பக்ருஹத்தின் முன்பாய் ஒரு பெரிய மண்டபம், கூரையில்  பல ஓவியங்களும்,தூண்களில் சுதைபொம்மைகளும் வண்ணமயமாய் காட்சியளிக்கிறது. கோவிலே கூட்டம் அலைமோத திணறிக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு வங்கியின் உபயத்தில் ஒரு பெரிய ஸ்டீல் உண்டியல் வேறு.

மண்டபம் தாண்டி கொடிமரம். அதற்குமுன்பாய் ஒரு புல்லட் வண்டி சந்தனக்காப்பும், மாலைகளுமாய் நின்று கொண்டிருக்கிறது. இது நம்ம அய்யாதுரையின் புல்லட் அல்லவா? திருமதி அய்யாதுரை தன் புருஷனிடம் இல்லாத பக்தியையும் சேர்ந்து பெற்றிருந்தாள். தாசரதியின் இன்பக்கனாவின் விவரங்கள் அறிந்து அவள் கண்ணீர் உகுத்தாள். நம்பிக்கையே இல்லாத அய்யாதுரையின் வண்டியில் பின்னால் அமர்ந்து ஸ்வாமி போனது தன் பக்திஸ்ரத்தையால் தான் என்று நம்பினாள். கோவில் கைங்கர்யம் துவங்கியவுடனே அனுமார் அமர்ந்த பைக்கை கோவிலுக்கு அளித்து அதற்கு தீரா பெருமை தேடித் தந்தாள். அய்யாதுரையின் கடவுள் மறுப்பு, கட்டிய மனைவியிடம் செல்லுபடியாகவில்லை.. புல்லட்டுக்கு தனி சன்னதி அமைக்க கோவில் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றிநன்கொடை வசூலிக்கவும் முடிவாயிருக்கிறதாம்

லேமினேட் செய்த படங்கள், துளசி மாலைகள், கேசட், ஸ்தோத்திர புத்தகங்கள் ,தாயத்துகள் விற்றுதீர்ந்தன. தெற்கு கோடியில், எலக்ட்ரிக் டமாரம் மிரட்டிக் கொண்டு நிற்கிறது. அதனருகில் உள்ளே இருக்கும் ஹனுமனின் பெரிய போட்டோ.. ஸ்வாமியின் காலடியில் இருபது நாள் தாடியுடன் கைகள் கூப்பி வணங்கியபடி ஒரு தாட்டியான சாமியாரின் போட்டோவும் ஒருசேர இருந்தது. ... அட.. இவரை எங்கோ பார்த்தாற்போல் அல்லவா இருக்கிறது? நம்ம தத்த்தி தாசரதியா?
அபச்சாரம்.. தாசரதி இப்போது பெரிய மகான் என்று கொண்டாடுகிறார்கள்.. தத்திரிஷி ஸ்வாமிகள் எனும் நாமகரணத்தோடு அருள்பாலிக்கிறார். இப்போதெல்லாம் அதிகம் பேசுவதில்லையாம்.

ஹனுமத் ஜெயந்திக்கு பெரிய வடதேர் அனைவரையுமே பரவசப் படுத்தி விட்டதாம்.. தேருன்னா வடம் இருப்பது சகஜம் தானே என்கிறீர்களா? அது வடை தேர்ங்க.. தேர்முழுதும் மிளகு வடையாலேயே அலங்கரிக்கப்பட்டு மணக்க மணக்க அசைந்து வந்த அழகைப் பார்க்க உங்களுக்குதான் கொடுத்து வைக்கவில்லை.. அடுத்த வருஷம் வாரும். இந்த வடைத்தேர்  கூட ஹனுமன் கனவில் தந்த கட்டளை என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

நடமாட்டம் குறைந்து போன தீனதயாளு காதுக்கு அவ்வப்போது தத்திரிஷி ஸ்வாமிகள் பற்றிய தகவல்கள் வரும்.. நாட்பட நாட்பட தாசரதியின் கனவைப் பற்றி அவருக்கு ஏதோ உவ்வாமுள்ளாய் உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதற்காக அந்த பெருமாள் இல்லைன்னு ஆகிவிடுமோ?ஸ்வாமி அவர் கார்யத்தை எதையோ, யாரையோ வியாஜ்ஜியமாய் வைத்து நடத்திக் கொள்கிறார். எதுக்கு வேற எண்ணமும்  பொச்சரிப்பும்.?. போன வாரம் வடைத்தேர் வீட்டைக் கடந்து வீதியுலா போனபோது வீசிய வாசனை இன்னமும் மூக்கிலே துளைக்கிறது.. இந்த தத்த்தி.. அபச்சாரம்...தத்திரிஷி ஸ்வாமிகள் பழகின தோஷத்துக்காவது நாலு வடையை தினத்தந்தி பேப்பர் தூண்டில் மடித்து அனுப்பி வைக்கப்படாதோ? 


சனி, நவம்பர் 17, 2012

வேறென்ன கேட்பேன்? – 4


(கதையின்  இந்தப் பகுதியைத் தொடர்வது அடியேன் )

சரிடா! நான் மதியம் கிளம்பறேன்.. கலியபெருமாள் கோயிலுக்கு  போயிட்டு அப்படியே ஊருக்குத் திரும்பணும்... சாவகாசமா இன்னொரு முறை வறேன்.. சரிதானே?” என்றார் ஆராமுது.

சிவபாதம் சற்று சாய்ந்து அமர்ந்து கொண்டார். துருத்தியின் உறுமலாய் பெருமூச்சு வாங்கியது.. ஆராவமுதன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்... கண்கள் பொங்கிக் கொண்டு வந்தது..

‘”ஆராமுது.. என்னை நாலு அறை அறைய மாட்டியா? தோளில் போட்டிருக்கும் சவுக்கத்தால் என் கழுத்தை இறுக்கி கொன்னு போடுடா.. இங்கே நீ வந்தது முதல் எதுவுமே கேட்டுக்காம எதுக்கு வதைக்கிறே?”

ஆராமுது எழுந்து வந்து சிவபாதத்தின் கைகளைப் பற்றிக் கொண்டார். 

வேண்டாம்டா. எதுவுமே நீ சொல்ல வேண்டாம். சொல்லி என்ன ஆகப் போகிறது.. எதை மாற்ற முடியும்.?. வேறென்னடா கேட்பேன்? நான் இழந்து போனதுக்கெல்லாம் உன்னிடம் காரணம் இருக்கும்னு தெரிஞ்சிக்குற வேகத்துல தான் வந்தேன்.. உன்னிடம் காரணங்கள் இருக்கும்னு.. நீதான் காரணம்னு இல்லே.... என்னை விட நீதான் அதிகம் இழந்திருக்கேன்னு உன்னைப் பார்த்தபிறகு தோணுது.. நீ ஏதும் சொல்ல வேண்டாம்.. நாம இழந்ததெல்லாம் போதும்.. எனக்குன்னு நீயாவது எஞ்சணும்.. எல்லாத்தையும் விட்டுத் தள்ளு.. உன் பழைய ஆராமுதா.... அசட்டு நாயேம்பியே.. அந்த அசட்டு நாயாவே இருந்துட்டு போறேன்.. கலங்காம இருடா.

பற்றின கைகளின் வெம்மையில் அதன் இறுக்கத்தில் அவர்களின்   சந்தேகங்கள்,அவநம்பிக்கைகள்,வேதனைகள் பொசுங்கின.. ஒரு பேரமைதி சினேகிதர்களின் நெஞ்சில் குடிகொண்டது..

நீ.. ரொம்ப பெரியவண்டா.. உனக்கு நல்லது செய்வதாய்த்தான் அதையெல்லாம் செய்ய சட்டென்று சிவபாதத்தின் வாயைப் பொத்தினார் ஆராமுது..
போறும்.. இப்பத்தானே சொன்னேன்.. விடுன்னா விட்டுடணும்.. பொழச்சிக் கிடந்தா இன்னொரு சமயம் பேசிக்கலாம்.. எல்லாத்தையும் மறந்துட்டு பழைய சிவபாதமா மீசைய முறுக்கிக்கிட்டு முண்டாவைத் தட்டிக்கிட்டு நில்லுடா.. நீ நிப்பே.. உன் முள் கிரீடத்தை இறக்கி வச்சுட்டீன்னா நீ எட்டூருக்கு நிப்பே.. ஒரு வார்த்தை பேசாதே

அம்மாடி.! சமயல்கட்டைப் பார்த்து கூவினார் ஆராமுது.உன் சம்சாரம் பேரு என்ன.?”

கற்பகம்

அம்மாடி கற்பகம்! சமையல் ஆயிடுச்சுன்னா இலைய போடு தாயி.. எனக்கு கிளம்ப நாழி ஆச்சு.

கற்பகத்துக்கு தூக்கிவாரிப் போட்டது.. தன் பெயரை சொல்லி கூப்பிட்ட ஆராமுதன் குரலில் இருந்த வாத்ஸல்யம் அவளை உருக்கியது.. அவள் ஏதோ ஒரு பழைய கணக்கு நண்பர்கள் இடையில் சரிசெய்யப் படுவதாய் உணர்ந்தாள். என்ன கணக்கானால் என்ன? இந்த சந்திப்பில் தன் புருஷனுக்கு பல சுமைகள் இறங்கிப் போகும் என உணர்ந்தாள். தன்னை பேர் சொல்லி அழைப்பவன் எனக்கு பந்தப் பட்டவன்..அவயாம்பிகை அனுப்பின தேவதூதன்

இதோ.. பத்து நிமிஷத்துல ஆயிடும் அண்ணா!

என்னை.. என்னை அண்ணாங்குறாடா! ஆராமுது நெகிழ்ந்தார்.

உன்னை குலசாமின்னு சொல்லணும்டா வெறும் அண்ணாங்குறா போக்கத்தவ!

மேலே ஏதும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

ஆராமுது ரசித்து சாப்பிட்டார். கற்பகம் ! தெளிவா ரெண்டு கரண்டி ரசத்தை கையில விடும்மா

இரண்டுகை ரசம் ஆறு ஏழு என நீண்டது.

கற்பகத்துக்கு கண்ணீர் தளும்பியது. மெல்ல குடிங்கண்ணா. புரையேறப் போகுது..

என்னை யாரும்மா நினைச்சுப்பா? புரையேறுறதுக்கு?”

இனி நான் நினைப்பேனண்ணா கற்பகத்தின் மனசு அலறியது..பிள்ளை சுமக்காமல் பாழாய்க் கிடந்த அவள் வயிற்றில் தாய்மை சுருண்டது.

சரிடா.. கிளம்பறேன். இன்னைக்கு ரொம்ப உடம்பை அலட்டிக்கிட்டே.. படுத்துக்கோ 

எப்படா திரும்ப வருவே?

எப்ப வேணும்னாலும்

அண்ணா! இது உங்க வீடு.

ஒரு குழந்தையை பார்ப்பது போல் அவளைப் பார்த்தார் ஆராமுது..எனக்கொரு நமஸ்காரம் பண்ணேன் கற்பகம்

ஓடிவந்து ஆராமுதன் காலில் விழுந்தாள்..சட்டைப் பையிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்து அவள் கையில் திணித்தார்.

தீர்க்காயுசா இரும்மா. இந்த கிருக்கனை நல்லா பார்த்துக்கோ

சரிண்ணா. சீக்கிரமா திரும்பி வாங்க.

உன் ரசத்துக்காகவாவது திரும்ப வருவேன். வாசலை நோக்கி நடந்தார் ஆராமுது. விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு கையில் ஒரு ரெக்ஸின் பையுடன் சிவபாதத்தின் கண்முன்னே போனபடி......

நீ ரொம்ப பெரியவண்டா... அவர் கைகள் தானாய்க் குவிந்தன.  போவது தன் பழைய அப்பாவி ஆராமுது இல்லை.  புத்தனிவன்.. ஏசுப்பிரபு..

மெல்ல கட்டிலில் சரிந்தார். கற்பகம் தலையணைகளை சரி செய்தபடி  சிவபாதத்திடம் சொன்னாள், மனசுக்கு ஆறுதலா இருக்குங்க.. சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குங்க. இவர் நம்மகூட நாலு நாள் இருந்தா நீங்க எழுந்து ஒடுவீங்க.” என்று எழுந்தாள்.

எழுந்து ஓடுவேனா?”

அவனை ஊரைவிட்டு ஓட வைடா.. இல்ல உலகத்தை விட்டே ஓட வைப்பேன்.. அப்பாவின் இரைச்சல் சிவபாதம் காதில் ஒலித்தது. சிவபாதத்தின் ஒரே தங்கை ஜமுனா ஆராமுதுக்கு தன் காதலைத் தெரிவித்து தன்னை ஏற்றுக் கொள்ளும்படி எழுதின கடிதம் அவன் அப்பாவின் கையில் சிக்க ருத்ர தாண்டவம் ஆடினார்.

ஜாதி கெட்டநாயி! உன் சினேகிதன்னு வீட்டுக்குள்ள வளைய வரவிட்டது எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பார்த்தியாடா?’

இல்லப்பா. அவன் அப்படி இல்லை. இந்த சிறுக்கிய வெட்டுங்க,, ஆராமுதுவை ஏதும் சொல்லாதீங்க..  இப்பத்தான் அடுத்தடுத்து அப்பாவும் அம்மாவும் செத்துப் போயி ஆளில்லாத அனாதையா நிக்கிறான்பா

அவன் இல்லேன்னா செத்துபொய்யிடுவேங்கிறாளே கடுதாசில.. அவனை இருக்க விட்டாத்தானே?’

அப்பாவும் பிள்ளையும் ஆலோசித்தார்கள். அப்பாவின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்த அந்த அலுவலகத்தில் ஆராமுதன் பொறுப்பிலிருந்த பணம் இருபதாயிரம் மாயமானது. பொறுப்பாளர் போலீசுக்கு போவதாயும், எழட்டு வருடம் சிறைவாசம் உறுதியென்றும் மிரட்டவைக்கப் பட்டார். கலங்கி நின்ற ஆராமுதனை ஊரைவிட்டே கண்காணாமல் போய்விடும்படி தன் பங்கு வசனத்தை சிவபாதம் சொல்லி கொஞ்சம் பணமும் கொடுத்தனுப்பினான்

.மறந்தும் இந்தப் பக்கம் வந்து விடாதே. எந்தக் கடிதமும் போட்டுவிடாதே. வடக்கே எங்காவது போய் பொழச்சிக்கோ. இங்க உனக்கும்தான் யாரிருக்கா? கொஞ்ச வருஷம் போனபிறகு பார்த்துக் கொள்ளலாம். ஏதும் வண்டி பிடிச்சி மதராஸ் போய் வடக்கே போற ரயிலைப் பிடிச்சியானா
தப்பிச்சிக்கலாம். இங்கே மேற்கொண்டு நான் ஏதும் சமாளித்துக் கொள்கிறேன்.”

ஆராவமுதன் விலகியவுடன் ஆபீஸ்கணக்கு சரி செய்யப்பட்டது. ஆராவமுதனின் இந்த கதிக்கு காரணமான ஜமுனாவுக்கு நடந்த நாடகம் அப்பாவும் பிள்ளையும் பேசிக் கொண்டபோது தெரியவந்தது. வீட்டின் கிணற்றின் ஆழத்தில் நியாயம்தேடி தஞ்சம் புகுந்தாள். எதற்குமே அர்த்தமில்லாமல் போய்விட்டது.

அப்பா! என்ன சாதித்தீர்கள்.? உனக்கேன் பாழும்காதல் வந்தது ஜமுனா? உயிரான சினேகிதத்திற்கு துரோகம் செய்தேன்.. அது உன்னைக் காக்கவென என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன் ஆராமுதா! எனக்குள்ளும் என் அப்பனின் ஜாதி மயக்கம் இருந்திருக்க வேண்டும். தங்கை போய், தகப்பன்தாயும் போய், ரத்தபந்தமென குழந்தைப்பேறும் இல்லாது போய், இன்று  ரத்தமும் சுண்டிப்போய் வெளிறிக் கிடக்கிறேன். அரசல்புரசலாய் ஏதோ தெரிந்து வந்த ஆராமுது வெறெதும் கேட்காமல் தன் மௌனத்தால் கொன்றுவிட்டுப் போயிருக்கிறான்.. இல்லை மன்னித்து விட்டுப் போயிருக்கிறான். ஆராமுதா! உன்னைப் பார்த்ததே போதுமடா.. அகலிகைக்கு விமோசனம் வந்தாப்போல உன் ஸ்பரிசம் என் பாவத்தையெல்லாம் கழுவி விட்டது. இது போதும் இது போதும்.. மாடிவிட்டு கீழே இறங்கினார்..

மெல்ல மெல்ல கற்பகம் கைலாகு கொடுத்தபடி உடன்வந்தாள்

என்ன அண்ணனையே நினைச்சுக்கிட்டிருக்கீங்களா?”

அண்ணன்!முனகிக் கொண்டே தோட்டத்தில் தரையைப் பார்த்தார் சிவபாதம்.

தரையோடு ஒட்ட வெட்டபட்ட முருங்கை மரத்தின் வேர்த்தட்டில் பொன்பசுமையில் சிறிதாய் துளிர்விட்டிருந்தது.  

                                                 (முற்றும்)
   

சனி, நவம்பர் 10, 2012

வேறென்ன கேட்பேன்-3

இந்தக் கதையின் மூன்றாம் பகுதியை இங்கே தொடர்பவர் திரு ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்கள்..



ஒடினார்.. ஓடிக் கொண்டே இருந்தார்..காலில் வலு இருக்கும் வரை ஓடினார்.


ஒடுகாலி என்று பெயர் கிடைத்தது..அது மட்டுமா? அத்துடன்….

அதை எப்படி சொல்வது?

முப்பது வருடம் ரணம் முள்கிரீடமாய் இவரை அழுத்த..

ஆராமுது என்றாலே………..

…………………………………………………………………………..



ஆகி விட்டது..எல்லாமே போச்சு…யாரிடம் போய் என்ன கேட்பது? அப்படிக் கேட்டாலும் அந்த ஞானஸ்னானம் இவர் மீது

முப்பது வருடங்களாகப் படிந்த அந்த கறையை போக்கி விடுமா?

இங்கு வரவேண்டும் என்ற ஆவல் மனிதனை சுனாமியாக அலைக் கழித்தது..வந்தார்…இப்போது அதே மனமே ஏன் வந்தாய் என்று அவரைக் கேட்கிறது..

மேலும் பழைய புண்ணைக் கிளறிப் பார்ப்பதால் என்ன பயன் வந்து விடப் போகிறது? காலம் தான் காயத்தை ஆற்றும் என்று சொல்வது பொய் தானா?..

இல்லாவிட்டால் சீழ் பிடித்தது ரணமாகி இப்படி ஆகியிருக்குமா என்ன?

“ என்னப்பா... கனவா ?” 

“ஒன்றுமில்லை” – இயலாமை ஒரு வெற்று சிரிப்பாய் வெளிப்பட்டது.

யார் பண்ணின தப்புக்கோ யாரோ ஒருவர் சிலுவை சுமப்பது இன்று நேற்றா நடக்கிறது?

எதற்காக இங்கு வந்தோம்?

ஏன் வந்தோம்?

ஆயிரம் கேள்விகள் கேட்க வேண்டும் என்கிற ஆவலுடன் வந்தவருக்கு, வாய் ஏன் இப்படி மெளடீகம் பூண்டது?

ஒரு குற்றம் தெரிந்தோ தெரியாமலோ நடந்து விட்டது..



குற்றம் நடந்தது முப்பது வருடங்கள் முன்பு…குற்றம் செய்தவரும், செய்யாத குற்றத்தை சூழ்நிலையால் ஏற்றுக் கொண்டவருமே இந்த முப்பது வருட முடிவின் எச்சம்!

தாமதிக்கப் பட்ட நீதி, மறுக்கப் பட்ட நீதி யன்றோ?

நான் தான் குற்றம் செய்தேன் என்று யாரிடம் காண்பிக்க வேண்டும் அல்லது வீண் பழியாய் என் மீது குற்றம் சுமத்தப் பட்டது என்று யாரிடம் நிரூபிக்க வேண்டும்?

இந்த முப்பது வருடங்கள் எல்லாவற்றையுமே முழுங்கி விட்டது..

எல்லாவற்றையுமே! 

சிவபாதத்துடன் பேச வேண்டும் போல இருந்தது.

ஒன்றை கவனித்தார் ஆராமுதன்..சிவபாதத்திடம் பேசும் போது அவர் கண்கள் கொஞ்சம் குறுகிப் போய் தாழ்ந்திருந்தன.. இவர் கண்களை நேருக்கு நேராய் பார்க்க ஒரு கூச்சம்! அச்சம்!!

கட்டிலிலிருந்து எழுந்தார்.

“என்னப்பா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோயேன்..”

“அதுக்கா அவ்ளவ் தூரத்திலிருந்து வந்தேன்..”

“அப்ப பேசு..” – சிவபாதம் எழுந்து உட்கார்ந்தார்..

“ பால்ய சினேகிதரைப் பார்த்ததும் இப்ப தாங்க எழுந்து உட்கார ஆரம்பித்திருக்கார்..” – சிவபாதம் மனைவி.

“அப்படியா “ – புன்னகைத்தார் ஆராமுதன். 

அந்த அம்மையார் முகத்திலும் முதலில் இருந்த கடுமை மறைந்து இதழ்க்கடையோரம் லேசாக புன்னகை ஒன்று எட்டிப் பார்த்தது.

.” அந்த காலத்துல தமிழ் சொல்லித் தந்தாங்களே அந்த டீச்சர் பேர் என்ன?”

”துளசி டீச்சர்”

” இருக்காங்களா இன்னும்?”

“ உனக்கு ரொம்பவும் பேராசைப்பா..அவங்க நம்ம ஒண்ணாப்பு டீச்சர்..இன்னமும் உசிரோட இருப்பாங்களா என்ன?

நாமளே எப்படா போவோம்னு இருக்கோம்..அவங்க நம்மள விட இருபது வயசு ஜாஸ்தி..”

“ அந்த இங்க்லீஷ் வாத்தியார்..”

“ அடேங்கப்பா இன்னமும் ஞாபகம் இருக்கா உனக்கு?”

”இருக்காதா..அவரு சொன்னது இன்னமும் பசுமரத்தாணி போல மனசுல பதிஞ்சிகிட்டு இல்ல இருக்கு..க்ளாஸ் ரூம்ல பசங்கள க்ரூப்பா பிரிச்சி..”

“பிரிச்சி?”

“ஒருத்தன் சொல்லணும் RAMU IS A GOOD BOY னு. உடனே அடுத்தவன் ராமு NOUN ங்கணும்..உடனே டீச்சர் நெக்ஸ்ட் என்று சொல்ல அடுத்தவன் IS VERB என்று சொல்லணும்.அவன் முழிச்சா உடனே அடுத்தவன் அதை சொல்லணும்..அப்புறம் முழிச்சவன் சுவற்றோட சுவரா நாற்காலி மாதிரி நிற்க, சரியா சொன்னவன் அவன் தொடையில உட்காரணும்..ஒரு தடவை நீ தப்பா சொல்ல, நான் கூட உன் தொடைல உட்கார்ந்திருக்கேன்”

“அப்பவுமா?” – தன்னை மீறி வந்து விட்டது வார்த்தை  ஆராமுதனுக்கு.

கனத்த மெளனம்.

வார்த்தைகள் வீச்சரிவாளாகக் கிளம்பி இதயத்தை சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டிருக்க வேண்டும்.

சிவபாதத்திற்கு முகம் செத்து விட்டது ஒரு கணம்.

ஒரு கணம் தான்..

அடுத்த கணம் ஆராமுதன் சூழ் நிலையை மாற்றி விட்டார்..

“ அத்த வுடுப்பா…அந்த ஜோக் ஞாபகம் இருக்கா..பாத்ரூம் போன ஹெச்.எம் ஐ ரூமைப் பூட்டி நாம ’கேரா’ பண்ணினோமே .

அன்னிக்கு கூடஸ்கூல் லீவ் விட்டாங்களே…”

சின்னஞ்சிறு குழந்தை போல விழுந்து,விழுந்து சிரிக்க ஆரம்பித்தார், சிவபாதம்.

சிரிப்பலைகள் பெருகி, சூழ் நிலை மிகமிக லேசாக, இப்போது ஆராமுதனும் விழுந்து, விழுந்து சிரிக்க…

”….இப்ப தாங்க இவரு முகத்துல முப்பது வருஷத்துக்குப்பறமா இப்படி ஒரு சிரிப்பு பார்க்கறேன்.. ”

கண்களில் நன்றியுடன் சிவபாதம் மனைவி..

அதற்கும் சிரித்தார் ஆராமுதன்…

தொடர்ந்து சிரித்தார் சிவபாதம்..

அந்த சிரிப்பு, கடந்த முப்பது வருடங்களாக அரித்துக் கொண்டிருந்த குற்ற உணர்ச்சியையும், அதற்கு பரிகாரம் தேட வந்தவரின் குற்றமற்ற உணர்ச்சியையும் ஒரு கணம் அந்த ஒரே கணத்தில் கரைத்து விட,

“ ஐயா, அடிக்கடி வாங்க… நீங்க வந்தா இவரு இன்னும் கொஞ்ச நா உயிரோட இருப்பாரு..’

கையெடுத்துக் கும்பிட்டார், சிவபாதம் மனைவி..

“ அட நீங்க வேற.. நாங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் இருப்போமாக்கும்…அதுவும் ஆரோக்யமா…”

சொல்லும் போதே சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது ஆராமுதனுக்கு…அதன் தொடர்ச்சியாய் சிவபாதத்திற்கும் ஒட்டிக் கொள்ள…இப்போது சிரிப்பு என்ற ஒன்றை இத்தனை நாளும் மறந்திருந்த அவர் மனைவியும் லேசாய் சிரிக்க ஆரம்பிக்க..

நெடுங்காலமாய் நெஞ்சிலே கர்ப்பத்தை சுமந்தவர்களின்

அவஸ்தை நீங்கி, ஒரே நேர்க் கோட்டுப் பாதையில் இருவர் கண்களும் நேருக்கு நேராய் பாசத்துடன் பார்க்க ஆரம்பித்தன, அப்போது! 

                                                                                                                       (தொடரும்)  

பின் குறிப்பு :  அப்பிடி போகுதா கதை?! இதன் அடுத்த பகுதியை தொடரப்போவது  அடியேன் தான்.. தீபாவளியை எல்லாம் முடித்துவிட்டு வாங்க! காத்திருக்கும் கதை.. 

என் இனிய வலைச் சொந்தங்களுக்கு என் தீபாவளி திருநாள் வாழ்த்துகள்..