வெள்ளி, ஜூன் 02, 2017

கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி


என் பிரிய கவிஞனே!
நீயும் ஒருநாள் பிரிவாய் என்று
எனக்கேன் தோன்றவேயில்லை??
என்னை மெல்லத் திடமாக்கிக் கொண்டிருப்பேனே?
இப்படியா இந்தநாள் விடியும்?

உன் கவிமண்டலத்தின் 'பால்வீதி'யில்
கைப்பிடித்து என்னை அழைத்துச் சென்றாய்.
என் 'ஆலாபனை'யையும் சற்றே மாற்றி வைத்தாய் ஆசானே!

இருபத்தைந்து வருடங்களுக்குமுன்,
ஒருநாள் உன்னோடு இருக்க வாய்த்தது.

கடலூரின் கடற்கரையும் நம்முடன் தனித்திருந்தது,
கஜல் ரசிக்கும் முறைமையையும்
ஹைக்கூவின் ஞானத் தெறிப்பையும்
காதாறக் கேட்டு ஆர்ப்பரித்தது அலைகடல் .

அருகிலே அமர்ந்து நீ புகைபிடித்த தருணம்,
அகிற்புகை சூழ்வதாய் உணர்ந்தேன் ஆசானே!

அன்றென் இல்லத்தில்,
கவிதையில் யதார்த்தம் பற்றி பேசியபடி உண்டோம்.
'இந்த கணத்து யதார்த்தம் 
இந்தத் தெளிவான ரசம் மட்டுமேஎன்றாய்.
உள்ளங்கையில் வாங்கிப் பருகி,
என் மனைவிக்கு மகுடம் சூட்டினாய்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் 
புத்தகவிழாவில் சந்தித்தபோது அணைத்துக் கொண்டாய்.
அரங்கத்தை என் கரம் பற்றிக் கடந்தாய்.
'இன்னமும் சபரிமலை செல்கிறாயா?' என்று கேட்டாய்.
இல்லத்துக்கு அழைத்தாய்.

கவிதை நிறைந்த உன் மனத்தின் ஓர் ஓரத்தில் நானும் இருந்தேன்.
அது போதும் எனக்கு.
நீ செப்பனிட்ட  என் கவிதா ரசனை என்னுடனே இருக்கிறது.
அது போதும் எனக்கு.
அலமாரியில் கொலுவிருக்கிறது உன் அமர படைப்புகள்.
அது போதும் எனக்கு.

போய்வா கவிராஜனே!
நீ துய்த்த தமிழை நானும் துய்க்கிறேன்.
அது போதும் எனக்கு.



(பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் கவிதைநூல் வெளியீட்டு விழா- கடலூர் மாவட்ட
 ஆட்சியாளர் திரு பிராபகர ராவ் , அடுத்து திரு.இறையன்பு, உரையாற்றும் கவிக்கோ மற்றும் நான் (கருப்பு சட்டையுடன்)



21 comments:

G.M Balasubramaniam சொன்னது…

பெயர் பெற்றவர்களின் பரிச்சயம் தெரிகிறது வாழ்த்துகள் உங்களுக்கு இரங்கல்கள் கவிக்கோ மறைவுக்கு

வே.நடனசபாபதி சொன்னது…

கவிக்கோ அவர்களின் மறைவு தமிழுக்கு ஒரு ஈடு செய்யமுடியாத இழப்பு. தாங்கள் செலுத்தியிருக்கும் கவிதாஞ்சலியோடு எனது அஞ்சலியையும் செலுத்துகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆழ்ந்த அஞ்சலிகள்...

கோமதி அரசு சொன்னது…

கவிக்கோ அவர்களின் நினைவைப் போற்றும் கவிதை அருமை.
கவிக்கோ அவர்களுக்கு அஞ்சலிகள்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

தமிழுக்கு ஈடு செய்ய இயலா பேரிழப்பே
அவர் கவிதைகளுள் அவரைக் கண்டு
ஆறுதல் கொள்வோம்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்கள்

KILLERGEE Devakottai சொன்னது…

இவரின் கவிதையை படிக்காதவர்கள் இருக்க முடியுமா ?
எனது அஞ்சலிகளும்.... - கில்லர்ஜி

ஸ்ரீராம். சொன்னது…

தமிழுக்குப் பேரிழப்பு..

மோகன்ஜி சொன்னது…

GMB சார்!கவிக்கோ மறைவு பெரும் இழப்பு தான்.

மோகன்ஜி சொன்னது…

நடனசபாபதி சார்! நீங்கள் சொல்வது உண்மை. அவர் பேச்சிலும் எழுத்திலும் மூப்பு இருந்ததே இல்லை

மோகன்ஜி சொன்னது…

நன்றி தனபாலன் ஜி

மோகன்ஜி சொன்னது…

நன்றி கோமதி மேடம்! அவரின் ஆக்கங்கள்,பலகாலம் அவர் பேர் சொல்லும்.

மோகன்ஜி சொன்னது…

ரமணி சார்! நீங்கள் சொல்வது போல் தான் இந்த இழப்பைக் கடந்து செல்ல வேண்டும். நன்றி சார்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி கரந்தையாரே!

மோகன்ஜி சொன்னது…

நன்றி கில்லர்ஜி!

மோகன்ஜி சொன்னது…

ஸ்ரீராம்! உண்மை. எடு செய்ய முடியாத இழப்பே ஒரு கவிஞனின் மரணம்.

துரை செல்வராஜூ சொன்னது…

கவிக்கோ அவர்களை நிறைய வாசித்ததில்லை..

வெறுங் கூச்சல்களுக்கு இடையே நெஞ்சினினுள்
ரீங்காரமிடும் மௌனராகம் - அவர்!..

எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு
நற்கதி அருள்வானாக!..

துரை செல்வராஜூ சொன்னது…

கவிக்கோ அவர்களை நிறைய வாசித்ததில்லை..

வெறுங் கூச்சல்களுக்கு இடையே நெஞ்சினுள்
ரீங்காரமிடும் மௌனராகம் - அவர்!..

எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு
நற்கதி அருள்வானாக!..

மோகன்ஜி சொன்னது…

துரை செல்வராஜு சார்,

கவிக்கோ பற்றிய என் முந்தைய பதிவில் அவரின் சில கவிதைகளை சேர்த்திருந்தேன். பாருங்கள்.

கவிக்கோவின் கவிதைகள் சொற்சிக்கனம் மிக்கவை.
இந்த வரிகளைச் பாருங்கள்...

குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே !
தினங்களைக் கொண்டாடுவதை விட்டு,
குழந்தைகளை
எப்போது கொண்டாடப் போகிறீர்கள்

சிவகுமாரன் சொன்னது…

ஈடு செய்ய முடியா இழப்பு. மூன்று முறை சந்தித்திருக்கிறேன். வெகுவாக பாராட்டி ஊக்குவித்தார்.
தங்களின் அஞ்சலியோடு எனதும்

இராய செல்லப்பா சொன்னது…

அப்துல் ரகுமானின் 'ஆலாபனை'க்கு சாகித்ய அக்காதெமி விருது கிடைத்தபோது, டில்லி தமிழ்ச் சங்கத்தில் வரவேற்புக் கவிதை படித்தவன் நான் என்னும் நினைவு அலைமோதுகிறது. அவரைப் பற்றி எனது வலைத்தளத்தில் பலமுறை எழுதியிருக்கிறேன். பழகுவதற்கு இனிய நண்பர். விஷயம் தெரிந்த தமிழ்ப் பெரியவர். அவரது ஆன்மா அமைதியடைவதாக. - இராய செல்லப்பா சென்னையில் இருந்து.