“சரி.. சங்கரு.. நீ.. சொல்ல வேணாம்.. உன் தோஸ்துங்களுக்கு
எத தூக்கோணும் எத மடக்கோணும்னு எனக்கு கரதல பாடம்.”.
ஏதும் வெகண்டையாய் சொல்கிறாரா, யதார்த்தமாய்ப் பேசுகிறாரா என்று கண்டுபிடிக்க முடியாத கல்முகம் அண்ணாச்சிக்கு
. அவருடைய அழுத்தமான குரல் நமக்குப்பழக கொஞ்ச நாளாகும். கீழ்த்தொண்டைக் கீச்சுக்
குரல்.. தகர டின்னில் ஆணியால் இழுத்த மாதிரி.. போனவருடம் முதல்முறை அவர் குரலைக்
கேட்டபோது திடுக்கிட்டு, குடித்துக் கொண்டிருந்த டீயை சட்டையில் கொட்டிக் கொண்டான் சங்கர்.
சங்கரின் ஜமா,மாலை ஆறரையிலிருந்து
ஏழுமணிக்குள் அண்ணாச்சி டீக்கடையில் கூடும். இன்றைய சந்திப்பில் நாலுபேர் தான்.
சங்கர், தமிழ்செல்வம், மனோ என்கிற
மனோகரன் மற்றும் மொய்தீன். மூவர் இன்னமும் வரவில்லை. அவர்கள் எல்லோருக்குமே சென்னையின் அருகிலுள்ள ஒரு தொழிற்பேட்டையில்
ஏதேதோ வேலை.. என்ன கலெக்டர் உத்யோகமா தட்டுக்கெட்டுப் போகிறது? சிறு அறைகளை பங்குபோட்டுக் கொண்டு கைச்சமையலும், அவ்வப்போது
காலிவயிறுமாய் ஒருவரையொருவர் பார்த்தபடி காலம் போகிறது. இந்த டீயும், வாராந்திர சினிமாவும், பகிர்ந்து கொள்ளும் சிகெரெட்டும்
தான் அதிகப்படி. இவர்களில் மனோ மட்டும்தான் புகைப்பதில்லை. மாசக்கடைசியில்
அண்ணாச்சியின் கருணையினால் கொஞ்சம் நெருக்கடியில்லாமல் ஓடும். என்ன... சினிமாதான்
இருக்காது.
இந்தக் குழுவில் சங்கர் மட்டும்தான் பெற்றோருடன்
வசிப்பவன்.
அப்பா வசதியானவர் தான். ஆனாலும் கெடுபிடி அதிகம்.
“என்ன அண்ணாச்சி ரெண்டு டீக்கு நாலணா
எடுத்திருக்க? டீக்கு
பத்துபத்து பைசாதானே.? ” யாரோ
அண்ணாச்சியுடன் செய்யும் வாக்குவாதம்...
“இல்லே மருது. இன்னலெருந்து ஒரு டீ பன்னண்டு
பைசா. பத்து பைசா கட்டாது. சக்கர என்ன வெல விக்கி?”
சங்கர் அலுத்துக் கொண்டான். “இது வேறயா? சரிதான்”.
மொய்தீன் மனோவைக் கேட்டான்.. “மெனோ! ‘முருகன்’ல என்ன சினிமா
ஆடறது?”
மனோகரன் கேரளத்துப் பையன். சிவந்த நிறம்.
பலகைபலகையாய் தோள்களும் நீண்ட கைகளுமாய், நெற்றியில் எப்போதும்
துலங்கும் சின்ன சந்தனக் கீற்றுடன். அவன் பேசும் குழப்படி தமிழை பேசவிட்டுக்
கேட்பதில் இவர்களுக்கு ஒரு ஆனந்தம். ஒரு தரம் ஊரிலிருந்து வந்த அவனுடைய அண்ணன்
அவனை ‘மெனோ’ என்றழைக்க அந்த பெயரே
அவர்களுக்கு மத்தியில் நிலைத்து விட்டது.
“முருகென்லயோ ... ஒரு ஊதேப்பூ நிறம்
மாறுகிறது..”.
நண்பர்கள் வெறிச்சிரிப்பு சிரித்தார்கள். “டேய். அது ஊதாப்பூ கண் சிமிட்டுகிறதுடா!”. மனோவை
பக்கத்தொருவராய் இழுத்தபடி சிரித்தமேனிக்கு நின்றாகள். அண்ணாச்சி கடையில் இருந்த
இன்னும் சில வாடிக்கையாளர்களும் சிரித்துக் கொண்டார்கள்.
“போறும்டா.. தேசம்விட்டு தேசம் வந்து நம்ம
பாசையை பேசுதான். சிரிக்கீக?”
“அண்ணாச்சி. மனோவோட மலயாள தேசத்த விடு. நீ
சொல்லு.. இப்ப சக்கர என்ன வெல விக்கி?”
“மொய்தீனு! எம்மடிலயே கை போடுத.”.
“சரி அண்ணாச்சி! நாலு சிகரெட்டு தா”.
“எல... உங்கள்ள மூணு சிம்மினி தானேடா?
“இன்னலெருந்து மனோவுக்கு அரங்கேற்றம்
பண்ணிடுவோம்னு..”.
“மொய்தீனு.. அவனுக்கும் வேணாமுடா இந்தக்
கருமம்..”
“அண்ணாச்சி! விக்கவும் விப்பீரு.. உவதேசமும்
செய்வீரு.”.
“ஏதோ கருமப் பொழப்புடா இது. தம்பிகளா.. நீங்க
காசு குடுத்தா நான் சிகரெட்டு விக்கதானே கடைய
வச்சது.. பளகினது விட முடியலேன்னா சரி.. புதுசா எதுக்கு சாக்கடைலே
விளுகிறது?”
மேற்கொண்டு அண்ணாச்சி பேசவில்லை. யார்முகமும்
பார்க்காமல் வரிக்கி இருந்த சீஸாவின் மூடிமேல் சிகரெட்டுகளை வைத்தார்..
“சரி வாங்கடா.. பாலத்துக்கு போவோம். அண்ணாச்சி!
பயப்படாதீங்க! உங்க செல்லப்பிள்ளைக்கு சிகரெட்டு பழக்கிட மாட்டோம்.அவங்கூரு அய்யப்பசாமி
கண்ணக்
குத்திடுமில்ல?” பார்ப்போம்”
எதற்கோ எல்லோருக்குமே மனோ மீது பரிவும் பாசமும்
இருந்தது. அவன் குழந்தை முகமா? நெற்றியின் சந்தனக் கீற்றா?
மலையாளம் கலந்த மழலைத் தமிழா? புன்னகை தங்கிய உதடுகளும், சலனித்துக்
கொண்டேயிருக்கும் கண்களுமா?
சங்கரின் நண்பர்களையெல்லாம் உதவாக்கரை, வெட்டி ஆபீசருங்க என்று திட்டும் அவனுடைய தகப்பனார் குமரேசன் கூட மனோவை ‘வாங்க தம்பி
போங்க தம்பி’ என்று குரல் தழையக் கூப்பிடுவார். அவனுடைய முகராசி
அப்படி !
போன சனிக்கிழமை குமரேசன் குடும்பத்தையே உலுக்கியது
ஒரு சம்பவம். மண்ணடி வரைப் போய்விட்டு திரும்பிய சங்கரை வாசல் திண்ணையிலேயே
மறித்தார் குமரேசன் .
“சங்கரா! வசுமதி போயிட்டு வர்ற டைப்
இன்ஸ்டிட்யூட்ல நீதானடா அவளை சேர்த்து விட்டே?” வசுமதி அவன்
தங்கை.
“ஆமாம்பா. செல்வராசுவோட மாமாவோட
இன்ஸ்டிட்யூட் தான். எதுனா பிரச்னையாப்பா ?”
“ஒரு நாளாவது அவளைப் போயி கூட்டிக்கிட்டு
வரணும்னு அக்கறை உனக்கிருக்கா? அவ இன்னமும் வீட்டுக்கு வரலை”.
“ஏழு மணிக்கு தானே திரும்புவா? இப்போ ஆறே முக்கா தானே?”
அவனை வெறுப்பாய் முறைத்து விட்டு ‘வரட்டும்’ என்று கறுவிக் கொண்டே உள்ளே போனார்.
அம்மாவின் முகம் வெளுத்துக் கிடந்தது.
“என்னம்மா ஆச்சு? அப்பா
சாமியாடிட்டு போறாரு?
“உங்க அப்பாவோட சினேகிதர் அளகேசன் சார் கொஞ்ச
முன்னாடி வந்து ஒரு குண்டு போட்டுட்டு போனாருடா.”
“என்னம்மா சொல்ற?”
“அம்மன் கோவில்ல வச்சு வசுவை பார்த்தாராம்.
உன் சிநேகிதன் யாரோ கோவில்ல அவளுக்கு எதுத்தாப்புல ஆம்பிளை
வரிசைல நின்னுகிட்டிருந்தானாம்”.
“எந்த சிநேகிதன்?யாராம்?”
“உன்கூட அவனைப் பார்த்திருக்காராம். யாருன்னு
அவருக்கும் தெரியல்ல. யாரோ ஒரு கறுத்த பிள்ளையாம்.”
“அதுக்காக? எதுக்க
நின்னா எழுப்பிக்கிட்டு போயிட்டா மாதிரி தானா?”
“அவச்சொல் சொல்லாதடா. அடிவயிறு கலங்குது”.
“ஏம்மா யாரோ சொன்னாங்கன்னு இப்படி பயந்து
சாவுர? இந்தப் பசங்க இவ்வளவு நாளா நம்ம வீட்டுக்கு
வரப்போகத்தானே இருக்காங்க? உனக்கு எதுனாச்சும் தப்பா பட்டுதா? அந்தக் கழுத வரட்டும். விசாரிப்போம்.”
சங்கர் சொல்லி வாயை மூடவில்லை. வசு ரேழியில் செருப்பை
கழட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.
‘அம்மா! இந்தா’..
உள்ளங்கைப் பொட்டணத்தில் இருந்து குங்குமத்தை அவளிடம் நீட்டினாள். “நானும் செல்வியும் கோவிலுக்கு போனோம்மா.”
வசு சொன்னதைக் கேட்டபடியே ஹாலுக்கு வந்தார் குமரேசன்.
“ஏம்மா! இது என்ன புதுப்பழக்கம். வீட்டுல சொல்லாம கோவிலுக்கு
போறது? டைப்கிளாசுக்கு கூடப் போகாம அவ்வளவு பக்தி
முத்திடிச்சோ?”
“கோவிலுக்கு தானே போனேன்? இன்னிக்கி செல்விக்கு பொறந்த நாளாம். அவதான் கூப்பிட்டா. கோவிலுக்கு கூட
போகக் கூடாதா?”
வசுவின் முகத்தில் கிலேசமோ பேச்சில் தடுமாற்றமோ இல்லை!
“வசு! கோவில்ல என் பிரண்டு யாரையும்
பார்த்தியா?”
புருவம் சுருக்கி சங்கரை முறைத்தாள்.
“உன் பிரண்டா? அவனுங்க
மூஞ்சிக்கு கோவில் ஒரு கேடு!” என்று நொடித்துக் கொண்டு உள்ளே
போனாள்.
குமரேசன் குரல் தணிந்தது.”சரி. விடு! அதான் சொல்றாளில்ல? அவளுக்கு எதுனா
டீத்தண்ணி குடு. எனக்கெங்கடி குங்குமம்?”
சங்கருக்கு ஏதோ சரியில்லை என்ற உறுத்தல் மனதில் வளர
ஆரம்பித்தது. சரி விசாரிப்போம் என்று எண்ணிக் கொண்டான்.
‘கருத்த பையனாமே?
தமிழ்செல்வம்.. பாஸ்கர், மாரிமுத்து. எல்லோரிலும் கறுத்தவன்
தமிழு தான். தமிழ்செல்வமும் மனோவும் ஒரே ரூமில் இருப்பவர்கள். நேரில் பார்த்து
விசாரிக்கத் தான் வேணும். வந்து சாப்பிடுவதாய் சொல்லிவிட்டு
மனோவின் ரூமுக்கு சைக்கிளை விட்டான். தெருமுக்கிலேயே மனோ நின்றிருந்தான்.
“எங்கே செங்கர் புறப்பட்டது?” மனோ கேட்டான்.
‘மனோ! நான் சொல்வதை யாருக்கும் நீ சொல்லக்
கூடாது’ என்ற பீடிகையுடன் வசுவை கோவிலில் அளகேசன் பார்த்ததை
சொல்லி, தமிழ் மீது சந்தேகம் இருப்பதையும் தெரிவித்தான்.
“எண்டே குருவாயூரப்பா! தமிழு
அப்படியாப்பட்டவென் இல்லா. வசு கூட நல்ல பெண்ணு தான். ஏதோ கொழப்பம்.. எல்லாம்
செரியாகும். பேடிக்கண்டா.. செரியாகும்” என்றபடி சங்கரின்
இருகைகளையும் இறுகப் பற்றிக் கொண்டான்.
மனோவின் அந்தத் தொடல் மிக்க ஆறுதலாயும் நம்பிக்கை
அளிப்பதாயும் இருந்தது.
“வரேன் மனோ! யாருக்கும் சொல்ல வேண்டாம்”
“ஹ...’ என்று வாய்மேல்
விரல்வைத்தபடி புன்னகைத்தான்.
சரி! இனி வசுவை மட்டும் ஒருமுறை கேட்டுவிட்டால்
தெளிவாகிவிடும்.
இரவு உணவுக்குப் பின் மொட்டைமாடியில் உலாவிக்
கொண்டிருந்த வசுவை பிடித்துக் கொண்டான் சங்கர்.
“ஏய் வசு! என்ன நடந்துகிட்டிருக்கு? யாரு அவன்?”
“பாருண்ணா! என்னை ரொம்ப அவமானப்படுத்துறே.
யாரோ ஏதும் சொல்லிட்டா உடனே சந்தேகப்படுவியா?”
“சரி! சந்தேகப்படல்லே. கோயில்ல அப்போ என்
பிரெண்டு யாரோ இருந்தான்னு அளகேசன் சொன்னாராமே? அவன்
யாருன்னாவது சொல்லு?”
வசு அழ ஆரம்பித்தாள். முந்தானையை பந்தாய் வாயில்
அடைத்த படி கீழே ஓடினாள். அறைக் கதவை மூடிக்கொண்டு படுக்கையில் விழுந்தாள்.
சங்கரை கடுமையாக அப்பா கோபித்துக் கொண்டு சத்தம்
போடுவதும். அம்மாவும் அவரோடு சேர்ந்து கொண்டதும் வசுவின் காதில் விழுந்தது.
அடுத்த நாள் அதிகாலை சங்கரின் அம்மாவுக்குத் துணையாக
அவனும் ஒரு நாள் பயணமாக நெய்வேலி வரை போகவேண்டிவந்தது. தாய்மாமன் வீட்டுக் கல்யாணம்.
வசுவும்,குமரேசனும் போகவில்லை. அடுத்த நாள் காலை
அவர்கள் திரும்பிய போது வாசலிலேயே குமரேசனும் அவருடைய நண்பர்கள் மூவரும்
வாயிற்திண்ணையிலேயே அமர்ந்து மும்முரமாய் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
சங்கரின் அம்மா பரபரத்தாள். “என்னங்க ஏதும் உங்களுக்கு உடம்புக்கு முடியலையா?”
என்றாள், அவருடைய கலந்த தலையும்,
தூக்கம் இழந்து சிவந்த கண்களையும் பார்த்து.
அவளைப் பார்த்தவுடன் குமரேசன் தான் தலையில்
மடேர்மடேரென ஓங்கி அடித்துக் கொண்டார். “வசு ஓடிப்
போய்ட்டாளேடீ!”
சங்கர் பதறினான். “என்னப்பா
இது? இன்ஸ்டிட்யூட்ல விசாரிச்சீங்களா?”
“ஆமாமுடா! நேத்திக்கு சாயங்காலம் ஏழுமணியானப்புறமும்
அவ வீடு திரும்பல்லே. போய் கேட்டப்போ இன்ஸ்டிட்யூட்ல
அன்னைக்கு அவ வரவே இல்லேன்னுட்டாங்க. அவ ஸ்நேகிதி செல்வி வீட்டுக்கு ஓடினேன். எனக்கு ஒண்ணும் தெரியாது
அங்கிள்ன்னு கைவிரிச்சிடுச்சி.
“அப்பா உடனே போலீசுக்கு போறதுக்கென்ன? ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆகியிருந்தா?”
“முட்டாளே! கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையாடா? அளகேசன் சொன்னதை நம்ம விசாரிச்சப்பவே சுதாரிச்சிக்கிட்டா. அவ வேலையை முடிச்சிகிட்டாடா ஓடுகாலி. இழுத்துக்கிட்டு போன
நாயை எவன்னு கண்டுபிடிக்கோணும். உனக்காகத்தான் காத்திருக்கேன். உன் பிரண்டு எல்லோரையும்
பிடி. அதுல எவனோ ஒருத்தன் தான். ஆளைப்பிடி.... அவனை அடக்கம் பண்ணீட்டு அந்த
முண்டச்சி காலை ஓடிச்சி வீட்டிலேயே முடக்கிப் போடுறேன்.’
மீண்டும் தலையில் அடித்துக் கொண்டார்.
சைக்கிளை எடுத்துக் கொண்டு முதலில் அண்ணாச்சி
கடைக்குப் போனான். சங்கரின் வெளிறிப்போன முகம் பார்த்த அண்ணாச்சி கேட்டார் “என்ன ஆச்சு சங்கரு!”
“அண்ணாச்சி! நம்ம பசங்க நேத்து இங்க வந்தாங்களா?”
“இல்லியே சங்கரு! ஒருத்தரையும் காணோமின்னு நானே
யோசிச்சிக்கிட்டிருந்தேன். நீயும் ஊரில இல்லே. மனோவும் ஊருக்குப் போய்யிட்டான்.
அதான் ஜமா கூடல்லியோன்னு நினைச்சுக்கிட்டேன்.”
“மனோ ஊருக்கு போயிட்டானா? ஏன்... ஏன்?”
“பதறாத சங்கரு! நேத்துக் காலைல மனோ
வந்திச்சு. அவன் ஆத்தாவுக்கு ஒடம்பு மோசமாயிடிச்சுன்னு தந்தி வந்ததாம். உடனே
ஊருக்குப் போகணும் ஒரு நூறுரூபா குடுன்னு அவசரப்பட்டுச்சி. நீ ஊர்ல இருந்தா
உன்கிட்ட வாங்கிட்டிருக்குமாம். நான்தான் அங்கஇங்க பெராய்ஞ்சி
பணம் குடுத்தேன். பாவம் நல்ல பிள்ளை மனோ ”
சங்கர் குழம்பினான். “சரி!
அண்ணாச்சி. அப்பால வரேன்”
பதிலுக்கு காத்திராமல் அவன் சைக்கிள் பறந்தது.
ஒவ்வொரு நண்பனையும் சென்று பார்த்தான். மொய்தீன், செல்வம், பன்னீரு, மாரிமுத்து,பாஸ்கர்
எல்லோரும் வழக்கம் போல் தான் இருந்தனர். தமிழ் செல்வத்துக்கு சின்னம்மை வார்த்தது
போலிருந்ததால், பல்லாவரத்தில் வசிக்கும் மாமா வீட்டுக்கு
போயிருப்பதாய் சொன்னார்கள்.
சங்கருக்கு ஏதோ பொறிதட்டியது. “தமிழுக்கு அம்மை போட்டிருக்கா? என்னடா சொல்றீங்க?”
“ஆமாம் சங்கர்! முந்தாநாள் சாயங்காலம்
பேக்டரியிலேயே வாந்தி எடுத்தான். உடம்பு நெருப்பாய்க் கொதிச்சது. கைகால்
முகமெல்லாம் சிவந்து பொறிபொறியாய் கிளம்பியிருந்தது. பேக்டரி டாக்டர்தான்
மீஸில்ஸ்ன்னு வீட்டுக்கு போகச் சொன்னார். நான்தான் பல்லாவரத்தில் கொண்டுவிட்டேன்.” இது தமிழுடன் வேலைபார்க்கும் பாஸ்கரின் வாக்குமூலம்.
“டேய்! தமிழோட மாமா வீட்டில் நடந்ததைச்
சொல்லுடா.” என்று சிரித்தவாறே மாரிமுத்து பாஸ்கரைக்
கேட்டான்.
“தமிழோட மாமா பொண்ணு ஒண்ணு என்னா சீன்
போட்டுதுன்ற? நம்ம தமிழை விழுந்துவிழுந்து கவனிக்குது.
அக்கம்பக்கம் இருக்குற யாரும் லட்சியம் இல்ல அதுக்கு. நம்ம கருப்பாண்டிக்கு என்னா
வெக்கங்கிறே? மீஸில்ஸ் முடிஞ்சாவுட்டு மிஸ்ஸஸ் தமிழ்செல்வம்
ஆயிடும் போல இருக்கு.” எல்லோரும் சிரித்தார்கள்.
‘மாமன் வீடு மச்சுவீடு’
என்று மொய்தீன் கட்டைக் குரலில் பாடினான்.
ஆச்சரியம். யாருக்குமே மனோ ஊருக்குப் போனது
தெரியவில்லை. எல்லோருக்கும் மனோ மீது பாவமாக இருந்தது.
சங்கர் குழம்பிய படியே வீடு திரும்பினான். வீட்டினுள்
அப்பாவும் அம்மாவும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பாவின் நண்பர்கள் போய்
விட்டிருந்தனர்.
சங்கர் வாயைத் திறக்குமுன் ஷங்கரின் அம்மா ஒரு
கடிதத்தை நீட்டினாள்.
“சாமி மாடத்துல இந்த கடுதாசியை வச்சுட்டு
போயிருக்குறாடா உன் தங்கச்சி!”
சங்கர் அவசரமாய் அதைப் படித்தான்.
“என் அன்புக்குரிய அப்பா அம்மாவிற்கு, உங்கள் மகள் வசு எழுதும் அன்பு மடல். இதை எழுதுவதற்கு என்னை
மன்னிக்கவும். நானும் மனோவும் ஒரு வருடமாய்க் காதலித்து வருகிறோம். மனோ மிக
நல்லவர். உங்களுக்கே தெரியும். ஆனாலும் ஜாதி,பாஷை
பிரச்சினையால் எங்கள் திருமணத்தை நீங்கள் நடத்த மாட்டீர்கள். மேலும் அரசல்புரசலாய்
எங்கள் காதல் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டதால் எங்களுக்கு வேறு வழியில்லை. இதைப்
படிக்கும் போது, உங்கள் மானசீக ஆசிகளுடன் எங்கள் திருமணம்
முடிந்திருக்கும். எங்களைத் தேடாதீர்கள்.
அண்ணனைத் திட்டாதீர்கள். என்னையும் மனோவையும் மன்னித்துவிடு சங்கர் அண்ணா! நானே
உங்களை பிறகு தொடர்பு கொள்கிறேன்... உங்கள் வசு.”
“அய்யய்யோ! என்னம்மா இது?”
“விதிப்பா! நடப்பது நடக்கட்டும்.”அம்மா உள்ளே போனாள்.
அப்பா ஒன்றும் சொல்லவில்லை.
ஆனாலும் அவர் முகத்தில் ஏதோ கவலைதீர்ந்த ஆசுவாசமும்
அமைதியும் இருப்பதாய் தோன்றியது.
“இப்போது என்னப்பா செய்யலாம்?”
மலர்த்திய இடது உள்ளங்கையை போகட்டும் என்பது போல்
ஆலத்தி காட்டினார்.
‘மனோ நீயா? நீ கூடவா?’ சங்கருக்கு வேதனையாக இருந்தது.
மொட்டை மாடிக்குப் போனான்.
ஒரு இலை கூட அசையவில்லை.
எதிர்த்த வீட்டு சுவரில் ‘ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது’ பட போஸ்டர்
தெருவிளக்கு வெளிச்சத்தில் கண் சிமிட்டியது. ‘இன்றே இப்படம்
கடைசி’ என்ற இன்னொரு சிவப்புநிற ஒட்டு வாசகத்துடன்..
‘ஒரு ஊதேப்பு நிறம் மாறுகிறது’ என்று வாய்விட்டே ஒருமுறை சங்கர் சொல்லிக் கொண்டான்.