ஞாயிறு, அக்டோபர் 09, 2011

தொழுவத்து மயில் 4இதுவரை 1 2 3 

வாழ்க்கைநதி அவ்வப்போது பிரவாகமாய், சன்னமான நீர்க்கீற்றாய், வெறும் கானல் அலையும் மணல்வெளியாய், எப்படி எப்படியெல்லாம் உருமாறி நகர்கிறது? எங்கோ துவங்கி, கடலடைந்து கரிப்பை இயல்பாக்கிக்கொண்டு தன் சுயமிழந்து…..... இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இயற்கையின் விளையாட்டா? இல்லை... அர்த்தம் இருக்கிறது... வரும் வழிதோறும் புல்லுக்குக்கூட பொசிந்து, தாகம் தணித்து....

கிறிஸ்மசுக்கு இன்னும் பத்து நாட்களே இருந்தது. வனரோஜாவுக்கோ இரண்டு வாரமாய் கடும் ஜுரமடித்து இந்த இரண்டுநாட்களாய்த் தான் நடமாடுகிறாள். மெலிந்தும் போயிருந்தாள். சற்று உடம்பு சரியானவுடன் பரபரவென்று வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டாள். இதற்காக கிருஸ்டி அவளை கடிந்து கொள்ள வேண்டியதாயிற்று. பதிலுக்கு அவள் உதட்டை சுழித்து சிரித்த சிரிப்பு இருக்கிறதே....

கிருஸ்மஸ் முடிந்த கையோடு வடநாடு மற்றும் இமயமலை வரையில்  இருபது நாட்கள் சுற்றுலா செல்வதற்கு கிருஸ்டியும்,அவருடன் வேலைசெய்யும்  நண்பர்களும் முன்பே திட்டமிட்டிருந்தனர். இந்தமுறை ஆண்கள் மட்டுமே போய் வருவதென்றும், அடுத்தமுறை குடும்பத்துடன் செல்லலாம் என்றும் முடிவு செய்திருந்தனர். கிருஸ்டிக்கு ஏதும் சொல்ல இயலவில்லை. வனரோஜாவை விட்டு இருபது நாள் இருப்பதாவது?... ஆனாலும் வனரோஜா அவர் சென்று வரத்தான் வேண்டும் என்று தீர்மானமாய் சொல்லி விட்டாள். இந்த பத்துநாட்களில் தன் உடம்பு பூரண குணமாகிவிடும் என்றும், உதவிக்கு மேரியக்கா இருக்கவே இருக்கிறாள் என்றும் அவனை சமாதானம் செய்தாள்.

அன்று மாலை, பத்து பன்னிரண்டு பிள்ளைகள் கூடத்தில் கிருஸ்மஸ் கரோல் பாடல்களை பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். வனரோஜா நிமிர்ந்து அமர்ந்து சொல்லிக் கொடுப்பதைப் பார்த்த கிருஸ்டிக்கு சந்தோஷமாய் இருந்தது.

வனரோஜா உச்சஸ்தாயியில் ஒரு வரியைப் பாடத் துவங்கியபோது, பாதியில் அவள் குரல் தடுமாறி, ஒரு சீழ்க்கை சப்தமாக, ஒரு கன்றின் அலறலாக நடுங்கித் தடுமாறியது. தொண்டையை இருகைகளாலும் அழுந்த பிடிந்தபடி சாய்ந்து விட்டாள். கிருஸ்டி அவளை உடனே காது,மூக்கு,தொண்டை மருத்துவரிடம் அழைத்து சென்றார். பரிசோதனைகளுக்குப் பின்குரலை அதன் சக்தியை மீறி வருத்தியதால் ஏற்பட்ட அழற்சியென்றும்,ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்றும் சொல்லி மருந்து எழுதிக் கொடுத்தார்.
   
வனரோஜாவுக்கு பேசமுடியவில்லை. விழுங்குவதற்கு கஷ்டப் பட்டாள். டாக்டரோ ஒரு வாரம் அப்படித்தான் இருக்கும் பயப்பட ஒன்றுமில்லை என்று கிருஸ்டிக்கு சொன்னார். கிருஸ்மஸ் சமயத்தில் தான் அவளுடைய பழைய குரல் கேட்கத் தொடங்கியது. இன்னமும் சாப்பிடத்தான் சிரமப் பட்டாள். விழுங்குவதற்கு திரவ உணவு பரவாயில்லை என்று இருந்தது அவளுக்கு.

கிருஸ்டி அடுத்த நாள் சுற்றுலாவுக்கு புறப்படவேண்டும். தான் போகப் போவதில்லை என்று கிருஸ்டி சொன்னதை வனரோஜா ஏற்கவில்லை. தனக்கு குரல் சரியாகிவிட்டதாயும் அன்று காலை கூட மூன்று இட்டிலி சாப்பிட்டதாயும் சொன்னாள்.

அன்று மாலையே அவனுக்கு வேண்டிய பிரயாண ஏற்பாடுகள் செய்து விட்டாள் வனரோஜா. எதெது பெட்டியில் எங்கே இருக்கிறது என்றும் மூன்று முறை சொல்லியாகிவிட்டது. பார்க்கும் ஒவ்வொரு இடத்தையும் பற்றி தேதிவாரியாக எழுதி எடுத்து வர வேண்டும் என்று கிருஸ்டிக்கு கட்டளையும் இட்டாள். போட்டோ பிலிம் போட்ட கேமராவையும் எடுத்து வைத்தாள்.

இரவு கிருஸ்டிக்கு உறக்கம் பிடிக்கவில்லை. அருகில் மெலிதாய் மூச்சுவிட்டு தூங்கும் வனரோஜாவையே கண்கொட்டாமல் பார்த்தபடி சாய்ந்திருந்தார் கிருஸ்டி. அவருடைய மார்பின் மேல் போட்டிருந்த அவளுடைய வலது கரம் ஒருமுறை அசைந்தது. தன் உடம்பின் சிறு அசைவுகூட அவளை எழுப்பிவிடலாகாது என்று மெலிதாக மூச்சுவிட்டபடி இருந்த கிருஸ்டி தூங்க முயன்ற போது பொழுது விடிந்து விட்டிருந்தது.

 அந்த இருபது நாட்கள்... முடிவில்லாது நீண்டு கொண்டே செல்வதாய் இருந்தது கிருஸ்டிக்கு. அவளுக்கு மூன்று பெரிய கடிதங்கள் எழுதியிருந்தார். தான் பார்த்த இடங்கள், தங்கள் பிரிவு என்று விரிந்தன அந்தக் கடிதங்கள்.

ஒருவாறு ஊருக்கு வந்து சேர்ந்த கிருஸ்டிக்கு வனரோஜாவைப் பார்த்தவுடன் இதயமே பிரண்டு வாய்க்கு வந்தாற்போல் ஆகியது.  முன்னைவிட இன்னமும் இளைத்துக் காணப்பட்டாள்.

மேரி புலம்பினாள். என்னத்தை அண்ணே சொல்லுறது. கொஞ்சம் சாப்பிட்டாலும் ரோஜாவுக்கு வாயிலெடுக்குது. பத்து நாள் காப்பியை மட்டும் மூணு வேளைக்கும்  குடிச்சது. அப்புறமா அதையும் நிப்பாட்டிட்டு இந்த கலரை தம்ளர்ல ஊத்தி சொட்டுசொட்டா குடிக்குது என்று அருகிருந்த டொரீனோ குளிர்பான பாட்டிலைக் காட்டினாள்.

என்ன ரோஜா இது. டாக்டர் கிட்ட போனியா இல்லையாம்மா?” கிருஸ்டிக்கு குரல் நடுங்கியது.

நம்ம பார்த்த டாக்டரை இரண்டு தரம் பார்த்தேன். விழுங்க முடியல்லென்னு சொன்னேன். அவரும் பார்த்துட்டு, வேற மருந்து எழுதிக் கொடுத்தார் என்றாள்.

இன்னொரு மருத்துவரின் அறிவுரைபடி வரதுவும் கிருஸ்டியுமாய் வனரோஜாவை அழைத்துக் கொண்டு சென்னைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்கள்.

அவளை முற்றும் பரிசோதித்த டாக்டர்கள் வாய்வழியே குழாய் செலுத்தி எண்டோஸ்கோப்பி பரிசோதனையும்.பயாப்ஸியும் செய்தார்கள்.  கிருஸ்‌டியையும் வரதுவையும் உள்ளே அழைத்த மூத்த டாக்டர் சொன்னார்.

எப்படி கவனிக்காமல் விட்டீர்கள்? உணவுக்குழாயில் ஏற்பட்ட அடைப்பை கண்டுகொள்ளாமல் தொண்டைக்கு வைத்தியம் பார்த்திருக்கிறீர்கள். சாரி. அவர்களுக்கு உணவுக்குழாயில் கேன்சர் பரவியிருக்கிறது. ஆரம்பத்திலேயே கவனித்திருந்தால் கட்டுக்குள் கொண்டுவர முடிந்திருக்கும். ஏறக்குறைய முற்றிலுமாய் அடைபட்டுவிட்டது. இன்னமும் ரேடியம், கீமோதெரபி போன்றவற்றை மேற்கொண்டாலும் அவர்கள் பிழைப்பது கடினம்.

அய்யோ! என்ன சொல்கிறீர்கள் டாக்டர்?” கிருஸ்டி தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

சாரி! மிஸ்டர் கிருஸ்டிராஜ்.  இட் ஈஸ் டூ லேட். அதிகபட்சமாய் அவர்கள் இன்னமும் இரண்டு மாதங்கள் தான் உயிருடன் இருப்பார்கள். நான் சொன்ன வைத்தியங்கள் செய்து அவர்களை மொத்தமாய் உருக்குலைத்து  அவர்கள் உயிரை இன்னமும் ஓரிரு மாதங்கள் நீட்டிக்கலாம். உடனடியாய் ஸ்டென்ட் ஒன்றை பொறுத்தலாம் என்று நினைக்கிறேன்.

ஸ்டென்ட்டுன்னா என்ன டாக்டர்?” என்று வரது வினவ,

அது ஒரு ஜவ்வால் மூடிய ஸ்பிரிங் போல இருக்கும். அதை உணவுக் குழாயில் பொறுத்தினால் அடைப்பை விலக்கி ஆகாரம் வயிற்றுக்கு செல்ல வழியேற்படும். முயற்சிக்கலாம்
.
ஏதும் செய்யுங்கள் டாக்டர்.. கிருஸ்டி கையெடுத்து கும்பிட்டார்.

உங்கள் ஊருக்கு பக்கத்து டவுனிலேயே டாக்டர் நந்தகுமார் புற்றுநோய்ப் பிரிவில் மருத்துவம் பார்க்கிறார். உங்களுக்கு இவ்வளவு தொலைவில் தங்கி மருத்துவம் பார்ப்பது சிரமமென்றால் அவரிடம் காட்டுங்கள் . அவர் என் சிறந்த மாணவர்களில் ஒருவர்

சரி டாக்டர். மீண்டும் ஊருக்கு திரும்பினார்கள். சென்னை மருத்துவர் குறிப்பிட்ட டாக்டர் நந்தகுமாரை சந்தித்து சிகிச்சை ஆரம்பமாயிற்று. வனரோஜாவிடம் தொண்டைக்கான வைத்தியம் தான் என்று சொல்லப் பட்டது.

டாக்டர் நந்தகுமார் கிருஸ்டியிடம் படித்த பழைய மாணவராய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கிருஸ்டியிடம் இலவசமாய் டியூஷன் படித்ததாய் நன்றியோடு நினைவு கூர்ந்தார்.

வனரோஜாவுக்கு ஸ்டென்ட்டும் பொருத்தப்பட்டது. வனரோஜாவுக்கு கான்சர் பற்றி சொல்லவேண்டாம் என்றும் டாக்டரைக் கேட்டுக் கொண்டனர். அக்காவை முடிந்த வரையில் ஏமாற்றப் பார்க்கிறேன் என்று வேதனையுடன் சொல்லிப் போனார் டாக்டர்.

வனரோஜா கொஞ்சமாய் இட்லி சாப்பிட்டாள். ஆசை ஆசையாய் தண்ணீர் குடித்தாள்.

அடுத்த இரண்டு நாட்களும்  கொஞ்சம் ஆகாரம் சாப்பிட்டாள். வாய்வழியே மருந்தும் கொடுக்கப்பட்டது.

முகம் தெளிவாய் இருந்தது. அருகில் இருந்த கிருஷ்டியைக் கேட்டாள், ஏதாவது சாப்பிட்டீங்களா?”

ஏன்? இங்கேயே சமைச்சு போடப் போறியா?”

மாட்டேனா? என்ன வேணும் என் ராஜாவுக்கு?”

எனக்கா?  கேரட் அல்வா பண்ணிக் குடேன்....

சிரித்தார்.. ஆனாலும் கண்கள் காட்டிக் கொடுத்தன.

பண்ண மாட்டேனா என்ன?” என்னங்க இது குழந்தை மாதிரி....

மூன்றாம் நாள் படுக்கையில் சாய்ந்தபடி இருந்த வனரோஜாவை டாக்டர் நந்தகுமார் பரிசோதிக்க வந்தார்.

அக்கா! எப்படி இருக்கீங்க?”

நல்லா இருக்கேன் தம்பி! ஒரு விஷயம்.. எனக்கு கேன்சர்ன்னு உங்க சாருக்கு தெரியுமா?

உங்களுக்கு கேன்சர்ன்னு யாருக்கா சொன்னது. அதெல்லாம் ஒண்ணுமில்லை

எனக்கு எல்லாம் தெரியும். ஒரு மூணு நாள் என் வீட்டுலே இருக்கணும். அதுக்கு ஒரு வழி செய்யேன். இந்த அக்காவுக்காக.ப்ளீஸ்

அதெப்பிடிக்கா? உங்க உடம்பு இருக்குற நெலமைல...

இங்க படுத்திருக்கிறதை வீட்டுல படுத்திருக்க மாட்டேனா? இல்லே, இங்கே படுத்திருந்தா என்னை காப்பாத்திடுவீங்களா?”

நந்தகுமாருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. வாயடைத்துப் போனது அவருக்கு .

சரியக்கா. ஏற்பாடு பண்றேன்.

அன்று மாலையே கிருஷ்டியிடம் வனரோஜாவை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொன்னார். அக்காவுக்கு ஒரு இடமாறுதல் தேவை. மூன்று நாட்கள் வீட்டில் இருக்கட்டும். காலையும் மாலையும் நானே வந்து பார்க்கிறேன் சார்     

 கிருஸ்டிக்கும் வரதுவுக்கும் யதார்த்தம் முகத்தில் அறைந்தது. 

வீட்டுக்கு வந்த இரண்டாம் நாள். ரோஜா! ஏதும் பயமில்லை.. நான் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் வந்து விடுவேன். அமைதியாய் கொஞ்சம் தூங்கு. பக்கத்து வீட்டு சுகிர்தம் இங்கயே இருக்கும் . ஏதும் தேவைன்னா அதைக் கேளு. வரதனைப் பார்த்துவிட்டு ஓடிவந்து விடுகிறேன். சரியாம்மா. குனிந்து வனரோஜாவின் நெற்றியில் கிருஸ்டி முத்தமிட்டார். நிமிர்ந்தபோது கிருஸ்டியின் சட்டையை இறுகப் பற்றியிருந்தாள்.

என்னம்மா?

வனரோஜாவின் வேதனை நெருக்கிய முகத்திலும் சின்னப்புன்னகை  விரிந்தது.  என் கூடவே இருங்க.

உன் கூடவே இல்லாமே வேறெங்கம்மா இருப்பேன். ஒரே ஒரு மணி நேரம் தான் .. என் ராணியில்லையா நீ?

போடா கருப்பா!

அலுப்பு, ஆயாசம், இயலாமை, நேசம் எல்லாமுமாய் ஒலித்த வனரோஜாவின் தீனக்குரல்.....

வெகு நாளாயிற்று இந்த வார்த்தைகளைக் கேட்டு.. ஒரு நொடியில் அவள் கண்களில் ஜொலித்ததே அந்த பழைய மின்னல்...

கிருஷ்டிராஜுக்கு நம்பிக்கைத் துளிர்விட்டது.

என் நம்பிக்கை எல்லாமே நீதானே ரோஜா. நோயும் நொடியும் உன் முககாந்தியை ஏதும் செய்ய இயலவில்லையே ரோஜா ! வெப்பம் உருக்க முடிந்தது மெழுகுவர்த்தியைத் தானே? சுடரின் தெளிவும், ஜோதியின் அமைதியும் சாந்தி நல்கியபடிதானே இருக்கிறது.

வரது உன்னைக் கேட்டானே...இத்தனைவலியிலும் எப்படி உனக்கு சிரிக்க முடிகிறது என்று.... வயிற்றின் மேல் கைவைத்தபடி நீ என்ன சொன்னாய்? வலி இங்கதானே அண்ணா. என் வாயிலும் உதட்டிலும் இல்லையே என்றாயே... உனக்கு எப்படி சொல்லத் தோன்றிற்று ரோஜா... என் ரோஜா...   

33 comments:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அட என்ன சார்... இவ்வளவு சந்தோஷமா போய்ட்டு இருந்த வனரோஜா-கிறிஸ்டி வாழ்க்கையில் சந்தோஷமாய் இருந்த எங்களுக்கு இப்படி இடியாய் ஒரு செய்தியைச் சொல்லி அதிர வைச்சுட்டீங்களே...

ம்.... கேன்சர் உடன் போராடி ஜெயித்தவர்கள் கூட இருக்கிறார்கள் ஜி! அதனால டக்னு சீரியல் முடிக்க கேரக்டருக்கு கேன்சர்னு சொல்லி முடிக்கற மாதிரி ஆக்கிடாதீங்க... ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கிற மாதிரியே கொண்டு போங்க!

இது வேண்டுகோள் ஜி!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஆஹா, வனரோஜாவுக்குப்போய் கான்சரா?

வேண்டாமே.எல்லோரும் வருந்துவார்கள், ஸ்வாமி.

எல்லாவற்றையும் கனவு என்று சொல்லி, கதையை சுபமாகவே கொண்டுபோய் முடித்து விடுங்களேன்.

எல்லோருக்கும் சந்தோஷமாக இருக்குமே.

பத்மநாபன் சொன்னது…

கதையிலே சோகத்தே ஏறக்கிட்டிங்களே ஜி ... டாக்டர் கிட்ட நாங்கெல்லாம் கேட்டோம்ன்னு சொல்லி எப்படியாவது பிழைக்க வச்சுருங்க வனரோஜாவை...

ஸ்ரீராம். சொன்னது…

...............................

geetha santhanam சொன்னது…

வனரோஜாவை வாட விட்டுவிட்டீர்களே நியாயமா?

அப்பாதுரை சொன்னது…

முதல் பகுதியில் கோடிட்ட சோகம்.
அழகான நடை. //வலி இங்கதானே அண்ணா - beautiful.
வெங்கட்நாகராஜின் பின்னூட்டத்தில் உண்மையான தவிப்பு.

மோகன்ஜி சொன்னது…

அன்பு வெங்கட்! உங்கள் கோபமும் தவிப்பும் நியாயமானது. சந்தோஷமாய் இருவரும் வாழ்வதாய் இந்தக் கதையை கொண்டு போயிருக்க முடியும் தான்.

இந்த கதையைப் பொறுத்தவரை, ஏதும் செய்ய இயலாமல் நிஜ வாழ்க்கையில் நான் வெறும் சாட்சியாய் மட்டுமே நின்ற தருணத்தை பதிவு செய்யத் துணிந்தேன்.

இன்னுமொன்று வெங்கட்.. வாழ்க்கையின் இருட்டான பகுதிகளை நாம் கதையாய்க் கூட சந்திக்க தயாராக இல்லை என்பதே உண்மை. சிலர் வாழ்க்கையில் இந்த தருணங்கள் வாய்க்கும் போது அதை எதிர்கொள்ளும் வகையில் தான் மனிதர்களை, அவர்களின் அன்பின் ஆழத்தை புரிந்து கொள்ள இயலும்.

வனரோஜா கிருஷ்டியை பிரிவதாய் யார் சொன்னது?

மோகன்ஜி சொன்னது…

வை.கோ சார்! இந்தப் பதிவை வலையேற்றியவுடன் எனக்கு நான்கு மின்னஞ்சல்களையும், சில அலைபேசி அழைப்புகளையும் எதிர்கொண்டேன். என்பால் அன்பு கொண்டிருக்கும் இவர்கள் அனைவருக்கும் என்னை விட வனரோஜா முக்கியமானவளாய்ப் போய் விட்டாள். உங்கள் பின்னூட்டம் போன்று சுபமாய் முடிக்கச் சொல்லியும், 'மவனே! மெட்றாஸ்ல இனிமே காலை வைக்க மாட்டே!'என்றும் அன்புக் கட்டளைகள்.... கதையை முடித்தவுடன் என்னை மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! டாக்டர் கிட்ட கண்டிப்பா மன்றாடுகிறேன். நீங்க என்னேல்லாம் சொல்லி திட்ட போறீங்களோ என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஸ்ரீராம்;
"#^$#$@/\*%%!!"......??

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்!
தோப்புக் கரணம் போட்டுகிட்டே இருக்கேன்.. சாரி! சாரி!

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி அப்பாதுரை!
"இங்கே தானே வலி அண்ணா" என்பதை நேரில் கேட்ட வரதனை யோசித்தீர்களா?
வெங்கட் என் மேல் ரொம்பவே கோபமாய் இருக்கிறார். இன்னும் நாலைந்து மாசம் டில்லி பக்கம் தலை வைத்து படுக்கமாட்டேன்.

அப்பாதுரை சொன்னது…

//சந்தோஷமாய் இருவரும் வாழ்வதாய் இந்தக் கதையை கொண்டு போயிருக்க முடியும்

கதையில் இருவரும் சந்தோஷமாகத் தானே வாழ்கிறார்கள்? உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்பதன் பின்னணியில் சோகமும் உண்டு, சந்தோஷமும் உண்டே?
(உண்மை நிகழ்வை ஒட்டிய சென்னை பித்தனின் புனைவைப் படித்தீர்களா?)

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வெப்பம் உருக்க முடிந்தது மெழுகுவர்த்தியைத் தானே? சுடரின் தெளிவும், ஜோதியின் அமைதியும் சாந்தி நல்கியபடிதானே இருக்கிறது./

வாழ்க்கையின் இருட்டான பகுதிகளை நாம் கதையாய்க் கூட சந்திக்க தயாராக இல்லை..இல்லை!

மோகன்ஜி சொன்னது…

நீங்கள் சொல்வது மிகச் சரியானது அப்பாதுரை . இன்னமும் சென்னை பித்தன் பதிவைப் பார்க்கவில்லை. அவசியம் பார்க்கிறேன்.

நிலாமகள் சொன்னது…

வெப்பம் உருக்க முடிந்தது மெழுகுவர்த்தியைத் தானே? சுடரின் தெளிவும், ஜோதியின் அமைதியும் சாந்தி நல்கியபடிதானே இருக்கிறது.//

நினைப்ப‌தெல்லாம் ந‌ட‌ந்து விட்டால்...?! நித‌ர்ச‌ன‌ வாழ்வை க‌ற்ப‌னையால் பூசி மெழுக‌ முடியாது தான்.

ந‌ல்ல‌ வேளை... தாம‌த‌மாக‌ வ‌ந்தோம். காத்திருக்கும் அவ‌ஸ்தைய‌ற்று க‌ட‌க‌ட‌வென‌ அத்தியாய‌ங்க‌ளை வாசிக்க‌ முடிந்த‌தென‌ நினைத்த‌ப‌டி இந்த‌ ப‌திவை வாசிக்க‌த் தொட‌ங்கினேன். முத‌லிலிருந்தே இலைம‌றைகாயாக‌ முடிவின் சாய‌ல் புரிந்தும் புரியாம‌லுமிருந்த‌து. இப்போது உறுதியாக‌த் தெரிந்துவிட்ட‌து. நாங்க‌ளெல்லாம் க‌ரைந்து க‌ண்ணீர் விடும்ப‌டியிருக்க‌ப் போகிற‌தென்று.

நல்ல நட்பு, நல்ல மனைவி, நல்ல ரசனை, நல்ல மனசு...... வேறென்ன வேண்டும்?

நோயென்னும் அர‌க்க‌ன் ந‌ம்மை பீடிக்காத‌ வ‌ரை இப்ப‌டியே இறுமாப்போடு திரிவோம்.

நல்ல நட்பு, நல்ல மனைவி, நல்ல ரசனை, நல்ல மனசு ...இப்பெரும் ப‌டைக‌ளின் துணைகொண்டே அவ்வ‌ர‌க்க‌னை விர‌ட்டியும‌டிக்க‌ முய‌ல்வோம்.

கீதா சொன்னது…

அன்பால் கட்டுண்ட மனங்கள் அதை இழக்கவிருக்கும் துர்பாக்கியத்தை நினைத்து அல்லல்படுவதை இயல்பாகப் பிரதிபலிக்கிறீர்கள். கனத்த மனத்துடன் அடுத்த பகுதிக்காய் காத்திருக்கிறேன்.

சே.குமார் சொன்னது…

அண்ணா...
சோகம் இழையோட ஆரம்பித்தது கதையிம் முதல் பாகத்திலேயே தெரிந்தது. ஆனால் இந்த அளவுக்கு சோகமாய்... முடியலை... படிக்கும் போது கண்கள் கலங்கியதை மறைக்க முடியவில்லை.

நான் மூன்றாவது பகுதியில் பின்னூட்டத்தில் எதோ ஒரு பெரிய சோகம் இருப்பதாக சொல்லியிருந்தேன். ஆனால் இப்படியான ஒரு சோகம் தேவையா...

வனரோஜா வாழட்டும்.

G.M Balasubramaniam சொன்னது…

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை. என்னால் உணர முடிகிறது. சோகத்திலும் நிறைவு இருக்கிறதே என்று சமாதானப் படுத்திக்கொள்ளலாம்.

ரிஷபன் சொன்னது…

ஆனாலும் உங்களுக்கு கல் மனசு..

மோகன்ஜி சொன்னது…

இராஜராஜேஸ்வரி மேடம்! ஒருவேளை வாழ்க்கையின் வெம்மையிலிருந்து ஒளிந்து கொள்ள இலக்கிய கூரைக்கு கீழே பதுங்குகிறோமோ??

மோகன்ஜி சொன்னது…

அன்பு நிலாமகள் உங்கள் கருத்து ஒரு தரிசனமாய் எனக்குத் தோன்றுகிறது.

மோகன்ஜி சொன்னது…

அன்பு கீதா!
//அன்பால் கட்டுண்ட மனங்கள் அதை இழக்கவிருக்கும் துர்பாக்கியத்தை நினைத்து அல்லல்படுவதை இயல்பாகப் பிரதிபலிக்கிறீர்கள்.//

நன்றி!உண்மை அனுபவத்தின் வலியையும்,உணர்வையும் பிசகாமல் சொல்லும் எழுத்து இன்னமும் இங்கு எழுதப்படவில்லை. சிறுசிறு பிரதிபலிப்புகளே இலக்கியங்களை விலை பேசுகின்றன...

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய குமார்! வனரோஜாக்கள் மறைவதில்லை. சார்ந்தவர்
நெஞ்சில் நீங்காது நிறைந்தல்லவா இருக்கிறார்கள்? தொடர்ந்து படியுங்கள்.

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

ரிஷபன் சார்! மனசு கல்லாய் இருந்து விட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று தோன்றுகிறது சார். என் செய்வேன்?

மோகன்ஜி சொன்னது…

G.M.B சார்! வாழ்க்கையை நிறைய பார்த்தவர் நீங்கள். அந்த அனுபவத்தின் அமைதியை உங்கள் கருத்தில் காண்கிறேன். நன்றி சார்!

RVS சொன்னது…

அண்ணா!கருப்பா க்ருஸ்டிக்கு வனரோஜாங்கிற ப்யூட்டி உசிரோட வேணுமாம். கர்த்தர்கிட்டே தோத்திரம் செய்தார். நான் கேட்டேன்.

நீங்க சொல்றா மாதிரி கஷ்டத்தில தான் ஒருத்தரோட அன்பு உண்மையா தெரியும்னு இருந்தாலும், வெ.நா, வை.கோ, பத்துஜி போன்றவர்களைப் போல தொழுவத்து மயில் தோகை விரித்து ஆட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! கர்த்தரிடம் நானும் தான் வேண்டிக்கொண்டிருக்கிறேன்.. எனக்கு நல்லபுத்தியை கொடும் ராஜாவே என்று.

என்ன செய்யப் போறாரோ!

meenakshi சொன்னது…

கிறிஸ்டிக்கு நம்பிக்கை துளிர் விட்டது போல எனக்கும் நம்பிக்கை துளிர்த்து விட்டது. இந்த அழகான, அருமையான தம்பதிகள் இன்னும் வாழவேண்டும் பல்லாண்டு! இவர்கள் காதலை நீங்கள் எழுதி இருக்கும் விதம் மனதை உருக வைத்து விட்டது. அருமையான நடை! வாழ்த்துக்கள்!

ஆதிரா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஆதிரா சொன்னது…

இப்படி ஏதாவது திடீர் திருப்பம் இருக்கும் என்று நினைத்தேன். இங்கும் கேன்சரா... கஷ்டமாக உள்ளது ஜி.

சிவகுமாரன் சொன்னது…

இதுவரைக்கும் என் அனுபவங்களும் இந்த கதையில் கலந்திருக்கின்றன. ரேடியோ கிராபி, கீமோதெரபி வார்த்தைகளைக் கேட்டாலே உள்ளம் நடுங்குகிறது.
இறுதிப் பகுதி படிக்க பயமாக இருக்கிறது.