வியாழன், அக்டோபர் 27, 2011

ஒரு ஊதாப்பூ


(அண்மையில் அதீதம் இணைய இதழின் தீபாவளி சிறப்பிதழில் வெளியானது எனது இந்தக் கதை. சுட்டி கொடுத்தால் இணையவில்லை என்பதால் கதையை இங்கே பதிவிடுகிறேன். மறக்காமல் " அதீதம்" (http://www.atheetham.com)இணைய இதழை பார்வையிடுங்கள் ஆரவாரமில்லாத அழகான லே அவுட். இதை நடத்தும் நண்பர்களுக்கு நம் வாழ்த்துக்கள் )



ஒரு ஊதாப்பூ

மோகன்ஜி
Date: 
 Thursday, October 20th, 2011


அண்ணாச்சி! இன்னொரு டீ போடுங்க. ஸ்ட்ராங்கா சக்கர தூக்கலா.


சரி.. சங்கரு.. நீ.. சொல்ல வேணாம்.. உன் தோஸ்துங்களுக்கு எத தூக்கோணும் எத மடக்கோணும்னு எனக்கு கரதல பாடம்..

ஏதும் வெகண்டையாய் சொல்கிறாரா, யதார்த்தமாய்ப் பேசுகிறாரா என்று கண்டுபிடிக்க முடியாத கல்முகம் அண்ணாச்சிக்கு . அவருடைய அழுத்தமான குரல் நமக்குப்பழக கொஞ்ச நாளாகும். கீழ்த்தொண்டைக் கீச்சுக் குரல்.. தகர டின்னில் ஆணியால் இழுத்த மாதிரி.. போனவருடம் முதல்முறை அவர் குரலைக் கேட்டபோது திடுக்கிட்டு, குடித்துக் கொண்டிருந்த  டீயை சட்டையில் கொட்டிக் கொண்டான் சங்கர்.

சங்கரின் ஜமா,மாலை ஆறரையிலிருந்து ஏழுமணிக்குள் அண்ணாச்சி டீக்கடையில் கூடும். இன்றைய சந்திப்பில் நாலுபேர் தான். சங்கர், தமிழ்செல்வம், மனோ என்கிற மனோகரன் மற்றும் மொய்தீன். மூவர் இன்னமும் வரவில்லை. அவர்கள் எல்லோருக்குமே  சென்னையின் அருகிலுள்ள ஒரு தொழிற்பேட்டையில் ஏதேதோ வேலை.. என்ன கலெக்டர் உத்யோகமா தட்டுக்கெட்டுப் போகிறது? சிறு அறைகளை பங்குபோட்டுக் கொண்டு கைச்சமையலும், அவ்வப்போது காலிவயிறுமாய் ஒருவரையொருவர் பார்த்தபடி காலம் போகிறது. இந்த டீயும், வாராந்திர சினிமாவும், பகிர்ந்து கொள்ளும் சிகெரெட்டும் தான் அதிகப்படி. இவர்களில் மனோ மட்டும்தான் புகைப்பதில்லை. மாசக்கடைசியில் அண்ணாச்சியின் கருணையினால் கொஞ்சம் நெருக்கடியில்லாமல் ஓடும். என்ன... சினிமாதான் இருக்காது.

இந்தக் குழுவில் சங்கர் மட்டும்தான் பெற்றோருடன் வசிப்பவன்.
அப்பா வசதியானவர் தான். ஆனாலும் கெடுபிடி அதிகம்.
  

என்ன அண்ணாச்சி ரெண்டு டீக்கு நாலணா எடுத்திருக்க? டீக்கு  பத்துபத்து பைசாதானே.? யாரோ அண்ணாச்சியுடன் செய்யும் வாக்குவாதம்...

இல்லே மருது. இன்னலெருந்து ஒரு டீ பன்னண்டு பைசா. பத்து பைசா கட்டாது. சக்கர என்ன வெல விக்கி?”

சங்கர் அலுத்துக் கொண்டான். இது வேறயா? சரிதான்.   

மொய்தீன் மனோவைக் கேட்டான்.. மெனோ! முருகன்ல என்ன சினிமா ஆடறது?”

மனோகரன் கேரளத்துப் பையன். சிவந்த நிறம். பலகைபலகையாய் தோள்களும் நீண்ட கைகளுமாய், நெற்றியில் எப்போதும் துலங்கும் சின்ன சந்தனக் கீற்றுடன். அவன் பேசும் குழப்படி தமிழை பேசவிட்டுக் கேட்பதில் இவர்களுக்கு ஒரு ஆனந்தம். ஒரு தரம் ஊரிலிருந்து வந்த அவனுடைய அண்ணன் அவனை மெனோ என்றழைக்க அந்த பெயரே அவர்களுக்கு மத்தியில் நிலைத்து விட்டது.

முருகென்லயோ ... ஒரு ஊதேப்பூ நிறம் மாறுகிறது...

நண்பர்கள் வெறிச்சிரிப்பு சிரித்தார்கள். டேய். அது ஊதாப்பூ கண் சிமிட்டுகிறதுடா!”. மனோவை பக்கத்தொருவராய் இழுத்தபடி சிரித்தமேனிக்கு நின்றாகள். அண்ணாச்சி கடையில் இருந்த இன்னும் சில வாடிக்கையாளர்களும் சிரித்துக் கொண்டார்கள்.

போறும்டா.. தேசம்விட்டு தேசம் வந்து நம்ம பாசையை பேசுதான். சிரிக்கீக?”

அண்ணாச்சி. மனோவோட மலயாள தேசத்த விடு. நீ சொல்லு.. இப்ப சக்கர என்ன வெல விக்கி?”

மொய்தீனு! எம்மடிலயே கை போடுத..

சரி அண்ணாச்சி! நாலு சிகரெட்டு தா.

எல... உங்கள்ள மூணு சிம்மினி தானேடா?

இன்னலெருந்து மனோவுக்கு அரங்கேற்றம் பண்ணிடுவோம்னு...

மொய்தீனு.. அவனுக்கும் வேணாமுடா இந்தக் கருமம்..

அண்ணாச்சி! விக்கவும் விப்பீரு.. உவதேசமும் செய்வீரு..

ஏதோ கருமப் பொழப்புடா இது. தம்பிகளா.. நீங்க காசு குடுத்தா நான் சிகரெட்டு விக்கதானே கடைய  வச்சது.. பளகினது விட முடியலேன்னா சரி.. புதுசா எதுக்கு சாக்கடைலே விளுகிறது?”

மேற்கொண்டு அண்ணாச்சி பேசவில்லை. யார்முகமும் பார்க்காமல் வரிக்கி இருந்த சீஸாவின் மூடிமேல் சிகரெட்டுகளை வைத்தார்..

சரி வாங்கடா.. பாலத்துக்கு போவோம். அண்ணாச்சி! பயப்படாதீங்க! உங்க செல்லப்பிள்ளைக்கு சிகரெட்டு பழக்கிட மாட்டோம்.அவங்கூரு அய்யப்பசாமி கண்ணக்
குத்திடுமில்ல?” பார்ப்போம்

எதற்கோ எல்லோருக்குமே மனோ மீது பரிவும் பாசமும் இருந்தது. அவன் குழந்தை முகமா? நெற்றியின் சந்தனக் கீற்றா?
மலையாளம் கலந்த மழலைத் தமிழா? புன்னகை தங்கிய உதடுகளும், சலனித்துக் கொண்டேயிருக்கும் கண்களுமா?

சங்கரின் நண்பர்களையெல்லாம் உதவாக்கரை, வெட்டி ஆபீசருங்க என்று திட்டும் அவனுடைய தகப்பனார் குமரேசன்  கூட மனோவை வாங்க தம்பி போங்க தம்பி என்று குரல் தழையக் கூப்பிடுவார். அவனுடைய முகராசி அப்படி !

போன சனிக்கிழமை குமரேசன் குடும்பத்தையே உலுக்கியது ஒரு சம்பவம். மண்ணடி வரைப் போய்விட்டு திரும்பிய சங்கரை வாசல் திண்ணையிலேயே மறித்தார் குமரேசன் .

சங்கரா! வசுமதி போயிட்டு வர்ற டைப் இன்ஸ்டிட்யூட்ல நீதானடா அவளை சேர்த்து விட்டே?” வசுமதி அவன் தங்கை.

ஆமாம்பா. செல்வராசுவோட மாமாவோட இன்ஸ்டிட்யூட் தான். எதுனா பிரச்னையாப்பா ?”

ஒரு நாளாவது அவளைப் போயி கூட்டிக்கிட்டு வரணும்னு அக்கறை உனக்கிருக்கா?  அவ இன்னமும் வீட்டுக்கு வரலை.

ஏழு மணிக்கு தானே திரும்புவா? இப்போ ஆறே முக்கா தானே?”

அவனை வெறுப்பாய் முறைத்து விட்டு வரட்டும் என்று கறுவிக் கொண்டே உள்ளே போனார். அம்மாவின் முகம் வெளுத்துக் கிடந்தது.

என்னம்மா ஆச்சு? அப்பா சாமியாடிட்டு போறாரு?

உங்க அப்பாவோட சினேகிதர் அளகேசன் சார் கொஞ்ச முன்னாடி வந்து ஒரு குண்டு போட்டுட்டு போனாருடா.

என்னம்மா சொல்ற?”

அம்மன் கோவில்ல வச்சு வசுவை பார்த்தாராம்.
உன் சிநேகிதன் யாரோ கோவில்ல அவளுக்கு எதுத்தாப்புல ஆம்பிளை வரிசைல நின்னுகிட்டிருந்தானாம்.

எந்த சிநேகிதன்?யாராம்?”

உன்கூட அவனைப் பார்த்திருக்காராம். யாருன்னு அவருக்கும் தெரியல்ல. யாரோ ஒரு கறுத்த பிள்ளையாம்.

அதுக்காக? எதுக்க நின்னா எழுப்பிக்கிட்டு போயிட்டா மாதிரி தானா?”

அவச்சொல் சொல்லாதடா. அடிவயிறு கலங்குது.

ஏம்மா யாரோ சொன்னாங்கன்னு இப்படி பயந்து சாவுர? இந்தப் பசங்க இவ்வளவு நாளா நம்ம வீட்டுக்கு வரப்போகத்தானே இருக்காங்க? உனக்கு எதுனாச்சும் தப்பா பட்டுதா? அந்தக் கழுத வரட்டும். விசாரிப்போம்.

சங்கர் சொல்லி வாயை மூடவில்லை. வசு ரேழியில் செருப்பை கழட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

அம்மா! இந்தா.. உள்ளங்கைப் பொட்டணத்தில் இருந்து குங்குமத்தை அவளிடம் நீட்டினாள். நானும் செல்வியும் கோவிலுக்கு போனோம்மா.

வசு சொன்னதைக் கேட்டபடியே ஹாலுக்கு வந்தார் குமரேசன். ஏம்மா! இது என்ன புதுப்பழக்கம். வீட்டுல சொல்லாம கோவிலுக்கு போறது? டைப்கிளாசுக்கு கூடப் போகாம அவ்வளவு பக்தி முத்திடிச்சோ?”

கோவிலுக்கு தானே போனேன்? இன்னிக்கி செல்விக்கு பொறந்த நாளாம். அவதான் கூப்பிட்டா. கோவிலுக்கு கூட போகக் கூடாதா?” 

வசுவின் முகத்தில் கிலேசமோ பேச்சில் தடுமாற்றமோ இல்லை!

வசு! கோவில்ல என் பிரண்டு யாரையும் பார்த்தியா?”

புருவம் சுருக்கி சங்கரை முறைத்தாள்.

உன் பிரண்டா? அவனுங்க மூஞ்சிக்கு கோவில் ஒரு கேடு! என்று நொடித்துக் கொண்டு உள்ளே போனாள்.

குமரேசன் குரல் தணிந்தது.சரி. விடு! அதான் சொல்றாளில்ல? அவளுக்கு எதுனா டீத்தண்ணி குடு. எனக்கெங்கடி குங்குமம்?”

சங்கருக்கு ஏதோ சரியில்லை என்ற உறுத்தல் மனதில் வளர ஆரம்பித்தது. சரி விசாரிப்போம் என்று எண்ணிக் கொண்டான்.

கருத்த பையனாமே? தமிழ்செல்வம்.. பாஸ்கர், மாரிமுத்து. எல்லோரிலும் கறுத்தவன் தமிழு தான். தமிழ்செல்வமும் மனோவும் ஒரே ரூமில் இருப்பவர்கள். நேரில் பார்த்து விசாரிக்கத் தான் வேணும். வந்து சாப்பிடுவதாய் சொல்லிவிட்டு மனோவின்  ரூமுக்கு சைக்கிளை  விட்டான். தெருமுக்கிலேயே மனோ நின்றிருந்தான்.

எங்கே செங்கர் புறப்பட்டது?” மனோ கேட்டான்.

மனோ! நான் சொல்வதை யாருக்கும் நீ சொல்லக் கூடாது என்ற பீடிகையுடன் வசுவை கோவிலில் அளகேசன் பார்த்ததை சொல்லி, தமிழ் மீது சந்தேகம் இருப்பதையும் தெரிவித்தான்.

எண்டே குருவாயூரப்பா! தமிழு அப்படியாப்பட்டவென் இல்லா. வசு கூட நல்ல பெண்ணு தான். ஏதோ கொழப்பம்.. எல்லாம் செரியாகும். பேடிக்கண்டா.. செரியாகும் என்றபடி சங்கரின் இருகைகளையும் இறுகப் பற்றிக் கொண்டான்.

மனோவின் அந்தத் தொடல் மிக்க ஆறுதலாயும் நம்பிக்கை அளிப்பதாயும் இருந்தது.

 வரேன் மனோ! யாருக்கும் சொல்ல வேண்டாம்

ஹ... என்று வாய்மேல் விரல்வைத்தபடி புன்னகைத்தான்.

சரி! இனி வசுவை மட்டும் ஒருமுறை கேட்டுவிட்டால் தெளிவாகிவிடும்.  
   
இரவு உணவுக்குப் பின் மொட்டைமாடியில் உலாவிக் கொண்டிருந்த வசுவை பிடித்துக் கொண்டான் சங்கர்.

ஏய் வசு! என்ன நடந்துகிட்டிருக்கு? யாரு அவன்?”

பாருண்ணா! என்னை ரொம்ப அவமானப்படுத்துறே. யாரோ ஏதும் சொல்லிட்டா உடனே சந்தேகப்படுவியா?”

சரி! சந்தேகப்படல்லே. கோயில்ல அப்போ என் பிரெண்டு யாரோ இருந்தான்னு அளகேசன் சொன்னாராமே? அவன் யாருன்னாவது சொல்லு?”

வசு அழ ஆரம்பித்தாள். முந்தானையை பந்தாய் வாயில் அடைத்த படி கீழே ஓடினாள். அறைக் கதவை மூடிக்கொண்டு படுக்கையில் விழுந்தாள். 

சங்கரை கடுமையாக அப்பா கோபித்துக் கொண்டு சத்தம் போடுவதும். அம்மாவும் அவரோடு சேர்ந்து கொண்டதும் வசுவின் காதில் விழுந்தது.

அடுத்த நாள் அதிகாலை சங்கரின் அம்மாவுக்குத் துணையாக அவனும் ஒரு நாள் பயணமாக நெய்வேலி வரை   போகவேண்டிவந்தது. தாய்மாமன் வீட்டுக் கல்யாணம். வசுவும்,குமரேசனும் போகவில்லை. அடுத்த நாள் காலை அவர்கள் திரும்பிய போது வாசலிலேயே குமரேசனும் அவருடைய நண்பர்கள் மூவரும் வாயிற்திண்ணையிலேயே அமர்ந்து மும்முரமாய் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

சங்கரின் அம்மா பரபரத்தாள். என்னங்க ஏதும் உங்களுக்கு உடம்புக்கு முடியலையா?” என்றாள், அவருடைய கலந்த தலையும், தூக்கம் இழந்து சிவந்த கண்களையும் பார்த்து.

அவளைப் பார்த்தவுடன் குமரேசன் தான் தலையில் மடேர்மடேரென ஓங்கி அடித்துக் கொண்டார். வசு ஓடிப் போய்ட்டாளேடீ!

சங்கர் பதறினான். என்னப்பா இது? இன்ஸ்டிட்யூட்ல விசாரிச்சீங்களா?”

ஆமாமுடா! நேத்திக்கு சாயங்காலம் ஏழுமணியானப்புறமும் அவ வீடு திரும்பல்லே.  போய் கேட்டப்போ இன்ஸ்டிட்யூட்ல அன்னைக்கு அவ வரவே இல்லேன்னுட்டாங்க. அவ ஸ்நேகிதி செல்வி  வீட்டுக்கு ஓடினேன். எனக்கு ஒண்ணும் தெரியாது அங்கிள்ன்னு கைவிரிச்சிடுச்சி.

அப்பா உடனே போலீசுக்கு போறதுக்கென்ன? ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆகியிருந்தா?”

முட்டாளே! கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையாடா? அளகேசன் சொன்னதை நம்ம விசாரிச்சப்பவே சுதாரிச்சிக்கிட்டா. அவ வேலையை  முடிச்சிகிட்டாடா ஓடுகாலி. இழுத்துக்கிட்டு போன நாயை எவன்னு கண்டுபிடிக்கோணும். உனக்காகத்தான் காத்திருக்கேன். உன் பிரண்டு எல்லோரையும் பிடி. அதுல எவனோ ஒருத்தன் தான். ஆளைப்பிடி.... அவனை அடக்கம் பண்ணீட்டு அந்த முண்டச்சி காலை ஓடிச்சி வீட்டிலேயே முடக்கிப் போடுறேன். மீண்டும் தலையில் அடித்துக் கொண்டார்.

சைக்கிளை எடுத்துக் கொண்டு முதலில் அண்ணாச்சி கடைக்குப் போனான். சங்கரின் வெளிறிப்போன முகம் பார்த்த அண்ணாச்சி கேட்டார் என்ன ஆச்சு சங்கரு!

அண்ணாச்சி! நம்ம பசங்க நேத்து இங்க வந்தாங்களா?”

இல்லியே சங்கரு! ஒருத்தரையும் காணோமின்னு நானே யோசிச்சிக்கிட்டிருந்தேன். நீயும் ஊரில இல்லே. மனோவும் ஊருக்குப் போய்யிட்டான். அதான் ஜமா கூடல்லியோன்னு நினைச்சுக்கிட்டேன்.

மனோ ஊருக்கு போயிட்டானா? ஏன்... ஏன்?”

பதறாத சங்கரு! நேத்துக் காலைல மனோ வந்திச்சு. அவன் ஆத்தாவுக்கு ஒடம்பு மோசமாயிடிச்சுன்னு தந்தி வந்ததாம். உடனே ஊருக்குப் போகணும் ஒரு நூறுரூபா குடுன்னு அவசரப்பட்டுச்சி. நீ ஊர்ல இருந்தா உன்கிட்ட வாங்கிட்டிருக்குமாம். நான்தான் அங்கஇங்க பெராய்ஞ்சி
பணம் குடுத்தேன். பாவம் நல்ல பிள்ளை மனோ

சங்கர் குழம்பினான். சரி! அண்ணாச்சி. அப்பால வரேன்

பதிலுக்கு காத்திராமல் அவன் சைக்கிள் பறந்தது. ஒவ்வொரு நண்பனையும் சென்று பார்த்தான். மொய்தீன், செல்வம், பன்னீரு, மாரிமுத்து,பாஸ்கர் எல்லோரும் வழக்கம் போல் தான் இருந்தனர். தமிழ் செல்வத்துக்கு சின்னம்மை வார்த்தது போலிருந்ததால், பல்லாவரத்தில் வசிக்கும் மாமா வீட்டுக்கு போயிருப்பதாய் சொன்னார்கள்.

சங்கருக்கு ஏதோ பொறிதட்டியது. தமிழுக்கு அம்மை போட்டிருக்கா? என்னடா சொல்றீங்க?”

ஆமாம் சங்கர்! முந்தாநாள் சாயங்காலம் பேக்டரியிலேயே வாந்தி எடுத்தான். உடம்பு நெருப்பாய்க் கொதிச்சது. கைகால் முகமெல்லாம் சிவந்து பொறிபொறியாய் கிளம்பியிருந்தது. பேக்டரி டாக்டர்தான் மீஸில்ஸ்ன்னு வீட்டுக்கு போகச் சொன்னார். நான்தான் பல்லாவரத்தில் கொண்டுவிட்டேன். இது தமிழுடன் வேலைபார்க்கும் பாஸ்கரின் வாக்குமூலம்.

டேய்! தமிழோட மாமா வீட்டில் நடந்ததைச் சொல்லுடா. என்று சிரித்தவாறே மாரிமுத்து பாஸ்கரைக் கேட்டான்.

தமிழோட மாமா பொண்ணு ஒண்ணு என்னா சீன் போட்டுதுன்ற? நம்ம தமிழை விழுந்துவிழுந்து கவனிக்குது. அக்கம்பக்கம் இருக்குற யாரும் லட்சியம் இல்ல அதுக்கு. நம்ம கருப்பாண்டிக்கு என்னா வெக்கங்கிறே? மீஸில்ஸ் முடிஞ்சாவுட்டு மிஸ்ஸஸ் தமிழ்செல்வம் ஆயிடும் போல இருக்கு. எல்லோரும் சிரித்தார்கள்.

மாமன் வீடு மச்சுவீடு என்று மொய்தீன் கட்டைக் குரலில் பாடினான்.

ஆச்சரியம். யாருக்குமே மனோ ஊருக்குப் போனது தெரியவில்லை. எல்லோருக்கும் மனோ மீது பாவமாக இருந்தது.

சங்கர் குழம்பிய படியே வீடு திரும்பினான். வீட்டினுள் அப்பாவும் அம்மாவும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பாவின் நண்பர்கள் போய் விட்டிருந்தனர்.

சங்கர் வாயைத் திறக்குமுன் ஷங்கரின் அம்மா ஒரு கடிதத்தை நீட்டினாள்.

சாமி மாடத்துல இந்த கடுதாசியை வச்சுட்டு போயிருக்குறாடா உன் தங்கச்சி!

சங்கர் அவசரமாய் அதைப் படித்தான்.

என் அன்புக்குரிய அப்பா அம்மாவிற்கு, உங்கள் மகள் வசு எழுதும் அன்பு மடல். இதை எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும். நானும் மனோவும் ஒரு வருடமாய்க் காதலித்து வருகிறோம். மனோ மிக நல்லவர். உங்களுக்கே தெரியும். ஆனாலும் ஜாதி,பாஷை பிரச்சினையால் எங்கள் திருமணத்தை நீங்கள் நடத்த மாட்டீர்கள். மேலும் அரசல்புரசலாய் எங்கள் காதல் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டதால் எங்களுக்கு வேறு வழியில்லை. இதைப் படிக்கும் போது, உங்கள் மானசீக ஆசிகளுடன் எங்கள் திருமணம் முடிந்திருக்கும். எங்களைத்  தேடாதீர்கள். அண்ணனைத் திட்டாதீர்கள். என்னையும் மனோவையும் மன்னித்துவிடு சங்கர் அண்ணா! நானே உங்களை பிறகு தொடர்பு கொள்கிறேன்... உங்கள் வசு.

அய்யய்யோ! என்னம்மா இது?”

விதிப்பா! நடப்பது நடக்கட்டும்.அம்மா உள்ளே போனாள்.

அப்பா ஒன்றும் சொல்லவில்லை.

ஆனாலும் அவர் முகத்தில் ஏதோ கவலைதீர்ந்த ஆசுவாசமும் அமைதியும் இருப்பதாய் தோன்றியது.

இப்போது என்னப்பா செய்யலாம்?”

மலர்த்திய இடது உள்ளங்கையை போகட்டும் என்பது போல் ஆலத்தி காட்டினார்.

மனோ நீயா? நீ கூடவா?’ சங்கருக்கு வேதனையாக இருந்தது.

மொட்டை மாடிக்குப் போனான்.

ஒரு இலை கூட அசையவில்லை.

எதிர்த்த வீட்டு சுவரில் ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது பட போஸ்டர் தெருவிளக்கு வெளிச்சத்தில் கண் சிமிட்டியது. இன்றே இப்படம் கடைசி என்ற இன்னொரு சிவப்புநிற ஒட்டு வாசகத்துடன்..

ஒரு ஊதேப்பு நிறம் மாறுகிறது என்று வாய்விட்டே ஒருமுறை சங்கர் சொல்லிக் கொண்டான்.

  









வியாழன், அக்டோபர் 20, 2011

ஜெ.மோ தளத்தில் 'நம் வழியிலேயே நாம்'

சில நாட்களுக்கு முன் ஜெய மோகன் அவர்கள் சொன்னதற்கிணங்க
' நம்ம படிகே நாவு ' என்னும் கன்னட சிறுகதையை தமிழாக்கம் செய்திருந்தேன் . அந்தக் கதையை எழுதியவர் பிரபல கன்னட எழுத்தாளர் விவேக் ஷெண்பெக்.

என் தமிழாக்கத்தை பாராட்டியும் , அதைத் தன் வலைத்தளத்திலும் பதிவிட்ட ஜெயமோகன் சாருக்கு என் அன்பும் நன்றியும்.



ஜே.மோ தளத்தில் வந்த கன்னட சிறுகதை தமிழாக்கத்தின் சுட்டியை கீழே தந்துள்ளேன்.


'நம் வழியிலேயே நாம் '

புதன், அக்டோபர் 12, 2011

தொழுவத்து மயில் 5


இதுவரை 1  2  3  4 

சுகிர்தத்தை வனரோஜாவுக்கு துணையாய் வைத்து விட்டு மேற்கொண்டு வைத்தியம் செய்வது பற்றி தீர்மானிக்க டாக்டர் நந்தகுமாரைப் பார்த்தார் கிருஸ்டி. வரதுவும் உடனிருந்தார்.

கிருஸ்டி சார்! நான் சொல்வதை உணர்ச்சிவசப்படாமல் கேளுங்கள் என்று பீடிகையுடன் டாக்டர் துவங்கினார்.

உணவுக் குழலுக்கு ஸ்டென்ட் வைத்து திரவ உணவாவது வயிற்றுக்குப் போகும் என்று தான் முயற்சி செய்தோம். ஆனால் புற்று மூர்க்கமாய் இரைப்பைக்கெல்லாம் கூட பரவி விட்டது சார். இனி...... மன்னியுங்கள். நான் நாட்கணக்கில் கூட உத்தரவாதம் தர இயலாது. மேலும் சிகிச்சை என்று அக்காவை அலைகழிக்காமல் அமைதியாய் அடங்க விடுவது தான் முறை. என்னை மன்னியுங்கள் சார்!

வரது குறுக்கிட்டார். டாக்டர்! எப்பாடேனும் பட்டு..

அவர் முடிப்பதற்குள் டாக்டர் மறுத்து தலையாட்டினார். சார்! நாம் முயற்சிகளெல்லாம் கடந்த நிலையில் இப்போ இருக்கிறோம்.. அக்காவுக்கு நினைவும் உயிரும் இருக்கும் வரை அவர்களுக்கு பழைய நல்ல தருணங்களை நினைவூட்டி அமைதியாய் வழியனுப்புவோம் கிருஸ்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

உங்க ஸ்டூடண்ட்டா அக்காவை எனக்குத் தெரியும். ஒரு டாக்டராக நெஞ்சுரமும் சகிப்பும் நிறைந்த நோயாளியாயும் இப்போது தெரிஞ்சுகிட்டேன். அவர்கள் முடிவை நானும் எப்படி எதிர்கொள்வேன் என்று தெரியல்லை சார்! ஆனாலும் நிதர்சனம் அதுதான் சார். ஐ ஆம் சாரி! வேணும்னா இங்கே திரும்பவும் அட்மிட் செய்துடுங்க. அக்கா இரண்டே நாட்கள் வீட்டுக்கு போகணும்னு மன்றாடின போது,அவர்கள் ஆசையை நிறைவேற்றவே அனுப்பி வைத்தேன். அக்கா இருக்கிறவரை இங்கிருந்தால் உங்களுக்கு தைரியமாய் இருக்குமென்றால். திரும்பவும் கூட்டிக்கிட்டு வந்திடுங்க ........

கிருஸ்டிக்கு ஏதும் சொல்லத் தோன்றவில்லை. அதீதமான அதிர்ச்சியும், ஒரு கணத்தில் அனைத்தும் இழந்த கையறுநிலையும் அவர் மனத்தை மரத்துப்போக அடித்திருந்தன. கண்களுக்குள் நிரந்தரமாய் தங்கிவிட்ட வனரோஜாவின் மதிவதனம் கூட ஜடமான அவர் மனதை தேற்றவியலாது அவர் உலகம் ஸ்தம்பித்துப் போனது. மௌனமாய் வீடு திரும்பினார்கள்.

வரது கிருஸ்டியின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டார். கிருஸ்டி! இந்த டாக்டர் கிடக்குறார்.. நம்ம ரோஜாவை இப்போதே சென்னைக்கு கூட்டிக்கிட்டு போகலாம். நடப்பது நடக்கட்டும். நம்ம முயற்சியை விட வேண்டாமடா!
கிருஸ்டி வெறுமே தலையை ஆட்டினார்.

அவர்களின் ஆட்டோ வீட்டு திரும்பும் போது இருட்டிவிட்டது. இருவரும் வீட்டில் நுழைவதற்கும், சுகிர்தம் பதட்டத்துடன் வெளியே ஓடிவருவதற்கும் சரியாய் இருந்தது.

என்னம்மா ஆச்சு?

அத்தை சமையல்கட்டுல மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க!

அய்யய்யோ! கிருஸ்டி ஒரு நிமிஷம் டாக்ஸி கூட்டிக்கிட்டு வந்துடறேன். வரது ஓடினார்.

சமையலறை வாசலில் கால்கள் மடிந்தநிலையில்  வனரோஜா விழுந்து கிடந்தாள். அவளை ஒரு பூமாலையைப் போல் கையில் ஏந்தி வந்தார் கிருஸ்டி.

மாமா! அத்தை என்னை கேரட்டை இந்த சீவியில் துருவிக் கொடுக்க சொன்னாங்க. காஸ்அடுப்பு  வரைக்கும் என்னைக் கைத்தாங்கலாய் கூட்டிக்கிட்டு போகச் சொன்னாங்க. பால் சீனியெல்லாம் நான் தான் ஒவ்வொண்ணா எடுத்துத் தந்தேன். அம்மாவை வேணும்னா கூப்புடறேன்னு சொன்னேன் மாமா. வேண்டாம்னுட்டாங்க. சமையல் மேடையிலேயே சாய்ஞ்சு கிட்டு கிண்டுனாங்க. ஆனா சிரிச்சுக்கிட்டே வாசனவருதாடி.. வாசன வருதாடின்னு கேட்டுகிட்டே இருந்தாங்க. கேஸை அணைச்சுட்டு கட்டிலுக்கு கூட்டிக்கிட்டு வந்தெனா? அப்படியே மூர்ச்சையா விழுந்துட்டாங்க. நானு எங்கம்மாவை கூப்பிட ஓடியாறேன்.. நீங்களும் வந்துட்டீங்க மூச்சுவிடாமல் படபடத்தாள் சுகிர்தம்.

சரியம்மா! நீ போ! ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போறேன்.

பயமா இருக்கு மாமா!

பயப்படாத கண்ணு. கர்த்தர் பாத்துக்குவாரம்மா.

மீண்டும் மருத்துவ மனையில் டாக்டரின் முயற்சிகள் வீணாயின. 

வனரோஜாவின் உடல் இல்லம் வந்து சேர்ந்தபோது இரவு மணி பதினொன்று. அவள் உடலை இன்னுமிரு உடல்கள் தாங்கி வந்தன. அமைதியாய் வனரோஜாவை வீட்டுக் கூடத்தில் கிடத்தினர்.

வாசலைப் பார்த்து கிளம்பிய வரதுவை கிருஸ்டி தடுத்தார். எங்கடா?

அக்கம்பக்கத்துல சொல்லிடுறேன்

வரதா! யாரையும் இந்த ராத்திரி வேளையில் தொந்தரவு செய்யாதே. நீ கூட வீட்டுக்கு கிளம்பிப் போ! எல்லாவற்றையும் காலையில் பார்த்துக்
கொள்ளலாம்.

நானும் போவதா? உன்னை தனியா விட்டுட்டா? என்னடா கிருஸ்டி இது?

தனியா விட்டா ஏதும் பண்ணிக்கிட்டு நானும் போயிடுவேன்னு பயப்படறயா? நான் ஏதும் செய்துக்க மாட்டேன். இன்னும் நான் இருபத்தி ஐஞ்சு வருஷமாவது உயிரோட இருக்கணுமடா. உயிரோட... என் ரோஜாவோட வாழ்ந்த ஒவ்வொரு நிமிஷத்தையும் எண்ணிஎண்ணி ஜீவிச்சிருக்கணும். கண்டிப்பா இருப்பேன். கவலைப் படாதே!

வேண்டாம்டா கிருஷ்டி.. உன்னைத் தனியே விடமாட்டேன்.. ப்ளீஸ்.. வரதுவின் கைகள் கிருஸ்டியை கும்பிட்டன.

முட்டாள்! நானும் போயிட மாட்டேன்... வரதா. என்னை நம்பு. எனக்கு நிறைய வேலை இன்னும் இருக்கு. ரோஜா நட்டு வைத்த செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விடணும். சாய்ஞ்சு சாய்ஞ்சு ஓடும் அவள் கையெழுத்து இந்த நோட்டு,டைரிகள் பூராவும் இருக்கு... அந்த வரிகளையெல்லாம் வருடி வருடி படிக்கணும்.. நெறைய வேலை இருக்குடா.. நெறைய...

வரதுவை கிருஸ்டி அணைத்துக் கொண்டார். குலுங்கி குலுங்கி குமைந்து குமைந்து தன் பாரத்தை நண்பன் தோளில் இறக்கியபடி நிமிர்ந்தார். 

போ! போ!! காலையில் ஆறுமணிக்கு வா!

 என்ன கிருஸ்டி இது! நட்பின் பதற்றம் மெலிந்து ஓய்ந்தது.

வரது ஏதும் சொல்லவில்லை. வனரோஜாவை பார்த்தபடி
அழுதார்.. "என்னை அண்ணா அண்ணான்னு வாயார கூப்பிடுவியே.. என் கல்மனசு இன்னமும் வெடிக்கலியே என்னப் பெத்த தாயாரே..
   
வரதா! போ அழாதே. இது எங்கள் கடைசி ராத்திரி. தைரியமாய் இருப்பேன். என் ரோஜாவுடன் இருக்க எனக்கென்னடா பயம்? எந்த இடையூறும் இல்லாமல், அவளுடைய குறுக்கீடு கூட இல்லாமல் இந்த இரவு அவள் முகத்தைப் பார்த்தபடி இருக்க விடு வரதா.... இந்த டைரியில் எல்லோர் விலாசம் போன் நம்பரெல்லாம் இருக்கு. வெளியூர் சொந்தங்களுக்கு தந்தி ஏதும் கொடு.. எல்லோரையும் உனக்குத் தெரியுமே. உள்ளூர் நண்பர்களுக்கு காலையில் சொல்லு. பிலிப்பை சர்ச்சுலையும் சொல்லிவிட ஏற்பாடு பண்ணு. இனி ஒவ்வொரு நிமிடமும் என் சொத்து. வரதா!"

தலை குனிந்தபடி வரது வெளியேறினார்.

வரதுவை அனுப்பி வைத்து விட்டு கிருஸ்டி வாசற்கதவை தாழிட்டார்.
கூடத்தின் மறுகோடியிலிருந்த விளக்கை விட்டுவிட்டு மற்ற விளக்குகளை அணைத்தார். வனரோஜாவின் அருகே அமர்ந்தார். மூக்கருகே கைவைத்து மூச்சு வருகிறதா என்று பார்த்தார்.

ரோஜா! என் ஆசையைப் பார்த்தாயா? உன் மூச்சு நின்றதாய் நான் ஏன் ஒப்புக் கொள்கிறேன்? எங்கும் வீசும் காற்றெல்லாம்  உன் மூச்சு தானே ரோஜா! இப்போது உன் முகம் பழைய சிரிப்போடு இருக்கிறது. இந்த சிரிப்பை மட்டும் தான் எனக்கு மிச்சம் வைத்து விட்டு போகிறாயா ரோஜா?”

வனரோஜாவை முதலில் பார்த்ததிலிருந்து தொடங்கி அலையலையாக நினைவுகள் தம்மைதாமே ஒழுங்கு படுத்திக் கொண்டு வரிசையாய் நெஞ்சில் குமிழிட்டன . அவர் கண்கள் வனரோஜாவின் முகத்தை விட்டு அகலவில்லை. 'இந்த இரவு... எண்ணப் புற்றுகளை எனைச் சுற்றி எழுப்பும் இரவு...'

காலத்துக்கு கிருஸ்டியைப்பற்றி என்ன கவலை? 
வழக்கம் போல் விடிந்தது.

ஒருவரொருவராய் சுற்றமும் நட்பும் அலறிக் கொண்டு வந்தனர். கிருஸ்டியின் கையைத் தொட்டார்கள்..  தோளை அணைத்தார்கள்..பாக்கியம் செய்த பூக்கள் மாலையாகி வனரோஜாவின் சரீரத்தை அலங்கரித்தன. கண்கள் ரோஜாவின் மீது நிலைத்திருக்க, ஏதும் பேசாமல் சமைந்து நின்றார் கிருஸ்டி.

வரதுவுக்கு கிருஷ்டியின் கல்யாணம் ஆன நாள் நினைவுக்கு வந்தது. அன்றும் இப்படித்தானே ஏதும் செய்வதறியாமல் உறைந்து நின்றான்..? கடவுளே!

பாதிரியார் வந்தார்.. பெட்டியொன்று வந்தது. திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தவராய் கிருஸ்டி சமயலறைக்கு ஓடினார். உள்ளிருந்து முதல்நாள் வனரோஜா செய்துவைத்த கேரட் அல்வாவை வாணலியோடு எடுத்து வந்து அவள் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு அள்ளிஅள்ளித் தின்றார்.

பாவி! பொணத்தை வச்சுக்கிட்டு தின்கிறியே கிருஸ்டி என்று வாணலியைப் பிடுங்க வந்த தெரேசாம்மாளை அடிபட்ட புலிபோல் பார்த்தார் கிருஸ்டி. என்றுமே அதிராத அவர்  குரல் அதிர்ந்தது.

"பொணம்னு சொல்லாதே அத்தே ! அவள் என் ரோஜா! எனக்காக இதை செய்து இருக்கா.. எனக்காக மட்டும்....

சட்டென அங்கே ஒரு நிசப்தம் கவிந்தது.

நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகள் ஆனபடி இருந்தது. கிருஸ்டியின் அருகில் அவரை கைலாகு கொடுத்து எழுப்பவந்த வரதுவுக்கு  அவர் முணுமுணுத்துக் கொண்டிருந்த தேம்பாவணி வரிகள் சன்னமாய்க் காதில் விழுந்தன. கிருஸ்டியின் முகத்தில் துக்கமில்லை. அவர் கண்களில் வேதனையோ ஈரமோ இல்லை.. எல்லாவற்றையும் பார்த்து ஓய்ந்து விட்ட கண்கள். பார்வை எங்கோ உள்ளூர திரும்பி, மேலுக்கு வெறும் கண்ணாடிசில்லுகளாய் மங்கி உறைந்த கண்கள்...

கிருஸ்டியின் உதடுகள் மட்டும் துடித்து முனகிக் கொண்டிருந்தது..

மருள்தரு வலியுறுவே! மருள்அறு சினவுருவே!
அருள்தரு தயையுருவே! அளவறு திருவுருவே!

வரதுவுக்கு அந்தப் பாடல் இனி ஓயுமென்று தோன்றவில்லை.

(முற்றும்)
  



ஞாயிறு, அக்டோபர் 09, 2011

தொழுவத்து மயில் 4



இதுவரை 1 2 3 

வாழ்க்கைநதி அவ்வப்போது பிரவாகமாய், சன்னமான நீர்க்கீற்றாய், வெறும் கானல் அலையும் மணல்வெளியாய், எப்படி எப்படியெல்லாம் உருமாறி நகர்கிறது? எங்கோ துவங்கி, கடலடைந்து கரிப்பை இயல்பாக்கிக்கொண்டு தன் சுயமிழந்து…..... இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இயற்கையின் விளையாட்டா? இல்லை... அர்த்தம் இருக்கிறது... வரும் வழிதோறும் புல்லுக்குக்கூட பொசிந்து, தாகம் தணித்து....

கிறிஸ்மசுக்கு இன்னும் பத்து நாட்களே இருந்தது. வனரோஜாவுக்கோ இரண்டு வாரமாய் கடும் ஜுரமடித்து இந்த இரண்டுநாட்களாய்த் தான் நடமாடுகிறாள். மெலிந்தும் போயிருந்தாள். சற்று உடம்பு சரியானவுடன் பரபரவென்று வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டாள். இதற்காக கிருஸ்டி அவளை கடிந்து கொள்ள வேண்டியதாயிற்று. பதிலுக்கு அவள் உதட்டை சுழித்து சிரித்த சிரிப்பு இருக்கிறதே....

கிருஸ்மஸ் முடிந்த கையோடு வடநாடு மற்றும் இமயமலை வரையில்  இருபது நாட்கள் சுற்றுலா செல்வதற்கு கிருஸ்டியும்,அவருடன் வேலைசெய்யும்  நண்பர்களும் முன்பே திட்டமிட்டிருந்தனர். இந்தமுறை ஆண்கள் மட்டுமே போய் வருவதென்றும், அடுத்தமுறை குடும்பத்துடன் செல்லலாம் என்றும் முடிவு செய்திருந்தனர். கிருஸ்டிக்கு ஏதும் சொல்ல இயலவில்லை. வனரோஜாவை விட்டு இருபது நாள் இருப்பதாவது?... ஆனாலும் வனரோஜா அவர் சென்று வரத்தான் வேண்டும் என்று தீர்மானமாய் சொல்லி விட்டாள். இந்த பத்துநாட்களில் தன் உடம்பு பூரண குணமாகிவிடும் என்றும், உதவிக்கு மேரியக்கா இருக்கவே இருக்கிறாள் என்றும் அவனை சமாதானம் செய்தாள்.

அன்று மாலை, பத்து பன்னிரண்டு பிள்ளைகள் கூடத்தில் கிருஸ்மஸ் கரோல் பாடல்களை பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். வனரோஜா நிமிர்ந்து அமர்ந்து சொல்லிக் கொடுப்பதைப் பார்த்த கிருஸ்டிக்கு சந்தோஷமாய் இருந்தது.

வனரோஜா உச்சஸ்தாயியில் ஒரு வரியைப் பாடத் துவங்கியபோது, பாதியில் அவள் குரல் தடுமாறி, ஒரு சீழ்க்கை சப்தமாக, ஒரு கன்றின் அலறலாக நடுங்கித் தடுமாறியது. தொண்டையை இருகைகளாலும் அழுந்த பிடிந்தபடி சாய்ந்து விட்டாள். கிருஸ்டி அவளை உடனே காது,மூக்கு,தொண்டை மருத்துவரிடம் அழைத்து சென்றார். பரிசோதனைகளுக்குப் பின்குரலை அதன் சக்தியை மீறி வருத்தியதால் ஏற்பட்ட அழற்சியென்றும்,ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்றும் சொல்லி மருந்து எழுதிக் கொடுத்தார்.
   
வனரோஜாவுக்கு பேசமுடியவில்லை. விழுங்குவதற்கு கஷ்டப் பட்டாள். டாக்டரோ ஒரு வாரம் அப்படித்தான் இருக்கும் பயப்பட ஒன்றுமில்லை என்று கிருஸ்டிக்கு சொன்னார். கிருஸ்மஸ் சமயத்தில் தான் அவளுடைய பழைய குரல் கேட்கத் தொடங்கியது. இன்னமும் சாப்பிடத்தான் சிரமப் பட்டாள். விழுங்குவதற்கு திரவ உணவு பரவாயில்லை என்று இருந்தது அவளுக்கு.

கிருஸ்டி அடுத்த நாள் சுற்றுலாவுக்கு புறப்படவேண்டும். தான் போகப் போவதில்லை என்று கிருஸ்டி சொன்னதை வனரோஜா ஏற்கவில்லை. தனக்கு குரல் சரியாகிவிட்டதாயும் அன்று காலை கூட மூன்று இட்டிலி சாப்பிட்டதாயும் சொன்னாள்.

அன்று மாலையே அவனுக்கு வேண்டிய பிரயாண ஏற்பாடுகள் செய்து விட்டாள் வனரோஜா. எதெது பெட்டியில் எங்கே இருக்கிறது என்றும் மூன்று முறை சொல்லியாகிவிட்டது. பார்க்கும் ஒவ்வொரு இடத்தையும் பற்றி தேதிவாரியாக எழுதி எடுத்து வர வேண்டும் என்று கிருஸ்டிக்கு கட்டளையும் இட்டாள். போட்டோ பிலிம் போட்ட கேமராவையும் எடுத்து வைத்தாள்.

இரவு கிருஸ்டிக்கு உறக்கம் பிடிக்கவில்லை. அருகில் மெலிதாய் மூச்சுவிட்டு தூங்கும் வனரோஜாவையே கண்கொட்டாமல் பார்த்தபடி சாய்ந்திருந்தார் கிருஸ்டி. அவருடைய மார்பின் மேல் போட்டிருந்த அவளுடைய வலது கரம் ஒருமுறை அசைந்தது. தன் உடம்பின் சிறு அசைவுகூட அவளை எழுப்பிவிடலாகாது என்று மெலிதாக மூச்சுவிட்டபடி இருந்த கிருஸ்டி தூங்க முயன்ற போது பொழுது விடிந்து விட்டிருந்தது.

 அந்த இருபது நாட்கள்... முடிவில்லாது நீண்டு கொண்டே செல்வதாய் இருந்தது கிருஸ்டிக்கு. அவளுக்கு மூன்று பெரிய கடிதங்கள் எழுதியிருந்தார். தான் பார்த்த இடங்கள், தங்கள் பிரிவு என்று விரிந்தன அந்தக் கடிதங்கள்.

ஒருவாறு ஊருக்கு வந்து சேர்ந்த கிருஸ்டிக்கு வனரோஜாவைப் பார்த்தவுடன் இதயமே பிரண்டு வாய்க்கு வந்தாற்போல் ஆகியது.  முன்னைவிட இன்னமும் இளைத்துக் காணப்பட்டாள்.

மேரி புலம்பினாள். என்னத்தை அண்ணே சொல்லுறது. கொஞ்சம் சாப்பிட்டாலும் ரோஜாவுக்கு வாயிலெடுக்குது. பத்து நாள் காப்பியை மட்டும் மூணு வேளைக்கும்  குடிச்சது. அப்புறமா அதையும் நிப்பாட்டிட்டு இந்த கலரை தம்ளர்ல ஊத்தி சொட்டுசொட்டா குடிக்குது என்று அருகிருந்த டொரீனோ குளிர்பான பாட்டிலைக் காட்டினாள்.

என்ன ரோஜா இது. டாக்டர் கிட்ட போனியா இல்லையாம்மா?” கிருஸ்டிக்கு குரல் நடுங்கியது.

நம்ம பார்த்த டாக்டரை இரண்டு தரம் பார்த்தேன். விழுங்க முடியல்லென்னு சொன்னேன். அவரும் பார்த்துட்டு, வேற மருந்து எழுதிக் கொடுத்தார் என்றாள்.

இன்னொரு மருத்துவரின் அறிவுரைபடி வரதுவும் கிருஸ்டியுமாய் வனரோஜாவை அழைத்துக் கொண்டு சென்னைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்கள்.

அவளை முற்றும் பரிசோதித்த டாக்டர்கள் வாய்வழியே குழாய் செலுத்தி எண்டோஸ்கோப்பி பரிசோதனையும்.பயாப்ஸியும் செய்தார்கள்.  கிருஸ்‌டியையும் வரதுவையும் உள்ளே அழைத்த மூத்த டாக்டர் சொன்னார்.

எப்படி கவனிக்காமல் விட்டீர்கள்? உணவுக்குழாயில் ஏற்பட்ட அடைப்பை கண்டுகொள்ளாமல் தொண்டைக்கு வைத்தியம் பார்த்திருக்கிறீர்கள். சாரி. அவர்களுக்கு உணவுக்குழாயில் கேன்சர் பரவியிருக்கிறது. ஆரம்பத்திலேயே கவனித்திருந்தால் கட்டுக்குள் கொண்டுவர முடிந்திருக்கும். ஏறக்குறைய முற்றிலுமாய் அடைபட்டுவிட்டது. இன்னமும் ரேடியம், கீமோதெரபி போன்றவற்றை மேற்கொண்டாலும் அவர்கள் பிழைப்பது கடினம்.

அய்யோ! என்ன சொல்கிறீர்கள் டாக்டர்?” கிருஸ்டி தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

சாரி! மிஸ்டர் கிருஸ்டிராஜ்.  இட் ஈஸ் டூ லேட். அதிகபட்சமாய் அவர்கள் இன்னமும் இரண்டு மாதங்கள் தான் உயிருடன் இருப்பார்கள். நான் சொன்ன வைத்தியங்கள் செய்து அவர்களை மொத்தமாய் உருக்குலைத்து  அவர்கள் உயிரை இன்னமும் ஓரிரு மாதங்கள் நீட்டிக்கலாம். உடனடியாய் ஸ்டென்ட் ஒன்றை பொறுத்தலாம் என்று நினைக்கிறேன்.

ஸ்டென்ட்டுன்னா என்ன டாக்டர்?” என்று வரது வினவ,

அது ஒரு ஜவ்வால் மூடிய ஸ்பிரிங் போல இருக்கும். அதை உணவுக் குழாயில் பொறுத்தினால் அடைப்பை விலக்கி ஆகாரம் வயிற்றுக்கு செல்ல வழியேற்படும். முயற்சிக்கலாம்
.
ஏதும் செய்யுங்கள் டாக்டர்.. கிருஸ்டி கையெடுத்து கும்பிட்டார்.

உங்கள் ஊருக்கு பக்கத்து டவுனிலேயே டாக்டர் நந்தகுமார் புற்றுநோய்ப் பிரிவில் மருத்துவம் பார்க்கிறார். உங்களுக்கு இவ்வளவு தொலைவில் தங்கி மருத்துவம் பார்ப்பது சிரமமென்றால் அவரிடம் காட்டுங்கள் . அவர் என் சிறந்த மாணவர்களில் ஒருவர்

சரி டாக்டர். மீண்டும் ஊருக்கு திரும்பினார்கள். சென்னை மருத்துவர் குறிப்பிட்ட டாக்டர் நந்தகுமாரை சந்தித்து சிகிச்சை ஆரம்பமாயிற்று. வனரோஜாவிடம் தொண்டைக்கான வைத்தியம் தான் என்று சொல்லப் பட்டது.

டாக்டர் நந்தகுமார் கிருஸ்டியிடம் படித்த பழைய மாணவராய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கிருஸ்டியிடம் இலவசமாய் டியூஷன் படித்ததாய் நன்றியோடு நினைவு கூர்ந்தார்.

வனரோஜாவுக்கு ஸ்டென்ட்டும் பொருத்தப்பட்டது. வனரோஜாவுக்கு கான்சர் பற்றி சொல்லவேண்டாம் என்றும் டாக்டரைக் கேட்டுக் கொண்டனர். அக்காவை முடிந்த வரையில் ஏமாற்றப் பார்க்கிறேன் என்று வேதனையுடன் சொல்லிப் போனார் டாக்டர்.

வனரோஜா கொஞ்சமாய் இட்லி சாப்பிட்டாள். ஆசை ஆசையாய் தண்ணீர் குடித்தாள்.

அடுத்த இரண்டு நாட்களும்  கொஞ்சம் ஆகாரம் சாப்பிட்டாள். வாய்வழியே மருந்தும் கொடுக்கப்பட்டது.

முகம் தெளிவாய் இருந்தது. அருகில் இருந்த கிருஷ்டியைக் கேட்டாள், ஏதாவது சாப்பிட்டீங்களா?”

ஏன்? இங்கேயே சமைச்சு போடப் போறியா?”

மாட்டேனா? என்ன வேணும் என் ராஜாவுக்கு?”

எனக்கா?  கேரட் அல்வா பண்ணிக் குடேன்....

சிரித்தார்.. ஆனாலும் கண்கள் காட்டிக் கொடுத்தன.

பண்ண மாட்டேனா என்ன?” என்னங்க இது குழந்தை மாதிரி....

மூன்றாம் நாள் படுக்கையில் சாய்ந்தபடி இருந்த வனரோஜாவை டாக்டர் நந்தகுமார் பரிசோதிக்க வந்தார்.

அக்கா! எப்படி இருக்கீங்க?”

நல்லா இருக்கேன் தம்பி! ஒரு விஷயம்.. எனக்கு கேன்சர்ன்னு உங்க சாருக்கு தெரியுமா?

உங்களுக்கு கேன்சர்ன்னு யாருக்கா சொன்னது. அதெல்லாம் ஒண்ணுமில்லை

எனக்கு எல்லாம் தெரியும். ஒரு மூணு நாள் என் வீட்டுலே இருக்கணும். அதுக்கு ஒரு வழி செய்யேன். இந்த அக்காவுக்காக.ப்ளீஸ்

அதெப்பிடிக்கா? உங்க உடம்பு இருக்குற நெலமைல...

இங்க படுத்திருக்கிறதை வீட்டுல படுத்திருக்க மாட்டேனா? இல்லே, இங்கே படுத்திருந்தா என்னை காப்பாத்திடுவீங்களா?”

நந்தகுமாருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. வாயடைத்துப் போனது அவருக்கு .

சரியக்கா. ஏற்பாடு பண்றேன்.

அன்று மாலையே கிருஷ்டியிடம் வனரோஜாவை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொன்னார். அக்காவுக்கு ஒரு இடமாறுதல் தேவை. மூன்று நாட்கள் வீட்டில் இருக்கட்டும். காலையும் மாலையும் நானே வந்து பார்க்கிறேன் சார்     

 கிருஸ்டிக்கும் வரதுவுக்கும் யதார்த்தம் முகத்தில் அறைந்தது. 

வீட்டுக்கு வந்த இரண்டாம் நாள். ரோஜா! ஏதும் பயமில்லை.. நான் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் வந்து விடுவேன். அமைதியாய் கொஞ்சம் தூங்கு. பக்கத்து வீட்டு சுகிர்தம் இங்கயே இருக்கும் . ஏதும் தேவைன்னா அதைக் கேளு. வரதனைப் பார்த்துவிட்டு ஓடிவந்து விடுகிறேன். சரியாம்மா. குனிந்து வனரோஜாவின் நெற்றியில் கிருஸ்டி முத்தமிட்டார். நிமிர்ந்தபோது கிருஸ்டியின் சட்டையை இறுகப் பற்றியிருந்தாள்.

என்னம்மா?

வனரோஜாவின் வேதனை நெருக்கிய முகத்திலும் சின்னப்புன்னகை  விரிந்தது.  என் கூடவே இருங்க.

உன் கூடவே இல்லாமே வேறெங்கம்மா இருப்பேன். ஒரே ஒரு மணி நேரம் தான் .. என் ராணியில்லையா நீ?

போடா கருப்பா!

அலுப்பு, ஆயாசம், இயலாமை, நேசம் எல்லாமுமாய் ஒலித்த வனரோஜாவின் தீனக்குரல்.....

வெகு நாளாயிற்று இந்த வார்த்தைகளைக் கேட்டு.. ஒரு நொடியில் அவள் கண்களில் ஜொலித்ததே அந்த பழைய மின்னல்...

கிருஷ்டிராஜுக்கு நம்பிக்கைத் துளிர்விட்டது.

என் நம்பிக்கை எல்லாமே நீதானே ரோஜா. நோயும் நொடியும் உன் முககாந்தியை ஏதும் செய்ய இயலவில்லையே ரோஜா ! வெப்பம் உருக்க முடிந்தது மெழுகுவர்த்தியைத் தானே? சுடரின் தெளிவும், ஜோதியின் அமைதியும் சாந்தி நல்கியபடிதானே இருக்கிறது.

வரது உன்னைக் கேட்டானே...இத்தனைவலியிலும் எப்படி உனக்கு சிரிக்க முடிகிறது என்று.... வயிற்றின் மேல் கைவைத்தபடி நீ என்ன சொன்னாய்? வலி இங்கதானே அண்ணா. என் வாயிலும் உதட்டிலும் இல்லையே என்றாயே... உனக்கு எப்படி சொல்லத் தோன்றிற்று ரோஜா... என் ரோஜா...   

செவ்வாய், அக்டோபர் 04, 2011

தொழுவத்து மயில் 3


இதுவரை (1)   (2)

வனரோஜா அந்த காலனியிலேயே முக்கியத்துவம் வாய்ந்த மனுஷியாய்   
மாறிபோனாள்.  கல்யாண ஜவுளி எடுக்கவும், நகை டிசைன் தேர்வு செய்யவும் வனரோஜாதான் உடன் செல்ல வேண்டும். ஐயப்ப பூஜைக்கு கோலம் இடவும், கிருஸ்‌மஸ் கோரோல் பயிற்றுவிக்கவும், வனரோஜா தான் முன் நின்றாள். அவ்வளவு ஏன்? கீரைக்காரி முதலில் வனரோஜா கைதொட்டு கீரை வாங்கிய பின் தான் 'கீர..கீரெய்' என்று குரலெடுத்து விற்கத் தொடங்குவாள்.

வனரோஜாவை தெருப்பிள்ளைகள் அக்கா அக்கா என்று சுற்றிவந்தன. அவர்களுக்கு கதைகள் சொல்வது, பாட்டுபோட்டி பேச்சுபோட்டிகளுக்கு அவர்களைத் தயார் செய்வது என்று அவளுக்கு நிறைய வேலை இருந்தது. ஊர்க் குழந்தைகளெல்லாம் தன் குழந்தைகளாய் ஆகிப் போனதாலோ என்னவோ, அவளுடைய தாய்மை அத்துடன் திருப்திபட்டு விட்டது. கிருஸ்டி வனரோஜா திருமணமாகி நாலு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்பது ஒரு குறையாய் அவர்களுடைய சுற்றத்துக்கு தோன்றத் தான் செய்தது. வனரோஜாவுக்கு இந்தக் கேள்வி வேதனை தந்தது.

துரை! நமக்கு பிள்ளை இல்லையே என்று உங்களுக்கு வருத்தம் உண்டு தானே?” ஒருநாள் இரவு தலையணை உறையை மாற்றியபடியே வனரோஜா கேட்டாள்.

சின்னத் தயக்கத்திற்கு பின் கிருஸ்டி சொன்னான்,  ரோஜா! நம்மிருவரின் அன்பையும் பாசத்தையும் இன்னொரு ஜீவனோடு பங்கு வைக்க வேண்டாம் என்பது கர்த்தரின் சித்தம் போல் இருக்கிறது. நானுக்கு, நீயெனக்கு. விடு அந்தப் பேச்சை.

வனரோஜா அவனை அணைத்துக் கொண்டாள். கருப்பா!

சரி! படும்மா! ஏனோ கிருஸ்டியின் குரலில் சொல்லவியலாத வேதனை தொனித்தது. இந்த வேதனையை என் வனரோஜா வாழ்நாள் முழுதும் தாங்கவியலுமா? போனமுறை அவளுக்கு குழந்தை பெற வாய்பில்லை என்று சென்னையில் பரிசோதித்த டாக்டரம்மா சொன்னாளே! அதை அவளிடம் 'எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று மறைத்தல்லவா நம்பிக்கை வார்த்தைகளை விதைத்தோம்?'

ஏய் கருப்பா! என்ன யோசனை ? கொஞ்சம் சிரிக்கக் கூடாதா ! இன்னைக்கு எங்கயோ ஒரு நாட்டுப்பாடல் வரி ரெண்டு பார்த்தேன். சொல்லவா?” அவனை திசை திருப்ப ஏதோ நாடகம்...

எதைப்பத்தி ரோஜா?”

எல்லாம் உங்க அழகான கலரு பத்தித்தான்!

சரி! சொல்லு

நாவப் பழத்தினிலே,
நல்காயாம் பூவினிலே
காக றெக்கையிலே
நல்கருப்பு எங்க மச்சான்.

உன்னை என்ன செய்யிறேன் பாரு! சிரித்தபடி அவளை அவன் துரத்த.... இரவு வெட்கப்படக் காத்திருந்தது.

அதற்கு பிறகு எப்போதும் பிள்ளையில்லையே என்று ஒருபோதும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. மற்றவர்கள் பேசும்போதும் ஒரு பெரும் தோரணையோடு சிரிப்பொன்றையே வனரோஜா பதிலாய்த் தந்தாள். மீண்டும் குறும்பும் பாட்டும் அவளிடத்தில் குடிபுகுந்தன..

ஹஹ்...'நல்கருப்பு எங்க மச்சான்'....  கிருஸ்டிராஜுக்கு சிரிப்பு பொங்கிவந்தது. எவ்வளவு குறும்பு?!. நாட்டுப்பாடல்களிலே தான் எத்தனை ஆர்வம் உனக்கு?. எவ்வளவு பாடல்கள்? எவ்வளவு விடுகதைகள்? என் ரோஜா! உனக்கு இன்று நாற்பத்தெட்டு வயது என்று யாரும் சொல்ல முடியுமா?
ஒரு குழந்தை போல் தானே உன் பேச்சும் உருவமும்... 
'கருப்பு' பற்றி இன்னொரு பாடல் கூட ஒருமுறை சொன்னாயே ரோஜா!
சட்டென வரிகள் மறந்துவிட்டதே? ரோஜா.. அம்மாடி ரோஜா!
அந்தக் கருப்பன் பாட்டு.... வேண்டாம்...இப்போது எழுப்ப வேண்டாம்...  காலை பார்த்துக் கொள்ளலாம்.


அன்றும் இன்றும் கிருஸ்டிக்கு ஒரே ஒரு நண்பன் வரதராஜன் தான். கிருஸ்டி மாதிரி வரதுவும் அதிகம் பேசமாட்டார்.  வரதுவின் மனைவி பத்மா வனரோஜாவுக்கு நல்லதோழியும் கூட. அன்று கிருஸ்டியின் பிறந்த நாள். கிருஸ்டிக்கு மிகவும் பிடித்த கேரட் அல்வா செய்திருந்தாள். வாழ்த்த வந்த வரதுவுக்கு அல்வாவின் ருசி தேவாம்ருதமாய் இருந்தது. வனரோஜாவின் சமையலுக்கு பரம ரசிகன் வரது.

அதெப்பிடி உனக்கு மட்டும் இப்படி ஒரு கைமணம் வனரோஜா?”

கைமணம் என்னண்ணா? மனசும் கண்ணும் சமைக்கிற வாணலியிலேயே இருந்தா தானா அல்வா ருசிக்குமண்ணா!

பத்மா இடைமறித்தாள். போ ரோஜா! நானும்தான் இதெல்லாம் செய்யுறேன், ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு மாதிரி!.... என்னங்க.! ஒண்ணும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?” என்று வரதுவின் தோளில் தட்டினாள் பத்மா.

எதையாவது சொல்லி, எப்போதோ கிடைக்கிற அல்வாவுக்காக தினமும் கிடைக்கிற மோர்சாதத்தை கெடுத்துக்குவானேன்! என்று கிருஸ்டி சொன்னபோது அனைவரும் சிரித்தார்கள்.

நல்ல நட்பு, நல்ல மனைவி, நல்ல ரசனை, நல்ல மனசு...... வேறென்ன வேண்டும்?

என் ப்ரிய ரோஜா! நீ என் வயிற்றுக்காய் சமைத்தாயா இல்லை என் ஆன்மாவை பசியாற்றுவதற்காகவா? எத்தனை நறுவீசு உன் செயல் அனைத்திலும்?... அரிசியை களைவதாகட்டும், வீடு பெருக்குவதாகட்டும்.... வீணையை லயித்து மீட்டும் ஒரு உன்னதக் கலைஞனின் கைவண்ணம் போலல்லவா இருக்கும்? எதிலும் ஒரு ஆர்வம், எதிலும் ஒரு ஈடுபாடு, எதிலும் ஒரு அர்ப்பணிப்பு உனக்கு!

உனக்கு நினைவிருக்கிறதா ரோஜா? முதன்முதலாய் இந்த வீட்டுக்கு மருமகளாய் நீ வந்த அன்று இதே கேரட் அல்வாவைத் தானே செய்தாய்? அப்பா எவ்வளவு ரசித்து உன்னைக் கொண்டாடினார்?

போன வாரம் உன்னை சும்மா விளையாட்டாகத்தானே அதை செய்து கொடு என்று கேட்டேன் ? அதை நினைவில் வைத்து இன்று கூட அதே கேரட் அல்வாவைத்தானே செய்து வைத்திருக்கிறாய்? ஒரு வாயாவது அதை நீ சாப்பிட்டுப் பார்த்தாயா ரோஜா? நன்றாகத்தானே இன்றும் செய்திருக்கிறாய் இல்லையா ?  

 (தொடரும்)