புதன், ஜூலை 27, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு-3


கேட்டலும் கவனித்தலும்
சீனப் பேரரசன் ட்சூ மஞ்சத்தில் சயனித்திருந்தான். மெல்ல அவன் கைகளை வருடியபடி, அவன் ராணி பேசத் துவங்கினாள்.

“அரசே! நம் மகனுக்கு இந்த வசந்தத்தின் துவக்கத்தில் பதினேழாம் பிராயம் முடிந்து பதினெட்டு தொடங்கிவிடும். வில் வித்தையிலோ, வாள் வீச்சிலோ அவன் நிபுணன் ஆகி வருகிறான் என்றும் நேற்று நீங்கள் தானே சொன்னீர்கள்?

“ஆம் ராணி. அதெற்கென்ன வந்தது?”

"நம் பிரதம தளபதியின் மரணத்திற்குப் பிறகு அந்தப் பதவியை இன்னமும் நாம் நிரப்பவில்லையே"...

"தகுந்த வீரனுக்காய் பார்த்து வருகிறேன். என் தேசத்தில் வீரர்களுக்கா பஞ்சம்?"

"உண்மை அரசே. அந்தப் பதவியில் பணிபுரிய டியூ மிக்க ஆவலாய் இருக்கிறான்

"என்ன? இளவரசனா?” அரசன் கண்கள் யோசனையில் இடுங்கின.
"என்ன யோசிக்கிறீர்கள்? போன படையெடுப்பில் அவன் தன் வீரத்தை பறைசாற்ற வில்லையா?"

"சேனாதிபதியின் பணியில் வீரம் மட்டும் போதாது கண்ணே!. அரசனின் பொறுப்புகளை விடக் கடினமானவை அந்தப் பதவியின் தகுதிகள்."

அவன் விருப்பப்படி பதவிகொடுப்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாதா?"

"நான் தீர்மானிக்க விரும்பவில்லை ராணி. நான் பாசம் மிகுந்த தகப்பன் மட்டுமன்று. தேசம் காக்கும் மன்னன் கூட.

"நீங்கள் இல்லையென்றால் டியூவுக்கு பதவி கொடுப்பதை யார் தீர்மானிப்பது?"

" என் குரு பான்க்கு.. மிங்கிலிக் காட்டில் வசிக்கும் என் குரு பான்க்கு"

"பின்னர் அதையாவது உடனே ஏற்பாடு செய்யுங்கள். என் மகன் ஆவல் மேலிட காத்திருக்கிறான். என் கண்மணியை ஏமாற்றாமல் படைத் தலைமையை அவனுக்கு அளியுங்கள்"

"பார்ப்போம்

++++

சிரம் நிலம் தொட குருவை பேரரசன் ட்சு வணங்கினான்.
"என்னைக் கடைத்தேற்றுங்கள் தேவனே!

"வா சக்ரவர்த்தி திருமகனே.. இந்தக் கிழவன் நினைவு கூட உனக்கு இருக்கிறதா? இந்த தகதகக்கும் சூரியன் யார்?"

"இந்தக் கிரீடத்தின் பாரம் பெரும் பாரமாகிவிட்டது குருவே. என்ன செய்வேன்.. இவன் என் ஒரே மகன் டியூ."

"நன்று நன்று. நான் செய்ய வேண்டியது ஏதும் உண்டா?"

"ஆம் பிரபு. இளவரசன் சேனாதிபதியாக ஆவலாயிருக்கிறான்.

"பின் என்ன? பதவியை தர உனக்கு என்ன தடை?”

"அதல்ல குருவே! இவனுக்கு அந்த பதவிக்கான தகுதி இருக்கிறதா என நீங்கள் தான் சோதித்து சொல்ல வேண்டும்

"நீதி மாறாத தன் சீடனை பெருமிதமாகப் பார்த்தார் குரு பான்க்கு.

"நல்லது. இவனை இங்கே விட்டுச் செல். சோதித்துச் சொல்கிறேன். நீ போய்  வா. இவன் நாடு திரும்ப நாளாகலாம்."

"தங்கள் சித்தம்.". அரசனின் ரதம் உருண்டு மறைந்தது.

அடுத்த நாள் காலை இளவரசனை அழைத்த குரு சொன்னார்,
இளைஞனே! நீ இப்போதே இந்தக் காட்டின் உட்பகுதிக்கு தனியாகச் செல். உன் உணவையும் நீயே தான் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். நீ செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். காட்டில் ஒலிக்கும் அத்தனை சப்தங்களையும் கவனமாய்க் கேட்டுவந்து எனக்கு எதையும் விடாமல் சொல்ல வேண்டும்"
.
"அப்படியே பிரபு!"  இளவரசன் காட்டுக்குள் சென்றான்.
 நாட்கள் சென்றன. பலவித சப்தங்களையும் கேட்டான். 
பின் ஒருநாள் குருவின் இருப்பிடம் திரும்பினான்.

"வா! இராஜகுமாரா! என்னென்ன சப்தம் கேட்டாய்?"

இளவரசன் விவரிக்க ஆரம்பித்தான்.

"சிங்கத்தின் கர்ச்சனை, புலிகளின் உறுமல்,யானைகளின் பிளிறல், நரிகளின் ஊளை, மரநாய்களின் சிறுகுறைப்பு, மான்களின் கனைப்பு, மயில்களின் அகவல், கிளிகளின் கீச்சிடுதல், குயில்களின் கூவல், காக்கைகளின் கரைதல்,"

"அப்புறம் ?"

"ஆந்தைகளின் அலறல்... பாம்புகளின் சீறல்"....

"அப்புறம்?"

"சி.. சில்வண்டுகளின் ரீங்காரம்."

"அவ்வளவு தானா?"

"காட்டினூடே வீசும் காற்றின் ஹூங்காரம். ஓடைகளின் சலசலப்பு
உருளும் சருகுகளின் மொடமொடப்பு."

"இன்னும்..... இன்னும்??"
...
"வேறொரு சப்தமும் கேட்டதாய்த் தெரியவில்லை குருவே
இளவரசனின் குரலில் சின்ன சலிப்பு ஒலித்ததோ ?

"சரி குழந்தாய் ! நாளை மீண்டும் காட்டின் உள்ளே செல். கேட்காத சப்தங்கள் இன்னமும் இருக்கின்றன. ஆழ்ந்து கேட்டு வா.  கத்தி போல் காதையும் தீட்டு. கண்டிப்பாய் கேட்கும்"

தளர்ந்த நடையுடன் சென்ற இளவரசனைப் பார்த்து சிரித்துக் கொண்டார்.
காட்டினுள் சென்ற இளவரசனுக்கு மீண்டும் மீண்டும் பழைய ஒலிகளே காதில் பாய்ந்தன.

"என்ன இது? குரலிழந்து போய் விட்டீர்களா சப்த தேவதைகளே?..
கேள்.. தீர்க்கமாய்க் கேள். ஆழ்ந்து ஆழ்ந்து உடம்பே காதாக, உற்றுக் கேள்.
கத்தி போல் காதையும் தீட்டு. கண்டிப்பாய் கேட்கும்...

ஆம்.. கேட்கும்... கேட்பேன்... கேட்பேன்...

கேட்டது.

இதுவரை அறிந்திராத ஞானம் நிரம்பி, தளும்பி வழிந்தது.

அமைதியாய் ஆசிரமத்தில் நுழைந்த இளவரசனைக் கண்டார் குரு 
அவன் நடையின் அமைதி, அவன் கண்களின் புதுஒளி.. 
குருவுக்கு தளும்புவது யாதெனப் புலப்பட்டது.

"இன்னும் என்ன கேட்டாய்?"

"கேட்காதனவற்றைக் கேட்டேன் குருவே!"
.
"ஆதவனின் கிரணங்கள் நிலத்தைச் 'விர்ரும் விர்ரும்' என சூடேற்றும் ஒலியதிர்வைத் துல்லியமாய்க் கேட்டேன்.
புல்லின் நுனி பனித்துளியை 'களுக்' என விழுங்கிய மிடற்றைக் கேட்டேன்.
காலையில் காட்டுமலர் விகசித்து மலர்ந்த போது  அதன் இதழ்கள் உரசிக் கொண்ட ஒலியை கேட்டேன்"

சரும மடலில் எழுத்தாணி கொண்டு குரு எழுத ஆரம்பித்தார்.
 நாட்டின் சேனாதிபதியை தக்க கவுரவத்துடன் வரவேற்குமாறு.....  

  
.இனி பதிவற்குல தாரகைகள் ...

இனி உலகம் நம் கையில் சென்னையை சேர்ந்த குணசேகரன் வண்ணமயமான வலைப்பதிவு. முகப்பிலேயே அழகான பாதங்களை கொலுசுடன் ஸிலைட்ஷோ காட்டுகிறார். எந்திரப்பறவையிலிருந்து பப்பாளியின் பயன்கள் வரை நல்ல பதிவுகள். இன்னமும் நிறைய எழுதுங்கள் குணசேகரன் !

கே.பி.ஜனா  சிறிய பதிவுகளாய் சில அழகான கவிதைகளையும் ஒரு பக்க கதைகளும் பதிவிட்டிருக்கிறார்.  .

முத்துச் சிதறல்  ஷார்ஜாவில்,வசிக்கும் மனோ ஸ்வாமினாதன் அவர்களின் வலைப்பூ. சினிமா விமரிசனம், சமையல் குறிப்புகள், கைவினை, சிறுகதை,மருத்துவக் குறிப்பு எனக் கலக்கும் சகலகலாவல்லி. எளிமையான நடை வசீகரிக்கின்றது.

கீதமஞ்சரி : ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கீதாவின் வலைப்பூ. 32 பதிவுகளே வெளியிட்டிருக்கும் இந்த புதிய பதிவருக்கு வானவில்லும் வலைச்சரமும்  வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றன. இவரின் சிறுகதைகள் ஆற்றொழுக்காய்
செல்கின்றன.

தீதும் நன்றும் பிறர் தர வாரா  மதுரையைச் சேர்ந்த சகோதரர் ரமணியின் ரம்மியமான வலைப்பூ . கவிதைகளில் இயல்பான ஆர்வமும் காட்டும் இவரின் எழுத்தில் கொஞ்சம் உபதேசம்‌ அரைஸ்பூன் கூட. சில ஆச்சரியமான வரிகள்  அசத்துகின்றன. இவரின் பின்னூட்டத்தை எதிர்பார்த்தபடி ஒரு கோஷ்டியே வலைபூவில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறது(நான் உட்பட). உங்களை உறிமுகம் செய்வதில் வானவில் பெருமைக் கொள்கிறது.

காச்‌யபன் நாக்பூரில் வசிக்கும் இந்த தோழர் செம்மலர், மற்றும் தீக்கதிர் பத்திரிகைகளில் பலகாலம் பணிபுரிந்தவர். இவரின் பதிவுகள் தகவல் களஞ்சியங்கள். பல நிகழ்வுகளை நுணுக்கமான விவரங்களுடன் எழுதும் இவரின் நினைவாற்றல் ஆச்சரியம் அளிப்பது. தயவுதாட்சண்ணியம் இல்லாமல் தன் கருத்தை சொல்லும் இவர் பதிவுகளை ஒரு முறை கண்டிப்பாய் பாருங்கள்.

ஹரணி பக்கங்கள்  தஞ்சை கரந்தையைச் சேர்ந்த ஹரணி அவர்களின் வலைப்பூ. அழகான நடையில் பல நோக்குகளிலும் இவரின் எழுத்துக்கள் ரசிக்க வைக்கின்றன.சாணக்ய நீதி ஸமுச்சயம் முதல் ஓலைச்சுவடியின் வகைகள் வரை பலவும் இவர் கைவண்ணத்தில். ஹரணி சார் ! நிறைய எழுதுங்கள். படிக்கக் காத்திருக்கிறோம். 


ஆஹா பக்கங்கள் . எம். அப்துல் காதர் அவர்களின் வலைப்பூ. நடைமுறை சம்பவங்களை எளிமையாய் நகைச்சுவையோடு சொல்லும் இவரின் எழுத்து.  எனக்கு பிடித்த பதிவர்களில் காதர் பாயும் ஒருவர்.


Picture: With thanks to GOOGLE IMAGES 

செவ்வாய், ஜூலை 26, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு -2


ஒரு கதை 
ஒரு காட்டுக்குள்ளே ஓடு ஒரு நதியின் கரையில், ஒரு ஆலமரம் இருந்திச்சாம். அந்த மரத்துல ஒரு குருவி கூடு கட்டிக்கிட்டு சந்தோஷமா திரிஞ்சுகிட்டிருந்ததாம். அப்பப்போ ஓய்வு எடுக்க அந்த மரத்துக்கு ஒரு பருந்தும் வந்து உட்காரும். அவையிரண்டும் ரொம்பவே சினேகமாயிடிச்சாம் .

அந்த மரத்துக்கு கொஞ்சம் பக்கத்துலேயே ஒரு முனிவரோட குடிசை இருந்தது. ஒரு நாள் முனிவர் வெளிய போயிருந்தப்போ திடீரென குடிசைக்குள்ள இருந்த விளக்கை பூனை தள்ளிவிட நெருப்பு பிடிச்சிக்கிட்டு குடிசை எரிய ஆரம்பிச்சது. எரியிற குடிசையைப் பார்த்த குருவி, தீயை அணைக்கணுமேன்னு பரபரத்தது. விர்ருன்னு பறந்து போய் நதியில முழுகி, குடிசைக்கு மேலாக வந்து, தன் இறக்கைகளை படபடன்னு உதறிச்சாம். அதுலேருந்து பத்து பன்னிரண்டு சொட்டுத்தண்ணி, ஏரியிற தீ மேல விழுந்தது. இப்படியா நதியில முழுகறதும், குடிசைமேல வந்து இறக்கையை உதறுவதுமாய் குருவி அலைஞ்சுகிட்டு இருந்தது.

இதையெல்லாம் பார்த்தபடி மரக்கிளையிலே மூக்கை தேச்சுக்கிட்டிருந்த பருந்து, குருவிய திட்டிச்சாம். “முட்டாளே! நீயே இத்தனூண்டு இருக்கே. உன் இறக்கையோ இன்னமும் சின்னது.. அது எவ்வளவு துளி தண்ணி கொள்ளும்? நீ எவ்வளவு தண்ணியை முங்கி எடுக்கிறது?எப்போ தீயை அணைக்கிறது? பேசாம இப்படி வந்து உக்காரு.. தீயை அணைக்கிறானாம் தீய.. “

குருவி மூச்சிரைக்க பதில் சொன்னதாம்,அண்ணா!  என்னோட சின்ன இறக்கைளை வச்சுக்கிட்டு தீயை அணைக்கமுடியாதுன்னு எனக்கும் தெரியும்.  ஆனாலும், நானிருக்கிற இடத்திலே நிகழும் பிரச்னையை பார்த்துகிட்டு என்னால சும்மா இருக்க இயலாது. நம்மால் ன்றதை செய்வது அல்லவா தர்மம்? அது மட்டுமில்லே! இந்தக் காட்டில் நம்மைப் போல் சிறியதும் பெரியதுமாய் ஆயிரக்கணக்காய் பறவைகள் இருக்கு. அவையெல்லாம் என் முயற்சியைப் பார்த்துஇந்தப் பொடியனே செய்யும் பொது நாமும் தீயணைக்க ஏதும் செய்தாலென்ன என்று உற்சாகமாகி சேர்ந்து முயன்றால் தீயை அணைக்கவும் கூடும். வாங்கண்ணெ !, வந்து ஒரு முங்கு முங்குங்கண்ணு கூப்பிட்டதாம்.  

மக்களே! மற்றவர்கள் வந்து நம்மை ஊக்கப்படுத்தணும்னு காத்திருக்காதீங்க. சுயஊக்கமே மேலானது. உங்களைப் பார்த்து பத்து பேருக்கு உற்சாகம் பிறக்கணும். இந்த சுயஊக்கத்திற்கு சின்னவன் பெரியவன் என்றோ, பதவியோ பொருட்டே இல்லைங்க..
இந்த வாழ்க்கை ரொம்பவே அழகானதுங்க. சரிங்களா?


ஒரு கவிதை 

பிரசாதம்

உள்ளங்கை குவித்து பெற்ற
உத்தரணி தீர்த்தம்
பருகுமுன்,
விரலிடுக்கில் வழிந்து
வாய்க்கு மிஞ்சாமல்
வாசமாய் நாசிக்கு மட்டும்.......
நினைவுக்கே எஞ்சிய
நம் காதலைப் போல.......

ஒரு ஜோக் 

ஞொய்யாஞ்சி ஒரு வினாவிடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
குவிஸ் மாஸ்டர் ஒரு பறவையின் கால்கள் மட்டும் இருந்த படத்தைக் காட்டி, அது என்ன பறவை என்று கண்டுபிடிக்க சொன்னார்.

ஞொய்யாஞ்சி பதில் தெரியாமல் ஞே என்று விழித்தார்.

குவிஸ் மாஸ்டர்: 'இது கூட தெரியலே! உன் பேரென்ன?'

ஞொய்யாஞ்சி: 'ஹூம் .. நீயே கண்டுபிடிச்சுக்கோ' என்றார் தன் கால்களை குவிஸ் மாஸ்டருக்கு காட்டியபடி.



 இன்று நான் ரசித்த பதிவர்கள் 


கோகுலத்தில் சூரியன் 

'சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!' என்று பேனர் கட்டி புன்னகை விற்கும் வெங்கட், சேலத்தை சேர்ந்தவர்.  கலகலப்பான இவரின் சின்னசின்ன பதிவுகள் இயல்பான நகைச்சுவை விருந்து.அண்மைய சில பதிவுகளைப் பார்த்தீர்களானால் ஒரு பத்து வயசு உங்களுக்கு குறையும். அதுக்கு நான் கேரண்டி. 




R கோபி   இந்த கும்பகோணத்து கோபியை அண்மையில் தான் பிடித்தேன். பரந்த ரசனை இவருக்கு. ஆர்.சூடாமணியின் கதைகள் பற்றிய பதிவினை ரசித்தேன். பேனா பற்றிய இவரின் தற்போதைய பதிவும் , விமலாதித்த மாமல்லன் கதை பற்றிய பதிவின் அலசலும் எழுத்தின் நறுவீசும் .. படித்து பாருங்கள்.


என் வார்த்தை.. என் குரல்.. என் முகம் 


'என் உணவு கனவு பானம் கவிதை' எனும் வருணனுக்கு சிக்கலின்றி கவிதை சொல்ல இயல்கிறது. சொல்சிக்கனமும் காட்சிப்படுத்துதலும் இயலாயிருக்கிறது இந்த இளைஞருக்கு.. வாழ்த்துக்கள். 


மனசு   தேவக்கோட்டையைச் சேர்ந்த செ.குமாரின் வலைப்பூ. மண்வாசம் மணக்கும் இவரின் கதைகள் பலவும் படித்ததுண்டு. கவனிக்கப் பட வேண்டிய பதிவர் 


கோவை to  டில்லி  கோவை மாநகரைச் சேர்ந்த ஆதி வெங்கட்டின் வலைப்பூ. எளிமையான தமிழில் சமையல் குறிப்பிலிருந்து, பயணம் வரை நன்கு தாளிக்கிறார்.  ஒரு குட்டி தேவதையின் தாயான இவர், கதைகளும், தன் நோக்கில் சம்பவங்களையும் நிறைய எழுதவேண்டும் என்பது என் ஆவல். இவரால் அது முடியும். 


இன்றைக்கு இவ்வளவுதாங்க. அதான் இன்னமும் ஐந்து நாளிருக்கே! 
சந்திப்போமா நாளை?

திங்கள், ஜூலை 25, 2011


அன்பின் வலைச் சொந்தங்களே!

அனைவருக்கும் என் வணக்கங்கள். சகோதரர் சீனாவின் உரிமையான அழைப்பை ஏற்று இந்த வாரம் வலைச்சரத்தின் ஆசிரியனாய் உங்கள் முன்னே நான்.

முதல் பதிவு, என் பதிவுகள் பற்றியதாய் இருக்க வேண்டியது மரபென்பதால் சற்று கூச்சத்துடன் சுயபேரிகை முழக்கத் துணிந்தேன் .

ஓராண்டுக்கு முன்பே பதிவுலகில் அடியெடுத்து வைத்தேன். எனது கவிதைகளையும், கதைகளையும் , இலக்கிய ரசனையையும் ரசிக்கும் எனது நண்பர் குழாம் கொடுத்த தூண்டுதலால் வானவில் மனிதன் எனும் வலைப்பூவை  தொடங்கலாயிற்று.

நான் வலைக்கு வந்த வேலையையே இன்னமும் துவக்கவில்லை என்றே தோன்றுகிறது. பதிவுலகம் எனக்கு பல நட்புகளையும் சொந்தங்களையும் வாரிக் கொடுத்திருக்கிறது என்பதை நான் செய்த பாக்கியமாய் உணர்கிறேன். பின்னூட்டங்களிலும், மின்னஞ்சலிலும், அலைபேசியிலும் தொடர்பு கொள்ளும்  இந்த அன்பு நெஞ்சங்களை வேறெப்படி கொள்வது? எதிர்பார்ப்புகள் இல்லாத இனிய உறவுகள்.

இனி எனது பதிவுகளில் சில....

1.கதைகள் 
1. வெளையாட்டு: ஊர் விட்டு நகரத்திற்கு முதன் முதலாய் வேலைக்குப் போகும் இளைஞன் எதிர்கொள்ளும் உணர்ச்சிப் போராட்டமும், சந்திக்கும் மனிதர்களும் ,மெல்ல புரிபடும் யதார்த்தங்களுமாய் ஒரு கதை.

2.வடு : பல வருடம் வேலை பார்த்த ஒரு அலுவலக இடமாற்றம் கிளர்த்தும் மன உணர்வுகளும் , எங்கோ உயிர்த்துக் கனன்று கொண்டிருந்த ஒரு காதலின் நெருடலும்.

3. பச்ச மொழகா :  ஒரு சிறிய ஹோட்டல் நடத்துபவரின் கதை

4.ஞாபகங்கள்: ஞாபகங்களை இழந்த ஒரு முதியவரும், அவரைச்‌ சுற்றியுள்ளவர்களுக்கு அவரின் நிலை ஏற்ப்படுத்தும் அதிர்வுகளும்..  ஒரு ஆழமான நட்பின் பின்புலத்தில்....... 


II நிகழ்ந்ததும் நெகிழ்ந்ததும்

என் வாழ்வின் ரசமான தருணங்களையும், சில நிகழ்வுகளின் தாக்கங்களையும்  வெளிப்படுத்திய பதிவுகள் சில ...


 ஒரு சிறுவனாய் அம்மாவிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு ஓடியதும், அந்த அசாதாரணமான சூழலை என் அம்மா எதிர்கொண்ட விதமும் ...


உடன் படித்த பள்ளித் தோழியைக் கடித்த வைபவம்! பின்னர் அவளை சந்தித்த சூழலில் நினைவுறுத்தப் பட்ட இந்த நிகழ்வை உள்ளதுஉள்ளபடி விவரித்த பதிவு.


ஒரு தொடர்பதிவுக்காக பெயர்க்காரணத்தை நகைச்சுவையாய் சொன்ன பதிவு.


வாயார தமிழில் பேச முடியாத ஒரு சூழலை கற்பனை செய்து பாருங்கள். எனக்கு அப்படி ஒரு நிலை வந்தபோது நான் ஏங்கிய ஏக்கமும், செய்த காரியங்களும்.  


கிராமத்து பள்ளிச் சிறுவர்கள் பலரை காரில் அடைத்துக் கொண்டு பயணம் போன ஒரு நிகழ்வின் நெகிழ்வு...


ஹைதராபாத்தில் என் வீட்டில் களவு போனது. அந்த தருணத்து நிகழ்வுகள்.


III ஆன்மீகம்


வெண்ணைத் திருடிய மாயக் கண்ணனுக்கும் ஒரு வெள்ளிமணிக்கும் நடந்த ஒரு உடன்படிக்கை பற்றிய கதை


திருப்புகழ் தந்த அருணகிரியாரின் வாழ்வில் சில சம்பவங்கள் .



சனிபகவானுக்கும் ஐயப்பஸ்வாமிக்கும் நடந்த உரையாடல். சபரிமலையில் மகரஜோதியின் போது நிகழ்ந்த துயர சம்பவம் நினைவுறுத்திய வரலாறு.


 IV நகைச்சுவை 


 வரமும் கொடுத்து வம்பும் செய்த பிள்ளையார் பற்றின நகைச்சுவை


ஒரு யானைப் பற்றின நகைச்சுவை.. பின்னூட்ட கும்மியால் மிகவும் பிரபலமானது. நண்பர்கள் ஆர்.வீ.எஸ் மற்றும் பத்மநாபனுடன் அடித்த கும்மியை  அவ்வப்போது பதிவர்கள் பலர் நினைவு கூர்வதுண்டு.  இந்தப் பின்னூட்டங்களை  வைத்தே ஆர்.வீ.எஸ் ஒரு பதிவும் இட்டு விளையாடியது நினைவிலாடுகிறது. 


ஒரு காதல் ஜோடியின் கடுமையான ஊடலில் நான் உள்ளம் கொதித்த நிகழ்வு.



சக பதிவர்களைப் பற்றி கிசுகிசு எழுதிப் போட்டு அடித்த கும்மாளம்.


மேலும் சிலரை வம்புக்கிழுத்தது.


ஏன் நாங்களெல்லாம் சமையல் குறிப்பு எழுத மாட்டோமா என்று நகைச்சுவையுடன் கணவர்களை வறுத்த குறிப்பு.


 V இலக்கியம் 

1.மருந்தோ மருந்து    திரிகடுகம் பற்றின பதிவு.

2.கனாக் கண்டேனடி தோழி : சில இலக்கிய கனவு சங்கப் பாடல்கள் அறிமுகம். 

3.லொள்ளப் பாரு எகத்தாளத்தப் பாரு:  முள்ளு குத்தினதுக்கெல்லாம் பாட்டுங்க!

4.கம்பன் ஏமாந்தான் :  கம்பனும் ஔவையும் மோதிக்கொண்ட பாடல் சர்ச்சை 

VI  வாழ்வியல்.




VI கவிதைப் பரணிலிருந்து









பதிவு நீண்டு விட்டதோ.? மேற்கண்ட பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் மேலும் மெருகூட்டி யிருப்பதாய் உணர்கிறேன். அவற்றையும் ,  அந்த விவாதங்களையும் சற்று பாருங்கள்.

இனி சுய புராணம் இருக்காது. ஒரு வாரம் உங்களோடு... சந்திப்போம் சொந்தங்களே!








     

ஞாயிறு, ஜூலை 24, 2011

பொறுப்பு




சாலையில் பரவிக்கிடக்குது
               எண்ணையோ டீசலோ....
முற்றுமாய் உறிஞ்சப் படாமல்
               மினுமினுக்கிறது.

இரவில் ஓரங்கட்டிய ஏதோவோர் லாரியின்
                     விடாய்ச் சிந்தல்.
ரோட்டோர டீக்கடைக்காரன் இதைப்
               பார்த்தானோ தெரியவில்லை.

இங்கிருந்து பார்க்கையில் ,எண்ணைப் பரவல்
                       இலங்கையின் வரைபடம் போல்

சாலையின் வாகில் பார்த்திருந்தேனானால்
                ஒருபக்கம் பிதுங்கிய பூதகியின் முலைபோல்
எனக்கு தோன்றியிருக்கக் கூடும்.

உங்களுக்கு மலைச் சிகரமாயோ
                     எருமையின் குதமாயோ தோன்றியிருக்கலாம்.

எல்லாம் அவரவர் பார்வையில்....

சாம்பல் சாலையில் கறுப்புத் தேமலாய்
     இந்த எண்ணை ஒழுக்கு யாரைப் பலிவாங்கும்?

அதன்மேல் விரையும் எந்த இருசக்கர வாகனமோ கவிழலாம்.

வேகத்தில் விருப்பு கொண்ட விடலையோ

முன்னிரு குழந்தை, பின்னே பெரும் மனைவி
     எனக் கடக்கும் சம்சாரியோ விழுந்து அடிபடக் கூடும்.

சிராய்ப்பாயோ, ஏன் இறப்பாயோ கூட முடியலாம்.

எல்லாம் வேகத்துக்கு தக்கபடி ...

இதுவரை அங்கு யாரும் கடக்கவில்லை..

எனக்கும்

காத்திருந்த பேருந்து வந்து விட்டது.



(படத்திற்கு நன்றி-Google Images)

ஞாயிறு, ஜூலை 10, 2011

கவிதைப் பால்


மனசொரு மடி
காராம்பசு மடி

கட்டாயங்கள் அற்ற பால்பசு.
கட்டுத்தறி இன்றி மேயும்பசு.

விரைத்த அதன் காம்புகளில்
கறக்க வேணும் கவிதைகள்.

நீரடித்து நீவிவிட்டு
நிமிட்டினால் மட்டுமே
பொழிந்திடாது பால்.

சிக்கினமுடிச்சை சுரக்கத் தொடின்
எக்கிக் கொள்ளும் பெருமடியை....

கற்பனைசுக கன்றுக்குட்டிக்கு
காலமழியப் பாலூட்டி
காலியாகும் மடி பலநேரம்.

வக்கிரப் பாம்புகள் வாய்வைத்து
வறண்டுபோக உறிஞ்சிய நேரம்
வாடிய காம்புகள் செயல்மறந்து.

ஏதோவொரு தருணம்
வாகாய் வாய்க்கும்.

நுரைத்து நுரைத்து
பொழிந்துவிடும்
பாத்திரம் வழியவழிய ..

புதன், ஜூலை 06, 2011

மருந்தோ மருந்து




பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திரிகடுகம். இந்த நீதிநூல் நல்லாதானார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். சுக்கு,மிளகு,திப்பிலி  எனும் மூன்று மருந்துவ குணமுடைய பொருட்களே  திரிகடுகம் ஆகும். இந்த மூன்று மருந்துப் பொருட்களும் டல்நலம் பேணுவது போல், திரிகடுகத்தின் ஒவ்வொரு செய்யுளும் இயம்பும் மூன்று கருத்துக்கள் மனநலம் காக்கும் மருந்தாய் மிளிர்கிறது. ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்களும் ஒரு மையக் கருத்தை உணர்த்துவதாய் நேர்த்தியாய் புனையப் பட்டிருக்கும்.


ஒரு ஆச்சரியமான செய்தி என்னவென்றால், தொன்மையான

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி 

ஆகிய மருந்துவப் பெயருடன் மூன்று நீதிநூல்கள் உள்ளன. இதனால் 

அன்றைய சமுதாயத்தில் இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், 

சித்தமருத்துவம் ஆகியவை பரவலாக விளங்கியிருந்தது தெளிவாகிறது.

கணவன் மனைவி உறவுநலம், அருளுடைமை, புலால் மறுத்தல், 

மெய்யுணர்தல் போன்ற பல வாழ்க்கை நலன்களை பேசும் இந்தநூல் நூறு 

வெண்பாக்களைக் கொண்டது. அவற்றில் சில பாடல்களை விவாதிப்பதே 

இந்தப் பதிவின் நோக்கம். அங்குமிங்குமாய் சில பாடல்களை 

தேர்ந்தெடுத்து தந்துள்ளேன்.


பாடல் 1

கல்லார்க்  கினனாய் ஒழுகலும், காழ்கொண்ட
இல்லாளைக் கோலாற் புடைத்தலும் - இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும்
அறியாமை  யான்வருங் கேடு.


விளக்கம்

கல்வியறிவு இல்லாதவருடன் உறவு கொண்டு நடப்பதும்,
மனதில் திண்மையுடனான அன்புமிகுந்த மனைவியை அடித்தலும்,
சிற்றறிவுள்ள மதியீனரை தம் இல்லத்துள் சேர்த்தலும்
ஆகிய இம்மூன்றும்..
தம்முடைய அறியாமையால் விளையும் கேடுகளாகும்.

பாடல் 2

பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன்வேறு கூறின் பொறையும் - அறவினையைக்
காராண்மை போல ஒழுகுதலும், - இம்மூன்றும்
ஊராண்மை என்னுஞ் செருக்கு.

விளக்கம் 

ஏனையோர் தன்னை நயந்து புகழும் போது நாணத்துடன் கூச்சம் கொள்ளுவதும்,
தம்மை விரும்பாதவர் தகுதியை தாழ்த்தி வேறுபட கூறும் நேரம் பொறுமை காத்தலும்,
மேகத்தின் ஆளுமையேபோல் பலன் எதிர்பாராது பிறர்க்கு உதவுதலும்,
ஆகிய இம்மூன்றும்
ஒருவருக்கு ஊர் வியக்கும் ஆண்மையாகிய செல்வமாகும்.

பாடல் 3

உண்பொழுது நீராடி யுண்டலும், என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலும் - தோல்வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை, - இம்மூன்றும்
தூஉயம் என்பார் தொழில்.

விளக்கம்

உண்பதற்குரிய நேரம் வருங்கால், குளித்த பின்னரே உணவருந்துதலும்
எவ்வளவு பெரும்பயன் கிடைப்பதாயினும்,ஒருபக்கமாய் சார்ந்து
பொய்சாட்சி  சொல்லாமல் விலகுதலும்,
உணவின்றி வாடி, உடல்அழியும் நிலை வந்தாலும், தாம் கொண்ட நற்குணங்களை நீக்காது நிற்றலும்
ஆகிய இவை மூன்றும்
தூயவர் வாழ்க்கை முறையாகும்.

பாடல் 4

பெண்விழைந்து பின்செலினும், தன்செலவிற் குன்றாமை;
கண்விழைந்து கையுறினுங், காதல் பொருட்கின்மை;
மண்விழைந்து வாழ்நாண் மதியாமை; - இம்மூன்றும்
நுண்விழைந்த நூலவர் நோக்கு.

விளக்கம்

ஒரு பெண் தானேவிரும்பி பின்வந்தபோதும், அவளைச் சேராது தன்னடத்தை குன்றாமையும்,
தன் இடம்தேடிவந்து கைப்பட்டபோதும், அடுத்தவர் பொருளின் மேல் ஆசைக்கொள்ளாமையும்,
மண்ணாசை கொண்டு வாழும்காலத்தை உயர்வென்று மதியாத மனவுறுதியும்
ஆகிய இவை மூன்றும்  
நுட்பமாய் நூல்களை ஆராய்ந்து தெளிந்தோரின் கருத்தாகும்.