புதன், ஜூன் 22, 2011

வாழச் சொன்னால் வாழ்கிறேன் !


படித்து, மனதில் பதிந்த சில முன்னேற்ற மொழிகளை, சொல்ல விழைகிறேன்.. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வலையகம்......


போகும் பாதை மிக அழகாய் இருக்குமெனின் அது எங்கே செல்கின்றது என்பதறிந்தபின்  பயணம்  தொடருங்கள்.
ஆனால் சேருமிடம் மிக ரம்மியமானதெனின், பாதை எப்படி இருக்கின்றெதென யோசிக்காதீர்கள் .


கவலைகளை தலையணையாக்கிக்கொண்டு தூங்கச் செல்லாதீர்கள்...
நாளை விடியும்போது வெற்றிபெற மற்றுமோர் வாய்ப்பு மலரும் என்ற நம்பிக்கையின் டியில் தலைசாய்த்து உறங்குங்கள் ஒரு குழந்தைபோல
.

நல்ல பாதைகள் நல்ல ஓட்டுனர்களை உருவாக்குவதில்லை.
அமைதியான கடல் சிறந்த மாலுமிகளை உருவாக்குவதில்லை.
சுடப்படாத பொன் நகைகளாய் ஆவதில்லை
பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை மனிதர்களைப் பண்படுத்துவதில்லை


உலகில் உணவில்லாமல் வாடுபவர்களைவிட அன்புசெலுத்தப்படாமல் வாடுபவர்களே அதிகம். பாராட்டவும், தட்டிக்கொடுக்கவும் தயங்காதீர்கள். சின்ன புன்னகையும், ஆமோதிக்கும் தலையாட்டலும், கவனிக்கப் படுகிறோம் என்ற உணர்வும்.... வாழ்க்கைக்கு புதிய அர்த்தங்களை ஏற்படுத்த வல்லவை.


உங்களுடைய அனுமதியிலாமல் யாருடைய வார்த்தைகளும் உங்களைப் புண்படுத்த முடியாது. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசித்து வாழ்வீர்களேயானால், உங்கள் வாழ்க்கையை மற்றவர்கள் தான் வாழ்கிறார்கள்... நீங்களல்ல.


வாழ்க்கையின் சவால்கள் மூன்று வகைப்பட்டவை. சுலபமானவை, கடினமானவை மற்றும் எதிர்கொள்ள இயலாதவை.

-சுலபமான சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு வாழ்க்கை பிரச்னைகளின்றி அமையும். ஆனால் சலிப்பானதாக இருக்கும்.

- கடினமான சவால்களோடு மோதுகிறவர்களுக்கு வாழ்க்கை சற்று ஏறுமாறாக இருக்கலாம் .ஆனாலும் மனநிறைவைத் தருகின்ற வாழ்வாய் அமையும்.

- எதிர்கொள்ளவே இயலாது எனும்படியான சவால்களை துணிந்து ஏற்பவர்கள் வாழ்வோ, அவர்கள் வாழ்ந்து முடிந்த பின்னும், ஊக்கமூட்டும் கலங்கரை விளக்காக அனைவர் நினைவிலும் நின்று வழிநடத்தும்.நல்லதோர் உறவு கரும்பினைப்போல..
கரும்பை முறுக்கினாலும்,நசுக்கினாலும், கசக்கினாலும் பிழிந்தாலும் வெளிப்படுவது அதன் சுவையான சாறு ஒன்றே..


உனது இன்று உனது நேற்றைப் போல இருந்தால் ,உனது நாளையோ உனது இன்று போலல்லாவா இருக்கும்?
செய்து வருவதையே தொடர்வாயானால், கிடைத்து வந்தது மட்டுமே தான் கிட்டும்.இதுவரை இல்லாத ஒன்றை பெறவேண்டுமென்றால், இதுவரை செய்யாத ஒன்றை செய்யவேண்டும்.. சரி தானே?

உண்மையான் அன்பு என்பது மற்றவரை அவரது நிறைகுறைகளோடு ஏற்றுக் கொள்வதுதான்.
பிறரை வெறுப்பது என்பது, நாம் விஷம் குடித்தபடி, பிறர் சாவதை எதிர்பார்ப்பது போல தான்.

வாழ்க்கையின் வினோதமான ஒரு விஷயம் என்னவென்றால் , “சிறந்ததைத் தவிர மற்றவற்றை நீங்கள் பெற தயாரில்லை எனும் போது, பெரும்பாலும் சிறந்ததே உங்களை அடைகிறது என்பதுதான்.


இருட்டு என்பது வெளிச்சத்திற்கு எதிர்மறையானது அல்ல. அது வெளிச்சம் இல்லாததோர் நிலையே.
பிரச்னை என்பது. தீர்வு இல்லாத நிலையன்று.. செயல்படுத்தும் யோசனை தோன்றாத நிலை தான்

ஒரு அழகான உறவு, எவ்வளவு நன்றாக ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது அல்ல. தவறாய்ப் புரிந்து கொள்வதை எவ்வாறு தவிர்க்கிறோம் என்பதைப் பொறுத்தது.


வெற்றி என்பது ஒரு கரடியுடன் சண்டைப் போடுவது போன்றது.
நீங்கள் ஓய்ந்து விட்டதால் சண்டையிலிருந்து விலகமுடியாது.
கரடி ய்ந்தபின்னரே உங்களால் விலகமுடியும்.


மன்னிப்பு கோருவதால் நீங்கள் தவறு செய்தீர்கள் என்றோ, மற்றவர் சரியென்றும் அர்த்தமல்ல. உங்கள் சுயகௌரவத்தை விடவும்,அந்த உறவை மேலானதாக நீங்கள் மதிப்பதாகத்தான் அர்த்தம்.

37 comments:

meenakshi சொன்னது…

நீங்கள் எழுதி அசத்தறது போறாதுன்னு, நீங்கள் படித்து அசந்ததையும் போட்டு அசத்தறீங்க. எல்லாமே மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டியவைகள்தான். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

//ஒரு அழகான உறவு, எவ்வளவு நன்றாக ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது அல்ல. தவறாய்ப் புரிந்து கொள்வதை எவ்வாறு தவிர்க்கிறோம் என்பதைப் பொறுத்தது.// முற்றிலும் உண்மை.

பத்மநாபன் சொன்னது…

புடம் போட்ட பொன் மொழிகளாக இருக்கிறதே.. ஒவ்வொன்றாக நின்று நிதானமாக படிக்க வைக்கிறது.. தேர்வுகள் அசத்தல்....

மோகன்ஜி சொன்னது…

வாங்க மீனாக்ஷி மேடம்! இன்றும் ஒரு கதையைப் போட எண்ணித்தான் அமர்ந்தேன். ஆனாலும் அடுத்தடுத்து கதைகள் எதற்கு என்று என் நினைவிலாடும் சில கருத்துக்களை தமிழ்ப் படுத்தினேன்.. படிப்பவர்களையும் சேர்த்து படுத்துகிறேனோ?!

இவ்வாறான பொன்மொழிகளும், சின்னசின்ன மேற்கோள் கதைகளும் என்றும் அலுப்புதட்டுவதே இல்லை.

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்ஜி! மிக்க நன்றி! இப்போதுதான் பார்த்தேன். நான் வலைக்கு வந்து ஒரு வருடமாக ஒரு வாரம் இருக்கிறது. அது போல் நூறாம் பதிவை எட்ட இன்னமும் நான்கு பதிவுகள் போட வேண்டும். இந்த ஒரு வாரத்தில் நான்கைப் போட்டால் ஒரு கணக்காகத்தான் இருக்கும்.. ஒண்ணு ரெண்டு குறைந்தால் ஆர்.வீ.எஸ் பதிவில் கணக்கு காட்டிவிடலாம் என்று இருக்கிறேன்..

அம்மம்மா காலை சுத்தி ஆணி வந்து பாடும்.
பதிவுபோட வலைக்கு வந்தா தூக்கம் கண்ணை மூடும்.
போராடி.. போராடி.. டைப்படிக்கக் கூடும்.
பின்னூட்டம் காணாமல் மனசு கொஞ்சம் வாடும்.

இது என்ன பாட்டு கண்டுபிடிங்க பாஸ். பாடினது சுசீலாம்மா

அப்பாதுரை சொன்னது…

பதிவை விடப் பாட்டு பலே ஜோர் மோகன்ஜி! ஜெ டேன்ஸ் உண்டா?

கரடி ஓய்ந்தபின்னரே.. அருமை.
தவறாகப் புரிந்து கொள்வதை... புரியவில்லை. தவறாகப் புரிந்து கொள்வதே புரிந்த பின் புரியும் செயல் ஆயிற்றே? எப்படித் தவிர்க்க முடியும்?

அப்பாதுரை சொன்னது…

ஏதோ லாஜிக்கா கேக்குறோம்னு நெனச்சா 'முற்றிலும் உண்மை'னு போட்டிருக்காங்களே? எதுக்கும் மறுபடியும் யோசிச்சுப் பாக்குறேன் - அதுவரைக்கும் என் பின்னூட்டத்தை 'hold' பண்ணிக்குங்க ப்லீஸ்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க அப்பாஜி! பாட்டைப் புடிச்சிட்டீங்க...
//தவறாகப் புரிந்து கொள்வதே புரிந்த பின் புரியும் செயல் ஆயிற்றே? எப்படித் தவிர்க்க முடியும்?//

மொதலாளி.. ம்ம்முடியல்ல ....

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு.. சுயமுன்னேற்றத்திற்கு உதவும் பதிவு இது.. அதிலும் எதிர்க்கொள்ள முடியாத சவாலை எதிர்கொள்பவனே யுகபுருஷர்களாக கருதப்படுகின்றார்கள் ... என்பதில் மிகையில்லை


**************************

ஒரு டாலர் திருடினால் தப்பா ?

மோகன்ஜி சொன்னது…

//அதுவரைக்கும் என் பின்னூட்டத்தை 'hold' பண்ணிக்குங்க ப்லீஸ்//

என்னதில மட்டுறுத்தல் வசதியோட பின்னூட்டம் போடவா முடியும்..
அது பின்னோட்டங்க.. வந்தா பிச்சிகிட்டு.. பதிவாயிடுங்க...

உங்களை விடறதா இல்லை !

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய இக்பால் செல்வன்! உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க! உங்கள் பதிவைப் பார்த்தபின் அவசியம் கருத்து சொல்கிறேன்!

ஹேமா சொன்னது…

மோகண்ணா....எல்லாப் பொன்மொழிகளுமே முத்து முத்தாய் இருக்கு.அத்தனையும் ஒற்றி எடுத்துக்கொள்கிறேன் !

Ramani சொன்னது…

வாசித்துச் செல்லக் கூடிய பதிவாக இல்லை
மிக அழகான அனுபவ மொழிகளாக
தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளீர்கள்
எதைக் குறிப்பிட்டுச் சொல்வதென்று தெரியவில்லை
அனைத்துமே நினைவில் பதித்துக் கொள்ளத்தக்கவை
அருமை அற்புதம் தொடர வாழ்த்துக்கள்

meenakshi சொன்னது…

//இவ்வாறான பொன்மொழிகளும், சின்னசின்ன மேற்கோள் கதைகளும் என்றும் அலுப்புதட்டுவதே இல்லை.//
எனக்கும்தான். நானும் மிகவும் விரும்பி படிப்பேன். அதனால் இனி நீங்கள் படுத்துவதாக நினைக்காதீர்கள் மோகன். :)

அப்பாதுரை சொன்னது:
//தவறாகப் புரிந்து கொள்வதை... புரியவில்லை. தவறாகப் புரிந்து கொள்வதே புரிந்த பின் புரியும் செயல் ஆயிற்றே? எப்படித் தவிர்க்க முடியும்?//
தவறை தவறாக புரிந்து கொள்வதில் தவறில்லை. சரியானதை தவறாக புரிந்து கொள்ளாமல் இந்தாலே சரி. இதில் சரி, தவறு என்பதும் அவரவர் கண்ணோட்டத்தை பொறுத்ததுதான் என்றாலும், தவறு என்று மனதிற்கு படுவதை, வெளியே சொல்லும் முன் இன்னொரு முறை நிதானமாய் ஆராய்ந்து பார்த்து பின் சொல்வதே நலம். நல்ல உறவுகள் நீடித்து நிலைக்க இது உதவும். இதைதான் பொதுவாக 'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பது பொய், தீர விசாரிப்பதே மெய்' என்கிறார்கள். இந்த பொன்மொழியும் இதைதான் சொல்கிறது என்கிறேன்.

இருந்தாலும் அப்பாதுரை, மோகன் அவர்கள் சொன்னது போல் ம்ம்ம்.....முடியல்லதான்! :)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//நல்லதோர் உறவு கரும்பினைப்போல..
கரும்பை முறுக்கினாலும்,நசுக்கினாலும், கசக்கினாலும் பிழிந்தாலும் வெளிப்படுவது அதன் சுவையான சாறு ஒன்றே..//

உங்களின் அனைத்துப் பொன்மொழிகளும் எனக்குக் கரும்புச் சாறாக இனிக்கின்றது, மோஹன் ஜி.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Voted. 7 to 8 in Indli

அப்பாதுரை சொன்னது…

தவறை தவறாக புரிந்து கொள்வது, சரியானதைத் தவறாகப் புரிந்து கொள்வது... தவறானதைச் சரியாகப் புரிந்து கொள்வது..? சின்ன வயசுல விசு படம் ரொம்ப பாத்திருப்பீங்களோ meenakshi..?

தவறு என்று மனதிற்குப் படுவதை, அது மனதிற்குப் பட்டபின்.. அதை எப்படி வெளியே சொன்னால் என்ன? தவறு என்று படுவதைத் தவிர்க்க முடியுமா, தவறாகப் புரிந்து கொள்வதைத் தவிர்க்க முடியுமா என்பதே கேள்வி.

தவறாகப் புரிந்ததை நிதானமாக ஆராய்ந்து பார்த்து கடைசியில் தவறு தான் என்று சொல்வதில் நேரமும் ஆய்வும் விரயம்.. அதே நேரம், நிதான ஆராய்ச்சிக்குப் பின் தவறில்லை என்று பட்டாலோ முதலில் புரிந்து கொண்டது தவறு என்றாகி விடுகிறது - அதனால் தவிர்க்க முடியாமல் போனதாகிறது, சரியா?

எதுக்கும் விசுக்கிட்டே கேட்டு சொல்லிடுங்க.

சுந்தர்ஜி சொன்னது…

சின்ன வயதில் மயிலிறகை புத்தகத்தில் வைத்து அரிசி போட்டு மறுநாள் குட்டி போட்டிருக்காவென்று பார்த்து வளர்ந்த பிள்ளைகளில் நானும் ஒருவன். ஒருவேளை இன்று வரை அதை நம்பி தினமும் அரிசி போட்டு புத்தகத்தின் மயிலிறகைத் திறந்து பார்த்திருப்பேனானால் குட்டி போட்டிருக்கவும் கூடும்.

அதுபோல த்ரௌபதியின் சரணாகதி போல தன்னைக் காலம் கைவிடும்போதும் மனதில் ஒளி ஏற்றும் நம்பிக்கை வைரங்கள் உங்களின் வாசிப்புச் சுரங்கத்திலிருந்து.

அவை நம்பிக்கையின் திசை காட்டும் அம்புக்குறிகள். இலக்கை ஒருபோதும் தவறவிடாது.

RVS சொன்னது…

சபை நிறைஞ்சு பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கீங்க... நான் தொந்தரவு பண்ணலை.. ஏதாவது சின்னப்புள்ளத்தனமா கமென்ட் போட்டு நல்ல மேட்டரை நாற அடிச்சுடப் போறேன்... ஒரே ஒரு வார்த்தை சொல்லிட்டு போய்டறேன்.... ரொம்ப நல்லா இருக்கு... பிரேம் போட்டு மாட்டிக்கலாம்....

அப்புறம் அந்த ஓல்ட் பாடல் என்னான்னு யூத் நீங்க சொல்லிட்டீங்கன்னா போதுங்ணா!! ;-)))))

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அத்தனையும் முத்துக்கள்....

G.M Balasubramaniam சொன்னது…

உறவு பற்றிய கருத்தொன்று கண்டேன். அது குறித்த பதிவு ஒன்று எழுதிஉள்ளேன். படித்துப் பார்த்து தொடர முடியுமா பாருங்களேன். என் பங்குக்கு ஒரு முன்னேற்றக் கருத்து .மாற்ற முடியாததை அனுபவிக்கத் தெளிவும், மாற்றக்கூடியதை மாற்றும் மனோதிடமும், ஒன்றில் ஒன்றை பகுத்தறியும் ஞானமும் பெறவேண்டுகிறேன் , இறைவா.

கோவை2தில்லி சொன்னது…

பொன்மொழிகள் அனைத்துமே அற்புதம் சார். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

அந்த பாடல் – அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடும்.
கரெக்டா சார்.

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி ஹேமா ! நான் பதிவிட்டது படிக்கவும் பழக்கத்திற்கு கொண்டு வரவுமே..தங்கச்சி!

மோகன்ஜி சொன்னது…

ரமணி சார்! மிக்க நன்றி! கூடிய மட்டும் இந்த அனுபவமொழிகளை கடைபிடிப்பது வாழ்க்கைக்கு சிறப்பு சேர்க்கும்

மோகன்ஜி சொன்னது…

நன்றி மீனாக்ஷி மேடம். அவ்வப்போது இந்தமாதிரி பொன்மொழிகள் அவசியம் வெளியிடுவேன்.

அப்பாதுரைக்கு உங்கள் பதில்... அப்பப்பா!

மோகன்ஜி சொன்னது…

//உங்களின் அனைத்துப் பொன்மொழிகளும் எனக்குக் கரும்புச் சாறாக இனிக்கின்றது, மோஹன்ஜி//

மிக்கநன்றி வை.கோ சார்! கரும்புச் சாரு எனக்கு ரோம்பபிடிக்கும்.. இஞ்சியும் கொஞ்சம் புதினாவும் சேர்த்து நுரைபொங்க பருகிய நாட்கள்...

மோகன்ஜி சொன்னது…

மொதலாளி.. மொதலாளி.. உங்களுக்கு இரக்கமே இல்லையா.. போத் இயர்ஸ் புல் பிளட்...

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி! அற்புதமாய் சொல்லி விட்டீர்கள். என் பதிவு வெறும் டெர்ரகொட்டா பூச்சாடி. அதன் அழகே அதில் வைக்கப்படும் வாசமுள்ள மலர்கொத்து பின்னூட்டங்கள்..

மோகன்ஜி சொன்னது…

அன்பின் ஆர்.வீ.எஸ்! உங்க காமென்ட் இப்படி சவசவன்னு போட்டுட்டீங்களே.. கொஞ்சம் புழுதி கிளப்புவீங்கன்னு இல்லை ஆசைப்பட்டேன்.

அந்த ஆணிப் பாட்டை சரியாகச் சொன்னது ஆதி மேடம்...
"அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடும்". இப்போ என் பாட்டைப் பாடிப்பாருங்க..

மோகன்ஜி சொன்னது…

வெங்கட்! நன்றி! உங்க முத்து பாட்டைக் கண்டு பிடிச்சிட்டாங்க பார்த்தீங்களா?

மோகன்ஜி சொன்னது…

G.M.B சார்! உங்கள் பதிவை உடனே படிக்கின்றேன் சார்! உங்கள் பொன்மொழி மிகுந்த கருத்தாழம் கொண்டது.. நன்றி

மோகன்ஜி சொன்னது…

அன்பின் ஆதி! உங்கள் வாழ்த்துக்கு நன்றி.. பாடலை சரியாகப் பிடித்தீர்கள்..
பெரிய ரசிகரோட ராகமில்லையா நீங்கள்?!

meenakshi சொன்னது…

உங்கள் தெளிவான கருத்துக்கு நன்றி அப்பாதுரை. நீங்கள் சொல்வது சரிதான். தவறாக புரிந்து கொள்வதை தவிர்க்க, நம்பிக்கை ஒன்றுதான் சிறந்த வழி என்று நினைக்கிறேன். நம்பிக்கைதானே எந்த உறவும் வளர ஆதாரமாகிறது.

அப்பாதுரை சொன்னது…

நான் சொன்னது: தவறாகப் புரிந்து கொள்வதைத் தவிர்க்க முடியாது.
என்னதான் நம்பிக்கை இருந்தாலும் அன்பிருந்தாலும் பயமிருந்தாலும் எதுவாக இருந்தாலும் தவறாகவோ சரியாகவோ புரிந்து கொள்வதைத் தவிர்க்க முடியாது. புரிந்து கொண்டபின் என்ன செய்கிறோம் என்பதில் தான் நம் முதிர்ச்சி வெளிப்படுகிறது.

என்ன இப்படி விடாக்கண்டனாப் பிடுங்குறானேனு தப்பா நெனச்சுடாதீங்க meenakshi.. (பாருங்க, நானே கேட்டுகிட்டா கூட தவறா நெனக்கறதைத் தவிர்க்க முடியாது:)

meenakshi சொன்னது…

மீண்டும் வந்து கருத்து தெரிவித்ததற்கு மீண்டும் என் நன்றிகள் அப்பாதுரை. தங்களின் கருத்து மிகவும் சரி. அப்படியே ஏற்கிறேன். விடாபிடியாக வந்து நீங்கள் தெளிவுபடுத்தாமல் இருந்திருந்தால், நான் உங்களை விடாபிடியாக கேட்டு துரத்தி இருப்பேன். :)

ஐயா மோகன் அவர்களே, நீங்கள் ஏன் முதலிலேயே அப்பாதுரைக்கு ஐஸ் வைத்து ஜகா வாங்கி விட்டீர்கள் என்று இப்பொழுது நன்றாக புரிகிறது. :)

சிவகுமாரன் சொன்னது…

படித்தவுடன் பிரிண்ட் எடுத்துவிட்டேன். என் சித்தப்பாவிடம் கொடுக்க வேண்டும் அவர் வெளியிடும் ஆன்மீக புத்தகங்களில் இடையிடையே செருகி விடுவார்.
ஒவ்வொன்றும் தேர்ந்தெடுத்த முத்துக்கள் .

மோகன்ஜி சொன்னது…

அன்பு அப்பாதுரை, மீனாக்ஷி மேடம்.. நம்ம சமாதானமா போயிடலாம்..

மோகன்ஜி சொன்னது…

நன்றி சிவா!

கீதா சொன்னது…

ஒவ்வொன்றும் சொல்லும் கருத்தும் அமைதியான அன்பான வாழ்வுக்குத் தருமே உத்திரவாதம். பிரமாதம் மோகன்ஜி.