புதன், ஜூன் 29, 2011

கனாக் கண்டேனடி .. தோழி!


இன்று காலையில் கல்லூரி வளாகத்தில் நானும் ஒரு தெலுங்கு நண்பரொருவரும் பேசிக்கொண்டிருந்தோம். சற்றுதொலைவில் கண்மூடிப் படுத்திருந்த ஒரு நாய், திடுக்கிட்டு விழித்து சிறுகுரைப்பு குரைத்துவிட்டு, மீண்டும் கண்மூடிக் கொண்டது .

கானா ஏதும் கண்டிருக்கும் என்றேன்.

மிருகங்களும் பறவைகளும் கனாக் காணாது.. மனுசப்பயல் தான் ஏங்கிஏங்கிக் கனவு காண்பவன் என்று என் கூற்றை நிராகரித்தார்.

அவரை மறுத்தேன். வடமொழி மட்டும் தமிழிலக்கியத்தில் மிருகங்களும் கனாக்காண்பவையே என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

அவற்றையெல்லாம் எழுதினது உங்களைப் போன்ற கவிகள் தானே? டிரீம் மெர்ச்சண்ட்ஸ்!

பரவாயில்லை.. நம்மையும் கவி என்கிறார்.. சரி! அவரை விட்டுவிடுவோம்..

மிருகங்களும் பறவைகளும் கனாக்காணும் சில சங்கப் பாடல்கள் உண்டு.

நற்றிணையில் ஒரு பாடல். இதை எழுதியவர் நக்கண்ணையார்


உள்ளூர் மா அத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டுப்
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்
பெருந் தண் கானலும் நினைந்த அப் பகலே.


பொருளுரை:

 மா அத்த மாமரம்
முள் எயிற்று வாவல் முட்கள் போன்ற பற்கள் கொண்ட
                            வௌவ்வால்
 ஓங்கல் உயர்ந்த
 அம் அழகிய
 சினை கிளை
 தூங்கு தொங்கிக்கிடக்கும்
 அழிசி அழிசியம் எனும் பெருங்காடு  
 நெல்லி அம் புளிச் சுவைக் சுவையான புளிக்கும் நெல்லிக்
                                   கனிகள்
 கனவியா அங்கு என் கனவே போல்
 அது கழிந்தன்றே எனை விட்டகன்றது
 பனி அரும்பு உடைந்த தண்ணிய அரும்புகள் கொண்ட
 பெருந் தாட் புன்னை அகன்ற நடுமரம் கொண்ட புன்னைமரம்
 துறை துறைமுகம்
 மேய் இப்பி உயிருள்ள சிப்பிகள்

நெய்தல் திணையின் அழகான பாடல் இது.

மாமரத்தில் வசிக்கும் ஒரு வௌவ்வால்  நெல்லிக்கனி உண்பதில் பெரு விருப்பம் உடையதாம்.. அழிசியம் எனும் பெருங்காட்டிடை விளைந்த புளிக்கும் நெல்லிக்கனிக்காக ஏங்கியபடி உறக்கம் கொள்கிறது. என்றோ உண்ட அக்கனியினை உண்பதாய் கனவும் காண்கின்றதாம் .

நெய்தல் தலைவி , தலைவனுடன் கூடிக்களித்த தருணங்களையே எப்போதும் எண்ணியபடி, கனவிலும் நனவிலும் அந்த நினைவுகளின் கனம் தாங்க மாட்டாது, தோழியிடம் புலம்புகின்றாள். நெல்லிக்கனி சுவையை கனாக்காணும் வௌவ்வாலை தனது நிலைக்கு உவமையாய்ச் சொல்லி
ழிவிரக்கம் மிகுந்து மயங்குகிறாளாம்.

இதேபோல்,புலியினைக் கனவில் காணும் யானை, இரால்மீனைப் பற்றி கனவு காணும் காகம் என்று பல உவமைகள் சங்கப் பாடல்களில் கிடைக்கின்றன.

என்ன.. கொஞ்சம் படிக்க பொறுமை வேண்டும்.
பிறிதோர் பதிவில் மேலும் சிலவற்றை விவாதிப்போம்.. 

28 comments:

பத்மநாபன் சொன்னது…

இப்பொழுது தான் தம்பி சிவாவிடம் உறக்கம் படித்து வந்தேன்..அண்ணனிடம் கனவு தயாராக இருக்கிறது..

பாட்டை போட்டு ..சொல் பொருள் கூறி கவி விளக்கமும் அருமையாக கொடுத்துள்ளீர்கள்..

அவர்களது வாழ்வே கவித்துவமாக இருக்கிறது..

மோகன்ஜி சொன்னது…

சிவா அண்ணனை முந்திய தம்பியல்லவா. உறக்கத்திற்குப் பின் தானே கனவு?

இலக்கிய ரசனையை மேம்படுத்தும் பல பாடல்களையும் விவாதிக்கும் ஆவல் இருக்கிறது.. கடைவிரித்தால், கொள்வார் உளரோ எனும் ஐயம் தடுக்கிறது.

சந்ரு சொன்னது…

சற்று நேரத்தில்... வருகிறேன் மனப்பாடம் செய்வதற்கு..

ஸ்ரீராம். சொன்னது…

வானவில் மனிதனுக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துகள்.

சிவகுமாரன் சொன்னது…

ஆகா, நான் உறங்க , நீங்கள் கனா காண்கிறீர்கள் அண்ணா.

அருமையான தமிழ் சேவை.

கடைவிரியுங்கள் அண்ணா. கட்டி அள்ளிக் கொண்டு போக நாங்கள் தயார்.

சிவகுமாரன் சொன்னது…

ஸ்ரீராம் சார்.
மோகன் அண்ணாவுக்கு பிறந்த நாள் , ஜூன் 30 அல்ல. ஜனவரி 30 . காந்தி நினைவுநாள் அன்று பிறந்ததால் , மோகன்(தாஸ்) என்று பெயரிட்டார்களாம்.
காந்தி பெயரை கஷ்டப்பட்டு(??!!!) காப்பாத்திக் கொண்டிருக்கும் எங்கள் அண்ணனை , பஞ்சாயத்தில நிறுத்திப்புட்டீகளே, படுபாவிப் பயலுகளா .

நிரூபன் சொன்னது…

சங்க இலக்கியப் பாடலுக்கூடாக எட்டாப் பழத்திற்கு கொட்டாவி விடும் கனவின் நிலையினை விளக்கமாக கூறியிருக்கிறீங்கள். ரசித்தேன்.

கோவை2தில்லி சொன்னது…

பாடலும் அதற்குண்டான விளக்கமும் நன்றாய் இருக்கிறது. தொடருங்கள் மேலும் பல பாடல்களை. தொடர்கிறோம்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க சந்ரு! வாழ்த்துக்கள்

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஸ்ரீராம் ! உங்கள் வாழ்த்துக்கும்
அன்புக்கும் மிக்க நன்றி!

மோகன்ஜி சொன்னது…

நன்றி சிவா. எனது நூறாவது பதிவையும் இன்று வெளியிட்டுள்ளேன்

மோகன்ஜி சொன்னது…

சிவா! ஸ்ரீராம் வாழ்த்தியது சரிதான். வானவில் மனிதனுக்கு இன்று முதலாம் ஆண்டு நிறைவு.

எனது பிறந்த நாளை நினைவில் வைத்திருக்கும் உன் அன்பை பெருமையாய்க் கொள்கிறேன். நன்றி சிவா!

மோகன்ஜி சொன்னது…

நன்றி நிரூபன் சார்...

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி ஆதி. வானவில் மனிதனுக்கு இன்று ஹேப்பி பர்த்டே

சிவகுமாரன் சொன்னது…

ஆகா . நான்தான் அவசரக் குடுக்கை போலிருக்கிறது.
வாழ்த்துக்கள் அண்ணா.

மோகன்ஜி சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி மு.கொ.சிவா!!

Gopi Ramamoorthy சொன்னது…

Nice!

மோகன்ஜி சொன்னது…

நன்றி கோபி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

என்னதோர் அழகிய பாடல்... தொடரட்டும் உங்கள் தமிழ்ச் சேவை... பள்ளி-கல்லூரி காலத்தில் படித்த தமிழ்ப் பாடல்கள் நினைவுக்கு வருகிறது...

meenakshi சொன்னது…

தான் சொல்ல நினைக்கும் கருத்துக்களை வேறு ஒன்றில் உவமை ஏற்றி சொல்வதுதான் இது போன்ற பாடல்களில் உள்ள அழகே. பாடலும் அதற்கு உங்கள் விளக்கமும் அழகாக இருக்கிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இது போன்று இன்னும் உள்ள பாடல்களை கொஞ்சம் பொறுமையாக படித்து, மீண்டும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நோகாமல் நோன்பு நூற்பது என்பது இதுதானோ! :)

அப்பாதுரை சொன்னது…

சந்ரு உடனடியாக இன்னொரு வதந்தியுடன் வரவேண்டும் என்றழைக்கிறேன்.

அதுவரை..
அருமையான பாடலை இன்னொரு முறை படிக்கிறேன். இந்தப் பாடல் கேள்விப்பட்டதில்லை. மிக நேர்த்தியாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

இன்னுமா சந்ரு வரவில்லை?

மிருகங்கள் கனவு காணும். உங்கள் கொ.. தெலுங்கு நண்பருக்குச் சொல்லுங்கள். எங்கள் வீட்டு ஸ்டெல்லா அரைத்தூக்கத்தில் முனகுவதும் உறுமுவதும் முன்னங்கால்களை காற்றில் அடிப்பதும் கனவின் அறிகுறிகள் என்று வெட் சொல்லியிருக்கிறார்.

வேர் இஸ் சந்ரூ?

அப்பாதுரை சொன்னது…

சரி... 'கனாக் கண்டேனடி தோழி'ல தோழி யாருங்க? அந்தப் போட்டோல இருந்தாங்களே, அவுங்களா?

எல் கே சொன்னது…

அடடா இதை விட்டுட்டேனே ?? அருமை அருமை. அந்த காலத்தில் எப்படி எல்லாம் கற்பனை பண்ணி இருக்காங்க ...

மோகன்ஜி சொன்னது…

நன்றி வெங்கட்! இன்னமும் இதுபோன்ற அரிய பாடல்களை பதிய உத்தேசம்..

மோகன்ஜி சொன்னது…

மீனாக்ஷி மேடம்! இது போன்ற பாடல்களை மணிக்கணக்கில் விவாதித்து,பிற மொழி இலக்கியங்களில் இத்தகு காட்சிகளைப் பகிர்ந்து கொண்ட ஒரு நண்பர் குழாம் எனக்கு வாய்த்தது சால காலம்.. ஓ! அந்த பொன்னான நாட்கள்..

அவசியம் மேலும் எழுதுவேன் மேடம் !

மோகன்ஜி சொன்னது…

வாங்க அப்பாதுரை! பாடலை ரசித்தத்திற்கு நன்றி! சந்ருவை கும்மர்கள் பேரவையில் உறுப்பினராக்கி விடுவோம் தலைவரே!

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி! விடாது கருப்பு?!

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய கார்த்திக்! உண்மை! அக்கால இலக்கியப் பாடல்களின் கம்பீரமும் சொற்கட்டும் ஆச்சரியகரமானவை !