வெள்ளி, ஜூலை 09, 2010

ஓர் பின்னிரவுப் பயணத்தில்

நெடுந்தொலைவுப் பேருந்தின்
பின்னிரவுப் பயணத்தில்,
சாலை பாவா ஓட்டத்தில்
சன்னலின் வழியாக
சல்லிக்கும் காற்றுவந்து
சேதி சொல்லும் – உன்னினைவும்
கற்பூர மணமாக
மனம் பரவும்.

காற்று வெளியினிலே
கவிதை யினம்தேடி
கண்ணும் அலைபாயும்
மேகப் பொதிகளிடை
மேவுநிலா வெளிவந்து
உந்தன்முகம் காட்டும்.

சாலையின் இருமருங்கும்
தலைதெறிக்க வருமரங்கள்
பார்வைக்குத் திரைவிரிக்கும்
உனையெண்ணி விகசிக்கும்
என்முகத்தை வெளிநீண்ட
புளியங்கிளைத் தட்டி
புவிக் கொணரும்.

மங்கிய வெளிச்சத்தில்
மறையும் பெயர்ப்பலகை
வரிசையில் உன்பெயரைக்
கண் தேடி மாயும்.
பேருந்தின் தாலாட்டில்
சீறிவரும் எதிர்க்காற்றும்
உன்னன்பின் பரவசம்போல்
மூச்சு முட்டும்.

சேருமிடம் வந்தபின்னர்
பேருந்து நின்றபின்னும்
விரைந்திடும் உள்ளம்மட்டும்
தீர்ந்திடாத கனவைத்தாங்கி
சோர்ந்து செல்லும்.


(பெங்களூர் 1979)

4 comments:

எம் அப்துல் காதர் சொன்னது…

// நெடுந்தொலைவுப் பேருந்தின் பின்னிரவுப் பயணத்தில், சாலை பாவா ஓட்டத்தில் சன்னலின்
வழியாக சல்லிக்கும் காற்றுவந்து சேதி சொல்லும் – உன்னினைவும்
கற்பூர மணமாக மனம் பரவும்.//

ஆஹா நினைவை எங்கோ இழுத்து போயிட்டீங்களே பாஸ்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி பாஸ்.நீங்களும் நம்மள மாதிரி பஸ்ல உக்காந்தவுடனே,டிக்கெட் வாங்க மறந்துட்டு,நினைவுகளில் கிறங்கி போற ஆளுன்னு தெரியுது.அந்த காலத்துல இந்த கவிதைக்கு வந்த ரெஸ்பா ன்ஸ் இருக்கே... அது ஒரு நிலாக் காலம் காதர்பாய்

அமைதிச்சாரல் சொன்னது…

பஸ்ஸோ.. ரயிலோ இரவுப்பயணங்கள் ரொம்பவே ரசிக்கவைப்பவை. தடதடக்கும் தாலாட்டில் விழித்துக்கொள்ளும் மனசு மட்டும்.

அப்பாதுரை சொன்னது…

பஸ்சில் உட்கார்ந்த சில நொடிகளில் தூக்கம் சொக்கிட்டு வந்துரும். பல நேரம் நின்னுட்டே தூங்கியிருக்கேன். புவிக்கொணர்வது பெரும்பாலும் இறங்கவேண்டிய இடம் - அல்லது அதைத் தவற விட்ட திக்.