ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

கணவக்கத்தரி எண்ணைக்கறிநானும் பல மேட்டேரைப் பதிவாப் போடறேன். ஆனாலும் மக்கள் சமையல்குறிப்பு பதிவுகள் பக்கமல்லவா மொய்க்கிறார்கள் ? மோதிப் பார்த்துடலாமேன்னு முடிவுப் பண்ணிட்டேங்க .. சரியா? இனி மேற்கொண்டு படிங்க! 

இந்த க.க.எ.க வை செய்யத் தேவையானது :

-டீ.வீ. ரிமோட்
-பிஞ்சு கத்திரிக்காய் அரைக்கிலோ
- கைத்தலம் பற்றிய கணவர்
- நூல்கண்டு
- கடலைப் பருப்பு இரண்டு டீஸ்பூன்
-உளுத்தம் பருப்பு ஒன்றரை டீஸ்பூன்
-மிளகாய் வற்றல்
-தனியா இரண்டு டீஸ்பூன்
-பெருங்காயம் கொஞ்சம்
- அரைமூடி தேங்காய்த் துருவல்
-எண்ணை தேவையான அளவு


தாய்க் குலமே! நீங்கள் பக்கத்தில் இருக்கும் போது சங்கரா சேனலையும், அந்தப்பக்கம் நகர்ந்து விட்டால் சைலண்டாய் எப் டீ.வீ யும் பார்த்துக் கொண்டிருக்கும் கணவரை, இந்தக் கறிவகையை செய்ய ஈடுபடுத்துவது அதன் சுவையை மேலும் அதிகரிக்கும்.

முதலில் டீ.வீ. ரிமோட்டைக் கைப்படுத்தி, படக் என்று டீ.வி யை அணைக்கவும். அந்த சமயம் உங்கள் முகத்தில் சற்றே கடுகடுப்பு அவசியம் தேவை. இந்த பாவம் கணவரின் ஒத்துழையாமையையும், நழுவுதலையும் கட்டுப்படுத்த உதவும்.

முதலில் வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரையும், கத்தரிக்காய் மற்றும் கத்தியையும் கணவர் கையில் தரவும்.

கணவரைத் தண்ணீரில் அப்படியே அமுக்கி... ஸாரி.. கணவர் என்றா சொன்னேன்?  ஸாரி! கத்தரிக்காய் .. கத்தரிக்காய் என்று மாற்றி வாசிக்கவும்.

சற்றே வறண்ட குரலில் செய்முறையை கணவருக்கு  விளக்கவும். பட்சி இந்த நேரத்திலும் பறந்துவிட வாய்ப்பிருக்கிறது. ஒரு கத்திரிக்காயை வேண்டுமானால் வெட்டிக் காண்பிக்கலாம்.

கத்திரிகாயின் காம்புத்தொப்பியை மட்டும் வெட்டி,முழுதுமாய் நறுக்காமல், குறுக்கும் நெடுக்குமாய் கீற வேண்டும்..

கணவர் சார் கத்திரிக்காய்க்கு வலிக்காமல் கீறி முடிப்பதற்குள்,
வாணலியில் சிறிதளவு  எண்ணை விட்டு க.பருப்பு,உ.பருப்பு, மிளகாய் வற்றல், சிறுங்காயம்( அதாவது சிறிதளவான பெருங்காயம்), தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சிவக்க வறுக்கவும்.

தலைவரிடம் அவ்வப்போது ஆச்சா... ஆச்சா என வினவிக் கொண்டே இருக்கவும்.

வறுத்தவற்றை மிக்சியில் இட்டு,கரகரவென அரைக்கவும்.
சொல்ல விட்டுப் போச்சே... தேவையான அளவு உப்பையும் அரைக்கும் போது சேர்க்கவும்.

அரைத்த பொடியை ஒரு ஸ்பூனோடு கணவர் வசம் தந்து கீறி வைத்த ஒவ்வொரு கத்தரிக்காயின் உள்ளேயும்  ஸ்பூனால் திணிக்கச் சொல்லுங்கள். வேணுமானால் முகத்தில் இப்போது  கடுகடுப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.

பிறகு, அவரிடம் நூல்கண்டைத் தரவும். ஸ்டப்பிங் செய்யப்பட்ட கத்தரிக்காயைச் சுற்றி நூலால் பம்பரத்துக்கு சாட்டைசுற்றுவது போல் இரண்டே சுற்று சுற்றி, ஒரு முடிச்சை போடச் சொல்லவும். மூணு முடிச்சு போட்ட அவரின் அனுபவம் இப்போது கண்டிப்பாய்க் கை கொடுக்கும்.  நூல்கண்டைக் கையில் வாங்கியபடி, சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப் படுத்துவது? போன்ற பன்ச் டயலாக் எல்லாம் கணவர் உதிர்க்கலாம். அதைப் பொருட்படுத்த வேண்டாம்.

முடிச்சுகள் போட்டு முடித்தபின், கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று சொல்லிக் கொண்டே, வாணலியில் எண்ணைவிட்டு, கடுகு தாளித்தபின் கத்தரிக்காயகளை சேர்த்து மெல்ல பிரட்டவும்.
காஸ் அடுப்பை சிம்மில் வைக்கவும்.

இதுவே, கணவக்கத்திரிக்காய் எண்ணைக்கறி செய்முறை. காய் வெந்தபின் சுற்றிய நூலை நீக்கி விடலாம்.

கொஞ்சம் அதிகமாய் செய்து வைத்துக் கொண்டால், பிரிட்ஜில் வைத்து, காலை வரவர உப்புமாவுக்குத் தொட்டுக் கொள்வதற்கும், மதியம் டிபன் பாக்சில் சாதத்துக்கு கலந்து கொள்ளவும், இரவு சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாகவும் அன்புக் கணவருக்கு பதினைந்து நாள் பரிமாறலாம்.

வர்ட்டா?

         
( படம் கூகிளுக்கு நன்றியுடன்) 


-

77 comments:

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//அன்புக் கணவருக்கு பதினைந்து நாள் பரிமாறலாம்.//


இந்த பாவம் சும்மா விடாது. அடுத்த பிறவியில் ஆணாய் பிறந்து அல்லாட வேண்டிஇருக்கும்.

சுந்தர்ஜி சொன்னது…

என்ன மோஹன்ஜி!செம குஷில இருக்காப்ல இருக்கே?

செய்முறை சுவாரஸ்யம். தேவையான பொருட்களின் பட்டியலைப் போல.

கடைசியில் நூல் சுற்றுவதும் அதன் பெயரும் மட்டும் எனக்குப் புதியது.

இந்தக் ”கணவக்” கத்திரி எண்ணைக் கறியின் பெயரில் ஏதும் வில்லத்தனம் இல்லையே?

நிஷாந்தன் சொன்னது…

கணவக் கத்தரி எண்ணைக்கறி அபாரம்..! நகைச்சுவை தாராளமாகத் தாளித்துக் கொட்டியதால் சுவை தூக்கலாகவே இருக்கிறது. ரொம்பவும் அடங்காப் பிடாரி ( பிடார ? ) கணவர்களுக்கு சிக்கன் பிரியாணி, தால் சால்னா போன்ற கஷ்டமான அசைன்மெண்ட்டுகளையும் தந்து வழிக்குக் கொண்டு வரலாம். அது சரி, இதில் குழந்தைகளும் கலந்து கொண்டால் நிகழ்ச்சி மேலும் உற்சாகமாக அமையும் அல்லவா ? ( யாரோ உங்களுக்கு போன் செய்கிறார்கள் பாருங்கள், அனேகமாக மகளிர் சங்கத்திலிருந்து உங்களுக்கு டாக்டர் பட்டம் தரப் போகிறார்கள் போலிருக்கிறது ).

ஹேமா சொன்னது…

க.க.எ.க...என்ன அருமையா பேர் வச்சிருக்கீங்க மோகண்ணா.கை குடுங்க.ஞாயிறு ஸ்பெஷல் பதிவும் சமையலும் சரி.வாசனையா இருக்கு.ஆனா எனக்குக் கத்தரிக்காய் பிடிக்காது.

கணவர் இல்லாம தனியா இருக்கிறவங்க எப்பிடிச் சமைக்கிறதுன்னு சொல்லலியே !

எல் கே சொன்னது…

இதெல்லாம் உங்க வீட்டில் அண்ணி உங்களை செய்ய வெச்சதை அப்படியே இங்க எழுதி விட்டீங்க . சரிதான

ஹேமா சொன்னது…

அண்ணா தமிழ்மணம் ஓட்டுப்போட முடில.கை உடனே காணாமப்போயிடுது !

பெயரில்லா சொன்னது…

நாங்கள் எண்ணெய்க் கத்திரிக்காய் என்று சொல்வோம்..
ஐயங்கார் அன்பர்களும் அப்படிச் சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்..
கணவக் கத்திரி' பெயரிலும் நூலிலும் புதிதாக இருக்கிறது..

அறிவன்.

Balaji saravana சொன்னது…

க.க.எ.க - க.க.க.போ! :)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நூல் சுற்ற வேண்டும் என்று நீங்களாகவே ஏதாவது நூல் சுற்றுகிறீர்களோ என்று எல்லோருக்குமே ஒரு சந்தேகம் உள்ளது.

என் சந்தேகமே வேறு. அதாவது அந்தக்கத்திரிக்காய்களின் பாவாடைகளைக் கழட்டி விட்டு, காம்பையும் கிள்ளி எறிய வேண்டுமா?

கிள்ளாத காம்புகளும், கழட்டாத பாவாடைகளும் ருசியாக இருக்குமா? என்பது மட்டுமே.

காம்புத்தொப்பியை மட்டும் தாங்கள் வெட்டச் சொல்லியிருப்பதில் பல கணவன்மார்களுக்கும் என் போல சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம்.

எது எப்படியோ சார், நீள நீளமான கத்தரிக்காய் கறி எனக்குப்பிடிக்காத ஒரு ஐட்டம்.

பொடிப்பொடியாக நறுக்கி, நிறைய தேங்காய் போட்டு, பொரிச்சகூட்டு செய்தால் மட்டுமே சாப்பிடுவேன். அதுவும் எங்க ஊர் திருச்சி பக்கத்தில் உள்ள ஐயம்பாளையம் என்ற கிராமத்தில் விளைந்த கத்திரிக்காய் தான் ருசியாக இருக்கும்.

உங்களின் இந்த சமையல் குறிப்பு, மிகவும் நகைச்சுவையாக, திருச்சி ஐயம்பாளையம் கத்திரிக்காயில் செய்த பொரிச்சகூட்டு போலவே மிகவும் சுவையாக இருந்தது. பாராட்டுக்கள்.
அன்புடன், vgk

RVS சொன்னது…

அண்ணா! அனுபவம் பேசுகிறது. அற்புதமாக இருக்கிறது.
சரியாக கத்திரிக்கைக்குள் அடிக்காவிட்டால் ஒரு சிட்டிகை "கணவர் சாரின்" கண்ணில் அடைக்கவும் என்று இன்னும் ஒரு லைன் சேர்த்திருக்கலாம். ;-)))

G.M Balasubramaniam சொன்னது…

கற்ற பாடங்களை கசடறக் கற்றுக்கொடுக்கிறீர்கள்.என்ன, கற்றுக்கொளும்போது நகைச்சுவையாய் இருந்திருக்காது. வாலறுந்த நரி கதை நினைவுக்கு வருகிறது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

க.க.எ.க – நகைச்சுவையுடன் கூடியதால் சுவை அருமையோ அருமை. அனுபவம் பேசுகிறது… நல்ல பகிர்வுக்கு நன்றி மோகன்ஜி!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மூணு முடிச்சு போட்ட அவரின் அனுபவம் இப்போது கண்டிப்பாய்க் கை கொடுக்கும். நூல்கண்டைக் கையில் வாங்கியபடி, ‘சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப் படுத்துவது?’ போன்ற பன்ச் டயலாக் எல்லாம் கணவர் உதிர்க்கலாம். //
கசடறக் கற்று, கற்றபின் அதற்குத் தக பதிவிட்டமைக்குப் பாராட்டுக்கள்.

தெய்வசுகந்தி சொன்னது…

அனுபவம் பேசுகிறது,
நகைச்சுவையாய்!

மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள கக்கு மாணிக்கம் சார்!

/அடுத்த பிறவியில் ஆணாய் பிறந்து அல்லாட வேண்டிஇருக்கும்./
அப்படியா சொல்றீங்க? என் கருத்து வேறங்க. நம் சமுதாயத்தில், சுமையிலோ,கஷ்டத்திலேயோ ஆணை விட பெண்களே அதிகம் ஏற்கிறார்கள்.

இந்தப் பதிவு நகைச்சுவையாகவே வெளியிட்டிருக்கிறேன். வீட்டு வேலையில் ஆண் உதவ வேண்டும் என்பது ஒரு நல்ல கருத்து தானே?

மோகன்ஜி சொன்னது…

ஆஹா சுந்தர்ஜி! உங்கள் ரசனைக்கு நன்றி! கணவன் உதவிய கத்தரிக்காய் கறி என்பதாலும், கணவரே அதை சாப்பிடப் போகிறார் என்பதாலும் 'கணவக்கத்திரி' என்று அறிக!

மோகன்ஜி சொன்னது…

நிஷாந்தன்! உங்கள் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன். டாக்டர் பட்டத்திற்கு பரிந்துரை செய்த்திற்கு நன்றி! ஆனால் கணவர்கள் டாக்டர்கிட்ட இல்ல அனுப்பிடுவாங்க போல இருக்கு?! போதாக்குறைக்கு நீங்க கஷ்டமான அசைன்மென்ட்ல்லாம் வேற பரிந்துரை பண்ணியிருக்கீங்க! வாங்க! சேர்ந்தே போவோம் பிரதர்!!

பத்மநாபன் சொன்னது…

தலைப்பை தேர்ந்தெடுத்து....தேவையான பொருள்களை வரிசைப் படுத்தும் போதே நகைச்சுவையை சேர்க்க ஆரம்பித்துவிட்டீர்கள்....வாணலியின் சூட்டை தணிப்பதும், மிகைப்பதும் போல இல்லத்தரசியர்க்கும் குறிப்புகள் சிறந்தவை... அனுபவத்தை அள்ளி தெளித்து அதகளப்படுத்தி விட்டீர்கள்....

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஹேமா! உனக்கு கத்தரிக்காய் வேண்டாம் . அவ்வளவு தானே! அது இல்லாமல் வேறென்ன
வேணுமோ கேள்! சமைச்சா போச்சு.

//கணவர் இல்லாம தனியா இருக்கிறவங்க எப்பிடிச் சமைக்கிறதுன்னு சொல்லலியே!//

என்ன கேள்வி கேட்டேம்மா?

யோசிச்சிக்கிட்டேயிருக்கேன்...............

மோகன்ஜி சொன்னது…

கார்த்திக்! நானாத் தான் உளறிட்டேனா?

மோகன்ஜி சொன்னது…

ஹேமா! ஓட்டுப் போட முடியல்லேன்னா விடும்மா. எப்பவும் உன் ஓட்டு எனக்குத்தானே?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

சமையல்ல நான் A1 ஆக்கும்..இந்த எண்ணெய்க் கத்திரிக்காய் என்ன..அதைவிட சூப்பரா.....
வென்னீர் வைப்பேன்!

மோகன்ஜி சொன்னது…

அன்பு அறிவன் ! இதைத் தெலுங்கில் 'குர்த்துவெங்காய வேபுடு' என்பார்கள். 'நூல்' சுற்றினால் ப்ராம்மணக் கத்திரிக்காய்.. என்றாகுமோ?!

மோகன்ஜி சொன்னது…

/க.க.க.போ!/ பாலா.. நானும் என்னென்னமோ சொல்லி பாக்குறேன். புரியலியே? ஏதும் திட்டுறயோ தெரியல்லையே தம்பி!

மோகன்ஜி சொன்னது…

அன்பு வை.கோ! தொப்பி நீங்கள் சொன்ன இரண்டையும் சேர்த்துத் தான்.

நான் திருச்சியில் இருந்த போது ஐயம்பாளையம் கிராமத்தில் விளைந்த கத்திரிக்காய் ருசித்திருக்கிறேன்.
ஐயம்பாளையம் கத்திரிக்காய் வெண்ணை என்றால்,
எங்கள் கடலூர் பக்கத்து ஞானமேட்டுக் கத்தரிக்காய் வெனில்லா ஐஸ்கிரீம்ங்க !

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! எனக்கு சமையல் அனுபவம் உண்டு. மிக நன்றாக சமைப்பேன்.எல்லா வகையும்...
உங்க மன்னி அதுக்கு சான்சே குடுக்குறதில்லை. பிள்ளைகள் பள்ளிப் பருவத்தில் சமையலுக்கு உதவியது உண்டு.இப்பல்லாம் சமையல் கட்டிலேயே என்னை
சேர்க்கிறதில்லை.. ஏதோ வீட்டிலாவது சேர்க்கிறாளே என்று என் நளபாக வித்தையை அடக்கி வைத்திருக்கிறேனாக்கும்!

நிஷாந்தன் சொன்னது…

நன்றி மோகன் ஜி..! சமயம் கிடைக்கும்போது நம்ம கடைக்கும் ( http://nisshanthan.blogspot.com ) வருகை தாருங்களேன்.உங்க மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். ( நகைச்சுவைக்கு உத்தரவாதம் உண்டுங்கோ ! ).

கக்கு - மாணிக்கம் சொன்னது…

பதினைந்து நாள் பிரிஜ்ல் வைத்து தின்பது பற்றி
நானும் கிண்டலாய் தான் சொன்னேன். சமையல் வேளைகளில் நாமும் பங்கேற்பது ஒரு சுவையான அனுபவமே.

மோகன்ஜி சொன்னது…

அடடா G.M.B சார்!
/கற்ற பாடங்களை கசடறக் கற்றுக்கொடுக்கிறீர்கள்/
உங்கள் பகடியை ரசிக்கிறேன்...

மோகன்ஜி சொன்னது…

அன்பு வெங்கட் நாகராஜ்!
//க.க.எ.க – நகைச்சுவையுடன் கூடியதால் சுவை அருமையோ அருமை. அனுபவம் பேசுகிறது…//
உங்கள் ரசனைக்கு நன்றிங்க! உண்மையை சொல்லனும்னா எண்ணை வீட்டுல இந்த ஆட்டங்களிலேயே சேர்க்க மாட்டேங்கிராங்கஜி!

மோகன்ஜி சொன்னது…

இராஜேஸ்வரி மேடம்!
//கசடறக் கற்று, கற்றபின் அதற்குத் தக பதிவிட்டமைக்குப் பாராட்டுக்கள்//

முடிவே பண்ணிட்டீங்களா? அப்படி இல்லைங்க.. வேணாம்...... அழுதுடுவேன்....

மோகன்ஜி சொன்னது…

வாங்க தெய்வ சுகந்தி மேடம்!
//அனுபவம் பேசுகிறது,
நகைச்சுவையாய்!//
அட நீங்களுமா? நானும் எவ்வளவு நேரம் வலிக்காதமாதிரியே இருக்கிறது?
அத விடுங்க .. நான் போட்ட ரெசிபி சரிதானா?

மோகன்ஜி சொன்னது…

வாங்க பத்மநாபன்! கொஞ்ச நாளாச்சு நகைச்சுவை எழுதி...

அடுத்த சில பதிவுகள் இலக்கியமும் சிறுகதைகளும் என முடிவு பண்ணியிருக்கிறேன். நடுவுல கொஞ்சமா கிச்சு கிச்சு...

இன்னொரு யானை ஊர்வலம் விடலாமா தலிவரே !

மோகன்ஜி சொன்னது…

மூவார் முத்தே! வெந்நீர் வைப்பது ஒன்றும் லேசுப்பட்ட விஷயம் இல்லே! கையைக் கொடுங்க!!
அத விடுங்க! காய் நறுக்கினீங்களா இல்லையா? உண்மையைச் சொல்லும்!

மோகன்ஜி சொன்னது…

அன்பு நிஷாந்தன்! அவசியம் கடைக்கு வருகிறேன்! கட்அவுட் எல்லாம் ரெடி பண்ணிடுங்க! புறப்பட்டாச்சு! வந்துகிட்டே இருக்கேன்!

மோகன்ஜி சொன்னது…

அன்பு கக்கு மாணிக்கம் சார்! சிலர் வீட்டில் ஒரு வாரத்துக்காய் சாம்பார் வைப்பது.. பிரிட்ஜில் வைத்து அவ்வப்போது சூடாக்கி உண்பதும் நடக்கிறது. அது மிகவும் ஆரோக்கியமற்றதாகும். சமைத்த உணவை மூன்று மணி நேரத்திற்கு பிறகு உட்கொள்ளல் கூடாது என்கின்றனர். பாக்டீரியா பெருகிவிடுமாம்.

RVS சொன்னது…

யானை ஊர்வலத்திற்கு நான் ரெடி. ;-)

சிவகுமாரன் சொன்னது…

ஆகா நாக்கு ஊறுது. ரெசிபியை அம்மணிக்கிட்ட கொடுத்து செய்யச் சொல்லலாம்னு பாத்தா வில்லங்கமா இருக்கும் போல இருக்கே. கொஞ்சம் எடிட் பண்ணி தர்றீங்களா மோகன் அண்ணா.
நூல்கண்டு டெக்னிக் புதுசு.
கணவக்கத்திரிக்காய் பேரு ரௌசு

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! எனக்கு அந்த யானை ஊர்வல பதிவு அனுபவம் நினைக்க சந்தோஷமாய் இருக்கும். நம் பாலைவனத்து பாணர் இப்போதெல்லாம் கச்சிதமாய் இல்லே காமென்ட் போடுறார், நமீதா டிரஸ் மாதிரி. கைவசம் ரெண்டு அழுகாச்சி கதை இருக்கு, அதைப் போட்டுட்டு ஒரு ஊர்வலம் விட்டுடலாம்.
ஹிப் ஹிப் ஹுர்ரெ!

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

சிவா! அந்த வில்லங்கத்தையும் மீறிய சுவை இந்த க.க.எ.க! வேணும்னா கடுகடுப்பு இல்லாம கத்தியை குடுக்க சொல்லி உங்க அன்பு மனைவிக்கு பரிந்துரை செய்கிறேன். விரலை வெட்டிக்காம காயை நறுக்கு சிவா!
/நூல்கண்டு டெக்னிக் புதுசு.
கணவக்கத்திரிக்காய் பேரு ரௌசு/

கவித... கவித....

! சிவகுமார் ! சொன்னது…

"கைப்புள்ள" கணவர் கழகம் சார்பாக கடும் கண்டனங்களை பதிவு செய்கிறோம்..!!

மோகன்ஜி சொன்னது…

சிவ குமார்! உடன்பிறப்பே! கை.க.க வுல என்னையும் சேர்த்துகிடுங்க ! எப்புடி ஊட்டு வேலைல இருந்து எஸ்கேப் ஆவுரதுன்னு சொல்லிட்டு போறேன்.

இதுக்கு போய் கண்டனக்கா... டண்டனக்கான்னு... பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் சொல்லிட்டேன்!

கெக்கே பிக்குணி சொன்னது…

கணவக்கத்திரின்னவுடனே இது என்னடா புதிசா இருக்கேன்னு வந்தேன். ஹிஹி, கணவர்களெல்லாம் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிச்சிட்டிருக்காங்க:-) நல்லா நகைச்சுவையா எழுதியிருக்கீங்கன்னு சொல்ல வந்தால், இது தான் சூப்பர்: //'நூல்' சுற்றினால் ப்ராம்மணக் கத்திரிக்காய்.. // :-D

இது நான் அடிக்கடி செய்யும் செய்முறை. நூல் கட்ட மாட்டேன் (அபிராம கத்திரின்னு வேண்ணா புதுப் பெயர் வச்சிடலாம்). கடலை (க.பருப்புக்குப் பதிலா), வெள்ளை எள்ளு, தேங்காய்த் துருவல், புளி எல்லாம் போட்டு அரைச்சு அடைச்சால் பாக்ஹ்ரா பய்கன் ஸ்டைல்ல... ஆந்திரரை மணந்த என் தமிழ்த் தோழி சொல்லிக் கொடுத்தது. அவள் செய்முறையில் கத்திரியின் பாவாடையை எடுக்க மாட்டாள்.

க.க.க.போ - இம்சை அரசன் புலிகேசி டயலாக்:-)

எல் கே சொன்னது…

/ஏதோ வீட்டிலாவது சேர்க்கிறாளே //

அந்த மட்டும் சந்தோசப் படுங்க.. இப்பலாம் ரசிகமணி கமென்ட் அளவை குறைச்சிட்டார்

kashyapan சொன்னது…

மோகன் ஜி! சிறு வயதில் கீழப்பாவூரிலிருந்து விவசாயிகள் கத்திரிக்காய் விற்பார்கள்".சித்திரா" நதி நீருக்கென்றே ருசி இருக்கும். ஒரு விதை இருக்காது. அவ்வளவும் கதுப்பாக இருக்கும். புளிக்காத தயிர்விட்டு பழயது சாப்பிடும் போது சுடச்சுட காரமான எண்ணேய்கத்தரிகாய் ...ஆகா...ஆகா...60வது70வருடங்களுக்குமுன்பு... சாமி ..இப்பொது கத்திரிக்காய் சாப்பிடுவத நீறுத்திவிட்டேன்...பாவிகள் B.T. கத்திரிக்காயையும் அதொடு செர்த்து விற்கிறார்கள்....குழந்தைகளுக்கு மிகவும்கெடுதல்...காஸ்யபன்

மோகன்ஜி சொன்னது…

வாங்க கெக்கே பிக்குணி! கணவக்கத்திரிக்கா ன்னு புதுப்பேரா வச்சா உங்களைப் போல நல்ல பதிவர்கள் நாலு பேர் பார்க்க மாட்டீங்களா என்றுதான் வைத்தேன்.

வை.கோபாலக்ரிஷ்ணன் சாரும் நீங்களும், கத்திரிக்காய்க்கு 'பாவாடை பாவாடை'ன்னு சொல்லிண்டே இருந்தா நேக்கு கூச்சமா இருக்காதா? போங்கோன்னா....
அதை தொப்பின்னு சொன்னேன் பாத்தேளா? அது...

இங்கு ஆந்திராவில் புளிக்கரைச்சல், வெந்த பருப்பு இவற்றால் கொஞ்சம் அடர்த்தியாய் கிரேவி செய்து அதிலே தயாரான கத்தரிக்காயை சேர்த்து பிரட்டும் முறையும் உண்டு.

(நாக்கை அறுக்க!)

நீங்கள் சொன்ன ரேசிபியையும் செய்து பார்க்கிறேன்... அதாவது செய்து பார்க்க சொல்கிறேன் என் மனைவியிடம்..

ஸ்..ஸ். அப்பாடா!
//க.க.க.போ-இம்சை அரசன் புலிகேசி டயலாக்:-)//

ரொம்ப நன்றி தக்குடு. நேத்துல இருந்து பாலா சொன்னதை என்னான்னு பிச்சுக்கிட்டு இருந்தேன். வருகைக்கு நன்றி! அடிக்கடி வாங்க!

மோகன்ஜி சொன்னது…

எல்.கே! உங்க கண்ணுல மாட்டிடிச்சா!
"கைப்புள்ள" கணவர் கழகம்ன்னு சிவகுமார் ஆரம்பிச்சிருக்காரே! பார்த்தீங்களா! உறுப்பினர் ஆகிட வேண்டியது தான்..

ரசிகமணி மேட்டரை கொஞ்சம் சீரியஸா டீல் பண்ணனும். இப்பல்லாம் முத்து உதிற்ற மாதிரி இல்லே
ஆயிடுச்சி! கவனிங்க!

அமைதிச்சாரல் சொன்னது…

முழுக்க முழுக்க கணவர் செஞ்சாத்தானே அது கணவக்கத்தரிக்காய் ஆகும்.. இங்கே அரைக்கறதும் வதக்கறதும் தங்க்ஸ்தானே பண்றாங்க :-)))

அண்ணி சொல்லிக்கொடுத்ததை அப்படியே எங்களுக்கும் சொல்லிக்கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி :-)

சாய் சொன்னது…

அண்ணி சொல்லிக்கொடுத்ததை அப்படியே எங்களுக்கும் நகைச்சுவையாய் சொல்லிக்கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி

//உங்க மன்னி அதுக்கு சான்சே குடுக்குறதில்லை. பிள்ளைகள் பள்ளிப் பருவத்தில் சமையலுக்கு உதவியது உண்டு.இப்பல்லாம் சமையல் கட்டிலேயே என்னை சேர்க்கிறதில்லை.. ஏதோ வீட்டிலாவது சேர்க்கிறாளே என்று என் நளபாக வித்தையை அடக்கி வைத்திருக்கிறேனாக்கும்!//

ஐயோ பாவம். உங்கள் திறனை என்னைப்போல் அப்படியே போட்டு அமுக்கிவிட்டார்களே மன்னி !

இந்த முறை இந்தியா விஜயம் போது ஸ்ரீராம் மற்றும் ஆர்.வி.எஸ்ஸை பார்க்க முடியவில்லை. வலது கையை தூக்க முடிவதில்லை. அதனுடன் சேர்ந்து வயிற்று போக்கு வேறே. எப்படியோ இங்கே தாய் தந்தை ஊருக்கு திரும்பி போகும்முன் வந்தால் போதும் என்றாகிவிட்டது.

எமனுக்கே வைத்தியம் பார்க்க இன்சூரன்ஸ் அருள் இருந்தால் தான் இங்கே அமெரிக்காவில் நடக்கும் அதனால் எனக்கு எம்மாத்திரம் - கையை பழுது பார்க்க வெயிட் செய்துக்கொண்டு இருக்கின்றேன்.

பத்மநாபன் சொன்னது…

அன்புக்கு நன்றி மோகன்ஜி... எல்கே .. இப்ப புதிதாக சேர்ந்துள்ள கம்பெனியில் பொறுப்பு சற்று கூட ... அடைப்புக் குறி காரணம் ...இந்த அலுவலக கம்ப்யுட்டரில் வலைப்பூ மற்றும் சமூக வலைத்தளங்களை தடை செய்துள்ளார்கள் ....
இன்னொரு முக்கிய காரணம் ... மாலையில் உடற்பயிற்சிக் கூடத்தில் அதிக நேரம் செலவு செய்கிறேன் ( இந்த தடவை சீர் செய்யாவிட்டால் உங்கள் பெயரை ''சீனி'' வாசன் என்று மாற்றிவிடுவோம் என அப்போலோ எச்சரிக்கை விடுக்க .....மருந்து பக்கம் போகக் கூடாது எனும் ஆரோக்கிய வீம்பில் ஓட்டமும் ஆட்டமுமாக இருக்கிறேன் )
கிடைக்கும் இடைவெளியில் முக்கியமான பதிவுகளை தவற விடுவதில்லை .... ... நடத்துங்க .... ம் .... ரைட்டு .... அருமை ... இந்த மாதிரி டெம்பிக்கள் போடுவது எனக்கு சுத்தமாக பிடிக்காது என்பது உங்களுக்கே தெரியும் .... படித்த வரையில் பதிவை ஒட்டி இரண்டு வரியாவது போடுவதில் குறியாக இருக்கிறேன் ...

சாய் சொன்னது…

//பத்மநாபன் சொன்னது… இன்னொரு முக்கிய காரணம் ... மாலையில் உடற்பயிற்சிக் கூடத்தில் அதிக நேரம் செலவு செய்கிறேன் ( இந்த தடவை சீர் செய்யாவிட்டால் உங்கள் பெயரை ''சீனி'' வாசன் என்று மாற்றிவிடுவோம் என அப்போலோ எச்சரிக்கை விடுக்க .....மருந்து பக்கம் போகக் கூடாது எனும் ஆரோக்கிய வீம்பில் ஓட்டமும் ஆட்டமுமாக இருக்கிறேன்) //

What ? How come ?

மோகன்ஜி சொன்னது…

காஸ்யபன் சார்!நீங்கள் எப்போதோ சாப்பிட்ட கத்திரிக்காயை விவரித்து எங்களையும் ஏங்க வைத்து விட்டீர்கள். கத்திரிக்காயில் தான் எத்தனை ரகம்? எத்தனை சமையல் வகைகள்? மாநில வாரியாய் இந்தக்காய் தான் எப்படியெல்லாம் சமைக்கப் படுகிறது? ஆயுர்வேதத்தில் சரும நோய்கள் இருந்தால் இந்தக் காயை சாப்பிடக் கூடாதாமே?
காச்யபன் சார்! B.T பற்றி நீங்கள் பதிவே போடலாமே?
அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும் சார்!

மோகன்ஜி சொன்னது…

முழுக்க முழுக்க கணவர் செஞ்சாத்தானே அது கணவக்கத்தரிக்காய் ஆகும்.. இங்கே அரைக்கறதும் வதக்கறதும் தங்க்ஸ்தானே பண்றாங்க :-))

அப்படி வரீங்களா? நீங்கல்லாம் அரைக்கிற போது
அரைபடறதும், வதக்குறபோது வதங்கறதும் நாங்க தானே தங்கச்சி! பேரையாவது போட்டுக்குறோமே!

"கைப்புள்ள" கணவர் கழகம் வந்தால் தான் சரிப்படும்.

மோகன்ஜி சொன்னது…

சாய்! வாங்க! நம்ம ரெண்டு பேருக்கும் ரொம்ப ஒத்துமை இருக்கு நண்பரே!
உங்கள் கைவலி எனக்கு கவலையாய் இருக்கிறது. இங்கேயே சரி பண்ணிக்கொண்டு போவீர்கள் என எதிர்பார்த்தேன். கவனமாய் இருக்கவும்.

உங்களுக்கு தெரியுமா? உலகத்தில் சிறந்த சமையல் செய்பவர்கள் ஆண்கள் தான்! நளன், பீமன்,அறுசுவை நடராஜன், மோகன்ஜி மற்றும் சாய்!
சரிதானே?

மோகன்ஜி சொன்னது…

பிரிய பத்மநாபன்! உங்கள் புதுப் பணியில் சீக்கிரமாகவே செட்டில் ஆகிடுவீங்க. உடற்பயிற்சி செய்வது குறித்து மிக்க சந்தோஷம். 'சிக்ஸ் பேக்ஸ் பத்து ' ஆக வாழ்த்துக்கள். நானும் கூட வருடத்துக்கொருமுறை ஜிம்மில் சேருவேன். அப்புறம் போகாம இருக்க என்ன காரணம்னு பார்த்துகிட்டு இருப்பேன் என்று வீட்டுக்காரம்மா சொல்றாங்க. அவ்வளவு மோசம இல்லை பத்து முறை சேர்ந்திருப்பேனோ என்னவோ?

இனிய மனிதரே! 'சீனி'வாசன் ஆக மாட்டீர்! வாழ்க!

பத்மநாபன் சொன்னது…

//What ? How come ?//சாய் .... சஞ்சித கர்மா என ஒன்று இருக்கிறதே. அது அவ்வளவு சிக்கிரம் விட்டு விடுமா.. கவனிப்பின்மை தான் முக்கியக் காரணம். ஒடி துரத்தி எல்லை விட்டு தாட்டியாச்சு ..பராமரிப்பு தான் அதி முக்கியம்..

பத்மநாபன் சொன்னது…

//போகாம இருக்க என்ன காரணம்னு // சக்கரையின் அளவில் அக்கறை எனும் காரணம் ஓட வைக்கிறது அதனால் உபரி நன்மையாக நாள் முழுவதும் சுறுசுறுப்பு.. நேரத்துக்கு தூக்கம்....

வாழ்த்துக்கு நன்றி....

geetha santhanam சொன்னது…

கணவக் கத்திரிக்காய் சூப்பர்.
//சற்றே வறண்ட குரலில் செய்முறையை கணவருக்கு விளக்கவும். பட்சி இந்த நேரத்திலும் பறந்துவிட வாய்ப்பிருக்கிறது. ஒரு கத்திரிக்காயை வேண்டுமானால் வெட்டிக் காண்பிக்கலாம்//
எதுக்கு வேலையை ஒழுங்க செய்யலேன்னா இதான் கதி என்று மிரட்டவா?
நூல் கட்டற மேட்டர் நிஜமா இல்ல நீங்க விடற நூலா? ஏன்னா நூல் சரியாப் பிரியாமல் வாயில் வந்து மாட்டித்துன்னா, அதான் கேட்டேன்.

கோவை2தில்லி சொன்னது…

நகைச்சுவையோட எண்ணெய் கத்திரிக்காய் கறி பெருங்காய மணத்தோடு ரொம்ப சூப்பரயிருந்தது. ஆனா பாருங்க கணவரே இதை செய்தால் தான் கணவக்கத்திரியின் சுவை கூடும் என்று நினைக்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

சர்க்கரை பற்றி அதிகம் மனதில் கவலையும், உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடின்மையும் , உடலுழைப்பு இல்லாத வாழ்க்கையும் சர்க்கரையின் அளவை கூட்டிவிடும். கவனம் தேவை. தனியாக இதைப்பற்றி கும்முவோம். கவலையை முதல்ல விடுங்க. வாங்க நண்பர்களே! சூடா,சக்கரைத் தூக்கலா ஒரு கும்பகோணம் டிகிரி காப்பியை சாப்புடுவோம் முதல்ல!

மோகன்ஜி சொன்னது…

//எதுக்கு வேலையை ஒழுங்க செய்யலேன்னா இதான் கதி என்று மிரட்டவா?//

அம்மாடி! இப்படி ஒரு கோணம் இருக்கோ? இனிமே கத்தியை கையில் வாங்கும் போது கவனமாய் இருப்பேன் சாமி!

'நூல்' விவகாரத்துக்கு பதில் ...ஹி...ஹி...
பத்தாம் நம்பர் நூல் போறுங்க.. மாஞ்சா நூலெல்லாம் வேண்டாம்.

நூல் கட்டறது உள்ளே வச்ச மசாலா கொட்டாம இருக்கத்தான். கிளிப்பு கூட போடலாம் தான். தெரியாம முழுங்கிட்டா, கிளிப்பை விட நூல் தான் சீக்கிரமா ஜீரணம் ஆகும். அதுக்குத் தான் நூல் கீதா மேடம் !

மோகன்ஜி சொன்னது…

வெங்கட் நாகராஜ் பின்னூட்டத்தில் அனுபவம்
பேசுகிறதுன்னாருங்க.. என்னைச் சொல்றோரோன்னு கிடந்தேன் .இப்ப...இப்ப புரியுதுங்கம்மிணி...

கை.க.கழகத்துக்கு ஒரு எழுச்சியான தலைவர் எங்களுக்கு கிடைச்சிட்டார். அவரு ஒத்துக்க வேண்டியதுதான். துவக்க விழாவை எப்படி நடத்துறோம் பாருங்க!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

//கை.க.கழகத்துக்கு ஒரு எழுச்சியான தலைவர் எங்களுக்கு கிடைச்சிட்டார்.//


”அவன் இல்லை! வரமாட்டான்! நம்பாதே!!!” திருவிளையாடல் நாகேஷ் வசனத்தினை கொஞ்சம் மாற்றி ”நான் இல்லை… வரமாட்டேன்… நம்பாதீங்க!” அது தான் எனது பதில். தலைவர் பதவிக்கு நாங்க என்னிக்குமே ஆசைப்படறதில்லை ஜி!

அறிவன்#11802717200764379909 சொன்னது…

@ மோகன்ஜி
||தெரியாம முழுங்கிட்டா, கிளிப்பை விட நூல் தான் சீக்கிரமா ஜீரணம் ஆகும். அதுக்குத் தான் நூல் கீதா மேடம் ! ||

ராசாக்களா,
ரெண்டுமே ஜீரணம் ஆகிற வஸ்து இல்லை.
என்ன நூல் ரத்தக் களறி இல்லாம வந்துடும்,மத்தது அப்படி இல்ல..
:))
அய்யா,என்னமா யோசிக்கிறீங்க காரணத்த?
நல்லாருங்க...

சாய் சொன்னது…

//பத்மநாபன் சொன்னது… சக்கரையின் அளவில் அக்கறை எனும் காரணம் ஓட வைக்கிறது அதனால் உபரி நன்மையாக நாள் முழுவதும் சுறுசுறுப்பு.. நேரத்துக்கு தூக்கம்....//

I have lost both the last 6 odd months. Just going through the motion in fact

பாரதசாரி சொன்னது…

பாக்கியம் ராமசாமி , கடுகு , தேவனுக்குப் பிறகு ஒரு அற்புதமான நகைச்சுவை படைப்பை தந்ததற்கு முதற்கண் நன்றி. பதிவைப் படித்து விட்டு என்னை ஒரு கிலோ எக் ப்ளாண்ட் (இந்த ஊரில் அப்படித்தான் சொல்கிறார்கள்) வாங்கிவர என் மனைவி என்னைப் பணித்தால் , என் சாபத்திற்கு ஆளாவீர்கள் என்பதையும் அன்போடு சொல்லிக்கொள்கிறேன் :-)

பாரதசாரி சொன்னது…

Dear Mohanji ,
if you have not read this before. pls see..

http://kadugu-agasthian.blogspot.com/2010/08/blog-post_18.html

Matangi Mawley சொன்னது…

:) LOL... ippadi oru samayal kurippai naan padichchathe illa! ippo varaikkum...
:)

aanaa engaathla--- amma/appa rendu perukkum equal pangu irukkum samayal-la... amma-ku samayal solli koduththathe appa thaan... ithu appa en kitta utta udaans-kidayaathu... amma ve sonnathu! :)

really enjoyed reading it!

மோகன்ஜி சொன்னது…

பிரிய வெ.நா! கொஞ்சம் லேட்டாயிடுச்சி! அன்பரே! இது நீங்களா சேர்த்த கூட்டம் இல்லீங்க! தானா வந்த கூட்டம்! வெற்றி நாயகன் வெ.நா வாழ்க! அட பார்த்தீங்களா! 'வெ'ற்றி 'நா'யகன்ல கூட வெ.நா வருது !

மோகன்ஜி சொன்னது…

அறிவன் சார்! சரியா போட்டீங்க!

மோகன்ஜி சொன்னது…

என் பிரிய சாய்! எல்லாம் சரியாகும்.. YOU WILL BE A PICTURE OF HEALTH SOON.

மோகன்ஜி சொன்னது…

பாரதசாரி சார்! வாங்க.. கவலைப்படாதீங்க! கொஞ்சம் கொஞ்சமா பழக்கிகுங்க பிரதர்! 'கைப்புள்ள கணவர் கழகம்' எதுக்கு இருக்கு. லைப் மெம்பரா
சேர்ந்தீங்கன்னா ஒரு கத்தியும், கண் துடைக்க கர்சீப்பும் தருவோமில்ல?

//பாக்கியம் ராமசாமி , கடுகு , தேவனுக்குப் பிறகு ஒரு அற்புதமான நகைச்சுவை படைப்பை தந்ததற்கு முதற்கண் நன்றி//

உங்கள் அன்புக்கு நன்றி! அவங்கல்லாம் கல்யாண சமையல்.. நானோ வெறும் புரோட்டா மாசஸ்டர்ர்ர்ர்

மோகன்ஜி சொன்னது…

பிரிய மாதங்கி! அப்பா சமையல் செய்வது குழந்தைகளுக்கு ஏனோ பிடித்துப் போகிறது. அம்மாவின் சமையல் கைப்பக்குவத்தால் என்றால் அப்பாவின் வாஞ்சையுடனான சமையல் மனப்பக்குவத்தால் அன்றோ?

உங்க சமயல்கட்டு பற்றி ஒன்றும் சொல்லவில்லையே மாதங்கி!

ரிஷபன் சொன்னது…

ஒரு சமையல் குறிப்பை இத்தனை அழகாய் சொல்ல முடியுமா.. ஜமாய்த்து விட்டீர்கள்

சிவகுமாரன் சொன்னது…

\\அப்பா சமையல் செய்வது குழந்தைகளுக்கு ஏனோ பிடித்துப் போகிறது.//
அது அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து நடத்துற நாடகம். "அப்பா வைக்கிற சாம்பார் சூப்பரா இருக்குல்ல, அப்படியே அப்பத்தா கைப்பக்குவம்." - இது கூட்டணிப் பிரச்சாரம்.

♔ம.தி.சுதா♔ சொன்னது…

அடடா காலையே அருமையான உணவு ஒன்றுங்க...

ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)