வெள்ளி, அக்டோபர் 08, 2010

இவ்விரவு நானிங்கே துயில வேண்டும்

அண்மையில் சுகவீனப் பட்டிருந்த என் அம்மாவைப் பார்க்க சென்னை வந்திருந்தேன். ஆன பிராயம் என்பத்துநான்கையும்
காலம் அவள் மேனியில் கோட்டோவியமாய்த் தீட்டியிருந்தது.
மூன்று தலைமுறைக்கு மைய வேராய், குடும்பத்தின் அச்சாணியாய் சுழன்றவள், மூப்பின் நொய்வில் தளர்ந்து படுத்திருந்தாள், துலக்கி வைத்த குத்துவிளக்கை கிடத்தி வைத்ததுபோல்....கண்கள் பனித்திடப் பார்த்தபடி நின்றேன்..

நினைவலைகள் பின்னோக்கி தளும்ப... ஆம்... இதேபோல் ஓர்நாள் என்  முன்னே அவள் களைத்துப் படுத்திருந்தாள் பல ஆண்டுகளுக்கு முன்...பொங்கி வந்த உணர்வுகளைக் கவிதையாய் வடித்தது நினைவுக்கு வர, அந்த பழைய கவிதையைத் தேடி பிடித்தேன்..
இளமையின் வாசலில் நானிருந்தகாலை எழுதியதில், இன்னும் மெருகூட்டத் தோன்றிய போதும், அந்த நினைவை உதறிவிட்டு, எழுதிய வண்ணமே இங்கு பதிவிடுகிறேன்....


இவ்விரவு நானிங்கே துயில வேண்டும் என்தாயின்
செவ்விதழ்கள் தாலாட்ட மென்விரல்கள் உடல்வருட,
உலகத்தை நான்மறந்து உறங்கவேண்டும்: அவள்மடியில்
மலர்ச்செண்டாய்  மாறிநான் மணக்க வேண்டும்.  

போலிகளை நானிங்கே புகழ்ந்ததுபோதும் இதயத்து
வேலிகளை தாண்டிமனம் களைத்தது போதும்.: நிதமிங்கே
கூலிக்கு பொய்மூட்டை சுமந்தது போதும்: அன்னையவள்
காலிலென் தலைவைத்தே ஓய்தல் வேண்டும்.   

வெண்ணிலவில் ஔவை வடைசுட்ட கதைகேட்டு,
கண்ணிரண்டில் துயில்பரவ அவள்கரம் நான்பற்றி
மண்ணில்விரித்த அவள் முந்தானைமணம் முகர்ந்து,
விண்ணேறித் தாரகை திரள்களோடு மிதக்க வேண்டும்.


கயமையோடு நான்பழக நேர்ந்ததுபோதும் இருள்நெஞ்ச
மையல்களில் என்மனது அலைந்ததுபோதும் : பாவத்தின்
செயல்களினை என்கண்கள் பார்த்ததுபோதும் பாசத்தின்
உயர்வுகளைத் தாய்மடியில் உணரவேண்டும்.

அன்னையவள் மடிமீண்டு குழந்தையாகி- அவள்தம்
மென்விழிகள் சிந்தும் நீரென் சிரத்தில் ஏற்று தெய்வ
சன்னதியின் சாந்தியவள் அருகாமை  என்றுணர்ந்தே
என்னுயிரை அவளுக்கென இருத்தல் வேண்டும்.


.

40 comments:

Chitra சொன்னது…

வெண்ணிலவில் ஔவை வடைசுட்ட கதைகேட்டு,
கண்ணிரண்டில் துயில்பரவ அவள்கரம் நான்பற்றி
மண்ணில்விரித்த அவள் முந்தானைமணம் முகர்ந்து,
விண்ணேறித் தாரகை திரள்களோடு மிதக்க வேண்டும்.


......இந்த வரிகளை வாசிக்கும் போதே, அப்படியே தாயன்பில் மூழ்க வைத்து விட்டீர்கள்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க சித்ரா ! ஆண்டவன் ஒரு நம்பிக்கை! தாயோ நிதர்சனம்! நன்றி சித்ரா !

Balaji saravana சொன்னது…

ரொம்ப நெகிழ்வா இருக்கு மோகன் சார்!
//ஆண்டவன் ஒரு நம்பிக்கை! தாயோ நிதர்சனம்//
உண்மை உண்மை..
ஊணுறக்கம் உதறி நம்மை உயிர்ப்பிக்க வைத்தவளல்லவா அம்மா!

RVS சொன்னது…

"அம்மா என்றழைக்காத உயிரில்லையே.... அம்மாவை வணங்காது உயர்வில்லையே..நேரில் நின்று பேசும் தெய்வம்.." மோகன்ஜி உங்களை மாதிரி கவிதை எழுத வராது எனக்கு. அதனால் வாலியை துணைக்கு கூட்டிக்கொண்டு வந்தேன். ;-) அம்மாவே கவிதையாக வடித்த உமக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

மோகன்ஜி சொன்னது…

உண்மை பாலா!(உங்களை அப்படியே கூப்பிட்டு வருகிறேன்.. சரிதானே?)
ஆண்டவன் அனைத்து இடத்திலும்,ஒரே சமயம் தான் இருப்பதற்கு யோசித்தே தாயைப் படைத்தான் என்பார்கள்..

அருண் பிரசாத் சொன்னது…

தாய் அன்புக்கு ஈடு ஏதுங்க!

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஆர்.வீ.எஸ்! நீங்கள் குறிப்பிட்ட கவிஞர் வாலியின் 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' பாடலை திருச்சி ஐயப்பன் கோவிலில் இடைவிடாது ஒலிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நான் எப்போது அங்கு சென்றாலும் அந்த தாய் சதுக்கம் முன் நின்று உலகத்து தாய்களுக்கெல்லாம் சேயாய் நின்று வணங்குவதுண்டு.

மோகன்ஜி சொன்னது…

வாங்க அருண்! தாய் அன்புக்கு ஈடு இருக்கலாமோ என்னமோ.. நாம் வணங்கும் தெய்வம் நம்மை தாங்கி அணைத்தால்... வருகைக்கு நன்றி அருண்!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அம்மா பாசத்தில நாமெல்லாம் திளைத்து மகிழ்ததும், அதற்க்கு இன்னமும் உள்ளுக்குள் ஏங்கி மௌனமாய் தவிப்பதும் நமெக்கெல்லாம் பொதுவான ஒன்றுதான் இல்லையா?

--

மோகன்ஜி சொன்னது…

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே! ஏனைய உறவுகளில் அதிக அண்மையும் ஒட்டுதலும் இருந்தாலும் , எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாதது தாயன்பு ஒன்றே! தாய்மடிக்கான ஏக்கம் ஒன்றே இன்னமும் நாம் ஈரமுள்ள மனிதர்கள் என்று நினைவுறுத்துகிறது.

Balaji saravana சொன்னது…

//பாலா.. உங்களை அப்படியே கூப்பிட்டு வருகிறேன்.. சரிதானே?
நானும் அப்படி அழைப்பதைத்தான் விரும்புவேன் :)

மோகன்ஜி சொன்னது…

நன்றி பாலா! இனி அப்படியே அழைப்பேன் உங்களை!

பத்மநாபன் சொன்னது…

தாய்மை வேறு, கடவுள் வேறா .... ஆம் கடவுளைக் காட்டிலும் உயர்ந்தது தாய்மை...இறைமையும் தாய்மையிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டே இருக்கிறது...அனாலும் தாய்மையை மிஞ்ச முடியாது.
உருக்கமான கவிதை. நன்றியோடு வணக்கங்கள்.....

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன் என்ன அழகாகச் சொல்லி விட்டீர்கள்?

//இறைமையும் தாய்மையிடமிருந்து பாடம் கற்றுக்
கொண்டே இருக்கிறது//
ஒரே சொற்றொடரில் ஒரு கவிதை அல்லவா சொல்லியிருக்கிறீர்கள்?
உங்களுக்கு முன்னரே கூட ஒரு கவிஞர் ஒரு வரியில் கவிதை சொன்னதுண்டு.. அதில் கூட தாயை வைத்துத்தான் அவரால் எழுத முடிந்தது.

கவிஞர் : கவிக்கோ அப்துல் ரகுமான்
கவிதை தலைப்பு: குறள்
கவிதை: 'மும்முலைத்தாய்'

எஸ்.கே சொன்னது…

மிக அருமையான வரிகள்! நன்றி!

மோகன்ஜி சொன்னது…

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி எஸ்.கே சார்!

சிவா சொன்னது…

என்ன சொல்றதுஜி! ரொம்ப உணர்ச்சிப் பூர்வமான ஒரு கவிதை!

இராமசாமி கண்ணண் சொன்னது…

நெகிழ செய்து விட்டிர்கள்..

நிலாமதி சொன்னது…

உங்கள் கவிதை மழை அருமை . கடவுளை கண் கொண்டுபார்க்க் முடியாதென்பதால் தான் இறைவன் தாயை படைத்தான் என்று சொல்வார்கள். எல்லை யிலாதவள் தாய். தன்னை ஈந்தவ்ள் தாய்

அப்பாவி தங்கமணி சொன்னது…

Simply Superb... It made me cry a bit and wanted to see my mom right now...

எம் அப்துல் காதர் சொன்னது…

அம்மா! அம்மா!! அம்மா!!! ....
எங்கள் அம்மா அவர்களை 'வழியனுப்பி' விட்டு உங்கள் கவிதையில் தேடுகிறோம். அம்மா!... அம்மா, நீங்கள் இல்லாமல் நாங்களும்...(நினைவை திரும்ப கொண்டு வந்து விட்டீங்களே என்னருமை நண்பா!!)

ஹேமா சொன்னது…

அம்மா என்னும் சொல்லே ஒரு கவிதை.
கவிதைக்குக் ஒரு கவிதை. நெகிழ்வு,பாசம்,அணைப்பு,அன்பு எல்லாம் கலந்திருக்கிறது அண்ணா.

அப்பாதுரை சொன்னது…

உங்கள் அம்மாவுக்கு என் வணக்கங்கள்.
ரொம்ப இறுக்கமான பதிவு.

அப்பாதுரை சொன்னது…

எந்த வித எதிர்பார்ப்பும் எள்ளளவும் கலக்காத அன்பு அம்மாவுடையது தான்.. புரிய வேண்டிய வயதில் புரியவில்லையே? 'என்னைப் பெறவேண்டும் என்பதற்காகவே பிறவித் துன்பம் ஏற்றவள்' என்று தான் என் அம்மாவைப் பற்றி அடிக்கடி நினைப்பேன். உங்கள் வரிகளைப் படித்ததும் நெஞ்சம் கனக்கிறது.

மோகன்ஜி சொன்னது…

நன்றி சிவா!

மோகன்ஜி சொன்னது…

வாங்க ராமசாமி கண்ணன்!அம்மா வந்தப்புறம் தான்
வரணும்னு இருந்தீங்களோ நண்பரே! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

மோகன்ஜி சொன்னது…

உண்மை நிலா மதி! அழகாகச் சொன்னீர்கள்! முதல் வருகைக்கும் அன்புக்கும் நன்றி சகோதரி!

மோகன்ஜி சொன்னது…

அப்பாவி தங்கமணி மேடம்! நெகிழ்ச்சியான பின்னூட்டம்.. உங்கள் அம்மாவுக்கும் என வணக்கங்கள்!

மோகன்ஜி சொன்னது…

காதர் பாய்! நாம் வழியனுப்பினாலும் தாய் போவாளில்லை.. உங்கள் கண்ணீரில், அன்பில்,குழந்தைகளின் சிரிப்பில்,குதூகலங்களின் வெளிப் பாட்டில்.... எங்கும்... எங்கும்... கலந்து உங்களைச் சுற்றியே காத்து நிற்பவளை அப்படி வழி அனுப்பி விட்டேன் என வேண்டாம் சகோதரா!

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஹேமா! அழகான வரிகள்! நம்மிருவருக்கும் ஒருத்தியே அல்லவா இரண்டு தாய்களாய் மாறி வாழ்கிறாள்?

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி! உங்கள் கருத்துக்கள் என்னை நெகிழ்வுறச் செய்கின்றன! அம்மாக்கள் நாம் புரிந்து கொள்கிறோமா என்று எதிர்பார்ப்பதில்லை.அன்பு செலுத்துவதோன்றே அறிந்தவள் தாய்..

ஆதிரா சொன்னது…

//போலிகளை நானிங்கே புகழ்ந்ததுபோதும் – இதயத்து
வேலிகளை தாண்டிமனம் களைத்தது போதும்.: நிதமிங்கே
கூலிக்கு பொய்மூட்டை சுமந்தது போதும்: அன்னையவள்
காலிலென் தலைவைத்தே ஓய்தல் வேண்டும்.//

விழி பதிந்த, மொழி பதிந்த, நம் உயிர் பதிந்த உண்மைத்தெய்வத்திற்கு, முதல் தெய்வத்திற்கு (அன்னையும் பிதாவும்,} மாதா, பிதா குரு தெய்வம்) தங்கள பதித்த கவிதையில் அன்னையும் வாழ்வாள். அன்னைத் தமிழும் வாழும்...

மோகன்ஜி சொன்னது…

அழகான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதிரா.

drbalas சொன்னது…

இயல்பான எதுகைகளோடு தளை தட்டாத அருமையான கவிதை

மோகன்ஜி சொன்னது…

ரொம்பவே நன்றி டாக்டர்.. இந்த கவிதையை நான் என்
பத்தொன்பதாவது வயதில் எழுதினேன். ஒரு வரி கூட மாற்றாமல் இப்போது பதிவிட்டேன்.. உங்கள் பாராட்டு எனக்கு தமிழூட்டிய ஆசிரியப் பெருமக்களுக்கே போய்ச் சேர வேண்டும். நன்றி!

NIZAMUDEEN சொன்னது…

//பாசத்தின் உயர்வுகளைத் தாய்மடியில் உணரவேண்டும்.//

க'விதை'யை திருத்தம் செய்யாமல் எழுதினபடியே
வெளியிட்டது, நன்று! அதன் சொல்வளம் கவிதை
முழுதும் வெளிப்படுகின்றது. தாயின் உய(யி)ர்
பண்புகளை ஒவ்வொரு வார்த்தையும் உள்ளடக்கி
வைத்திருக்கின்றது.

மோகன்ஜி சொன்னது…

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நிஜாமுதீன்!

நிலாமகள் சொன்னது…

திருமணமாகிய பின்னும் ஊருக்குச் செல்லும் போதெல்லாம், வாசல் குறட்டில் அம்மாவை அமர்த்தி மடிமீது தலைவைத்து சற்றேனும் படுத்த பின்பே மறுபடி கிளம்புவேன். இப்போதெல்லாம்... அவ்வீடு பெரிய அக்கா வசமிருக்க போகும்போதெல்லாம் அதே குறட்டில் சற்று அமர்ந்து எழுந்து வருகிறேன். இன்று உங்க கவிதை வரிகளால் மானசீகமாக அங்கமர்ந்திருக்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி நிலா! உங்கள் தாய்க்கு நீங்கள் செய்யும் மரியாதை, அவளைப் போன்றே அன்பு செய்வதில் தானே இருக்கிறது. நேசம் நிறைந்த என் சகோதரியின் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்!

நிலாமகள் சொன்னது…

கொஞ்சம் நேரமேனும் கண் அசந்தீர்களா சகோ...?

http://nilaamagal.blogspot.in/2010/07/blog-post.html#comments

உறுத்தும் நினைவுகளை கண்ணீரால் சமன் செய்வோம்.