வெள்ளி, மார்ச் 23, 2012

ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகம்

என் அன்பு சொந்தங்களுக்கு,
தாயை இழந்து நான் தவித்த நேரம்
ஆறுதல் சொன்ன அத்தனை அன்புக்கும்....
நன்றி ஒரு சிறு வார்த்தை.

இன்று மனதில் அலையடித்துக் கொண்டிருக்கும் ஆதிசங்கரரின் ‘மாத்ரு பஞ்சகம்’ எனும் ஐந்து  சுலோகங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள என் நொந்த மனம் துடிக்கின்றது. பற்றி அழ, வேறு தோள்களை எங்கே தேடுவேன்?
என் தமிழாக்கம் இப்போதைய மன நிலை காரணமாய் ஒரு மாற்று குறைந்திருந்தால் மன்னிக்கவும். மீண்டும் செப்பனிடுவேன்.

இப்போது பகிர்தல் ஒன்றே அவசரம்.....

தேவையெனின் பின்னூட்டங்களில் சில விளக்கங்கள் தர முயல்வேன்.
  
ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகம்


என் தாயே!
நான் இவ்வுலகில் ஜனித்த நேரம்,
பிரசவ காலப் பெருவலியை
பல்லைக் கடித்துப் பொறுத்தாய்.

சுளிப்புதர  நான் அசுத்தம் செய்த படுக்கையை
களிப்புடன் பரிவாகவே நீ பகிர்ந்தாய்.

மணிவயிற்றில் எனை நீ சுமந்த காலம்
மேனியிளைத்து வலியும் ஏற்றாய்.

இதற்கெல்லாம் ஈடாக
ஏதும் செய்தல் இயலுமோ?
எத்தனை நான் உயர்ந்தாலும்,
என்னருமைத் தாயே?
****

குருகுலத்தினில் நானிருந்து பயின்றகாலை,
துவராடை நான் தரித்து துறவு பூண்டதாய்
கனவுகண்டு அரற்றினாய்.

கடுகி வந்து கலங்கினாய்.
தடவி, தழுவியென் தலைகோதினாய்.

அருகிருந்த ஆசான்களும் மாணாக்கரும்
உருகியுன் நிலை உணர்ந்தார்கள்.
பேதையுன் பேரன்பை மறப்பேனோ?
பாதம் பற்றி பரவுதலன்றி
ஏதும் செய்தலறியேன் தாயே!

******

“அம்மையே! அப்பனே!
சிவனே! கண்ணனே!
குவலயம் காக்கும் கோவிந்தா!
ஓ ஹரி! ஓ முகுந்தா!”

என்னவெல்லாம் சொல்லிக் கதறினாய்
எனைப் பிரசவித்த வேளை?

இதற்கெல்லாம் ஈடாக
என்னருமைத்தாயே!
பணிந்துன்னை வணங்குதலன்றி
என்செய்கேன் அம்மா?

********

மரணத்தின் வாயிலில் நீ இருந்த நேரம்
அருகில் நான் இருந்தேனில்லை.

மடியேந்தி உன் தொண்டை நனைய,
குடிக்க நீரும் வார்த்தேனில்லை.

அந்திம  யாத்திரைக்காய் உனக்கேதும்
மந்திர சடங்குகள் செய்தேனில்லை.

செவிப்புலன் அடங்கும் சிறுவேளை காதருகே
தவிப்போடு ராமநாமம் உரைத்தேனில்லை.

காலம் தாழ்ந்தே  வந்து
கடமை தவறிய மைந்தனென் பிழை 
கருணையுடன் பொறுப்பாயம்மா.

*******

“ என் முத்து மணிச்சரமே!
 என் கண்மணியே!
 என் சின்ன ராஜாவே!
என் உயிரின் உயிரே!”

என்றெல்லாம் என்னைச்
சீராட்டி மகிழ்ந்தவளே!

இத்தனை அன்புக்கும்  ஈடாக
இடுவேனோ வெறும் வாய்க்கரிசி
என் கடைசி நன்றியாய்
என்னருமைத் தாயே.




செவ்வாய், மார்ச் 20, 2012

அம்மா என் அம்மா



உன் தளர்ந்த தேகம் விட்டு
வெளித்தெறித்த நரம்பினமாய்

பின்னி நீளும் சன்னக் குழல்களூடே
ரத்தமும் குளூக்கோசும் திரவங்களுமாய்......

எண்கள் பரப்பி மினுக்கும் மானிட்டர்கள்
நீலமும்,சிவப்பும் பச்சையுமாய்,,,,,

அவற்றின் விகிதாச்சாரத்தில்
தொங்கும் உன் வாழ்க்கைக் கணக்கு.

அம்மா!

கால ஓட்டம் உன்னைக்கூட புறந்தள்ளி
ஆலவட்டம் போடும் அவலக் கணம் இது.

உன் வாய்க் குழறலில்
நான் சொல்லவியலாதவற்றைச் சொல்கிறாயா?

உதட்டைப் பிதுக்கும் மருத்துவர்கள்.
உத்திரம் காட்டி சிலுவையிடும் செவிலிச்சேச்சி.


மரணத்தின் அண்மை சப்பணம் கொட்டியமர்ந்து
 உன் கட்டிலோரம் காத்துக் கிடக்கிறது.

நீ போனால்
எனக்கொன்றும் நட்டமில்லை.

போய் வா!

உன் காலைச் சுற்றிப் படர்ந்த
என் வாழ்க்கையைக் கொண்டாடுவேன்.

கண்ணுறும் ஒவ்வொரு தாயையும்,
நீயா நீயா எனத்தேடித் திண்டாடுவேன்.