சனி, ஆகஸ்ட் 06, 2011

ஸ்வாமிநாதம்! நேமிநாதம்?? இதி ஏமிநாதம்?!உங்களுக்கு மீண்டும் கிசுகிசு என்று இங்கு அடித்த ஒரு கும்மிப்பதிவு நினைவிருக்கிறதா ? அதில் பத்மநாபன் கருத்துக்கு கீழ்க்கண்ட பதிலைப் போட்டிருந்தேன்.

அதாகப் பட்டது பத்மநாபன்..
நன்னூலாகட்டும், தண்டியலங்காரமாகட்டும்,நேமிநாதமாகட்டும்.. பாவகைகளின் பாடபேதம் கூறப் போந்தோமெனில் ஆசிரியப்பா, பாப்புனைய.. 

மனசாட்சி போல் அவ்வப்போது வந்து உயிர்வாங்கும் என் நண்பனிடமிருந்து அந்தப்பதிவு வந்தவுடனே ஒரு குறுஞ்செய்தி...

ஸ்வாமிநாதம்! நேமிநாதம்?? இதி ஏமிநாதம்?!’

இந்தக் கேள்வியின் வசீகரம் இந்தப் பதிவைத் தூண்டியது.

ஸ்வாமிநாதன்..

ஹ...எனக்கு இன்னொரு பேர் இருக்கு ... பாட்ஷா.. மாணிக் பாட்ஷா.. சாரி! எனக்கு இன்னொரு பேர் ஸ்வாமிநாதன். எனக்கே மறந்து போன இந்தப்பெயரைச் சொன்னால் அவன் என் மனசாட்சியாகத்தானே இருக்க வேண்டும்?!

நேமிநாதம் என்பது என்ன என்பதாய் அவன் செய்தி இருந்தது..
அதற்கு பதிலாய் “மேட்டரை வெள்ளித் திரையில் காண்க என்று பதிலனுப்பினேன். இனி நீங்களும் இந்த வெள்ளித்திரையில் காண்க!

நேமிநாதம்  

நேமிநாதம் என்பது ஒரு இலக்கண நூல். இந்த நூலை இயற்றியவர் குணவீர பண்டிதர் எனும் சமணசமயம் சார்ந்த புலவர். 900ஆண்டுகளுக்கு முன், குலோத்துங்க சோழன் காலத்து வாழ்ந்தவர். காஞ்சி மாநகருக்கு அருகே களந்தை எனும் ரைச் சேர்ந்தவர். தொல்காப்பியத்துக்குப் பிறகு இந்த நூல் இயற்றப்பட்டது. காலத்தால் நன்னூலுக்கும் முந்தையது. நன்னூலும் வந்த வந்தபின்னர், இதன் அளவைக் கருதி சின்னூல் என்று அழைக்கப்பட்டதாய் தெரிகிறது.

இந்நூலில் சொல்,மற்றும் எழுத்திலக்கணங்களை பற்றி மட்டும் வெண்பாக்களாய், இரண்டு அதிகாரங்களாய்  இயற்றப்பட்டுள்ளது.  நூற்பெயரைத் தான் சார்ந்த சமயம் சார்ந்து அமைத்திருக்கிறார் குணவீரப் பண்டிதர். நேமிநாதர் எனும் சமணமத  தீர்த்தங்கரர் ஒருவரின் பெயரையே தன் நூலுக்கும் வைத்து அழகுபார்த்திருக்கிறார்.( சில தற்கால திரைப் படங்களின் பெயருக்கும் படத்தின் கதைக்கும் ஏதும் சம்பந்தமில்லாது இருப்பது போல் இலக்கணநூலும் அதற்கான பெயரும் பொருந்தாது நிற்பதாய்ப் படுகிறது.)
இன்னூலாசிரியரின் இன்னுமொரு நூல் வச்சணந்தி மாலை என்பதாகும்.

நூற்முதலில் புலவர் வழங்கிய அவையடக்க வெண்பா நெஞ்சை அள்ளுகிறது. கேளுங்களேன்:

உண்ண முடியாத ஓதநீர் வான்வாய்ப்பட்
டெண்ண  அமுதான தில்லையோ- மண்ணின்மேல்
நல்லாரைச் சேர்தலால் நான்சொன்ன புன்சொல்லும்
எல்லாருங் கைக்கொள்வர் ஈங்கு.

பொருள்: இந்தமண்ணில் உள்ள யாருமே அருந்தமுடியாத நிலையில் உள்ள உப்புநீர்  ஆவியாய் மேகமாகி மழையாக பொழியும் காலத்து, அதுவே அமுதமாய் பருகுவதற்கு உகந்ததாய் மாறுவதைப் போல்.,
நான் உரைக்கும் பிழைகள் மலிந்தசொற்களும் நல்லோர்களால் படிக்கப் படுதலால் அனைவரும் ஏற்கும் தகுதி பெறும்.

பெயர்கள் திரிதலை விளக்கும் வெண்பா ஒன்று பார்ப்போம்

பேராம் பெயர்பெயர்த்துப் பேர்த்தாம் ஒடுஓடாம்
நீராகு நீயிர் எவனென்ப-தோருங்கால்
என்என்னை என்றாகும் யாமுதற்பேர் ஆமுதலாம்
அன்ன பொழுதுபோ தாம்.

வழக்கில் இருந்த சில சொற்கள் எவ்வாறு திரிந்து வழங்கப்படுகின்றன என்று பட்டியலிடுகிறார். இந்தத் திரிபுகள் வழுவாய் ஆகாமல் ஏற்றுக் கொள்ளப்படும்.
பெயர்  - பேர்
பெயர்த்து பேர்த்து
ஒடு-ஓடு
நீயிர்- நீர்
எவன்-என்,என்னை
பொழுது-போது
யாவை முதலாய் உடைய பெயர்வை முதலாக்கியும் வரும் என்கிறார் (உதாரணம்யார்?-ஆர்? யானை-ஆனை)

பெரும்பாலோர்க்கு பள்ளிப் பருவத்தில் இலக்கணம் மிகவும் கடினமானதாய் தோன்றும். அக்காலத்தில் பாடல்களாகவே இலக்கணத்தை அமைத்ததற்கு காரணம், அவை மனனம் செய்ய சுலபமாய் இருக்கும் என்றுதான்.

எப்போதோ என் நண்பன் என்னைக் கேட்டது சட்டென்று நினைவுக்கு வருகிறது.

அந்தக் காலத்தில் மக்களில் சிலரே புலவர்களாய் இருந்தார்கள். நிறையபேர் போர் வீரர்களாய் இருந்தார்கள்.ஏன் தெரியுமா?”

நாட்டுப் பற்று. இதிலென்ன சந்தேகம்?”

நாட்டுப் பற்றா? ஒரு புடலங்காயும் இல்லை. புலவனாகிறதுக்குப் படிச்சா ஆசிரியன் கிட்ட எழுத்தாணியால சின்னசின்னதாய்க் குத்துவாங்கி ,கொஞ்சம் கொஞ்சமா உயிர விட்டாகணும். போர்வீரன்னா எதிரி வீசுன கத்தில டக்குன்னு போயிடலாம் . அதான் எல்லோரும் போர் வீரர்களாய்ப் போயிட்டாங்க.

இதை ஒரு இலக்கணவகுப்பு முடிந்தவுடன் சொன்னான்..

இலக்கணம் மாறுவதில்லைங்க!
  

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

பணம் என்னடா பணம் பணம்??
அண்மையில் எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது.அதன் சில கருத்துக்கள் நன்றாய் இருப்பதாய்ப் பட்டதால், தமிழாக்கித் தர விழைந்தேன். பாருங்களேன்!

1.எல்லைகளே இல்லாத தேவைகளை உருவாக்கும் பணத்தைத் துரத்துவத்திலேயே,  சின்ன எல்லைக்குட்பட்ட வாழ்க்கையை தொலைப்பதில் அர்த்தமேயில்லை.

2..அளவில்லாத பணம் ஈட்டி ஆவதொன்றுமில்லை,அதை
  செலவழிக்க எஞ்சும் வாழ்க்கை மிஞ்சாத போது!

3. செலவழிக்கப்படும் வரை, பணம் உன்னுடையதல்ல.

4. இளமையில், நம் ஆரோக்கியத்தை செலவழித்து செல்வம் தேடுகிறோம்.
  முதுமையில் செல்வத்தைக் கரைத்து ஆரோக்கியம் வாங்க முற்படுகிறோம்.
  வித்தியாசம் யாதெனின், காலம் கடந்து போவதொன்றே.  

5. ஒரு மனிதனின் சந்தோஷம் நிறைய பணம் இருப்பதால் இல்லை. அது 
  தேவைகள் குறைய இருப்பதால் தான்.

6. அன்பு செலுத்த வேண்டிய சொந்தங்களுக்கு தன் நேரத்தையும்,  
    அண்மையையும் ஒதுக்காமல், வெறும் பணத்தாலடித்து 
  ஒதுக்குகிறோமா?இல்லை ஒதுங்குகிறோமா?

மக்களே! இதெல்லாம் ஏற்புடையதா இல்லையா என்பது விவாதத்திற்குரியது தான். எதற்காக எதை இழக்கிறோம் என்பதுதான் கேள்வியே!


சரி! விடுங்க! திருந்திட்டீங்களா??

ரொம்ப சேர்த்துட்டோமேன்னு குற்ற உணர்வு ஏதும் இருக்கா?

கவலையை விடுங்க..

அந்த மனபாரத்தை சுமந்து கொண்டு திரியாமல் என்னிடம் வாங்க.

அந்த பணச்சுமையை செலுத்த வேண்டிய என் சுவிஸ் வங்கிக் கணக்கு எண்:
2ஜி3ஜி4ஜிXXXXXமோகன்ஜி, 
ஸ்வாஹா பேங்க்,
ஹரோகரா கிளை.
கோவிந்தா சிட்டி,
சுவிட்சர்லாண்டு...