ஞாயிறு, மே 29, 2011

நாட்குறிப்பிலிருந்து

நாட்குறிப்பு எழுதும் பழக்கம் எனக்கிருந்தது.
விடாமல் பல வருடங்கள் எழுதினேன்.
பின்னர் அவ்வப்போது..

காலையில் கண்ணில்பட்ட டைரியிலிருந்து சில பக்கங்கள்..
ஆந்திராவுக்கு மாற்றலாய்ப் போயிருந்த சமயம் எழுதியது


10th செப்டம்பர் 1995

இந்த ஞாயிற்றுக் கிழமை, வெற்று நாளாய் உதித்தது.
இந்த ஊருக்கு வந்து பத்துநாட்கள் ஆகிவிட்டது.
இதம்தரும் மனை நீங்கி, குழந்தைகளை விட்டுவிட்டு 
இதென்ன உத்தியோகம் என்று தோன்றுகிறது.
தோன்றக்கூடாது தான்... ஆனாலும் தோன்றுகிறதே.

ராத்திரி சரியாக தூங்கவில்லை. பிள்ளைகள் நினைவாய்...
இவ்வளவு பெரிய கெஸ்ட்ஹவுசில் தனிஆளாய்..
பெருமூச்சு கூட இங்கே எதிரொலிக்கிறது. 
காலையில் பூத்துக்குச்சென்று தொலைபேசியில் குழந்தைகளுடன் பேசினேன்.
விவேக் எனக்கு கடிதம் எழுதிக்கொண்டிருப்பதாய்ச் சொன்னான்..
அதில் அவனுடைய புது பேட்,பரீட்சை மார்க், காமிக்ஸ், எல்லாமுமாய் இருக்கும்..

அம்மாவுக்கு கடிதம் எழுதினேன்.

ரேடியோவில் ஒரு அழகான பழைய தெலுங்கு சினிமாபாடல்.
மூகமனசுலு (ஊமை நெஞ்சங்கள்) சித்ராலோ....

வரிகள் மனதை ஊடுருவிப் பதிந்து விட்டன. அந்தப் பாடலோடு ரேடியோவை நிறுத்திவிட்டு, மீண்டும்மீண்டும் அதன்  வரிகளை நினைவுபடுத்திக் கொண்டேன்.. நாளெல்லாம் நாவில்பயின்ற பாடலை தமிழ்ப்படுத்தினேன்.. 


பூமாலையில் சிரித்திருக்கும் பூக்களினூடே
         கோர்த்த நாரும் பொதிந்திருக்கும்

பூவாய் மலரும் கண்கள்தாண்டி, இதயமோ
         எதைத்தான் ஒளித்திருக்கும்?

தவிக்கும் மனதோர் ஊமைஎனினும்-அதற்கே
       மொழி ஒன்றும் இருந்திருக்கும்

செவிபடைத்த மனங்களுக்கு மட்டும்
       அதன் பேச்சும் கேட்டிருக்கும்.....

சிரித்திடினும் அழுதிடினும் விழிகளில்
       கண்ணீர் அன்றோ துளிர்த்திருக்கும்?

கண்ணீரின் கதைகள் நீ முயன்றிருந்தால்
        கண்டிப்பாய் புரிந்திருக்கும்......

திரைப்பாடல் போல் இல்லாமல் கொஞ்சம் செய்யுள் போல் இருக்கிறதோ?..
இருந்துவிட்டுப் போகட்டும்.தெலுங்கில் பாடலாசிரியர்  புரிந்திருக்கும் ஜாலம் இந்தப் பாட்டில் வரவில்லை எனத் தோன்றுகிறது....

மொழிபெயர்ப்பில் நழுவிப்போவது மூலக்கவிதையின்
கவிதானுபவம் அல்லவா?11th செப்டம்பர் 1995

இன்றிலிருந்து அரைலிட்டர் பால் வாடிக்கையாய் வரும்.
செய்த உப்புமா வாசனையாகத்தான் இருந்தது.
உப்பைத் தான் மறந்து விட்டேன்.

பரபரப்பாக வேலையில் ஆழ்ந்துவிட்டேன்.. 
தனிமைக்கு வேலையும், படிப்புமன்றோ மாற்று?
சுற்றி பதினெட்டுபட்டிக்கும் நாளைமுதல் போக ஆரம்பிக்க வேண்டும்.

12th செப்டம்பர் 1995

நிறைய வாடிக்கையாளர்கள்..  தெலுங்கில் புகுந்துவிளையாடிக் கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் தமிழ்ல எவனாவது பேசுங்களேண்டா?

டிராக்டர் லோன்கேட்டு வந்த ஒருவர் தன் மாமாவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயடுவைத் தெரியும் என்று அளந்துவிட்டு என்னைக்  கேட்டார்:

சாரு.. மீ பேரு ஏமி?

சொன்னேன்......நேனு சந்திரபாபு நாயுடு

சகஅலுவலர்கள் சற்று திகைத்து, பின் சிரித்தார்கள்..

லொள்ளு,நையாண்டி, நக்கலுக்கெல்லாம் நம்ம ஊர் நம்ம ஊருதான்.

இன்னும் துணிதுவைக்கிற வேலையொண்ணு பாக்கியிருக்குடா சாமி!

13th செப்டம்பர் 1995

மற்றுமொரு நாள்.
கொண்டு வந்திருக்கும் இராமலிங்க வள்ளலாரின் திருவருட்பாவை மாந்திக் கொண்டிருக்கிறேன்....

அவரு தானே சொன்னார்? விழித்திரு... தனித்திரு... பசித்திரு...

ரொம்ப பசிக்குது ராமலிங்கம்.  

திங்கள், மே 23, 2011

அம்மா மரம்எங்கள் தோட்டத்து பம்ப்ளிமாஸ் மரம்
அழல்தம்பமாய் உயர்ந்து
அனல்விரல் பலநீட்டும் வேள்வித்தீயாய்
கிணற்றடியில் கிளை விரித்து நிற்கும்.

குடம்குடமாய் அதன் பழங்கள் ..
குருவிகளால் இயன்றது முகர்தல் மட்டும்...


சிலநாட்கள் இலைகளுதிர்த்து அம்மணமாய்
சிலகோடைகள் பழம்பழுக்கும் சுவடின்றி....

அம்மா இழுக்கும் தொரட்டிக்கோல்
காம்பைவருடிப் பழம் கறக்கும்.

உக்கிராண அறைமூலை குவிந்த பம்பிளிமாஸ்கள்
உக்கிரபீமன் உருட்டிய கோலிகுண்டுகளாய்,

காத்திருக்கும்.......

அண்டைஅயல் அனைவருக்கும்
அம்மா கும்பமாய் எடுத்து நீட்ட...  
  
கத்தியை மெத்தென வாங்கும் கதுப்புத் தோலுரித்து
கனிச்சுளை நீள்முத்துக்களாய் உதிர்க்கும் அம்மா

பட்டுபோனது தெரிந்தும் மரத்தைப்
பலவருடம் விட்டிருந்தாள் அம்மா.

புயலில் அது விழுந்த நாளில்
பட்டினியிருந்தாள் அம்மா.  
picture: from GOOGLE with thanks      

செவ்வாய், மே 17, 2011

கல்யாணியை கடித்த கதைஎட்டுக்குடியார் வீட்டின் பரந்த திண்ணைகள் அந்தக் கோடைவிடுமுறையில் திமிலோகப்பட்டன. அந்த அகன்றவீட்டின் மொத்த அகலத்துக்குமாய் ஒரு தட்டை செங்கல் மேவிய கீழடுக்குத் திண்ணையும், அடுத்த தட்டாய் நாலு படிக்கட்டுகள் தாண்டிய வாசலுக்கு இருபுறமும் அகன்ற இரு திண்ணைகளும் அந்தத்தெரு வானரங்களின் குதியாட்டத்தில் அதிர்ந்தன.

கீழ்த்திண்ணையில் வரதுவின் கீச்சுக்குரல்
சார் சார் ஒண்ணுக்கு ........
சட்டாம்பிள்ளை ரெண்டுக்கு
நான் போறேன் வீட்டுக்கு
நாளைக்கு வந்தா கேட்டுக்கோ!

பல்லாங்குழி ஒருபுறம்,கிச்சுகிச்சு தாம்பாளம் ஒருபுறம் என்று குழுக்களாய் ஆடிக்கொண்டிருந்தோம். முனைகள் மழுங்கி, பெரியவர்கள் நிராகரித்த சீட்டுக்கட்டில் சீட்டாட்டம் இன்னொருபுறம்.  தொலைந்துபோன ஏழு கிளாவர்,ஹாட்டீன் ராணிக்கு பதிலாய் கார்பன் பென்சிலால் எச்சில்தொட்டு எழுதப்பட்ட பாஸிங்க்ஷோ சிகரெட் அட்டை இரண்டு அந்தக் கட்டின் கறுப்பாடுகளாய் எதிராளிக்கு கையிருப்பைக் காட்டிக் கொடுத்தது.
அந்த சீட்டாட்டத்தின் போதுதான் அந்தக்கலவரம் வெடித்தது.

சொல்றேன் இருங்க....

எனக்கும்,கல்யாணிக்கும் இடையே வார்த்தைகள் முற்றி, கை எட்டிய வரையில் அடியும் கிள்ளலும் இரண்டு பக்கமும் பரிமாறப்பட்டது. 

கல்யாணியை உங்களுக்குத் தெரியாது. இரண்டாம் வகுப்பில் அவள் பிரிவு ..ஞானசேகரன் சார் கிளாஸ். நான் பி‌ பிரிவு மேரி டீச்சர் கிளாஸ். கல்யாணி கொஞ்சம் ஓங்குதாங்கான பெண். அவள் வகுப்பு மானீட்டர் வேறு. அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும். ஆட்டமோ பாட்டமோ, அவள் இருப்பை சாதித்துக் கொள்வாள்.

பாருங்க பாதி சண்டையில விட்டுட்டு என்னமோ சொல்லிக்கிட்டிருக்கேன். அடிகள் அடுத்தகட்டத்துக்கு முன்னேறி, திண்ணையில் கட்டிப் புரண்டு கீழ்த்திண்ணைக்கு இருவரும் உருண்டு உக்கிரமாகிவிட்டிருந்தது. மூச்சுமுட்ட என் கழுத்தைச் சுற்றி கல்யாணி கால்களைப் பிடியாய்ப் போட்டு இறுக்க சுவாசத்துக்கு திண்டாடினேன். வாகாய், என் வாய்க்கு அண்மையில் தட்டுப்பட்டப் பகுதியில் ஒரே அக் ஆம். கடித்து விட்டேன். கல்யாணி பிடியை விலக்கி அலறிய அலறலில் திண்ணை காலியாகி, பையன்கள் ஆளுக்கொரு திசையாய் ஓட, அங்கேய நிற்க நானென்ன பைத்தியமா? வீட்டுக்கு ஓடிவந்து சித்தியின் கால்களைக் கட்டிக்கொண்டேன். அப்பா அம்மா ஊரில் இல்லை. சித்தியின் செல்லமாயிற்றே நான்.

“என்ன மோகி? எங்க விஷமம் பண்ணிட்டு வரே? அய்யய்ய.. சட்டையெல்லாம் பாரு புழுதி..”

“என்னை கல்யாணி கீழே தள்ளிட்டாக்கா...”  சித்தியை அக்காவென்றே அழைத்துப் பழகிவிட்டேன்.

“கல்யாணியா? அந்த ஆம்பிள காமாட்சியோட ஏண்டா உனக்கு சகவாசம்?”
“அவ ரொம்ப கெட்டவக்கா..”.
“நீ என்ன பண்ணினே?”
“ஒரு சின்ன அடி மட்டும் தான் கொடுத்தேன்”. கண்களைப் பார்க்காமல் வலுவற்று ஒலித்தது என் குரல்.

“ருக்மணி மாமீ ....” வாசலில் நீதிகேட்டு பெரும்பசு மணியடிக்கிறதே!

உள்பக்கம் ஓடிப்போய் ஜன்னல்வழி பார்த்தபோது கண்ணீரும் கம்பலையுமாய்க் கல்யாணி, அவளுடைய அம்மா மற்றும் பாட்டிவாசலில் நின்றிருந்தார்கள்.

ஏதும் தெரியாததுபோல் சித்தி அவர்களை வரவேற்றாள்.

“உள்ளே வாங்கோ மாமி”

“ஏண்டி? உங்க அக்கா எங்கே?”

“தேரழுந்தூர் போய்யிருக்கா... என்ன சொல்லுங்கோ?”

கல்யாணியின் பாட்டி கையை ஆட்டிஆட்டிக் கூவினாள்.

“உங்காத்து மோகன் பண்ணின காரியத்தைப் பாருங்கோ .. கடங்காரன்”.
“மோகி அப்படி என்னத்த  பண்ணிட்டான்?”
சித்தியின் குரலில் கொஞ்சம் நிஜமான கலவரம் .

“எங்க கல்யாணியின் தொடையிலே ஆறுபல்லு பதியக் கடிச்சு வச்சிருக்கான்.கொழந்தைத் துடிக்கிறாள். எப்படி கன்னிப்போச்சு பாத்தியா?”

“எங்க மோகி அப்படியெல்லாம் பண்ண மாட்டான் பாட்டி.”என்ற சித்தி, கல்யாணியைப் பார்த்துக் கேட்டாள்.
“கல்யாணி! மோகியா உன்னைக் கடிச்சான்? எங்கடி?”
கல்யாணி ஆங்காரமாய் அதிர்ந்தாள்.”உங்காத்த்து மோகிப் பிசாசே தான் கடிச்சது. பாருங்கோ மாமி.”

கல்யாணியின் பாவாடை மெல்ல உயர்ந்தது.

சித்தி குனிந்து ஆராய்ந்தாள். நிமிடமாய் உள்ளே ஓடி சைபால் எடுத்து வந்து கல்யாணியின் தொடையில் இட்டு நிமிர்ந்தாள்.

“வரவர இவன் அழிச்சாட்டியம் ரொம்பத்தான் ஜாஸ்த்தியாயிடுத்து.அழாதடி கண்ணு... அவனுக்கும் அதே இடத்தில் கரண்டியை பழுக்கக் காய்ச்சி சூடு வைக்கிறேன் பார்.” சித்தி ரொம்பத்தான் கடுமைக் காட்டினாள்.

சீச்சீ.. அம்மாவே பரவாயில்லை. சூடு வைப்பாளாமே?

வழங்கப்பட்ட சித்தியின் தீர்ப்பில் சமாதானமாகி கல்யாணி கட்சி  நகர்ந்தது.

உள்ளே வந்த சித்தி, ஓடப்பார்த்த என்னைப் பிடித்தாள்.
நான் திமிறியபடி ஆழ ஆரம்பித்தேன்.

“என்னைக் கொஞ்சறதெல்லாம் கொஞ்சிட்டு சூடும் வைக்கப் போறே இல்லை? சித்தப்பா வந்தபுறம் உன்னை அடிக்க சொல்றேன்” என்று விசும்பினேன்.

என்னை அணைத்தபடி சித்தி கொஞ்சினாள். “என் பம்ப்ளிமாசுக்கு யாரும் சூடு வைப்பாங்களா?”

“பின்னே அந்த பாட்டிக்கிட்டே அப்படி சொன்னியே?
“அப்பத்தாண்டா அவங்கல்லாம் போவா..”

“அப்போ எனக்கு நிஜமா சூடு வைக்க மாட்டியா?

“இல்லடா குட்டி ... இனிமே யாரையும் கடிக்கல்லாம் கூடாது. சரியா?”

அப்பாடா.. பழைய உற்சாகமும், குறும்பும் வந்தது எனக்கு.

“பிள்ளையார் பிராமிஸ் யாரையும் கடிக்க மாட்டேன்” என்று சித்தியின் கையை வலிக்காமல் கடித்துவிட்டு ஓடினேன்.

எனக்கு சித்தி வழங்குவதாக சொன்ன தண்டனை அந்தத்தெரு முழுதும் பரவி விட்டது. அடுத்த நாள் காலை என்னைக் குளிப்பாட்டி, இடுப்பில் ஒரு துண்டை கட்டிவிட்டு, கொடியிலிருந்து டிராயரை எடுக்க  சித்தி உள்ளே போனசமயம் எதிர்வீட்டு ஜிகினி வந்தான். என்னைத் துண்டோடு பார்த்தவுடன் பேஸ்த்தாகி வெளியே ஓடினான்.

எனக்கு சித்தி சூடுபோட்டு விட்டதால் டிராயர் கூடபோட்டுக் கொள்ள முடியாமல் துண்டோடு நான் உலாவிக் கொண்டிருப்பதாக அவன்  கிளப்பிவிட, கல்யாணி தரப்பு ஏகத்துக்கும் சந்தோஷப்பட்டிருக்கும்.
அன்று இரவே சித்தப்பா என்னை ஏதோ கல்யாணத்திருக்கு சிதம்பரத்திற்கு அழைத்துசெல்ல,  என் சூடு மேட்டருக்குப்பின் என் நடமாட்டம் குறித்த ஊகங்களுக்கு வலு சேர்ந்தது.

அடுத்தவாரம் வழக்கம்போல் நான் விளையாடக் கிளம்பிய சமயம் சித்தி அழைத்தாள் ,”யாரும் உனக்கு சூடு விழுந்ததான்னு கேட்டால் ஆமாமின்னு சொல்லு” என்று கண் சிமிட்டினாள்.  

என் பங்குக்கு நானும் காலை விந்திவிந்தி,  பார்த்தால் பசிதீரும் சிவாஜிபோல் நடந்து காட்டினேன்.

முனிசிபாலிட்டி பைப்பில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது அங்கே கல்யாணி வந்தாள்.
வேணும் கட்டைக்கு வேணுமாம் வெண்கலக் கட்டைக்கு வேணுமாம்” என்று எகத்தாளமாய் கொக்கரித்தாள்.

பதிலுக்கு “பொக்கப்பல்லு பொரிமாவு”  என்று அவள் பல் விழுந்ததைக் கேலி செய்த எனக்கும் அடுத்தவாரமே விழுந்த பல்லை வானம் பார்க்காமல் புதைக்க வேண்டிவந்தது.


அதே கல்யாணியை கல்லூரி நாட்களில் ஒருமுறை சந்தித்தேன். அவள்தான் என்னை அடையாளம் கண்டுகொண்டு பேசினாள். சிறுபிராயத்தில் என்னைவிட பெரிய ஆகிருதியுடன் தோன்றியவள்,அந்நாளில் உயரக் குறைவாயும் ஒல்லியாகவும் தென்பட்டாள். அவளுடன் ஓரிரு தோழியர் உடனிருந்ததால் அதிகம் நான் பேசவில்லை. எனக்கேனோ பாவமாய் இருந்தது..

அடுத்தமுறை கல்யாணியை பலவருடம் கழித்து கல்கத்தாவில் சந்தித்தேன்.

கல்கத்தாவில் நான்  இருந்த நாட்கள் அவை. என் மனைவி இரண்டாம் பிரசவத்திற்கு என்கையில் கரண்டியைக் கொடுத்துவிட்டு சென்னை  போனசமயம்.

லேக் மார்க்கெட்டில் மோகி என்று யாரோ கூப்பிடத் திரும்பினேன். 
முன் வழுக்கை விழுந்த ஒரு சுப்ரமணியம் கையில் ஒரு குழந்தையுடனும் இடுப்புயரத்தில் ஒரு பெண்குழந்தையும் ஒட்டிவர,கூடவந்தாள் கல்யாணி.... “நான் கல்யாணிப்பா”

“நல்லா இருக்கீங்களா?” என்று அவளைக் கேட்டபடி அவள் கணவரைப் பார்த்து மையமாய் சிரித்து வைத்தேன்.

“என்னங்க.. இவன் மோகன். என்னோட படிச்சவன். எங்க ரெண்டுபேர் வீடும் ரொம்ப சிநேகம்”.

“நீங்களும் கல்கத்தாவுலயா இருக்கீங்க?”

“நோ நோ  நான் கும்மாணத்துகிட்ட பேங்குல வேலை செய்யுறேன். எல்.டீ.சில இங்க நேத்து வந்தோம்”.

“எங்கப்பா கிளார்க்கு” என்றது அவர் பெண்.  

பொதுவாய் அவரிடம் பேசிக்கொண்டிருந்த போதும், அவ்வப்போது  கல்யாணியை பார்த்தபடி இருந்தேன். ஓடிக் களைத்துவிட்ட குதிரைபோல் தோன்றினாள். அசுவாரஸ்யமாக உடுத்தியிருந்தாள்.

“எங்களை உன்வீட்டுக்கு கூப்பிட மாட்டியா?”

“சார் .அதெல்லாம் வேண்டாம். தக்ஷினேஸ்வரம் எப்படி போகணும்னு மட்டும் சொல்லுங்கோ” இது அவள் கணவர்.

அந்த ஞாயிறுகாலை எனக்கும் வேலைவெட்டி இருக்கவில்லை. “அதுக்கென்ன சார். நானே கூட்டிப் போறேன். வாங்க”.

தக்ஷினேஸ்வரத்துக்கு மினிபஸ் பிடித்தோம். டிக்கெட் வாங்கினேன். முன்னிருக்கையில் கல்யாணியும் அவள் கணவனும் அமர்ந்தார்கள்.. பின்னிருக்கையில் நான் இடம் பிடித்தேன். கல்யாணியின் பெண் பூமாவோ  முன்னே அப்பாவுடன் உட்கார அடம்பிடித்து,கல்யாணியின் சுட்டெரிக்கும் ஒரு பார்வையில் அடங்கி உம்மென்று என் பக்கத்தில் அமர்ந்தாள்.

“என்ன கிளாஸ் படிக்கிறே பூமா?”

“மூணாவது.” வேடிக்கைப் பார்த்தபடி, என் கேள்விகளுக்கு திட்டமாய் பதில் சொன்னபடி பூமா.. கொஞ்சம் அவளின் அப்பா ஜாடை.

“நீ நல்ல பொண்ணாச்சே. அம்மாகிட்ட அடம் பிடிக்கலாமா?”

நானொன்னும் நல்லவள் இல்லை. உங்களை மாதிரி துஷ்டை”

அதிர்ந்து போனேன்.”என்ன? நான் துஷ்டனா? உனக்கார்  சொன்னா?”

“நீங்க சின்னப்போ எங்கம்மாவைக் கடிச்சேளா இல்லையா?”

“உனக்கெப்படி தெரியும்?”

“அதான் உங்களை மோகின்னு அம்மா கூப்பிட்டாளே? அப்பவே நீங்கதான்னு தெரிஞ்சு போச்சு நேக்கு”

“நான் கடிச்சத்தை உனக்கு ஏன் சொன்னாள்?”

“நானும் உங்களை மாதிரி அப்புவை சண்டைபோட்டு கடிச்சுட்டேன். அதுக்கு அப்பா என்னை அடிச்சார். அம்மா கையில சூடு வச்சுட்டா”

இடது முழங்கையை காட்டினாள். ஒரு இஞ்சு நீளத்தில் சூட்டிழுப்பு வடுவாய் பளிச்சிட்டது. “சூடு போட்டுட்டு என்னை சமாதானம் பண்ணினப்போதான் துஷ்டத்தனம் பண்ணின உங்களுக்கு உங்க சித்தி சூடு வச்சதைச் சொன்னாள்.”

எனக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. கடிக்கு சூடு என்று கல்யாணி மனத்தில் ஒரு நியதி உருவாகியிருக்க வேண்டும்.

சே! எனக்கு சித்தி சூடு வைக்கவில்லை என்று கல்யாணிக்கு நான் சொல்லியிருக்கவேண்டும். குற்றவுணர்வு என்னை சூழ்ந்தது.

அருகிலிருந்த பூமாவை லேசாய் அணைத்துக் கொண்டேன்.
   


    

புதன், மே 11, 2011

வடுஇந்த டிரிப் தான் கடைசி.... ஒரு தரம் துப்புரவாய்ப் பார்த்துடுங்க குருராஜன்

எல்லாம் ஏறக்கட்டியாச்சு சார்.. ஏதும் பாக்கியில்லை.. நான் பாத்துக்கறேன். நீங்க எதுக்கு சார் இங்க வீணா? வீட்டுக்கு கிளம்புங்க..

எதுக்கும் இண்டுஇடுக்கு விடாம ஒருமுறை கோதிட்டீங்கன்னா நல்லது பாருங்க

நம்பி சார் எப்பொழுதும் இப்படித்தான். சொன்னதையே சொல்லியபடி எல்லாவற்றையும் நூத்துநூத்து பாக்குற ஆசாமி.

சரிசார்!

நம்பி சார் கிளம்பிவிட்டார்.. இந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்காய் காத்திருந்தமாதிரி குருவுக்குப் பட்டது.

ஒத்தாசைக்கு உடன் இருந்த பியூன் முருகேசன் அருகிருந்து செருமினான். சார்.. தம்பி வீடு வரை போயிட்டு வந்துடறேன் சார். ஒரு பணப்பிரச்னை.. எப்படியும் போன லாரி திரும்பி வரதுக்குள்ள திரும்பிடுவேன் சார்.

குருவுக்குக் கூட தனியாய் சற்றுநேரம் இருக்கத் தோன்றியது. போயிட்டு வா முருகேசா. ஏதும் பணம் வேணுமா?

அதெல்லாம் வேணாம் சார் சிட்டாய்ப் பறந்து விட்டான்.


குரு வேலைப்பார்க்கும் அலுவலகம் நகரின் மையப் பகுதியிலிருந்து  இன்னும் விஸ்தாரமான சொந்த கட்டிடத்துக்கு மாறுகிறது.. நான்கு நாட்களாய் அலமாரிகள், கணனிகள்,மேஜை நாற்காலிகள், கோப்புகள் என லாரிகளில் ஏற்றப்பட்டு புதுவளாகத்திற்கு போனபடி இருக்கிறது.

ஆயிற்று... மிச்சமிருக்கும் இந்த இரண்டு அலமாரிகளும், ஐந்து அட்டைப்பெட்டிகளும் லாரியில் ஏறிவிட்டால் இந்தக் கட்டிடத்தோடு உறவு முற்றிலுமாய் அற்றுவிடும். குருவுக்கு தொண்டையை அடைத்தது.

ஒருநாளா?இரண்டு நாளா? இருபது வருஷம்... இதே ஆபீஸ். சில  வருடங்களாய் இதே சன்னலோர இருக்கை. இந்த சன்னலின் கதவுகளை சீண்டியபடி அசைந்துஅசைந்து கண்சிமிட்டும் வாதுமை மரத்து இலைகள். இந்த இலைகள் பழுத்து,உதிர்ந்து, மீண்டும் துளிர்த்து ,மென்அரக்கு மினுமினுப்பில் உள்ளங்கையகலம் விரிந்து கரும்பச்சை முதிர்வில் மொடமொடத்து....

இத்தனை வருடங்களில் எத்தனை சகஊழியர்கள்,அதிகாரிகள் வந்துபோய் விட்டார்கள்?.. தான்மட்டும் இங்கே நங்கூரமாய்  நிலைகொண்டு..

குடும்பசூழல், தங்கைகள் திருமணம், அடுக்களையில் பாதிநாள் படுக்கையில் மீதிநாள் என உழலும் அம்மா... இவர்கள் தேவைக்கென்றே உத்தியோக உயர்வுகளைப் புறக்கணித்து,கனவுகளைப் புறந்த்தள்ளி ஓர் இயந்திரமாய் குருராஜன் மாறி பலகாலம் ஆயிற்று.

பழகிய இடம், புழங்கிய இடம் விட்டு மாறிப்போவது குருவுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது..

இதோ.. இது வெங்கடராமன் சார் சீட் இருந்த இடம். மனசில் வெண்ணையும் நாக்கில் சுண்ணாம்பும் கொண்ட வெள்ளை மனிதர். அவர் குருவிடம் மட்டும் காட்டிய அனுதாபமும் அரவணைப்பும் மனதில் நிழலாடியது. மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பிரிவுபசாரக் கூட்டத்தில்கூட அவரால் தேள் கொட்டினார்போலத்தான் பேச முடிந்தது.


இங்கு அன்பழகன் மேஜை இருந்தது. கையை அழுக்காக்கிக் கொள்ளாமல் பேர்வாங்கும் வித்தை தெரிந்தவன்.. என்னைத்தேடவேண்டாம் என அவன்மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு, யாருடனோ போன மூன்றாம் நாளே,.ஏதும் நடக்காததுமாதிரி எப்போதும்போல் சிரித்துக் கொண்டே அல்லவா வந்தான்?.. கடற்கரையில் குருவின் கைகளைப் பிடித்தபடி மெல்ல விஷயத்தை சொன்னானே.. ஆறுதல் தேடியா?

இங்கு மைத்ரேயி .. பக்கத்து சீட்டில் வித்யா என்ற வித்யாதரன். பின்னால் ராதா, செபஸ்டியன், கார்மேகம் சார்..
குருவின் கண்கள் நிலைகொள்ளாமல் இங்குமங்குமாய் அலைந்தது. காலியான அந்தக்கட்டிடம் ஹோவென்று நின்றது..
தரையெங்கும் கூளமும் தூசியுமாய் விரவிக்கிடந்தது. மெல்ல நடந்தான் குரு. இடப்பக்கம் சின்னதாய்க் கேண்டீன்.
பக்கத்தில் லஞ்ச் ரூம். அங்கு கைகழுவும் இடத்தில் உள்ள கண்ணாடியில் கொஞ்சம் ரசம்போன பகுதி ஒற்றைக்காலில் தவமிருக்கும் கொக்குபோல் அவனுக்குத் தோன்றும்.

இந்த ஹாலின் வாயிலைக் கடந்தால் பழைய கோப்புகள் வைக்கப்பட்ட ஸ்டோர் ரூம். முன்பெல்லாம் இந்த அறை ஸ்டோர் ரூமாக இல்லை.  கணனிகள் வராத நாட்கள் அவை . டைப்ரைட்டர்களின் சங்கீதம் தனித்தும், பலசமயம் கோரஸாயும் எதிரொலித்த நாட்கள். அந்த பெரிய அறையின் ஒருபகுதி மரத்தடுப்புகளால் உருவான மேலாளரின் கேபின் இருந்தது.   அந்தக்காலியான அறையில் நுழைந்த போதே அவன் விரல்கள் மெல்ல நடுங்கின.. அந்த கேபினை ஒட்டியபடி ஸ்டெனோ வரலட்சுமி டைப்ரைட்டர் சகிதம் அந்நாளில் அமர்ந்திருந்த கோலம் குருவினுள்ளே விஸ்வரூபம் எடுத்தது.

வரா.. வரா.. என்று குருவின் நாடிநரம்பெல்லாம் ஒலித்த அந்த பெயர்... அவன் வாழ்க்கைக்குள் வராமலேயே அல்லவா போய் விட்டது?                 

மெல்ல அவர்களுள் முகிழ்த்த காதல்... திடமாய் இருந்த குருவின் அப்பாவின் திடீர் மறைவு.. ஒரு பகலில் குருவின் தலையில் சுமத்தப்பட்ட குடும்பபாரம். அவனுக்காய் காத்திருக்க இயலாத மத்தியதர வர்க்கத்து நெருக்கடியில் அவள்.

எல்லாமே முடிந்து விட்டது. குருவுக்கு மனம் மெல்ல மரத்துப் போனது. நாற்பதைத் தாண்டியாயிற்று.. தனிமரமாய் நின்று பழகிவிட்டது...

தன்னையறியாமல் வரலட்சுமியின் மேஜை  இருந்த மூலையில் வந்து நின்றான்.

அட இது.. இது... இன்னுமிங்கே... இதுநாள் வரை அலமாரிகளால் மறைக்கப் பட்ட ஒரு அன்பின் வடு இன்னமும் அங்கே...

அந்த மரத்தடுப்பில் ஒட்டப்பட்டிருந்த விநாயகர் படம்.
இலைகளையே விநாயகரின் அங்கங்களாய் வரைந்த ஒரு வாழ்த்து அட்டை... புசுபுசுவென்று நினைவும் பரபரப்பும் குருவின் நெஞ்சிலிருந்து கிளர்ந்தன. அந்த வாழ்த்துஅட்டையை அவன் தான் அங்கு ஓட்டினான். மேல்பக்க ஓரம்  மட்டும் ஒட்டப்பட்ட,  நிறம் மங்கிப்போன விநாயகர்...


வரா! பத்துநாள் ஆபீஸ் வரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்.? ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளே என்னால் உன்னை  பார்க்காமல் இருக்கமுடியல்ல.. நீ ஒண்ணும் மதுரைக்கு போக வேண்டாம்.

வராவுக்கு அவன் தவிப்பு பிடித்திருந்தது. எனக்கு மட்டும் போகணும்னு ஆசையா குரு? குடும்பத்தோடு போக அப்பா ஏற்பாடு பண்ணிட்டாங்க. என் ராஜா இல்ல.. பத்தே நாள்.... ஓடி வந்திடுவேன். சரியா.?

அதுவரைக்கும் நான் என்ன பண்ண?

இரு..  வரா தன் நெற்றியிலிருந்த ஸ்டிக்கர் பொட்டை  எடுத்தாள். அவள் மேஜையின் பக்கலில் இருந்த மரத்தடுப்பில் ஒட்டினாள். ஒட்டப்பட்ட பொட்டினைச் சுற்றி நீலப்பேனாவால் அழுத்தமாய் வட்டம் இட்டாள்..

குரு! இந்த பத்து நாளும் இந்த ஸ்டிக்கர் தான் உன் வரா! பாத்துகிட்டே இரு.

கையில் டிபன் பாக்சை எடுத்துக் கொண்டு விடுவிடுவென நகர்ந்தாள்
.
அடுத்த பத்துநாளும் அந்தப் பொட்டில் குரு புதைந்து போனான். யாருமற்ற ஒரு பின்மாலையில், அந்தப் பொட்டை பாதுகாக்க வேண்டி அதன் மேற்புறம் விநாயகர் படத்தை  ஓட்டினான்.


குரு நினைவின் பிரவாகத்தில் அடித்து செல்லப்பட்டுக் கொண்டிருந்தான். மெல்ல அந்த வாழ்த்துஅட்டையை மேல்நோக்கி வளைத்து ஸ்டிக்கர்பொட்டைத் தேடினான். வராவின் பொட்டு  இன்னமும் அங்கே பத்திரமாய் இருந்தது. அதன் சின்ன வெல்வெட்பரப்பு சற்று மங்கியும் சுருக்கம் கண்டும் இருந்தது..

மெல்ல விரலால் அதைத் தொட்டான்.

அந்த தொடுகைக்காக மட்டுமே இதுநாள்வரைக்  காத்திருந்த்தது போல் அந்தப் பொட்டு உதிர்ந்தது.

குருவின் வயிற்றிலிருந்து அலையலையாய் விம்மிஎழுந்த ஒரு கேவல் வெடிக்க அழுதான். அன்றும் இன்றும் சாட்சியாய் மட்டுமே இருந்த அந்த அறையின் சுவர்களில் அவன் விசும்பல் மோதி வெறுமையில் மெல்லக் கரைந்தபடி இருந்தது.

சார்! லாரி வந்தாச்சு என்றபடி உள்ளே வந்த முருகேசன், தலையை இருகைகளாலும் பிடித்தபடி புழுதித்தரையில் அமர்ந்திருந்த குருவை நோக்கி பதறியபடி ஓடிவந்தான்.