செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

என்னைக் காட்டிக் கொடுத்து விட்டாயே??
கண்ணனுடைய லீலா விநோதங்கள் தான் எத்தனை எத்தனை? வெண்ணெய்த் திருடி, வேய்ங்குழலூதி ஆய்ச்சியர் உள்ளம்  கவர்ந்து, மாயம் பல புரிந்து நம் உள்ளத்துக்குள்ளேயேயும்  அல்லவா ஸ்வாதீனமாய் ஆக்கிரமிப்பு செய்து குடியும் புகுந்து  விட்டான்?!

கண்ணனின் தீராத விளையாட்டுக் கதைகளில், அதிகம் அறியப் படாமல் உள்ள,நான் கேட்ட, ஒரு சின்னக்  கதையை உங்கள் கருத்திற்கும், கண்ணனின் கழலடிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

கோகுலத்தில் கண்ணனும் அவனுடைய சகாக்களும் அடிக்கும் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. யசோதைக்கு வெண்ணெயைக் காப்பாற்றுவது பெரும்பாடாய் ஆயிற்று. அகப்பட்டுக் கொள்ளாமல் திருடுவதில் அதி சமர்த்தனாக வேறு ஆகிக் கொண்டிருந்தான் கண்ணன். அவனைக்  கையும் களவுமாய்ப் பிடிக்க, திட்டத்துக்கு மேல் திட்டம் போட்டும், தப்பித்துக் கொண்டேயிருந்தான்.

யசோதை கடைசியில் ஒரு நல்ல உபாயம் கண்டுபிடித்தாள். இன்று வங்கிகளில் திருட எத்தனித்தால் அடிக்கிறதே அபாய மணி( burglar alarm)  அதன் முதல் மாதிரியைக் கண்டுபிடித்தவளே யசோதை தான்!

வெண்ணைக் கலயங்கள் வைக்கும் உறியிலிருந்து ஒரு மணிக்  கயிற்றைக் கட்டி,அந்தக் கயிற்றின் மறுமுனையை , அவள் படுத்திருக்கும் அடுத்த அறை வரை நீட்டி, அதன் முனையில் ஒரு வெள்ளி மணியைக் கட்டினாள். யாராவது உறியைத் தொட்டால், உறி  அசைய,அதில் கட்டிய கயிறும் அசைந்து, உள்ளறையில் கட்டப் பட்ட மணியின் நாவை அசைத்து, மணி ஒலிக்க ஆரம்பிக்கும் .உடனே அந்தக் கள்ளனைப் பிடித்துவிடலாம் என்று சரியானதோர் ஏற்பாட்டை செய்து முடித்தாள்.

மாயக் கண்ணனுக்கா இது தெரியாமல் போகும்? திருடவும் வேண்டும்...மாட்டிக் கொள்ளவும் கூடாது...யோசித்தான். நேராக உள்ளறையில் கட்டிவைத்த வெள்ளிமணியின்  அருகில் சென்றான். அதனோடு பேச ஆரம்பித்தான்.
மணியே! உன்னை எதற்கு இங்கே கட்டியிருக்கிறது தெரியுமா?

தெரியும் அய்யனே!. பக்கத்து அறையில் உள்ள உறி  அசைந்தால்,அதிலிருந்து வரும் இந்தக் கயிறு அசையும் போது, நான்  கணகண என அடிக்கத் தொடங்கவேண்டும்.

எதற்கு நீ அடிக்கவேண்டும் தெரியுமா?

தெரியும் பிரபு. வெண்ணைத்  திருடுபவனைப் பிடிக்க..... ஆய்ச்சியரிடம் யசோதை பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்

அந்தத் திருடன் யார் எனத் தெரியுமா?

தெரியாது கண்ணா

தெரிந்து கொள் ! அது நான் தான். நீ எனக்கொரு உதவி  செய்ய வேண்டும்.. நான் வெண்ணெய்த் திருடும் போது நீ அடித்து, காட்டிக் கொடுக்கக் கூடாது. எனக்கு சத்தியம் செய்து தருவாயா?

வெள்ளிமணி திணறிப் போயிற்று. தெய்வம் என்னிடம் உதவி கேட்கிறதா ? எனக்கு இத்தனைப் பாக்கியமா?

என்ன பேசாமல் இருக்கிறாய்? எனக்கு சத்தியம் செய்து தருவாயா? இல்லையா?

என் பாக்கியம் பிரபு. நீங்கள் வெண்ணெய்த் திருடும் போது சத்தியமாய் நான் அடித்து ஒலி எழுப்ப மாட்டேன்.

நல்லது. நினைவிருக்கட்டும் கண்ணன் வெளியே ஓடிவிட்டான்.

நண்பகல். வேலையெல்லாம் முடித்து, யசோதை சற்று கண்ணயரும் நேரம்... கண்ணன் உறி  இருக்கும் அறைக்குள் தன நண்பர்களுடன் நுழைந்தான்.

கண்ணா! வேண்டாமடா! கண்டிப்பாய் மாட்டிக் கொள்வோம்.
நண்பர்கள் பயந்தார்கள், யசோதையின்  கச்சிதமான ஏற்பாடுகளைப் பார்த்து...

கவலைப் படாதீர்கள். தயாராகுங்கள். ஒருவன் மண்டியிட,மற்றவனைப் பிடித்துக் கொண்டு, குனிந்தவன்  முதுகின் மேலேறி, கலயத்தை எடுத்தான். உறி  ஊசலாடியது. கயிறும் வேகமாய் அசைந்தது... நண்பர்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டார்கள். ஆச்சரியம்!! மணி அடிக்க வில்லை. நண்பர்கள் கிசுகிசுத்தார்கள்..பெரிய ஆளடா நீ!

சரி சரி வாருங்கள் என்று அனைவருக்கும் வெண்ணையை அள்ளி அள்ளித் தந்தான்.
தானும் ஒரு கை வெண்ணை எடுத்தான். 
உண்ண வாயருகே கொண்டு போனான். பவழ உதடுகள் பொதிய , வெண்ணையை உண்ணத் தலைப்பட்டான்..

இத்தனை நேரம் அமைதி காத்த மணி “கண கண” என ஒலிக்கத் தொடங்கியது.. ஓடிவந்த யசோதையின் கைகளில் கண்ணன் பிடிபட்டான்.. கையும் வெண்ணையுமாய்.... விக்கித்துப் போனான்.

சற்று சுதாரித்துக் கொண்டு, சற்று இரும்மா. நீ தரும் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு முன், நீ கட்டிய மணியை ஒருதரம் பார்க்கிறேனே அம்மா...எங்கும் ஓடி விட மாட்டேன்

அவன் பேசுகையிலேயே கண்ணனின் காலை ஒரு கயிற்றால் பிணைத்தாள். மறுமுனையைக் கையில் பிடித்துக் கொண்டு,சரி .உள்ளே போய் மணியைப் பார்என்று அனுமதித்தாள்.


மணியைக் கோபமாகப் பார்த்த கண்ணன் கேட்டான்..மணியே! சொன்ன வார்த்தை மீறலாமா?

பிரபு... நான் சொன்ன வாக்கை மீறவில்லையே?

என்ன? செய்வதையும் செய்து விட்டு... நீ மீற வில்லையா??

பிரபு,நான் என்ன வாக்கு கொடுத்தேன்?

நான் திருடும் போது அடிக்க மாட்டேன் என்று


பிரபு! நீங்கள் உறியைத்  தொட்ட போது அடித்தேனா?

இல்லை

உறி ஆடியதே  ...அப்போது அடித்தேனா?

இல்லை

சரி கலயத்தை திருடிக் கையில் எடுத்தீர்களே! அப்போதாவது அடித்தேனா?  

இல்லை.. இல்லை... ஆனால் வெண்ணையை உண்ணும்  போது அடித்துக் காட்டிக் கொடுத்து விட்டாயே?

கண்ணா நான் என் கடமையை மட்டுமே அப்போது செய்தேன்..
உனக்கு நெய்வேத்யம் ஆகும் போது அடிப்பதே என் பிறவிப் பயன்.. பிரபு... என் பிரபு... மணி விசும்பத் தொடங்கியது.

கண்ணனைக் கட்டி இழுத்துக் கொண்டு யசோதையும் உரலை நோக்கிப் போனாள்.....

  

ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2010

விக்ரம் “அம்பி” கோச்சுண்ட மேட்டர்

A Slovenian 711 series trainபட உதவி Image Wikipediaநன்றியுடன் 


நமது இந்திய ரயில் பெட்டிகளில் நூறு வருஷத்துக்கு முன் கழிவறைகளே இல்லாமலிருந்தது தெரியுமா?
சிலநாட்களுக்கு முன் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் சொல்லும் சுவாரஸ்யமான நிகழ்வைக் கேளுங்கள்.
 அகில் சந்திர சென் என்பவர் சாஹிப்கஞ்ஜ் டிவிஷன் ரயில்வே ஆபீசுக்கு கழிவறை இல்லாத அவஸ்தைப் பற்றி ஒரு கடிதம், தப்பும் தவறுமாய்,மொத்தமும் பிழைகளுடன் எழுதினார்
அதை ஆங்கிலத்திலேயே கீழே தருகிறேன்
'I am arrive by passenger train Ahmedpur station and my belly is too much swelling with jackfruit. I am therefore went to privy. Just I doing the nuisance that guard making whistle blow for train to go off and I am running with lotah in one hand and dhoti in the next when I am fall over and expose all my shocking to man and female women on platform. I am got leaved at Ahmedpur station. This too much bad, if passenger  go to make dung that dam guard not wait train five minutes for him. I am therefore pray your honor to make big fine on that guard for public sake. Otherwise I am making big report to papers.'
இந்தக் கடிதம் இன்னமும் தில்லி ரயில்வே காட்சியகத்தில் இருக்கிறதாம். இந்தக் கடிதத்தில் மலிந்துள்ள பிழைகள் தவிர வேறு என்ன அதற்கு சரித்திர முக்கியத்துவம் இருக்கிறது என்கிறீர்களா? இந்தக் கடிதம் தான் ரயில் பெட்டிகளில் கழிப்பறை வசதிக்கு அடிகோலியதாம். அடுத்த முறை ரயில் கழிப்பறையுள் நுழையும் போது ,மூக்கை மூடிக் கொள்ளாமல், அகில் சந்திர சென் தாத்தாவுக்கு ஜே என்று ஒரு  சவுண்டு விடுங்க.

    
Enhanced by Zemanta

சனி, ஆகஸ்ட் 28, 2010

சாவித்திரியும் சத்தியவானும்சின்னச் சின்ன வார்த்தைகள்,
மெல்ல மெல்லப் பேசி,
புன்னகைப் பூவாய் பொலிய,
அன்பினைக் காட்டி- கொஞ்சம்
அருகிருந்து சோறிட்டு,-என்
முகவியர்வை முந்தானை யாலொற்றி,
அகமலர்ந்து வரவேற்று,-மதி
முகமலர்ந்து விடைக் கொடுத்து,...

ஒரு பொழுதேனும் நீயிருந்தால்-

பெரும் பூரிப்பில் மாரடைத்துப்
போய்விடுவேன் என்று தானோ

கடுகடுப்பும் கத்தலுமாய்
சிடு சிடுப்பும் சீற்றமுமாய்,
என்னுயிரைப் பிடித்திருப்பாய்
என்னவளே சாவித்திரி!!

 (புதுவை, ஜனவரி1992)


வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

ஞொய்யாஞ்ஜி கார்னர்-2(எங்கோ கேட்டதை, தமிழில் நான் திரு ஞொய்யாஞ்ஜிக்கு சொல்ல,
 இனி அவர் பாடு உங்க பாடு )

ஞொய்யாஞ்ஜி சம்சாரத்துடன் எகிப்து சென்றார்.
பிரமிடுகள்,. பாடம் பண்ணப் பட்ட மம்மி
எல்லாம்  பார்த்து வரும் போது, அவரின் சம்சாரம்
மம்மியை பற்றிக் கேட்டாள்,

எப்பிடிங்க செத்திருப்பா?
ஞொய்யாஞ்ஜி :" பார்த்தாலே தெரியலை? தண்ணிலாரி
இடிச்சுத்தான்.. எவ்ளோ பாண்டேஜ் பாரு.".

மம்மியை இன்னும் உற்றுப் பார்த்து விட்டு,அதில் குறித்திருந்த
கி.மு. 550 எனும் வருடக் குறிப்பைக் கண்டு கத்தினார்

.இடிச்சவன் தைரியத்தைப் பாரு. பாண்டேஜ் மேலேயே லாரி நம்பர்  எழுதிட்டு போயிருக்கிறான்


மம்மியைப் பார்த்த டென்ஷனில் இருந்த ஞொய்யாஞ்ஜியை
இமிக்ரேஷன் அதிகாரி கேட்டார் எங்க பிறந்தீங்க?
ஞொய்யாஞ்ஜி: இந்தியா
இமிக்ரேஷன் அதிகாரி: இந்தியா சரி, எந்த பார்ட்?
ஞொய்யாஞ்ஜி: அது என்ன பார்ட்.. என் மொத்த பாடியுமே இந்தியால ஒரே தடவைல பிறந்தது. பார்ட்டாம் பார்ட்!

மனசுஒரு நாளே இட்ட குறை,
நிதமும் துரத்தும்
கிழட்டு பிச்சைக்காரி.
இரண்டு நாளாய்க்
காணாதவளைக் கண்தேடும்..
நினைவில் துரத்துவாள்  கொஞ்ச தூரம்..... 

வியாழன், ஆகஸ்ட் 26, 2010

வந்துட்டாருய்யா ஞொய்யாஞ்ஜி !

அசர வைக்கும் அறிவுவெளிப்பாடு.!
எதிர்பாராத சிந்தனைச் சிதறல்கள் !
எதிராளியை திகைக்கச் செய்யும்
ஞானத் திறன்பாடு... .
ஆஹா... ஆஹா...
சிங்கு .. சீச்சீ.....சிங்கம் ஒண்ணு புறப்பட்டதே !
எத்தனை நாள் தான் இப்படிப் பட்ட ஒரு மேதாவிக்காக,
மாநிலம் விட்டு மாநிலம் தேடி அலைவது.?
இது நியாயமா? தர்மமா??
இப்படியெல்லாம் ஜோக் பதிய வேண்டியிருந்ததைப் பற்றி, வெட்கப் பட்டேன் ,வேதனைப் பட்டேன், வருத்தப் பட்டேன்.

விட்ருவோமா? விட்ருவோமா??
கூட்டியாந்துட்டோமில்ல....
யார?
நம் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய
திரு ஞொய்யாஞ்ஜி !

கொளுத்துங்கய்யா ஒரு தவுசண்ட் வாலாவை...

இனிமே இவரு தாங்க நம் தமிழ் கூறும் நல்லுலகின்
அறிவுக் கொழுந்து... 
இனி நம் காதில் விழுந்தவை,கருத்தில் உதித்தவை எல்லாமே திரு.ஞொய்யாளுஜி  அவர்களின் வார்த்தைப் பூக்களாய் உதிரும்.
ஒரு சின்ன ஒப்பனிங்குடன் இன்னிங்சை துவக்குகிறார் ஞொய்யாளுஜி !

ஓர் இண்டர்வ்யுவில் நம் ஞொய்யாளுஜி கலந்து கொண்டார்.
அவரை அதிகாரி கேட்ட கேள்வி:
பலமாடி கட்டிடத்தின் உச்சியில் நீங்கள் இருப்பது போலவும், திடீரென்று பூகம்பம் வருவது போலவும் கற்பனை பண்ணிக்குங்க.
எப்பிடி அதிலிருந்து தப்புவீங்க?
ஞொய்யாளுஜி : இது ஒரு கேள்வியா? கற்பனய நிறுத்திட்டா போதுமே. தப்பிச்சிரலாமே?

ரெண்டு சொம்பு தண்ணி குடித்து விட்டு வந்து அதிகாரி மீண்டும் கேள்வி கேட்டார்.,மிஸ்டர் ஞொய்யாளுஜி ! உங்களுக்கு M.S.OFFICE  தெரியுமா?

ஞொய்யாளுஜி : “M.S.OFFICE தானே.அவங்க  அட்ரஸக்  குடுங்க. தெரிஞ்சிகிட்டு  வந்துடுறேன்

என்ன அன்பர்களே! நம்மாள பிடிச்சிருச்சா ?
ஞொய்யாளுஜி லீலைகளை மேலும் ரசிக்க ,
ஜோக்கைப் படிக்கும் போது, பேக் ரவுண்டுல
தார தப்பட்ட ஒலிக்கணும்.

நம் ஞொய்யாளுஜி கார்னருக்கு அப்பப்ப வருகைத் தாருங்கள். பின்னூட்டம் இட்டு உற்சாகப் படுத்துங்கள்.
ஞொய்யோ ! ஞொய்யோ !

.      

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

சர்தார்ஜி கார்னர்ஒரு சர்தார்ஜிக்கு உத்தியோக நிமித்தம்  உலகமெல்லாம் சுற்றும் வாய்ப்பு இருந்தது. எந்த நாடு போனாலும்,அந்த ஊர் ஸ்பெஷலா இருக்கும் சூப்பைத் தான் முதலில் ஆர்டர் செய்வார். அதன் ருசி, செய்முறை எல்லாம் விசாரித்து ஊர் திரும்பியவுடன் மனைவியிடம் சொல்வார்.

ஒருமுறை அவர் லண்டன் சென்ற போது,தங்கிய ஓட்டலில், வழக்கம் போல் சூப்புக்கு ஆர்டர் செய்துவிட்டு குளிக்க சென்றார். அதே சமயம் பக்கத்து ரூமில் இருந்த வயிற்று வலி பேஷண்ட்டுக்கு இனிமா
தர ஏற்பாடாகி இருந்தது.

கம்ப்யூட்டர் கோளாறில் ரூம் மாறி, சர்தார்ஜி ரூமுக்கு வந்த மெடிக்கல் அட்டண்டன்ட், உடை மாற்றிக் கொண்டிருந்த சர்தார்ஜிக்கு இனிமாவை பம்ப் செய்து விட்டு அவசரமாய் சென்று விட்டான்.

வீடு திரும்பிய சர்தார்ஜியை மனைவி வழக்கம் போல் கேட்டாள்,
லண்டன் சூப் எப்படி இருந்ததுங்க?

சர்தார்ஜி சொன்னார்,அம்மாடி ! நானும் பல நாடு போயிருக்கேன். பல சூப் குடிச்சிருக்கேன். ஆனால் லண்டன்ல சூப் குடிக்கிற வழியே வேறு! என்ன ஒண்ணு... உப்பு, காரம் தான் தெரியல்ல.   

திங்கள், ஆகஸ்ட் 23, 2010

ஜுரம் வந்த நேரம்....

இன்று வேலைக்குப் போக வில்லை.
நேற்றிலிருந்து கடுமையான ஜுரம்.உடம்புவலி.
போட்டுக் கொண்ட ஊசியில் ஜுரம் குறைந்து வேர்க்கிறது.
 எதாவது எழுதுவோம் என்று லேப்டாப்பை தட்டிக் கொண்டிருக்கிறேன்.விரல் முனைகள் வலிக்கின்றன, மெல்லின எழுத்துக்களுக்கு கொஞ்சமாயும்,வல்லின எழுத்துக்களுக்கு அதிகமாயும்.

சற்றைக்குமுன் ஜுரவேகத்தில் வர்ஜியாவர்ஜியமில்லாமல் தொடர்பற்ற ஞாபகச் சிதறல்கள்....
-கடலூர் மணி டாக்டர், கம்மல் குரலில் பேசிக் கொண்டு, 
 ஜுரத்துக்கு தரும் மிக்ஸ்சர்,
-சமையல் அடுப்புக்கு விறகுகளை மாட்டு வண்டி உச்சியிலிருந்து லாவகமாய் கீழெறியும் கோதண்டம்.
- ஆத்துத்திருநாளில்,பெண்ணயாற்றில் சுழலில் சிக்கி
  மாண்டுபோன பள்ளித்தோழன் ராமதாஸு
- பெர்ரிங்கன்.... என்று ஒலிக்கும் கூவலோடு
  ரிப்பன்,வளை,கண்மை இத்யாதிகள் விற்கும் தெரு வியாபாரி.
- பின்னிரவு நகரப் பேருந்தில் ஜெயகாந்தனுடன் பேசியது.
- கெடிலம் ஆஞ்சநேயர் கோவில் லட்சதீபம்-
- கல்கத்தா தமிழ் மன்றம்- என் கவிதைகள்
- தொழிற்சங்கத் தோழன் கமாலுதீன் சுரானி
- பைரவிக்கும் நடபைரவிக்கும் வேறுபாடுகள்

மனசு ஓயாமல் எதையாவது உருட்டிக் கொண்டு இருந்தாலும்,
ஜுரத்தின் போது ஆழ் மனத்தில் உறைந்து போன சில பழைய  நினைவுகள் மேல்தளத்திற்கு மீண்டு வருவதாய்ப் படுகிறது.

இப்போழுது  இதெல்லாம் எழுத வேண்டுமா?.
ஜுர கால பலஹீனம் எழுத்தில் எதிரொலிக்குமா என்ன?
பல வருடங்களுக்குமுன், ஒரு ஜுரம் விட்ட நாளில்
கதை ஒன்று எழுதியிருந்தேன். கதையினூடே கவிதை வேறு..
கவிதை மட்டும் .இங்கே

நெற்றி தொட்டு
நெஞ்சு தொட்டு
உடல்நீவும் பாட்டன் முகம்,
மஞ்சளாய் தெரியும் ஜுரம்

திராட்சை வைத்த பன் கசக்கும்
அல்பகோடா நாவடியில் ஊரும்

உலக்கையிடி சத்தத்தில்
உள்வீட்டில் படுக்கையில்
பள்ளிக்கூடம் தனைமறந்து
படுத்திருக்க கனவு  வரும்
ஜுரமடித்து ஓய்ந்த பின்
மினுமினுப்பு உடலேறும்

மீண்டும் பள்ளி செல்ல
யாவும் பதியதாய்...

தொடரும் நண்பரொடு
எம்ஜியார் சிவாஜி சண்டைகள்..
டிரில் கிளாசில் மரத்தடி ஓய்வு
ஜுரம் வந்தால் சந்தோஷம்.

இப்போது ஜுர கால சந்தோஷத்தை அனுபவிக்கிறேனா?

அனுபவிக்கத்தான் தோன்றுகிறது
உட்கார முடியவில்லை.
இத்தோடு இதை முடித்து விட்டு
படுக்கையில் படுத்த வண்ணம்
படிக்கப் போகிறேன்
தி ஜாவின் முதல் நாவலான அமிர்தத்தை
சந்திப்போம் மீண்டும்.- .   

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

சுற்றுலாமலையுச்சி
கொட்டும் அருவி
பச்சை வானம்
எங்கும் இரைச்சல்...
நம் இருவருக்கும்
இடையே மட்டும்,
குழந்தையும்
மௌனமும் .....

சூரிய கிரகணம்

Total solar eclipse solaire 1999Thanks to luc.viatour via Flickr

சூரிய கிரகணம்

மெல்ல இருளும் வானம்....
இயக்கம் மறந்து
வானம்  கோதும் அனைவருடனும் நீ !
வார்த்து வைத்த செப்புச்  சிலையாய்....

வைர மோதிரம்வானில் மின்னும் நேரம்....
எல்லோர் கண்ணும் வான்மேல்,,,
என் கண்கள் மட்டும் உன்மேல்.

Enhanced by Zemanta

வெள்ளி, ஆகஸ்ட் 20, 2010

சர்தார்ஜிக்கு ஒரு ஸாரிஇப்போ கலைஞர் டி,வி,ல அபியும் நானும் ஓடிகிட்டு இருக்கு. அதுல,சர்தார்ஜிக்களில் பிச்சைக்காரனே கெடயாதுன்னும் நம்ம தான் சர்தார்ஜி ஜோக் சொல்லிட்டு திரியறோம்னு சொன்னாங்க,
ரொம்ப மன்சு பேஜாராயிட்டுதுங்க.. ஒங்களுக்கும் அப்பிடித்தானே இருக்கும்? வருத்தபடாதீங்க.. மனசு சந்தோசப் படறாமாதிரி எனக்கு வந்த ரெண்டு ஜோக்க சொல்றேன்,சர்தார்ஜிக்கு ஒரு ஸாரியோட....

ஜோக்-1

வெளிநாடுகளுக்குப் போய்வந்த பின் சர்தார்ஜி மனைவியிடம் கேட்டார்.,என்னப் பாத்தா பாரினர் மாதிரியா இருக்கு?
மனைவி: இல்லையே!
சர்தார்ஜி: பின்ன லண்டன்ல ஒருத்தன் என்னை நீ பாரினரான்னு கேட்டானே?


  ஜோக்-2
 சர்தார்ஜி தன் மனைவியுடன் ஆட்டோவில் போய்க்  கொண்டிருந்தார். ஆட்டோ டிரைவர் ஆட்டோ கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து சர்தாரினியை கடைக்கண்ணால் நோட்டமிடுவதை சர்தார்ஜி பார்த்து விட்டார்.

கோபத்துடன் கத்தினார்.. ங்கொய்யால! முன்னால இருந்து கண்ணாடி வழியாவா பாக்குற? ஒழுங்கா பின்னாடி வந்து ஒக்காரு. நான் வண்டிய ஓட்டுறேன்... பிச்சு புடுவேன் பிச்சு!!

புதன், ஆகஸ்ட் 18, 2010

தேக்கம்

River Beas - Video Clip  (Flickr Explored)Image by Balaji.B via Flickrஅகத்தியன் கமண்டலத்துள்
அகப்பட்ட காவிரியாய்,

என் கவிதையெல்லாம்
உன் நினைவுச் சிறையில்...

அவற்றுக்கு விடுதலைக் கொடேன்...
நனைத்து விடுகிறேன்
தமிழகத்தை.!
Enhanced by Zemanta

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

பல்லைக் காட்டாதீங்க ப்ளீஸ் !


பல்லு போனா சொல்லு போச்சு

பல்லைத் தட்டிக் கையில குடுத்திடுவேன்

பூண்டு நாலு பல்லு எடுத்துக்குங்க.. அதை இஞ்சியோட சேர்த்து...

முப்பத்திரண்டு பல்லையும் காட்றான் பாரு!””

பொக்கப் பல்லு பொரி உண்டை
ஓட்டாஞ்சில்லு ஓரட்டான்கை

அவனா? அவனுக்கு வயத்தில பல்லாச்சே!


மூடுறா... பல்லைத் தட்டி பல்லாங்குழி ஆடிடுவேன்

இடித்த வெற்றிலைப் பாக்குச் சுவை பல் விழுந்த பருவத்தில்

 புத்தரின் பல் ஒரு புனிதப் பேழையில் பாதுகாப்பாய்....


நான் பழச நெனக்கையிலே
பல்லறுவா பட்டுருச்சிஅரிசிப் பல்லு
துருவிப் பல்லு
தெற்றுப்  பல்லு
காறைப் பல்லு
பனங்காப் பல்லு
சிங்கப் பல்லு
சொத்தைப் பல்லு......

என்ன சார் யோசிக்கிறீங்க?
என்னடா பல்லு பல்லுன்னு பல்லைக்  காட்றேன்னு பாக்குறீங்களா?

பல் டாக்டர் கிளினிக்கில் உட்கார்ந்து கொண்டு தான் இந்த குருட்டு யோசனை....

 என்  மனைவிக்கு உள்ளே பல்லில் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது .

ரெண்டு மணி நேரமா அவளும் என்னிடத்தில் பல்லில் நாக்குபட பேசவில்லை

பேசிக் கொண்டே இருப்பவர்கள் திடீரென்று பேசாமல் இருப்பதும்,
பேசவே பேசாதவர்கள் பேச ஆரம்பிப்பதுவும்
ஏற்றுக் கொள்ள கஷ்டமான விஷயம் தான்

பல்லு பத்தி வேறேதும் உண்டா?

ஹாங் ... கே. ஆர். விஜயா, ஸ்நேகா

முத்துப் பல் சிரிப்பென்னவோ?


முத்து, தன் அழகை எண்ணி இறுமாப்பாய் இருந்ததாம். ஒரு அழகியின் அழகான பல் வரிசை தன்னை விட அழகாய் ஜொலிப்பது கண்டு, மனம் வெம்பி , தூக்கிலிட்டுக் கொண்டு உயிரை விட்டு விட முடிவு செய்ததாம். அந்த பல் வரிசைக்கெதிரிலேயே, அந்த அழகியின் மூக்கில் புல்லாக்காய்த் 
தொங்கி விட்டதாம்!!

தமிழா! தமிழா! ரசிகன்டா நீ!!  

சார்.. மேடம் ஈஸ் ஆல்ரைட்

பீஸ் டாக்டர்?

“5000”

உம். கிரெடிட் கார்டு வாங்கிப்பீங்களா?.. பல்லைக் காட்டினேன்.

ஒய் நாட்நீங்க N.T.R மாதிரி சிரிக்கிறீங்க!

தாங்க் யூ டாக்டர்!.... எனக்கு வாயெல்லாம் பல்!

ஆனா நீங்க ஒரு தரம் பல்லை சுத்தம் பண்ணிக்கணும். ஸ்கேலிங்.. ஒரு சிட்டிங் வந்துருங்களேன்?

சரி டாக்டர்

யோசனையுடன் திரும்பினேன்...


உங்களைத்தான் சார்... அப்ப நீங்க கூட என்  அடுத்த பதிவுக்கு தயாரா 
இருங்க! 
பல்லு படாம 'கடிப்பது' ஒரு கலை சார்!

வரட்டா ??Enhanced by Zemanta

சிவலிங்க வடிவத்தில் ஷூ பாலிஷ் குப்பிஅதிர்ச்சியாக இருந்தது... இன்று மாலை  ஒரு தெலுங்கு சானலில் ஒரு நிகழ்ச்சியை தற்செயலாகக்  கண்ட போது.

KIWI  ஷூ பாலீஷ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய பாலீஷ்  குப்பி அச்சு அசலாக ஒரு சிவ லிங்க வடிவத்தில்.. இந்த  வெளியீடு குறித்து காரசார விவாதமும் கருத்துக் கேட்டலும் மஹா டி.வி.யில் காட்டப் பட்டது.

 குப்பியின் மேல் மூடி, லிங்கப் பகுதி போன்று சற்று தட்டையாக விபூதிப் பூச்சு போன்ற மூன்று குறுக்கு கோடுகளுடனும், அதனைத் திறக்கும் 
பிடியானது நீர்த்  தாரை போலவும், கீழ் பகுதி ஆவுடையார் போலவும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

மூடியைத் திறந்து,அடிபகுதியில் பதிக்கப் பெற்ற, பாலீஷில் ஊறிய உருளையான ஸ்பான்ஜை நேராகக்  காலணிக்குப்  போட வேண்டியதுதான்.

கோடானு கோடி இந்து மக்களின் வழிபாட்டுச்  சின்னத்தை இந்தவிதம் 
அவமதிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

ஒரு மிகப் பெரிய நிறுவனம் இத்தகைய வடிவத்தில் ஷூ பாலீஷ் அமைத்தது தற்செயலாக நேர்ந்ததாக நினைக்க இயலவில்லை.

யாருக்குமே மற்றொரு மதத்தினரின் நம்பிக்கைகளை இழிவு படுத்த எந்த உரிமையும்  இல்லை. என்ன ஒரு தரம் கேட்ட செயல்? இத்தகு செயல்பாடுகள் மேலும் மேலும் சகிப்பின்மையைக் கூட்டி பிரச்சினைகளையும் வன்முறையையும் வளர விட்டு விடாதா?

நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்??

இத்தகு வடிவமைப்புக்கான  கீழான எண்ணம் உதித்த  அந்த கம்பெனி ஆசாமியை அந்த சிவனோ அல்லது அவன் நம்பிக்கை சார்ந்த கடவுளரோ மன்னிக்கட்டும்.

எங்க தென்னார்க்காடு ஜில்லாவில் ஒரு சொலவடை உண்டு.

நக்குற நாய்க்கு செக்குன்னு தெரியுமா ... சிவலிங்கம்னு தெரியுமான்னு

உம்மாச்சி.. எல்லோர்க்கும் நல்லா புத்திய குடு!


செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

கோழியும் சேவலும்

Docking cock and henImage by LlGC ~ NLW via Flickr
உதயத்துக்கு முன்னரே கூவிவிட்ட
சேவலின் குரலை,

அஸ்தமனத்திற்குப் பின்னரே
கேட்டதிந்தக் கோழி....


இந்த நடுநிசியில்,
உலகமே உறங்கும் போது,
சேவலும் கோழியும் மட்டும்
விழித்திருக்கின்றன.

சேவல் மீண்டும் கூவுமானால்.....
கோழிக்குப் பொழுது விடியும்.
சேவலுக்கோ ....
எப்போது விடியும்??
Enhanced by Zemanta

வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

நம்ம ரயில்வே சரியில்லே சார்!ஒரு ஊரில் நடந்த கோரமான ரயில் விபத்தில் 180 சர்தார்ஜிகள் இறந்து போனார்கள். ஒரே ஒரு சர்தார்ஜி மட்டுமே உயிர் பிழைத்தாராம். நடந்த விபத்திற்கும் அவர் மட்டுமே சாட்சி.

போலீஸ்,பிழைத்தவரிடம் விசாரணை செய்தனர்.

விபத்து எப்படி நடந்தது சொல்லு ?

சார் ! அத்தனை பெரும் பிளாட்பாரத்தில் ரயிலுக்காக காத்திருந்த போது மைக்கில், இன்னும் ஐந்து நிமிடங்களில் ரயில் முதலாவது  பிளாட்பாரம்  வந்து சேரும் என அறிவிப்பு செய்தார்கள். அப்படி பிளாட்பாரத்திற்கு ரயில் வந்து  விட்டால் நம் மீது மோதி விடுமே என அனைவரும் கீழே தண்டவாளத்தில் இறங்கி நின்றார்கள் சார். ஆனால் ரயிலோ தண்டவாளத்திலேயே வந்து அத்தனை பேர் மேலும் மோதி விட்டது சார்!

அப்போ நீ எப்படி பிழைத்தாய்?

”நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என தண்டவாளத்தில் படுத்திருந்தேன். எல்லோரும் ரயில் தண்டவாளத்திற்கு வராது.
பிளாட்பாரத்திற்கு தான் வரும். அங்க போய் படுத்துக்கோ என சொன்னார்கள் சார். நானும் அப்படியே மேலே ஏறி  படுத்தேன்.
நம்ம  ரயில்வே சரியில்லே சார்!

(யாரோ சொல்ல யாரோ கேட்டு எனக்கு சொன்ன ஜோக்குங்க!
 இத யோசிச்ச புத்திசாலி வாழ்க! ) 

வியாழன், ஆகஸ்ட் 05, 2010

மூக்குப் பொடி

NoseImage via Wikipedia


சார் ! ஒன்று கவனித்தீர்களா? இப்போதெல்லாம் பொடி போடும் ஆசாமிகளை அதிகம் பார்க்க முடிவதில்லை. அந்தத் தலைமுறை கடந்து போய் விட்டது என்றே தோன்றுகிறது.

என் சிறு பிராயத்தில் என்னை சுற்றித் தான் எத்தனை
 பொடியர்கள்! எத்தனை பொடித் திருமேனிகள்?

ஆள்காட்டி விரலுக்கும் கட்டைவிரலுக்கும் இடையே சிட்டிகைப் பொடி எடுத்து சின்முத்திரை காட்டியபடி அது சிந்திவிடாமலும்,அதை  லேசில் போட்டுக்கொள்ளாமலும் கையை ஆட்டி ஆட்டி பேசும் எத்தனை சித்த புருஷர்கள் இப்போது நினைவில் நிழலாடுகிறார்கள்?

பொடியை இட்டு வைக்க தான் எத்தனை தினுசில் சமாச்சாரங்கள்?

காய்ந்த வாழை மட்டைநறுக்கில் மடக்கிய பொடி;
சிலிண்டர் போல் உருண்டு, மேல் மூடி இட்ட தகர டப்பி.;
சின்ன புத்தகம் போன்ற வடிவில் மூடும் போது  கிளிக் என மூடிக்கொள்ளும் எவர்சில்வர் டப்பி,
ரயிலில் போகும் போது ஒரு வளமான மனிதர் தங்கத்தில் பொடி டப்பி வைத்திருந்ததைக் கூட பார்த்திருக்கிறேன்.

நான் படித்த பள்ளியில் கிருத்துவ ஆசிரியர்கள்  சிகிரட் பிடிப்பதும், பிராம்மண ஆசிரியர்கள் பொடி போடுவதும் ஏதோ  மத சம்பந்தமான சடங்கு  போல் அந்த வயதில் தோன்றும்.
மிக ஆச்சாரமான சிலரும் மூக்குப் பொடிக்கு ஒரு பூஜா திரவியத்தின் அந்தஸ்த்தைக் கொடுத்திருந்ததை நான் கண்டதுண்டு.

 இதற்கு,பிரம்மபத்ர நாசிகா சூரணம் போன்ற பரிபாஷை  வேறு.
பொடி போடுதல் புருஷ லக்ஷணம் என்பன போன்ற கித்தாப்புகள் பொடிக்கு உண்டு.
  
இந்தப்  பொடி ரசிகர்கள் இடுப்பில் வேட்டி கட்டுகிறார்களோ இல்லையோ, கண்டிப்பாய்க் கையில் கைக்குட்டை வைத்திருப்பர்.!

பொடியில் கருப்பு பொடி வெள்ளைப் பொடி, நெய்பொடி என ஏதேதோ உண்டு. சிலர் பொடி போட்டு போட்டு மூக்கே வாணக் குழாய் போல் மாறியிருக்கும். ரொம்பவே ஊழலாகப் பொடியைப்   போட்டு கொள்பவர்களே பெரும்பாலும்...


என் அப்பா பொடி போடுவது ஏதோ கைக்குழந்தையை குளிப்பாட்டும் லாவகத்தோடு நாசூக்காய் இருக்கும். முதலில் கைக்குட்டையை நீளவாகில்  உருட்டி அதை மடியமர்த்தி, பொடிடப்பியின்  தலையில் வாஞ்சையோடு மெல்ல விரலால் தட்டி, ஒரு சிட்டிகை எடுத்து , சடேரென்று தலையை இடப்பக்கம் திருப்பி , கை மூக்கருகில் செல்வதும் தெரியாமல்,பொடியை உள்ளுக்கிழுததும் தெரியாமல், பொடி போடப் பட்டுவிடும். இரு கைகளாலும் கைக்குட்டையை பிடித்து கீழ்மூக்கில் பிடில் வாத்தியத்துக்கு வில் இழுப்பது போல் மூக்கின் இருபக்கமும் சிலுப்புவது ஏதோ நாட்டிய முத்திரை போல் இருக்கும். பொடி போட்ட பின் ஓரிரு நிமிஷம் கிறங்கிய மௌனம் வேறு.


அறிவாளிகள் அனைவரும் பொடிப் பிரியர்களே என  என் அப்பா  கட்டும் கட்சியில் , நெப்போலியன் போனபார்ட் முதல் அறிஞர் அண்ணா வரை அனைவரும் இருப்பார்கள்.

பொடி பற்றி சில கவிதைகள் வேறு சொல்லுவார்.

கொடியணி மாடமோங்கி குலவுசீ ரானைக் காவில்
படியினி லுள்ளார் செய்த  பாக்கிய மனையான், செங்கைத்
தொடியினர் மதனன்,சோம சுந்தரன் கடையிற் செய்த
பொடியினைப் போடா மூக்கு புண்ணியம் செய்யா மூக்கே.

உ.வே. சாமிநாதய்யர் எழுதியதாய் அப்பா சொன்ன நினைவு.


இன்னொரு பாடலில் நாறுபுனல் மூக்கோட்டை என்ற பதம் மட்டும் நினைவிருக்கிறது.

அப்போதேல்லாம் பல பொடிக்  கம்பெனிகள் பிரபலமாய் இருந்தன. T.A.S .ரத்தினம் பட்டணம் பொடி, N.S.பட்டினம் பொடி, ஸ்ரீ அம்பாள் மூக்குத் தூள் போன்றவை. பின்னதன் பொடி டப்பியில் இரு குழந்தைகள் AMBAL SNUFF  என எழுதப்பட்ட ஒரு பதாகையை  இருபுறமும் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கும் என்பதும்  நினைவில் உள்ளது. T.A.S ஸிலோ ஒரு மீசை வைத்த முரட்டு ஆசாமி பொடி இடித்துக் கொண்டிருப்பதாய் விளம்பரம் இருக்கும்.

ஏதோ பொடிசாய் ஒரு பதிவு போட நினைத்து பொடி பற்றியே போட்டு விட்டேன். இந்தப் பதிவை இன்னும் பொடி போடும் புண்ணிய மூக்குகளுக்கு... அது என்ன?? ஹாங்... DEDICATE  செய்கிறேன்.

மேலும் பொடித் தகவல்கள் இருப்பின் பின்னூட்டம் இடுங்களேன்.

Enhanced by Zemanta

திங்கள், ஆகஸ்ட் 02, 2010

மங்கா மற்றும் மங்காத்தா


மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். ஆனால்
வேலைக்காரி அமைவது  யார் கொடுக்கும் வரம்??  சொல்வீர்களா?

கவிஞர்களும்,கவிதைப் பிரியர்களும், தவளைகளை அடுத்து வாயால் கெடும் ரகம். எனக்கு  திருமணமான புதிதில் புதுமனைவியை அசத்த, நான் படித்து ரசித்த கவிதைகளை சொல்லிய என்  மேதா விலாசத்தில் இருந்த வில்லங்கத்தை நான் உணரவில்லை. ஒருநாள், வேலைக்காரியை பற்றிய ஒரு ஆச்சரியமான  கவிதை (கணையாழியில் படித்ததாய் நினைவு.)
அவளுக்கு சொன்னேன்.

அழகான வேலைக்காரி..
குனிந்து பெருக்க
வீடு சுத்தமாச்சு,,
மனசு குப்பையாச்சு..

பிடித்தது சனி.....அன்றைக்கு.  இன்று வரை, என்  மனைவியின் வேலைக்காரி ரெக்ரூட்மண்ட் பாலிசி  மாறிப் போனது.
முதல் தகுதியே வேலைக்காரி கிழவியாய் இருக்க வேண்டும்.!
மணிரத்தினத்தின்  ரோஜாவில் வருவது போல் எத்தனை கிழவிகள் கும்மியடித்திருக்கிறார்கள் என் வீட்டில்?

இப்போ சொல்ல வந்தது   ஏதோ மனசு-குப்பை விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். கவிதை நெய்யும் மனதில் களங்கம் இருக்குமா  நண்பரே ?

தற்போது நான் வசிக்கும் தெலுங்கும் உருதுவும் கூறும் நல்லுலகான      ஹைதராபாதில், எங்கள் வீட்டு வேலைக்காக வரும் தாயும் மகளும் தான் இன்றைய என்  தலைப்புச் செய்தி !
இருவரும் சேர்ந்தே  வருவார்கள். பதினெட்டு வயது மகளின் நாமகரணம் மங்கா. தாயாரின் பெயர் தெரியாததாலும் அவள் மங்காவின் ஆத்தா ஆதலாலும் மங்காத்தா என அறிக.... ..அவர்களிருவரும் வேலை தொடங்குவதைப் பார்த்தால் WWF ஜோடி குஸ்தி வீரர்கள் ஒருவருக்கொருவர் உள்ளங்கைகளைத் தட்டிக் கொண்டு களமிறங்கி எதிரிகளை துவம்சம் செய்ய வீடு கட்டுவது போல் இருக்கும்.. அத்தனை சுருக்கு!

இருவர் வேலையும் நறுவிசாகவும் பளிச்சென்றும் இருக்கும்.
 கை சுத்தம் ரொம்பவே. பின்னே பிரச்னை என்ன என்கிறீர்களா?

எங்கள் மங்காவின் கோரிக்கைப் பட்டியல் தினமும் நீண்டு கொண்டே போகும்..

அந்த ரூமில் மடக்குக் கட்டிலை சாய்த்தே தானே வைத்திருக்கிறீர்கள்? நானாவது உபயோகிப்பேன்..தரீங்களா?

ஒவ்வொரு ரூமிலும் சுவர்க் கடிகாரம் இருக்கு. அதில் ரெண்டு பாட்டரி போடாமல் நின்று போய் விட்டது.. எனக்கு அதில் ஒன்றைக் கொடுங்களேன்

அக்கா, நீங்கள் இருப்பது ரெண்டே பேர்... அண்ணன்களும் வெளியூரில் இருக்காங்க.(அக்கா என்  மனைவி. அண்ணன்மார்களோ என்  பிள்ளைகள்!) பின்ன எதுக்கு மூணு குக்கர் ? எங்களுக்கு ஒண்ணு தரலாமில்லே?

இதுதான் என்றில்லை... கேட்பது அவள் கடமை போல் கேட்பதும்,
மறுப்பு சொல்ல வார்த்தை தேடும் மனைவியின் சங்கடமும் வாரத்தில் இரண்டு நாளாவது என்  காதுக்கு வரும். தாயார்க்காரியோ, சின்ன பொண்ணு தான் ஆசைபடுது.. குடுத்து தான் விடேன் என்னும் மத்தியஸ்த நிலையெடுத்து வழிமொழிவாள்.

புடவை, நைட்டி, சோப்பு,கிரீம் இத்யாதிகளை அவ்வப்போது ஆறுதல் பரிசாக என் சிறந்த பாதி( பின்னே BETTER HALFஐ எப்படி சொல்வதாம்?) தந்தாலும் ரோதனை என்னவோ தொடர் கதை தான்.

இன்று காலை, ஞாயிற்றுக்கிழமைக்கேயான சோம்பலுடன் படுக்கையில் நான்.. அடுக்களையில் மனைவி.... அடுத்த கோரிக்கையுடன் மங்கா.....
அக்கா! என் வெயிட்டே குறையலக்கா ?

தினம் ஸ்கிப்பிங் ஆடு.

எங்க வீட்டில் கூரை ரொம்ப கம்மி உயரத்தில்.. அது
முடியாதுக்கா.

அப்போ சாப்பாட்டை குறை. சாயங்காலம் வாக்கிங் போ

ஏது எனக்கு நேரம்? அதுவும் இந்த ஹைதராபாத் டிராபிக்குல

அதுக்கு என்னதான் பண்ணலாம்? இது என் மனைவியின் சலிப்பு.

அக்கா! நானும் வந்த நாள் முதலா பாக்குறேன் அந்த ட்ரெட்மில் மேல அய்யாவோட பேண்ட்டும், வேட்டியும் தான் தொங்குது.
நான் வேணா தினமும் அதுல அரை மணி நடக்கட்டுமா?
ஈ டி.வி விளம்பரத்துல பொண்ணுங்க இதுல நடந்து ஒல்லியா  ஆகுறத காட்டுராங்க அக்கா

இன்று என்னவளின் பொறுமை எல்லை  கடந்து விட்டது போலும்.
ஏண்டி.. அத உபயோகப்படுத்தல இத உபயோகபடுத்தல குடு குடுன்னா எப்பிடி.. உங்க அய்யாவால கூடத்தான் இங்க ஒரு உபயோகமும் இல்ல.. ஒரு வேலையும் வீட்டுல செய்யமாட்டரு.
அப்போ ஒங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போயிடேன்?.

மங்கா விழுந்து விழுந்து சிரிக்கிறாள்.. அவங்கள கூட்டிகிட்டு போய் என்ன செய்யிறது. எப்ப பாரு எதாவது படிக்கிறாங்க.. இல்லன்ன சின்ன டி வில (என் லேப் டாப் தான் அது) ஏதோ கொடஞ்சுக்கிட்டு இருப்பாங்க.. கரண்ட்டு தான் வேஸ்ட்டு.

மேற்கொண்டு அவர்கள் சம்பாஷனையில் என் மனம் ஈடு பட வில்லை.


எனக்கு குக்கருக்கு இருக்கும் மதிப்பு கூட இல்லையா?
என்னைத்  தூக்கி குடுக்கறேன்னு சொன்ன என் தர்மபத்தினி பெட்ரூமில் நுழைய, ஏதும் காதில் விழாததுபோல் என்
அறிதுயில் நீடிக்க...

இந்தப் பதிவை என் லேட்டா எழுதினேன்னு பாக்குறீங்களா?
பின்னே..  இன்னிக்கு ஒரு மணி நேரம் இல்ல ட்ரெட்மில்லில்
நடந்தேன்!!

சின்ன வயதில் சாப்பிடலேன்னா பூச்சாண்டிகிட்ட புடிச்சி
 குடுத்துடுவேன் என்ற என் அம்மாவின் பயமுறுத்தல் நினைவுக்கு வந்தது..

நான் வேல ஒண்ணும் செய்யறதில்லயாமே? ஒருவேளை என்னை...

அம்மாடி! ஏதும் காய் நறுக்கணுமா?

அதிசயமாய் என்னைப் பார்த்தவள் சொன்னாள். சமையலே முடிஞ்சிடுச்சு..சாப்புடுறீங்களா?

உம்’                                                                            

பரிமாறியவாறே சொன்னாள்.. இன்னிக்கு மங்கா என்ன கேட்டா தெரியுமா?

அவ பாவம் சின்ன பொண்ணு. அப்பிடித்தான் ஏதாவது கேட்பா... உன்னால முடிஞ்சா குடு. இல்லன்னா விடு..  இப்போ  எனக்கு கொஞ்சம் ரசத்தைப் ஊத்து .....

(நான் மேலே குறிப்பிட்ட கவிதையை எழுதிய மகானுபாவன் யார் என யாராவது சொன்னால் தக்க சன்மானமாய் ஒரு வாழ்த்துப்பா அவர்மேல் பதிவிடப் படும்.. ஹய்யோ ஹைய்யோ!)